என் விழியில் நீ இருந்தாய் 5

IMG_20211105_201017-e8ee941c

என் விழியில் நீ இருந்தாய் 5

 

 

பயணங்கள் எப்போதுமே இனிதானவை. உடலைத் தழுவிச் செல்லும் குளிர் காற்றும் ஜன்னலோர இருக்கையும் காதுகளில் ரீங்கரிக்கும் இளையராஜாவும் சேர்ந்த தனிமைப் பயணம் சொர்க்கம்.

அதுவே நண்பர்களோடு இணைந்து கலகலப்பும் ஆர்ப்பரிப்புமாய், அதிரும் இசையோடு இணைந்த பயணங்கள் புத்துணர்ச்சி தருபவை.

உற்றார் உறவினர்கள் இணைந்து கட்டுச்சோறு கட்டிக்கொண்டு, பேச்சும் கும்மாளமுமாய் போகும் பயணங்கள் மனநிறைவைத் தரும்.

இப்படி எந்த வகையிலும் சேராதவொரு பயணத்தை மேற்கொண்டிருந்தாள் மதுஜா. அந்த அதிநவீன சொகுசு வாகனத்தின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தாள். கட்டாயத்தின் பேரில் அணிந்திருந்த சீட்பெல்ட் அவளை அசைய விடாமல் பிடித்து வைத்திருந்தது.

காரினுள் சூழ்ந்திருந்த மௌனம் கடுப்பைக் கிளப்ப, முன்னிருக்கையில் அமர்ந்திருந்த பெரியப்பாவைப் பார்த்தாள்.

சபரிவாசன்… முன்னாள் ராணுவ வீரர். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பே  குடும்பத்துக்காக பணியை விட்டு விலகி வந்தவர். இப்போதும் பாகிஸ்தான் பார்டரில் காவலுக்கு நிற்பது போலவே விரைப்பாக அமர்ந்திருந்தார்.

கண்களில் கூர்மை, இலகுவற்ற உடல்மொழி, சுற்றும் முற்றும் லேசர் பார்வை. எப்போதும் அவர் அப்படிதான். ஆனால் பயணத்தில் கூடவா இப்படி இருக்கவேண்டும். கடுப்போடு முகத்தைத் திருப்பி டிரைவர் இருக்கையில் இருந்தவனைப் பார்த்தாள்.

பீம்… அவளுக்கு விபரம் தெரியாத வயதிலிருந்தே அவளது வீட்டின் விசுவாசமான வேலைக்காரன். அவளது பெரியப்பாவுக்கு வலதுகை. அவர் எள் எனும்முன் எண்ணெயாய் நிற்பான். சபரிக்குக் குறையாத விரைப்போடு அமர்ந்து வண்டியோட்டிக் கொண்டிருந்தான்.

அந்த வீட்டில் அவள்மீது சிறிதாவது வாஞ்சை காட்டுபவன் அவன் ஒருவன்தான். எப்போதும் அவளைப் பார்க்க வரும்போதோ அல்லது அவளை அழைத்துச் செல்ல வரும்போதோ அவளது பெரியப்பா தனியாகதான் வருவார். யாரையும் உடன் அழைத்து வந்ததில்லை.

இந்தமுறைதான் முதன் முதலாக பீம் உடன்வந்திருப்பது. ஹாஸ்டல் வாயிலில் பீமைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் முகம் விகசிக்க, “பீமண்ணா…” ஆர்ப்பரிப்போடு ஓடி வந்தவளை அவளது பெரியப்பாவின் பார்வை அமைதியாக்கியது.

“பாப்பு, இதுதான் உன் காலேஜா? இங்கதான் படிச்சியா?” அதிசயித்தவனையும் அவரது பார்வை மௌனியாக்க, அவளது உடைமைகளை வாங்கி டிக்கியில் வைத்தான். அப்போதிலிருந்து இப்போதுவரை மௌனம் மௌனம் மௌனம் மட்டுமே.

“பெரிப்பா, ஜன்னலைத் திறந்து வச்சுக்கவா? இறுக்கமா இருக்கு.” அவளது குரலில் திரும்பி அவளைப் பார்த்தவர், “ஏசியை கூட்டி வைக்கவா மதும்மா?” என்றார்.

ஜன்னலைத் திறக்காதே என்ற பதில் அதிலிருக்க, வேண்டாமென்று தலையசைத்தவள் மௌனமாக தலையைத் திருப்பி ஜன்னலில் பதித்தாள்.

எப்போதும் இப்படிதான். காரணமற்ற நிராகரிப்புகள் அவளுக்குப் பழக்கம்தான். ஆகவே இது அவளை பெரிதாய் பாதிக்கவோ ஏமாற்றத்தை உணர வைக்கவோ இல்லை. ஆனால் வெறுமையாய் உணர்ந்தது மனது.

வேகமாய் ஓடிய மரங்கள், விரைவாய் ஒன்றையொன்று முந்தும் வாகனங்கள், முகம் தெரியாத மனிதர்கள்… வேடிக்கை பார்த்தவளுக்கு அதுவும் சற்று நேரத்தில் சலிப்பைத் தர, காலைத் தூக்கி மேலே வைத்துக் கட்டிக்கொண்டு குறுகி அமர்ந்து கொண்டாள்.

மனம் ஐந்தாண்டு கல்லூரி வாழ்க்கையை ரீவைண்ட் செய்ய ஆரம்பித்தது. எத்தனையோ மகிழ்ச்சியான தருணங்களைப் பரிசளித்த கல்லூரிக் காலம். இனித் திரும்ப கிட்டுமோ…? இந்த பயணம் போலவே வாழ்க்கையும் வெறுமையாய் இனி கழியுமோ…?

மனம் பலவற்றையும் யோசிக்க, ‘இல்லை, என் வாழ்க்கை என் கையில். இந்தப் பயணத்தைப் போன்ற சுவாரஸ்யமற்ற வெற்று வாழ்க்கையை நான் வாழ மாட்டேன். என் மனதுக்குப் பிடித்த வாழ்க்கையை நான் அமைத்துக் கொள்வேன். மனம் இன்ஸ்ட்டன்ட் சபதம் ஒன்றை எடுத்தது.

காட்டில் திரியும் பறவையைப் போல மனம் ஒரிடம் நில்லாமல் பலவற்றையும் யோசிக்க, இறுதியாக முன்னிரவு நிகழ்ந்த நிகழ்வுகளில் வந்து நின்றது.

மண்டபத்திலிருந்து ரதியைப் பாதுகாத்து கடத்தி வரும்போது பின்தொடர்ந்து துரத்திய ரதியின் தந்தையின் வாகனத்தைப் போக்குகாட்டித் தப்பித்ததும், மாறனின் அக்கா குடும்பத்தின் வசம் ரதியை ஒப்படைத்துவிட்டு இவர்கள் கல்லூரி வந்து சேர்ந்ததும் நினைவில் ஓடியது.

பின்தொடர்ந்து துரத்தியவர்களின் பார்வையில் இருந்து தப்பித்து ஓரளவு பாதுகாப்பான தூரம் சென்றபிறகுதான் அனைவருக்குமே ஆசுவாசமானது.

“ஹப்பாடி, ஒருவழியா தப்பிச்சாச்சு. இப்பதான் நிம்மதியா இருக்கு.”

ரதி பெருமூச்சு ஒன்றை வெளியிட, திவ்யாவோ, “உயிரோட நாம வெளிய வந்ததே யார் செஞ்ச புண்ணியமோ? அந்த கொலகாரன் கைல சிக்காம நீங்களும் தப்பிச்சீங்களே? எப்படிக்கா இப்படி ஒரு மாப்பிள்ளைய உங்கப்பா உங்களுக்கு பார்த்தாரு?” படபடப்பு அடங்காமலே ஆதங்கமாய் வினவினாள்.

“ஏன் திவ்யா? அந்த மாப்பிள்ளைக்கு என்ன? அவன் என்ன பண்ணான்?” அப்பாஸ் திவ்யாவைப் பார்த்தான்.

“அப்பூ… கொலைகாரனுங்கடா அவனுங்க? என் கண்ணு முன்னாடியே ஒருத்தனை கன் பாயிண்ட்ல வச்சி மிரட்டிட்டு இருந்தானுங்க. என்ன பிரச்சனை ஏது பிரச்சினை எதுவும் தெரியல. ஆனா அவனுங்க கண்ணுல இருந்த வெறி. என் ஆயுசுக்கும் மறக்க மாட்டேன்டா. தப்பிச்சு வெளிய வர்றவரை கூட நாம உயிரோட வெளிய வருவோம்னு எனக்கு நம்பிக்கையே இல்ல.”

வெகுவாக அதிர்ந்து போனார்கள் அனைவருமே. “என்னடி சொல்ற? நிஜமாவா?” மது பயத்தோடு வினவ,

 “ஆமாம் மது. மாடியில ரதியக்காவ தேடறதுக்காக போனேன்ல, அப்ப ஒரு ரூம்ல அந்த மாப்பிள்ளையும் அவன்கூட இன்னும் ரெண்டு பேரும் சேர்ந்து ஒருத்தனை கன்ன நெத்தில வச்சு மிரட்டிட்டு இருந்தானுங்க.

அப்புறமா என்னைப் பார்த்ததும் அவனைத் திமிரத் திமிர அடிச்சு எங்கயோ இழுத்துட்டு போனானுங்க. அநேகமா கொன்னுருப்பானுங்கனு நினைக்கிறேன்.

அந்த மாப்பிள்ளை என்கிட்ட இங்க நடந்ததை யார்கிட்டயும் சொல்லாதனு மிரட்னான். நான் பயந்து நடுங்கிட்டே ஓடிவந்துட்டேன்.”

திவ்யா சொல்லி முடிக்கவும் அனைவரது முகத்திலுமே அதிர்ச்சி. மதுவுக்கோ பெரும் பயம். “அவன் ஒரு கொலகாரன்னு ஏன்டி முன்னாடியே என்கிட்ட சொல்லல. ஐயையோ! அவன்கிட்ட போய் உங்களுக்கு நல்ல பொண்ணு கிடைக்கும் அப்படி இப்படினு பேசிட்டு வந்திருக்கேனே! என் முகம் அவனுக்கு நல்லா நியாபகம் இருக்கும்ல…  அவன் கட்டிக்க இருந்த பொண்ண கடத்திட்டோம்னு நம்மை பழிவாங்குவானோ?” வெகுவாக பயம் இருந்தது அவள் குரலில்.

“சாதாரணமா பேசல மது. லிட்டர் லிட்டரா ஜொள்ளுவிட்டு வேற பேசியிருக்க. கட்டாயம் தேடி வருவான்.” அப்பாஸ் வேறு நேரம்காலம் தெரியாமல் வாற, மேலும் பயந்து போனாள் மது.

“டேய், ஏன்டா நீ வேற?” அலறியவளைப் பார்த்த ரதி,

“ஏய் மது பயப்படாத. திவ்யா எதையோ பார்த்து தப்பா புரிஞ்சுகிட்டானு நினைக்கிறேன். அவங்க எங்க ஊர்லயே பெரிய ஆளுங்க. மரியாதையான குடும்பம்.

அவங்க தாத்தாவும் பாட்டியும் வந்து பொண்ணு கேட்டாங்கன்ற ஒரே காரணத்துக்காகதான், அதுவரைக்கும் என் லவ்க்கு ஓகே சொல்லிட்டு இருந்த என் அப்பா அப்படியே பல்டி அடிச்சிட்டாரு.

அவ்வளவு பெரிய குடும்பத்துல இருந்து வந்து அவங்களே பொண்ணு கேக்கறாங்க. நீ குடுத்து வச்சவனு என்னை கன்வின்ஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

நானும் பார்த்திருக்கேன். எங்க ஊர்ல அவங்க குடும்பத்துக்கான மரியாதையே வேற. அவங்க வீட்டு பையன் கொலைகாரன்னுலாம் என்னால நினைச்சுகூட பார்க்க முடியல. இது வேற ஏதாவது விஷயமா இருக்கனும்.” ரதி பேசவும்,

“ஆனா நாங்க விசாரிச்சவரை மாப்பிள்ளை பொலிட்டிக்கல் பேக்கிரௌண்டு இருக்கற ஆள்னும், ரவுடினும் சொன்னாங்க ரதி. அதனாலதான் நாங்க உன்னை எப்படியாவது காப்பாத்தனும்னு முடிவு பண்ணி வந்தோம்.” மாறனின் நண்பன் ஒருவன் கூறினான்.

அவனைக் குழப்பமாகப் பார்த்தாள் ரதி. “பொலிட்டிக்கல் பேக்கிரௌண்டு அவங்களுக்கு இருக்குதான். நான் இல்லேங்கல. ஆனா, ரவுடியிசம்லாம் இல்ல. அவங்க தாத்தாவோட ஒத்த வார்த்தைக்கு இப்பவும் ஊரே கட்டுப்படும். எதிர்த்து ஒரு வார்த்தை யாரும் பேச மாட்டாங்க.

அந்த ஊருக்கு யார் பிரசிடென்ட்டா வரனுங்கறதுல இருந்து, அந்த மாவட்டத்துக்கு யார் எம்எல்ஏவா வரனும்ங்கறது வரை அவங்கதான் முடிவு பண்ணுவாங்க. மேபி அதைதான் அப்படி சொல்லியிருக்கனும்.

அந்த மரியாதை அவங்க குடும்பத்துக்கு வழிவழியா வர்றது. அந்த மரியாதைக்கு அவங்க தகுதியானவங்களும் கூட. எங்க ஊர்ல பாதி சொத்து அவங்கள்து…  மீதி அவங்க தானமா குடுத்தது. இன்னைக்கும் அவங்க மேல நன்றியும் விசுவாசமுமா இருக்கறவங்க எங்க ஊர்ல அதிகம்.

அதுமட்டுமில்ல, நீங்க வரலன்னாலும் நானே எப்படியாவது தப்பிச்சு வந்திருப்பேன். அப்படியே தப்பிக்க முடியலனாலும் கல்யாண மேடைக்குப் போறதுக்கு முன்னாடியே அவங்க தாத்தாவைப் பார்த்துப் பேசிடனும்னும் நினைச்சிருந்தேன்.

அவங்களோட முன்னாடியே பேசறதுக்கு என்னை எங்கப்பா விட்ருந்தா இந்த கல்யாணம் மண்டபம் வரை வர்றதுக்குக்கூட விட்ருக்கவே மாட்டாங்க.

கோவில் திருவிழால என்னைப் பார்த்துட்டு எங்கப்பாகிட்ட பொண்ணு கேட்ருக்காங்க. எங்க சம்மதம் இல்லாமலேயே எங்கப்பா ஓகே சொல்லிட்டாங்க.

கல்யாணமும் ரொம்ப அவகாசம் இல்லாம உடனே ஃபிக்ஸ் பண்ணவும் என்னால வேற எதுவும் பண்ண முடியல.

மண்டபத்துல இருந்து தப்பிக்கலாம்னு வெளிய வந்தப்பதான் மதுவும் திவ்யாவும் வந்தாங்க. அவங்ககூடவே தப்பிச்சு ஓடி வந்துட்டேன்.”

“எப்படியோ தப்பிச்சி வந்துட்டீங்க. இனி மாறன் அண்ணா கைல உங்களை ஒப்படைச்சிட்டா எங்க வேலை முடிஞ்சுது.” என்ற அப்பாஸ், மதுவையும் திவ்யாவையும் பார்த்து,

“நீங்க ரெண்டு பேரும்தான் அந்த மாப்பிள்ளை கண்ல நல்லா பட்டிருக்கீங்க. ஒருவேளை அவர் பழிவாங்கனும்னு நினைச்சா உங்களைதான் அவர் பழிவாங்கனும்” வில்லன் போலக் கூறியவன்,

 “மதுவைப் பத்திக்கூட கவலை இல்ல. அவ பெரியப்பா நாளைக்கு வந்து கூட்டிட்டு போயிடுவார். அவங்களோட பாதுகாப்பு வளையத்துக்குள்ள அவ போனதுக்கப்புறம் அவளை நாமளே பார்க்க முடியுமோ முடியாதோ தெரியாது? நீதான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் திவி.” என்றான்.

அதைக் கேட்டதுமே மதுவின் முகம் வாடிப் போனது. உண்மைதானே, இவர்களை இனி இதுபோல எப்போது காண்பது? அப்படியே சந்தித்துக் கொண்டாலும் கல்லூரி கால கொண்டாட்டங்களும் இனிமைகளும் திரும்புமா? பெரியப்பா வந்து அழைத்துப் போனதும் காத்திருக்கும் தங்கக்கூண்டை நினைத்தாலே கவலையாய் போனது அவளுக்கு.

“டேய் ஏன்டா நீ வேற? அதெல்லாம் நானும் நாளைக்கு ஊருக்கு கிளம்பிடுவேன். எங்க முகத்தைத் தவிர வேற எதுவும் அவருக்குத் தெரியாது. எங்களை கண்டுபிடிக்கறது ரொம்பக் கஷ்டம். அதனால பயமில்ல. பாரு உன்னால மது முகம் எப்படி வாடிப்போச்சுனு.”

“ஏய், நான் என்ன பண்ணேன்? உண்மையதான சொன்னேன். அவளுக்கு இப்ப வயசு இருபத்து மூனு. இன்னமும் அவ இப்படியே அவங்களை எதிர்த்துப் பேசாம இருந்தா, இவ வாழ்க்கைய அவங்கதான் வாழ்வாங்க. இந்த வயசுவரை இவளுக்கான எல்லா முடிவையும் அவங்கதான் எடுக்கறாங்க. இனியாவது மது பேசனும். இல்லனா நான் சொன்ன மாதிரிதான் நடக்கும்.”

ஓரளவு மதுவின் நிலை தெரிந்தவன் ஆகையால் ஆதங்கமாக அப்பாஸ் பேச, பேச்சின்றி மௌனமானாள் மது. ஆனால் உள்ளத்தில் மட்டும் மேலும் உறுதியேறியது.

ஒருவழியாக ரதியை பத்திரமாக மாறனின் சகோதரி வசம் ஒப்படைத்தவர்கள் கல்லூரி திரும்பவும், அவளது பெரியப்பா வரவும் சரியாக இருந்தது. இதோ அவருடன் பயணமும் துவங்கியாகிவிட்டது.

எதைஎதையோ யோசித்துக் கொண்டே மது கண்ணயர்ந்துவிட, முன்மாலை வேளையில் அவளது ஊருக்குள் நுழைந்தது வண்டி.

கிட்டத்தட்ட பனிரெண்டு அடி மதில் சுவர் பிரம்மாண்டமாய் உயர்ந்திருக்க, அதன் மீது நெருக்கமாக கூர்மையான வேல் சொருகப் பட்டிருந்தது. யாரும் அதன்மீது ஏறுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவ்வளவு பாதுகாப்பான கோட்டைச் சுவர்.

அந்த பிரம்மாண்டமான கோட்டைச் சுவரின் ஆளுயர கேட்டைத் திறந்துவிட இரண்டு காவலாளிகள் இருந்தனர். கதவைத் திறந்ததும் கார் நுழையவும் கதவு மூடப்பட்டது.

கார் போகும் பாதையின் இருபுறமும் பசுமையான தோட்டம் இருக்க, தோட்டத்தைப் பராமரிக்கவும் காவலுக்கும் ஆட்கள் சிலர் அங்கே இருந்தனர்.

ஓரிரு நிமிடப் பயணத்தில் மீண்டுமொரு காம்பௌண்டு சுவர். இதுவும் நல்ல உயரத்தோடு அதே பாதுகாப்பு அமைப்போடு இருக்க, அதன் கதவோ தானியங்கி கதவு.

அதன் திறப்பு விசை அவளது பெரியப்பா கையில் இருக்க,  அவர் சில எண்களை அழுத்தவும் தானாகத் திறந்தது கதவு. கார் உள்ளே நுழையவும் ஆட்டோமேட்டிக்காக கதவு மூடிக்கொள்ள, அவர்களது காரைப் பார்த்ததும் பாய்ந்து வந்தன உயர்சாதி நாய்கள் நான்கைந்து.

கார் அரைவட்டமாய் பயணித்து பிரம்மாண்டமான அந்த மாளிகையின் வாசலில் நிற்கவும் கீழே இறங்கினாள் மதுஜா. அவள் இறங்குவதற்காகவே காத்திருந்தது போல அவளது கால்களைச் சூழ்ந்து கொண்டன அந்த நாய்கள்.

வெகு நாட்கள் கழித்துப் பார்த்தபோதும், அவளை மறக்காது பாசம் காட்டிய ஜீவன்களைப் பார்த்தபோது நெகிழ்ந்து போனது மனது. அவைகளைத் தடவி ஆசுவாசப் படுத்தியவள், இவ்வளவு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்திருக்கும் தன்னைப் பார்க்க ஒருவரும் வாசலுக்கு வரவில்லையே என்று வாசலை ஏக்கமாகப் பார்த்தாள்.

இந்த ஜீவன்களுக்கு இருக்கும் பாசம்கூட இவர்களுக்கு இல்லை என்று மனம் சலித்துக் கொண்டது.

அதற்குள் பீம் இறங்கி நாய்களை அடக்கி இழுத்துச் சென்றிருக்க, வீட்டினுள் நுழைந்தாள்.

அந்த விஸ்தாரமான ஹால் வெறிச்சோடிக் கிடந்தது. வீட்டில் சொற்பமான வேலையாட்கள்தான். அவர்களும் பீம் போல பல வருடங்களாக விசுவாசமாக வேலை செய்பவர்கள்தான்.

பீமோடு சேர்த்து மொத்தம் நான்கே பேர். பீமுக்கு கார் ஓட்டும் பணி மட்டுமே. வீட்டினுள் நுழைய அவனுக்கு அனுமதி இல்லை.

மற்ற மூவரும் பெண்கள். வீட்டைச் சுத்தப்படுத்துவதோடு அவர்கள் பணி முடிந்தது. அதன்பிறகு வீட்டினுள் இருக்க அவர்களுக்கும் அனுமதி இல்லை.

சமையல் எப்போதும் மதுவின் பெரியம்மாவின் பொறுப்புதான். அந்த வேலைக்கு ஒருவரையும் அனுமதிப்பதில்லை அவர்.

எப்போதும் இதுதான் நடைமுறை என்றாலும் மது வீட்டுக்கு வரும்போது இந்த கட்டுப்பாடுகள் இன்னும் இறுகும்.

சில நேரங்களில் பிரவீணா பிரசாந்த்துக்கே அவள் வருவதோ திரும்பவும் செல்வதோ தெரியாது. அந்த அளவுக்கு ரகசியம் காக்கப்படும் அவள் விஷயத்தில்.

பெரியம்மாவை எதிர்பார்க்காவிட்டாலும் பிரசாந்த்தையும் பிரவீணாவையும் தேடியது மனது. அவர்களுக்குக்கூட என்னைப் பார்க்கும் எண்ணம் இல்லையா. வாசலுக்கு வரவேண்டாம், அட்லீஸ்ட் வரவேற்பறையிலாவது இருந்திருக்கக்கூடாதா? மனம் கேள்வியை எழுப்ப கண்களை சுழல விட்டாள்.

“யாரைத் தேடற மதும்மா?”

பெரியப்பாவின் குரலில் திரும்பியவள், “யாரையுமே காணோமே பெரியப்பா. பிரவிக்கா, பிரசாந்த் அண்ணா, பெரியம்மா… யாரையுமே காணோமே.” குரல் தேய்ந்து ஒலித்தது.

“பெரியம்மாவும் பிரசாந்த்தும் வெளிய போயிருக்காங்க. பிரவீணா ரூம்ல இருப்பா. டிராவல் பண்ணி வந்தது உனக்கு டயர்டா இருக்கும். நீ ரூம்ல போய் ரெஸ்ட் எடும்மா. அப்புறமா எல்லாரையும் பார்க்கலாம்.” சொல்லிவிட்டு அவர் அறைக்குள் நுழைந்து கொள்ள, மௌனமாக தனதறைக்குள் நுழைந்தாள்.

அனைத்துவிதமான நவீன வசதிகளையும் உள்ளடக்கிய அறை. மிதமான இளஞ்சிவப்பு நிற உள் அலங்காரங்களும் நடுநாயகமாக போடப்பட்டிருந்த இளஞ்சிவப்பு நிறப் பஞ்சணையும் அறையை சொர்க்கமாகக் காட்டியது.

மிதமான ஏசி குளிர் உடலை வருடியது. காற்றுகூட உள் நுழைய முடியாதபடி கண்ணாடியால் ஆன ஆளுயர ஜன்னல்கள். வெளியில் நடப்பதை இவளால் பார்க்க முடியும். ஆனால் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு உள்ளிருப்பது எதுவுமே தெரியாதபடியான கண்ணாடியால் உருவாக்கப்பட்ட ஜன்னல்கள் அவை.

ஜன்னல் கர்டன்களை விலக்கி வெளியே பார்த்தாள். பூக்கள் தலையாட்டிச் சிரிக்கும் தோட்டம் பரந்து விரிந்திருந்தது. சிறிது நேரம் அவற்றைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.

மனதின் வெறுமை அகல மறுத்தது. ஏனோ மனம் நண்பர்களோடு செலவழித்த பொழுதுகளை நினைத்து ஏங்கியது. வந்த முதல் நாளே மூச்சு முட்ட வைப்பதாய்…

பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள், பயண அலுப்பு தீர குளித்தால் நன்றாயிருக்கும் என்று தோன்ற வார்ட்ரோபை திறந்தவளுக்கு வழக்கம் போல ஆச்சரியம் காத்திருந்தது.

அனைத்து விதமான டிரெண்டிங் உடைகளும், விதவிதமான வர்ணங்களில் தொங்க, “இதிலெல்லாம் எனக்குக் குறையே இல்லை” தனக்குள் முனுமுனுத்தபடி ஒன்றை உருவியவள் குளியலறைக்குள் நுழைந்தாள்.

***

 

ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டுமே பாத்தியப்பட்ட அந்த கோவில் முன்பு கொட்டகை ஒன்று போடப்பட்டிருக்க, அதனுள் குழுமியிருந்தனர் ஊரின் முக்கியஸ்தர்கள்.

கோவில் தர்மகர்த்தா கோவில் நிர்வாகிகள் அனைவரும் சுற்றி அமர்ந்திருக்க, நடுநாயகமாக போடப்பட்டிருந்த இருக்கைகளில் ஒன்றில் மதுவின் பெரியம்மா மஞ்சுளா மிடுக்கோடு அமர்ந்திருந்தார். மற்றதில் எழுபத்தைந்து முதியவர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

அவரது பார்வை கோபமாக மஞ்சுளாவை ஊடுருவியிருந்தது.

“இப்ப முடிவா என்னதான் சொல்றாங்க கேட்டுச் சொல்லுங்க.” உறுமியது அவரது குரல்.

“இதுல என் முடிவு எப்பவுமே ஒன்னுதான். வழக்கமான கோவில் மரியாதை எங்க குடும்பத்துக்குதான். அதை விட்டுத்தரவே முடியாது. என் தங்கச்சிக்கும் அவ வீட்டுக்காரருக்கும்  சேரவேண்டிய மரியாதை அது. நீங்க வழக்கம் போல ஏற்பாடு பண்ணுங்க.” கோவில் தர்மகர்த்தாவைப் பார்த்துக் கூறியவர் பேச்சு முடிந்தது என்று எழ எத்தனிக்க,

“இன்னமும் பேச்சு முடியல உட்காரு.” அலட்சியமாக கூறியவர், “இத்தனை வருஷமும் என் பேத்திய என் கண்ணுலகூட காட்டாம  ஒளிச்சு வச்சிருக்க. இனியும் என்னால பொறுத்துப் போக முடியாது.

எனக்கு கோவில் மரியாதையோ மத்த எதுவுமோ வேண்டாம். என் பேத்திய பார்க்கனும். அவளுக்கு முறையா இந்த கோவில் மரியாதை கிடைக்கனும். அவ கையால மரியாதைய வாங்கிக்கட்டும், நாங்க எதுவுமே பேச மாட்டோம். பரிபூரண சந்தோஷத்தோட விட்டுக் குடுக்கிறோம்.” பெரியவர் கூற, மெல்ல நகைத்துக் கொண்டார் மஞ்சுளா.

“யார் யாருக்கு விட்டுக் குடுக்கறது? நீங்க யார் எங்களுக்கு விட்டுக்குடுக்க? இது எங்க குடும்பத்துக்கான மரியாதை. இதை நீங்க விட்டுத்தர்றீங்களா? என் பொண்ணு இந்த நாட்லயே இல்ல. வெளிநாட்ல இருக்கா. அவ இப்பலாம் இங்க வரமுடியாது.”

“யார் உன் பொண்ணு? எது உன் குடும்பம் மஞ்சுளா? உன் தங்கை குடும்பம் உன் குடும்பமாகிடுமா? உன் தங்கச்சி பொண்ணு உன் பொண்ணாயிடுவாளா? நீ முதல்ல எங்க இனமே இல்ல. இந்த கோவிலுக்குள்ள உன்னை விட்டதே தப்பு. எல்லாம் இவங்களைச் சொல்லனும்.” வெறுப்போடு சுற்றியிருந்தவர்களைப் பார்த்தவர்,

“அவ எங்க பேத்தி. எங்க ரத்தம். எங்க கண்ணுலயே காட்டாம வளர்க்கிறியே இது நியாயமா?

இந்த வருஷம் கோவில் திருவிழாவுல என் பேத்திதான் மரியாதைய வாங்கனும். என் பேத்தி வெளிநாட்ல இல்ல. அவ இப்ப இந்த ஊருக்குள்ளதான் இருக்கா.” அவர் கூறவும் துணுக்குற்றது மஞ்சுளாவின் மனது.

‘என் பிள்ளைகளுக்குக்கூட மது வருவது தெரியாதே. இவருக்கு எப்படித் தெரியும்?’ என்பது போல யோசனையோடு பார்த்தவரை, கலைத்தது பெரியவரின் குரல்.

“என்ன பார்க்கற? எங்க பேத்தி எங்க குடும்ப சொத்து. எங்ககிட்ட வர்றதுக்கான நாள் ரொம்ப தூரத்துல இல்ல.”

பெரியவரைக் கூர்மையாகப் பார்த்த மஞ்சுளா, “நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அது நடக்காது.” அமைதியாகக் கூறியவர், எழுந்து கோவிலைவிட்டு வெளியேறி காரினுள் ஏறினார்.

காரை இயக்கிய பிரசாந்த், “என்னம்மா ஆச்சு? ஏன் டல்லா இருக்கீங்க? கோவில்ல என்ன சொன்னாங்க?” வினவியவனுக்கு எந்த பதிலும் தராதவர்,

“மதுவுக்கு எதாவது ஒரு பிரச்சனைன்னா நீ உன் உயிரைத் தரக்கூடத் தயங்கக்கூடாது பிரசாந்த். அவளுக்கு எந்த கஷ்டமும் வராம பார்த்துக்க வேண்டியது நம்ம பொறுப்பு.”

அவனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து தாய் மீண்டும் மீண்டும் கூறுவதுதான். திரும்பி மஞ்சுளாவைப் பார்த்தவன், “நிச்சயமாம்மா.” என்றான்.

 ஆயாசமாக சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டார் மஞ்சுளா.

‘என் குடும்பத்தை அழிச்ச நீங்க மட்டும் நிம்மதியா இருந்துடுவீங்களா? நாசமா போயிடுவீங்க. உங்க குடும்பம் என் கண்ணு முன்னாடியே அழிஞ்சு போகும். அதை நான் பார்ப்பேன்.’ ஆக்ரோஷத்தோடு மண்ணை வாறி தூற்றியது ஒரு குரல்.

‘என் பொண்ண விட்றாத மஞ்சு.’ கைகளைப் பற்றிக் கொண்டு தழுதழுத்தது ஒரு குரல்.

மஞ்சுளாவிற்குள் மாறி மாறி ஒலித்த குரல்கள் பழையவை அனைத்தையும் கிளறிவிட, மூடியிருந்த கண்களின் வழியே கண்ணீர் முத்து ஒன்று வழிந்து ஓடியது.

 

தொடரும்.