என் முன்னாள் காதலி 19

IMG-20220515-WA0044 (2)

என் முன்னாள் காதலி 19

 

பவன்யாஷ் மருத்துவமனையில் இருந்து ஓரளவு தேறி வீடு வர ஒரு வாரத்திற்கு மேல் ஆனது. அந்த வாரம் முழுவதும், அவனுக்கான பணிவிடைகளை செய்து அவனுடன் இருந்தாள் சுவாதி. 

 

பெரிதாக இருவருக்குள்ளும் பேச்சு இருக்கவில்லை. ஆனால் விழித்திருக்கும் போதெல்லாம் பவனின் பார்வை அவளையே சுற்றி வந்து கொண்டிருந்தது.

 

ஒரு காலத்தில் தங்க தாம்பாளத்தில் தாங்க வேண்டும் என்று எண்ணிய காதல்… இப்போது அவன் கண்முன்னே கந்தலாய் கிடக்க, அதையெடுத்து பொத்திக்கொள்ளவும் முடியாமல், குப்பையில் வீசவும் இயலாமல், அவன்  தள்ளாடிக் கொண்டிருந்தான்.

 

இரவு பகலாக அவள் தன் மேல் காட்டும் அக்கறையும், கவனிப்பும் பவன்யாஷை அசைத்து பார்த்தது. அவள் மீதான பழைய வெறுப்புகளை தள்ளி வைத்துவிட்டு, இப்போதைய சுவாதியை புரிந்துகொள்ள முயன்றான்.

 

“இந்தா ராசா, இந்த மாத்திரைய சாப்பிடு” மகனின் கட்டிட்ட தலையை கவலையோடு வருடியபடி மங்கை மாத்திரையை தர,

 

“எனக்கு ஒன்னுல்ல ஆத்தா, மேல் காயம் தான் சீக்கிரம் சரியாகிடும்” அம்மாவின் கைப்பற்றி சமாதானம் சொன்னபடி மாத்திரையை  விழுங்கினான்.

 

“சாமி புண்ணியத்துல பெருசா ஒண்ணும் ஆகல” மங்கை கன்னத்தில் போட்டுக்கொள்ள, மெலிதாய் சிரித்தவன், “ஆமா ஆமா உன் சாமி தான் என்னை கொலை கேஸ்ல இருந்து காப்பாத்துச்சு” எனவும்,

 

“என்ன தனா சொல்ற?” குணசேகரன் மகனிடம் வினவினார்.

 

“ஆமாப்பா, சரியான நேரத்துக்கு நான் வண்டியை கட் பண்ணாம‌ விட்டிருந்தா, வருண் மேல மோதியிருப்பேன். ஏதோ லாஸ்ட் செகண்ட்ல ரெண்டு பேருமே உயிர் பொழைச்சோம்” விபத்து நடந்ததைப் பற்றி தனா விளக்கினான்.

 

“ஏதோ நல்லநேரம் தான் பா. பெருசா எதுவும் ஆகாம தப்பிச்சீங்க” குணசேகரனும் ஆசுவாசமாக சொன்னார்.

 

“கார் மோத வந்த வேகத்துலயே பயந்து போய் அந்த வருணுக்கு காய்ச்சல் வந்து ரெஸ்ட்ல இருக்கான் பாஸ். இனிமே உங்களை சீண்ட யோசிப்பான்.” திருக்குமரன் சொல்ல, பவன்யாஷ் புன்னகைத்தான். 

 

“நான் இல்லாதப்போ டாக்டர் வந்தாங்களா புள்ள? ஏதாவது சொன்னாங்களா?” மங்கை சுவாதியிடம் விசாரிக்க,

 

“இல்ல மேடம்” என்றாள்.

 

“சரி, ஆப்பிளை வெட்டி ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா” அவர் சொன்னதும், பழச்சாறு தயாரித்து, அனைவருக்கும் கொடுத்தாள்.

 

“நீ போயி ராத்திரிக்கு சாப்பிட தனாவுக்கு என்னென்ன கொடுக்கணும்னு கேட்டுட்டு வந்துடு” அடுத்து மங்கை சொல்ல, சரியென தலையாட்டி நகர்ந்தவளை, குணசேகரன் குரல் நிறுத்தியது.

 

“அட நில்லு சுவாதிமா, உன் மேடம் நினச்சு நினச்சு இப்படித்தான் ஏதாவது சொல்லிட்டிருப்பா.” 

 

மங்கை, “வேலை செய்யற புள்ளய நீங்களே கெடுக்கறீங்க” கணவனை கடிந்து கொண்டு, “நீ மசமசன்னு நிக்காம சொன்னதை செய்” சுவாதியை விரட்டினார்.

 

“அட நில்லும்மா” அவளை மறுபடி நிறுத்திய குணசேகரன், “மங்கை, உன் மகன்‌‌ என்னென்ன சாப்பிடனும்னு டயட்டீஷியன் கவனிச்சுக்குவாங்க. நீ விசனபட்டுக்காத சரியா?” என்றார்.

 

அவர்கள் இருவருக்கிடையே போவதா? நிற்பதா? என்று திருதிருத்து நின்ற சுவாதியை பார்த்து, பவன்யாஷ் இதழ் மடித்து சிரித்து வைத்தான்.

 

“நான் விசன படாம என் மவனுக்காக வேறாரு விசனபடுவா? பேச வந்துட்டீங்க?” மங்கை விடாமல் பேச,

 

“தனா, உன் அம்மாக்கு வயசு‌ கூடி போச்சுடா, அவளுக்கு எடுக்க கொடுக்க ஆளில்லனா ஒரு வேலை ஓடறதில்ல இப்பல்லாம்.” குணசேகரன் மகனிடம் புகார் வாசித்தார்.

 

“ஆமாமா உன் அப்பாருக்கு மட்டும் வயசு குறையுதாம் ராசா, இளசா பொண்ணு பார்த்து கட்டி வெக்கிறியா பாரு” மங்கையும் இணையாக பேசினார். 

 

“என்னப்பா பொண்ணு பார்த்துடலாமா?” பவன் கண்ணடித்து  கேட்க,

 

“அட போடா, அடிச்சாலும் புடிச்சாலும் என் பொஞ்சாதி போல வருமா?” என்று குணசேகரன் மனைவியை சீண்டலாக பார்க்க, மங்கை முகத்தை திருப்பிக் கொண்டார்.

 

“வெட்டி பேச்ச விடு ராசா, நீ நல்லபடியா குணமாகி வந்தா, நம்ம குலசாமிக்கு கடா வெட்டி பொங்க வைக்கிறேன்னு வேண்டிக்கிட்டேன். உனக்கு குணமான உடனே ஊருக்கு ஓரெட்டு போய் வேண்டுதலை நிறைவேத்திட்டு வந்துடலாம் ராசா.” மங்கை மகனிடம் கூற, 

 

“சரி மங்காத்தா, உன் பேச்சுக்கு எதிர் பேச்சு ஏது? சிறப்பா செஞ்சிடலாம்.” என்றான் தனா.

 

அவர்கள் வீட்டுக்கு வந்த பிறகும் மங்கை உம்மென்று இருக்க,  குணசேகரன் சமாதான உடன்படிக்கைக்கு தயாராகி மனைவியிடம் பேச்சு கொடுத்தார்.

 

“இப்ப எதுக்கு மூஞ்சை தூக்கி வச்சிகிட்டு இருக்க அரசி?” 

 

“பேசாதீங்க மாமா, எனக்கு கெட்ட கோபம் வந்துடும். நான் ஒன்னு சொன்னா, அந்த சுவாதி பொண்ணு முன்னாடி நீங்க மாத்தி பேசறீங்க. நாள பின்ன அந்த புள்ள என் பேச்ச எப்படி மதிக்குங்கிறேன்” அவர் கணவனை குறைப்பட்டுக் கொண்டார்.

 

“அதுக்கில்ல மங்கை, ராத்திரி பகலுமா கண் முழிச்சு சுவாதி தானே தனாவ கவனிச்சிக்கிது. நீயும் போன உடனே அது இதுனு வரிசையா வேலைய சொல்லுற. அந்த புள்ளயும் பாவந்தான. முன்னைக்கு இப்ப சோர்ந்து வாடி போயிருக்கு வேற.” குணா சுவாதிக்காக பேசியது, மங்கைக்கு இன்னும் குன்றலானது.

 

“நானே தனா கூட இருந்து ராத்திரி பகலா கவனிச்சிருப்பேன். நீங்களும் அவனும் தானே ஹாஸ்பிட்டல்ல என்னை தங்க விடாம அது இது சொல்லி வீட்டுக்கு துறத்தி விட்டீங்க.”

 

“நீ உன் மவனை கவனிச்சிக்க போயிட்டா, என்னை யாருடீ பார்த்துப்பா? இந்த நொண்டியால சுயமா எழுந்து நடக்கத்தான் முடியுமா? சுயமா ஏதாவது செஞ்சிக்கத்தான் முடியுமா?” அவர் இயல்பாக கேட்க,

 

“எதுக்கு மாமா இப்படியெல்லாம் பேசறீங்க? நான் தான் உங்ககூடவே இருக்கேன்ல.” கணவனின் இவ்வித பேச்சு எப்போதும் போல மங்கையை மனம் வாடச் செய்தது.

 

“ஏய் புள்ள, கண்ண கசக்காத, உள்ளதை தானே சொன்னேன்” மங்கையின் கைப்பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டவர், “நீ பக்கத்துல இல்லாம உன் மாமனுக்கு ஒண்ணுமே நகராது. அதைத்தான் அப்படி சொன்னேன்.” என சமாதானம் சொன்னார்.

 

“நான் உங்களவிட்டு எங்க போனேனாம்? தனா ஹாஸ்பிட்டல்ல கிடக்கறப்போ எனக்கு இங்க இருப்பு கொள்ளல. என்ன இருந்தாலும் அந்த பொண்ணு சம்பளத்துக்கு இருக்கவ தானே. பெத்தவ மாதிரி பாத்துப்பாளா?” மங்கைக்கு இன்னும் மனம் ஆறவில்லை.

 

“சுவாதி சம்பளத்துக்காக மட்டும் வேலை பார்க்கிறவ மாதிரி உனக்கு தோணுதா மங்கை?” குணா மென்சிரிப்போடு கேட்க,

 

“பின்ன?” மங்கை அவரை சந்தேகமாக பார்த்து கேட்டார்.

 

“நாம தென்காசியில இருந்தப்ப, ஈஸ்வரமூர்த்தி ஐயாவ பத்தி கேள்விபட்டிருக்கல்ல?” குணா நினைவுகூறவும்,

 

மங்கை சற்று யோசித்து, “ஆங் ஆமா, அந்த ஊருல அவங்க பெரிய குடும்பம் இல்ல. கோயில் திருவிழா, பாஞ்சாயத்துன்னு ரெண்டு மூணு இடத்துல அவங்களை பார்த்திருக்கேன். இப்ப என்ன அவருக்கு?”

 

“அவரு இப்ப ஒரு கொலை கேசுல ஜெயில்ல இருக்காரு.” என்றதும்,

 

“ஆத்தாடி! ஊரே மெச்ச வாழ்ந்த மனுசனுக்கு இப்படியா விதி அமையணும்? கஷ்டந்தான்.” என வருத்தப்பட்டார்.

 

“அந்த ஈஸ்வரமூர்த்தி ஐயாவோட பொண்ணு தான் சுவாதி.” குணசேகரன் சொன்னதும், மங்கை அதிர்ந்து எழுந்து விட்டார்.

 

“என்ன மாமா சொல்றீக? நிசமாவா?” மங்கையால் நம்பவே முடியவில்லை.  

 

குணா ஆமோதித்து தலையசைத்து, “முதல் நாள் சுவாதிய பார்த்தப்பவே எங்கயோ பார்த்தமாதிரி தோணுச்சு. அதையே தான் தனா கிட்டயும் கேட்டேன். அவன் தான் சொன்னான், இவ இன்னார் பொண்ணுன்னு.”

 

“இல்லையே மாமா, டுவல்த்ல ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்துச்சுன்னு டிவில பேப்பர்ல எல்லாம் ஈஸ்வரமூர்த்தி ஐயா பொண்ண போட்டாங்கல்ல. நானும் பார்த்தேனே. அந்த பொண்ணு தங்கசிலை மாதிரி இல்ல இருந்துச்சு…” மங்கை நினைவுக்கு கொண்டு வந்து கேட்க,

 

“எல்லாம் அந்த குடும்பத்தோட கெட்ட நேரம்தான். சுவாதிக்கும் அவங்க அத்தை மகனுக்கும் கல்யாண ஏற்பாடு நடந்திருக்கு, அப்ப அவ சித்தப்பாவோட மச்சான் யாரோ பெரிய ஆளாம். அவர் வந்து என் பையனுக்கு தான் சுவாதிய கட்டிக்கொடுக்கணும்னு தகராறு பண்ணிக்காரு. கூடவே பேச்சு பெரிய கைகலப்பாகி, ஒரே குடும்பத்துக்குள்ள அடிதடி, வெட்டுன்னு கலவரமாகி போயிருக்கு. அதுல அந்த பொண்ணோட அம்மா இறந்து போயி, அப்பா இப்ப கொலை கேஸுல ஜெயில்ல இருக்காரு. புள்ளங்க ரெண்டும் ஊரவிட்டே போயிடுச்சிங்கன்னு ஊருல சொன்னாங்க.” குணா தான் விசாரித்து அறிந்ததை மனைவியிடம் கூறினார்.

 

“அய்யோ பாவம்! இப்படி எல்லாம் கூடவா நடக்கும்? என்ன போதாத காலமோ!” என்று வருத்தம் கொண்ட மங்கையர்க்கரசி, “நல்லா வாழ்ந்த குடும்பத்து பொண்ண போயும் போயும் எடுபிடி வேலைக்கா வைப்பான்? தனா குணமாகி வரட்டும், சுவாதிக்கு நல்ல வேலையா கொடுக்க சொல்லலாம்.” என்றார் மனம் கேட்காமல்.

 

“இதை நான் எத்தனையோ முறை சொல்லிட்டேன். உன் மவன் காதுலையே வாங்கல… இதுல வேணும்னே அப்பப்ப அந்த பொண்ண மட்டந்தட்டிட்டு இருக்கான் வேற. எனக்கென்னவோ அவங்க ரெண்டு பேருக்கும் முன்னயே பழக்கம் இருந்திருக்கும்னு தோணுது.”

 

“என்ன மாதிரி பழக்கம் மாமா?”

 

“ம்ம் உன் மவன் கல்யாணத்துக்கு ஆயிரம் நொட்டம் சொல்லிட்டு தட்டி கழிக்கிறானில்ல, அதுக்கு இந்த பொண்ணு தான் காரணம்னு நினைக்கிறேன்.”

 

“எனக்கு தலை கிறுகிறுக்குது மாமா… நீங்க என்னதான் சொல்ல வரீங்க?” மங்கை தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டார்.

 

“நாளை பின்ன இந்த சுவாதி உன் மருமகளா வந்தா ஒத்துக்க மாட்டியான்னு கேக்க வரேன்.” குணா புருவம் உயர்த்தி கேட்டதும், 

 

“ஆங்!” மங்கை திகைத்து வாய்பிளந்தவர், “இதுல நான் ஒத்துக்க என்ன இருக்கு? தனா மனசுக்கு பிடிச்சிருந்தா போதாதா நமக்கு.‌” எனவும், குணாவும் சிரித்தபடி தலையசைத்தார்.

 

“சுவாதியும் நல்ல பதுவிசான பொண்ணு தான், பாவம் சின்ன வயசுல ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சிருக்கு. இனிமே நம்ம வீட்டு மருமகளா சந்தோசமா இருக்கட்டும்… தனா கிட்ட ஒரு வார்த்தை கேட்டு, வர தை மாசத்துல முகூர்த்தம் வச்சிப்போமா மாமா?” மங்கை படபடவென அவசரப்பட,

 

“கொஞ்சம் பொறு அரசி, முதல்ல கல்யாணத்துக்கு உன் மகன் ஒத்துக்கணுமே. என்னவோ அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ சரியில்ல போலயிருக்கு. அவங்களா சரி பண்ணிட்டு வரட்டும். பார்க்கலாம்” என்றார் குணசேகரன்.

 

“என்ன பிரச்சனையா இருந்தாலும் நாம பேசி சரிபண்ணிடலாம் மாமா. மனசுல ஆசை வச்சிருக்க புள்ளங்களை இப்படி தனியா விடமுடியாது. ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிபோனா நமக்கு தான் தலை குனிவா போயிடும். தனா குணமானதும் கல்யாணத்துக்கு பேசுங்க” மங்கை முடிவாக சொல்ல,

குணசேகரன் ஆமோதித்து தலையசைத்து கொண்டார்.

 

***

 

அடுத்த பத்து நாட்களில், தலையில் பட்டிருந்த காயம் ஓரளவு குணமாகிருந்தது. வலது கையில் எலும்பு முறிவு மட்டும் குணமாக வேண்டி இருந்தது.

 

தன் ரசிக பெருமக்களுக்கு, தான் இப்போது குணமாகி வருவதாக தெரிவித்தவன், தனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர்களுக்கும் தன் நன்றியை சொல்லி, தனது செல்ஃபியோடு ட்வீட் ஒன்றை தட்டிவிட்டிருந்தான்.

 

பவன்யாஷ் வீட்டிற்கு வந்த பிறகும் கூட, சுவாதி உடனிருந்து அவனை கவனித்துக் கொண்டாள். அவன் முன்னைப்போல அவளிடம் எந்த வம்பும் வைத்துக் கொள்ளவில்லை என்றாலும், தன் பின்னோடு தொடரும் அவன் விழி தேடல்கள் அவளை அதிகமாகவே அலைக்கழித்தன.

 

அவன் அறையிலிருந்த புத்தகங்களை துடைத்து அடுக்கிக் கொண்டிருந்தவள், அவன் பார்வை தாக்கத்தில், அவனிடம் திரும்பினாள்.

 

“என்னை வேலைய பார்க்க விடுங்க பாஸ். இப்ப உங்களுக்கு தூங்கற டைம் படுத்து ரெஸ்ட் எடுங்க” என்றாள்.

 

“எனக்கு இப்ப தூக்கம் வரல. நான் உன்ன வேலை பார்க்க வேணாம்னும் சொல்லல.” என்றான் பவன்யாஷ்.

 

“இப்படி வச்ச கண்ணு எடுக்காம பார்த்தா என்ன அர்த்தம்?” அவள் நேர் பார்வையாக அவனிடம் கேட்க, பவன் பதில் சொல்ல வரும் முன்னே, அவன் மொபைல் இசைத்தது. 

 

மொபைலை எடுத்து பேசியவன் முகத்தில் மெதுமெதுவாக இறுக்கம் கூடியது. “இப்ப என்னை என்ன பண்ண சொல்றீங்க?” அவன் குரல் காட்டு கத்தலாக உயர்ந்ததில், சுவாதியும் அதிர்ந்து விட்டாள்.

 

“ஓகே சார் நான் கோபப்படல, நீங்களும் பொறுமையா பேசுங்க. டாக்டர் இன்னும் ட்டூ வீக்ஸ் டைம் சொல்லி இருக்காரு. அதுக்கு முன்ன கைகட்டு பிரிச்சா அடுத்த நாளே ஷூட்டிங் வந்துடுவேன் போதுமா?” என்றதோடு அழைப்பை துண்டித்தவன், ஒற்றை கையால் நெற்றியை அழுத்திக் கொண்டான்.

 

“என்னாச்சு? ஏன் இவ்வளோ கோபம்?” சுவாதி அவனிடம் வந்து வினவ,

 

“தலை வலிக்குதுடீ” என்றான் சோர்ந்த குரலில்.

 

“டேப்லெட் எடுத்து தரவா?” கேட்டவளின் கரத்தை எடுத்து தன் நெற்றியில் வைத்தவன், “தலையை பிடிச்சு விடு போதும்” என்று இருக்கையின் பின்புறம் தலைசாய்த்து கண்மூடிக்கொண்டான். 

 

அவனை சிறு தயக்கத்துடன் பார்த்தவள், அவன் பின்னால் வந்து நின்று தலையை பிடித்து விரல்களால் மெல்ல அழுத்தம் கொடுத்தாள்.

 

பவன்யாஷ் ஓய்வில் இருப்பதால், அவன் நடிக்க வேண்டிய காட்சிகள் தவிர்த்து மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டிருந்தன. இவனுக்கு விபத்து ஏற்படாமல் இருந்திருந்தால் இந்நேரம் படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்திருக்கும். இப்போது இவன் ஒருவனால், திரைப்படம் தாமதமானதில் ஏற்பட்ட அதிருப்தியை தயாரிப்பாளர் பேச்சுவாக்கில் அவ்வப்போது அவனிடம் காட்டிக் கொண்டிருக்கிறார். 

 

‘நடந்த விபத்துக்கு தான் எப்படி பொறுப்பாக முடியும்?’ என்று பவனும் பேச, இருவருக்கும் முட்டிக் கொண்டது. இடையில் ராகவன் வந்து இருவரையும் சமாதானம் செய்து கொண்டிருந்தார். 

 

இதில் கைக்கட்டு பிரித்தால் போதும் மீதமிருக்கும் ஷூட்டிங்கை முடித்து கொடுத்து விடலாம் என்ற நிலைக்கு வந்திருந்தான் பவன்யாஷ். இவ்வித அழுத்தத்தில் அவன் தலைவலியும்  அதிகமானது.

 

அவளது மென்விரல்களின் மாயத்தில், அவன் தலைபாரம் மெல்ல குறைந்திட, அவள் விரல் ஸ்பரிசத்தின் மென்மையில் அவனுக்குள் இதம் பரவியது. பின்புறம் சாய்ந்த வாக்கிலேயே கண்களை திறந்து அவள் முகத்தை ஏறிட்டான். 

 

கருத்த முகம், பொலிவற்ற விழிகள், ஈரமற்ற இதழ்கள், கலைந்திருந்த மயிரிழையில் ஒன்றிரண்டு அவளின் எண்ணெய் படிந்த நெற்றியிலும் கன்னங்களிலும் அங்கிங்கு ஒட்டியிருக்க, இப்போதும் அவன் பார்வை அவளை ரசிக்கத்தான் செய்தது. 

 

தன் தலையில் இருந்த அவள் கரத்தை பிடித்து இறக்கி தன் கன்னத்தோடு பதித்து அழுத்திக் கொண்டவன், “அழகிடீ நீ…” நேசம் தளும்ப சோர்ந்த குரலில் மொழிந்தான்.

 

அவன் கொஞ்சல் மொழியில் அவன் கண்களை சந்தித்தவள், “நானா? அழகா? நீங்க உங்க கண்ணை செக் பண்ணிக்கறது நல்லது பாஸ்.” என்றவள் தன் கரத்தை இழுத்துக் கொள்ள,

 

அவளை முறைத்தவன், சட்டென எழுந்து கட்டிலில் சென்று அமர்ந்தான். “நான் தூங்கற வரைக்கும் என் தலையை அழுத்தி விடற” அவன் உர்ரென்று சொன்ன விதத்தில், இவளுக்கு சிரிப்பு தான் வந்தது.

 

“அவ்வளோதானா பாஸ்?” சுவாதி அசராமல் கைகளைக் கட்டி கண்கள் சுருக்கி கேட்ட விதத்தில் அவனுக்கும் சிரிப்பு வந்தது. தன்னிதழ் பிரியாமல் மென்னகையை நெளிய விட்டவன், கையசைத்து அவளை அருகழைத்தான்.

 

கொஞ்சம் எச்சரிக்கையோடு அவனிடம் வந்தவளை அவன் அமர சொல்ல, அவனிடமிருந்து நன்றாக விலகி அமர்ந்தாள்.

 

தனக்கும் அவளுக்கும் இடையிலான இடைவெளியை பார்வையால் அளந்தவன், “நீ இல்லாத என் உலகம் ரொம்ப நிம்மதியா இருந்திருக்குமோ என்னவோ, பட், இவ்வளோ சுவாரஸ்யமா இருந்திருக்காது” என கண் சிமிட்டியவன், அவள் மடியில் தலைவைத்து வாட்டமாய் படுத்துக் கொண்டான்.

 

அவன் செயலில் திகைத்தவள், “இப்படி நம்மள உன் வீட்டுல யாராவது பார்த்தா என்னாகும்?” என்றாள் பதற்றமாய்.

 

“அதை அப்ப பார்த்துக்கலாம். இப்ப என்னை தூங்க விடு.” என்று கண்கள் மூடிக்கொண்டவன், எடுத்துக்கொள்ளும் மருந்தின் வீரியத்தில் சில நிமிடங்களிலேயே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டிருந்தான்.

 

அவளின் பார்வை உறங்கும் அவன் முகத்தை விட்டு அகல மறுத்தது. அடர்ந்த கேசம், பரந்த நெற்றியின் ஓரம் ஒட்டியிருந்த சிறு காயம், மூடியிருந்த குட்டி இமைகள், மலை முகடாய் கூர்நாசி, செல்ல குழந்தையாய் மீசை, அழுந்த மூடிய உதடுகள், தாடையில் கொஞ்சமே படர்ந்திருக்கு முரட்டு முடிகள் என தனாவின் குளிர்ந்த முகத்தை பார்த்திருந்தவள் மனதில் பனிச்சாரலின் குளிர்ச்சி படர்வதாய். 

 

உறக்கத்தில் இருப்பவனை ரகசியமாய் ரசித்துக் கொண்டவள், “பரவால்ல, இப்ப பளபளன்னு பார்க்க கொஞ்சம் அழகா தான் இருக்க. ப்ச், ஆனா எனக்கு உன்ன பிடிக்கல. அரும்பு மீசையோட குறும்பு வழிய பார்த்து நிப்பான் பாரு அந்த தனாவ தான் எனக்கு பிடிக்கும்.” சத்தம் வராமல் சொன்னவளுக்கு, “என் தனாவ மட்டும் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்…” என்று சொல்லும்போதே  குரல் உடைந்து கண்கள் கலங்கி நின்றன.

 

அவளுக்கு மட்டும் காலச்சக்கரம் கிடைத்தால், இதுவரை அவள் வாழ்வில் நடந்த அனைத்து தவறுகளையும் ஒரே மூச்சில் நேர்படுத்தி வைப்பாளே! இப்போது அவளால் நடந்ததற்கெல்லாம் கவலைப்படுவதை தவிர வேறென்ன பெரிதாக செய்துவிட முடியும்?

 

கலங்கிய கண்ணீரை உள்ளடக்கி கொண்டவள், உறக்கம் கலையாமல் அவனை தலையணையில் படுக்க வைத்துவிட்டு அறையிலிருந்து வெளிவந்தாள்.

 

“வாம்மா சுவாதி…” முகம்கொள்ளா சிரிப்புடன் தன்னை வரவேற்ற மங்கையர்க்கரசியை சங்கடமாக எதிர்கொண்டவள், “பாஸ் ரெஸ்ட்ல இருக்காரு மேடம், நான் என்ன வேலை செய்யட்டும்?” சமையலறையை ஒரு பார்வை பார்த்தபடி வினவினாள் சுவாதி.

 

“அதோ மட்டனை நல்லா கழுவி தா, நான் இதோ தாளிப்பு வச்சிறேன்” என்று அடுப்பை தீமூட்டி, கடாயை வைத்த மங்கையின் பார்வை நொடிக்கொருமுறை சுவாதியிடம் வந்து வந்து போனது.

 

“உனக்கு சமைக்க வருமா சுவாதி?” மங்கை வினவ,

 

“இல்ல மேடம், டீ, காபி மட்டும் போட தெரியும்” இறைச்சி துண்டுகளை கழுவி எடுத்தபடி பதில் தந்தாள்.

 

“அதெல்லாம் பரவால்ல, நான் சொல்லித் தரேன். சீக்கிரம் கத்துக்குவ. அதோட இருக்கவே இருக்கில்ல யூடியூபு” அவர் சொன்னதற்கு இவள் சிறிதாக புன்னகைத்தாள்.

 

“இங்க வா,‌ நான் தாளிப்பு போடறதை பார்த்துக்க. இது எங்க ஊரு எலும்பு குழம்பு. உடம்புக்கு நல்ல தெம்பு தரும். தனாவுக்கும் அவன் அப்பாருக்கும் அவ்வளோ இஷ்டம்” என்று வளவளத்தபடியே மங்கை கை வாட்டமாய் குழம்பை தயாரிக்கலானார்.

 

சுவாதி குறுக்கே ஏதும் பேசாமல், அவர் சொன்னதிற்கெல்லாம் வழக்கம்போல தலையாட்டியபடி அவர் சமையலை கவனித்துக் கொண்டாள்.

 

“ஆமா எங்க சொந்த ஊரு தெரியுமா உனக்கு?” மங்கை மேலும் கேட்க,

 

“சிவகாசி தானே மேடம்” என்றாள்.

 

“ஆமாமா சிவகாசி பக்கம் தான். யாரு தனா சொன்னானா?” அவர் சிரிப்பிலும் பேச்சிலும் இருக்கும் ஒட்டுதலை கவனித்தபடி சுவாதி தலையசைத்தாள்.

 

“கைய காட்டு, குழம்புல உப்பு காரம் சரியா இருக்கானு பாரு” என்று கூட்டிய குழம்பு சாறை கரண்டியில் கொஞ்சமாய் எடுத்து ஊதி அவள் உள்ளங்கையில் ஊற்ற, அவளும் வேறுவழியின்றி அதை சுவைத்து பார்த்தாள். அவளுக்கு உப்பு காரம் ஒன்றுமே தெரியவில்லை.

 

மங்கையும் தன் கையில் கொஞ்சம் எடுத்து சுவை பார்த்தவர், “உப்பு கொஞ்சம் குறைஞ்சிருக்கில்ல?” அவளிடம் கேட்டுவிட்டு, கொஞ்சம் உப்பு தூளை தூவி பாத்திரத்தை மூடி வைத்தார்.

 

“கொழம்பு கொதிச்சு வர நேரமாகும். அதுவரைக்கும் நாம பேசிட்டு இருக்கலாம் நீ வா” என்ற மங்கை சுவாதியின் கைபிடித்து அழைத்துச் சென்று டைனிங் டேபிள் இருக்கையில் தானும் அமர்ந்து, எதிரில் அவளையும் அமரச் சொன்னார்.

 

சுவாதி தயங்கி அமரவும், “நீ ஈஸ்வரமூர்த்தி ஐயா பொண்ணாம்மா? முன்னவே என்கிட்ட சொல்லி இருக்கலாமில்ல. நானும் யாரோ எவரோன்னு வீட்டு வேலையெல்லாம் உன்ன செய்ய வச்சிட்டேன்.” மங்கை சங்கடமாகச் சொன்னார்.

 

வெகுநாட்களுக்குப் பிறகு தன் தந்தையின் பெயரை ஐயா என்ற விளிப்போடு கேட்பதில் சுவாதியின் நெஞ்சம் விம்மியது. முன்பு அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் கூட, அவர் சிறைக்குச் சென்ற பிறகு, மரியாதை இன்றி பேசியதை நினைத்துப் பார்த்தவளுக்கு, வசதி வாய்ப்புகள் வந்தபிறகும் குணம் மாறாத மங்கையர்க்கரசியை எண்ணி மனம் கனிந்தது.

 

“நான் யார் பொண்ணா இருந்தாலும் இங்க வேலை செய்யறதுக்கு தானே வந்திருக்கேன் மேடம்” என்றாள் சுவாதி பணிவாக.

 

“அட, இந்த மேடம் கீடம் எல்லாம் விடு, வாய் நிறைய அத்தைன்னு கூப்புடு சரியா?” அவர் சொன்னதும், சுவாதிக்கு மூச்சடைத்தது. 

 

“நல்லா வாழ்ந்த குடும்பத்துக்கு ஏதோ போதாத காலம் நடக்கக்கூடாதது எல்லாம் நடந்துடுச்சு. இப்ப நம்ம வீட்டுக்கு நீ வந்துட்டல்ல இனி எல்லாம் நல்லதாவே நடக்கும். தனா குணமாகி வரட்டும். நல்ல நாள் பார்த்து பேசலாம்.” மங்கை அவள் கைப்பிடித்து ஆறுதலாக பேச பேச, சுவாதிக்கு மயக்கமே வரும் போலிருந்தது.

 

***