என் முன்னாள் காதலி 6

IMG-20220515-WA0044 (2)-0493b36c

என் முன்னாள் காதலி 6

 

ஒலி எழுப்பிய கைப்பேசி திரையை ஒருமுறை பார்த்துவிட்டு, தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்திருக்க, யோசனையுடன் காதில் ஒற்றினான் திருக்குமரன்.

 

“ஹலோ, திரு ஹியர்.”

 

“ஹலோ சார், நான் பிரீத்தி பேசறேன். ப்ளீஸ் ப்ளீஸ் போனை கட் பண்ணிடாதீங்க… ஒரேயொரு முறை பவன் கிட்ட பேசணும் சார்… ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க சார்…” எதிர்முனை கெஞ்சியதில், திருவின் முகத்தில் அப்பட்டமான சலிப்பு தட்டியது.

 

“என்னாச்சு? யாரு உன்ன இவ்வளோ டென்ஷன் பண்றது திரு?” பவன்யாஷ் அவன் முகம் பார்த்து கேட்க,

 

உடனே பேசியை மியுட் செய்தவன், “இது என் டென்ஷன் இல்ல பாஸ் உங்களோட டென்ஷன்.” என்றான் திரு அலுப்பும் சலிப்புமாக.

 

அவன் முகம் போன போக்கில் குறுநகை சிந்தியவன், “என் டென்ஷனா? புரியற மாதிரி சொல்லேன் பா.”

 

“பிரீத்தின்னு ஒரு பொண்ணு பாஸ், அவளுக்கு எப்படி என் நம்பர் கிடைச்சதுன்னு தெரியல, ஒரு வாரமா விடாம போன் போட்டு தொந்தரவு பண்ணுது, உங்ககிட்ட பேசியே ஆகணுமாம். உங்களோட வெறித்தனமான ரசிகையாம்.

 

நீங்க பிஸி இப்ப பேச முடியாதுன்னு சொல்லியும் கேக்கல, அந்த பொண்ணு நம்பரை பிளாக் கூட பண்ணிட்டேன் பாஸ். இப்ப புது நம்பர்ல இருந்து கூப்பிட்டிருக்கா… உங்க விசிறிங்க தொல்ல தாங்கல பாஸ்.” என்றான் திரு.

 

இவர்கள் பேச்சைக் கவனித்தபடி தான், அங்கே நின்றிருந்தாள் சுவாதி.

 

“ஆஹா… இவ்வளோ வெறித்தனமான ரசிகை கிட்ட பேசாம இருந்தா நான் எல்லாம் என்ன ஹீரோ, முதல்ல அந்த போனை என்கிட்ட கொடு.” பவன் கிட்டத்தட்ட திருவிடம் இருந்த போனை பிடுங்கினான். 

 

மியூட்டை எடுத்துவிட்டு ஸ்பீக்கரில் வைத்தவன். “ஹலோ, பவன்யாஷ் ஹியர்.” என்றான்‌ இனிமையான குரலில்.

 

மறுமுனை சட்டென அமைதியாகி அடுத்த நொடி படபட பட்டாசாய் வெடித்தது. “பவன்… ஐ லவ் யூ… லவ் யூ லவ் யு சோ மச்… பவன் நான் உங்கள ரொம்ப ரொம்ப லவ் பண்றேன். உங்களை பார்க்கணும் பேசணும். என் காதலை உங்களுக்கு உணர்த்தணும்… ப்ளீஸ் ப்ளீஸ் பவன் எனக்கு ஒரேயொரு சான்ஸ் கொடுங்க பவன் ப்ளீஸ்…”

 

அந்த பெண் காதல் சொன்ன வேகத்தில் பவனின் குறுநகை பெரிதாக விரிய, சுவாதி திகைப்பாக விழிகளை விரித்தாள். திரு அலுப்பாக தலையசைத்து தோள் குலுக்கிக் கொண்டான். பவன்யாஷிடம் வேலைக்கு சேர்ந்ததில் இருந்து இதுபோல எத்தனை பெண்களை அவனும் கடந்து விட்டான்.

 

“ஹே ரிலாக்ஸ் மா… உங்களோட பேரு…”

 

“பிரீத்தி… நான் உங்களை மீட் பண்ணனும் பவன்… நீங்க என் ஃபோட்டோவ பாருங்களேன் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். இதே நம்பர்க்கு இப்பவே செல்ஃபி அனுப்பறேன்” அவள் அந்த பக்கம் படபடக்க,

 

“ஹே… வெயிட் ப்ரீத்தி… ஜஸ்ட் வெயிட்… குளோஸ் யுவர் ஐஸ்… டேக் எ டீப் பிரீத் (Take a deep breath)” பவன் அவளிடம் மெதுவாக சொல்ல சொல்ல, பிரீத்தியும் அவன் சொன்னது போலவே செய்தாள்.

 

“ப்ரீத்தி நார்மல் ஆகியாச்சா? இப்ப பேசலாமா?” பவன் கேட்க,

 

“நோ பவன்… இப்ப தான் என் ஹார்ட் பீட் வேகமா துடிக்குது… உங்க பேர் சொல்லியே துடிக்குது…” பிரீத்தி உணர்ச்சிவசத்தோடு சொன்னதும் பவன் பக்கென சிரித்துவிட்டான். திருவும் சுவாதியும் கூட வாய்க்குள் சிரித்து கொண்டனர்.

 

“பவன் நாம மீட் பண்ணலாமா?” அவள் அதிலேயே குறியாக இருந்தாள்.

 

“நாம மீட் பண்ண சான்ஸ் இருந்தா கண்டிப்பா மீட் பண்ணலாம் ப்ரீத்தி.” பவன் பட்டும் படாமல் சொல்ல,

 

“அப்ப என் காதலை அக்சப்ட் பண்ண மாட்டிங்களா?” அவள் குரல் தளர்ந்து ஒலித்தது.

 

“நோ சான்ஸ் ப்ரீத்தி” பவன் புன்னகையோடே மறுத்தான்.

 

“ஏன்…? எனக்கு ரீசன் தெரியணும் பவன்?” அவள் அழுகை குரலில் கேட்க,

 

“ஏன்னா… எனக்கொரு காதலி இருக்கின்றாள்…” பவன் அசராமல் அடித்து விட்டான்.

 

“நீங்க பொய் சொல்றீங்க… எனக்கு தெரியும் உங்களுக்கு அப்படி எந்த கேர்ள் பிரண்ஸும் இல்ல… நீங்க என்னை அவாய்ட் பண்றதுக்கு பொய் சொல்றீங்க…” அவள் அழுகை தேம்பலோடு கத்தினாள்.

 

“உங்கள அவாய்ட் பண்ணனும்னா நான் உங்க கிட்ட பேசாமயே தவிர்த்திருக்கலாமே… என்னோட வெறித்தனமான ரசிகை கிட்ட நான் எதுக்கு பொய் சொல்லணும் ம்ம்?”

 

“அப்ப… அந்த பொண்ணு யாரு…?” 

 

“அவ என்னோட ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் லவ்! நான் ஒரு நடிகனா இல்லாம, ஒரு சாதாரண போஸ்ட் மாஸ்டர் பையனா இருக்கும்போதே என்னை உருகி உருகி காதலிச்சவ… எனக்கு காதல்ன்ற ஃபீல் கொடுத்தவ அவ மட்டும் தான்…” 

 

பவன்யாஷ் ஆழ்ந்த குரலில் சொல்ல, அதை கேட்டிருந்த சுவாதியின் முகம் வெளிறி போனது. அவள் பாதங்கள் தரையோடு வேரோடி நின்றன.

 

“அப்ப நிஜமா உங்களுக்கு லவ்வர் இருக்காங்களா…! ப்ச் நான் லேட், உங்கள மீஸ் பண்ணிட்டேன்.” மறுமுனையில் வருத்தமாக ஒலித்த குரலோடு அழைப்பும் துண்டித்து போனது.

 

மொபைலை திருவிடம் நீட்டிய பவனின் பார்வை அவளிடம் தான் பதிந்திருந்தது. சுவாதி அவனை நேர்கொண்டு காண தைரியமின்றி தரையை வெறித்திருக்க, அவன் தாடை இறுகி, முகம் மாறியது.

 

அப்போது, படத்தின் உதவி இயக்குநர் உதய்குமார் அவர்கள் அறைக்குள் வந்தான்.

 

“சாரி பவன், இப்ப ஃபைட் ஷூட் பண்ண முடியாத சிச்சுவேஷன். வேற சீன்ஸ் ஏதாவது…” அவன் முடிக்கும் முன்னே பவன்யாஷ் தன் இருக்கையில் இருந்து எழுந்து விட்டான்.

 

சண்டை காட்சிக்கு பொருந்தும் வகையில் கச்சிதமாக தாயாராகி இருந்தான் அவன். ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவன் தாயாராகி இருக்க, தாமதபடுத்தியதும் இல்லாமல், இப்படி ஷூட்டிங்கை மாற்றுவது அவனுக்கு கோபத்தை கிளப்பியது.

 

“என்ன நினச்சிட்டு இருக்கீங்க உதய்? நைட் டுவல்வோ கிளாக் வரைக்கும் இந்த சீன்காக பிராக்டீஸ் பண்ணி இருக்கோம். இப்ப ஒன் ஹவரா இந்த மேக்கப்ப போட்டுட்டு உக்கார்ந்து இருக்கேன்… ஷூட்டிங் கேன்சல்னா முதல்ல இன்பார்ம் பண்ணும்னு கூட தெரியாதா உங்களுக்கு? இப்ப இவ்வளோ கூலா வந்து சொல்றீங்க… நான் உங்களுக்கு எப்படி தெரியிறேன்?” 

 

பவன் கோபத்துடன் கேட்க, உதய் எச்சிலை விழுங்கி நின்றான். “சார் ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க…” உதய் சமாதானம் செய்ய முயல,

 

“டைரக்டர் எங்க நான் அவர்கிட்ட பேசிக்கிறேன்” என்று வெளியேற முயன்றவனை பதறி தடுத்த உதயன், “ஐயோ சார்… அவர் உங்கள விட செம டென்ஷன்ல இருக்காரு சார்… செட் எல்லாம் கூட ரெடி… பட் ஸ்டென்ட் மேன் தான் சொதப்பிட்டான்… ஏதோ ஆக்ஸிடென்ட்னு வரமுடியாதுன்னு சொல்லிட்டான்.”

 

“இதெல்லாம் ஒரு ரீசனா மேன்? வேற ஸ்டன்ட் மேன்‌ யாரும்‌ இல்லையா?” பவன் வெடுக்கென கேட்டபடி டைரக்டரை நோக்கி நடந்தான்.

 

“சார் இது ஃபயர் சீன். வெல் ப்ராக்டீஸ் இல்லாதவங்க டிரை பண்ணா ரிஸ்க் ஆயிடும்… நாங்களும் வேற ஸ்டென்ட் மேன் கேட்டுட்டு தான்‌ இருக்கோம். பட் லாஸ்ட் டைம்ல யாரும் அவைலபிளா இல்ல.” உதயன் விளக்கம் தந்தபடி அவனுடன் நடந்தான்.

 

காட்சிக்கு தேவையான செட், முழுவதுமாக தயாராகி இருந்தது. மருத்துவமனை வளாகம் போல அந்த இடமே மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த அனைவரின் முகங்களிலும் வாட்டமும் பதற்றமுமாக இருக்க, டைரக்டர் செந்தில்நாதன் யாரையோ பிடித்து கண்ணாபின்னாவேன கத்திக் கொண்டிருந்தார்.

 

பவன்யாஷ் அவர் அருகில் வந்து நின்றதும், கப்பென அமைதியானவர், “சாரி பவன், நானே இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.” என்றவர், “பிளடி ராஸ்கல் லாஸ்ட் டைம்ல கழுத்தறுத்துட்டான்.” என்று முணுமுணுப்பது பவன்யாஷ் காதில் தெளிவாகவே விழுந்தது.

 

“ஆக்ஸிடென்ட் ஆனா அவனால மட்டும் என்ன பண்ண முடியும் விடுங்க சார்.” என்ற பவன்யாஷ் குரலில் சற்றுமுன் இருந்த கோபம் தணிந்திருந்தது.

 

“போட்ட செட் எல்லாம் வேஸ்ட், புரோடியூசருக்கு நான் தானே பதில் சொல்லனும்… தப்பு என்மேல தான் பவன், அவன் ஒருத்தன மட்டுமே நம்பி இருக்க கூடாது சபஸ்யூட்டா இன்னொருத்தனை வச்சிருக்கேன். ஆசால்டா இருந்துட்டேன் இப்ப…” டைரக்டர் அவருக்கான டென்சனில் படபடத்தார்.

 

“இட்ஸ் ஹேப்பன்ஸ் சார்… எல்லாமே எல்லா நேரத்திலயும் பர்ஃபெக்டா அமையறது கிடையாது” என்று இலகுவாக சொன்ன பவனை நிமிர்ந்து பார்த்தவரும், சற்று சாந்தமாக தலையசைத்தார்.

 

பவன்யாஷ் பார்வை அந்த செட்டை யோசனையுடன் ஆராய்ந்தது. டைரக்டர் சொன்ன காட்சியை அந்த இடத்தில் தத்ரூபமாக பொருத்தி பார்த்தவனுக்கு வேறொரு வழி தோன்ற, “சார், இந்த சீன் நானே நடிச்சு கொடுக்கறேனே” என்றான்.

 

அவன் சொன்னதில் டைரக்டர் சிறிதாக சிரித்து, “நீங்க பண்ற சீனா இருந்தா நானே சொல்லி இருப்பேனே… முழுசா தீப்பிடிச்சு எரியிற ரூம்ல இருந்து அடிப்பட்டு இருக்க ஹீரோயின தூக்கிட்டு தீயை தாண்டி நீங்க ஓடி வரணும்… சேம் டைம் அந்த ரூம்ல இருக்க கெமிக்கல்ஸ் நெருப்புல பட்டு ஒவ்வொன்னா வெடிக்க ஆரம்பிக்கும் வேற… 

 

இதையே கிராபிக்ஸ் பண்ணலாம். பட் அதுல ரியாலிட்டி இருக்காது. ரியாலிட்டி இல்லனா இந்த ஸீனை ஸ்கீரின்ல பார்க்கும்போது நமக்கே கோமாளி தனமா தோணும்… அதான்‌இவ்வளோ மெனக்கெடல்” டைரக்டர் தன் அனுபவத்தில் அவனுக்கு பொறுமையாக விளக்கினார்.

 

“இந்த ஸீனுக்காக பிராக்டீஸ் எடுத்துருக்கேன். சோ என்னால கண்டிப்பா பண்ண முடியும், நீங்க எல்லாரும் இருக்கீங்க சேஃப்டி அரேன்ஜ்மென்ட்ஸும் பக்காவா இருக்கு… வேற என்ன பயம். நான் பண்றேன் சார் ரெடி பண்ணுங்க” பவன்யாஷ் உற்சாகமாகவே சொல்ல, அந்த உற்சாகம் செந்தில்நாதனையும் தொற்றிக் கொண்டது.

 

“இது ரிஸ்க் சார்… உங்களுக்கு சின்ன காயம் ஏற்பட்டா கூட கஷ்டம். நெக்ஸ்ட் வீக் சாங்க்ஸ் ஷூட்டிங் இருக்கு வேற…” உதயன் வெகுவாக தயங்கி கேட்க,

 

“ரிஸ்க் எடுக்காம இங்க எதுவுமே ஈஸியா கிடைக்காது உதய்.” பவன் இயல்பாகவே சொன்னான்.

 

“இப்படி பயந்து பயந்து தயங்கினா உன்னால எதுவுமே செய்ய முடியாது உதய்… சேஃப்டி அலமெண்ட்ஸ் எல்லாம் கரைக்டா இருக்கான்னு தரவா செக் பண்ணு போ, இப்ப ஷூட்டிங் கண்டிப்பா நடக்கும். எல்லாரையும் ஸ்பாட்க்கு வர சொல்லு கிவீக்” செந்தில்நாதன் உத்திரவிட்டதும், மறுப்பின்றி பறந்தான் உதயன்.

 

அந்த இடம் மறுபடியும் பரபரப்பாக செயல்பட தொடங்கியது. ஸ்டண்ட் மாஸ்டர் கரண் அங்கே விரைந்து வந்தவர், “ஷூட்டிங் கேன்சல் சொல்லிட்டு இப்ப மறுபடி ஓகே சொன்னா எப்படி சார்?” என்று கேள்வி கேட்டார்.

 

“இப்ப உனக்கு என்ன பிரச்சனை கரண்?” டைரக்டர் காரமாகவே கேட்க, “அந்த டூப் போடுற பொண்ணு அப்பவே கிளம்பிடுச்சு சார்… லேட் நைட் கிராஸ் ஆகிடுச்சு இப்ப அந்த பொண்ணுக்கு எங்க போறது?” கரணும் படபடத்தார்.

 

“செம சூப்பர்” பவன் நக்கலாகவே கைத்தட்டினான். அவனுக்கு உள்ளுக்குள் கடுப்பு எகிறியது. இயக்குநர், சண்டை பயிற்சியாளர் உட்பட இந்த படத்தில் அனைவருமே அவனுக்கு சீனியர்கள், வயதிலும் அனுபவத்திலும் கூட அவனுக்கு மேலானவர்கள். அவர்களிடம் தன் கடுப்பை காட்டி அந்த நிலையை இன்னும் மோசமாக்க விரும்பாமல் கூடுமானவரை தன்னை இயல்பாகவே காட்டி கொண்டான்.

 

ஆனால் செந்தில்நாதனுக்கு அத்தனை பொறுமை இருக்கவில்லை. “இங்க என்ன ஷூட்டிங் நடக்குதா இல்ல தெருக்கூத்து நடக்குதா கரண்? உன்கிட்ட இவ்வளோ கேர்லஸ்நெஸ் நான் எதிர்பாக்கவே இல்ல கரண். ஸ்டென்ட் மேன் ஒழுங்கா அரேன்ஜ் பண்ணல, டூப் லேடியையும் நைட் டைம் வீட்டுக்கு அனுப்பிட்டேன்னு சொல்ற… உன்ன பண்ண சொன்னா ஹீரோ பாடி ஸ்டெக்சர்க்கு செட் ஆக மாட்டேன்னு காரணம் வேற சொல்ற. என்ன மேன் பிராப்ளம் உன்னோடது? ஒழுங்கா வேலை செய்யணும்னு நினைக்கிறீயா இல்ல எதையாவது மனசுல வச்சுக்கிட்டு இங்க கேம் பிளே பண்றீயா? இன்னைக்கு மட்டும் ஷூட்டிங் நடக்கல… உன்ன எங்கயும் தலை எடுக்காம பண்ணிடுவேன்”

 

டைரக்டரின் மிரட்டலில் கரண் அரண்டு தான் போனான். இன்று நேர்ந்த அத்தனை குளறுபடிக்கும் அவனது மேம்போக்குத்தனம் தான் காரணம். பெரிய பெரிய நடிகர்கள் உடன் பணிபுரிந்தவன் தான், இப்போது வந்த பவன்யாஷ் சின்ன பையன் இவனுக்கு என்ன அத்தனை‌ மெனக்கெடல் வேண்டும் என்று சற்று அசால்டாக இருந்ததின் விளைவு இப்போது எல்லாமே சொதப்பி நிற்கிறது.

 

படத்தின் கதாநாயகியும் தயாராகி அங்கே வந்து நிற்க, பவன் பார்வை அவளிடம் திரும்பியது. “மரியா,  என்னோட கைய பிடிச்சிக்கிட்டு தீக்குள்ள குதிக்க தயாரா… டூப் போடாம” என்று கண்சிமிட்டி வினவியவனை பார்த்து புரியாமல் விழித்தவள்,‌ 

 

புரிந்ததும், “அச்சோ நோ பவன்… தண்ணீக்குள்ள எவ்வளோ ரிஸ்க் எடுக்க சொன்னாலும் எனக்கு ஓகே. பட் நெருப்புனா எனக்கு பயம். சாரி நான் ரிஸ்க் எடுக்க விரும்பல.” மரியா பின்வாங்கிக் கண்டாள்.

 

சோகமாக தலையசைத்த பவன், “உன்ன சிங்கப்பெண் ரேன்ஜ்க்கு நினச்சிருந்தேன் இப்படி பேக் அடிச்சிட்டியே மரியா…” நெஞ்சை தட்டி காட்டி கேமரா இல்லாமல் பர்பாமன்ஸ் செய்தவன் முதுகிலே ஓரடி வைத்து சிரித்தாள் மரியா.

 

ஒருபுறம் பவன்யாஷ் அந்த சூழலை இலகுவாக்கி கொண்டிருக்க,‌ மறுபுறம் டைரக்டர் சிடுசிடுத்து கொண்டிருந்தார்.

 

“சுப்புவ வேணா டூப் போட சொல்லலாம் சார்…” தன் தவறு புரிய, கரண் மெதுவாக வினவினான்.

 

“மலைமாடு மாதிரி இருக்கான் அவன் ஹீரோயினுக்கு டூப்பா… ஏதாவது ஒழுங்கா யோசிச்சு பேசு.” செந்தில்நாதன் அவனிடம் கத்திவிட்டார்.

 

‘என்னடா பிரச்சனை!’ என்றானது பவனுக்கு, இன்று ஷூட்டிங் இல்லையென்றால். வீட்டில் சென்று நிம்மதியாக தூங்கவாவது செய்திருப்பான். தூக்கமும் கெட்டு இங்கு ஷூட்டிங்கும் இழுத்தடித்து… இன்று மோசமான நாள் என்று எண்ணிக் கொண்டான்.

 

காஃபி கோப்பைகளோடு அங்கே வந்த சுவாதி, பவன், மரியா உட்பட அங்கிருந்தவர்களுக்கு காஃபியை பரிமாறிவிட்டு நகரப் போக, அவளை பார்த்ததுமே பவன் மூளையில் பல்ப் எரிந்து விட்டது.

 

“சுவாதி நில்லுங்க” என்றவன் டைரக்டரிடம் திரும்பி, “சார் ஹீரோயினுக்கு பதில் டூப்பா இவங்க என்கூட நடிப்பாங்க” என்று அவளை கைகாட்டினான்.

 

செந்தில்நாதன் சுவாதியை அளவெடுப்பது போல் பார்க்க, சுவாதிக்கு அங்கு நடப்பது, அவன்‌ சொன்னது எதுவும் புரியாமல் திருதிருத்து நின்றாள்.

 

“ஓகே தான். பட் இந்த பொண்ணுக்கு ஓகேவா?” டைரக்டர் இப்போது எப்படியாவது இந்த காட்சியை எடுத்து முடித்தால் போதும் என்ற நிலையில் இருந்தார்.

 

“நான் பேசறேன் சார், அவங்க மறுக்க மாட்டாங்க” என்று அத்தனை உறுதியாக சொன்ன பவன்யாஷ், சுவாதியை தனியே அழைத்து சென்று அவளுக்கு செய்ய வேண்டியதை விளக்க அவள் கண்கள் விரிந்தன.

 

“விளையாடதீங்க பாஸ், எனக்கு நடிப்பெல்லாம் சுத்தமா வராது.” 

 

“உனக்கு நடிக்க தெரியாதுன்னு நான் நம்பணும்?” நக்கலாக கேட்டவன், “இப்ப உன்னோட இந்த வேஷம், இந்த வேலை எல்லாமே நடிப்பு தான?” 

 

அவன் கேட்ட விதத்தில், சுவாதி பார்வையை தாழ்த்தி கொண்டாள். 

 

“என் கைய பிடிச்சிக்கிட்டு நான் நரகத்துக்கு கூட்டிட்டு போனாலும் என்னோட கண்ண மூடிட்டு வருவேன்னு சொல்லுவ இல்ல… சாரி முன்ன சொன்ன இல்ல… இப்ப நிஜமாவே வா, என்னோட நேருப்புல குதிக்க” அவளிடம் காட்டமாக சொன்னவன், உதயனை அழைத்தான்.

 

“இவங்கள ரெடி பண்ணி கூட்டிட்டு வாங்க” என்ற உத்தரவோடு விலகி செல்பவனிடம், மறுத்து பேச முடியாமல் உதயன் அழைத்து சென்ற திக்கில் நடந்தாள்.

 

அடுத்த அரைமணி நேரத்தில், படப்பிடிப்பு ஆரம்பமானது. சிலர் துரத்த மரியா ஓடிவருவது, அவர்கள் அவளை தாக்குவது, வயிற்றில் காயம்பட்டு இரத்தம் கசிய அவள் ஓர் அறைக்குள் பதுங்கி கொள்வது வரையிலான காட்சிகளை மரியா கச்சிதமாகவே நடித்துக் கொடுத்திருந்தாள்.

 

அடுத்து பவன்யாஷ் அவளை தேடி அந்த மருத்துவமனை முழுவதும் அலசுவது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டது.

 

அடுத்த காட்சியில், மரியாவைப் போன்ற உடை அணிந்த சுவாதி வயிற்றில் இரத்த நிற சாயம் வழிய அந்த அறையில் அமர்த்தப்பட்டாள். அவளுக்கு பெரிதாக காட்சிகள் இல்லை. அவள் வலியில் துடிப்பதைப் போல வயிற்றை பிடித்துக்கொண்டு மூலையில் அமர்ந்திருக்க வேண்டும். அந்த அறைக்கு வெளியே தீப்பற்ற வைக்கப்படும். அவளை கண்டு அந்த தீயில் பாய்ந்து பவன்யாஷ் அவளை தூக்கிக்கொண்டு மறுபடி தீயை விட்டு வெளிவர வேண்டும்.

 

காட்சி வெகு சிறியது தான். ஆனால் நெருப்பை பயன்படுத்துவதால் கூடுதல் கவனமாக மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டாயம். சுவாதிக்கு நெருப்பை பற்றி பெரிதாக பயம் இல்லை. ஆனால் இந்த கேமரா, நடிப்பு, தன்னை சுற்றி இருக்கும் மனிதர்கள், கூச்சல் இதெல்லாம் தான் அவளை அதிகம் அச்சுறுத்தியது.

 

“ரெடி. ஆக்ஷன்” என்ற குரல் கேட்டதும், சுவாதி அந்த மூலையில் கண்களை இறுக மூடி ஒடுங்கிக் கொண்டாள். 

 

“ஃபயர்” என்ற உத்தரவில் அவளிருந்த அறைக்கு வெளியே தீவைக்கப்பட்டது. 

 

“பவன் ரன்” என்றதும் பவன்யாஷ் அவளை தேடியபடி தீயை நோக்கி ஓடிவந்தான். 

 

“சுவாதி ஆக்ஷன்” தன் பெயர் ஒலித்ததும், பயத்துடனே வயிற்றை பிடித்துக் கொண்டு எழுந்த நின்றவளுக்கு அவள் கண்முன்னால் எரியும் நெருப்பை பார்த்து இன்னும் பயம் கூடியது. அத்தனை அதிகமாக நெருப்பை பற்ற வைப்பார்கள் என்று அவன் நினைத்திருக்கவில்லை. நெருப்பால் உண்டான‌ புகை வேறு அவள் கண்களை கலங்க வைக்க, ஒன்றும் புரியாமல் மிரண்டு நின்றவளை, “ஸ்ரீ…” என்ற பவன்யாஷின் அழைப்பு குரல் திரும்பச் செய்தது.

 

‘இந்த பேர் சொல்லி ஏன் கூப்பிறான்? இந்த படத்துல ஹீரோயின் பேரு ஸ்ரீயா என்ன?’ அதற்கு மேல் அவளால் யோசிக்க முடியவில்லை. நிமிடத்திற்கு நிமிடம் தீயின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

 

அறைக்குள் இவள், அறைக்கு வெளியே அவன், இடையில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பு. அந்த சூழலே அவளை பயமுறுத்தியது.

 

“பவன், ரெடி, ஜம்ப்” என்ற குரலில் அவன் தீக்குள் பாய்ந்து அவளை நோக்கி வர, அவள் அப்படியே மிரண்டு நின்றிருந்தாள். 

 

“அடியே, இப்ப நீ பயந்து கீழ விழணும்” பவன் சொன்னதும் நினைவு வந்தவளாக, பொத்தென கீழே விழுந்து கண்களை மூடிக் கொண்டாள்.

 

அவள் அப்படி விழுந்ததில் அவனுக்கு சிரிப்பு வரும்போல தோன்றியது. மைக்கில் அவன் செய்ய வேண்டியதை இயக்குநர் சொல்ல, தன் முகத்தில் கலவரத்தை கொண்டு வந்தவன், சுவாதியை நோக்கி ஓடினான்.

 

தரையில் விழுந்து கிடந்தவளை கைக்கொடுத்து தூக்கி மடியில் ஏந்தியபடி அவள் கன்னத்தை தட்டினான். 

 

“வலிக்குது பாஸ்… மெதுவா தட்டுங்க” ஒற்றை கண்ணை மட்டும் திறந்து அவள் சொல்ல, 

 

“இப்ப நீ மயக்கத்துல இருக்க குறுக்க பேசி சொதப்பாதடீ” என்று வாய்க்குள் கடிந்தவன், அவள் வயிற்றில் இரத்தக்கசிவை கவனித்து பதறி தன் மேல் சட்டையை கழற்றி, அவள் வயிற்று காயத்தை சுற்றி இழுத்து கட்ட, அவளுக்கு மூச்சு முட்டி, வலியில் கண்விழித்து அவனை முறைத்தாள்.

 

அவள் விழித்ததை பார்த்தவன், அவளை அப்படியே தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, அவள் மூச்சை இழுத்துப் பிடித்து கொண்டாள்.

 

“அடாபாவி, என்னடா கட்டிப்புடிக்கற? இதெல்லாம் பத்தி எனக்கு சொல்லவே இல்லயே” அவன் அணைப்பினூடே அவள் சந்தேகமாக கேட்க,

 

“ஆமா, உனக்கு எல்லாத்தையும் விளக்கி சொல்லுவாங்க, கொஞ்ச நேரம் கம்முனு இருந்து தொலை. எதையாவது சொதப்பி வச்ச… அந்த நெருப்புல உன்ன தூக்கி போட்டு போயிட்டே இருப்பேன்” பவன் அவள் காதோடு கடுகடுத்து விடுவித்தான்.

 

நெருப்பு இன்னும் அதிகரித்தது கொண்டே போனது. புகையும் அனலும் அவர்கள் இருவரையும் வேர்த்து வழிந்து மூச்சு முட்ட செய்தது. எதற்காக இந்த காட்சியில் ஹீரோயின் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை என்பது இப்போது சுவாதிக்கு நன்றாகவே புரிந்தது. படுத்தபடியே பவன் எங்கே என்று பார்த்தாள்.

 

அங்கே, தடுப்பு கம்பியில் தொங்கி கொண்டிருந்த, பச்சை வண்ண துணியை இழுத்து கழற்றியவன், அதை கீழே விரித்து அவளை அதில் தூக்கி படுக்க வைத்து நெருங்கி வரும் நெருப்பை பார்த்தபடி சுற்றினான். 

 

நெருங்கி வரும் தீயைப் பார்த்து சுவாதிக்கும் பயம் பிடித்துக் கொண்டது. மேல் சட்டை இன்றி வியர்வையில் நனைந்திருந்த கட் பனியனில் அவனது இறுகிய தோள்களில் நெருப்பின் ஜூவாலை சிவந்து ஒளி வீசியது.

 

அனலும் புகையும் வியர்வை இருவருக்குமே மூச்சடைக்கும் உணர்வையும், அங்கிருந்து வெளியேறினால் போதும் என்ற நிலையை உருவாக்கி இருக்க, சுற்றிய துணியோடு பவன் அவளை கைகளில் வாட்டமாய் ஏந்தி நின்று, கொழுந்து விட்டு எரியும் தீயை பார்த்தான்.

 

“எவ்ரி ஒன் அலாட்… பவன் கமான் ஜம்ப்” மைக்கில் உத்தரவு ஒலித்ததும் கண்களை ஒரு முறை மூடித் திறந்தவன், முன்னோக்கி முதலடி எடுத்து வைத்ததுமே அவன் பேண்டில் தீப்பற்றி கொள்ள, அவன் அடுத்தடுத்த அடிகள் வைக்கவுமே அவன் இடை வரை மொத்தமாக தீப்பிடித்து எரிந்தது. 

 

“தனா…” சுவாதி பதறி கத்திவிட்டாள்.

 

பவன்யாஷ் குறையாத வேகத்தோடு அவளை தூக்கிக்கொண்டு ஓடிவந்து தீயைத் தாண்டி குதித்து அவளோடு தரையில் உருண்டு விழுந்தான்.

 

நொடியும் தாமதிக்காமல் அவர்கள் இருவர் மேலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. 

 

சுவாதியை இருவர் தூக்கி நிறுத்த, அவள் அதிர்ச்சியில் அங்கேயே மயங்கி சரிந்தாள்.

 

மற்றவர்கள் அனைவரும் பவன்யாஷை சூழ்ந்து கொண்டனர்.

 

***