எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 01

IMG_20221031_134812-81ad7b4b

வானை முட்டும் அளவுக்கு ஓங்கி வளர்ந்திருந்த மரங்களினூடு சூரியன் தன் கதிர்களைப் பாய்ச்சி அந்த அமைதியான வனத்தை வெளிச்சத்தில் நிறுத்தியிருக்க, தூரத்தில் ஒலித்துக் கொண்டிருந்த அந்த அழுத்தமான காலடி ஓசைகள் அந்த வனத்தின் அமைதியை குலைக்கும் வகையில் எதிரொலித்துக் கேட்டுக் கொண்டிருந்தது.

அந்தக் காலடி ஓசையின் உரிமையாளன் தன்னை யாரும் கண்டு விடக்கூடாது என்பது போல ஒவ்வொரு மரத்தின் பின்னாலும் தயங்கி தயங்கி மறைந்து நிற்க, அவனது பழுப்பு நிறக் கண்களோ ஏதோ ஒன்றை ஆவலாகத் தேடிக் கொண்டிருந்தது.

தன் காலடி ஓசை கூட தான் இருக்கும் இடத்தைக் காண்பித்து விடுமோ என்கிற அச்சவுணர்வுடன் அந்த இடத்தை சுற்றும் முற்றும் நோட்டம் விட்டபடியே அவன் மெல்ல மெல்ல நடந்து கொண்டிருக்க, அவனது தேடலை முடித்து வைப்பது போல அவன் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த ஒரு ஜீவனின் வருகை அவனது நடையின் வேகத்தை முற்றாக குறைக்கச் செய்திருந்தது.

அந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் தனியாளாக நடந்து வருவதை எண்ணி எவ்வித அச்சமுமின்றி ஒரு போர் வீரன் போல தைரியமாக நடந்து சென்று கொண்டிருந்த அந்த பாரிய தோற்றம் கொண்ட புலியைப் பார்த்ததும் அந்த காட்டிற்குள் மறைந்து நின்று கொண்டிருந்தவனின் முகமோ தான் நினைத்ததை அடைந்து விட்ட களிப்பில் ஜொலிக்க ஆரம்பித்தது.

“ஆஹா! இவ்வளவு நேரமாக இந்தக் காட்டிற்குள் பதுங்கி பதுங்கி இருந்ததற்கு நல்ல பலன் கிடைச்சுடுச்சு, இன்னைக்கு எப்படியாவது இந்தப் புலியை என்னோட கேமராவில் படம் பிடித்தே ஆகணும், அதற்கு அப்புறம் அந்த போட்டோவைக் காட்டி என்னை இவ்வளவு காலமாக கிண்டல் பண்ண எல்லோரோட வாயையும் அடைச்சுடுவேன்” என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டவன் தன் கழுத்தில் மாட்டியிருந்த அந்த உயர் ரக கேமராவை அந்தப் புலியை படம் பிடிப்பதற்கு ஏதுவாக எல்லா வகையிலும் சரியாக இருக்குமாறு சரி செய்து கொண்டிருந்த தருணம் அவனது கவனம் முழுவதும் அவனது கையிலிருந்த கேமராவில் இருக்க, அவனது கால்களோ அவனறியா தருணம் அங்கே கிடந்த ஒரு சிறு மரக்குற்றியை அழுத்தியிருந்தது.

அந்த மரக்குற்றி உடைந்த சத்தம் கேட்டு அவனைக் கடந்து மெல்ல மெல்ல நடந்து சென்று கொண்டிருந்த அந்தப் புலி திடீரென கேட்ட சத்தத்தில் சற்றே சினம் கொண்டு சடாரென்று அந்த சத்தம் கேட்ட புறமாகத் திரும்பிப் பார்த்தது.

ஒரு சில நொடிகளுக்குள் அந்த இடத்தில் எல்லாம் நடந்து முடிந்திருக்க, அந்தப் புலி அவனைப் பார்த்த பார்வையில் அவனுக்கு ஒரு நொடி அந்த உலகமே தன் சுழற்சியை நிறுத்தியது போல இருந்தது.

அந்தப் புலி தனக்கு இரையொன்று கிடைத்து விட்டது என்பது போல அவனை நோக்கி அடியெடுத்து வைக்க, அவனுக்கோ அச்சத்தில் கண்களை இருட்டிக் கொண்டு வருவது போல இருந்தது.

இப்போது தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த இடத்திலிருந்து அவன் தப்பியோட நினைத்தாலும் அந்தப் புலியின் வேகத்திற்கு தன்னால் ஈடு கொடுக்க முடியுமா என்று அவனுக்குத் தெரியவில்லை.

ஒரு நொடி அவன் கண்களுக்குள் அவனது குடும்பத்தினரின் முகம் காட்சியாக வந்து போக, ‘இனி தன்னால் அவர்களைப் பார்க்கவே முடியாது போலும்’ என்றெண்ணிக் கொண்டவன் அந்தப் புலி தன்னை நெருங்கி வரும் தருணம் அங்கிருந்து ஓடப் பார்க்க, அதற்குள் அந்தப் புலி ஒரே பாய்ச்சலில் அவனைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தது.

அத்தனை நெருக்கத்தில் அந்தப் புலியைப் பார்த்ததும் அச்சம் கொண்டவன், “அம்மா!” என்று அலறிக் கொண்டே தன் கண்களைத் திறக்க, அத்தனை நேரம் அவன் பதுங்கியிருந்த அந்தக் காடு மறைந்து இப்போது அந்த இடம் ஒரு அறையின் தோற்றத்தைப் போல தென்பட்டது.

ஒரு நொடி அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் தனது உடலைத் தடவிப் பார்த்தபடியே அந்த இடத்தைச் சுற்றி முற்றிப் பார்த்தவன் அப்போதுதான் தான் இத்தனை நேரமாக பார்த்துக் கொண்டிருந்தது ஒரு கனவு என்பதை உணர்ந்து கொண்டான்.

“ஐயோ! மறுபடியும் அதே கனவா? இன்னும் எத்தனை நாளைக்கு இதே கனவு வரப்போகுதோ?” என்றவாறே அவன் தன் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு அமர்ந்திருந்த தருணம்,

“என்னாச்சு சித்தார்த் கண்ணா? நீ அம்மான்னு அலறுன சத்தம் பக்கத்து தெருவில் இருக்கும் உங்க அத்தை வீடு வரைக்கும் கேட்டதாம்னு கால் பண்ணி சொல்லுறாங்க. மறுபடியும் அதே கனவா?” என்று குரல் கேட்க, சிறு புன்னகையுடன் எழுந்து நின்றவன் தன் முன்னால் நின்று கொண்டிருந்த அந்தக் குரலின் உரிமையாளரின் தோளைக் கட்டிக் கொண்டான்.

சித்தார்த் கோயம்புத்தூரில் உள்ள பிரபலமான இளம் தொழிலதிபர்களில் ஒருவன். சித்தார்த்தின் தந்தை வைத்தீஸ்வரன், மற்றும் அவனது அன்னை சாவித்திரி.

சித்தார்த்திற்கு உடன் பிறந்தோர் இருவர், தங்கை கௌசல்யா எம்.காம் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்க, அவனது தம்பி கௌசிக் பி.ஈ முதலாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறான்.

இருபத்தெட்டு வயது நிரம்பிய சித்தார்த் மூன்று வருடங்களுக்கு முன்னர் தனது படிப்பை முடித்த கையோடு தன் தந்தையின் பொறுப்பில் இருந்த அவரது ஆர்க்கிடெக் மற்றும் டிசைனிங் கம்பெனியை தனது கண்காணிப்பில் எடுத்துக் கொண்டான்.

அவன் அந்தக் கம்பெனியைப் பொறுப்பில் எடுத்த தருணம் அவர்களது தொழில் பெரும் உச்சத்தை எட்டியிருக்க, அப்போதிலிருந்தே கோயம்புத்தூரில் அவர்களது எஸ்.வீ.எஸ் கம்பெனி மிகவும் பிரபலமான ஒரு தளமாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

என்னதான் சித்தார்த் ஆர்க்கிடெக் படித்து முடித்த ஒரு வெற்றிகரமான இளம் தொழிலதிபராக இருந்தாலும் அவனது சிறு வயது ஆசை எல்லாம் புகைப்படத் துறையில் ஏதாவது ஒரு சாதனை புரிய வேண்டும் என்பது தான்.

சிறு வயது முதலே தன் தந்தை தனக்கு பிறந்தநாள் பரிசாக அன்பளிப்புச் செய்த ஒரு கேமராவை வைத்து விதம் விதமாக புகைப்படம் எடுக்கத் தொடங்கியவனுக்கு நாளடைவில் அது ஒரு கனவாகவே மாறிப் போனது.

என்றாவது ஒருநாள் தனது சிறு வயது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று அவன் எண்ணியிருக்க, கடந்து இரண்டு வருடங்களாக அவனுக்கு நிம்மதியான தூக்கம் கூட வந்தபாடில்லை.

எதோ ஒரு சம்பவத்தை உணர்த்துவது போல தினமும் ஒரு காட்டிற்குள் சிக்கியிருப்பது போன்ற ஒரு கனவு அவனது உறக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்க, அதைத் தவிர்க்கும் வழி தெரியாமல் எப்போதும் போல இப்போதும் தன் அன்னையின் தோளில் தஞ்சம் அடைந்திருந்தான் அந்த வளர்ந்த குழந்தை சித்தார்த்.

“என்னாச்சு சித்தார்த் சார், மறுபடியும் அதே கனவா?”

“ம்ம்ம்ம்ம்ம்”

“ஒரு பெரிய காட்டிற்குள் நீ மட்டும் தனியாக கழுத்தில் கேமரா மாட்டிட்டு நின்னு இருப்பியே?”

“ம்ம்ம்ம்ம்ம்”

“அப்போ ஒரு புலி உன்னைக் கடந்து போய் இருக்குமே?”

“ம்ம்ம்ம்ம்ம்”

“அப்போ நீ அந்தப் புலியை ஃபோட்டோ எடுக்க ரெடி ஆகும் போது ஒரு தடியில் உன் கால் பட்டு அந்தப் புலி உன் கிட்ட வந்து இருக்குமே?”

“ம்ம்ம்ம்ம்ம்”

“நீ அப்போ ரொம்ப எமோஷனல் ஆகி ஃபீல் பண்ணி உன் ஃபேமிலியைப் பற்றி யோசித்துப் பார்த்து இருப்பியே?”

“ம்ம்ம்ம்ம்ம்”

“அப்போ நீ அங்கே இருந்து தப்பிக்க நினைக்கும் போது அந்தப் புலி உன்னைப் பிடித்து இருக்குமே?”

“ம்ம்ம்ம்ம்ம்”

“அதோடு நீ அம்மான்னு அலறிட்டு எழுந்து இருப்பியே?”

“ம்ம்ம்ம்ம்ம், எப்படிம்மா அப்படியே ஒரு விஷயம் கூட மாறாமல் நான் கண்ட கனவை சொல்லுறீங்க?” தன் மகனின் கேள்வியில் அவனது தோளில் மெல்லத் தட்டியவர்,

“இன்னைக்கு நேற்றா இந்தக் கனவை நீ காணுற? இரண்டு வருஷமாக ஒவ்வொரு நாளும் இதே கனவைத் தான் நீ காணுற, நானும் ஒவ்வொரு நாளும் அதைக் கேட்டு கேட்டுப் பழகிப் போயிட்டேன். என்ன பண்ணுறது?” என்று கூற, அவனோ சிறு கவலையுடன் தன் அன்னையை அங்கிருந்த ஷோபாவில் அமரச் செய்து விட்டு அவரது மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டான்.

“எதற்காகம்மா இந்தக் கனவு தினமும் எனக்கு வருது? இப்படி ஒவ்வொரு நாளும் காலையில் அலறியடித்து எழும்பி எழும்பி என்னால முடியல ம்மா” சித்தார்த்தின் குரலில் தெரிந்த சோர்வை உணர்ந்து கொண்டவராக சட்டென்று அந்த சூழ்நிலையை சகஜமாக்க எண்ணியவர்,

“வேணும்னா இப்படி பண்ணுவோம், அடுத்த தடவை இதே கனவு உனக்கு வரும் போது அந்தப் புலி உன்னைப் பிடிக்கும் போது நீ அலறாமல் அமைதியாக இரு, அப்போ அந்தப் புலி உன் கூட ஆசை தீர விளையாடிட்டு போயிடும், உனக்கும் கனவு முடிந்து போயிடும், எப்படி ஐடியா?” என்று வினவ,

அவனோ, “ஏன்ம்மா நீங்களும் என்னைக் கலாய்க்குறீங்க? நானே இரண்டு வருஷமாக தினமும் அந்தக் கனவைக் கண்டு பயந்து போறேன், இதில் நீங்க வேற?”என்றவாறே தன் அன்னையை முறைத்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“சரி, சரி, இனி என்ன பண்ணுறது? ஆரம்பத்தில் நானும் அந்தக் கனவைக் கேட்டு என்னவோ ஏதோன்னு பயந்து போனேன் தான், ஆனா உனக்குத் தான் அந்தக் கனவு ஏதோ பசியெடுப்பது போல தினமும் வருதே, அதைப் பார்த்து நான் என்ன பண்ணுறது?” சாவித்திரி தன் மகனின் கன்னத்தைப் பிடித்து ஆட்டியபடியே வினவ,

அவரது கையைத் தட்டி விட்டவன், “இப்படியே என்னைக் கலாய்ச்சுட்டு இரும்மா, ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிஜமாகவே நான் ஒரு புலியை நேரடியாக ஃபோட்டோ எடுத்துட்டு வந்து உங்களுக்கு காண்பிக்கப் போறேன், அப்போ தெரியும், இந்த சித்தார்த் யாருன்னு?” என்றவாறே தன் டவலை எடுத்துக் கொண்டு குளியலறை நோக்கிச் செல்ல,

அவனின் பின்னாலேயே நடந்து சென்றவர், “ஆனாலும் நீ ரொம்ப தான் கனவு காணுறடா” என்று விட்டு அங்கிருந்து ஓடி விட, அவனோ தன் அன்னையை முறைக்கு முயன்று முடியாமல் சிரித்துக் கொண்டே தன் அன்றாட வேலைகளை கவனிக்கத் தொடங்கியிருந்தான்.

சாவித்திரி எப்போதும் இப்படித்தான், தன் பிள்ளைகளுக்காக எந்தவொரு விடயத்தையும் இலகுவாக செய்து கொடுப்பது போல் அவர்கள் எல்லோரிடமும் கலகலப்பாகவே பேசிப் பழகுவார்.

இன்னும் சொல்லப்போனால் சாவித்திரி இருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கும், சிரிப்புக்கும் பஞ்சமே இருக்காது என்று கூட சொல்லலாம்.

அவருக்கு இந்த உலகத்தில் சந்தோஷம் தரக்கூடிய ஒரு விடயம் என்றிருந்தால் அது அவரது பிள்ளைகள் மாத்திரமே.

சித்தார்த் குளித்து தயாராகி வருவதற்குள் அவனுக்குத் தேவையான காலையுணவை எடுத்து வைத்திருக்க, வழக்கம் போல தனக்குத் தேவையான அளவு உணவை தானே எடுத்து வைத்து உண்டவன் சாவித்திரியிடமும், வைத்தீஸ்வரனிடமும் சொல்லி விட்டு தனது அலுவலகம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றான்.

இன்று அவனது கம்பெனிக்குப் புதிதாக ஒரு ஆர்டர் கிடைக்க இருப்பதனால் அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டே தன் அலுவலகம் வந்து சேர்ந்தவன் தனது வேலைகளை கவனிக்கத் தொடங்கியிருக்க, நான்கு விழிகள் மாத்திரம் அவனது அறையைச் சுற்றி மாட்டியிருந்த கண்ணாடித் தடுப்பின் வழியாக அவனையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன.

அதில் இரு விழிகளின் உரிமையாளர் தன்னருகே நின்று கொண்டிருந்த மற்றைய இரு விழிகளின் உரிமையாளரின் தோளில் தட்டி, “ஏன்டி பிரியா? நம்ம சார் இவ்வளவு காலமாக எந்தவொரு பொண்ணையும் லவ்வே பண்ணாமல் இருப்பாருன்னு நினைக்குறியா?” என்று வினவ,

மற்றைய பெண்ணினால் பிரியா என்று அழைக்கப்பட்டவள், “எனக்கும் அந்த சந்தேகம் ரொம்ப நாளாகவே இருக்கு ஜனனி, இத்தனை வருஷமா இவரு சிங்கிளாக இருக்காருன்னா ஒண்ணு யாரையாவது லவ் பண்ணிட்டு இருக்கணும், இல்லையா லவ் பண்ணி பெயிலியர் ஆகி இருக்கணும். ஆனா இவரைப் பார்த்தால் லவ் பெயிலியர் மாதிரி தெரியலையே” என்று கூற, மற்றைய பெண்ணும் அவளது கூற்றை ஆமோதிப்பது போல தலையசைத்தாள்.

“நானும் இந்த ஆபிஸில் ஜாயின் பண்ண நாளிலிருந்து பார்க்கிறேன், எவ்வளவு அழகான பொண்ணுங்க இங்கே இருக்காங்க, ஆனா நம்ம பாஸ் ஒரு தடவை கூட நம்மளை எல்லாம் பார்த்ததே இல்லையே, அப்படியே பார்த்தாலும் ஏதாவது ஒரு வேலையை சொல்லத்தான் கூப்பிடுவாரு, அது முடிஞ்சதும் நம்ம அங்கே நிற்கிறோமான்னு கூடப் பார்க்க மாட்டாரு. நம்ம பாஸ் சரியான ஒரு புதிராகவே இருக்காரே”

“என்னதான் புரியாத புதிராக இருந்தாலும் அதற்கும் ஒரு பதில் கண்டிப்பாக இருக்கும் தானே? சீக்கிரமாக அந்தப் பதிலைக் கண்டுபிடிச்சுடலாம், ஒரு வேளை அந்தப் பதில் நானாக கூட இருக்கலாம்” என்று பிரியா கூற,

ஜனனி அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே, “ஆனாலும் ரொம்ப தான் ஆசைப்படுறீங்க மேடம், கூடிய சீக்கிரம் உங்க ஆசை புஸ்வாணமாக போகுது” என்றவாறே சித்தார்த்தின் அறையைக் கடந்து செல்ல, அத்தனை நேரமாக அந்த இரு பெண்கள் பேசியதையும் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தவன் மனமோ அந்த ஒரு பெண்ணின் நினைவை நோக்கி அவனை இழுத்துச் செல்லப் பார்த்தது.

“சேச்சே! இப்போ எதற்காக நான் அந்தப் பொண்ணைப் பற்றி யோசிக்கணும்? அந்தப் பொண்ணு இப்போ எங்கே, எப்படி இருக்காளோ? ஒருவேளை அவளுக்கு திருமணமாகி குழந்தை கூட இருக்கலாம், இப்படி யாருன்னே தெரியாத ஒரு பொண்ணைப் பற்றி நான் யோசிப்பது சரியே இல்லை. இப்போ என் கவனம் முழுவதும் என் வேலையில் தான் இருக்கணும்” என்றவாறே தன் முன்னால் இருந்த ஃபைலை சித்தார்த் எடுத்த போது அன்றைய நாளுக்குரிய பத்திரிகை அவனது மேஜையில் இருந்து கீழே விழ, சிறு சலிப்புடன் அதைக் குனிந்து எடுத்தவன் அதில் முன்புறம் பிரசுரிக்கப்பட்டிருந்த விளம்பரத்தைப் பார்த்து ஆர்வத்துடன் அதைப் படிக்க ஆரம்பித்தான்.

“நாடளாவிய புகைப்படப் போட்டி – 2023, நீங்கள் புகைப்படத்துறையில் ஆர்வம் உள்ளவரா? அப்படி என்றால் இது உங்களுக்கான ஓர் அரிய சந்தர்ப்பம். அடுத்த வருடம் மார்ச் மாதம் 3ம் திகதி சர்வதேச வனஜீவராசிகள் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலான புகைப்படப் போட்டி ஒன்றை நடத்த எஸ்.ஓ.எஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இப்போட்டியில் எந்த வயதினரும் கலந்து கொள்ளலாம். ஒருவர் ஆகக்குறைந்தது பத்து முதல் அதிகமாக இருபது புகைப்படங்கள் வரை அனுப்ப முடியும். இப்போட்டிக்கு அனுப்பப்படும் புகைப்படங்கள் உங்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களாக இருக்க வேண்டும் அத்துடன் அவை வேறு யாருடைய புகைப்படங்கள் என்று நிரூபிக்கப்பட்டால் நீங்கள் இந்தப் போட்டியில் இருந்து நீக்கப்படுவதுடன் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும். போட்டியின் முடிவுத் திகதி நவம்பர் 30, 2022. போட்டிக்கான பரிசுகள் பற்றி போட்டி முடிவடைந்த பின்னர் அறிவிக்கப்படும்” அந்த விளம்பரத்தில் போடப்பட்டிருந்த வார்த்தைகள் ஒன்று விடாமல் வாசித்து முடித்தவன் தான் எங்கே இருக்கிறோம் என்பதைக் கூட மறந்தவனாக அந்த அறைக்குள் எழுந்து நின்று நடனமாடத் தொடங்க, அவனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களோ அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் அவனைப் பார்த்து குழப்பமடைந்து போய் நின்றனர்.

சித்தார்த்தின் அறைக்குள் அவனது அனுமதி இன்றி அங்கே வேலை செய்பவர்கள் நுழைய முடியாது என்பதனால் அவனிடம் என்ன ஆனது என்று விசாரிக்கத் தயங்கி அவனது அறை வாயிலில் குவிந்து நின்ற வேளை, சித்தார்த்தின் உற்ற நண்பனும், அவனது பி.ஏ வுமாகிய கிஷோர் அந்தக் கூட்டத்தை கலைந்து போகச் செய்து விட்டு அவசர அவசரமாக சித்தார்த்தை நோக்கி ஓடிச் சென்றான்.

“டேய்! சித்தார்த், என்னடா ஆச்சு உனக்கு? எதற்காகடா இப்படி வெறி பிடித்தவன் மாதிரி ஆடுற?” கிஷோரின் கேள்வியில் தன் ஆட்டத்தை நிறுத்தி விட்டு அவனை முறைத்துப் பார்த்தவன்,

“ஏன்டா, என்னைப் பார்த்தால் வெறி பிடித்து ஆடுற மாதிரியா இருக்கு?” என்று வினவ,

அவனோ சிறு தயக்கத்துடன் மறுப்பாக தலையசைத்து விட்டு, “இல்லை அவங்களாச்சும் கொஞ்சம் நல்லா ஆடுவாங்க” என்று கூற, இப்போது சித்தார்த் அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“சரி, சரி, உன்னோட பத்ரகாளி பார்வையை மாற்று. இப்போ என்ன ஆச்சுன்னு இவ்வளவு ஆட்டம் போடுற?”

“முதல்ல இந்த விளம்பரத்தை பாரு” சித்தார்த் கொடுத்த பத்திரிகையை வாங்கிப் பார்த்த கிஷோர்,

“ஹேய்! போட்டோகிராப் கம்பெடிஷனா? நீ கலந்துக்கப் போறியாடா சித்தார்த்?” ஆவலுடன் தன் நண்பனைப் பார்த்து வினவ,

அவனைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன், “ஆப்கோர்ஸ்டா, இப்படி ஒரு போட்டியில் கலந்துக்கணும்னு எனக்கு எவ்வளவு ஆசைன்னு உனக்கே தெரியும், இப்படி ஒரு வாய்ப்புக்காகத் தான் இத்தனை நாளாக நான் காத்துட்டு இருந்தேன், தானாக வந்து வாய்ப்பை நான் தவற விடுவேனா? நிச்சயமாக இந்த ஒரு வாய்ப்பு என்னோட வாழ்க்கையையே மாற்றப் போகுது, நீ வேணும்னா பார்த்துட்டே இரு” என்றவாறே சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க, அவனுக்குத் தெரியவில்லை அவன் சொன்னது போலவே இனி வரப்போகும் நாட்கள் தான் அவனது வாழ்க்கையை உண்மையாகவே முற்றிலும் மாற்றப் போகிறது என்பது……