எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 09

IMG_20221031_134812

எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 09

ஐந்து வருடங்களுக்கு முன்பு…..

ஊட்டி நகரில் காலைப்பொழுது பனியும், வெயிலும் கலந்து ஒரு இதமான பொழுதாக விடிய ஆரம்பித்திருக்க, இரட்டை ஜடை பின்னலிட்டு தனது பாடசாலை சீரூடையை நேர் படுத்திய படி மாயா வழமை போல தன் பாடசாலை செல்வதற்காக வேண்டி தனது பொருட்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி வைத்துக் கொண்டு நின்றாள்.

மாயாவின் அண்ணன் ரகு அப்போதுதான் இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்கள் வீட்டின் அருகே இருக்கும் எஸ்டேட் ஒன்றில் கணக்காளராக இணைந்திருக்க, ரகுவிற்கும், மாயாவிற்கும் சேர்த்து காலையுணவை வெகு மும்முரமாக தயாரித்துக் கொண்டார் அவர்களது பாசத்திற்குரிய அன்னை பத்மாவதி.

தன் பிள்ளைகளை பத்திரமாக அனுப்பி வைத்து விட்டு தேயிலை பறிக்கும் வேலைக்கு அவர் சென்றாக வேண்டும், அதனாலேயே அந்தக் காலை நேரத்தில் பத்மாவதியின் கரங்கள் அத்தனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

மாயாவின் தந்தை நாராயணன் அது பருவ காலம் என்பதனால் நேரத்திற்கே சுற்றுலாப்பயணிகளைக் காண புறப்பட்டுச் சென்றிருந்ததால் பத்மாவதிக்கு அன்றைக்கு உதவி செய்யவும் ஆள் இருக்கவில்லை, நாராயணன் வீட்டில் இருக்கும் சமயத்தில் தன் மனைவிக்கு பெருமளவு உதவி செய்து அவரது வேலைப்பளுவை குறைத்து விடுவார், ஆனால் இன்று அதற்கும் வாய்ப்பு இருக்கவில்லை.

மாயாவிற்கும், ரகுவிற்கும் காலையுணவை கொடுத்து அவர்களை அனுப்பி வைத்த பத்மாவதி அவசர அவசரமாக பகலுணவையும் சமைத்து வைத்து விட்டு தனது உடைகளை மாற்றிக் கொண்டு தேயிலைக் கொழுந்து பறிக்கும் இடத்திற்கு செல்ல, அங்கே ஏற்கனவே தாமதமாக வந்திருந்த நபர்களுக்கு பேச்சு விழுந்து கொண்டிருந்தது.

அந்த ஏச்சுப் பேச்சுக்கள் எதுவும் அவர்களுக்கு புதிதில்லை என்பதனால் என்னவோ அதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தனது கூடையை எடுத்துக் கொண்டவர் தனது வேலைகளை கவனிக்கத் தொடங்கியிருக்க, மறுபுறம் மாயா தனது தோழிகளுடன் சேர்ந்து கலகலப்பாக பேசிக் கொண்டே அன்றைய பாடங்களை படிக்க ஆரம்பித்திருந்தாள்.

இப்படியாக அந்த சிறிய குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை இயல்பாக சென்று கொண்டிருந்த தருணத்தில் தான் மாயாவின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட அந்த புயல் போன்றவன் கோயம்புத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு சாவித்திரி இல்லத்தை வந்து சேர்ந்திருந்தான்.

சாவித்திரி இல்லத்தின் முன்னால் வந்து நின்ற காரைப் பார்த்ததுமே வீட்டிற்குள் இருந்து குதூகலத்துடன் ஓடி வந்த சாவித்திரி காரில் இருந்து இறங்கி நின்ற சித்தார்த்தைப் பார்த்ததுமே, “சித்தார்த் பையா!” என்றவாறே அவனை ஆரத்தழுவிக் கொள்ள,

அவனும், “சாவி மம்மி!” என்றவாறே அவரை தூக்கி சுற்றி விட்டு இறக்கி விட்டான்.

“எப்படி இருக்கீங்க ம்மா? அப்பா, கௌசிக், கௌசல்யா எல்லாம் எங்கே? என்ன சாவி மம்மி உங்க பையன் ஊரில் இல்லைன்னதும் ஒரு சுற்று உடம்பு வைச்சுட்டீங்க போல இருக்கே” என்றவாறே சித்தார்த் தன் அன்னையின் கன்னத்தை கிள்ளி விட்டு விட்டு தன் பையை எடுத்துக்கொண்டு அவசரமாக ஓடிச் செல்ல,

சாவித்திரியோ, “கேடி பையா! இரு உன்னை கவனிக்கிறேன்” என்றவாறே அவனை விரட்டியபடி கலகலப்பாக பேசிக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்து கொண்டார்.

சித்தார்த் ஒரு வாரத்திற்கு முன்பு தான் சென்னையில் பிரபலமான கல்லூரி ஒன்றில் ஆர்க்கிடெக் தொடர்பான உயர் நிலைக்குரிய கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு தன் சொந்த ஊரை வந்து சேர்ந்திருந்தான்.

அந்த உயர் படிப்பை முடித்து விட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று சித்தார்த் சிந்தித்துக் கொண்டிருந்த தருணத்தில் தான் அவனது தந்தை தங்கள் கம்பெனிப் பொறுப்பை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்க, அதுவே சித்தார்த்திற்கும் அப்போதைய ஆசையாக இருந்ததனால் அவனும் அந்தப் பொறுப்பை ஏற்க இன்னுமொரு மேல் படிப்பை படிக்க எண்ணி லண்டன் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான்.

எப்படியும் லண்டனிற்கு படிக்கச் சென்றால் சித்தார்த் திரும்பி வர குறைந்தது மூன்று வருடங்களாவது செல்லும் என்று தெரிந்திருக்க, அவனது நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து இரண்டு, மூன்று வாரங்கள் எங்கேயாவது வெளியூர் சென்று வரலாம் என்று முடிவெடுத்து இருந்தனர்.

மறுபடியும் இப்படி எல்லா நண்பர்களும் சேர்ந்து ஒரு சமயத்தில் ஒன்றாக விடுமுறையை அனுபவிக்க இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டுமோ என்று நினைத்தே தங்கள் சுற்றுலாப் பயணத் திட்டத்தை வெகு மும்முரமாக திட்டம் போடத் தொடங்கியிருந்தனர்.

எங்கே செல்வது என்று தெரியாமல் ஹிமாலயத்தில் இருந்து ஆரம்பித்த அவர்களது சுற்றுலாப் பயணத் திட்டம் இறுதியாக ஊட்டி செல்லலாம் என்கிற முடிவில் வந்து நின்றது ஒருபுறம் இருக்க, மறுபுறம் சாவித்திரி மூன்று வருடங்களுக்கு பிரிந்திருக்கப் போகும் தன் மகனை இன்னமும் இரண்டு, மூன்று வாரங்கள் கட்டாயம் பிரிந்திருக்க வேண்டுமா? என்கிற யோசனைக்குப் பின்னர் வெகு சிரமப்பட்டு வெளியூர் அனுப்ப மனமேயின்றி வெகுவான பாசப் போராட்டத்தின் பின்னரே அவனை ஊட்டி செல்ல அனுமதித்து இருந்தார்.

ஒருவழியாக சித்தார்த் தங்கள் வீட்டினருடன் முழு சம்மதத்துடன் ஊட்டி நோக்கிப் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்க, மறுபுறம் ஊட்டியில் ஏதோ பல யோசனைகள் ஒன்று சேர தனது அறை ஜன்னல் அருகே அமர்ந்தபடி வானில் தெரிந்த நிலவை கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் மாயா.

ஏனோ தெரியவில்லை அவளுக்கு இந்த ஒரு வார காலமாக தனக்கு ஏதோ ஒரு அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வு நடக்கப் போகிறது என்பது போல அவளது மனது சொல்லிக் கொண்டே இருந்தது.

அதிலும் இந்த இரண்டு நாட்களாக அவள் மனது அவள் கட்டுப்பாட்டிலேயே இல்லை என்று தான் கூற வேண்டும், அந்தளவிற்கு அவளது மனது ஏதோ ஒன்றை நினைத்து நினைத்து அவளைப் பாடாய்படுத்திக் கொண்டிருக்க, அந்த நிகழ்வு என்னவென்று தான் அவளுக்குத் தெரியவில்லை.

எதுவாக இருந்தாலும் சரி அந்த நிகழ்வை தைரியமாக எதிர்கொண்டே ஆக வேண்டும் என்று வழமை போல தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொண்டவள் தன் கண்களை மூடி தூங்க முயல, உண்மையிலேயே அவள் அந்த சந்தர்ப்பத்தை தைரியமாக எதிர்கொள்வாளா? இல்லையா என்பது காலப்போக்கில் தான் அவளுக்கே புரியக் கூடும்.

**********
சித்தார்த்துடன் சேர்ந்து அவனது நண்பர்கள் மொத்தமாக ஏழு பேர் (சித்தார்த்தை விட வயது குறைந்த மூவர், சித்தார்த்தின் வயதை ஒத்த மூவர் என) அந்தப் பயணத்தைக் கோயம்புத்தூரில் இருந்து ஆரம்பித்திருந்தனர்.

சித்தார்த்தின் நண்பர்களில் ஒருவனான லோகேஷ் ஏற்கனவே அவர்கள் தங்குவதற்கு ஒரு இடத்தை ஏற்பாடு செய்திருக்க, நண்பர்கள் அனைவரும் தங்கள் பிரயாணக் களைப்பு நீங்கும் வரை அந்த இடத்திலேயே தங்கியிருந்து விட்டு அடுத்த நாள் காலை தங்கள் பயணத்தை ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்து இருந்தனர்.

ஆனால் சித்தார்த்திற்கு ஒருநாள் முழுவதும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பது ஏதோ போல இருக்க, தன் அறையில் இருந்து வெளியேறி வந்தவன் தாங்கள் தங்கியிருந்த அந்த இடத்தை சுற்றிலும் இருந்த பகுதியில் மெல்ல நடந்து செல்ல ஆரம்பித்தான்.

அவன் வெளியே வந்த தருணம் சூரியன் தன் பணியை முடித்து விட்டு வீடு செல்லத் தயாராகிக் கொண்டிருக்க, அந்தி மஞ்சள் வானம் சூரியனுக்கு விடை கொடுத்து விட்டு நிலவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தது.

அந்தி வானத்தின் எழிலையும், ஊட்டியின் குளிரையும் ரசித்து பார்த்தபடியே சித்தார்த் நடை பயின்று கொண்டிருந்த தருணம், அவன் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி ஒரு இடத்தில் நான்கைந்து நபர்கள் ஒரு இளம்பெண்ணை வழி மறித்து ஏதோ வம்பு பண்ணுவது போல இருக்க, சித்தார்த் கோபமாக அந்த இடத்தை நோக்கி விரைந்து சென்று பார்த்தான்.

அவன் தூரத்தில் இருந்து பார்த்தது போலவே ஒரு சிறு பெண்ணை வழி மறித்து வைத்தபடி நான்கைந்து இளைஞர்கள் ஏதோ வம்பிழுத்துக் கொண்டு நிற்க, அவர்கள் எதிரில் வந்து நின்று கொண்டவன், “என்ன தம்பிங்களா, வீட்டில் வேலை எதுவும் இல்லையா? இப்படி ரோட்டில் நின்னுட்டு போற, வர்ற ஸ்கூல் பசங்க கிட்ட உங்க வாய் சவடாலைக் காட்டுறீங்க போல?” என்று வினவ,

அந்த இளைஞர்களில் ஒருவன் தன் சட்டைக்கையை மடித்து விட்டபடியே சித்தார்த்தின் முன்னால் வந்து நின்று, “என்ன சார்? பார்த்தால் ஊருக்குப் புதுசு போல இருக்கு. ஊட்டிக்கு சுற்றிப் பார்க்க வந்தோமா, நல்லா நாலு இடத்திற்குப் போனோமா, வீட்டிற்கு திரும்பிப் போனோமான்னு இல்லாமல் எங்க கிட்ட எதற்காக வீணாக உங்க ஹீரோயிஸத்தைக் காட்ட ட்ரை பண்ணுறீங்க, போங்க சார், போங்க, போய் உங்க வேலையைப் பாருங்க” என்றவாறே அவனது நெஞ்சில் கையை வைத்து தள்ளப் பார்க்க, அடுத்த நொடி அவனது கரம் சித்தார்த்தின் கைக்குள் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருந்தது.

“போனால் போகட்டும் சின்னப் பசங்களாச்சேன்னு வாயால் பேசுனா நீ என் மேலேயே கை வைக்குறியா? ஆளுங்களும் மண்டையும், வீட்டில் அம்மா, அப்பா கிட்ட டியூஷன் க்ளாஸ் போறேன்னு சொல்லிட்டு இங்கே ரோட்டில் நின்று என்ன வேலைடா பார்க்குறீங்க? இன்னைக்கு உங்க எல்லோரையும் இப்போவே போலீஸ் ஸ்டேஷனில் தூக்கிப் போட வைக்குறேன்” என்றவாறே சித்தார்த் தன் ஃபோனை எடுத்து ஒரு சில எண்களை அழுத்தப் போக,

அவனிடம் சிக்கிக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவன், “ஐயோ அண்ணா! ப்ளீஸ் அண்ணா, தெரியாமல் பண்ணிட்டோம்ன்னா தயவுசெய்து விட்டுடுங்கண்ணா, ப்ளீஸ் அண்ணா. போலீஸ் எல்லாம் வேண்டாம் ண்ணா, வீட்டுக்கு தெரிஞ்சால் அப்பாவும், அம்மாவும் விரட்டி விரட்டி அடிப்பாங்கண்ணா, தயவுசெய்து விட்டுடுங்கண்ணா, இனிமேல் இந்த தெருப் பக்கம் கூட வர மாட்டோம் ண்ணா, இந்த தங்கச்சி கிட்ட இனி தெரியாமல் கூடப் பேசமாட்டோம்ண்ணா, தயவுசெய்து விட்டுடுங்கண்ணா” என்றவாறே அந்த இளைஞன் கண்ணீர் விட ஆரம்பிக்க,

அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவனது கண்களைத் துடைத்து விட்டவன், “அடடா! குழந்தை இதற்கே அழுதால் எப்படி? இன்னும் எவ்வளவு இருக்கு?” என்றவாறே அவனது அருகில் நின்று கொண்டிருந்த மற்ற இளைஞன் ஒருவனின் சட்டைக் காலரைப் பிடிக்க, அங்கு நடந்த நிகழ்வுகளைப் பார்த்து திருதிருவென விழித்துக் கொண்டு நின்ற மற்ற இரு இளைஞர்களும் ஆளை விட்டால் போதும் என்பது போல தங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு அந்த தெருவை விட்டும் மின்னல் வேகத்தில் புறப்பட்டுச் சென்றிருந்தனர்.

“அட என்னப்பா இது? உங்க தோஸ்த்து ஓடிட்டாங்க, இப்போ போலீஸ் வந்தால் யாரைப் பிடித்துக் கொடுக்கிறது? சரி, பரவாயில்லை உங்க இரண்டு பேரையும் பிடித்துக் கொடுக்கலாம், சரியா?” என்றவாறே சித்தார்த் அவர்கள் இருவரது சட்டைக் காலரையும் இன்னும் இறுக்கமாக பற்றிப் பிடிக்க, அவர்கள் இருவருமோ தங்கள் சட்டை கிழிந்தாலும் பரவாயில்லை என்பது போல அவனது கையில் சிக்கியிருந்த சட்டையை அப்படியே விட்டு விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்பது போல அங்கிருந்து பின்னங்கால் பிடறியில் அடிபட ஓட்டம் பிடித்திருந்தனர்.

அந்த நால்வரின் ஓட்டத்தையும் பார்த்து வாய் விட்டுச் சிரித்த படியே அங்கே நின்று கொண்டிருந்த இளம்பெண்ணின் எதிரே சென்று நின்றவன், “என்னம்மா பொண்ணு நீ? இந்த புள்ளைப்பூச்சிங்களைப் பார்த்தா இப்படி பயந்து போய் நின்ன? யாராவது தெரியாதவங்க வந்து வம்பு பண்ணால் கையில் எது கிடைத்தாலும் அதை வைத்து அவங்களை அடிச்சுப் போட்டுட்டு போயிட்டே இருக்கணும், அதை விட்டுட்டு இப்படி பயந்து போய் நிற்கலாமா? இந்த தடவை ஏதோ ஒரு அதிர்ஷ்டம் நான் வந்தேன், இதுவே யாரும் வராமல் இருந்திருந்தால் இப்படியே இருந்திருப்பியா? இனிமேலாவது தைரியமாக இருக்கப் பழகிக்கோம்மா” என்று விட்டு அவளைக் கடந்து சென்று விட,

அவன் அந்த இடத்தைப் விட்டுக் கடந்து சென்று ஒரு சில நிமிடங்களில் இன்னும் இரண்டு பெண் பிள்ளைகள் அவளின் அருகில் வந்து, “ஹேய் அம்மு! என்னடி இங்கேயே நின்னுட்டு இருக்க? நாங்க உன்னை எங்கே எல்லாம் தேடுனோம் தெரியுமா? என்னடி எதுவும் பேசாமல் இருக்க? ஹேய் அம்மு! அம்மு, என்னடி ஆச்சு உனக்கு?” என்றவாறே அவளது தோளைப் பற்றி உலுக்க, அவளோ கனவுலகில் இருப்பது போல சித்தார்த் நடந்து சென்ற பக்கத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

தங்கள் தோழிக்கு என்ன ஆயிற்றோ என்ற கவலையுடன் ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டு நின்றவர்கள் சுற்றிலும் ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு, “அடியேய் மாயா! உனக்கு என்னதான்டி ஆச்சு?” என்றவாறே இன்னும் பலமாக அவளை உலுக்க,

“ஆஹ்! என்ன, என்ன?” என்றவாறே திருதிருவென அவர்கள் இருவரையும் பார்த்து விழித்துக் கொண்டு நின்ற மாயா தன் தோழிகளின் கேள்வியான பார்வையை எதிர்கொள்ள முடியாமல் சட்டென்று தலை குனிந்து கொண்டாள்.

“ஹேய்! உனக்கு என்னடி ஆச்சு? எதற்காக எங்களைப் பார்த்து இப்படி வெட்கப்படுற?”

“என்னது வெட்கமா? சேச்சே! அதெல்லாம் ஒன்னும் இல்லையே”

“ஏய்! முயல் பிடிக்கிற நாயை மூஞ்சைப் பார்த்தால் தெரியாதா? அதுதான் உன் முகத்தில் டண் கணக்கில் ஜொல்லு வடியுதே, ஒழுங்காக சொல்லிடு, யாரைப் பார்த்து இப்படி வெட்கப்படுற? சொல்லுடி”

“சீச்சீ! என்ன பேசுறீங்க நீங்க இரண்டு பேரும்? நான் யாரையும் பார்த்து வெட்கப்படல. நாலைந்து பொறுக்கிப் பசங்க என்கிட்ட வம்பு பண்ணிட்டு இருந்தாங்க, யாரோ ஒரு அண்ணா வந்து அவங்களை விரட்டி விட்டாங்க, நான் அந்த அதிர்ச்சியில் தான் அப்படியே நின்னுட்டேன், நீங்க வேற” என்றவாறே மாயா தன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு செல்ல,

அவளோடு சேர்ந்து நடை போட்ட படியே அவளைப் பார்த்து ஜாடையில் ஏதோ பேசிக் கொண்ட அவளது தோழிகள், “சரி, அந்த உதவி பண்ண அண்ணா யாரு? நீ ஒண்ணும் அவரைப் பார்த்து வெட்கப்படலேன்னா எங்ககிட்ட அவரோட டீடெயில்ஸ் சொல்லு நாங்க பார்த்துக்கிறோம்” என்று கூற,

சட்டென்று தன் நடையை நிறுத்தி விட்டு அவர்களைத் திரும்பிப் பார்த்து முறைத்தவள், “ஸ்கூல் படிக்கிற பசங்க மாதிரியா இரண்டு பேரும் பேசறீங்க? சீச்சீ! இப்படி எல்லாம் இன்னொரு தடவை என் கிட்ட பேசிடாதீங்க சொல்லிட்டேன்” என்று விட்டு வேகமாக தன் சைக்கிளில் ஏறி ஓடத் தொடங்க, அவளது தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

“அதுதானே பார்த்தோம், என்னடா சும்மா இருக்கிற பொண்ணு முகத்தில் ஏக்கர் கணக்கில் ஜொல்லு வடியுதேன்னு, இதுவரைக்கும் என்னவோ இவங்க எந்தப் பசங்களைப் பற்றியும் பேசாத ஆளு மாதிரி ஓவரா சீன் போடுறீங்க, மவளே நீ வாடி உனக்கு இருக்கு. அப்புறம் மாயா மேடம், நாளைக்கு நீங்க மறுபடியும் ஸகூலுக்கு வரத்தான் வேணும், அதை மறந்துடாதீங்க, அப்போ இருக்கு உங்களுக்கு கச்சேரி” என்றவாறே மாயாவைப் பின் தொடர்ந்து வந்த அவளது தோழிகள் இருவரும் அவளது காதில் வேண்டுமென்றே சத்தமாகக் கத்தி விட்டுச் செல்ல, மாயாவுக்கு அந்த ஊட்டிக் குளிரிலும் மெலிதாக வியர்க்க ஆரம்பித்தது.

“இவளுங்க சொன்ன மாதிரி நாளைக்கு ஏதாவது வம்பு பண்ணுவாளுங்களா? சேச்சே! நம்ம யாரு? தி கிரேட் மாயா! நம்ம கிட்ட அவ்வளவு ஈஸியாக ஏதாவது விஷயத்தை எடுத்துட முடியுமா என்ன? ஏதோ அந்த ஆளு கொஞ்சம் பார்க்க ஸ்மார்டாக, ஹீரோ மாதிரி இருந்தாங்க, இதற்கெல்லாம் போய் இந்த மாயா விழுவாளா? இந்த மாயா வருங்கால மாயா போட்டோகிராபி ஆன்ட் டிசைனிங் கம்பெனியோட முதலாளி ஆகப்போற, அவ போய் இப்படி எல்லாம்? நோ, நெவர், சான்ஸே இல்லை” என தனக்குள்ளேயே பேசிக் கொண்டபடி தன் வீடு வந்து சேர்ந்திருந்த மாயா அதன் பிறகு இரண்டு நாட்கள் அந்தப் புதியவனைப் பற்றி முழுமையாக மறந்தே போயிருந்தாள்.

இனி அந்த நபரைப் பார்த்தாலும் தான் எதுவும் செய்யப் போவதில்லை என தனக்குள்ளேயே முடிவெடுத்துக் கொண்டவள் அதில் தான் வெற்றியடைந்ததாகவும் நினைத்திருக்க, அவள் எண்ணம் மொத்தத்தையும் தவிடு பொடியாக்குவது போல நடந்து கொண்டிருந்தது ஒரு நிகழ்வு.

அவள் அவனை சந்தித்து சரியாக இரண்டு நாட்கள் கழித்து இருந்த தருணம், அவளது பாடசாலையின் எதிரே இருந்த ஜுஸ் கடையின் ஒரு பக்கம் மறைந்து நின்று தான் எடுத்த முடிவை எல்லாம் முற்றிலும் மறந்தவளாக அவனைப் பார்த்து வாய் பிளந்து நின்று கொண்டிருந்தாள் மாயா…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!