என் முன்னாள் காதலி 3

IMG-20220515-WA0044 (2)-7a86a2fa

என் முன்னாள் காதலி 3

 

அன்று மாலை வரை சுவாதி நெஞ்ச நடுக்கத்தோடே அவனுக்கான வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அதுவரை ஏதோ தாக்குப்பிடித்துக் கொண்டிருந்தவள், ஷூட்டிங் முடிந்து இரவு ஓட்டல் அறையின் முன்னால் வந்து நின்ற அந்த பெண் இனிஷாவை பார்த்ததும் அவள் இதயம் மேலெழுந்து தொண்டைக்குள் அடைத்துக் கொண்டது போலானது.

 

மனது கொதித்து கண்கள் கலங்கி வரவும், தலைகவிழ்ந்து அதை மறைத்தபடி இனிஷாவிற்கு வழிவிட்டு, இவள் வெளியேற, “ஹே சுவாதி நில்லு” பவன் ஆணை வேறு அவளை உயிரோடு தீயிடுவது போலிருந்தது.

 

‘இவன் எதற்கு என்னை இங்கே நிற்க சொல்கிறான்? அவர்கள் சல்லாபத்தை நான் பார்க்கவா? என்னை இப்படி பழி தீர்ப்பதற்கு இவன் என்னை துண்டாடிப் போடலாமே!’ அவள் நெஞ்சம் விம்மி தகிக்க, தாழ்ந்த தலை நிமிராமல் திரும்பி நின்றாள்.

 

“உள்ள வா.” பவனின் இறுகிய அழைப்பில், அவன் யாரை அழைக்கிறான் என்பது புரியாமல் இனிஷா திருதிருவென விழித்து அவனைப் பார்த்தாள்.

 

“ஹே இனிஷா கம் ஆன் இன் .” பவன் அவளை இளகிய குரலில் அழைக்கவும், சிறு தயக்க புன்னகையுடன் அவனெதிரில் சென்று அமர்ந்து கொண்டாள்.

 

அசரடிக்கும் அலங்காரத்தில், அவள் வனப்பை வஞ்சனையின்றி எடுத்துக் காட்டும் உடையில், மிரள மிரள விழித்து அமர்ந்த இனிஷாவை, பவனின் பார்வை ரசனை குறையாமல் அளந்தது.

 

இனிஷாவும் அவனை பார்ப்பதும் தலை கவிழ்வதும் விரல்களை கோர்த்து பிரிப்பதுமாக இருந்தவளின் பதற்றத்தை அவனாலும் உணர்ந்து கொள்ள முடிந்தது.

 

அவனிடம் ஏதோ பேச அவள் செம்பஞ்சு இதழ்கள் பிரிவதும், பின் எதுவும் சொல்லத் தெரியாமல் அழுத்தி மூடிக்கொள்வதும், அவனை வியந்து பார்ப்பதும், பின் தயங்கவதும் என அவள் பெண்மையின் தவிப்புகளை பார்க்க பார்க்க அவனுக்கு இன்னும் இன்னும் அவள்மேல் ரசனை கூடியது.

 

“ஹே ஷா, உனக்கு தமிழ் தெரியுமா?” அவன் இயல்பாக கேட்க,

 

அதிர்ந்து நிமிர்ந்தவள், “எஸ் சார் ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட் பட் கா‌ன்ட் டாக் ஃப்ளூயன்ட்லி (yes sir, i can understand but can’t talk fluently)” 

 

“பரவால்ல, எங்க தமிழ் உனக்கு புரிஞ்சா சரிதான்” என்றவன், “மொதல்ல சாப்பிடலாம், எனக்கு செம பசி.” என்று பவன்யாஷ் தனக்கேயுரிய மென்னகையுடன் பேச, இனிஷா குத்துமதிப்பாக தலையாட்டி வைத்தாள்.

 

அவர்களுக்கு இடையேயான மேசையில் உணவு வகைகள் அடுக்கி வைக்கப்பட்டு தயாராக இருந்தன. ஆனால், சுவாதி அந்த கதவோரத்தை விட்டு அசையாமல் அங்கேயே நின்றிருந்தாள்.

 

“சுவாதி, இங்க வந்து எங்களுக்கு பரிமாறு. இது கூட நான் சொல்லித்தான் உனக்கு தெரியணுமா?” 

 

பவன்யாஷின் அழுத்திய குரலில், மறுக்க முடியாமல் தயங்கி அவர்களிடம் வந்தவள், இருவருக்கும் உணவு பரிமாறினாள்.

 

அங்கே சற்று நேரம் அசாத்திய அமைதி நிலவியது. மூவரில் யாரும் அதை கலைக்க முயலவில்லை. 

 

உணவை விரைவாக முடித்துக்கொண்ட இனிஷா அவனை ஏறிட்டு பார்க்க, “அவ்வளோ தான் போதுமா?” என்று கேட்டான் பவன்யாஷ்.

 

“எனஃப் சார், ஐ அம் ஆன் டயட்”  (Enough sir, I am on diet.)” என்றாள் இனிஷா சிறு குரலாக.

 

“ஓ இப்பவே ஒடஞ்சு போற மாதிரி தான் இருக்க.‌ இதுல இந்த சாப்பாடு எப்படி உனக்கு பத்தும்? நைட் என்கூட ஸ்பெண்ட் பண்ணவாவது உனக்கு எனர்ஜி வேணாமா? இன்னும் கொஞ்சம் சாப்பிடு.” சாதாரணமாக சொல்லிவிட்டு பவன்யாஷ் உணவில் கவனமானான்.

 

ஆனால், அந்த இரு பெண்கள் தான் தொண்டையடைக்க, பவனை வெறித்தனர்.

 

நிஜமாகவே இனிஷாவிற்கு உணவு இறங்கவில்லை. பெண்மைக்கே உரிய பயம், பதற்றம் அவளை உள்ளுக்குள் அரற்றிக் கொண்டிருந்தது. பவன் உண்டு முடிக்கும் வரையில் பெயருக்கென்று கொரித்துக் கொண்டிருந்தாள்.

 

பவன்யாஷ் உணவருந்தியபடியே, இனிஷாவிடம் வளவளக்க ஆரம்பித்தான். அவள் சொந்த ஊர், வீடு, குடும்பம், படிப்பு என அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் இனிஷாவின் பதில் தயங்கி தயங்கியே வந்தது.

 

“ஓகே, உன் வயசென்ன?” அவன் அடுத்த கேள்விக்கு இனிஷா விழிக்க, சுவாதி அவனை வெளிப்படையாக முறைத்தாள்.

 

அவளால் அங்கே நிற்கவும் முடியவில்லை அங்கிருந்து‌ நகரவும் பவன் அவளை அனுமதிக்கவில்லை. தன் நிலையை நொந்தபடி நின்றிருந்தாள்.

 

“பத்தொன்பது இல்ல இருபது வயசு இருக்குமா உனக்கு?” பவன்யாஷ் யோசனையாக மறுபடி கேட்க,

 

“எயிட்டீன்‌ சர்” இனிஷாவின் பதில் சிறுகுரலாக வந்தது.

 

“ம்ம், பார்க்கவும் சின்ன பொண்ணா தான் தெரியற… ரொம்ப அழகாவும் இருக்க ஷா…” பவன் வஞ்சமற்று அவளை‌ பாராட்ட, சுவாதி தன் விரலால் காதைப் பொத்திக் கொண்டாள்.

 

“தேங்க்ஸ்…” இனிஷா சிறிதாக மென்னகை உதிர்த்தாள்.

 

“ஏன் இவ்வளோ தயங்கி தயங்கி பேசுற ஷா? இதான் ப்ர்ஸ்ட் டைமா உனக்கு?”

 

அவனின் நேரடியான கேள்வியில் தலைதாழ்த்தி கொண்ட இனிஷா, ஆமென்பதாக தலையசைத்தாள்.

 

“உன் முழு சம்மதத்தோட தான் இங்க வந்திருக்கியா? இல்ல… யாராவது உன்ன கம்பல் பண்ணாங்களா?” பவன் சந்தேகமாக வினவ, இனிஷா பதில் சொல்ல தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

அவளை சில நொடிகள் ஆழமாகப் பார்த்த பவன்யாஷ் உணவை முடித்துக்கொண்டு எழுந்து விட்டான். இனிஷாவும் அவன் அழைப்பை உணர்ந்து, அவன் பின்னோடு நடந்தாள்.

 

இனிஷாவின் தயங்கிய நடையும் தவித்த பார்வையும் கவனித்த சுவாதிக்கு பாவமாக இருந்தது. அது அப்படியே பவன்யாஷ் மேல் கோபமாக திரும்ப, “பாஸ்…” சுவாதி சத்தமாக அவனை அழைத்து விட்டாள்.

 

திரும்பியவன், “என்ன சுவாதி” என்று கேலி போல அவன் கேட்ட விதத்தில், அவள் என்ன பேசுவதென்று தயங்கினாள்.

 

இனிஷா அவர்கள் இருவரையும் புரியாமல் பார்த்து நின்றாள். 

 

“பாஸ்… அவங்க ரொம்ப பயந்து இருக்காங்க… பாவம் சின்ன பொண்ணு…” சுவாதி அவனிடம் திக்கலாக உரைக்க,

 

“நான் அவளை என்ன பண்ணிடுவேன் சுவாதி? அவளா தான் என்னை தேடி வந்திருக்கா…” பவன் கைகளை விரித்து சொன்னான்.

 

சுவாதிக்கு அவனிடம் பேசுவது வீண் என்று தோன்ற, இனிஷா புறம் பார்த்தவள், “மேடம், நீங்க இவ்வளோ டென்ஷன் ஆகாதீங்க… பாஸ் பொண்ணுங்க கிட்ட மிஸ் பிகேவ் பண்றவர் கிடையாது. அவருக்கு தப்பான‌ எண்ணம் இருந்திருந்தா, என்னை உங்க கூடவே நிறுத்தி இருக்க மாட்டாரு.” தன் மனதில் தோன்றியதை படபடவென உரைத்தாள்.

 

சுவாதி சொல்வதைக் கேட்டதும், இனிஷாவிற்கு சற்று ஆசுவாசமாக தோன்றியது.

 

“ஹலோ மேடம், எனக்கு கேரக்டர் சர்ஃபிக்கேட் கொடுத்தது போதும். நீங்க கிளம்புங்க” பவன் சுவாதியிடம் நக்கலாக சொல்ல,‌ அதற்கு மேல் சுவாதியும் அங்கே நிற்கவில்லை, நகர்ந்து விட்டாள்.

 

“நீ வா ஷா, நாம பேச வேண்டியது நிறைய இருக்கு” என்றவன், இயல்பாக அவள் மென்கரம் பற்றி, பால்கனி பக்கம் அழைத்து வந்தான்.

 

அந்த நட்சத்திர ஓட்டலில் ஐந்தாவது மாடியில் அமைந்திருந்த அந்த அறையின் பால்கனியில், இரவு நேர காற்று குளுகுளுவென‌ அவர்களை மோதியது. 

 

இனிஷா இமைகள் மூடி கைகளை வயிற்றோடு கட்டிக்கொண்டு அந்த காற்றை இதமாக அனுபவித்தாள்.‌ பவன்யாஷ் தன்னிடம் அத்துமீற மாட்டான் என்ற நம்பிக்கை அவளை இயல்பு நிலைக்கு மீட்டிருந்தது.

 

அவளின் செய்கையில் அவன் பார்வை அவளை மாறாத ரசனையோடு வருடி தந்தது. 

 

விழிகளை திறந்தவள் பவனின் பார்வையும் ரசனையும் உணர்ந்து,‌ அசடு வழிய முகம் கவிழ்த்து கொண்டாள்.

 

“ரொம்ப கியூட்டா இருக்க ஷா… சான்சே இல்ல… இன்னைக்கு உன்ன பார்த்த உடனே எனக்கு இப்படி தான் தோணுச்சு.” என்றவன், “ம்ம்… நான் உன்ன ஒருமையில கூப்பிடறது உனக்கு வித்தியாசமா இருக்கா ஷா? நீ என்னை விட சின்ன பொண்ணு தான, அதான் மரியாதையா கூப்பிட வரல‌ எனக்கு” என்று புன்னகைத்தான்.

 

“இட்ஸ் ஓகே சார், நோ பிராப்ளம்” இனிஷாவின் மழலை குரல் மிழற்றியது.

 

“நெக்ஸ்ட் பிலிம் ஹீரோயின் செலக்ஷனுக்கு கிட்டத்தட்ட மாச கணக்கா டைரக்டரும் எங்க டீமும் மண்டைய உடைச்சிட்டு இருந்தோம். உன்ன பார்த்ததும் அந்த கேரக்டருக்கு நீ அப்படியே ஆப்டா இருப்பேன்னு தோணுச்சு. டைரக்டர் கிட்ட கூட நான் பேசிட்டேன். அவர் உன்ன நேர்ல மீட்‌ பண்ணிட்டு பைனல் பண்ணலாம்னு சொன்னாரு…” என்று நிறுத்தியவன், 

 

“ஷா நான் பேசறது உனக்கு புரியுது இல்ல?” என்று கேட்டு, தான் சொன்னதை மறுபடி ஆங்கிலத்தில் அவளிடம் விளக்கலானான்.

 

“த டைரக்டர் அன்ட் அவர் டீம் வேர் ரேக்கிங் அவர் பிரைண்ட்ஸ் ஃபார் ஆல்மோஸ்ட் எ மன்த் டு ஃபைன்ட் எ சூட்டபிள் ஹீரோயின் ஃபார் அவர் நெக்ஸ்ட் ஃபிலிம். வென் ஐ சா யூ, ஐ ஃபெல்ட் தட் யூ வுட் பி எ பர்ஃபெக்ட்  சாய்ஸ் ஃபார் தட் கேரக்டர்…” (The director and our team were racking our brains for almost a month to find a suitable heroine for our next film.  When I saw you, I felt that you would be a perfect choice for that character…)

 

“ஐ அன்டர்ஸ்டேன்ட் தமிழ் வெல் சார்…” (I understand tamil well sir) என்று குறுக்கிட்டாள் இனிஷா.

 

“ஓ ஓகே, பட் புரிஞ்சிக்கிட்டா மட்டும் போதாது. பேசவும் பழகிக்கோங்க.” என்றதும், 

 

“ஐ’ல் டிரை சார்” அவளும் சமத்தாக தலையாட்டிக் கொண்டாள்.

 

“மார்னிங் உன்ன பார்த்ததுக்கு அப்புறம் நல்ல மைண்ட் செட்ல இருந்தேன். பட் உன் மேனேஜர் அந்த பிரதீப் வந்து என்னை ரொம்ப டென்ஷன்‌ பண்ணி விட்டுட்டான்… வந்த கோபத்துக்கு அவனை அப்பவே அடிச்சி தள்ளி இருப்பேன். இஷ்ஷூ வேணாம்னு விட்டுட்டேன்.” என்று பற்களை‌‌ நறநறத்தவன், அவளை அங்கிருந்த பிரம்பு‌ நாற்காலியில் அமர கைகாட்டி விட்டு தானும் அவளெதிரில் அமர்ந்து கொண்டான்.

 

“நான் உனக்கு அட்வைஸ் பண்றேன்னு நினைக்காத ஷா, இப்படி குறுக்கு வழியில நடிக்க வாய்ப்பு வாங்கி முன்னேறின நடிகைகள்னு இங்க யாருமே இல்ல. ஜஸ்ட் ஒன் நைட் தானேன்னு நீ அட்ஜஸ்ட் பண்ணிக்க நினைக்கலாம்… இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லங்கிற மாதிரி உன்கூட இருக்கறவங்க உன்ன பிரைன்வாஷ் பண்ணலாம்… நீயே யோசிச்சு பாரு, நீ எத்தனை பேரு கிட்ட இப்படி போக முடியும்? எத்தனை தடவ போக முடியும் ம்ம்?”

 

பவன் கேட்ட விதத்தில் இனிஷாவின் முகம் வெளிறிப்போய் பயத்தை வெளிக்காட்டியது. 

 

“சப்போஸ் உனக்கு இந்த விதத்துல சான்ஸ் கிடைச்சு நீ ஜெயிச்சாலும் கூட, அது உனக்கு குட் ஃபீல் தராது. இப்படித்தான் வாய்ப்பு கிடைச்சதுன்னு நினச்சு, நீயே உனக்குள்ள தாழ்ந்து போயிடுவ ஷா… உன்னோட தன்னம்பிக்கை ரொம்ப அடிப்பட்டு போயிடும்… நாம நம்மளோட சுயத்தை தொலைச்சிட்டோம்னா நம்மால எதையுமே சாதிக்க முடியாது.

 

உனக்கு அழகு இருக்கு, நடிக்க ஆர்வமும் இருக்கு நேர் வழியில முயற்சி பண்ணு, உன் திறமைய வளர்த்துக்க, கண்டிப்பா நீ பெரிய ஸ்டாரா வருவ. அதுக்கு முதல்ல உன் மேனேஜரை அடிச்சு தொரத்தி விடு… அவன் மத்தவங்க கிட்ட உன்ன ஏலம் விட்டுட்டு இருக்கான் ராஸ்கல். 

 

இங்க எத்தனையோ திறமையான மேனேஜர்ஸ் இருக்காங்க, அவங்கள்ல ஒருத்தரை செலக்ட் பண்ணி அப்பாயிண்ட் பண்ணிக்கோ… இப்ப கிளம்பு குட் நைட்.” என்றான் பவன்யாஷ் சிநேக மென்முறுவலுடன்.

 

இனிஷாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. “தேங்க்ஸ் சார், ஐ வாஸ் சோ ஸ்கேர்ட் வென் ஐ கேம் ஹியர். மை ட்ரீம் ஈஸ் டு பிகம் எ பிக் ஸ்டார். பட் ஆல் திஸ்… ஐ டோண்ட் லைக் இட் எய்தர். ஐ ஜஸ்ட் கேம் சின்ஸ் ஐ டின்ட் ஹேவ் எனி அதர் சாய்ஸ். தேங்க்ஸ் அகைய்ன்… சார்” (Thanks sir, I was so scared when i came here. My dream is to become a big star. But all this… I don’t like it either, I just came since I din’t have any other choice, thanks again… sir) 

 

என்றவள் அவனை நிறைவாக அணைத்து நன்றி நவின்றுவிட்டு, தெளிந்த மனநிலையில் அவனிடம் விடைபெற்று வெளியேறினாள்.

 

இனிஷா சென்ற பிறகு கதவடைத்துவிட்டு வந்தவன், சுவாதி எங்கே என்று பார்வையைச் சுழற்றினான். அவன் கண்களில் அவள் தென்படாமல் போக, அவள் வழக்கமாக உறங்கும் இடத்தில் போய் பார்த்தவன், தன் நெற்றியில் அடித்துக் கொண்டான்.

 

சுவாதி சோஃபாவில் அமர்ந்தபடியே தலை ஒருபக்கம் தொங்கி கிடக்க உறங்கி போயிருந்தாள்.

 

“இவளை எல்லாம் என்ன பண்றது?” என்று அவளருகே வந்தமர்ந்தவன், அவள் உறக்கத்தில் தொங்கியிருந்த முகத்தை நிமிர்த்தினான். 

 

“ம்ம்…” என்ற முனகலோடு சுவாதி அவன் மார்பில் சரிந்து, அவன் சட்டையில் முகத்தை தேய்த்துக் கொண்டு உறக்கத்தை தொடர, அவளின் இந்த நெருக்கம் அந்த ஆடவனைத் தான் உலுக்கிப் பார்த்தது.

 

சற்றுமுன் தன்னை நாடி வந்த அழகியிடம் தடம்புரளாத அவனது திடம், அவளின் அணைப்பைக் கூட கண்ணியமாக ஏற்றுக்கொண்ட அவனது மனம், இதோ தூங்கி வழியும் இவளிடம் மட்டும் தடுமாறிப்‌ போகும் விந்தை அவனுக்கு நிஜத்தில் புரிவதாக இல்லை.

 

குனிந்து அவள் முகத்தைப் பார்த்தான். உறக்கத்தில் கூட அவள் முகம் அப்பட்டமான சோர்வை வெளிக்காட்டியது. 

 

‘நான் இவளை ரொம்ப வேலை வாங்கறேனோ… ஏன் இவ்வளோ சோர்ந்து போய் தெரியிறா?” அவனுக்கு அவள் மேல் பரிதாபம் சுரந்தது.

 

முன்பை விட கருத்து போயிருந்த முகம், உலர்ந்து வெளிறி வெடிப்பு கண்டிருந்த இதழ்கள், கண்களைச் சுற்றி வளைத்திருந்த கருவளையம் என்று அவள் முகம் முன்பிருந்த வசீகரத்தை இழந்து போயிருந்தது.

 

“உன்ன இப்படி கஷ்டப்பட விட்டுட்டு எங்கடி போனாங்க அவங்கல்லாம்? நீ தரையில நடந்தா கூட பாதம் நோகும்னு ஓடிவந்து உன்ன தாங்கி பிடிச்சுப்பாங்களே… அவங்கெல்லாம் இப்ப எங்கடீ ஓடிப்போனாங்க?” பவன் அவளிடம் ஆதங்கமாக முணுமுணுத்தான்.

 

பவன்யாஷ் அவளை விட்டு, அந்த ஊரை விட்டு வந்த பிறகு நடந்த சம்பவங்கள் எதுவும் அவனுக்கு முழுதாக தெரியாது. சுவாதி குடும்பத்தின் ஊதாரித்தனத்தால் அவர்களின் பெரிய வீடும் நிலபுலன்களும் கடனில் மூழ்கி போனதாக விசாரித்து அறிந்து கொண்டான். அதுவும் சுவாதியை இம்முறை வரவேற்பாளினி வேலையில் பார்த்த பிறகு தான், அவளுக்கு என்னவாயிற்று என்பதை விசாரித்து அறிந்தான்.

 

பிறந்ததில் இருந்து செல்வ செழிப்புடன் வாழ்ந்துவிட்டு பாதியில் இப்படி எல்லாம் இழந்து நிற்பது பரிதாபம் தான்.

 

அவன் நினைத்தால், அவள் கஷ்டங்களை எல்லாம் ஒரே நாளில் ஒன்றுமில்லாமல் மாற்றிவிட முடியும்! அவள் முன்பு வாழ்ந்ததை விட இரண்டு மடங்கு வசதிவாய்ப்போடு அவளை வாழ வைக்க முடியும்! ஆனால் அவன் நினைக்க மாட்டான்… நிச்சயமாக அவளுக்காக செய்யவே மாட்டான்!

 

அவள் தனக்கு செய்த துரோகம்… அவள் தந்த வலி… இன்றுவரை அவனுள் தீயாய் தகித்துக் கொண்டிருக்க, சட்டென அவளிடமிருந்து எழுந்து கொண்டான்.

 

பவன் எழுந்த வேகத்தில், அவன்மேல் சாய்ந்து உறங்கியிருந்த சுவாதி சோஃபாவில் தொப்பென்று விழுந்தவள், உறக்கம் கலைந்து கண்களைக் கசக்கியபடி எழுந்தமர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

பவன்யாஷ் முகத்தில் தெரிந்த சிடுசிடுப்பும் கோப பார்வையும் கவனித்தவள், ‘ரைட்டு, அந்த பொண்ணு போயிடுச்சு போல, அதான் என்னை இப்படி முறைச்சுட்டு நிக்கிறானா!’ என்று நொந்தபடி எழுந்து நின்றாள்.

 

“என்ன தூக்கம் வேண்டி கிடக்கு உனக்கு? எனக்கு பால் ஆர்டர் பண்ணி எடுத்துட்டு வா” பவன் உத்தரவிட்டு தன் அறைக்குள் புகுந்து கதவடைத்துக் கொண்டான்.

 

பத்து நிமிடங்கள் கழித்து, கதவை தட்டி அனுமதி கேட்டு உள்ளே வந்த சுவாதி, தூக்கம் வழிந்த நிலையிலேயே அவனிடம் பால் தம்ளரை நீட்டவும், அந்த கண்ணாடி தம்ளர் அவள் கையிலிருந்து நழுவி தரையில் விழுந்து சில்லு சில்லாய் சிதறி, தரை எங்கும் பால் தெறித்தது.

 

“ஏய்… முட்டாள்…” கோபமாக கத்திய பவன்யாஷ் கோபத்தில் அவளை அடிக்க கையோங்கி விட்டிருந்தான். அவள் பயந்து நடுங்கியதைப் பார்த்து விரல்களை அழுத்தி மடக்கிக் கொண்டு, ஓங்கிய கரத்தை கீழிறக்கிக் கொண்டான்.

 

“ச…சாரி பாஸ்… கை தவறி…” சுவாதி படபடப்போடு மன்னிப்பை வேண்டினாள்.

 

“என் முன்னால நிக்காம போடீ…” அவளிடம் ஆத்திரமாக கத்திய பவன்யாஷ், அந்த அறையிலிருந்து கோபமாக வெளியேறி பால்கனியில் சென்று, வானத்தை வெறித்து நின்று கொண்டான்.

 

சுவாதியின் தூக்கமெல்லாம் சுத்தமாக கலைந்து போனது. ரூம் சர்வீஸுக்கு தகவல் சொல்லிவிட்டு, வெளியே வந்து கவலையாக அமர்ந்து கொண்டாள்.

 

அன்றிரவு முழுவதும் தூக்கம் சேராமல் தன் கவனக்குறைவை எண்ணி தன்னையே நொந்து கொண்டிருந்தாள் சுவாதி, பவன் வேண்டுமென்றே பால் தம்ளரை பிடிக்காமல் கீழே நழுவ விட்டிருந்ததை அறியாமல்.

 

***

(அடுத்த பதிவு புதன்கிழமை… 

நன்றி 😊)