என் முன்னாள் காதலி 8

என் முன்னாள் காதலி 8

 

கப்போர்டில் அவனுக்கு தோதான ஆடைகளை எடுத்து வெளியே வைத்துக் கொண்டிருந்தாள் சுவாதி. பக்கத்தில் டிராவல் பேக் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

 

அவளது சிடுசிடுத்த முகத்தை கவனித்தபடி அறைக்குள் வந்தவன், “எதுக்கு உன் மூஞ்சி புசுபுசுன்னு ஊதி கிடக்கு?” என்று கேட்க, 

 

அவனை நிமிர்ந்து பார்த்தவள், அமைதியாக அவன் ஆடைகளை வேகவேகமாக மடித்து வைக்கலானாள்.

 

அவள் முன்னால் சோஃபாவில் கால் மேல் காலிட்டு தோரணை காட்டி அமர்ந்தவன் பார்வை அவளிடம் தான் பதிந்திருந்தது. 

 

கன்னத்தில் கையூன்றி தன்னை குறுகுறுவென்று மேய்ந்த அவன் பார்வையை உணர்ந்தும், சுவாதி அவன் புறம் திரும்பவே இல்லை.

 

ஏதேனும் பேசி அவனிடம் தானாக சென்று சிக்கிக் கொள்ளவும் அவள் தயாராக இல்லை. நேற்றே அப்படித்தான், தன்னை மீறி அவனை, ‘தனா’ என்றழைத்து எல்லாவற்றையும் சொதப்பி வைத்து விட்டாள். இனியும் எதையும் குழப்பி அடிக்க அவளுக்கு விருப்பமில்லை. அவன் பார்வையில் இருந்து தப்பித்துக்கொள்ள வேகவேகமாக பேக்கிங்கை முடித்துவிட்டு வெளியேற முயன்றவளை அவன் குரல் நிறுத்தியது.

 

சோஃபாவில் இருந்து எழுந்தவன், அவள் பேக் செய்த பையை திறந்து, அவள் முன்னமே அனைத்தையும் கீழே கொட்டி விட்டான் பவன்யாஷ்.

 

அவன் செயலை கண்கள் விரிய, முகம் கொதி நிலையில் சிவப்பேற பார்த்து நின்றாள் சுவாதி. 

 

“நான் என்ன டிரஸ் எடுத்துட்டு போகணும்னு நான் தான் முடிவு பண்ணனும், நீ இல்ல” என்றவன், “ஃபர்ஸ்ட் இதெல்லாம் கிளீன் பண்ணிட்டு, நான் சூஸ் பண்ற டிரஸ்ஸ மட்டும் எடுத்து பேக் பண்ணு.” என்றவனை உறுத்து விழித்தவள், வழக்கம்போல தட்டாமல் அவன் சொன்னபடி செய்யலானாள்.

 

‘அந்த அரை லூசு இப்படித்தான்னு தெரியும் இல்ல, கண்ட்ரோல் சுவாதி… அவன்கிட்ட எந்த பேச்சும் வச்சிக்காத, வேலைய மட்டும் செஞ்சுட்டு கிளம்பிடு’ தனக்குத் தானே சொல்லிக்கொண்டு கீழே இறைந்து கிடந்தவற்றை அவள் எடுத்து வைக்க, “என்னடி அங்க முணுமுணுப்பு? எனக்கும் கேக்குற மாதிரி தான் பேசேன்.” பவன் அவளை வம்புக்கென்றே அழைத்தான்.

 

சுவாதி அவனுக்கு பதில் தராமல் தன் கைவேலையில் கவனமாக இருக்க, அவனுக்கு சுறுசுறுவென்று கோபமேற, அவளின் மேல் கரம் பிடித்து அவன் நிறுத்த, தன் இரு கைகளிலும் அவனது ஆடைகளை வைத்தபடி, அவனை முறைத்து நின்றாள் அவள்.

 

“இப்ப என்ன தான ஏதோ வாயுக்குள்ள திட்டிட்டு இருந்த… அது என்னன்னு சொல்லிட்டு நீ வேலைய பாரு.” பவன்யாஷ் கேட்க,

 

தன் மேல் கையை அழுத்தி பிடித்திருத்த அவன் கரத்தை உறுத்து பார்த்தவள், “மரியாதையா கைய எடுத்துடு பவன், நான் காலைல இருந்து செம டென்ஷனா இருக்கேன். நீ ஏதாவது சீண்டின… நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” கிட்டத்தட்ட அவனை மிரட்டி நின்றவளை, சுவாரஸ்யம் மின்ன பார்த்தவன் கைகள் தன்னால் விலகி கொண்டன.

 

அவனை அதே பார்வை பார்த்துவிட்டு திரும்பியவளின் கைகளில் இருந்த ஆடைகள் அனைத்தும் தரையில் சிதறி விழ, அவனது இறுக்கமான அணைப்பில் சிக்கியிருந்தாள் அவள்.

 

‘அய்யோ…! எதுவும் பேசி வைக்காதன்னு சொன்னேனே கேட்டியாடீ!’ தன்னையே தனக்குள் சுவாதி நொந்துக்கொள்ள, “இப்ப சொல்லுங்க மேடம், நான் உங்ககிட்ட மரியாதையா எப்படியெல்லாம் நடந்துக்கணும்?” என்றவன் குரல் அவள் காதோரம் வழிய, அவன் கரங்கள் அவளின் எலும்புகளை நொறுக்கும் முயற்சியில் இருந்தது.

 

“வலிக்குது… விடு… நான் அப்படி பேசினது தப்பு தான்… சாரி… விட்டுடு” சுவாதி தன் வீம்பை உதறி அவனிடம் இறங்கி வந்திருந்தாள்.

 

“ம்ஹூம்… இவ்வளோ நடந்ததுக்கு அப்புறமும் உன் திமிர் அடங்கின மாதிரி தெரியலையே… இது சரியில்லடி, ஏதாவது செய்யணுமே…” 

 

“இல்ல இல்ல, நான் பாவம்! வாய் தவறி பேசிட்டேன். இந்த ஒரு டைம் மன்னிச்சிடு. இனிமே பேசினா தண்டனை கொடு பிளீஸ்.” 

 

அவளுக்கு அவன் அணைப்பு புதிதில்லை தான். ஆனால், எலும்புகள் நொறுங்கும் அளவிலான இத்தனை இறுக்கம், காதலிலும் சேராதது. காமத்திலும் சேராதது. அவன் தரும் தண்டனைகள் வேறு ஒரு‌ மார்க்கமாக இருக்க, அவளுக்கு அவனிடம் வீம்பு‌ பிடிக்க சுத்தமாக எண்ணமில்லை.

 

“பேசறதெல்லாம் பேசிட்டு மன்னிச்சிடுன்னு சொன்னா விட்டுடனுமா உன்ன?” அவன் கரங்கள் அவளை மேலும் நொறுக்கியது.

 

“ப்ளீஸ்… ப்ளீஸ்…” சுவற்றில் பல்லி போல அவனில் ஒட்டி இருந்தவள் கீச்சிட்டாள்.

 

“சரி சொல்லு, கொஞ்ச நேரம் முன்ன என்னை என்னனு திட்டின?” பவன் வினவ,

 

“பெருசா எதுவுமில்ல, அரை லூசுன்னு மட்டும் தான் சொன்னேன்” வேகவேகமாக ஒப்புவித்தாள்.

 

“நிஜமா?”

 

“சத்தியமா… இப்ப இவ்வளோ தான் திட்டினேன்” அவன் பிடியில் அவளுக்கு உண்மையெல்லாம் தண்ணீர் பட்ட பாடாய் கொட்டியது.

 

“ம்ம் அப்ப முன்னல்லாம் என்னை வேற வேறயா திட்டிருக்க, அப்படித்தானே?” பவன் விடாமல் கேட்க,

 

“என்னை கொஞ்சம் விட்டுட்டு பேசேன் மூச்சு முட்டி செத்துட போறேன்.” அவள் அரற்றவும் அவன் இறுக்கம் மெல்ல தளர்ந்தது. ஆனாலும் அவன் பிடி அவளை விலக விடவில்லை.

 

மூச்சு வாங்க அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், “இதெல்லாம் தப்புனு உனக்கு தெரியலயா? அன்னிக்கு அப்படித்தான் கார்ல கிஸ் பண்ண… நேத்து ஷூட்டிங் ஸ்பாட்ல, கைய பிடிச்சு இழுத்து, நீ பொதைக்குழி மண்ணாங்கட்டினு டயலாக் பேசி தப்பா நடந்துக்க பார்த்த… இப்ப வீட்ல, எல்லாரும் இருக்கும் போது,‌ கட்டிப்பிடிச்சிட்டு நிக்கிற… 

 

என்னை பத்தி என்ன நினச்சிட்டு இருக்க நீ? எனக்குன்னு யாரும் இல்லன்னு தான இவ்வளோ அட்வாண்டேஜ் எடுத்துக்கற. எதுக்கும் ஒரு அளவு இருக்கு பவன்… இப்படியெல்லாம் செஞ்சு என்னோட சேர்த்து உன் கேரக்டரையும் ஸ்பாயில் பண்ணிக்கிற.” தன்னிடம் படபடவென பொறிந்தவளை அசையாது பார்த்திருந்தது அவன் பார்வை. 

 

அவன் அசையா பார்வையை எதிர்கொள்ள இயலாமல் அவள் விழிகளை வேறு புறம் திரும்பி கொள்ள, அவள் தாடை பற்றி தன்னை பார்க்கச் செய்தவன், “ஏன் நிறுத்திட்ட சுவாதி? இன்னும் நான் உன்னை என்னல்லாம் பண்ணேன்னு சொல்லு… உங்கூட எத்தனை நைட் தனியா இருந்திருக்கேன்? அப்பல்லாம் உன்ன என்னென்ன பண்ணேன்னு சொல்லு… நீ எனக்கு செஞ்ச துரோகத்துக்கு பதிலா, உன்ன எதுவும் செய்ய முடியாம பக்கத்துல வச்சு பத்திரமா பார்த்திட்டு இருக்கேனே அதையும் சேர்த்து சொல்லு.” ஆற்றாமை கோபம் தெறித்த அவன் முகத்தை காண இயலாமல் இமைகளை இறுக மூடிக் கொண்டாள் சுவாதி.

 

அவள் இமையோரம் அவன் இதழ் தடம் வெப்பமாக புதைந்து மீள, அவள் விழியோரம் நீர் துளிர்த்தது. 

 

“ஒரு உண்மைய சொல்லவா… உன்ன என்ன செய்யணும்னு எனக்கு புரியவே இல்லடி… உன்மேல அவ்வளோ கோபமா, ஆத்திரமா வருது… ஆனாலும் உன்ன காயப்படுத்த மனசு வரல… என்னை விட்டு நீ போன வலியை கூட என்னால பொறுத்துக்க முடிஞ்சதுடி. ஆனா… வேற ஒருத்தனுக்கு சுலபமா கழுத்த நீட்ட போயிட்ட இல்ல…

 

என்னையும் என் காதலையும் அவ்வளோ ஈஸியா உன்னால தூக்கி எறிய முடிஞ்சதில்ல… அவ்வளோ சீக்கிரம் நமக்குள்ள நடந்த எல்லாத்தையும் அத்தனை சுலபமா மறக்க முடிஞ்சதில்ல உன்னால…? 

 

என்னால எதையும் மறக்க முடியலையே… இத்தனை வருஷம் கழிச்சும் என் மனசு உங்கிட்ட ஏங்குதே… நான் மட்டும் ஏன் இவ்வளோ பலவீனமானவனா இருக்கேன், அதுவும் உன் விஷயத்துல மட்டும்…” ஆதங்கமாக கேட்டவன், அவளின் மிரண்ட பார்வையில் அவளிடமிருந்து விலகி கொண்டான். 

 

திறந்திருந்த கப்போர்டில் இருந்து சில உடைகளை தேர்ந்தெடுத்து அவள் கைகளில் திணித்தவன், “இதெல்லாம் பேக் பண்ணிட்டு நீ கிளம்பு.” என்றவன் சென்று கட்டிலில் படுத்துக்கொள்ள, சுவாதி சொல்லமுடியாத அசௌகரித்துடன் மறுபடி பையை அடுக்கி வைத்துவிட்டு, வெளியே நடந்தாள்.

 

“சுவாதி…” அவள் கதவை தாண்டும் முன் அவன் அழைப்பு அவளை நிறுத்தியது. 

 

படுத்தவாக்கில் அவளை பார்த்தவன், “நான் இங்க இல்லன்னா, உனக்கு வேலை இல்லனு அர்த்தம் இல்ல. டெய்லி கரெக்ட் டைம்க்கு வந்து அம்மா, அப்பாக்கு உதவியா இரு. இல்ல உன்னோட சேலரி கட்டாகும்” என்று அவன் பாஸாக ஆணையிட, அவள் முகத்தில் பளீச்சென பல்ப் எரிந்தது. 

 

“அப்ப நான் உங்ககூட வர வேண்டியதில்லையா?” குரலில் கொண்டாட்டம் வழிய கேட்டவளை பார்த்து எரிச்சலானவன்,

 

“செலவு பண்ணி உன்னல்லாம் ஃபாரீன் கூட்டிட்டு போற அளவுக்கு நீ வொர்த் இல்ல.” என்றான்.

 

அவன் குத்தலில் அவள் முகம் சுணங்கினாலும், அவன் தொல்லை இல்லாமல் இரண்டு வாரங்கள் நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணம் தந்த உற்சாகத்தில் வெளியே நடந்தாள் சுவாதி.

 

***

 

நெதர்லாந்து  

கிண்டர்டைக் 

பச்சை பசேல் வயல்வெளிக்கு இடையே அங்கங்கே உயர்ந்து சுழன்று நிற்கும் விண்மில்களின் அழகு அவன் கண்களை கவர்ந்திழுக்க, அவன் கருத்தெல்லாம் அவளிடம் இருந்து மீள இயலாமல் சிக்கியிருந்தது.

 

மொரிஷியஸ் தீவில் ஒரு வார பாடல் காட்சிகளை படமாக்கிவிட்டு, அடுத்து படக்குழு நெதர்லாந்து நாட்டில் இறங்கி இருந்தது. மற்ற இடங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்திருக்க, மீதமிருந்த சில காட்சிகள் இன்று முழுவதும் கிண்டர்டைக் பகுதியில் படமாக்கப்பட்டது. 

 

கிண்டர்டைக், அங்கே புகழ்மிக்க சுற்றுலா தளம். கண்பார்க்கும் இடங்களில் எல்லாம் வானைமுட்டும் விண்மீல்களின் பிரம்மாண்ட தரிசனம் கிடைக்க, வயல்வெளி, புல்வெளி, மலர்க்கூட்டம், தத்தி ஓடும் ஓடை நீரோட்டம், அதில் அசைந்தாடும் படகு சவாரி என திகட்ட திகட்ட மகிழ்ச்சி நிறைந்த இடமாக காட்சி அளித்தது. 

 

மாலை மயங்கும் நேரத்தில், இதமான குளிர் பரவும் காலநிலையை கைகளை கட்டி அனுபவித்தபடி, தூரத் தெரிந்த விண்மீலை வெறித்தபடி நின்றிருந்தான் பவன்யாஷ். மறுபக்கம், இரவில் எடுக்க வேண்டிய காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தன. 

 

நாளை மாலை மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்பதே பவன்யாஷ் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. கண் இமைக்கும் பொழுதில் இத்தனை விரைவாக இந்த இரண்டு வாரங்கள் கடந்துவிடும் என்று அவன் நினைத்திருக்கவில்லை.

 

இந்த முறை சுவாதியை வேண்டுமென்றே உடன் அழைத்துக் கொள்ளாமல் வந்திருந்தான். அவனை பற்றியும் அவளை பற்றியும் யோசிக்க வேண்டியிருந்தது அவனுக்கு.

 

அவளை விட்டு தனித்து வந்த பிறகு தான் உறைத்தது, இந்த இரண்டு மாதங்களில் அனைத்திற்கும் அவளை மட்டும் தான் சார்ந்திருக்கிறான் என்று.

 

துண்டு எடுத்து வைப்பது, உடை எடுத்து வைப்பது, உணவு பரிமாறுவது என அவனது சிறு சிறு தேவைக்கும் கூட, அவன் மனம் சுவாதியையே நாடி ஓடியது. அவளுக்காக துள்ளும் மனதை தலையை தட்டி அடக்கி வைத்து சோர்ந்து போயிருந்தான் பவன். 

 

அவள் வருவதற்கு முன்பெல்லாம் அவனுக்கான தனிப்பட்ட வேலைகளை அவனே தான் செய்து கொண்டிருந்தான். தன் வேலையை தானே செய்வதில் அவனுக்கு சோம்பல் எல்லாம் எப்போதும் இருந்ததில்லை. சுவாதியிடம் தன் வெறுப்பை காட்டவே இந்த வேலையெல்லாம் அவளை செய்ய சொன்னது. ஆனால் இப்போது, ஒவ்வொன்றுக்கும் அவளையே தேடித் தன்னை தொலைத்துக் கொண்டிருக்கிறான்.

 

இந்த தேடலுக்கு பெயரென்ன? காதலா! ‘அவளிடம் மறுபடி தனக்கு காதல் உணர்வு வருமா என்ன? அத்தனை தன்மானம் கெட்டு போனேனா நான்?’ அவன் யோசனை கொதிநிலைக்கு சென்றது.

 

அவளோடு காதலில் திளைத்திருந்த நாட்களில் உணர்ந்த அவஸ்தையை விட, இப்போது அவளுக்காக அதிகமாக அவஸ்தை அனுபவிக்கும் தன் வேட்கையை தானே காரி உமிழ்ந்து கொண்டான்.

 

‘ச்சீ உனக்கெல்லாம் மானம் ரோஷமே கிடையாதாடா? உன்ன கேவலப்படுத்தி தூக்கி போட்டு போனவ தான் வேணும்னு அடம்பிடிக்கிறீயே வெக்கமா இல்லடா? இந்த உலகத்துல அவள தவிர வேற பொண்ணே உன் கண்ணுக்கு படாத… இப்பவும் உன் பின்னாடி எத்தனை அழகான பொண்ணுங்க சுத்திட்டு இருக்காங்க. அதுல எவ பின்னாடியாவது போய் தொலையேன். ஏன் அவ ஒருத்திய மட்டும் பிடிச்சு தொங்கற..?’ 

 

தன்னைத்தானே திட்டித் தீர்த்து கொண்டிருந்தவனின் தோளைத் தொட்டு, அவனருகில் வந்து நின்றாள் மரியா, அந்த படத்தின் கதாநாயகி.

 

அவளை பார்த்ததும் பவன் ஒரு சினேக முறுவல் தர, “என்ன பவன், ரிஹர்சலக்கு கூட வராம இங்க தனியா நின்னுட்டு இருக்க? யாரையாவது மிஸ் பண்றியா மேன்?” அவன் முகம் படித்தவளாக மரியா சிரிப்புடனே கேட்க, அவன் முறுவல் இன்னும் சற்று விரிந்தது.

 

“டேன்ஸ் ஸ்டெப்ஸ்னா ரிஹர்சல் பார்க்கலாம், ஹக் பண்ணவும் கிஸ் பண்ணவும் கூடவா ரிஹர்சல்? அந்த மாஸ்டர் தான் வம்படிக்கு சொல்றார்னா, நீயும் அதையே கேக்கற பார்த்தியா?” அவள் இறுதியாக கேட்டதை டீலில் விட்டவன், கிண்டலாகவே அவளை வாறினான்.

 

“நீங்கல்லாம் ல்வ்வர் பாய் பாஸ், கேஷுவலா பர்ஃபார்ம் பண்ணிட்டு போயிடுவீங்க. நாங்கெல்லாம் கிரீன் சேண்ட், ரிஹர்சல் பண்ணா தான் கொஞ்சமாவது ஒழுங்கா வரும்” மரியா பாவமாக சொல்ல, பவன் வாய் பொத்தியபடி சிரித்து வைத்தான்.

 

அவன் தோளில் ஓரடி போட்டவள், “சிரிக்காத மேன், லாஸ்ட் மூவி ரொமான்ஸ் சீன்ல எவ்வளோ டேக் வாங்கினேன்னு உனக்கு மறந்து போச்சா?” என்றாள் சிணுங்கலாக.

 

“அதெப்படி மறக்கும், கஜகஜா சீன்ஸ்ல எல்லாம் நிறைய டேக் வாங்கினா மஜமஜாவா தானே இருக்கும்” என்று கண்ணடித்து கேலி பேசிவனுக்கு இன்னும் இரண்டு அடிகளை வைத்தவள், “அய்யோ ச்சீ! அசிங்கமா பேசி வைக்காதடா. உன் வாய் தெரிஞ்சும் உன்கிட்ட பேச வந்தேன் பாரு என்னை சொல்லணும்” என்று வெட்கம் இழையோட தன் நெற்றியிலும் தட்டிக் கொண்டாள்.

 

பவன்யாஷ் அவள் வெட்கத்தையும் சங்கடத்தையும் ஓர பார்வையாக கவனித்து ரசனையாக மென்முறுவல் விரித்து, “ரொம்ப அழகா வெட்கப்படுற மரியா, பட் என்ன, கேமராவுக்கு முன்ன‌ இந்த வெட்கம் எங்கேயோ காணாம போயிடுது.” பவன் அவளை மேலும் கேலி பேசினான்.

 

“அட போ மேன், இதுவரைக்கும் நான் நடிச்ச படத்துல எல்லாம் வெட்கப்பட்டு வெட்கப்பட்டு அந்த ஃபீலே நான்ஸன்ஸ்னு தோண ஆரம்பிச்சிடுச்சு. தெரியாம தான் கேட்கிறேன், சினிமால ஹீரோயின்ஸ்க்கு காமனா என்ன ரோல் கொடுக்கறாங்க? ஃபர்ஸ்ட் கொஞ்சம் ஆட்டிடுயூட் காட்டணும், நெக்ஸ்ட் ஹீரோவ லவ் பண்ணனும், லாஸ்ட் வில்லன் கிட்ட மாட்டிட்டு நாலு டயலாக் பேசணும்… மத்தது படத்துல வர அஞ்சு பாட்டுக்கு கிளாமரா டேன்ஸ் ஆடணும்… இதை தவிர எங்களுக்கு என்ன பெருசா ஹோப் இருக்கு ஃபிலிம்ல.

 

நான் இதுவரைக்கும் நடிச்ச படத்துல எல்லாம் ரிப்பீடட் மோட்ல இந்த சீன்ஸ் தான் வருது. என்ன, ஸ்டோரி லைன், சிச்சுவேஷன் மட்டும் தான் டிஃபரன்ட். புதுசா கதை சொல்வங்களும் சேம் இப்படித்தான் சொல்லி வைக்கிறாங்க. இப்பெல்லாம் கதை கேட்க கூட சலிச்சு போகுது.” மரியா புலம்பி தள்ளினாள்.

 

“ஹலோ மேடம், அப்படி பார்த்தா ஹீரோ ரோல் கூட சேம் தான். ரெண்டு பன்ச், நாலு பைட், நாலு சாங்க், அந்த நாலுல ஒன்னு லவ் பெயிலர் குத்துப்பாட்டு, லாஸ்ட் எதுக்குன்னே தெரியாம சேஸிங், வில்லனை சாகடிச்சிட்டு போஸ் கொடுக்கும்போது என்ட் போட்டு, ஹீரோயின் கழுத்துல தாலி கட்டுற சீன ஊறுகா மாதிரி வச்சு‌ சுபம் போட்டுடுவாங்க.” பவன் தன் பங்கிற்கு சிரிப்புடனே பதில் புலம்பல் வைக்க,

 

“அதான… நானும் யோசிச்சு இருக்கேன். என்னதான் ஹீரோவா இருந்தாலும் கொலைக்காரன போய் எவளாவது மேரேஜ் பண்ணிக்குவாளா? சினிமா ஹீரோயின்ஸ் மட்டும் என்ன‌ இளிச்சவாயிங்களா?” மரியா ஆதங்கமாகவே கேட்டு வைத்தாள்.

 

“அஹான் கரைக்ட் தான், இதுக்கான பதில நம்ம டைரக்டர் கிட்டயே கேக்கலாம் வா” பவன்யாஷ் அவள் கை பிடித்து திரும்ப, 

 

அவன் கையை உதறியவள், “ஒன்னும் வேணா விடு மேன். இருக்கிற டென்ஷன் எல்லாத்தையும் அவரு நம்ம மேல கொட்டுவாரு” என்றவள், அருகேயிருந்த மரத்திட்டில் அமர்ந்து கொண்டாள்.

 

தன் உடல் முழுவதையும் நீள போர்வையால் போர்த்தியபடி, உம்மென்று அமர்ந்திருப்பவளை பார்த்தவன், “என்னாச்சு மரியா, ஏன் இன்னைக்கு மூட் அவுட்? உன் பாய்பிரண்ட் கூட டிஷ்யூம் டிஷ்யூமா?” என்று கேட்க,

 

இல்லையென்று தலையசைத்தவள், “அவனை பிரேக்அப் பண்ணிட்டேன்” என்றாள், அதே சிடுசிடுப்புடன்.

 

அவள் பதிலில் நெற்றி சுருங்கியவன், “ஹேய் விளையாடாத மரியா, சும்மா தான சொல்ற? நீங்க தான் டீப் லவ்வர்ஸ் ஆச்சே” பவன் நம்ப இயலாமல் தான் கேட்டான். 

 

மரியா பெருமூச்செடுத்து விட்டு தலையசைத்தாள். “என்ன லவ்வோ கண்றாவியோ போ மேன்” என்று சலித்துக் கொண்டாள்.

 

இதற்குமேல் அவளின் தனிப்பட்ட விஷயத்தில் கேள்வி கேட்பது சரியில்லை என்று அவனுக்கு தோன்ற, பவன்யாஷ் அமைதியாக நின்றான்.

 

ஆனால், மரியா பேசினாள். “திரீ இயர்ஸ் லவ் பாஸ்… எனக்கு அவனை அவ்வளோ பிடிக்கும் தெரியுமா? இதுவரைக்கும் அவன்கிட்ட எதையுமே நான் மறச்சதில்ல, அவனுக்கு உண்மையா தான் இருந்து இருக்கேன். ஆனா அவன்…” என்றவளுக்கு கண்ணீர் துளிர்க்க, மேக்கப் கலையாமல் இமையோரம் ஒற்றி எடுத்துக் கொண்டாள்.

 

எப்போதும் திடமாக இருக்கும் அவளை இப்படி கலங்கி பார்ப்பது, அவனுக்கும் கஷ்டமாக இருக்க, “உன் லவ்வர் உனக்கு உண்மையா இல்லயா?” என்று கேட்டான்.

 

“அதெல்லாம் அவன் டீடோட்டலர் தான். இப்பெல்லாம் அவன் என்னை ரொம்ப சந்தேகப் படுறான் பவன்… என் கேரக்டரை ரொம்ப கொச்சப் படுத்தி பேசறான்… என்னால தாங்க முடியல… அதான் பிரேக்அப்னு சொல்லிட்டு வந்துட்டேன்” என்றவளுக்கு கதறி அழவேண்டும் போலிருந்தது. தன் கண்ணீரையும் துக்கத்தையும் தொண்டைக்குள் விழுங்கிக் கொண்டவள், உதட்டை கடித்து அமர்ந்திருந்தாள்.

 

பவனுக்கு ஏதோ புரிவது போலிருந்தது. “என்னையும் உன்னையும் சேர்த்து தப்பா நினைக்கிறானா?” அவளிடமே கேட்டு விட்டான். 

 

மரியாவும் மறுக்கவில்லை, ஆமென்று தலையசைத்தாள் வேதனையாக.

 

தன்னையும் அவளையும் சேர்த்து உலாவரும் வதந்திகள் பற்றி அவனுக்குமே நன்றாக தெரிந்தது தான். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் தந்திருந்தது. அதன் காரணமாகவே இந்த படத்தில் பவன்யாஷ் மறுத்தும் கூட, இருவரும் ராசியான ஜோடி என்று மரியாவை கதாநாயகியாக தேர்ந்தெடுத்து இருந்தார் இயக்குநர்.

 

ஏனோ பவன்யாஷ் உடன் ஜோடியாக நடித்த மற்ற கதாநாயகிகளை விட, மரியாவுடனான கெமிஸ்ட்ரி அத்தனை ஒத்துப் போனது. திரையில் இருவரையும் இணைத்து பார்க்கும் போது கூட, அவர்களின் தோற்ற பொருத்தம் அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. பவனின் ரசிகர்கள் மரியாவை கொண்டாடுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

 

ஆனாலும், இதில் எதுவுமே உண்மையில்லை. எல்லாமே நடிப்பு மட்டுமே. வெறும் மாயை தோற்றம் மட்டுமே. பவனுக்கும் மரியாவுக்கும் இது அவர்கள் தொழில். மற்றவர்களுக்கு அதுவொரு பொழுதுபோக்கு அவ்வளவே தான். இதற்குள் உண்மையை போட்டு ஏன் குழப்பி அடிக்கிறார்கள் என்றிருந்தது பவன்யாஷுக்கு.

 

“நான் உன் லவ்வர் கிட்ட பேசவா மரியா? நான் பேசினா உன்னை புரிஞ்சிப்பாரு இல்ல.” பவன் அவள்மேல் கரிசனப்பட்டு கேட்க,

 

மறுத்து தலையசைத்தவள், “இப்ப உன்கூட நடிக்கிறேன் உன்னோட சேர்த்து பேசுறாங்க, நாளைக்கு வேற ஹீரோ கூட நடிப்பேன், அப்பவும் அந்த ஹீரோவோட சேர்த்து பேசுவாங்க… ஒவ்வொரு டைமும் அவன்கிட்ட போய் என்னை நிரூபிச்சிட்டு இருக்க முடியாது பவன்… அவனுக்கா என்மேல அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கணும்… அந்த நம்பிக்கை இல்லாம போனதுக்கு அப்புறம் எங்க ரிலேஷன்ஷிப்ப இழுத்து பிடிக்கறதுல எந்த அர்த்தமும் இல்ல.” மரியா முடிவோடு சொன்னாள்.

 

அவள் கருத்தை பவன்யாஷால் ஏனோ முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “அவன் உன்மேல இருக்க பொஸஸிவ்னெஸ்ல கூட அப்படி பேசி இருக்கலாம் மரியா, அதுக்காக ஈஸியா பிரெக்அப்னு போறது சரியில்லைனு தோணுது எனக்கு… விட்டுக்கொடுக்காம எந்த உறவும் இங்க பலமா நிக்கிறதில்ல. நம்ம அம்மா, அப்பா கிட்ட கேட்டு பாரு அவங்க எவ்வளவு விசயங்கள்ல விட்டுக்கொடுத்து சேர்ந்து இருக்காங்கனு தெரியும். நம்ம தாத்தா, பாட்டி கிட்ட கேட்டு பாரேன், அவங்க பிரிய கூடாதுன்ற ஒரே காரணத்துக்காக எவ்வளோ பெரிய விசயத்தை எல்லாம் விட்டு வந்துருக்காங்கனு புரியும்.

 

இப்ப இருக்க பொண்ணுங்க எதையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க தயாரா இருக்கறதில்ல. லவ்ல ஒத்து வரலையா பிரேக்அப், லைஃப்ல ஒத்து வரலயா டைவர்ஸ்னு, ரொம்ப ஈஸியா ரிலேஷன்ஷிப்ப உடைச்சு போட்டுட்டு போயிறீங்கல்ல… அவன ரொம்ப லவ் பண்ணேன், அவன் தான் என்னை புரிஞ்சிக்கலன்னு புலம்பறதை விட்டுட்டு, அந்த லவ்காக நீ இதுவரைக்கும் என்ன பண்ணி இருக்க, எவ்வளோ டைம் ஸ்பெண்ட் பண்ணி இருக்கன்னு யோசிச்சு பாரு…

 

காதல்ல ஒன்னு போனா இன்னொன்னு வரும்னு சொல்றதெல்லாம் சுத்த ஹம்பக் மரியா… முதல் காதல் தர்ற ஆத்மார்த்தமான ஃபீல், அதுக்கப்புறம் வர எந்த காதலாலையும் தரவே முடியாது. உன் கைகோர்த்து இருக்கற உறவுக்காக கொஞ்சமாவது போராடு, சின்ன மனக்கசப்புகாக அந்த கைய உதறிட்டு போயிடாத… அப்புறம் எப்பவுமே அந்த உறவு உனக்கு கிடைக்கவே கிடைக்காது.” ஒரே மூச்சாக பேசியவன், அங்கே நிற்காமல் ஷூட்டிங் ஸ்பாட்டை நோக்கி சென்றுவிட்டான்.

 

பவன்யாஷ் இத்தனை உணர்ச்சிவசப்பட்டு பேசுவான் என்று மரியா நினைத்திருக்கவே இல்லை. எப்போதும் இலகுவாக இதமாக பேசும் குணமுடையவன். அவள் நடிப்பில் தயங்கும் போதும், சங்கடப்படும்போதும் ஏதேனும் பேசி அவளை இயல்பாக்குபவனிடம், இந்த அழுத்தமான வாதத்தை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. 

 

காதல்முறிவானதில் இருந்து அவளின் தோழிகள் அவளுக்கு ஆறுதலாக பேசினர், அவள் முடிவு சரியென்று அவளை ஆதரித்தனர், அவன்மேல் தான் தவறென்று அவனை திட்டி தீர்த்தனர். அதெல்லாம் இவளை ஓரளவு சமாதானப்படுத்தி இருந்தது. ஆனால் இப்போது பவனின் வாதத்தை யோசிக்கும்போது, தான் இன்னும் உறுதியாக இருந்திருக்க வேண்டுமோ என்று தோன்றியது‌ மரியாவுக்கு.

 

அவளை மேலும் யோசிக்க விடாமல், படப்பிடிப்பிற்காக அவளுக்கு அழைப்பு வர, தன் குழப்பத்தை தள்ளி வைத்துவிட்டு, தன் தொழிலை கவனிக்க நகர்ந்தாள்.

 

***