என் முன்னாள் காதலி 7

என் முன்னாள் காதலி 7

 

சுவாதி நினைவு திரும்பி கண் விழித்ததும், அவன் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது நினைவு வந்து அவளை கலங்கச் செய்ய, வேகமாக இறங்கி பவன்யாஷ் அறை நோக்கி விரைந்தாள்.

 

அவள் பதற்றமாக அறை கதவை திறக்க, பவன்யாஷ் சாவகாசமாக அமர்ந்து சாஃப்ட் டிரிங் அருந்தி கொண்டிருந்தான். 

 

அவனுக்கு என்னவோ ஏதோ என்று பதற்றத்துடன் சூழ்ந்து கொண்டவர்கள் எல்லாம் சற்று முன் தான் கலைந்து சென்றிருந்தனர். இப்போது திரு மட்டும் அவன்‌ உடனிருந்தான்.

 

கதவு திறக்கும் ஓசையில் இருவரும் பார்வையும் அவளிடம் படிந்தது. “வாங்க மேடம், ரிஸ்க் எடுத்தது பாஸ், மயங்கி விழுறது நீயா? கொடுத்த வேலை ஒன்னையாவது ஒழுங்கா செய்யறியா? எல்லாத்தையும் சொதப்பி வைக்கிற.” திரு சுவாதியிடம் படபடவென பொறிய, அவளின் பார்வை பவன்யாஷ் விட்டு விலகவில்லை.

 

தூய வெள்ளை நிற பேண்ட் மட்டும் அணிந்து, மேல் சட்டை இல்லாமல் அமர்ந்திருந்தவன் பொன்மேனியில் ஆங்காங்கே களிம்பு பூசியிருந்த இடங்களைக் கவனித்த பிறகுதான், அவனுக்கு பெரிதாக காயமில்லை என்ற நிம்மதி வந்தது அவளுக்கு.

 

“திரு வீட்டுக்கு கிளம்பலாம், கார் ரெடி பண்ண சொல்லுங்க” என்ற பவன்யாஷின் ஆணைக்கு தலையசைத்த திருக்குமரன், சுவாதியை முறைத்தபடி நகர்ந்து விட்டான்.

 

“அவ்வளோ நெருப்பு பத்துச்சு, உங்களுக்கு ஒன்னும் ஆகலயா!” இன்னும் நம்ப இயலாமல் அவள் கேட்க,

 

“ச்சு எனக்கு ஒன்னும் ஆகலன்னு ரொம்ப வருத்தப்படுற போல?” பவன் நக்கல் தொனியில் கேட்டான்.

 

அவன் நக்கலை தூரம் தள்ளியவள், “இவ்வளோ ரிஸ்க் அவசியமா? பெரிசா ஏதாவது ஆகியிருந்தா…” சுவாதிக்கு இன்னும் அந்த பதற்றம் குறைந்திருக்கவில்லை.

 

“என்ன ஆகியிருக்கும்னு எக்ஸ்பெட் பண்ண? நான் மொத்தமா கருகி போயிருப்பேன்னா…” பவன்யாஷ் இடக்காக கேட்க,

 

அவனுக்கு பதில் தராமல் முகம் கசங்க நகர்ந்தவளின் கரத்தைப் பிடித்து சற்றும் யோசனையின்றி தன்புறம் இழுத்தான். அதில் நிலைதடுமாறி  அவன்மீது சரிந்தவள், அவன் செயலில் மிரண்டு விழித்தாள்.

 

அவன் தன் முன்னிருந்த சிறு மேசையை காலால் மெல்ல தூர தள்ளிவிட்டு, அவளை மேலும் தன்னோடு இழுத்து வாகாய் அணைத்துக் கொண்டான்.

 

“விடு, என்ன பண்ற நீ…” அவள் திமிறி எழ முயல,

 

“ச்சுப்!” அவளை அடக்கியவன், “அங்க என்னை என்ன சொல்லி கூப்பிட்ட?” ஆர்வம் மின்ன‌ பவன்யாஷ் கேட்கவும், சுவாதி மலங்க மலங்க விழித்தாள். 

 

“சொல்லுடீ…” அவள் முகத்தருகே சரிந்தவன், அவளின் மூக்கோடு மூக்குரசி, அவள் கன்னத்தோடு தன் கன்னத்தை இழைய விட, அவன் செய்கையில் அவள் உடல் நெளிந்தாள். 

 

“பவன்… ப்ளீஸ்… விடு… யாராவது பார்த்தா தப்பாயிடும்…” அவள் பதட்டம் பயத்துடன் கெஞ்சினாள்.

 

“பவன் இல்ல… தனா சொல்லு, உன்ன விடுறேன்.” 

 

சுவாதி அவனை வேகமாக விலக்கி எழ திமிறவும், அவளை மேலும் அழுத்திப் பிடித்து அவன் தன்னுடன் இருத்திக் கொள்ளவும், அவளுக்குள் நடுக்கம் உண்டானது.

 

அவளின் மிரண்ட விழிகளோடு தன் கூர் விழிகளை கலக்க விட்டவன், “நான் புதைக்குழி மாதிரி… நீ எனக்குள்ள விழுந்துட்டா மறுபடி உன்ன எழவே விடமாட்டேன்! அதேபோல என்னைவிட்டு எவ்வளவுக்கு எவ்வளவு நீ விலகி போக டிரை பண்றயோ… அவ்வளவுக்கு அவ்வளவு உன்ன இழுத்து எனக்குள்ள புதைச்சுக்குவேன்! உனக்கு ஒரே வழி தான், எனக்குள்ள பொதைஞ்சு நீ இல்லாமலேயே போகணும்.” என்று அவளை ஆழ் பார்வையில் மிரட்டியவன், அவளது பயம் அப்பிய முகத்தை மிக மென்மையாக வருடினான்.

 

அவன் பார்வை கூட அவள் முகத்தை வருடியது. “முன்னைக்கு இப்ப ரொம்ப கறுத்து போயிருக்குடி உன் ஃபேஸ்… இந்த ஐஸ் கூட ரொம்ப டல்லடிக்குது, உன் சப்பி சிக்ஸ் ஏன் இப்படி ஒட்டிப்போய் கிடக்கு ம்ம்? ஏன்டி இந்த லிப்ஸ இப்படி காயப்போட்டு வச்சிருக்க?” அவள் முகத்தை அணுஅணுவாக அளந்து ஆதங்கப்பட்டவனுக்கு, இப்போதே அவளின் உலர்ந்த இதழ்களில் ஈரத்தை பாய்ச்சி, உயிர் கொடுக்க பேராசை கிளர்ந்தது.

 

அதை அப்போதே நடத்தி விடுபவன் போல அவளை நெருங்க, சுவாதி வேகமாக தன் உள்ளங்கையை பிரித்தெடுத்து அவன் வாயைப் பொத்தினாள்.

 

பவன் ஏமாற்றமாக அவளை முறைக்க, “முட்டாள் மாதிரி பண்ணாத, நம்மள யாராவது இப்படி பார்த்தா உன் இமேஜ் மொத்தமா சரிஞ்சு போகும். முதல்ல விடு என்னை.” அவள் அதட்டி சொல்ல, அவன் வேண்டா வெறுப்பாய் அவளை விடுவித்து முகம் திருப்பிக் கொண்டான்.

 

அவள் எழுந்து நேராய் நின்று தன் கலைந்திருந்த உடையை கவனமாக சரிசெய்ய, அவன் பார்வை பட்ட இடத்தில் தெரிந்த கண்ணாடியில் அவள் பிம்பத்தைப் பார்த்தவன், “நீ மாஞ்சு‌ மாஞ்சு இழுத்து மறச்சிக்கிற அளவுக்கு நான் உன்ன ஒன்னும் பண்ணல… ஜஸ்ட் கிஸ் கூட பண்ணல.” அவன் கடுகடுக்க, அவள் பற்களை நறநறத்தாள்.

 

“ஏய் ஓவர் சீன் போடாதடி, கிளம்பு போகலாம்” என்று பவன்யாஷ் எரிந்து விழவும், அவன் ரெமோவில் இருந்து அந்நியனாக மாறியதை உணர்ந்து கொண்டவள், அமைதியாக அவனுக்கான சட்டையை எடுத்து தந்தவள், அவனுடன் வெளியே நடந்தாள்.

 

***

 

மறுநாள் நல்ல உறக்கத்தில் இருந்தவனை கலைக்கவே செல்பேசி ரீங்காரமிட்டது. கண்களைத் திறக்காமல் கையால் துழாவி செல்போனை எடுத்து காதுக்கு ஒற்றினான்.

 

“எஸ், பவன் ஹியர்” தூக்கம் வழிந்த குரலில் சொல்ல,

 

“பாஸ், அந்த பிரீத்தி பொண்ணு உங்கள வசமா சிக்க வச்சிட்டா…” மறுமுனையில் திரு கத்தினான்.

 

அதில் உறக்கம் கலைந்து இமைகளை திறந்தவன், “என்ன உளர்ற மேன்? யாரு ப்ரீத்தி?” கேட்டபடி எழுந்து அமர,

 

“நேத்து உங்களுக்கு ப்ரோப்போஸ் பண்ணாங்களே, உங்க ஃபேன்… நீங்க கூட உங்களுக்கு ஏற்கனவே லவ்வர் இருக்கறதா அடிச்சு விட்டீங்களே பாஸ்.” திரு நினைவுபடுத்தவும்,

 

நினைவு வந்தவனாக, “யா எஸ், அந்த பொண்ணுக்கு என்ன?” சற்று கவனத்துடன் கேட்டான்.

 

“அந்த பொண்ணுக்கு ஒன்னுமில்ல பாஸ்… நீங்க பேசின வாய்ஸ் கிளிப்ப நெட்ல விட்டுருக்கா…”

 

“வாட் ரப்பீஷ்”

 

“இப்ப சோஷியல் மீடியா ஃபுல்லா நீங்க தான் ஹாட் டாப்பிக்… ‘பவன்யாஷின் காதலி யாரு’ன்னு ஆஷ்டேக் டிரன்டிங்ல போயிட்டிருக்கு பாஸ்.”

 

திரு சொல்லி முடிக்க, பவன்யாஷ் தலையை அழுத்திக் கோதிக் கொண்டான்.

 

“இப்ப என்ன பண்றது பாஸ்?” திரு பதற்றமாகவே கேட்க,

 

“நம்ம சைட்ல இருந்து எதுவும் ரியாக்ட் பண்ண வேணாம் திரு… வெயிட் பண்ணலாம்” என்றதோடு அழைப்பை துண்டித்தவன், மொபைல் டேட்டாவை ஆன் செய்ய, வந்து குவிந்த நோட்டிஃபிகேஷன்ஸை பார்த்து அவனுக்கு கிறுகிறுத்தது.

 

இன்ஸ்டா, டிவிட்டர், ஃபேஸ்புக், யூடியூப் என எங்குமே, ‘பவன்யாஷின் காதலி யார்?’ என்ற தலைப்பே வெவ்வேறு விதமாக போய்க் கொண்டிருந்தது.

 

டிவிட்டருக்குள் சென்று அலசி பார்க்க, திரைத்துறையில் இருக்கும் முன்னணி நடிகைகள் அனைவரையும் இழுத்து வைத்து, இவரா? அவரா? என்று வாதம் போய்க் கொண்டிருக்க, அதையெல்லாம் படித்த அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

 

இதில் வரிசை கட்டி வந்த மீம்ஸ் கண்டண்ட் எல்லாம் பார்த்து, தாங்கமுடியாமல் வாய்விட்டே சிரித்து விட்டான். அவன் சாதாரணமாக சொன்ன விசயத்தை வெறும் ஓர் இரவுக்குள் இத்தனை பெரிதாக பரப்பி இருப்பது, அவனுக்கே மலைப்பாக இருந்தது.

 

அடுத்து தான் என்ன செய்ய வேண்டும்? என்ற யோசனை ஓடியது அவனுக்கு.

 

அதேநேரம், சுவாதியும் தன் மொபைலில் அதைப்பற்றி தான் பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

‘என்னது… பவனுக்கு ஆல்ரெடி ஆள் இருக்கா?’ 

 

‘அப்ப எனக்கு சான்ஸ் போச்சா!’ 

 

‘பவன், இப்படி என் லிட்டில் ஹார்ட்ட நொறுக்கிட்டீங்களே!’

 

‘பவன், உங்களுக்கு பிரேக்அப் ஆச்சுன்னா எனக்கு ஒரு சான்ஸ்‌ கொடுக்கணும் கண்டிப்பா!’

 

‘பவனுக்கு லவ்வர் எல்லாம் இல்லபா… இதெல்லாம் ஜஸ்ட் கிசுகிசு மட்டும் தான்’

 

இன்னும் பலதரப்பட்ட இளம் பெண்களின் கமெண்ட்ஸை படித்துப் பார்த்தவளுக்கு கடுப்பு ஏறியது.

 

ஹாஸ்டல் கேன்டீனில் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தவள், ‘அவன பத்தி ஒன்னுமே தெரியாம ஏன் இவங்கெல்லாம் இப்படி உருகி வழியிறாங்களோ! அவனை தெரியாம லவ் பண்ணி தொலைச்சிட்டு இங்க நான் படுற பாடு எனக்கு தான தெரியும்.’ என்று அலுத்துக் கொண்டவள், மேலும் அதையெல்லாம் படிக்க மனமின்றி மொபைலை அணைத்து வைத்துவிட்டு உணவில் கவனம் செலுத்தினாள்.

 

இட்லி, சாம்பார், சட்னி, வடை என்று ஹாஸ்டல் உணவு பார்ப்பதற்கு நன்றாகத் தான் தெரிந்தது. ஆனால், சாப்பிட தான் அத்தனை கண்றாவியாக இருந்து தொலைத்தது.

 

அவள் தங்கும் ஏழாவது மகளிர் விடுதி அது. அவ்வப்போது ஹாஸ்டலை மாற்றிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறாள் தான். ஆனாலும் மற்ற விடுதிகளில் இத்தனை மோசமான உணவை உண்டதில்லை. 

 

‘அடுத்த ஹாஸ்டலை தேட வேண்டியது தான்’ என்றெண்ணியபடி கைகளை கழுவி வந்தவளை அவள் மொபைல் அழைத்தது.

 

எடுத்து பார்த்தவள் புது எண்ணிலிருந்து அழைப்பு வந்திருக்க தூண்டித்துவிட்டு, தன் அறையை நோக்கி நடந்தாள்.

 

மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வர, யோசனையோடு எடுத்து காதில் ஒற்றினாள்.

 

“ஹலோ…”

 

“ஸ்ரீமா… என்னை பெத்தவளே… தாயீ, எப்படி இருக்க ஆத்தா?” மறுமுனையில் உடைந்த குரல் இவள் செவிப்பறையில் மோத, சுவாதியின் முகம் மாறிப்போனது.

 

“இன்னும் உசிரோட தான் இருக்கேன். என்ன விசயம் சொல்லு?” என்றாள் காரமாய்.

 

பேத்தியின் ஒதுக்கமான பேச்சில், அம்பிகை அம்மாளின் மனது நொந்து போனது. “வருச கணக்கா முகம் காட்டாம இருக்கியேடீ… இந்த கிழவி உனக்கு என்ன பண்ணேன்? இங்கன பிரச்சனை எல்லாம் ஓஞ்சி போச்சு. நீ தகிரியமா நம்ம வீட்டுக்கு வரலாம். வந்துடு தாயீ… இன்னும் எத்தனை வருஷம் நீ தனியா கஷ்டப்படுவ…”

 

“நான் அங்க வந்து… சொல்லு கிழவி நான் அங்க வந்து என்ன செய்யட்டும்? எனக்குன்னு என்ன மிச்சமிருக்கு அங்க நான் வரத்துக்கு? என்னை இந்த நிலைக்கு ஆளாக்கனவங்க தவிர வேற யாரு இருக்காங்க அங்க எனக்கு?”

 

“அப்படி சொல்லாத ஸ்ரீ, நான் இல்லயா உனக்குன்னு… உன்னையும் என் பேரனையும் இந்த குடும்பத்துல சேர்க்க தானே என் உசுர கையில புடிச்சிட்டு இருக்கேன்” அம்பிகை தளர்ந்து சொல்ல,

 

“யாரு நீயி? சும்மா வேண்டாதது பேசாம விசயத்தை சொல்லிட்டு போனை வை.” சுவாதி அவரிடம் எரிந்து விழுந்தாள்.

 

“கண்ணன் என் கண்ணுக்குள்ளயே நிக்கிறான்டீ… அவனை ஒத்த வார்த்தை பேச சொல்லேன். என் மனசு ஆறும்.” பெரியவள் கிட்டத்தட்ட சின்னவளிடம் யாசிக்க, 

 

“முடியாது அப்பத்தா… உங்க யாரோட நிழலையும் அவன்மேல படவிட மாட்டேன்.” சுவாதியின் பதில் அத்தனை ஆத்திரமாக வந்தது.

 

“அடியே, சின்ன புள்ளடி அவன்… என் பேரன இப்படி தனிச்சு வச்சு சித்ரவதை பண்ணாதடீ” அவரும் ஆதங்கமாக பேசினார்.

 

“அவன் தனிச்சு இருக்கறதை விட உசுரோட இருக்கறது தான முக்கியம்!”

 

“அடிப்பாவி! என்ன வார்த்தை சொல்லிபுட்ட, உன் அப்பனை பெத்தவடீ நான், என்மேல நம்பிக்கை இல்லாம போச்சா உனக்கு?”

 

“யாரையும் நம்பக்கூடாதுன்னு வலிக்க வலிக்க பாடம் படிச்சிருக்கேன்… படிச்ச பாடம் மறந்து போகும், வலிச்ச வலி மறக்குமா? நான் உன்ன நம்பறத்துக்கு, என் அப்பா மட்டும் உன் புள்ள இல்லயே.” கண்கள் இரத்த சிவப்பேற, ஆங்காரமாக வார்த்தைகளை வீசினாள் அவள்.

 

“அய்யோ! நம்ம கெட்ட நேரம் நடந்ததெல்லாம் தப்பா போச்சுனு விட்டு தொலையேன்டீ… அஞ்சு வருஷம் ஆச்சு இன்னுமா அந்த கோபத்தை நெஞ்சுல வஞ்சம் வச்சிருப்ப…” பாட்டியும் தாங்கமாட்டாமல் புலம்பினார்.

 

“எதை விட சொல்ற நீ… எப்படி விட முடியும் என்னால? வெறும் வஞ்சம் மட்டும் வச்சுக்கல கிழவி, என் நெஞ்சுல நெருப்பா எரிஞ்சிட்டு இருக்கு… என்னையும் என் குடும்பத்தையும் இந்த நிலைமைக்கு ஆளாக்குனவங்க ஒவ்வொருத்தரையும் உசுரோட எரிச்சு பொசுக்குனா தான்… அந்த நெருப்பு அடங்கும்! 

 

நான் அந்த ஊருக்கு என்னிக்கு வரேனோ அன்னிக்கு தான் அவங்களுக்கு எல்லாம் கடைசி நாளு… எழுதி வச்சுக்க சொல்லு… நாங்க துடிச்ச துடிப்பும், நாங்க பட்ட வேதனையும் அவமானமும் அவங்க பட வேணாம்” சுவாதி மொத்தமாக உருமாறி வஞ்சினம் உரைக்க,

 

“ஏன்டீ… ஏன்டீ, இப்படி கொலைவெறி புடிச்சு அலையிற? எல்லாரையும் கொன்னுட்டு நீ மட்டும் நிம்மதியா இருப்பியா? உன் அப்பன மாதிரி நீயும் கொலைகாரி பட்டத்தை கட்டிட்டு ஜெயிலுக்கு போகணும்னு நெனக்கிறீயா? 

 

இதுக்காடீ உன்ன பார்த்து பார்த்து வளர்த்தேன்… நம்ம கையி தெரியாம நம்ம கண்ண குத்தினா, கைய வெட்டி போடவா முடியும்? புரிஞ்சிக்கடீ… கோபத்தை விட்டு சமாதானம் பேசி ஒடஞ்சி இருக்க குடும்பத்தை ஒண்ணு சேர்க்க பாரேன்டீ.” அம்பிகை வேண்டுதலாக பேத்தியிடம் வேண்டினார்.

 

ஆனால், அவரின் பிடிவாதக்கார பேத்தி சற்றும் இறங்குவதாக இல்லை. 

 

“என் கண்ண குத்தினது வேற கையி தான அப்பத்தா… அதுவும் வேணும்னே தெரிஞ்சே என் கண்ண குத்தி குருடாக்கியிருக்கு… அந்த கைய வெட்டாம விடலாமா? விடுவேன்னு மட்டும் நினைக்காத அப்பத்தா…

 

என்னோட பகையும் அங்க தான் இருக்கு, என் உரிமையும் அங்க தான் இருக்கு. என்னோட எதையும் நான் விட்டுட மாட்டேன்… நான் வருவேன்…”

 

இத்தனை வருடங்கள் கடந்தும் தன் பேத்தியின் கோபாவேசம் சற்றும் மட்டுபடவில்லை என்பதை உணர்ந்து அந்த வயதான பெருமாட்டியின் மனது சோர்ந்து போனது. இனியெல்லாம் கடவுள் விட்ட வழி என்று எண்ணிக் கொண்டவர்,

 

“உனக்கு புண்ணியமா போகும் தாயீ, உன் பகைய என் பேரன் நெஞ்சிலயும் விதைச்சிடாத… அவனாவது நல்லா வாழணும்” பேரனின் பாசம் பாட்டிகளுக்கு எப்போதும் தனிதானே.

 

“உன் பேரன் கிட்ட என்ன சொல்லணும் சொல்லக்கூடாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ ஃபோனை வையி” என்ற சுவாதி, அவருக்கு முந்தி தானே இணைப்பை துண்டித்து விட்டிருந்தாள்.

 

கோபம், ஆத்திரம், ஆற்றாமையில் அவள் உள்ளம் கொதித்து, உடல் நடுக்கம் கொள்ள, அவள் பார்வை தீயாய் தகித்து வெற்று சுவரை வெறித்துக் கொண்டிருந்தது.

 

அப்பத்தாவின் பாசம் இவளுக்கு புரியாமல் இல்லை. அதற்காக கண்ணனை அவளால் விட்டுக் கொடுக்க முடியாது. பாசத்திற்கும் பந்தத்திற்கும் கட்டுப்பட்டு அவள் இழந்தது எல்லாமே அதிகம். இனியும் எதையும் இழக்க அவள் தயாராக இல்லை. முக்கியமாக அவளின் கண்ணனை!

 

இப்போதைய அவளின் முதல் பலவீனம் கண்ணன் தான். அடுத்த பலவீனம்… தனா! 

 

அவள் மொபைல் மறுபடி ரீங்காரமிட்டு, அவளின் தகிக்கும் பார்வை வீச்சில், தீப்பிடித்து கொள்ளாமல் அந்த சுவரை தப்பிக்க வைத்திருந்தது.

 

அதே கோபத்தோடு எடுத்தவள், “ஹலோ சொல்லு” என்று எரிந்து விழ,

 

“கொஞ்சமாவது மரியாதை தெரியுதா உனக்கு?” மறுமுனையில் திரு அவளிடம் கத்தி விட்டான்.

 

அவன் கத்தலில் தன் தவறை உணர்ந்தவள், நெற்றியை தேய்த்துவிட்டு, “சாரி திரு ண்ணா, வேற டென்ஷன்ல இருந்தேன். அதான் தெரியாம சொல்லிட்டேன்” தன் மன்னிப்பை கேட்டுக் கொண்டாள் சுவாதி.

 

“என்ன அப்படி டென்ஷனோ உனக்கு போ… சீக்கிரம் கிளம்பி பாஸ் வீட்டுக்கு வா. முக்கியமான விஷயம்.” என்றதோடு தொடர்பை துண்டித்து விட்டான்.

 

***

 

சுவாதி பவன்யாஷ் வீட்டுக்குள் நுழையும்போதே அங்கே பெரிய பஞ்சாயத்து போய்க் கொண்டிருந்தது.

 

“இப்ப மழுப்பாம பதில் சொல்ல போறியா இல்லையா? யாருடா அந்த பொண்ணு?” நடு கூடத்தில் வைத்து மகனை கேள்வி கேட்டு துளைத்துக் கொண்டிருந்தார் மங்கை. 

 

“உனக்கே உன் புள்ள மேல நம்பிக்கை இல்லாம போனா எப்படி ஆத்தா? அப்படியே யாரையாவது நான் லவ் பண்ணா உன்கிட்ட சொல்லாம இருப்பேனா?” பவன்யாஷ் அலுத்தபடி பதிலிறுத்துக் கொண்டிருந்தான்.

 

மகன் மேல் சந்தேகமாக  படிந்திருந்த குணசேகரன் பார்வை, சுவாதி அங்கே வரவும் அவளிடம் திரும்பியது.‌ 

 

சுவாதி வழக்கம் போலவே பணிவாக அவர்கள் முன் வந்து நின்றாள். பேச்சினூடே பவனின் பார்வை அவளிடம் பட்டு மீண்டதையும் அவர் கவனித்து கொண்டார்.

 

“காலையில இருந்து ஒவ்வொருத்தரா போன் மேல போனா போட்டு இதையே தான் கேட்டுட்டு இருக்காங்க… நான் என்னத்த சொல்லட்டும்?” மங்கை மகனுக்கு மேல் அலுத்துக்கொள்ள,

 

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லன்னு சொல்லுங்கம்மா… அதுக்கு மேல யாராவது துருவி துருவி கேட்டா, ஃபோனை கட் பண்ணி வச்சுட்டு,  போய் பிக்பாஸ் பாருங்க.” பவன்யாஷ் சாதாரணமாக சொல்லவும்,

 

“என்னை பார்த்தா உனக்கு கிண்டலா இருக்காடா?” மங்கை முகம்‌ சுருங்கி கேட்டார். இதுபோல மகன் பெயர் அடிப்படும் தனிப்பட்ட விமர்சனங்கள், கிசுகிசுக்கள், வதந்திகள் இதெல்லாம் அவருக்கு முற்றிலும் புதியது. அவற்றை எல்லாம் அவரால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. கண்டுகொள்ளாமல் இருக்கவும் முடிவதில்லை.

 

“ம்மாவ், நான் ரொம்ப சீரியஸா தான் சொல்றேன் மா, யாரு இதை பத்தி உங்க கிட்ட கேட்டாலும், எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லுங்க… அப்பா, திரு, சுவாதி உங்களுக்கும் இதே தான்.” பவன்யாஷ் சொல்ல,

 

“நிஜமா எங்களுக்கு தான் ஒண்ணும் தெரியாதே மகனே” குணசேகரன் கைவிரித்து சொன்னார்.

 

“அப்பாவ், நிஜமா எனக்கு காதலி எல்லாம் யாரும் இல்லப்பா, என் சினிமா பார்த்துட்டு பிடிச்சுப்போய் அந்த பொண்ணு எனக்கு ப்ரப்போஸ் பண்ணுச்சு, அதை அவாய்ட் பண்ண தான் இப்படி சொல்லி வச்சேன் அவ்வளவுதான்.” பவன் தந்தையின் சந்தேகப் பார்வையில் சுயவிளக்கம் கொடுத்தான்.

 

“ஆமா சார், இதுக்கு முன்ன கூட நிறைய பொண்ணுங்க இப்படி பாஸ்க்கு ப்ரோப்போஸ் பண்ணுவாங்க, அப்பவும் பாஸ் இதுபோல ஏதாவது சொல்லி அவங்கள டைவர்ட் பண்ணி‌ விட்டுடுவாங்க… நேத்து பேசுன பொண்ணு தான் பாஸ் சொன்னதை வெளிய பரப்பி விட்டுடுச்சி” திரு தனது பாஸுக்காக பேசினான்.

 

“முதல்ல அவன நீ பாஸுன்னு கூப்பிடறதை விடு திரு. ஏதோ கொள்ளை கூட்டத்து தலைவனை கூப்பிடுறது போலவே இருக்கு.” மங்கை எரிச்சலாக குறுக்கே பேச,

 

“நான் மட்டும் இல்ல மேடம் எல்லாரும் அவரை அப்படித்தான கூப்பிடுறாங்க… ஏன் ஊர் உலகமே அவரை பாஸ்ன்னு தான் கூப்பிடுது மேடம்” திரு பவ்வியமாகவே சொல்ல, பவன்யாஷ் தன் அம்மாவை கெத்தாக ஒரு பார்வை பார்த்தான்.

 

மங்கை தன் நெற்றியில் தட்டிக் கொண்டவர், “இவன் நடிச்ச மத்த படம் கூட ஓரளவு பாக்கறமாதிரியாவது இருந்துச்சு… அந்த பாஸ் படம் தான் அறுத மொக்க… நீங்கல்லாம் எப்படி தான் அந்த படத்த தூக்கி வச்சி கொண்டாடுறீங்களோ!” சலித்துக் கொள்ள,

 

“ஆத்தா, அந்த படம் தான் எனக்கு பேர் வாங்கி கொடுத்துச்சு… பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் தெரியுமா? இப்படி பொசுக்குனு சொல்லிட்ட” பவன்யாஷ் வெளிப்படையாகவே அங்கலாய்த்தான்.

 

“என்னவோ போடா” மங்கை அவன் சொன்னதை தட்டிவிட,

 

“அந்த படம் நல்லா தான்டா இருக்கு, ஆனா, அந்த படத்துக்கு அப்புறம் எல்லாரும் உன்ன, ‘பாஸ்‌ பாஸ்’னு கூப்பிடறதை கேக்க தான் சகிக்கல.” குணசேகரனும் தன் பங்குக்கு மகனை வாரிவிட்டார்.

 

“இந்த பேரு எனக்கு மக்கள் கொடுத்த அங்கிகாரம் ப்பா… அவங்க என்னை பாஸ்னு கூப்பிடறது எனக்கு பெருமை தான்” பவன்யாஷ் பெருமையாகவே சொல்ல,

 

“அப்ப, உன்னோட காதலி யாருன்னு சுத்திட்டு இருக்காங்களே உன்னோட வெறித்தனமான ரசிகர், ரசிகைகள்… அவங்களுக்கு என்ன பதில்டா சொல்ல போற?” குணசேகரன் நேராக கேட்டார்.

 

“இப்ப நான் எந்த பதிலும் சொல்ல போறதில்ல ப்பா, நான் ஏதாவது சொல்லப் போயி, அவங்க அதை வேறமாதிரி புரிஞ்சிட்டு, ஒன்னுல்லாத மேட்டரை ஊதி ஊதி பெருசாக்கி விட்டுடுவாங்க… இப்போதைக்கு அமைதியா இருக்கலாம், ரெண்டு நாள் பேசிட்டு பெருசா எதுவும் தேறலன்னு விட்டுடுவாங்க” என்றான் கூலாக.

 

“ராசா… நிஜமா உனக்கு காதலி எல்லாம் யாரும் இல்லதானே?” மங்கை இன்னும் நம்பாதவராக தாயின் பரிதவிப்புடன் கேட்க,

 

பவன்யாஷ் பார்வை சுவாதியை நேர்நோக்கியது. சுவாதி அவன் பார்வையை எதிர்கொள்ளாமல் தலைதாழ்த்திக் கொண்டாள் வழக்கம் போல.

 

அவளுக்கு தெரியும் பவன் அவளிடம் என்ன எதிர்பார்க்கிறான் என்று. முறிந்து போன அவர்கள் காதலின் மிச்சங்களை அவளிடம் தேடுகிறான். ஆனால் அவன் தேடலுக்கு ஒவ்வொரு முறையும் வேண்டுமென்றே ஏமாற்றத்தை பரிசளித்து, அவனது ஆற்றாமையை கொட்டிக் கொள்கிறாள் அவள்.

 

பவனின் ஆற்றாமை கோபமாக அவளிடமே திரும்பி விடுகிறது. இப்போதுமே, அவளின் பார்வை விலகல் அவனுக்குள் கோபத்தை கிளப்பியது.

 

“கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணா நம்புவியாம்மா என்னய?” என்று அம்மாவிடம் கத்தி விட்டவன்,

 

“நாளைக்கு எனக்கு ஃபிளைட், மொரிஷியஸ்ல சாங்ஸ் ஷூட்டிங் இருக்கு. நான் திரும்பி வர எப்படியும் டூ வீக்ஸ் ஆகும். அதுக்குள்ள இந்த பேச்செல்லாம் அடங்கி போயிடும் போதுமா” என்றான்.

 

மகன் குரலுயர்த்தியதில் மங்கை அதற்குமேல் எதுவும் பேசவில்லை. அமைதியாகி விட்டார்.

 

“சுவாதி, ஏன் இன்னும் இங்கயே நிக்கிற, போய் என் திங்க்ஸ் பேக் பண்ணு போ” என்று அவளை விரட்டினான்.

 

சுவாதி தலையசைத்து அவனது மாடி அறை நோக்கி விரைந்தாள்.

 

“இந்த இஷ்யூ பத்தி யாரும் எதுவும் ரியாக்ட் பண்ண வேணாம்னு நம்ம சர்கிள்ல இன்பார்ம் பண்ணிடுங்க திரு” பவன் சொல்ல,

 

“ஓகே பாஸ்” திரு தலையை உருட்டியபடி, அப்போதே செயல்படுபவன் போல கையில் கைப்பேசியை எடுத்துக் கொண்டான்.

 

“நாளைக்கு டிரிப் அரேன்ஜ்மென்ஸ் எல்லாம் பார்த்துக்கங்க. அவாய்ட் லாஸ்ட் மினிட்ஸ் ரஷ்ஸஸ் (Avoid last minutes rushes)” பவன்யாஷ் உத்தரவிற்கு மறுபடி ஒரு, ‘ஓகே பாஸை’ உதிர்த்து விட்டு, திருக்குமரன் தன் வேலைகளை கவனிக்க விடைபெற்று சென்றான்.

 

“ம்மா, இன்னிக்கு ஃபுல்லா எனக்கு ரெஸ்ட் மட்டும் தான். நல்லா தூங்கி எழப் போறேன். பசிச்சா நானே வந்து சாப்பிட்டுகிறேன் டிஸ்டர்ப் பண்ண வேணாம்” என்றவன் சோம்பல் முறித்தபடியே மாடிப்படிகளில் ஏறினான்.

 

“எனக்கென்னவோ இவன் நம்மகிட்ட எதையோ மறைக்கற மாதிரியே தோணுது மாமா!” மங்கை கணவனிடம் சந்தேகமாகவே சொல்லிக் கொண்டிருந்தார்.

 

“இங்க எல்லாருக்குள்ளயும் சில ரகசியங்கள் புதைஞ்சிருக்கும் அரசி, உனக்குள்ளயும் எனக்குள்ளயும் கூட. மத்தவங்க நம்ம கருப்பு பக்கத்தை தெரிஞ்சிக்க கூடாதுன்னு சிலதை மறைச்சு வச்சிருப்போம்… நமக்கு மட்டும் சொந்தமானதா, அப்பப்ப அசைப்போட்டு ரசிச்சிக்க சிலதை யாருக்கும் வெளிப்படுத்தாம நமக்குள்ள பூட்டி வச்சிருப்போம். 

 

எல்லாருக்குள்ளயும் இருக்கற எல்லா ரகசியங்களையும் தோண்டி எடுக்கணும்னு நினைக்கிறதே பெரிய பைத்தியக்காரத்தனம். அவங்கவங்களுக்குள்ள மறஞ்சு இருக்கற வரைக்கும் தான் அந்த ரகசியங்களுக்கு மதிப்பு… தப்பித்தவறி அது அம்பலமாச்சுன்னா அந்த உணர்வோட மதிப்பு மோசமா அடிப்பட்டு போயிடும்” நீளமாக தத்துவம் பேசிய கணவனை முயன்ற மட்டும்‌ முறைத்து நின்றார் மங்கையர்க்கரசி.

 

“இப்ப நம்ம பயன் நம்மகிட்ட எதையோ மறக்கிறான்னு சொல்ல வரீங்களா? இல்ல மறைக்கலன்னு சொல்ல வரீங்களா?” 

 

இடையில் கையூன்றி இரண்டில் ஒன்று கேட்டு நின்ற மனைவியை சிரிப்புடன்‌ பார்த்த குணசேகரன், “தாயும் புள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேற வேறன்னு சொல்றேன்! புரிஞ்சதுனா போய் உன் மகனுக்கு பிடிச்சது எதையாவது செய், இன்னிக்கு அவனுக்கு உன் கையால தான் சாப்பாடு” என்றதும், 

 

தன்‌ குழப்பத்தை தள்ளி வைத்தவர், மகனுக்கு பிடித்தவைகளை மனதில் வரிசைப்படுத்தியபடி சமையலறை நோக்கி விரைந்தார் மங்கையர்க்கரசி.

 

***