என் முன்னாள் காதலி 18

என் முன்னாள் காதலி 18

என் முன்னாள் காதலி 18

அந்த இரவு முழுவதும் துளி உறக்கமின்றி தவிப்புற்று கிடந்த பவன்யாஷ், விடியல் வானத்தை வெறித்தபடி பால்கனியில் நின்றிருந்தான்.

அத்தனை காலையில் அவன் திறன்பேசி ஒலியெழுப்பியது. யாரென்று எடுத்துப் பார்க்க, ராகவன் தான் அழைத்திருந்தார்.

எடுத்தவன், “குட் மார்னிங் அண்ணா” என்றான் சுரத்தே இல்லாமல்.

“டேய்… ஹேப்பி மார்னிங்டா” என்றவரின் குரல் உற்சாகமாக ஒலித்தது.

அவரது உற்சாகத்தில் இவன் முகமும் மெலிதாக இளக, “ஹேப்பி மூட்ல இருக்கீங்க போல. என்ன விசயம் ண்ணா” பவன்யாஷ் வினவ,

“நான் விசயத்தை சொன்னா நீயும் ஹேப்பி ஆகிடுவடா, புரோடியூசர் நம்ம படத்துக்கு வர வெள்ளிக்கிழமையே பூஜை போட்டுக்கலாம்னு சொல்லிட்டாரு. சண்டே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் பண்ணலாம்னும் சொல்லிட்டாருடா” என்றார் குதூகலமாக.

“எப்படிண்ணா? ஒன் மன்த் வெயிட் பண்ண சொன்னாரே!” பவன்யாஷ் நம்பாமல் கேட்டான்.

“எல்லாம் நேத்து நீ ஒரு பேட்டி கொடுத்தியே அதுனால நடந்த மேஜிக் தான்டா. மனுசன் ஆடிப்போயிட்டாரு. உன்ன நடிக்க வைக்கிறதுல இப்ப என்னை விட அவர்தான் இன்ட்ரஸ்ட்டா இருக்காருனா பாரு.” ராகவன் சொன்னதும், பவன்யாஷ் முகம் வதங்கி போனது.

“ஓ, எனக்காக ஒருத்தன் உயிர விடற அளவுக்கு போனதால வந்த ஆஃபரா இது? அப்படியொன்னும் எனக்கு நடிக்க வேணாம்ண்ணா விடுங்க.” பவன்யாஷ் வெறுப்போடு சொல்ல,

“முட்டா பய மாதிரி பேசாதடா. நீ நினைக்கிற மாதிரி இல்ல. உனக்கும் எனக்கும் இது எவ்வளோ இம்பார்டன்ட் புரோஜக்ட்னு மறந்துட்டு பேசாத.” ராகவன் அவனை கடிந்தார்.

“அதுக்காக இப்படியா?” அவன் மனது ஏற்க மறுத்தது.

“நடந்த எதுலயும் உன்னோட தப்பு எதுவும் இல்ல. நம்ம படம் முடியறத்துக்குள்ள உன் ரசிகனும் குணமாகி வந்திடுவான். உன்னால முடிஞ்சதை அவனுக்கு செய். இன்னைக்கு பத்து மணிக்கு மீட்டிங் இருக்கு ஒழுங்கா கிளம்பி வர. இனிமே மூச்சு விட கூட நமக்கு நேரமில்ல கிளம்பி வாடா…” இயக்குநரின் படபடப்போடு இணைப்பை துண்டித்தார் அவர்.

பவன்யாஷூம் ஆழ்ந்த மூச்சிழுத்துவிட்டு தயாரானான்.

சில நாட்கள் ஓய்ந்திருந்த அவன் வாழ்க்கைச்சக்கரம் இப்போது மீண்டும் வேகம் பிடித்துக் கொண்டது. நான்கு நாட்களில் பூஜை, அடுத்த இரண்டு நாட்களில் முதல் பார்வைக்கான படப்பிடிப்பு என, பவன்யாஷ் நடிகனாக ஓட ஆரம்பித்திருந்தான். முன்னை விட வேகமாக, முன்பை விட அர்பணிப்பாக.

உடல்நலம் தேறி இருந்த சுவாதியும் திருவின் அழைப்பை மறுக்க முடியாமல் தயக்கத்துடன் வேலைக்கு வந்திருந்தாள். முன்பு போல அரட்டல் உருட்டல் இல்லாமல் திரு தன்னிடம் மரியாதையாக நடந்து கொள்வதை புருவ முடிச்சுடன் அவதானித்தும் கொண்டாள். 

பவன்யாஷூம் அவளை இயல்பாகவே நடத்தினான். முன்பு போல குத்தல் பேச்சுக்கள், அவமானப்படுத்தும் செயல்கள் இன்றி அவளுக்கான மரியாதையை தந்திருந்தான். தனிமையிலும் பவன் தன்னிடம் கண்ணியமாகவே நடந்துகொள்ள, அவளும் நிம்மதியாக தன் வேலைகளைக் குறைவின்றி செய்தாள்.

அடுத்த வாரமே கோவாவிற்கு பயணமான படப்பிடிப்பு குழு, அடுத்தடுத்து குலுமணாலி, ஆஸ்திரேலியா என பயணமாகியது. பவன் முன்னதை விடவும் தன் முழு திறமையும் போட்டு நடித்துக் கொடுத்தான். ஒரே டேக்கில் காட்சிகளை முடித்துவிட வேண்டும் என நினைப்பவன், இரண்டு மூன்று டேக் எடுத்தும் சலிப்பின்றி தன் முழு உழைப்பையும் கொடுத்தான்.

ராகவனுக்கு சொல்லவே வேண்டாம். அவரின் முதல் படத்தின் நடிகன் என்ற வகையில் பவன்யாஷை கையாள்வது அவருக்கு கைவந்த கலை. மற்ற நடிகர்களை விட பவன்யாஷுடன் இணைந்து பணியாற்றுவது அவருக்கு ஏதோவொரு வகையில் சுலபமாகத் தோன்றும். இப்போதும் அவ்விதமே தோன்றியது.

இந்த படத்தின் நாயகி இனிஷா. பவன்யாஷ் முன்பு பரிந்துரைத்த அதே நாயகி. அவன் கணிப்பு தவறில்லை என்பதற்கேற்ப, கதாநாயகியின் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி நடித்துக் கொடுத்தாள்.

இரண்டு மாதங்கள் கண்ணைக்கட்டிக் கொண்டு பறந்தது அந்த படக்குழுவினருக்கு.

பவன்யாஷ் தன் முழு கவனத்தையும் எங்கும் சிதற விடாமல் நடிப்பில் மட்டுமே குவித்து வைத்திருந்தான். முந்தைய தோல்விக்கு அவன் பட்ட அவமானங்கள் அவனுக்கு நிறைய கசப்பான அனுபவங்களை தந்திருந்தது. அதையெல்லாம் கடந்து வர அவனுக்கு வெற்றி தேவை. அந்த வெற்றிக்காகத் தான் போராடிக் கொண்டிருந்தான்.

பவனின் இந்த வேகமும் உழைப்பும் ராகவனுக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது. அவர் தன் படைப்பை இன்னும் மெருகேற்றி சவாலான காட்சிகளை அவனுக்காக அமைத்து தந்தார். ஒவ்வொரு சண்டைக் காட்சிகளும் ஸ்டென்ட் மாஸ்டர் லெனின் கைவண்ணத்தில் அனல் பறந்தன.

புறநகர் பகுதியில், அனுமதி பெற்று வெளிப்புற காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கி இருந்தது. காரோடு கார் நேருக்கு நேர் மோதி பறப்பது போலான காட்சிக்கு ஏற்ப எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. ஹீரோ கதாப்பாத்திரமாக பவன்யாஷும், வில்லன் கதாப்பாத்திரமாக வருண் பாண்டியாவும், தங்களுக்கான கெட்டப்பில் தயாராகி காருக்குள் அமர்ந்திருந்தனர்.

மண் சாலையில் குறிப்பிட்ட தூர இடைவெளியில் இருவரின் கார்களும் எதிரும் புதிருமாக நிற்க வைக்கப்பட்டிருக்க, இயக்குநர் ஆக்ஷன் சொன்னதும் இருவரும் நேருக்கு நேராக காரை சீறவிட்டு பாய்ந்து வந்தனர்.

இதுபோன்ற காட்சிகளில் டூப் போடுவது தான் வழக்கம். ஸ்டண்ட் மாஸ்டர் லெனினும் டூப் ஆர்டிஸ்ட்டை தயார் நிலையில் வைத்திருந்தார். ஆனால், வருண் பாண்டியா, “ஜரூரியே தோ ஹீரோக்கோ டூப் டால்தீஜீயே.‌ இஸ் வில்லன்கோ டூப் நை சையே” (வேணும்னா ஹீரோக்கு டூப் போட்டுக்கோங்க. இந்த வில்லனுக்கு டூப் எல்லாம் தேவையில்ல) என்று பவன்யாஷை இளக்காரமாக பார்த்து வம்பிழுத்து பேசியிருந்தான்.

அவனின் சீண்டல் பேச்சு இவனையும் சீண்டி பார்த்திருந்தது. “எனக்கும் டூப் அவசியமில்ல. நானே நடிச்சு கொடுக்கிறேன் மாஸ்டர்” பவன்யாஷ் ஒருவித வேகத்தில் சொல்ல, ராகவனும் லெனினும் முதலில் மறுத்தனர்.

“நோ பவன், எவ்வளோ தான் சேஃப்டியா இருந்தாலும், சின்ன கவனக்குறைவு கூட பெரிய காயத்தை உருவாக்கலாம். ரிஸ்க் எடுக்காதே.” ராகவன் நேராகவே எச்சரித்தார்.

“டைரக்டர் சார் உங்களுக்கு புரியலையா. வருண் வேணும்னே எங்கிட்ட சேலன்ஞ் பண்றான். அவனுக்கு என்மேல என்னதான் காண்டுன்னு தெரியல சும்மா என்னை உரசிட்டே இருக்கான். அவன் செய்யும்போது என்னால செய்ய முடியாதா? நான் செய்றேன் சார்.” பவன்யாஷ் உறுதியாக நின்றதில், வேறுவழியின்றி டைரக்டர் சம்மதித்திருந்தார். லெனின் இன்னும் கூடுதல் பாதுகாப்புடன் காட்சியை அமைத்திருந்தார்.

சுற்றிலும் கேமரா பார்வையில் இரண்டு வாகனங்களும் நேரெதிராக சமவேகத்தில் நெருங்கின. குறிப்பிட்ட இடத்தில் இருவரும் நிற்க வேண்டும். அதன்பிறகு பவன்யாஷ் கார் கிரைன் மூலம் தூக்கப்பட்டு, வருண் கார் மேலே பறந்து தாண்டுவது போலான காட்சி அமைக்கப்பட வேண்டும். 

குறிப்பிட்ட இடத்தில் நிற்கும்படி சமிக்ஞை வந்ததும் சரியான இடத்தில் வருண் காரை நிறுத்தி விட்டான். பவன்யாஷ் கார் நிற்காமல் அவனை நோக்கி மோதுவது போல் சீறி வந்தது. 

தன்னை நோக்கி வரும் காரின் வேகத்தில் மிரண்டு வருண் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ள, அந்த காரை உரசும் சில இன்ச் வித்தியாசத்தில், ஒடித்து வேறு பாதையில் திருப்பப்பட்ட பவன்யாஷின் கார், சாலையை தாண்டிய வேலிக்குள் அதே வேகத்தில் பாய்ந்து நுழைந்தது. 

“ஓ காட்…!” 

“ஹே… பவன்யாஷ்…!” கூச்சலோடு ராகவனும் லெனினும் அங்கே ஓடினர். அவர்களைத் தொடர்ந்து படப்பிடிப்பு குழுவும் ஓடியது.

வேலி முட்களையும் செடிகளையும் கொடிகளையும் அறுத்துக் கிழித்துக்கொண்டு பாய்ந்த கார், ஓரிடத்தில் வேகம் குறைந்து மரத்தில் மோதி நின்றிருந்தது.

உடனே அந்த வேலி பகுதிக்குள் நுழைய யாராலும் இயலவில்லை. “பவன்… ஆர் யூ ஓகே…” ராகவன் அங்கிருந்தே கத்தி அழைத்தார்.

அவனிடமிருந்து பதிலில்லை. சில விநாடிகள் கழித்து, கார் ஜன்னல் வழியே பவன்யாஷின் கரம் நீண்டு, கட்டைவிரலை உயர்த்திக் காட்டியது, தான் நலம் என்பதாக. 

அவன் கரத்தில் படிந்து வழிந்த ரத்தமும் காயமும் அந்த படக்குழுவினரை இன்னும் பதட்டப்பட வைத்தது.

அங்கே, அவசர உதவிக்காக நிறுத்தப்பட்டிருந்த அவசர ஊர்தியில் பவன்யாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

‘ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரிய விபத்து! பவன்யாஷ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!’ என்ற செய்தி பரபரப்பாக எங்கும் பரவலானது.

அடுத்த சில மணி நேரங்களில், பவன்யாஷ் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை வெளியில் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். மேலும் கூட்டம் கூடிக்கொண்டே போக, காவல்துறை பாதுகாப்பும் அங்கே அதிகரிக்கப்பட்டது.

மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தான் பவன்யாஷ்.

அவனுக்கு அடிப்பட்ட சேதி கேட்டு பதறி ஓடி வந்த சுவாதியால், அவன் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவ அறையின் தளத்தைக் கூட நெருங்க முடியவில்லை. அந்த விஐபி தளம் முழுவதுமே பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

பவன்யாஷின் உதவியாளினி என்று சொன்னபோதும் கூட அவளை யாரும் அனுமதிக்கவில்லை. அவன் நிலை தெரியாமலும், அங்கிருந்து போக மனமில்லாமலும் அங்கேயே ஓரமாக நின்று விட்டிருந்தாள்.

அவள் கண்கள் அவளறியாமல் கண்ணீரை வடித்துக் கொண்டிருக்க, அவளை கடந்து சென்ற சிலர் அவளை விசித்திரமாக பார்த்து நகர, சிலர் பார்வையில் சந்தேகம் கொக்கியிட்டது. சிலர் அவள் அங்கே நிற்கக் கூடாது என்று விரட்டி விடவும், அவளுக்கு கதறி கத்த வேண்டும் போல் உள்ளம் வெடித்தது.

“அய்யோ… ஏன் எல்லாரும் என்னை இப்படி தொரத்தியடிக்கிறீங்க… நான் என்ன பாவம் பண்ணேன் உங்களுக்கு…” அவள் கத்தல் கேட்டு அங்கே வந்த திருக்குமரன், அவள் நிலை பார்த்து திகைத்து நின்று விட்டான்.

“சுவாதி… என்னம்மா ஆச்சு?” என்று வினவிய திருவை பார்த்தவளுக்கு அவன் அப்போது ஆபத்பாந்தவனாக தெரிந்தான்.

“திருண்ணா… இங்க நான் நிக்கக்கூடாதுன்னு எல்லாரும் என்னை தொரத்துறாங்க ண்ணா. அவங்க நல்லா இருக்காங்கனு மட்டும் சொல்லுங்க, நான் போயிறேன்.” கண்ணீரும் கம்பலையுமாக பேதலித்து மொழிந்தவளைப் பார்க்க, அவனுக்கு என்னவோ போலானது.

“பாஸ்க்கு ஒன்னுமில்ல… நீ என்னோட வாமா” என்றழைத்தவன், காவலர்களிடம் அனுமதி வாங்கி, பவன்யாஷ் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறை முன்னால் அழைத்து வந்து நிறுத்தினான்.

அந்த அறை வாசலில் அவன் அம்மா, அப்பாவின் நிலையைப் பார்த்தவள், தனாவிற்கு என்னவானதோ என்று தானும் கலங்கி நின்றாள்.

“போ சுவாதி, மேடம்க்கு துணையா இரு… நீ இப்படி அழுத முகமா இருந்தா பார்க்கறவங்களுக்கு டவுட் வரும் கவனமா இரு” என்று திரு எச்சரித்து அனுப்ப, தன் உணர்வுகளை உள்ளுக்குள்ளே புதைத்துக் கொண்டு, அங்கே ஒரு வேலையாளாக வேண்டியதைச் செய்து கொண்டிருந்தாள்.

அவன் அம்மா சொல்லி அழுதாவது தன் பயத்தை ஆற்றிக்கொண்டிருந்தார். அவன் அப்பா, எல்லாரிடமும் புலம்பி புலம்பி தன்னை ஆற்றிக் கொண்டிருந்தார். ஆனால், அவளால்… கதறி அழவும் முடியவில்லை, யாரிடமும் சொல்லி அழவும் முடியவில்லை. முடியவில்லை என்பதை விட அவளுக்கு உரிமையில்லை. பவன் பாஷையில் சொல்வதானால், அவளுக்கு தகுதியில்லை.

அவளுக்கு அவன்மேல் எந்த உரிமையும் இல்லை தான். அவன் நிழலை நெருங்க கூட அவளுக்கு எந்த தகுதியும் இல்லைதான். உயிர் காதலை பாதியில் அறுந்தெறிந்து வந்தவளால் என்னவென்று உரிமை கோர முடியும்! ஆனாலும் அவள் மனது படபடக்கிறதே, அவனை தூர இருந்தாவது ஒரேயொரு முறை பார்த்து விட மாட்டோமா என்று. அவள் உயிர் ஊசலாடுகிறதே, அவன் நலமாக இருந்தால் போதுமென்று. 

அவளின் முதல் பலவீனம் தனா. அவனுக்கு ஒன்று என்றதும் இப்படி மொத்தமாக உடைந்துபோய் சுயமிழந்து நிற்கும் தன் பேதலித்த நிலையை எண்ணி உள்ளுக்குள் நைந்து போயிருந்தாள்.

இரவு இரண்டு மணி போல அவன் கண்விழித்த செய்தி வரவே தான் அவளுக்கு சற்று ஆசுவாசமானது. ஆனால், உள்ளே சென்று பவன்யாஷை ஒருமுறை பார்க்கவும் அவளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அவன் அம்மா, அப்பா, திரு இன்னும் அவளுக்கு தெரியாத நண்பர்கள், திரைத்துறை முக்கியஸ்தர்கள், அவனது நெருங்கிய சொந்தங்கள் என ஒவ்வொருவராய் சென்று பவன்யாஷை பார்த்து வர, திறந்து மூடும் அந்த கதவையே பார்த்து நின்றிருந்தாள் சுவாதிஸ்ரீ. 

***

தலையிலும் கையிலும் கட்டிட்டு படுக்கையில் கிடப்பவனை, முடிந்த மட்டும் முறைத்துக் கொண்டிருந்தார் ராகவன்.

“டேய் முட்டா பயலே, ரிஸ்க் வேணாம் டூப் போட்டுக்கலாம்னு அவ்வளோ சொன்னேனே கேட்டியா? பெரிய இவன் மாதிரி பேசிட்டு இங்க வந்து அடிப்பட்டு படுத்திருக்க. புரோடியூசர்க்கு யாருடா பதில் சொல்றது?” சரமாரியாக அவனை திட்டித் தீர்த்தவர், “நீ வெறும் படத்துல நடிக்கிற ஹீரோ தான். ரியல் ஹீரோ ஒன்னும் கிடையாது.” என்று ஆத்திரமாக கத்தினார். 

அதுவரை பொறுமையாக அவர் திட்டை கேட்டுக் கொண்ட பவன்யாஷ், “டைரக்டர் சார், நான் கரைக்டா தான் பண்ணேன். லாஸ்ட் டைம்ல அந்த ஓட்ட கார் தான் பிரேக் பிடிக்காம கழுத்தறுத்துடுச்சு. என்னால காரை ஸ்டாப் பண்ண முடியல. நான் கொஞ்சம் மிஸ் பண்ணி இருந்தா வருண் மேல மோதி கொலை கேஸாகி இருக்கும். அதான் வேலிக்குள்ள திருப்பி விட்டேன்.” தன் பக்க விளக்கத்தைச் சொன்னான்.

“கார் பிரேக் பிடிக்கலையா?” என்று அதிர்ந்த ராகவன், “பிரேக் ஸ்பாயில் ஆக சான்ஸே இல்ல. எப்படி இது?” தனக்குத்தானே கேட்டு குழம்பி போனவர்,

“ஓகேடா, இந்த பிரேக் மேட்டர் என்னன்னு நான் விசாரிக்கிறேன். நீ சீக்கிரம் குணமாகி வர வழிய பாரு மேன்.” என்று நிற்காமல் செல்பவரைப் பார்த்து, தலையசைக்க முயன்றவனுக்கு சுரீர் என்று நெற்றியில் வலியெடுக்க, “ஸ்ஸ்ஆ” வலியைப் பொறுத்தபடி கண்களை மூடினான்.

“பாஸ்…” திரு மெதுவாக அழைக்க,

“யாரையும் என்னால பார்க்க முடியாது திரு போகச் சொல்லு.” என்றான் பவன் கண்கள் திறக்காமல்.

“இல்ல பாஸ் சுவாதி…” அவன் தயங்க,

அவள் பெயரில் கண் திறந்தவன், “சுவாதிக்கு என்ன?” என்றான்.

“நேத்துல இருந்து இங்கேயே இருக்காங்க. பார்க்கவே பாவமா இருக்கு பாஸ்.” மற்றவர்கள் யாருக்கும் புரியாத சுவாதியின் வேதனை திருவுக்கு ஓரளவு புரிந்திருக்கவே, அவளுக்காக பேசினான்.

திரு சொன்னதை உள்வாங்கிக் கொண்டவனுக்குள் ஏதோ இளகும் உணர்வு. “ம்ம் வரச்சொல்லு” என்றான்.

சில நொடிகளில், இதயம் படபடக்க உள்ளே வந்தவளுக்கு, தலையிலும் கையிலும் கட்டிட்டு படுக்கையில் கிடந்தவனைப் பார்த்ததும், கண்கள் கரையுடைத்துக் கொண்டன.

பவன்யாஷும் அவளைத்தான் பார்த்திருந்தான். நேற்றிலிருந்து உண்ணாமல், உறங்காமல், தோற்றம் திரிந்து கலங்கி நிற்பவளைப் பார்த்தவனின் இதயம் நழுவிச் சென்றது.

அவன் பார்வையை உயர்த்தி, திருவையும் நர்சையும் பார்க்க, அவர்கள் இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.

இமை அசைத்து சுவாதியை அருகில் அழைத்தான். அவன் அருகில் வந்தவளுக்கு அதுவரை கட்டுப்படுத்தி இருந்த அழுகை கேவலாக உடையவும், “நான் உயிரோட வந்ததுல உனக்கு இவ்வளோ கஷ்டமா? இப்படி அழுது வழியிற…” பவன் கேலி போல கேட்டான். அவசரமாய் அவன் வாய் மேல் கைவைத்து மூடி, மறுப்பாக தலையசைத்து கலங்கினாள்.

தனக்காக கலங்கி சுரக்கும் அவளின் ஒவ்வொரு துளி கண்ணீரும் அவன் உயிருக்குள் ஊற்றெடுப்பதாய்.

அவன் முன்னாள் காதலி, அவனுக்கு புரியாத புதிராக இருக்கிறாள். ஒருபுறம் தங்கள் காதலை புதுப்பித்துக் கொள்ளவும் மறுக்கிறாள். மறுபுறம் தனக்கொன்று என்றதும் துடித்துப் போகிறாள்! 

அவளை ஆராய்ந்தறிய இயலாமல் அவளை பார்த்திருந்தவன், தன் வாய் மூடிய அவள் கைவிரல்களில் இதழ் குவித்து மென்மையாய் முத்தமிட, அவள் விழிகளில் இன்னும் அதிகமாய் கண்ணீர் பெருகின. 

அவள் கரத்தை எடுத்து தன் நெஞ்சில் பதித்துக் கொண்டவன், “நீ இப்படி அழற அளவுக்கு எனக்கு ஒன்னும் ஆகல ஸ்ரீ.” அவளுக்கு சமாதானம் கூறினான். 

அவனை பார்த்து பேசியதே அவளை ஆறுதல்படுத்தி இருக்க, தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு அவனை ஏறிட்டாள். அவன் பார்வையும் அவள் முகத்தில் தான் பதிந்திருந்தது.

“என்கிட்ட நீ என்ன மறைக்கிற ஸ்ரீ?” பவன்யாஷ் கேட்கவும், அவள் பார்வை அதிர்ந்து அடங்கியது.

“ஏன் என்கிட்ட சொல்லக்கூடாதா?” தன் சோர்வையும் மீறி அவளிடம் மறுபடி கேட்டான்.

அவள் பதிலற்று நிற்க, “நான் உனக்கு அவ்வளோ அந்நியமா போயிட்டேனா?” கோபம் துளிர்க்க கேட்டவனுக்கு, நெற்றியில் சுரீர் என்று வலி தெறிக்கவும், தன் நெஞ்சோடு பதித்திருந்த அவள் கரத்தை அழுந்தப் பற்றி கொண்டான்.

சுவாதி இப்போதும் ஏதும் பேசவில்லை. எதையென்று அவனுக்கு விளக்குவாள்? 

“உன்னால என் காதலுக்கு தான் உண்மையா இருக்க முடியல. அட்லீஸ்ட் என்கிட்ட எதையும் மறைக்காம இருக்கலாம் இல்லயா?” பவன்யாஷின் கேள்வி ஆற்றாமையாக வந்தது. 

“அந்த பேச்சை விடு. இப்ப உன் ஹெல்த் தான் முக்கியம்.” சுவாதி அவனை சமாதானம் செய்ய,

“நீ பேச்சை மாத்தற ஸ்ரீ…” என்றவனுக்கு மருந்தின் வீரியத்தில் கண்கள் உறக்கத்திற்கு தழைந்தன. 

“ஆக்ஸிடென்ட் ஆன உடனே அப்படியொரு வலி… எனக்கு என்னவோ ஆகிடுச்சு, நான் உயிர் பொழைக்க மாட்டேன்னு தான் அந்த டைம் தோணுச்சு. அப்பவும், என் ஸ்ரீயோட வாழாம‌யே சாகப்போறேன்னு நினச்சு தான் இங்க துடிச்சிச்சு…” என்றவன் அவள் கரத்தை தன் இதயப்பகுதியில் அழுத்திச் சொல்ல,

சுவாதி உள்ளுக்குள் சிதறியபடி இமை அசையாமல் அவனைத்தான் பார்த்திருந்தாள். என்ன பேசுவது என்று அவளுக்கு தெரியவில்லை. அவள் விழிகள் மீண்டும் கலங்கி தேங்கியது.

“உன்னால ரொம்ப சுலபமா உன் தனாவ விட்டு போக முடிஞ்சது…‌ நான் தான் அப்பவும் என் ஸ்ரீய விடமுடியாம தவிச்சேன். இப்பவும் உன்ன விடமுடியாம தவிக்கிறேன். எப்பவும் உன்ன விடவும் மாட்டேன்டீ… நீ என்கிட்ட எவ்வளோ பெரிய விஷயத்தை மறச்சிருந்தாலும் பரவால்ல… என் கூட இருடீ… என்னை விட்டு போ-கா-தே…!” என்றவனை உடல் சோர்வும், மருந்தின் வீரியமும் உறக்கத்திற்கு இழுத்துச் சென்றது.

உறங்கிய பின்னும் தன் கையை விடாமல் நெஞ்சோடு பிடித்து வைத்திருப்பவனை பார்க்க அவளுக்குள் வாஞ்சை கூடியது. ‘இத்தனை நேசத்தை அவன் தன்மேல் வைத்திருக்காமல் இருந்திருக்கலாம்’ என்றெண்ணி வருந்தியவள், ஒரு துன்ப பெருமூச்சோடு மெல்ல தன் கரத்தை விலக்கிக்கொண்டு வெளியே நடந்தாள்.

***

error: Content is protected !!