என் முன்னாள் காதலி 9(2)

என் முன்னாள் காதலி 9(2)

 

அவன் முகத்தின் இறுக்கத்தைக் கவனித்து சுவாதி சத்தமாக முச்சு கூட வெளியே விடாமல் வாய்பொத்தி கொண்டாள். இப்போது அவள் எது பேசினாலும் அவனிடம் வாங்கிக் கட்டிக் கொள்வாள் என்பது திண்ணம்.

 

வேகமாக வெகுதூரத்தைக் கடந்தவன், வழியில் ஒரு டீக்கடையில் சிலர் இருக்க, அதை தாண்டி இருந்த புன்னைமர நிழலில் காரை நிறுத்தினான்.

 

இப்போது தான் இனி எந்த ஆபத்தும் இல்லை என்று அவன் மனது சற்று அமைதியானது. ஆனாலும் குறையாத ஆத்திரத்துடன் அவள்புறம் திரும்பியவன், “முட்டாள் முட்டாள்… அந்த தேட் ரேட் பொறுக்கிங்க கிட்ட டீலிங் பேசறாளாம்… கொஞ்சநஞ்சமாவது அறிவிருக்காடி உனக்கு? 

பெரிய இவ மாதிரி முன்னால போய் பேசுன இல்ல, அவனுங்க கூப்புடும்போது போக வேண்டியதுதான. எதுக்குடி அப்ப மட்டும் என் பின்னாடி ஒளிஞ்சிட்டு நின்ன?” வந்த ஆத்திரத்தில் அவள் இரு தோள்களையும் பிடித்து குலுக்கி கேட்டான்.

 

அதுவரை தன்னை அடக்கிக்கொண்டு இருந்தவள், இப்போது தேம்பி தேம்பி அழலானாள்.

 

“அட ச்சீ அழுது காட்டாத, உன்ன அடிச்சு போட்டுட போறேன்…” அவன் அடிக்க கையோங்கி வர, அதை சற்றும் பொருட்படுத்தாமல், அவன் மார்பில் விழுந்து மேலும் தேம்பினாள். அவள் அழுகையில் அவனுக்கு சற்று ஆத்திரம் மட்டுப்பட்டது. 

 

‘அவள் அதிகம் பயந்து இருக்கிறாள் போல, இல்லையெனில் இப்படி உடைந்தழுபவள் இல்லை, கல்லாய் இறுகி நிற்கும் வீம்புக்காரி!’ அவளைப் பற்றி தெரிந்தவன் ஆதலால், அவள் பின்னந்தலையை ஆதரவாக தட்டிக் கொடுத்தான். 

 

“இப்ப எதுக்கு இந்த அழுகை? இனி ஆபத்தில்ல விடு.” என்று இதமான குரலில் ஆறுதல் சொன்னவன், அவள் அழுகை சற்றும் குறையாமல் இருக்க, “ரொம்ப பயந்துட்டியா?” பரிவான குரலில் கேட்டான்.

 

அதற்கு இல்லையென்று தலையசைத்தவள், “நீ… நீங்க… என்மேல இருக்க… வெறுப்புல… என்னை அவனுங்ககிட்ட… விட்டுடுவியோன்னு… பய… பயந்துட்டேன்.” அவள் தேம்பியபடி அவன் மார்போடு ஒன்றிக் கொண்டு சொன்னதில், அவள் தலையை வருடிக் கொண்டிருந்த அவன் கரம் அப்படியே அதிர்ந்து அந்தரத்தில் நின்றது.

 

‘தன்னை அவள் அத்தனை கீழானவனாக நினைத்து இருக்கிறாளா?’ என்ற எண்ணத்திலேயே அவன் உடல் விறைத்து இறுகியது.

 

அவன் உடல் கடினமானதை உணர்ந்தவள், தயங்கி அவன் மேலிருந்து விலகி சங்கடத்துடன் அவன் முகத்தை ஏறிட்டாள்.

 

“உன்ன கூட்டி கொடுக்கற அளவுக்கு என்னை அவ்வளோ கேவலமா நினச்சுட்ட இல்லடி? உன்ன இப்பவே இங்கயே கழுத்த நெறிச்சி கொன்னா என்னனு இருக்குடீ எனக்கு.” கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்து துப்பினான் பவன்யாஷ்.

 

அவனின் இத்தனை ஆவேசம் ஒருவகையில் அவளுக்கு ஆறுதலாகவே இருந்தது. “நீ என்னை கொன்னாலும் ஏத்துக்கிறேன்டா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ என்னை விட்டுடுவியோன்னு நான் அனுபவிச்ச வலிய விட அது அதிகமா இருக்காது.” என்று பரிதவித்து மொழிந்தாள்.

 

பவன் முகத்தை திருப்பிக் கொண்டான். அவனுக்கு இன்னும் மனம் ஆறவில்லை. அவள் எப்படி தன்னை அப்படி நினைக்கலாம் என்று உள்ளம் கொதித்தது.

 

அவள் அவனது கையைப் பிடிக்க, வெடுக்கென உதறிக் கொண்டவன், “என்னை தொட உனக்கு எந்த தகுதியும் இல்ல.” என்று கத்தினான்.

 

“நான் தகுதி இல்லாதவளாவே போறேன் விடு. உன் கைல அடிப்பட்டு இருக்கு பாரு.” என்றவள் அவன் கையைப் பிடித்து இழுத்து பார்த்தாள். அவன் வலது புறங்கையில் பாட்டில் சில்லுகளில் காயம் ஏற்பட்டு இருந்தது. 

முதலுதவி பெட்டியை திறந்து அவன் காயத்தை சுத்தப்படுத்தி மருந்திட, அவன் வேண்டா வெறுப்பாக அவளிடம் தன் கையை ஒப்புக் கொடுத்து, தகிக்கும் நெஞ்சோடு பல்லை கடித்துப் பொறுத்திருந்தான்.

 

“இவ்வளோ காயத்தோடவா இத்தனை நேரம் காரோட்டிட்டு வந்த? நீ நகரு, வீடு வரைக்கும் நான் டிரைவ் பண்றேன்.” என்றவள் ஓட்டுநர் இருக்கைக்கு மாறிக்கொள்ள, அவன் இப்போதைய மனநிலையில் எதுவுமே பேசவில்லை.

 

அவனுக்குள் ஆத்திரம், கோபம், ஆற்றாமை… அவளுக்காக தனது ஒவ்வொரு செல்லும் ஏங்கி ஏங்கி துடித்திருக்க, அவள் மட்டும் தனக்கான எந்தவித ஏக்கங்களும் இன்றி, தன்னோடிருந்த அனைத்தையும் மறந்து, காதலை வேரோடு பிடிங்கி எறிந்துவிட்டு, முன்பு எதுவுமே நடவாவவது போல் காட்டிக்கொள்வதை பொறுக்க முடியாமல் அவன் நெஞ்சுக்குள் கனன்று கொண்டிருக்க, இப்போது அவள் அவனை நம்பாமல் பேசியது வேறு அவனது ரோஷத்தை சீண்டி விட்டிருந்தது.

 

‘எப்படி எப்படி அவள் தன்னை அப்படி நினைக்கலாம்? தன்னை பற்றி அத்தனையும் தெரிந்திருந்தும்…’ அவன் காதல் மனம் ஒருபுறம் ஆற்றாமையில் வெதும்பிக்கொள்ள, மறுபுறம் அவன் அறிவு விழித்துக்‌ கொண்டு அவனை சாடியது.

 

‘உன்னபத்தி எல்லா தெரிஞ்சதால தான்‌, நீ என்ன பண்ணாலும் அவ அதை ரொம்ப சாதாரணமா எடுத்துக்குறா… இத்தனை நாள்ல அவ‌ உனக்காக கொஞ்சமாவது அசஞ்சி கொடுத்திருக்காளா? நீதான்… நீ மட்டும் தான், அவளுக்காக உருகுற, மருகுற, தவிக்கிற,‌ கொதிக்கிற… உனக்கு அவகிட்ட என்ன தேவைன்னு உனக்கே தெளிவா தெரியல. 

 

ஆனா, அவ தெளிவா இருக்கா, இப்போதைக்கு அவளுக்கு பணத்தேவை மட்டும்தான். உன்கிட்ட நேக்குபோக்கா அடங்கி போயி, அவளுக்கான சம்பளத்தை சொலையா சம்பாறிச்சிக்கிறா. நீயும் அவளுக்காக கொட்டிக் கொடுக்கற. அந்த பணம் உன்கிட்ட இப்ப கொட்டி கிடக்கறதால தான் உன்கூட அவ இருக்கா… இல்லனா, உன்ன கண்டுட்டு கூட இருக்கமாட்டா… முன்ன‌ எதை வச்சு அவ உன்னை கேவலப்படுத்திட்டு போனானு நீ இன்னும் மறக்கல இல்ல…’ அவனுக்குள் நடந்த வாதத்தில் அவன் ஆத்திரம் ஏறிக்கொண்டு இருந்தது.

 

அவள் இன்னும் மாறவில்லையா? அவளின் சுயநலத்திற்காக இந்தமுறையும் நான் பலியாகிக் கொண்டிருக்கிறேனா? அவள் தன்னில் ஏற்படுத்திய அளவுக்கு தான் அவளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா!’ என்று எண்ணும்போதே அவன் சுயம் அங்கே அடிப்பட்டு போனது.

 

அவன் பங்களாவின் முன் காரை நிறுத்திவிட்டு சுவாதி இறங்க முயல, அவள் பின்னங்கூந்தலை கொத்தாக பிடித்திழுத்து, தன்புறம் அவள் முகத்தை திருப்பிய பவன்யாஷ், அவள் சுதாரிக்கும் முன்னே வன்மையாக அவள் இதழ் கொய்தான். 

 

அவள் மிரண்டு அவனை விலக்கித் தள்ள முயல, அவனது இதழணைப்பின் வேகம் கூடிக்கொண்டே போனது. அவனுக்குள் ஆற்ற முடியாத கோபத்தின் தண்டனையை எல்லாம் அவள் இதழ் வழியே இறக்கி கொண்டிருந்தான். அவளின் மென்மையான பலவீனத்தை தன் பலமாக மாற்றிக் கொண்டிருந்தான். 

 

பவன் தன்னிடம் இத்தனை முரட்டுத்தனமாக நடந்து கொள்வதை அவளால் நம்பவும் முடியவில்லை. அவனை தடுக்கவும் முடியவில்லை. செயல் மறந்து அவன் முற்றுகையில் திணறிக் கொண்டிருந்தாள். அவள் தொண்டை வரை ஈரப்பதம் வற்றிப்போக, அவள் நெஞ்சாங்கூடும் உலர்ந்து போன உணர்வு. 

 

அவன் கூர் பற்களில் கடிப்பட்டு அவளிதழில் கசிந்த இரத்தத்தின் சுவை கூட, அவனுக்குள் போதை கூட்டுவதாய் இருக்க, அந்த போதைக்கு முன், அவனது கோப ஆவேசம் எல்லாம் மடிந்து போய்கொண்டிருந்தது. அவளுக்குள் இன்னும் இன்னும் ஆழமாய் மூழ்கி போக ஆசை கிளர்ந்தது அவனுக்குள்.

 

அவள் இடை பற்றி தன்னிடம் இன்னும் சேர்த்துக் கொண்டவன், “முடியலடி என்னால…” தவித்த குரலில் அவளில் தடம்புரண்டு முணுமுணுத்தான்.

 

“ம்…ஹூம்” அவளிடம் பேச்சில்லை. அவனிடம் இத்தனை வேகத்தையும் இத்தனை நெருக்கத்தையும் அவள் இதுவரை கண்டதில்லை. முன்பு, சிறு கன்னத்து முத்தத்திற்கே அத்தனை கண்ணியம் பார்த்தவன்,‌ இப்போது கட்டுத் திட்டங்கள் தாண்டி தன்னில் படையெடுக்கும் அவன் தாக்குதல்களில், எதிர்த்து போராட வேண்டியவளோ தோற்றுக் கொண்டிருந்தாள்.

 

அவனுக்கு இந்த முத்தமும் இத்தனை நெருக்கமும் மட்டும் போதவில்லை போல, “எனக்கு நீ வேணும் ஸ்ரீ… நோ மட்டும் சொல்லாத ப்ளீஸ்…” மூச்சு முட்டும் நெருக்கத்தில் அவளை இருத்தி வேண்டினான்.

 

அவன் யாசிப்பில் அவள் விழியோரம் கண்ணீர் கோடிட்டது. “அதுக்கு… நீ என்னை… கொன்னுடலாம்…” வரண்ட தொண்டை அடைக்க, வலித்த இதழ்களை முயன்று அசைத்து சொன்னவளின் முன்கழுத்தை அவன் வலக்கரம் அழுத்திப் பற்றி தன் புறம் இழுத்திருந்தது.

 

“நீதான் என்னை கொல்றடீ… உனக்கு நான் கிஸ் பண்ணா பிடிக்கும் தான… அப்புறம் எது தடுக்குது உன்ன…” அவன் மீளாத கிறக்கத்தோடு கேட்க, அவள் கண்ணீரோடு மறுத்து தலையசைத்தாள்.

 

தன்னை நிதானித்துக் கொண்டவன், அவள் கழுத்திலிருந்து தன் கரத்தை விலக்கி, அவள் முகத்தில் கலைந்து விரவி இருந்த, மயிரிழைகளை ஒதுக்கி விட்டான். 

 

“அடம்பிடிக்காத சுவி, உனக்கும் என்னை பிடிக்கும் தானே! இதுக்கு மட்டும் ஒத்துக்கோ, இனி உன்ன எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன்… உன்கிட்ட மட்டும் என் ஃபீலிங்ஸ்ஸ என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியல. அதுவும் இப்ப…” என்றவன் அவள் முகம் முழுவதும் சின்ன சின்ன முத்தங்களை இறைத்தான்.

 

அவள் உடலும் மனமும் மொத்தமாக பலமிழந்து போயிருந்தது. அவளுக்கும் அவனை பிடிக்கும் தான். அவனிடம் பைத்தியமாய் அவன்மேல் பித்தேறி அவனை காதலித்திருக்கிறாள். அதெல்லாம் அப்போது, இப்போது எல்லாமே மாறிப் போயிருந்தது.‌ காலம் அவனையும் அவளையும் இருவேறு முனைகளில் தூக்கி எறிந்திருந்தது. முறிந்து போன காதலை புதுப்பிக்கவோ அல்லது இச்சையின் வேகத்தில் இணங்கி, அழகான நினைவுகளாய்‌ பரவி கிடக்கும் அவர்கள் காதலின் புனிதத்தை கலங்கப்படுத்தவும் அவளுக்கு மனதில்லை.

 

“இதெல்லாம் தப்புடா… நீ என்னை ஏதாவது பண்ணா… அப்புறம் நான்… உயிரோட இருக்க மாட்டேன்.” பலமற்று முனங்கியவளை ஆழப் பார்த்தவன், அவளை அங்கேயே உதறிவிட்டு காரிலிருந்து வேகமாக வெளியேறி சென்றுவிட்டான்.

 

சுவாதி முகம் பொத்தி உடைந்தழுது விட்டாள்.‌ தன்னிலை இத்தனை கீழ்மைப்பட்டு போகுமென்று அவள் கனவில் கூட நினைத்ததில்லை. தன் விதியை இத்தனை மோசமாக மாற்றி எழுதியது யாரென்று அவள் மனது வெதும்பி கதறியது. 

 

தங்களுக்கிடையேயான உறவை வெறும் உடல் இச்சையை தீர்த்துக்கொள்ள மட்டும் என்றாக்கி கொள்வதில் அவளுக்கு நிச்சயம் உடன்பாடில்லை. அப்படி தரங்கெட்டு போகும் வம்சத்தில் பிறந்தவளும் இல்லை அவள். இங்கிருந்து உடனே விலகி போய்விட தோன்றியது அவளுக்கு. இனியும் பவன்யாஷிடம் வேலையில் இருப்பது சரியல்ல என்ற அவசர முடிவிற்கு வந்திருந்தாள்.

 

ஆனால், இந்த நட்டநடு இரவில் அவள் எங்கென்று போக முடியும்? காரை அதன் தரிப்பிடத்தில் நிறுத்தியவள்,‌ அவன் வீட்டுக்குள் தளர்ந்து நடந்தாள். அந்த பங்களாவே இருளடர்ந்து கிடந்தது. பவன்யாஷின் மாடி அறையில் மட்டுமே வெளிச்சம் தெரிந்தது. அந்தப்பக்கமே அவள் போகவில்லை. கீழே அவளுகென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டாள்.

 

***

 

மறுநாள் விடியற்காலையில், வியர்த்து வழிய தனது வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தான் பவன்யாஷ். 

 

அவன் காலையில் வழக்கமாக பருகும் சத்து பானத்தை தயாரித்து எடுத்து வந்தவள்,‌ தயங்கி தயங்கி அவனிடம் வந்தாள்.

 

அவர்கள் சொந்த ஊரில் திருவிழா என்று, குணசேகரனும், மங்கையற்கரசியும் நேற்றுதான் கிளம்பி இருந்தனர். அவர்கள் திரும்ப வரும் வரை, பவன்யாஷை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை வழக்கம்போல சுவாதி தான் ஏற்றிருந்தாள். நேற்று இரவு அவர்கள் வீட்டில் இருந்திருந்தால், பவன்யாஷ் தன்னிடம் அப்படி நடந்து கொண்டிருக்க மாட்டேனே என்று அவள் மனது பரிதவித்து போயிருந்தது.

 

விழிகள் ரத்தமாய் சிவந்து, உதடுகள் தடித்து வீங்கி, முகம் சோர்ந்து, தன் முன்னால் வந்து நின்றவளை, அசையாது பார்த்தபடி நிமிர்ந்து நேராக அமர்ந்தான் பவன்யாஷ்.

 

அவள் முகத்தைப் பார்க்கும்போதே எத்தனை மிருகத்தனமாக அவளிடம் நடந்து கொண்டிருக்கிறான் என்பது புரிய, அவனுக்கே அசிங்கமாக இருந்தது. ‘தன்னை ஏன் இவள் இத்தனை கொடூரனாக மாற்றி வைக்கிறாள்?’ என்று அந்த கோபத்தையும் அவள்மீதே திணித்தான்.

 

“இப்படி பார்க்க ரொம்ப அழகா இருக்க, போ… போய் நான் தான் உன்ன இப்படி பண்ணேன்னு வெளியே எல்லாருக்கும் சொல்லு போ.” அவன் கத்த,

 

அவள் அமைதியாகவே நின்றாள்.

 

“அப்படி என்னடி பிடிவாதம் உனக்கு? முன்ன தான் நான் வசதியில்லாதவன்னு என்னைவிட்டு போன… இப்ப என் வசதிக்கு என்ன குறை. நீயே என் கீழ வேலை பார்க்கிற அளவுக்கு வளர்ந்து நிக்கிறேன். இன்னும் என்ன தடுக்குது உன்ன?” 

 

அதற்கும் அவள் பதில் தரவில்லை.

 

“இத்தனை நாள் உன்கிட்ட நெருங்கி இருப்பேனா… உன்ன தப்பா டச் ஆவது பண்ணி இருக்கேனா? நைட் என்னவோ, உன்ன ஹக் பண்ண தோணுச்சு, கிஸ் பண்ண தோணுச்சு, உன்ன முழுசா எடுத்துக்கணும்னு தோணுச்சு… நான் கேட்டும் நீ எப்படி என்னை மறுக்கலாம்?” 

 

அவன் ஆத்திரம் அடங்காமல் கத்தினான். நேற்று இரவு முழுவதும் துளி கூட தூங்க முடியாமல், பைத்தியமாய் அவனை ஆக்கி வைத்திருந்தாளே! என்ற‌ ஆற்றமுடியாத கோபம் அவனுக்குள்.

 

அவன் கத்தலுக்கும் நிமிர்ந்து அவனை பார்க்காமல், பார்வையைத் தாழ்த்தி மௌனமாக நின்றிருந்தாள் சுவாதி.

 

“ஏன் இப்படி நிக்கிற? என்ன வேணும் உனக்கு இப்ப?” 

 

“நான் வேலைய விட்டு போறேன்… இனியும் இங்க வேலை செய்யறது சரியில்ல” அவள் குரல் நேற்றை போலவே முனங்கலாக வந்தது.

 

“ஓ மேடம்க்கு ரோஷம் பொத்துக்கிட்டு வந்துடுச்சா? நீ போயிட்டா என் வொர்க்கெல்லாம் யாரு, உன் அப்பனா வந்து பார்ப்பான்?” என்று கேட்டான் காரமாய்.

 

அவள் நிமிர்ந்து அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தாள்.

 

அதில் முகத்தை திருப்பியவன், “அதெல்லாம் நீ நினைச்சதும் வேலைய விட்டு போக முடியாது… என்னை விட்டும் போக முடியாது” என்றான் அழுத்தமாக.

 

“நீ தப்பு பண்ற… என் தனா இப்படியெல்லாம் யோசிக்க மாட்டான். என்னை கஷ்டப்படுத்தவும் மாட்டான்.” சுவாதி சொல்ல,

 

“உன் தனாவா? அவனை தான் தூக்கிப்போட்டு போயிட்டல்ல… அப்ப நான் இளிச்சவாயினா இருந்தததால தான என்னை எத்திவிட்டு போன… அப்ப மாதிரி இப்பவும் நான் முட்டாளா இருப்பேன், என் தலையில மொளகா அரைச்சு உன் காரியத்தை சாதிச்சிக்கலாம்னு நினச்சியா? 

 

ஆமா, மிஸ்டர் ஈஸ்வரபாண்டி இன்னும் ஜெயில்ல தான இருக்காரு. முன்ன தங்கபஸ்பம் சாப்பிட்ட மனுசன்,‌ இப்ப ஜெயில் சோறு திங்குறாரில்ல… காலம் எப்படி மாறுது பார்த்தியா? பாவம், உன் செல்ல அப்பா, அவர வெளியே கொண்டு வரணுமில்லயா? அதுக்கு உனக்கு பணம் வேணுமே,‌ என்ன பண்ணுவ?” பவன்யாஷ் கிண்டல் போலவே கேட்க, அவள் அமைதியாகவே நின்றிருந்தாள்.

 

தன் தந்தையை தண்டனையிலிருந்து எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என அத்தனை அலைந்து திரிந்தாள். ஆனாலும் எதுவுமே ஆகவில்லை. இப்போது அவர் கொலையாளி பட்டத்தோடு சிறையில் கிடக்கிறார். பெற்ற மகளாய் அவருக்காக இவளால் ஒன்றுமே செய்யவில்லை. சிறு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை.

 

“சரிவிடு, ஜெயில்லனாலும் அவருக்கு மணியடிச்சா மூணு வேளை சோறு நிச்சயம். ஆனா கண்ணனோட கதி…?! பாவம் சின்ன பையன். அவன் ஹாஸ்டல்ல தங்க, சாப்பிட, படிக்க, அவனோட எதிர்காலத்துக்கு… எல்லாத்துக்கும் சேர்த்து காசு வேணுமில்ல… இங்கிருந்து வேலையவிட்டு போன, எவன் உனக்கு வேலை கொடுக்க தயாரா இருப்பான், அதுவும் நீ படிச்சு வச்சிருக்க ஒத்த டிகிரிக்கு ம்ம்?” அவளை நோகடிக்கவென்றே அவன் பேச பேச, அவள் பதிலின்றி தான் நின்றாள். 

 

தனக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று தெரிந்திருந்தால், படிப்பையாவது விடாது பற்றிக்கொண்டு இருந்திருப்பாள். அப்போதைய அலட்சியம் ஒரு டிகிரியோடு போதும் என்று விட்டிருந்தாள். தன் முட்டாள்தனங்களை எண்ணி அவள் மாய்ந்து போயிருந்தாள்.

 

எழுந்து அவளருகில் வந்தவன் அவள் காதருகில் குனிந்து, “நைட் மட்டும் நீ ஓகே சொல்லி இருந்தா… உனக்கு தேவையான ஃபுல் அமௌன்ட்டையும் மொத்தமா நானே கொடுத்திருப்பேன்.” அவன் ரகசியம் போல சொல்ல, அவள் நெஞ்சம் அழுத்த, கண்கள் கலங்கி வழிந்தன.

 

“இப்பவும் பிராப்ளம் இல்ல… நீ வேலை தேடி அலையறத்துக்கு பதில், ஒரே ஒரு நாள் முழுசா என்கூட இருக்கேன்னு சொல்லு, உனக்கு தேவையானதை விட அதிகமாவே தரேன்.” அவளை உயிரோடு குத்தி கிழிக்கவென்றே, வன்மத்துடன் கொல்லும் வார்த்தைகளை உதிர்த்தான் அவன்.

 

அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் வெளியே ஓடியவளை, குரூரமாக பார்த்து நின்றவன், ஏதோ விழுந்து உருளும் சத்தம் கேட்டு, வெளியே ஓடிவந்து பார்த்தான்.

 

அழுதுகொண்டே வெளியே ஓடிவந்த சுவாதி, கால் இடறி படிகளில் உருண்டு கீழே விழுந்து கிடந்தாள்.

 

***