என் முன்னாள் காதலி 17

என் முன்னாள் காதலி 17

திருக்குமரன், “பாஸ், இந்த சுவாதி பொண்ண என்ன பண்றது?” என்று சிறு எரிச்சலோடு கேட்டு வைத்தான்.

பவன் நெற்றி உயர்த்தி,‌ “சுவாதிக்கு என்ன?” என்று கேட்க,

“ஃபோன் மேல ஃபோன் போட்டு உங்கள பத்தி விசாரிச்சிட்டே இருக்கு. இருக்கற டென்சன்ல அந்த பொண்ணு வேற டென்சன் ஏத்துது. முதல்ல சுவாதிய வேலைவிட்டு துறத்தனும் பாஸ்.” திரு வெகுவான சலிப்போடு சொல்ல, பவன் முகத்தில் மெல்லிய கீற்றாய் புன்னகை ஒட்டிக்கொண்டது.

“அது முடியாது திரு…” என்று நிதானமாக சொன்னவன், “அவளே என்னை விட்டுட்டு போறேன்னு சொன்னாலும், என்னால அவளை விட முடியாது.” என்றான் ஆழ்ந்த குரலாய்.

திரு, “பா…ஸ்ஸ்ஸ்” திக்கலோடு தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தினான்.

அவன் திகைப்பில், தன் இதழ்களை உள்மடக்கி ஆழ மூச்செடுத்தவன், “ஷீ இஸ் மை எக்ஸ்” சற்று இறுக்கமாக பதில் தர, எதிரில் இருந்தவனுக்கு ஒரு நொடி தலை கிறுகிறுத்து நேரானது.

சுவாதியை சாதாரண வேலையாளாக எண்ணி, தான் அதட்டி அதிகாரம் செய்ததெல்லாம் அரைகுறையாக நினைவில் வந்து போக, திருக்குமரனுக்குள் பதற்றம் தொற்றிக் கொண்டது. “எக்ஸ்னு சொல்றீங்க, விட முடியாதுன்னும் சொல்றீங்க, எங்கயோ இடிக்குதே பாஸ்.” குழம்பி தலையைச் சொறிந்தவன், “இப்ப நான் என்ன பண்ணட்டும் பாஸ்” என்று வினவினான்.

“என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க… கொஞ்ச நேரம் என்னை தனியா விடுங்க திரு” என்றதோடு இணைப்பை துண்டித்தவன் விரல்கள், தானாக சுவாதியின் சேட்டிங்கை திறந்து பார்த்தது.

‘பவன்…’ 

‘எப்படி இருக்கீங்க?’

இந்த ஒருவார இடைவெளியில் இந்த இரண்டே இரண்டு குறுஞ்செய்தி மட்டுமே அவளிடமிருந்து வந்திருக்க, அவனிதழில் சற்று ஏமாற்றமான வளைவு.

அவனும் முதல்நாள் அவளோடு பேசியதோடு சரி. அடுத்த நாள் காலை ஒரு குட் மார்னிங்கை தட்டி விட்டிருந்தான். பிறகு, வெளியான திரைப்படம் வெற்றியை நழுவ விட்ட மன உளைச்சலில், அவளை பற்றிய யோசனையை தள்ளி வைத்திருந்தான்.

இப்போது அவள் எண்ணங்கள் அவனை ஆக்கரமித்துக்கொள்ள, உடனே அவளுக்கு  அழைப்பு விடுத்தான். 

இரண்டாவது ரிங்கிலேயே மறுமுனை எடுக்கப்பட்டது. “ஹலோ பாஸ்… எப்படி இருக்கீங்க?” சுவாதியின் குரல் அவசரமாய் ஒலிக்கவும்,

“இதை நீயா போன் பண்ணி‌ கேட்டிருந்தா உனக்கு என்மேல நிஜமாவே அக்கறை இருக்குன்னு ஒத்துட்டு இருந்திருப்பேன்.” அவளிடம் நொடிந்தான்.

சுவாதி மறுபுறம் தயங்கி, “இல்ல பாஸ், திரு அண்ணா கிட்ட கேட்டேன். அவர் தான் உங்களை தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டாரு.” என்றாள் சோகமாய்.

“லூசு, என்கிட்ட பேச திரு கிட்ட எதுக்கு பர்மிஷன் கேக்கணும் நீ? நேரா எனக்கு ஃபோன் போட்டு பேச எது தடுக்குது உன்ன?” அவன் கேள்விக்கு அவளிடம் பதிலில்லை. மௌனமானாள்.

அவள் பதிலுக்காக சற்று பொறுத்தவன், பதில் வராமல் போகவே, “ஸ்ரீ…” அந்த ஒற்றை எழுத்தை இதமாய் உச்சரித்தான்.

அவன் உச்சரிப்பில் அவள் இமைகள் மூடி திறந்தன. துவைத்த உடைகளை பால்கனி கயிற்றில் காயப்போட்டுக் கொண்டிருந்தவள், நொடி நேரம் தாமதித்து தன் கைவேலையைத் தொடர்ந்தாள்.

“பேசுடீ, என்கூட நீ பேசறத்துக்கு கூட, மத்தவங்க பர்மிஷன் வேணுமா? முன்ன தான் யாராவது நம்ம பார்த்துடுவாங்களோன்னு பயந்து பயந்து பழகினோம். இப்ப அப்படி எந்த கட்டுப்பாடும் நமக்குள்ள இல்லையே” துளி ஆதங்கத்தோடு அவன் கேட்க, இவள் தான் வார்த்தையின்றி திண்டாடினாள்.

பவன்யாஷ் தலைக்கேசத்தை அழுத்தமாக கோதிவிட்டு, “சரி, என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டான்.

அவன் சாதாரணமாக பேச முயல்வது புரிய, அவளும் இயல்பாக பேச முயன்றாள். “துவச்ச துணிய உலர்த்திட்டு இருக்கேன். நீ எங்க இருக்க தனா?” 

அவளின் தனாவில் அவன்‌ இதழ் மெலிதாக வளைந்து கொடுக்க, “நடு ரோட்டுல இருக்கேன் ஸ்ரீ. லாங் டிரைவ்… எங்க போறேன்னு தெரியல. தெரியற பாதையில போயிட்டே‌ இருக்கேன்.” காரை செலுத்தியபடி‌யே சொன்னான்.

“தனியாவா?” அவள் மனதில் மூண்ட பதற்றத்தோடு கேட்க,

“ம்ம். நீ பக்கத்துல இருந்தா உன்ன வம்பிழுத்தாவது டைம் பாஸ் ஆகியிருக்கும்…” அவன கேலியாக இழுத்துச் சொன்னான்.

“நான் உனக்கு டைம் பாஸா?” சிடுசிடுப்போடு அவள் கேட்க,

“பின்ன இல்லையா?” என்றான் சின்ன சிரிப்போடு.

சீறி வந்த பேச்சை வாய்க்குள் அடக்கியவள், “இப்ப நீ எங்க போயிட்டிருக்க?” பேச்சை‌ மாற்றி கேட்டாள்.

“அதான் எனக்கே தெரியலன்னு சொல்லிட்டேனே” சலிப்புடன் சொன்னவன் கைகளில் காரின் வேகம் கூடியது.

“ஏன் இவ்வளோ ஸ்பீட் மெதுவா போங்க பாஸ்.” மறுமுனையில் அவன் வேகம் உணர்ந்து பதற்றமானாள்.

“நான் ஓடிட்டு இருக்கேன் ஸ்ரீ… எங்கிட்ட இருந்து நானே தப்பிச்சு ஓடிட்டு இருக்கேன்… அப்ப ஸ்பீடா தானே ஓடணும்.” என்றவன் இன்னும் வேகத்தைக் கூட்ட, இங்கே அவளுக்கு பதற்றம் கூடியது.

“நீங்க ஏன் ஓடணும் பாஸ்? தமிழ்நாட்டில மட்டும் ஒரு வருசத்துக்கு நூத்துக் கணக்குல படம்‌ ரிலீஸ் ஆகுது. அதுல வெற்றியடையிற படங்கள்னு‌ பார்த்தா எண்ணி இருபது கூட தேறாது. உங்க படம் ஓடலன்னா என்ன பண்ண முடியும்? சும்மா சீன போடாம, முதல்ல வீட்டுக்கு போங்க.” சுவாதி படபடத்தாள்.

“இந்த மூவி போகாததது சின்ன சறுக்கல் தான் சுவாதி. இதை என்னால சரிகட்டிட முடியும். ஆனா நேத்து வரைக்கும் என்னை தலையில தூக்கி வச்சு கொண்டாடினவங்க எல்லாம், தூக்கி எறிஞ்சு பேசறது… வலிக்குது டீ. நானும் சாதாரண மனுசன் தானே, எனக்கும் வலிக்கும் தானே! என்னை கொண்டாடுங்கன்னு நான் யார்கிட்டேயும் கேக்கல, அவங்களா என்னை பிடிச்சு கொண்டாடினாங்க. இப்ப எவ்வளோ ஈஸியா தூக்கிப் போட்டுட்டாங்க…” என்றவன்,

“நீயும் அப்படி தானேடீ… என்னை அணுஅணுவா ரசிச்சு கொண்டாடிட்டு, கடைசியில ஒண்ணுமே இல்லன்னு தூக்கி போட்டு போனவ தான… என் மனசுல ஆசைய வளர்த்துட்டு பாதியிலயே கருகவிட்டு போனவ தானே… உன்ன போல தான் இங்க இருக்க எல்லாரும்னு இப்ப தான் புரிஞ்சிக்கிட்டேன்… அந்த ஏமாற்றத்தை ஜீரணிக்க முடியாம தான் ஓடிட்டு இருக்கேன்.” 

அவன் நிதானமாகத் தான் பேசினான். அவன் வார்த்தை வீரியத்தில் அவள் தான் அடிபட்டு போனாள்.

“நீ தந்த ஏமாற்றத்தையே தாங்கிட்டு வெளியே வந்துட்டேன். இதுல இருந்தும் வெளியே வந்திடுவேன்.” பவன்யாஷ் மேலும் சொல்ல, அவளிடம் பதிலில்லை.

அதற்கு மேல் அவனும் ஏதும் பேசவில்லை. இணைப்பை துண்டித்து விட்டு வீட்டை நோக்கி காரை திருப்பினான்.

அவன் வீட்டை நெருங்கும் முன்னரே அவனுக்கு கிடைத்த செய்தி, அவனை உலுக்கி விட்டது. ஏசி காருக்குள்ளும் அவன் உடல் குப்பென வியர்த்து போக, கை விரல்களும் நடுக்கம் கொண்டன. இரு கைகளாலும் முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டு தலைகேசத்தை அழுத்தமாக கோதிவிட்டு, கேள்விப்பட்ட செய்தியை உள்வாங்க முயன்றிருந்தான். நிமிடங்கள் கடந்த பிறகும் கூட, அவன் நெஞ்சின் நடுக்கம் குறைவதாக இல்லை.

***

“தலைவா… படம் சூப்பர் டூப்பர் ஹிட்… யாரு சொன்னது படம் ஃபிளாப்னு, எங்க பாஸோட நடிப்பு பக்கா மாஸ்… தியேட்டர்ல இதுவரைக்கும் எங்கண்ணன் படத்தை பத்து தடவ பார்த்துட்டேன். இன்னமும் நூறு தடவ  பார்ப்பேன்…” என்று திரைரங்கம் முன்னால் உற்சாகமாக கத்திப் பேசும் இளைஞனின் காணொளியும் கூடவே, அதே இளைஞன் தீக்குளித்த காணொளியும் காட்சியாகி, பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துக் கொண்டிருந்தது.

இந்த செய்தியை கேள்விப்பட்ட நொடியில் இருந்து பவன்யாஷ் மிகவும் கலங்கிப் போயிருந்தான். எவ்வளவு செலவானாலும் அந்த இளைஞனின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற திருக்குமரனுக்கு உத்தரவிட்டவன், அதே வேகத்தில் அவனை அனுமதித்திருக்கும் மருத்துவமனை நோக்கி விரைந்தான்.

செய்தியைக் கேள்விப்பட்ட ராகவேந்திரனும் பவன்யாஷுக்கு துணையாக அவனுடன் வந்து இணைந்து கொண்டார். 

அரசு மருத்துவமனையின் முன்னால் அவர்கள் காரிலிருந்து இறங்கும்போதே, நிருபர்கள் அவர்களை சூழ்ந்துகொள்ள முயன்றனர். நிருபர்களை தடுத்து நிறுத்திய போலிஸ் காவலர்கள், அவர்கள் மருத்துவமனைக்குள் செல்ல வழி செய்தனர். 

திரு நேரே வந்து பவனையும் ராகவனையும் உள்ளே அழைத்து நடந்தான். பவன் முகம் உணர்ச்சி துடைத்து இறுகியிருந்தது. 

“எமோஷனல் ஆகாத பவன். இது சென்சிடிவ்வான விசயம். நீ தடுமாறி ஒரு சின்ன வார்த்தைய விட்டாலும் இப்ப பெருசா பத்திக்கும். கண்ட்ரோல் யுவர் செல்ஃப்.” ராகவன் அறிவுரை சொல்லியபடியே அவனுடன் வந்தார்.

தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை அறைக்கு முன்னால், அவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டன. மறுக்காமல் அதை பெற்று அணிந்து கொள்ள முயன்ற பவனின் கைகள் நடுங்கி அந்தரத்தில் தேங்கின.

அங்கே கதறிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து அவன் தயங்கி தாமதிக்க, “அந்த பையனோட அம்மா, அப்பா, அக்கா, அண்ணன் பாஸ்” திரு அவன் காதருகில் தகவல் தந்தான். 

அவர்களை எவ்விதம் எதிர்கொள்வது, அவர்களுக்கு என்னவென்று ஆறுதல் சொல்வதென புரியாமல் பவன் தயங்கி நிற்க, 

ராகவேந்திரனுக்கு அவன் நிலை புரிந்து, “முதல்ல அந்த பையனுக்கு என்னாச்சுன்னு பார்க்கலாம் வா பவன்” என்று உள்ளே அழைத்துச் சென்றார்.

உடலில் முப்பது சதவீத தீக்காயங்களுடன் திரைக்கு பின்னால் கிடந்தவனைப் பார்த்து பவனின் கண்கள் கலங்கியது. தன்னை வெகுவாக கட்டுப்படுத்த முயன்றும், அவன் வலியில் முனங்குவதைக் கேட்டதும், பவன் தோள் குலுங்க அழுதுவிட்டான்.

“டேய்… ஏன்டா இப்படி… ஏன்டா இப்படி செஞ்ச…” பவனின் கலங்கிய குரல் கேட்டதும்,

திரைக்கு பின்னால் கருகி இருந்தவனின் கண்களில் மின்னல் வந்து போனது. “வந்திட்டியா… ண்ண… உனக்காக… தான்… ண்ண…” அவன் திக்கலோடு மூச்சு வாங்க மொழிந்தான்.

“எனக்காகவா… லூசாடா நீ? இப்ப வலில துடிக்கிறீயே அந்த வலில கொஞ்சமாவது என்னால வாங்கிக்க முடியுமா? ப்ப்போடா…” பவன் வெறுத்துப்போய் சொன்னான்.

“என்னை… மறந்திட்டியாண்ண… எங்க அப்பா ஆப்ரேஷனுக்கு… உதவி கேட்டு… கால் பண்ணேனே… உடனே உதவி செஞ்சியே… உனக்காக… உயிர… கொடுக்க… மாட்டேனா…” வாய் உலர்ந்து போக பேசினான் அவன்.

பவன்யாஷூக்கு அவன் யாரென்று நினைவிருக்கவில்லை. யாரேனும் இதுபோல உதவி கேட்டு அவனை நாடினால், அது உண்மையா என்று விசாரிக்கச் சொல்லி அவனால் முடிந்த உதவியை செய்வான் தான். தவிர்த்து ஒவ்வொருவரையும் நினைவில் வைத்துக்கொண்டதெல்லாம் இல்லை. 

“இவனோட… பேரென்ன திரு?” பவன்‌ இப்போது தான் கேட்க,

“இசக்கி முத்து பாஸ்” திரு பதில் தந்தான்.

“நீ குணமாகி வரணும் இசக்கி முத்து.‌ தப்பித்தவறி உனக்கு ஏதாவது ஆச்சின்னா, அந்த குற்றவுணர்ச்சி என் வாழ்நாள் முழுக்க என்னை உறுத்திட்டே இருக்கும். உனக்கு எல்லா விதத்திலும் பெஸ்ட் டிரீட்மெண்ட் கிடைக்க ஏற்பாடு பண்றேன். நீ சீக்கிரம் குணமாகி வந்திடு.” பவன்யாஷ் அவனிடம் சொல்ல, திரைக்கு பின்னால் இசக்கி முத்து கைகளை கூப்பினான்.

மூவரும் வெளியே வந்தனர். பவன்யாஷூம் ராகவனும் இசக்கி முத்துவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். தங்கள் பிள்ளை உயிரோடு மீண்டு வந்தால் போதும் என்று கலங்கி மொழிந்தனர் அவர்கள்.

மருத்துவமனையை விட்டு வெளிவரும்போதே, பவன்யாஷின் முன்னால் மைக்குகள் நீண்டன. 

“இந்த சம்பவத்தை பத்தி நீங்க என்ன சொல்றீங்க பாஸ்?”

“இசக்கி முத்து எப்படி இருக்காரு?”

“அவர் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கா?”

“உங்க படம் ஓடலன்னு உயிரை கொடுக்குற லெவலுக்கு உங்க ரசிகர் துணிஞ்சிருக்காரு… இதை நீங்க எப்படி பார்க்கறீங்க?” சரமாறியான கேள்விகள் அவனை மோதின.

பவன்யாஷ் அவர்களின் கேள்விகளை அவசரமின்றி உள்வாங்கிக் கொண்டு, சலசலத்தவர்களை கையுயர்த்தி அமைதிப்படுத்தி விட்டு பேச ஆரம்பித்தான்.

“நிஜமா இதைப்பத்தி என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல. ஆனா, இசக்கி முத்துவோட இந்த செயல் நிச்சயமா கண்டிக்கத்தக்கது. உங்களுக்கு ஒரு நடிகனை பிடிச்சிருக்கா, அவனோட நடிப்ப ரசிங்க, டேன்ஸ பாருங்க, பாட்ட கேளுங்க, படத்த பார்த்து கொண்டாடுங்க. அப்படி நடிகனை கொண்டாடுறவங்களை தானே ரசிகன்னு சொல்லுவோம். அதையெல்லாம் விட்டு… இது என்னய்யா உயிரோட விளையாடுற விளையாட்டு!

திரைப்படத்துல வெற்றி, தோல்வி எல்லாம் சகஜம். ஒரு படம் ஹிட்டாகும். ஒரு படம் ஃபிளாப் ஆகும். ஒரு படம் வெற்றியடைஞ்சா அதுக்கு நடிகன் மட்டுமே காரணம் இல்ல. அதே போல ஒரு படம் தோல்வியடைஞ்சா அதுக்கும் நடிகன் மட்டும் காரணமில்ல. திரைக்கு முன்னால தெரியறவங்க மட்டும் தான் நாங்க. திரைக்கு பின்னாடி எத்தனை எத்தனை டெக்னிஷியன்ஸோட திறமை, உழைப்பு, மெனக்கெடல் இருக்குன்னு உங்க எல்லாருக்குமே தெரியும்.

எல்லாம் தெரிஞ்சும் ஏன் இப்படி? தயவுசெஞ்சு இசக்கி முத்து செய்த அடிமுட்டாள் தனத்தை தப்பித்தவறி கூட யாரும் எப்பவும் செஞ்சிடாதீங்க… ப்ளீஸ்…உங்கள எல்லாரையும் கெஞ்சி கேக்கிறேன்.” என்று கைக்கூப்பியவன், அதற்குமேல் நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.

***

விசயம் கேள்விப்பட்ட சுவாதிக்கு முதலில் அதிர்ச்சி தான். ஆனால், தீக்குளித்த அந்த ரசிகன் மீது சற்றும் பரிதாபம் எழவில்லை இவளுக்கு. கோபம் தான் வந்தது என்ன பைத்தியக்காரத்தனம் என்று.

தொடுதிரையில் பவன்யாஷின் பேச்சை கவனித்தவள், அவனைத்தான் திகைத்துப் பார்த்திருந்தாள். எப்போதும் ரசிகர்கள் பார்வைக்கு பளீச்சென்று தெரிய வேண்டும் என மெனக்கெடுபவன், இப்போது கசங்கிய சட்டையும், கலைந்த தலையும், கலங்கிய முகமாக உடைந்து நிற்பதை பார்த்து அவளுக்கே பரிதாபமாகத் தான் இருந்தது. 

இப்போது அவனுக்கு என்னவென்று ஆறுதல் சொல்வதென்று, மொபைலை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

அவனுக்கும் தனக்குமிடையே எல்லாமே முறிந்துபோன பின்னரும் கூட, ஏதோவொரு இழை மட்டும் விலக இயலாமல் ஒட்டிக்கொண்டு இருபுறமும் தவிக்கச் செய்கிறது. அந்த சிறு இழையை இறுக பிடித்துக்கொள்ளவும் இருவருக்கும் தைரியமில்லை. மொத்தமாய் அந்த இழையை அறுத்தெறியவும் இவர்களுக்கு துணிவில்லை. ஒரு சிறு நூழிலையில் இரு மனங்களும் அல்லாடி கொண்டிருந்தன.

அந்த இரவு முழுவதும் துளி உறக்கமின்றி தவிப்புற்று கிடந்த பவன்யாஷ், விடியல் வானத்தை வெறித்தபடி பால்கனியில் நின்றிருந்தான்.

அத்தனை காலையில் அவன் திறன்பேசி ஒலியெழுப்பியது. யாரென்று எடுத்துப் பார்க்க, ராகவன் தான் அழைத்திருந்தார்.

***