என் முன்னாள் காதலி 18

என் முன்னாள் காதலி 18

அந்த இரவு முழுவதும் துளி உறக்கமின்றி தவிப்புற்று கிடந்த பவன்யாஷ், விடியல் வானத்தை வெறித்தபடி பால்கனியில் நின்றிருந்தான்.

அத்தனை காலையில் அவன் திறன்பேசி ஒலியெழுப்பியது. யாரென்று எடுத்துப் பார்க்க, ராகவன் தான் அழைத்திருந்தார்.

எடுத்தவன், “குட் மார்னிங் அண்ணா” என்றான் சுரத்தே இல்லாமல்.

“டேய்… ஹேப்பி மார்னிங்டா” என்றவர் குரல் உற்சாகமாக ஒலித்தது.

அவர் உற்சாகத்தில் இவன் முகமும் மெலிதாக இளக, “மார்னிங் செம ஹேப்பி மூட்ல இருக்கீங்க போல. என்ன விசயம் ண்ணா” பவன் வினவ,

“நான் விசயத்தை சொன்னா நீயும் ஹேப்பி ஆகிடுவடா, புரோடியூசர் நம்ம படத்துக்கு வர வெள்ளிக்கிழமையே பூஜை போட்டுக்கலாம்னு சொல்லிட்டாரு. சண்டே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் பண்ணலாம்னும் சொல்லிட்டாருடா” என்றார் குதூகலமாக.

“எப்படிண்ணா? ஒன் மன்த் வெயிட் பண்ண சொன்னாரே!” பவன் நம்பாமல் கேட்டான்.

“எல்லாம் நேத்து நீ ஒரு பேட்டி கொடுத்தியே அதுனால நடந்த மேஜீக் தான்டா. மனுசன் ஆடிப்போயிட்டாரு. உன்ன நடிக்க வைக்கிறதுல இப்ப என்னை விட அவர்தான் இன்ரஸ்ட்டா இருக்காரு.” ராகவன் சொன்னதும், பவன் முகம் சுருங்கியது.

“ஓ, எனக்காக ஒருத்தன் உயிர விடற அளவுக்கு போனதால வந்த ஆஃபரா? அப்படியொன்னும் எனக்கு நடிக்க வேணாம்ண்ணா விடுங்க.” பவன் வெறுப்போடு சொல்லிவிட,

“முட்டா பய மாதிரி பேசாதடா. நீ நினைக்கிற மாதிரி இல்ல. உனக்கும் எனக்கும் இது எவ்ளோ இம்பார்டன்ட் புரோஜக்ட்னு மறந்துட்டு பேசாத.” ராகவன் அவனை கடிந்தார்.

“அதுக்காக இப்படியா?” பவன் மனம் ஏற்க மறுத்தது.

“நடந்த எதுலயும் உன்னோட தப்பு எதுவும் இல்ல. நம்ம படம் முடியறத்துக்குள்ள உன் ரசிகனும் குணமாகி வந்திடுவான். உன்னால முடிஞ்சதை அவனுக்கு செய். இன்னைக்கு பத்து மணிக்கு மீட்டிங் இருக்கு ஒழுங்கா கிளம்பி வர. இனிமே மூச்சு விட கூட நமக்கு நேரமில்ல கிளம்பி வாடா…” இயக்குநரின் படபடப்போடு இணைப்பை தூண்டித்தார் ராகவன்.

பவன்யாஷூம் ஆழ்ந்த மூச்சிழுத்துவிட்டு தயாரானான்.

சில நாட்கள் ஓய்ந்திருந்த அவன் வாழ்க்கை சக்கரம் இப்போது மீண்டும் வேகம் பிடித்துக் கொண்டது. நான்கு நாட்களில் பூஜை, அடுத்த இரண்டு நாட்களில் முதல் பார்வைக்கான படப்பிடிப்பு என, பவன்யாஷ் நடிகனாக ஓட ஆரம்பித்திருந்தான். முன்னை விட வேகமாக, முன்பை விட அர்பணிப்பாக.

உடல்நலம் தேறி இருந்த சுவாதியும் திருவின் அழைப்பை ஏற்று மறுப்பின்றி  வேலைக்கு வந்திருந்தாள். முன்பு போல அரட்டல் உருட்டல் இல்லாமல் திரு தன்னிடம் மரியாதையாக நடந்து கொள்வதை புருவ முடிச்சுடன் அவதானித்தும் கொண்டாள். 

பவன்யாஷூம் அவளை இயல்பாகவே நடத்தினான். முன்பு போல குத்தல் பேச்சுக்கள், அவமானப்படுத்தும் செயல்கள் இன்றி அவளுக்கான மரியாதையை தந்திருந்தான். தனிமையிலும் பவன் தன்னிடம் கண்ணியமாகவே நடந்துகொள்ள, அவளும் நிம்மதியாக தன் வேலைகளைக் குறைவின்றி செய்தாள்.

அடுத்த வாரமே கோவாவிற்கு பயணமான படப்பிடிப்பு குழு, அடுத்தடுத்து குலுமணாலி, ஆஸ்திரேலியா என பயணமாகியது. பவன் முன்னதை விடவும் தன் முழு திறமையும் போட்டு நடித்துக் கொடுத்தான். ஒரே டேக்கில் காட்சிகளை முடித்துவிட வேண்டும் என நினைப்பவன், இரண்டு மூன்று டேக் எடுத்தும் சலிப்பின்றி தன் முழு உழைப்பையும் கொடுத்தான்.

ராகவனுக்கு சொல்லவே வேண்டாம். அவரின் முதல் படத்தின் நடிகன் என்ற வகையில் பவன்யாஷை கையாள்வது அவருக்கு கைவந்த கலை. மற்ற நடிகர்களை விட பவன்யாஷூடன் இணைந்து பணியாற்றுவது அவருக்கு ஏதோவொரு வகையில் சுலபமாகத் தோன்றும். இப்போதும் அவ்விதமே தோன்றியது.

இந்த படத்தின் நாயகி இனிஷா. பவன்யாஷ் முன்பு பரிந்துரைத்த அதே நாயகி. அவன் கணிப்பு தவறில்லை என்பதற்கேற்ப, கதாநாயகியின் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி நடித்துக் கொடுத்தாள்.

பெரும்பாலான பாடல் காட்சிகள் ஆஸ்ரெலியாவில் மெல்போர்ன், வியன்னா, பெர்த் போன்ற நகரங்களில் படமாகி இருக்க, மற்ற படப்பிற்கு ஆலப்புழாவை தேர்ந்தெடுத்து இருந்தனர். 

இரண்டு மாதங்கள் கண்ணைக்கட்டிக் கொண்டு பறந்தது அந்த படக்குழுவினருக்கு. இப்போதும் இரவுவேளை விளக்கொளியில் படகு வீட்டிற்குள் நாயகி, நாயகனுக்கான காதல் காட்சிகள் படமாக்கப்பட ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டிருந்தன.

உடலை மறைத்தும் மறைக்காத தூய வெள்ளை நிற சட்டை மற்றும் சிவப்பு நிற காட்டன் பேண்ட் அணிந்து, தனது அக்மார்க் மென்னகை மிளிர, முதல் பார்வையிலேயே பார்ப்பவர்களை வசீகரித்தான் பவன்யாஷ்.

தூரமிருந்து பார்க்கும்போதும் சுவாதியின் பார்வை அவனை ரகசியமாக ரசித்துக் கொண்டது. அவளின் குத்தீட்டி பார்வையை உணர்ந்தவன் போல, பவனின் பார்வையும் அங்கே சுற்றிலும் அலசி, அவளிடம் படிந்து‌ மீள, அவனிதழ்கள் ரகசிய முகிழ்நகையோடு மடிந்து கொண்டன.

அழகையும் கவர்ச்சியையும் பாரபட்சமின்றி எடுத்துக்காட்டும் பால் வண்ண உடையில் பால் நிலா துண்டமாக தயாராகி வந்து நின்றாள் இனிஷா. 

இரவின் பின்புறத்தில் மஞ்சள், நீல நிற விளக்கொளியில் அலங்கரிக்கப்பட்டிருந்த படகு வீடு, அந்த சூழலையும் அவர்கள் இணையையும் இன்னும் ரம்யமாகக்‌ காட்டியது. 

நாயகனுக்கும் நாயகிக்குமான நெருக்கமான சில காட்சிகளை இயக்குநர் விளக்கவும், பவன்யாஷ் வெகு இயல்பாக பொருந்தி நடித்துக் கொடுத்தான். இனிஷா தான் பல இடங்களில் தடுமாறி சொதப்பி வைக்க, இயக்குநர் ராகவனின் பொறுமை போய் அவளிடம் கத்தி விட்டிருந்தார்.

அவரிடம் திட்டை வாங்கிக் கட்டிக்கொண்டு முகம் வாடி அழுவது போல நின்றவளை, “என்னம்மா இது இப்படி பண்றியேமா!” என்ற கிண்டலோடு தோளணைத்துக் கொண்டான் பவன்யாஷ்.

அவள் இன்னும் தேம்பி கண்களை கசக்க, “அய்யய்ய! என்ன இது சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு” என்று கேலி பேசியபடி அவளை படகின் ஓரத்திற்கு அழைத்து வந்திருந்தான்.

“என்னாச்சு இனி? என்ன பிராப்ளம் உனக்கு ஏன் அப்படி சொதப்புற?” அவளை விட்டு விலகி நின்று அவளை நேராக பார்த்து வினவினான் பவன்யாஷ்.

“அது… அது பாஸ்… என்க்கு அன்கம்பர்டபுளா ஃபீல் ஆகுது” என்று உடைந்த தமிழில் கிள்ளை குரலில் மிழற்றியவள், தண்ணீரின் குளுமையிலும் காற்றின் சிலுசிலுப்பிலும், உடலை குறுக்கி கைகளால் கட்டிக் கொண்டாள்.

அவள் நிலை கண்டவன் கையசைக்க, ஒரு பணிப்பெண் அவளுக்காக போர்வை எடுத்து வந்து போர்த்திவிட்டு நகர்ந்தாள்.

போர்வையின் கதகதப்பில் மேனியை மறைத்துக் கொண்டவளை பார்த்தவன், “நான் உன்ன ஹேண்டில் பண்றது உனக்கு இரிட்டெட்டிங்கா ஃபீல் ஆகுதா?” என்று கேட்டான்.

“நோ நோ பாஸ்” அவசரமாய் மறுத்தவள், “அந்த பெட் ரூம் சீன்…” தயங்கி நிறுத்த,

பவன் சத்தமாக சிரித்து விட்டான். “ஹேய், டோண்ட் பேனிக். அதுவும் ஜஸ்ட் ஹக் போலத்தான். வேற உனக்கு எம்பாரஸிங்கா (Embarrassing) இருக்காது. உன் பக்கத்துல நான் தான இருக்கேன், என்னை நம்பி வா, தப்பா எதுவும் நடக்காது. ஐ பிராமிஸ்.” என்றான்.

அவன் வார்த்தையில் இவளுக்கும் தைரியம் வந்திருந்தது. சமத்தாக தலையசைத்து அவனுடன் நடந்தாள். 

தான் தடம்மாற இருந்த நேரத்தில் தனக்கு நல்வழி காட்டியவன், கூடவே இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்தவன் மேல் அவளுக்கு மரியாதையும் நம்பிக்கையும் மிதமிஞ்சி இருந்தது.

அடுத்தடுத்த காட்சிகளில் அதிக சொதப்பல் இல்லாமல் இணக்கமாகவே நடித்துக் கொடுத்தாள். அடுத்த இரண்டு மணிநேரத்தில் ஷூட்டிங் முடிந்திருந்தது.

படக்குழு அங்கிருந்து வெளியேறும் மும்முரத்தில் இருக்க, பவன்யாஷ் அவர்களிடமிருந்து தனித்து வந்திருந்தான்.

சுவாதியின் மொபைல் கீச்சிட எடுத்துப் பார்த்தாள். பவன்யாஷ் தான். 

“எங்க இருக்கீங்க பாஸ்? உங்களுக்காக தான் வெயிட்டிங், கிளம்பலாமா?” என்றாள்.

“நீ முதல்ல கிளம்பி இங்க வா” என்று இடத்தைக் கூறினான்.

“அங்கெல்லாம் எதுக்கு பாஸ்? இப்பவே லேட் நைட் ஆகிடுச்சு. தூக்க தூக்கமா வருது.” சுவாதி சோர்ந்த குரலில் சொல்ல,

“ஆங், உனக்கு‌ டாஸ்க் வச்சு ரொம்ப நாள் ஆச்சுல்ல? வொர்க் டென்ஷன்ல அதை மறந்திட்டேன் பாரு. இப்ப ஞாபகம் வந்துடுச்சே,‌ ஏதாவது டாஸ்க் வச்சாகணுமே…” பவன்யாஷ் யோசிப்பது போல் கூறவும்,

“ஐய்யோ பாஸ். டாஸ்க் எல்லாம் எதுவும் வேணாம். நான் பாவம் இல்ல பிளீஸ் பிளீஸ்” அவள் பதற்றமாகி கெஞ்ச தொடங்க,

“அப்ப ஒழுங்கா இங்க வந்து சேரு” என்றதோடு இணைப்பை துண்டித்தான்.

தோளில் மாட்டிய கைப்பையோடு இரவு வெளியை மிரட்சியாய் பார்த்தபடி, பவன்யாஷ் நின்றிருந்த ஆற்றங்கரையோரத்திற்கு வந்தாள். “இந்த மிட் நைட்ல இங்க என்ன வேலை பாஸ். அதுவும் தனியா?” கேள்வியோடே அருகே வந்தவளை இளநகையுடன் பார்த்து நின்றவன், 

“தனியா எங்க, அதான் துணைக்கு நீ இருக்கியே” என கண்சிமிட்டினான். 

அவள் அவனை சந்தேகமாக பார்த்தாள். கொஞ்ச நாட்களாக, குறிப்பாக அவளுக்கு அடிபட்டது முதல் அவன் அவளிடம் நல்லமுறையில் தான் நடந்து கொள்கிறான். முன்பு போல குத்தல் பேச்சுக்களோ, அவமானப்படுத்தும் நடவடிக்கைகளோ இல்லாமல் அவளும் சற்று நிம்மதியாக இருக்கிறாள். முக்கியமாக டாஸ்க் என்ற பெயரில் அவன் பைத்தியக்கார விளையாட்டை மறுபடி தொடங்காதது அவளுக்கு அத்தனை ஆசுவாசம். 

அன்பாக பேசுகிறான், அத்துமீறல்கள் இன்றி கண்ணியத்தோடே நடந்து கொள்கிறான். இருந்தாலும் அவனுடன் தனிமையில் இருக்க நேரிடும்போது அவளுக்குள் ஒருவித அச்சம் இருக்கவே செய்தது.

சுவாதி தயங்கி தாமதித்த சில நொடிகளில், ஆற்றின் கரையோரம் அவர்களுக்கான சிறிய படகு ஒன்று வந்து நின்றது.

“போட் வந்துடுச்சு பாரு, வா” என அவள் கைப்பிடித்து ஆற்றுக்குள் இறங்கினான். தண்ணீரின் சில்லீட்டில் வெடவெடத்தவள், “ஊரே தூங்கும்போது இப்ப போட்டிங் போகணுமா? என்ன ரசனை உங்களுக்கு” புலம்பியபடியே அவன் கரத்தை அழுத்திப் பற்றிக்கொண்டு படகில் ஏறி அமர்ந்தாள். ஒரே தாவில் பவன் அமர்ந்ததும், படகு நகர்ந்தது.

“இப்பவாவாது சொல்லு பவன், என்ன பிளான் பண்ணி வச்சிருக்க?” சுவாதி நொந்தபடி கேட்க,

சிரிப்பை சிதற விட்டவன், “ரொம்ப நாளாச்சில்ல அதான் சின்னதா உனக்காக ஒரு டாஸ்க்.” எனவும்,

 பயத்தில் விழிகள் விரித்தவள், “என்னது மறுபடியுமா?” கிட்டத்தட்ட சத்தமின்றி அலறினாள்.

“எஸ், இந்த போட் ஆத்துக்கு நடுவுல போனதும், நீ தண்ணீல குதிக்கணும். மார்னிங்குள்ள நீ கரையேறி வந்துட்டா, நீ வின், இல்லன்னா அவுட்.” பவன் சாதாரணமாக விளக்க,

“ஆமாண்டா மொத்தமா அவுட் ஆகிடுவேன்” கைகளை மேலே தூக்கி கடுப்பாக சொன்னாள்.

“அப்பவும் நீ அவுட் தான்” பவன்யாஷ் கைகளை விரிக்க, அவன் கைமேலேயே ஓரடி வைத்தாள்.

“பார்றா, என்னை அடிக்கிற அளவுக்கு தைரியம் வந்துடுச்சு.” பவன் நக்கலாக சொல்ல,

“பின்ன என்னை மர்டர் பண்ண பிளான் பண்ணா கொஞ்சுவாங்களா?” என்றாள் அவளும்.

“அஹான், கொஞ்சலாமே” உல்லாசமாக அவன் விசிலடிக்கவும், தன் காதுகளை பொத்திக் கொண்டாள். அவன் அப்போதும் நிறுத்தாமல் விசிலடிக்க, அவன் வாயை அடைக்க முயன்று அவன் புறம் சாய்ந்ததில் படகு குலுங்க, அவன்மீதே விழுந்து வைத்தாள்.

அவளை தன்மேல் தாங்கிக்கொண்டு அதற்கும் விசலடித்தவன், “இப்படி கொஞ்சுவன்னு நான் எதிர்பாக்கலயே” என்று கேலி செய்தான். அவள் வேகமாக எழ முயல, மீண்டும் படகு ஆட்டம் கண்டது.

அவளை அசையவிடாமல் தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டவன், “கொஞ்சம் அசையாம இருடி, படகை கவுத்து விட்டுட போற. எனக்கு நீச்சல் வேற அவ்வளவா தெரியாது.” என்றவனை முறைத்தவள்,

“எனக்கு நீச்சல் நல்லாவே தெரியுமே” வாய்துடுக்காக பதில் பேசினாள்.

“அப்ப டாஸ்க் கன்பார்ம் பண்ணிட வேண்டியது தான்” என்று சொல்லி சிரித்தவனை இன்னும் முறைத்து வைத்தாள். 

தன் நெருக்கத்தில் முறைப்பை காட்டிய அவளின் தளிர் முகம், அவனுக்குள் ரசனை கூட்டியது. “சிரிக்கும்போத விட முறைக்கும்போது தான் ஆளை இழுக்குறடீ” என்றவன் அவள் முகத்தில் மென்மையாய் ஊதிவிட்டான். அவன் சுவாசக்காற்றின் வெப்பத்தில், அந்த படகை போல அவள் மனமும் ஆட்டம் கண்டது.

“என்னை விடு, அந்த படகுகாரரு நம்ம பத்தி என்ன நினைப்பாரு?” சுவாதி சங்கடமாக சொல்ல, பவன்யாஷ் பார்வை அவரிடம் சென்றது.

அவரோ, துடுப்பு வழிப்பது ஒன்றே தம் தலையாயப் பணி என்பது போல, இவர்களை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாது தன் கைவேலையிலேயே கவனமாக இருந்தார்.

“நம்மள மாதிரி எத்தனை ஜோடிகளை பார்த்து இருப்பாரு அவரு.” என்றவன் தன் பிடியை தளர்த்தி, “படகை ஆட்டாம மெதுவா எழு” என்று அவளை தன்னிலிருந்து விலக்கி அமரவைத்தான்.

அதற்குள் அந்த படகும் குறிப்பிட்ட இடத்தில் நின்றது. அருகே பெரிய படகு குடிலை பார்த்தவள் துணுக்குற்று பவன்யாஷை பார்க்க, அவன் படகிலிருந்து குடிலுக்கு மாறியவன், அவளுக்கும் கைக்கொடுத்து தூக்கி விட்டான்.

சற்று முன் படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட படகுவீடு போலல்லாது. இது வேறுமாதிரி இருந்தது. அளவில் சற்று சிறியதாக பார்வைக்கும் பாந்தமாக காட்சி தந்தது.

பவன்யாஷ் உள்ளே நடக்க, சுவாதி முகப்பிலேயே தயங்கி நின்றாள். “என்ன அங்கேயே நிக்கிற. உள்ள வந்து பாரு” என்று அவள் கைப்பற்றி இழுக்காத குறையாய் உள்ளழைத்து வந்தான்.

உட்புறம் வெகு அழகாய் நேர்த்தியாய் இருந்தது. டைனிங், கிச்சன், ஹால், பெட்ரூம், பாத்ரூம் என அனைத்து வசதிகளுடன், அட்டகாசமாக இருந்தது. 

ஆனால், அதை ரசிப்பதை விட அவள் மனதில் அச்சமே மேலோங்க, “இங்க எதுக்காக என்னை கூட்டிட்டு வந்த? நீ மட்டும் வந்திருக்கலாமில்ல. நான் ரூம்லயே ஸ்டே பண்ணி இருப்பேனே” அவனிடம் கேட்டாள்.

“இவ்வளோ ரொமாண்டிக் பிளேஸ்ல நீயில்லாம நான் இருக்கிறதும் ஒண்ணு, இல்லாததும் ஒண்ணு” என்றவன், கதவை உட்புறமாக தாழிட்டு வந்து, உடலை முறுக்கிக் கொண்டு மெத்தை விழுந்தான்.

“ஏன் அங்கேயே நிக்கிற இங்க வா” பவன் அவளை அருகில் அழைக்கவும், அவள், “ம்ஹூம்…” வேகமாக மறுத்து தலையசைத்தாள்.

அவளின் மிரட்சியை கண்டு சிரித்தவன், “அட ச்சீ, வந்து தொலை. ஷோல்டர் எல்லாம் செம பெயின், அழுத்திவிடு” அவன் கவிழ்ந்து படுத்துக்கொண்டான்.

அவனுக்கு பணிவிடை செய்வதில் அவளுக்கு தயக்கமில்லை. அவனருகில் வந்தவள் அவன் தோள்பட்டையை அழுத்திக் கொடுத்தாள்.

“அப்படியே முதுகு, இடுப்பையும் அழுத்தி விடு. அந்த இனிஷா பார்க்கத்தான் ஒல்லிபெல்லி மாறி இருக்கா, அவளை தூக்கும்போது தானே தெரியுது. எப்பா! என்னா வெயிட்டு. இதுல அஞ்சாறு டேக் வேற. நானும் எவ்வளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?” அவன் புலம்பலில் அவள் அச்சமும் விலக, சிரிப்புடன் கேட்டபடியே அவன் முதுகை அழுத்திக் கொண்டிருந்தாள் சுவாதி.

சில நிமிடங்களில் அவன் கண்கள் உறக்கத்தில் கவிழ, “போதும் ஸ்ரீ, லைட் ஆஃப் பண்ணிட்டு நீயும் வந்து தூங்கு” என்று நேராக திரும்பியவன் அவளுக்கு இடம்விட்டு தள்ளி படுத்தான்.

“நான் உன்கூடவா! ம்கூம்” பதறி  விலகியவளை, எட்டிப்பிடித்து தன்னிடம் இழுத்துக் கொண்டவன், “என்கிட்ட என்ன பயம் உனக்கு? அந்த இனிஷா பொண்ணு யாரோ, அவளே என்மேல நம்பிக்கை வச்சு, பெட்ரூம் சீன்ஸ் கூட தைரியமா நடிச்சு கொடுக்குறா. அவளுக்கு என்மேல இருக்க நம்பிக்கை கூட, உனக்கு என்மேல இல்லாம போச்சா?” ஆதங்கமாகவே கேட்டான்.

“அவளுக்கு உன்ன பத்தி தெரியாது. எனக்கு தான் உன்னப்பத்தி நல்லா தெரியுமே அப்புறம் எப்படி உன்ன நம்புறதாம்?” என்று கேட்டு விலக முயன்றவளைத் தடுத்தவன்,

“ம்ஹும், என்ன தெரிஞ்சி வச்சிருக்க அப்படி என்னை பத்தி. சொல்லு சொல்லு.” பவன்யாஷ் புருவம் உயர்த்தி சுவாரஸ்யமாக வினவினான்.

“நான் எதுவும் சொல்ல மாட்டேன். முதல்ல என்னை விடு. நான் அங்க ஓரமா போய் தூங்கிக்கிறேன்.” சுவாதி கலவரத்தோட சொன்னாள். 

 “அப்படியென்ன‌ பெருசா செஞ்சிட போறேன், இப்படி உன் மூக்கோட மூக்குரசுவேன்” என்று சொன்னதோடு அவளின் நுனி மூக்கோடு தன் மூக்குரசினான்.

அவளுக்குத் தான் மூச்சு முட்டியது.

“இல்லனா… இந்த ஊசி முனை மூக்கு மேல ஒரேயொரு முத்தம் வைப்பேன்.” என்று சொன்னதோடு அவளது நுனிநாசியில் அழுத்தமாய் இதழொற்றி எடுக்கவும்,

“பவன்…” அவள் தடதடத்து அவனை நிறுத்த முயன்றாள்.

தடை விதித்த அவள் கரத்தை தன் நெஞ்சோடு பதித்துக் கொண்டவன், அவள் கவிழ்ந்த கண்களில் இதமாய் இதழ் பதித்தான்.

“தனா… வேணாம்…” அவள் குரல் நடுங்கி தேய்ந்தது.

பெருவிரலால் அவளின் நடுங்கிய கீழிதழை அழுத்தம் தந்து வருடியவன், “ஸ்ரீ… நிஜமா உன் தனா உனக்கு வேண்டாமா?” ஏக்கம் பெருக காற்றான குரலில் கேட்டவனின் இதழ்கள் அவளிதழ்களோடு புதைந்தன, அழுத்தமாய்… ஆழமாய்…

***

இருள் பிரியா வானம் வெகு சோம்பலாய், விடியலை வரவேற்க தாமதப்படுத்திக் கொண்டிருந்தது.

சுற்றிலும் தண்ணீர், நடுவில் ஆடும் படகு குடிலின் ஓரமாக இவள் மட்டும் நின்றிருந்தாள். கண்கள் சிவந்து, முகம் வெளுத்து, கவலை அப்பிய தோற்றத்தில் தூரத் தெரிந்த ஏதோ ஒன்றை வெறித்திருந்தாள் சுவாதிஸ்ரீ.

ஆழி பேரலைகளுக்குள் தத்தளித்து தவித்திருந்தவள், தன்னவன்  அரவணைப்பிற்குள் பிணக்கின்றி அடங்கி போயிருந்தாள். எது நடக்கக் கூடாது என்று தன்னவனிடமிருந்து விலகி விலகி போனாளோ, அந்த ஒன்றை கடந்து வந்திருந்தாள். 

அவன் ஆவேசமாக அவளை களவாட முயன்றிருந்தால், அவள் தன் முழு பலம் கொண்டு தடுத்திருப்பாள். ஆனால், ஆண்டாண்டு காலங்கள் தேக்கி வைத்த காதலின் ஊற்றெடுப்பாய், பொத்தி வைத்த நேசத்தின் அணை உடைப்பாய் அவளை ஆட்கொண்டவனிடம் அவளால் அடங்கி போக மட்டுமே முடிந்தது.

இடையில் எந்த குழப்பமும் குறுக்கிடாமல் இருந்திருந்தால், உரிமை பந்தத்தோடு புனிதமாய் இணைந்திருக்க வேண்டிய உறவு. இப்போது எல்லாமே தடம்மாறி, நிறம் மாறி, இங்கே, இப்படி வந்து முடிந்திருக்கிறது. தன் நிலையை நினைக்க நினைக்க அவள் நெஞ்சம் விம்மி, கண்கள் கலங்க வர, துடித்த இதழ்களை கடித்து அழுகையை தடுக்க முயன்றாள்.

அவளை இன்னும் பலவீனமாக்குவதாக, அந்த ஒருவனின் உருவம் அவள் கண்முன்னே தோன்றி அச்சுறுத்தியது. ஆறடி உயரத்தில், அம்சமான தோற்றத்தில் இருந்தவனின் பேரழகான முகம், அவளை நெருங்க நெருங்க சிவந்து செந்தனலாக மாறியது. 

“நீ எனக்கானவ சுவாதி… உன்ன யாருக்கும் விட்டுத் தரமாட்டேன்… உனக்காக, உன் ஒருத்திக்காக எத்தனை பேரோட தலையெடுக்கவும் தயங்கவே மாட்டேன்… தெரியுமில்ல என்னை பத்தி உனக்கு… அவ்வளோ சீக்கிரம் இந்த சர்வேஸ்வரனை மறந்துடுவியா நீ? மறக்க விட்டுடுவேனா நான்? ஹாஹாஹா…” 

இப்போதும்‌‌ மறக்க முடியாத அவனது வெறியான சிரிப்பில் அவள் உடல் வெளிப்படையாகவே நடுக்கம் கொண்டது. அவனது ஈனச் செயலால் வாயில் குருதி வழிய அவள் கண்முன்னே உயரடங்கிப் போன தன் அம்மாவின் மரணம் தந்த நினைவு, அவள் கலக்கத்தை கனமாக்கியது.

ரணமான நினைவில் கலங்கி நின்றவளை, இரு வலிய கரங்கள் பின்னிருந்து வளைத்துச் சேர்த்துக் கொண்டன. 

“இங்க எதுக்கு தனியா வந்து நின்னுட்டு இருக்க? அதுவும் என் சர்ட்ட போட்டுகிட்டு” கூடலின் கிறக்கம் இன்னும் தெளியாத குரலில், அவள் காதோரம் உரசி வினவினான் தனா.

தன்னவன் அணைப்பில் முகம் மாறியவள், அவன் கேட்ட பிறகே, தான் அணிந்திருந்த சட்டையைக் கவனித்தாள். அவன் சட்டையைத்தான் மாற்றி அணிந்திருந்தாள். அவளுக்கு ஒருபுறம் வெட்கமும் திரையிட்டது, மறுபுறம் தவிப்பும் கூடியது. ‘தனாவை பற்றி அவர்கள் யாருக்கும் தவறிக்கூட தெரியக் கூடாது’ என்று அவசர வேண்டுதல் வைத்தாள்.

அவளின் தவிப்பை அறியாதவனாக, அவளின் பின் கழுத்து பெருவெளியில் சின்ன சின்ன இதழ் முத்தங்களை இட்டு நிரப்ப முயன்றிருந்தான் இந்த காதல் ரட்சகன்.

ஓடை நீரின் இன்னிசையான சலசலப்போ, மெதுமெதுவாய் இருள் பிரியும் வான வீதியில் முதல் சிறகை விரித்திருந்த பறவைகளில் அழகியலோ, அங்கங்கே சிறிதும் பெரிதுமாக மிதந்து கொண்டிருக்கும் படகுகளில் நளினங்களோ, தூரத்தெரிந்த கரைகளில் குவிந்திருக்கும் வீடுகளில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் மின்விளக்கு கூட்டமோ எதுவுமே அவன் கண்களில் படவில்லை. அவன் கருத்தையும் கவரவில்லை.

தன் கைகளில் சிறைப்பட்டு நிற்கும் காதலானவளின் பேரழகை தவிர்த்து, அவனுக்கு எதுவுமே புலப்படவில்லை. இரவின் மிச்ச சொச்சங்களை இப்போதே தீர்த்துக்கொள்ள அவன் ஆசை பறையறிவிக்க, அவளை இரு கரங்களில் பொக்கிஷமாக ஏந்திக் கொண்டவன், உள் நோக்கி நடந்தபடியே தன் சில்மிஷங்களால் அவளை சிதறடித்தான்.

“தனா… ப்ளீஸ்… நான் சொல்றதை கொஞ்சம்…” சுவாதி திணறலாக  சொல்ல வந்ததை, அவள் வாயடைத்து வார்த்தைகளை கொள்ளையிட்டவன், அவளையும் மீண்டும் முழுதாய் கொள்ளையிடலானான்.

***