என் முன்னாள் காதலி 9

என் முன்னாள் காதலி 9(1)

 

நடு இரவை நெருங்கும் பொழுதில், இரவு சாலையில் தன் காரை மிதமான வேகத்தில் இயக்கி சென்றிருந்தான் பவன்யாஷ்.

 

கார் பயணம் எப்போதுமே அவனுக்கு உற்சாகம் தருவது. முன்பு காரை வாங்கும் அளவு அவனுக்கு வசதி அமையவில்லை. இப்போது வகைவகையாக அவன் கார்களை வாங்கி வைத்தாலும், நினைத்த நேரம் உல்லாசப் பயணம் மேற்கொள்ள அவனுக்கு நேரம் அமைவதில்லை. எனவேதான், எப்போது அவனுக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் காரை எடுத்துக்கொண்டு பறந்து விடுவான். 

 

அவனது ரசிகர்களின் பார்வையை தவிர்ப்பதற்காக, கூடுமானவரை பிராதான சாலைகளைத் தவிர்த்து, நகரத்தை விட்டு வெளிப்பகுதிகளில் அல்லது மலைப்பாதை சாலைகளைத் தான் பயணத்திற்கு தேர்ந்தெடுத்து செல்வான். அடிக்கடி ஒரே பாதையில் செல்லாமல் வெவ்வேறு பாதைகளில் அவன்‌ கார் பயணப்படும். முன்பெல்லாம் அவனுக்கு தனியாக பயணப்பட்டுத் தான் பழக்கம். சுவாதி வந்தபிறகு நிச்சயம் அவளுடன் தான். 

 

காரில் வழியும் வயலின் இசையில், இரவு வெளியின் குளிர்ச்சியில் உடல் தளர்ந்து, இதமான மனநிலையில் காரை இயக்கி வந்தவன், திரும்பி தன் அருகில் அமர்ந்திருப்பவளைப் பார்த்தான்.

 

தூக்கத்தில் கண்கள் சொருகி வழிய, எங்கே தூங்கிப் போனால் அவனிடம் திட்டு விழுமோ என்ற பயத்தில் தலையை அசைத்து அசைத்து தூக்கத்தை விரட்ட போராடிக் கொண்டிருப்பவளைப் பார்க்க, அவனுக்கு சுவாரஸ்மாகத் தான் இருந்தது. ஓரப் பார்வையில் அவளை அவதானித்தபடி தான் காரை செலுத்தி வந்தான். அவள் எப்போது தூங்கி சாய்வாள், அவளிடம் ஒரு காட்டு காட்டலாம் என்ற முடிவோடு.

 

அவள் மீதான அவன் கோபம் சற்றும் ஆறுவதாக இல்லை. இனி ஆறப்போவதுமில்லை என்றுதான் தோன்றியது அவனுக்கு. வெளிநாட்டில் பாடல் காட்சிகளை முடித்து வந்து இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்தவன், இதோ இன்று அவளை இழுத்துக்கொண்டு காரில் ஏறிவிட்டான்.

 

கண்களைக் கசக்கிக்கொண்டு தன் மொபைலில் நேரம் பார்த்தவளுக்கு அய்யோ என்றிருந்தது. ‘நடு ராத்திரி பதினொன்றரை மணிக்கு பேய் மாதிரி ஊர் சுத்த கிளம்பிட்டான். இவனுக்கு தூக்கமல்லாம் வந்து தொலைக்காதா?‌ போறவன் தனியா ஊர் சுத்த வேண்டியது தானே, என்னை எதுக்கு இழுத்துட்டு சுத்துறான்? ஐயோ இந்த தூக்கம் தூக்கமா வந்து தொலைக்குதே!’ மனதிற்குள் நொந்துகொண்டே விழிகளை விரல்களால் விரித்துவைத்துக் கொண்டாள்.

 

மேல் இமையின் மேலே ஆள்காட்டி விரலையும், கீழ் இமையின் கீழே கட்டை விரலை வைத்தபடி இரண்டு கண்களையும் விரித்துக் கொண்டு அமர்ந்திருப்பவளைப் பார்த்தவன், சத்தமாக வாய்விட்டு சிரித்துவிட்டான். 

 

அவன் கேலி சிரிப்பில், சுவாதி அவனை பாவமாக பார்க்க, அவன் அடக்கமாட்டாமல் மேலும் சிரித்தான். அவன் பார்வை சாலையை விட்டு நொடிகளுக்கும் அதிகமாக அவள்மேல் நிலைக்க விட்ட நேரம், அவன் கார் எதிலோ மோதிவிட, சட்டென சுதாரித்து காரை நிறுத்திவிட்டான் பவன்.

 

நடுரோட்டில் கார் எதன்மீது மோதியது என்று புரியாமல் பவன் காரை விட்டு இறங்கி பார்க்க, சாலையின் குறுக்கே இரண்டு பைக் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, மூன்றாவதாக இருந்த பைக் அவன் கார் மோதியதில் கீழே விழுந்து கிடந்தது.

 

“எந்த முட்டாளுங்க நடுரோட்ல பைக்க பார்க் பண்ணி வச்சது?” பவன் கோபமாக முணுமுணுக்கவும்,

 

“டேய், நம்ம‌ பைக்க எவனோ மோதிட்டான்டா…” என்ற சத்தம் மறுபுறம் கேட்டதும், பவனின் பார்வை அந்த பக்கம் திரும்பியது.

 

அங்கே சாலையோர மரத்தடியில், மதுபாட்டில்கள், மாமிச உணவுகளோடு தரையில் உட்கார்ந்து இருந்த மூன்று முரடர்கள்‌ பைக் விழுந்த சத்ததில், கோபமாக எழுந்து வந்தனர்.

 

“டேய்… எவன்டா நீ… என்னா தகிரியம் இருந்தா என் பைக்க மோதுவ…?” கட்டைக்குரலோடு மலைமாடு போன்றவன் ஒருவன் கத்தியபடி வர,

 

“ஏய் நடுரோட்ல தான் பைக்க பார்க் பண்ணி வைப்பீங்களா? அறிவில்ல உங்களுக்கு?” பவனும் கத்திவிட்டான்.

 

“எங்க ரோடு எங்க வண்டி, நாங்க எங்கவேணா பார்க் பண்ணிக்குவோம். கார் வச்சிருந்தா கண்ணு தெரியாதா உனக்கு ஒதுங்கி போக வேண்டியதுதானே…” என்று கோபமாக அருகே வந்தவர்கள், பவன்யாஷை அடையாளம் கண்டு அப்படியே ப்ரேக் அடித்து நின்றனர்.

 

“டேய்ய் நம்ம பாஸூடா…” ஒருவன் வாய்பிளக்க,

 

“ஆமாண்டா…” மற்றொருவன் முகம் பளீச்சிட்டது.

 

“ஓய்… காருக்குள்ள ஒரு பொண்ணு இருக்கு டோய்…” மூன்றாமவன் சுவாதியை காருக்குள் கண்டுவிட்டு கிண்டலாக கத்த, அவளுக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த தூக்கமும் மொத்தமாக ஓடியிருந்தது.

 

“பவன்… வா காரெடு போலாம்…” அவள் பயத்தில் அவனை அழைத்தாள். அவனுக்கும் பிரச்சனை இல்லாமல் அங்கிருந்து செல்வதே சரி என்று தோன்ற, காரை நோக்கி வரவும், ஒருவன்‌ வந்து அவனுக்கும் கார் கதவிற்கும் குறுக்கே நின்றான்.

 

“ஏய் வழிவிடு…” பவன்யாஷ் எச்சரிக்க,

 

“முடியாதுன்னா என்னா பண்ணுவ?” அவன் எளக்காரமாக கேட்டதும் மற்றவர்கள் சேர்ந்து பெரிதாக சிரித்தனர்.

 

அந்த இடமும், இருளும் காரின் விளக்கு ஒளியும், அவர்கள் சிரிப்பும்‌ அந்த சூழ்நிலையை வெறுப்பாக மாற்றி, பவனுக்கு உள்ளுக்குள் கோபமேற்றியது. அவர்கள் வேண்டுமென்றே தன்னிடம் வம்பிழுப்பது புரிய. அவர்களை அமர்த்தலாக முறைத்து நின்றிருந்தான் அவன். 

 

பவனும் கோபப்பட்டு அடிதடி பிரச்சனை ஆகிவிடுமோ என்ற பயத்தில், சுவாதியும் காரை விட்டு இறங்கி, அவனருகில் வந்து நின்றாள்.

 

“ஏய் முட்டாள், நீ ஏன்டி காரை விட்டு இறங்கி வந்த?” பவன்யாஷ் அவளை கடிந்து கொள்ள, “ஆத்திரப்பட்டு எதுவும் செஞ்சிடாதீங்க… அடிதடி ஆகிடுச்சுன்னா பெரிய பிராப்ளம் கிரேட் ஆகிடும். சமாதானமா பேசிட்டு போயிடலாம்” அவனுக்கு நிலையை விளக்கி, அங்கே சூழலை சுமூகமாக்க முயன்றாள்.

 

“என்னை அடங்கி போக சொல்லத்தான், இறங்கி வந்தியா?” அந்த சூழலின் இறுக்கத்தில் அவளிடம் எரிந்து விழுந்தான் பவன்யாஷ்.

 

“ஏய், என்னா சீன் காட்ற? சினிமால நீ பெரிய ஹீரோன்னா, நிஜத்தலயும் உன்ன நீயே ஹீரோவா நென்ச்சுக்குவியா?” அவர்களில் ஒருவன் நக்கலாக கேட்க, பவன் தன் கோபத்தை அடக்கியபடி நின்றிருந்தான். சுவாதி பதட்டத்தில் அவனருகில் நின்றிருந்தாள்.

 

“சினிமால நீ பறந்து பறந்து அடிக்கறதெல்லாம் டூப் போட்டு எடுக்கிறது, இப்ப நாங்க உனக்கு காட்ட போறது ரியல் ஃபைட். எப்படி இருக்குனு பார்க்கறயா?” அவர்கள் நெருங்கி வர, சுவாதி, பவன் முன் வந்து நின்று அவர்களைத் தடுத்தாள்.

 

“இப்ப எதுக்கு நீங்க தேவையில்லாம அவர் கூட பிரச்சனை பண்றீங்க? உங்களுக்கு என்னதான் வேணும் சொல்லுங்க பேசி தீர்த்துக்கலாம்.”

 

அவள் குறுக்கே வந்து சமாதானம் பேசுவதைக் கண்டு பவன் சலிப்பாக தலையசைத்துக் கொள்ள, அவர்கள் அவளின் சமாதானத்திற்கு இணங்குவது போல இளித்து தலையசைத்தனர்.

 

“இந்த டீலிங் செம டக்கரா இருக்கே… வண்டிய இடிச்சதுக்கு உன் ஹீரோ வந்து சாரி கேக்கணும்.” 

 

“சாரி தானே,‌ அவருக்கு பதில் நான் கேக்குறேன் சாரி சார். அவர் ஏதோ தெரியாம தான் உங்க வண்டிய இடிச்சுட்டாரு. வேணும்னு யாராவது வண்டிய இடிப்பாங்களா சொல்லுங்க.” அவள் நியாயம் பேச,

 

“நாங்க வேணும்னு தான் இடிப்போமே…” என்று கேலியாக சிரித்தபடி அவளை இடிப்பது போல ஒருவன் முன் வர, பவன்யாஷ் அவளை தன் பக்கம் இழுத்து தன்னோடு நிறுத்திக் கொண்டான்.

 

“அட ஹீரோ சார், கேமராவுக்கு வெளியேயும் ஹீரோயிசம் காட்டுறாரு பாருப்பா…” அவர்கள் அதற்கும் கேலி பேசி ஊளையிட்டு சிரித்தனர்.

 

“உன் டேமேஜ் ஆன வண்டிக்கு எவ்வளோ வேணும்னு‌ கேட்டு வாங்கிட்டு போயிட்டே இரு, சும்மா டைம் வேஸ்ட் பண்ணாத.” பவன்யாஷ் எச்சரித்தான்.

 

“ம்ம் ட்டூ லேக்ஸ்.” ஒருவன் இரண்டு விரல்களை நீட்டி கணக்கு சொல்ல,

 

கீழே கிடந்த வண்டியை ஒரு பார்வை பார்த்த பவன், “இந்த டப்பா வண்டிக்கு ரெண்டு லட்சமா?” என்று கேட்டு அவர்களை வெறுப்பேற்றினான்.

 

“ஏய் என்னா…” அவர்கள் எகிறிக் கொண்டு சண்டைக்கு வர, 

 

“அச்சோ சண்டை வேணாம்…” அவர்களிடையே அவசரமாக குரல் கொடுத்த சுவாதி, “ரெண்டு லட்சம் தானே பாஸ் கொடுத்து விடுங்க. உங்க இமேஜ்க்கு இப்படி லோக்கல் பீப்புள்ஸ் கூட சண்டைக்கு நிக்கலாமா?” என்றாள்.

 

அவள் இமேஜ் என்று சொன்னதால் சற்று நிதானமானவன், “செக் எடு” என்றான் அவளிடம் வேண்டா வெறுப்பாய்.

 

அவள் காருக்குள் இருந்து செக்புக்கை எடுத்துக் கொடுக்க, பவன்யாஷ் வேண்டுமென்றே தவறான கையெழுத்திட்டு, அந்த முட்டாள்களிடம் நீட்டினான்.

 

அதை சிரித்தபடி வாங்கியவன், “என்ன ஹீரோ உங்கிட்ட ஜீபே, போன்பே எல்லாம் இல்லயா? செக்க நீட்டுற.” அதற்கும் கலாய்த்துவிட்டு, தன் சட்டை பாக்கெட்டில் செக்கை பத்திரப்படுத்திக் கொண்டான்.

 

அதற்குமேல் அவர்களைப் பார்க்க சகிக்காமல் இருவரும் காரில் ஏற முயல, “ஏய்ய்… அதுக்குள்ள எங்க எஸ்ஸாக பாக்குற. இன்னும் எங்க டீலிங் முடில.” என்றதும்,

 

“அதான் சொலையா ரெண்டு லட்சம் ஆட்டைய போட்டீங்கல்ல, இன்னும் என்னடா வேணும்?” சுவாதி அலுத்துப்போய் கேட்க,

 

“நீதான் வேணும் வா வா.” என்றவன் அவள் கைப்பிடித்து இழுக்கவும், அவளுக்கு உடல் பதறியது.

 

“ஏய் ச்சீ விடுங்கடா…” அவன் பிடியை வேகமாக உதறி பின்வாங்கினாள்.

 

“அட ரொம்ப அல்ட்டிக்காதடீ, எத்தனை நாளைக்கு அந்த ஹீரோக்கு‌ மட்டும் கம்பெனி குடுப்ப, இன்னிக்கு எங்களுக்கு கம்பெனி கொடு.” என்றபடி ஒருவன் நெருங்க,

 

“நாங்க பார்க்க தான் கரடு முரடு, பொண்ணு விசயத்துல செம ஸாப்ட், வந்து பாரு.” இன்னொருவனும் நெருங்கி வர, சுவாதி பயத்தில் நடுங்கி போய் பவனின் பின் முதுகோடு ஒன்றிக் கொண்டாள்.

 

“பெரிய இவ மாதிரி அந்த கழிச்சடைங்க கிட்ட டீல் பேசுன இல்ல… போடி உன் மாமனுங்க கூப்புறானுங்க பாரு.” பவன்யாஷ் கடுகடுத்து அவளிடம் சொன்னதில், மொத்தமாய் அவள் உடல் வெலவெலத்துப் போனது. 

 

தன்மீதிருக்கும் வெறுப்பில் பவன் தன்னை நிர்க்கதியாக விட்டுவிடுவானோ, என்ற பயம் எழும்போதே, ‘அவன் அப்படி செய்கிறவன் தான்’ என்று அவள் மூளை அடித்துச் சொன்னதில், அவள் கண்கள் கலங்கி உதடுகள் துடிக்க அழுதேவிட்டாள்.

 

தன் முதுகுக்கு பின்னால் தேம்பியவளைப் பிடித்து முன்னால் இழுத்தவன், கார் கதவை திறந்து, காருக்குள் அவளை தள்ளிவிட்டு கதவை மூடினான். அவன் பிடித்து தள்ளியதில் ஏற்பட்ட வலியில் அவளுக்கு அழுகை தான் அதிகமானது. ஏனோ தான் அநாதரவாக நிற்பது போல் அவளுள் சூனியம் சூழ்ந்து கொண்டது.

 

“அட அட… இவரு ஹீரோ, அது தான் ஹீரோயின், நாம வில்லங்க, இந்த ஹீரோ நம்ம கிட்ட ஃபைட் பண்ணி ஹீரோயின காப்பாத்தி கிஸ் அடிப்பாரு…” அவர்கள் மேலும் கிண்டலடித்து கெக்கரித்து சிரிக்கவும்,

 

பவன் தன் கைச்சட்டையை மடித்துவிட்டபடி, கீழே உருண்டு கொண்டிருந்த ஹெல்மெட்டை கையில் எடுத்துக் கொண்டான்.

 

சற்றும் பயம் காட்டாத அவனது நிமிர் தோரணையில், அவர்கள் முகங்கள் இருண்டன. “ஏய்… சொம்மா எங்களோட மோதி உயிரை விட்டுடாத, இங்க உன்ன காப்பாத்த எவனும் வரமாட்டான். நாங்க அடிச்சு மலைல இருந்து தூக்கி போட்டா, உன் எலும்பு கூட மிஞ்சாது. இவள விட்டா உன் ரேஜ்ஜுக்கு ஆயிரம் பிகரு மாட்டும். இவள விட்டு போயிட்டே இரு…” அவர்கள் எச்சரிக்கையை சற்றும்‌ மதிக்காதவன், கையிலெடுத்த ஹெல்மட்டை தூசு தட்டி தன் தலையில் கவிழ்த்துக் கொண்டான்.

 

“நடிகன் டா, முகத்துல தப்பி தவறி காயம் எதுவும் படக்கூடாது பாரு அதான். சேஃப்டி முக்கியம் பாஸ்.” என்று பவன்யாஷ் வசனம் பேச, கடுப்பானவர்கள், “நீ செத்தடா இன்னிக்கு…” என்று அவன் மேல் பாய்ந்தனர்.

 

தடிதடியாய் மூன்று முரடர்கள், இவன் ஒருவன் மட்டும். அதுவரையில் தன் துன்பத்தில் உழன்று இருந்தவள், இப்போதுதான் அவனை திகைத்துப் பார்த்தாள்.

 

அரை போதையில் வெறுங்கையில் வீராப்போடு அவனை அடிக்க பாய்ந்தவர்களிடம் இருந்து விலகியவன், அங்கு கிடந்த இரண்டு மது பாட்டில்களை இரண்டு கைகளிலும் எடுத்துக் கொண்டான். அவனை தாக்க வந்த ஒருவனின் கழுத்தில் அடிக்க, அந்த பாட்டில் உடைந்த சில்லுகளில் அவன் கழுத்துப்பட்டையில் ரத்தம் பெருக்கெடுத்து, அப்படியே சுருண்டு விழுந்தான்.

 

இதை மற்ற இருவரும் எதிர்பார்கக்காமல் ஒரு நொடி அதிர்ந்து, அவனை ஆவேசமாக தாக்க போக, அடுத்த பாட்டிலை இன்னொருவன் மண்டையிலடித்து கபாலத்தை பிளந்திருந்தான் பவன்யாஷ்.

 

“மச்சீ… டேய்… உங்களுக்கு ஒன்னில்லயே…” கூட்டாளிகளின் நிலை கண்டு பதறியவன், கீழிருந்த பாட்டிலை இப்போது அவன் கையில் எடுத்து பவனை தாக்கவும், அவன் ஹெல்மெட்டில் பட்டு பாட்டில் உடைந்து சிதறியது.

 

அதில் ஒரு நொடி திகைத்து, அவனை தன் கட்டை கையால் தாக்க போக, அவனது‌ தாக்குதலை பவன் லாவகமாகவே இரண்டு மூன்று முறை தடுத்து, அவன் முகத்தில் வாட்டமாக குத்துவிட, அவன் மூக்கில் இருந்து பொலபொலவென இரத்தம் வழிய, அவனும் அப்படியே சுருண்டு விழுந்தான்.

 

“நாலு அடிக்கு தாங்கல நீங்கெல்லாம் ரௌடிங்க த்தூ… நாங்க கேமரா முன்னாடி ஹீரோவா நிக்க நிஜத்துல எவ்வளோ ஒர்க்அவுட் பண்றோம்னு உங்கள‌ போல சொனாபுனாக்கிகெல்லாம் எங்கடா தெரிய போகுது? சும்மா கேமரா முன்னாடி மேக்கப் போட்டு‌ நின்னா மட்டும் ஜனங்க ஏத்துப்பாங்கன்னு நினச்சியா… உங்களை எல்லாரையும் கைத்தட்ட வைக்கறோமில்ல அதுல இருக்குடா எங்களோட உழைப்பு.”  

 

வலியில் முனகியவர்களிடம் பேசயபடியே தன் கையைத் துடைத்துவிட்ட துணியை அங்கேயே எறிந்துவிட்டு, காரில் ஏறி வேகமாக அங்கிருந்து பறந்தான்.

 

***