எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 12

IMG_20221031_134812

இத்தனை காலமாக ஒரு வார்த்தை கூட அதட்டிப் பேசிடாத தன் பிள்ளையை அவசரப்பட்டு அடித்து விட்டோமே என்கிற குற்றவுணர்வுடன் கண் மூடி நின்று கொண்டிருந்த பத்மாவதி ஏதோ வீழ்வது போல சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க, அங்கே மாயா பேச்சு மூச்சற்று‌ மயங்கிக் கிடந்தாள்.

உயிரற்ற உடல் போல கிடந்த தன் பிள்ளையைப் பார்த்ததுமே அத்தனை நேரமாக அவர் மனதிற்குள் எரிந்து கொண்டிருந்த கோபத்தை மொத்தமாக தூக்கி எறிந்தவர், “ஐயோ! மாயா, உனக்கு என்ன ஆச்சு? ஐயோ! என் பிள்ளையை அவசரப்பட்டு‌ அடிச்சுட்டேனே” என்றவாறே அவளது முகத்தில் சிறிது தண்ணீரைத் தெளித்து அவளை மயக்கத்தில் இருந்து எழுப்ப முயல, ஒரு சில நிமிடங்களுக்குப் பின்னர் மாயா மெல்ல மெல்லத் தன் கண் திறந்து பார்த்தாள்.

தன்னை அணைத்தபடி கண்கள் கலங்க அமர்ந்திருந்த தன் அன்னையைப் பார்த்ததுமே அவரைத் தாவி அணைத்துக் கொண்டவள், “அம்மா என்னை மன்னிச்சுடும்மா, நான் பண்ணது தப்புத் தான்ம்மா, அதற்காக என்னை ஒதுக்கி எல்லாம் வைச்சுடாதேம்மா. எனக்கு நீங்க‌ எல்லோரும் தான்ம்மா முக்கியம், வேறு யாரும் எனக்கு முக்கியம் இல்லை. இனிமேல் நீங்க என்ன சொன்னாலும் அது படியே நான் நடந்துக்குவேன்ம்மா. உங்க வார்த்தையை மீறி நான் எதுவுமே பண்ண மாட்டேன், இனி நான் எதுவுமே பண்ண மாட்டேன்ம்மா” என்றவாறே கதறியழ, அவளது அழுகையைத் தாங்க முடியாமல் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டவர் சிறிது தயக்கத்துடன் தன் கணவரைத் திரும்பிப் பார்க்க, அவரோ ஒரு சில நிமிடங்கள் அமைதியாக இருந்து விட்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறிச் சென்றிருந்தார்.

அதன் பிறகு வந்த நாட்கள் எல்லாம் பத்மாவதி மாயாவுடன்‌ இயல்பாக பேச ஆரம்பித்திருந்தாலும் நாராயணன் மாத்திரம் தன் கோபத்தை விட்டு இறங்கி வந்திருக்கவே இல்லை.

அவரைப் பொறுத்தவரையில் தன் மகள் செய்தது மிகப்பெரிய தவறு என்றுதான் அவர் மனதில் ஆழப்பதிந்திருந்தது.

அதை மறந்து, மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் அப்போது அவருக்கு இருக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

ஒருவழியாக மாயாவின் ப்ளஸ் டூ பரீட்சைகள் ஆரம்பித்திருக்க, அத்தனை காலமாக அவளுடன் ஒரு வார்த்தை கூட முகம் கொடுத்துப் பேசிராத நாராயணன் அவளுக்குப் பரீட்சைக்குச் செல்லும் முன் வாழ்த்து சொல்லியிருக்க, அவரது அந்த சில வார்த்தைகளே அவளுக்கு அத்தனை ஆனந்தத்தை அள்ளித் தந்தது போல் இருந்தது.

இத்தனை நாட்களாக தன் மீது கோபத்தில் இருந்த தன் தந்தை இப்போது தன்னை மன்னித்து விட்டார் என்கிற மனநிலையுடன் சந்தோஷமாக தன் பரீட்சைகளை எழுத ஆரம்பித்தவள், தன் இறுதிப் பரீட்சை முடியும் வரை அந்த சந்தோஷத்தில் இருந்து வெளி வரவே இல்லை.

சித்தார்த் அவளிடம் இறுதியாக சொல்லியிருந்தது போல நாட்கள் செல்லச் செல்ல அவள் தன்னை மறந்து விடுவாள் என்று சொல்லியிருந்தது உண்மையாகுவது போலவே மாயாவும் அவனது நினைவுகளில் இருந்து முழுவதுமாக வெளியேறி வந்திருந்தாள்.

அன்று தனது இறுதிப் பரீட்சையை‌ எழுதி விட்டு‌ வெகு சந்தோஷமாக தன் வீடு வந்து சேர்ந்திருந்த மாயா தங்கள் வீட்டு வாயிலில் நின்றுகொண்டிருந்த வாகனங்களையும், வாயிலில் நிறைந்து கிடந்த பாதணிகளையும் பார்த்து சற்று குழப்பத்துடன், “நம்ம‌ வீட்டுக்கு இவ்வளவு பெரிய வாகனத்தில் இவ்வளவு நிறைய ஆட்கள் எதற்காக வந்திருப்பாங்க?” என்ற யோசனையுடனேயே வீட்டிற்குள் வந்து சேர,

அவள் வருகைக்காகவே காத்திருந்தது போல அவளருகில் அவசரமாக வந்து நின்ற பத்மாவதி, “இதோ மாயா வந்துட்டா, கொஞ்ச நேரத்தில் அவளை‌ ரெடி பண்ணிக் கூட்டிட்டு வர்றேன்” என்றவாறே மாயாவின் எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் அவளை இழுத்துக் கொண்டு சென்றவர் அவளது மறுப்பை மீறி அவளைத் தயார்படுத்த ஆரம்பித்தார்.

“அம்மா, இங்கே என்ன நடக்குது? இவங்க எல்லாம் யாரு? எனக்கு இப்போ இதெல்லாம் வேண்டாம்மா. நான் இன்னும் நிறைய நிறைய படிச்சு, பெரிய வேலைக்குப் போய், நிறைய சம்பாதிச்சு உன்னையும், அப்பாவையும் நல்லாப் பார்த்துக்கணும்மா. தயவுசெய்து இதை எல்லாம் வேணாம்னு சொல்லும்மா” மாயாவின் கெஞ்சலைக் கேட்டு ஒரு கணம் பத்மாவதி தயங்கி நிற்க,

“என்ன பத்மா? எல்லாம் ரெடியா?” என்றவாறே நாராயணன் அங்கே வர,

சட்டென்று தன் தயக்கத்தை மறைத்துக் கொண்டவர், “இதோ ஆச்சுங்க” என்றவாறே மாயாவை மீண்டும் தயார்படுத்த ஆரம்பித்தார்.

“அப்பா, நீங்களாவது நான் சொல்லுவதைக் கேளுங்கப்பா” மாயா சிறு தயக்கத்துடன் தன் தந்தையின் எதிரே சென்று நிற்க,

அவளைத் திரும்பியும் பார்க்காதவர், “என்ன பத்மா அன்னைக்கு பேசுனது எல்லாம் உன் பொண்ணுக்கு மறந்து போச்சா? நம்ம என்ன சொன்னாலும் கேட்பேன்னு பெரிதாக வசனம்‌ எல்லாம் பேசுனா, ஆனா இப்போ என்னவோ எல்லாம் பேசுறா? அவ மனதில் என்னதான் நினைச்சுட்டு இருக்காளாம்? ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரி பேசுனா நம்ம‌ எல்லாவற்றையும் பார்த்துட்டு இருக்கணுமா? ஒழுங்கு மரியாதையாக தயாராகி வந்து எல்லோருக்கும் காஃபி கொடுத்துட்டு அவளைப் போகச் சொல்லு, வேறு எதுவும் அவ பேசவோ, சொல்லவோ தேவையில்லை, கல்யாணத்தன்னைக்கு வந்து மணமேடையில் உட்கார்ந்தால் மட்டும் போதும். அதை விட்டுட்டு வேறு ஏதாவது எதிர்த்துப் பேசினால் எனக்கு ஒரு பையன் மட்டும் தான் பிள்ளையாக இருப்பான்.

இன்னமும் இவ பின்னாடியே காவல் காத்துக் கொண்டு எப்போ எந்த வம்பை இழுத்துட்டு வருவான்னு பயந்து பயந்து என்னால இருக்க முடியாது” என்று விட்டு அங்கிருந்து வெளியேறிச் சென்று விட, இன்னமும் தன் தந்தை தன்னை மன்னிக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டவள் அவர் பேசி விட்டுச்‌ சென்ற வார்த்தைகளை எல்லாம் கேட்டு மொத்தமாக தனக்குள் உடைந்து போய் ஒரு சிலை போல அங்கே வந்திருந்தவர்கள் முன்னால் சென்று நின்று விட்டு, பின்னர் மீண்டும் தன்னைறைக்குள் வந்து அடைந்து கொண்டாள்.

அந்தப் பெண் பார்க்கும் படலம் முடிந்து ஒரு மாதத்தில் மாயாவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்க, தன்னால் இனி எதுவும் செய்ய முடியாது என்று புரிந்து கொண்டவள் அந்த நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்திருந்தாள்.

திருமணம் என்றால் என்ன? அந்த திருமண வாழ்வு எப்படி இருக்கும்? என்று எந்தவொரு தெளிவுமே இல்லாமல் அந்தப் புதிய பந்தத்திற்குள் நுழைந்திருந்தவள் ஏதேதோ எண்ணங்களுடன்‌ அவளது கணவனின் அறையில் அமர்ந்திருந்த தருணம் அவளது கணவன் ராஜேஷ் சிறு புன்னகையுடன் அவளருகில் வந்து அமர்ந்து கொண்டான்.

ராஜேஷ் மாயாவின் அண்ணன் ரகுவின் தோழன், ஒருமுறை அவர்கள் வீட்டுக்கு சென்றிருந்த தருணம் ஏதேச்சையாக ரகுவைப் பார்த்துப் பிடித்துப் போன நாராயணன் அவர்கள் வீட்டில் அது பற்றிப் பேசி ஒருவழியாக இந்த திருமணத்தை நடத்தி முடித்திருந்தார்.

ராஜேஷும் பெரிதாக படித்திருக்கவில்லை, சிறு வயதிலேயே தன் படிப்பை இடை நிறுத்தி விட்டு அவர்கள் வீட்டுக்கு அருகிலேயே ஒரு உணவகத்தை நடத்தி வருகிறான்.

வீட்டுக்கு முதல் பிள்ளையான ராஜேஷ் தான் தன் தங்கைகள் இருவரையும் படிப்பிக்கும் செலவை ஏற்று அதைச் சரியாக கடைப்பிடித்தும் வருகிறான்.

ஆரம்பத்தில் மாயாவின் வயதை எண்ணி அவளைத் திருமணம் செய்யத் தயங்கியிருந்தவன் பின்னர் அவளை நேரில் பார்த்ததும் பிடித்துப் போய் விடவே அவளைத் திருமணம் செய்ய சம்மதித்திருந்தான்.

திருமணம் ஆன முதல் நாளே அவளை இந்த புதிய‌ உறவை ஏற்றுக் கொள்ள சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது‌ என்று நினைத்திருந்தவன் அவளது பதட்டத்தையும், தயக்கத்தையும் போக்க‌ எண்ணி அவளைப் பற்றியும், அவளது விருப்பு வெறுப்புகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்க, சிறிது நேரத்தில் மாயாவும் தனது தயக்கத்தை விட்டு‌ வெளிவந்து அவனுடன் இயல்பாக பேச ஆரம்பித்திருந்தாள்.

பேச்சுவாக்கில் ராஜேஷ் மாயாவிடம் அவளுக்கு இதற்கு முன்னர் வேறு யாரையாவது பிடித்திருந்ததா என்று கேட்க, அவன் இத்தனை நேரம் இயல்பாக பேசியது போல இதையும் கேட்கிறான் போலும் என்று எண்ணியவள் சித்தார்த்தைப் பற்றியும், அதில் நடந்த குழப்பத்தைப் பற்றியும் கூற அத்தனை நேரமும் இயல்பாக பேசிக் கொண்டிருந்தவன் அவள் சித்தார்த்தைப் பற்றி சொன்ன அடுத்த கணமே தன் முகம் பாறையென இறுக அமைதியாக அமர்ந்திருந்தான்.

அவ்வளவு நேரமும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தவன் திடீரென அமைதியாக அமர்ந்திருந்தது மாயாவுக்கு சிறிது அச்சத்தை ஏற்படுத்துவது போல இருக்கவே தயக்கத்துடன் அவனை அழைத்தவள் அவனது கண்களில் தெரிந்த ரௌத்திரத்தைப் பார்த்ததுமே சட்டென்று அமைதியாகிப் போனாள்.

“நான் அப்போவே சந்தேகப்பட்டேன், இந்த சின்ன வயதில் எதற்காக இவ்வளவு அவசர அவசரமாக உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு, இப்போதான் புரியுது உன்னோட லட்சணம், இதில் உங்க அப்பா என் பொண்ணு தங்கம், வைரம்ன்னு எப்படி எல்லாம் பொய் சொல்லி எங்களை ஏமாற்றி இருக்கான்”

“இதோ பாருங்க, நான் ஒண்ணும் உங்களை ஏமாற்றி கல்யாணம் பண்ணிக்கல, எங்க அண்ணாகிட்ட நடந்த எல்லாவற்றையும் சொல்லி உங்ககிட்ட சொல்லுங்கன்னு தான் சொல்லியிருந்தேன், இப்போ கூட நீங்க இந்த விஷயத்தைப் பற்றி கேட்கவும் உங்களுக்கு எல்லாம் தெரியும்னு தான் சொன்னேன்”

“ஓஹ்! அப்போ ஒருவேளை எனக்கு தெரியலைன்னா சொல்லி இருக்க மாட்ட இல்லை” என்றவாறே கோபமாக எழுந்து நின்றவன் ஆண் என்றால் பெண்ணை அடக்கி ஆளுபவன் என்கிற நினைப்பில் அவளை கடுமையாகத் தாக்கியது மட்டுமில்லாமல் அவளை வார்த்தைகளால் தினமும் காயப்படுத்த ஆரம்பித்தான்.

முதல் ஒன்றிரண்டு நாட்கள் அவனது செயல்கள் எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்துக் கொண்டு இருந்தவள் தன் திருமணமான இரண்டாம் வாரம் தன் மேல் மீண்டும் கை வைக்கப் பார்த்தவனின் கைகளைத் திருகி அப்படியே தன் ஆத்திரம் தீரும் மட்டும் சாரமாரியாகத் தாக்கத் தொடங்கினாள்.

“நீங்க எல்லோரும் பேசுவதைக் கேட்டு இத்தனை நாட்களாக நான்தான் ஏதோ தப்பு பண்ணிட்டேன்னு அமைதியாக இருந்தேன், ஆனா இப்போ யோசித்துப் பார்த்தால் நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்? ஒரு பையனுக்கு ஒரு பொண்ணைப் பார்த்ததுமே பிடித்துப் போகலாம், அவளைப் பின்தொடரலாம், அவகிட்ட தன் காதலை சொல்லலாம். ஆனால் இதே விஷயத்தை ஒரு பொண்ணு பண்ணால் அவ தப்பானவ, அவ சரியில்லாதவ, அப்படித்தானே?

இப்படிக் கேவலமான மனநிலை இருக்கும் உங்களை மாதிரி ஆளுங்களை எல்லாம் இந்த இடத்திலேயே சமாதி பண்ணிடனும் போலத்தான் இருக்கு, ஆனா உன்னை மாதிரி ஒரு ஈனப்பிறவியைக் கொன்னு அந்தப் பாவத்தை நான் சுமக்க விரும்பல. உன்னை மாதிரி ஆளுங்களை எல்லாம் திருத்த முடியாது, அதேமாதிரி உன்னை திருத்தி பெரிய மகான் ஆக்குவதும் என் வேலை இல்லை” என்றவாறே ராஜேஷின் கன்னத்தில் பளாரென ஒரு அறை அறைந்தவள் தன் உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தன் வீட்டை வந்து சேர்ந்திருந்தாள்‌.

முகம் எல்லாம் சிவந்து போக, முகத்தில் ஒன்றிரண்டு காயத்தழும்புகளுடனும், கையில் பையுடனும் நின்று கொண்டிருந்த தன் மகளைப் பார்த்ததும் ஒரு நொடி பத்மாவதிக்கு தன் இதயமே நின்று விட்டது போல இருந்தது.

பூப்போல வளர்த்த தன் மகளை ஒரு முறை கை நீட்டி அடித்ததற்கே ஆயிரம் முறை அவளிடம் மன்னிப்பு கேட்டிருந்தவர் இப்போது தனது மகள் நிற்கும் நிலையைப் பார்த்து மனம் துவண்டு போக அவளை உள்ளே அழைத்துக் கொண்டு வரப்பார்க்க, நாராயணன் சிறு கோபத்துடன் அவரது வழியை மறித்தவாறு வந்து நின்று கொண்டார்.

“இப்போ எதற்காக இவளை இங்கே அழைச்சிட்டு வர்ற? அதுதான் அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை அமைச்சுக் கொடுத்தாச்சு இல்லையா? இனிமேல் என்ன நடந்தாலும் அவ அங்கதான் இருக்கணும். இவ பண்ண வேலைக்கு இந்தளவுக்கு அவங்க அவளை ஏற்றுக்கொண்டதே பெரிது”

“என்னங்க!” தன் கணவரின் பேச்சைக் கேட்டு ஆத்திரம் பொங்க அவரது சட்டைக் காலரைப் பற்றி உலுக்கிய பத்மாவதி,

“என்ன சொன்னீங்க? இவ பண்ண காரியமா? அப்படி அவ என்ன தப்பு பண்ணிட்டா, தன் மனசுக்கு புடிச்ச ஒரு ஆளுகிட்ட‌ உங்களை எனக்குப் பிடிச்சிருக்குன்னு தானே சொன்னா? இதே உங்க பையன் இன்னொரு பொண்ணு கிட்ட‌ இப்படி சொல்லியிருந்தா நீங்க இப்படி அவனை காயப்படுத்தி இருப்பீங்களா? இல்லை, ஏன் தெரியுமா? அவன்தான் ஆம்பள ஆச்சே.

இந்த உலகத்தில் ஆம்பிளைக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயம் தானே? இதோ பாருங்க, நான் இப்போ சொல்லுவதை நல்லா கேட்டுக்கோங்க, இனிமேல் என் பொண்ணு இங்கே என் கூடதான் இருப்பா, இஷ்டம் இருக்கிறவங்க இருங்க, இல்லாதவங்க போங்க. என் பொண்ணை எப்படிக் காப்பாற்றுவதுன்னு எனக்குத் தெரியும்” என்றவாறே அவரை முறைத்துப் பார்த்தவர்‌ மாயாவை உள்ளே அழைத்துக் கொண்டு சென்று விட, அவரோ தன் மனைவியின் அந்தப் புதிய பரிமாணத்தைப் பார்த்து திகைத்துப் போய்‌ நின்றிருந்தார்.

பத்மாவதி கூறிய வார்த்தைகளில் இருந்து உண்மை அவரை நேரடியாக தாக்கியதால் என்னவோ அதன் பிறகு அவர் அந்த விடயத்தைப் பற்றி எப்போதும் பேசவே இல்லை.

அதன்பிறகு ரகுவிற்கும் ஒரு நல்ல இடத்தில் திருமணம் முடிந்திருக்க மாயா தன் திருமணம் முடித்த இரண்டாம் வருடம் ராஜேஷை சட்டபூர்வமாக விவாகரத்து செய்திருந்தாள்.

ஆரம்பத்தில் இருந்தே ரகுவின் மனைவி தேவிக்கு மாயாவுடன் அவ்வளவாக ஒத்துப் போவதில்லை, இப்போது அவளுக்கு விவாகரத்து வேறு நடந்திருக்க, அதையே ஒரு பெரும் காரணமாக எடுத்துக் கொண்டவள் ரகுவை அழைத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள்.

திருமணம் ஆன புதிதில் மனைவியின் பேச்சை மீற‌ முடியாமல் அவளைப் பின் தொடர்ந்து சென்றிருந்தவன் அவ்வப்போது தேவிக்குத் தெரியாமல் தங்கள் வீட்டினரை சந்தித்துக் கொண்டுதான் இருந்தான்.

தன் பிள்ளைகள் இருவரும் ஒவ்வொரு திசையில் செல்வதைப் பார்த்து பத்மாவதியின் மனது மெல்ல மெல்லப் பலவீனமாக ஆரம்பித்திருக்க, நாளடைவில் அந்தப் பலவீனம் அவரது உடலையும் தாக்கியிருந்தது.

வீட்டுச் செலவுகளை சமாளிக்கவும், தன் அன்னையின் மருத்துவ செலவுகளைக் கண்காணிக்கவும் நாராயணன் கொண்டு வரும் பணம் போதாது என்பதை உணர்ந்து கொண்ட மாயா கொஞ்சம் கொஞ்சமாக தன் தந்தையிடமிருந்து அவரது தொழிலைக் கற்றுக் கொண்டு அவரோடு இணைந்து சிறிது சிறிதாக உழைக்க‌ ஆரம்பித்திருந்தாள்.

நாராயணன் மற்றும் மாயா உழைக்கும் பணம் அப்போதைக்கு அவர்களது தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக‌ இருக்க, ஒருவழியாக இந்த நிலையில் இருந்து நாம் மீண்டு விடலாம் என்று அவள் நினைத்த தருணத்தில் அவளை இன்னமும் உடைந்து போகச் செய்வது போல பத்மாவதி இந்த உலகை விட்டுப் பிரிந்திருந்தார்.

தன் தாயின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் மாயா மொத்தமாக நிலைகுலைந்து போய் நின்ற வேளை, ஏற்கனவே மாயாவின் வாழ்க்கையை கெடுத்து விட்டோம் என்கிற நாள் கடந்த குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருந்த நாராயணன் இப்போது தன் மனைவியின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மொத்தமாக பக்கவாதத்தில் வீழ்ந்திருந்தார்.

அடுத்தடுத்து நடந்த கஷ்டங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் துவண்டு போயிருந்த மாயா ஒருவழியாக தன்னைத் தேற்றிக் கொண்டு மீண்டும் தன்னை இயல்பு வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தியிருந்தாலும் அவளால் அவளது கடந்த கால வாழ்க்கை அவளுக்கு கொடுத்த சில கசப்பான அனுபவங்களை ஒருபோதும் மறக்கவே முடியவில்லை.

அதிலும் சித்தார்த் அன்று நடந்த விடயங்களை ஏதோ ஒரு வகையில் சமாளித்திருந்தால் இன்று தனக்கு ஏதோ ஒரு வகையில் நல்லது கிடைத்திருக்கலாம் என்றும் அவளுக்கு அடிக்கடி தோன்றிக் கொண்டே இருக்கும்.

அதனால்தான் என்னவோ தன் வாழ்க்கையில் நடந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அவன்தான் காரணம் என்று அவள் உள்மனது ஆழமாக நம்ப ஆரம்பித்திருந்தது.

அந்த நம்பிக்கை தான் இன்று அவளை சித்தார்த்தை அந்தளவுக்கு வெறுக்கச்‌ செய்திருந்தது மட்டுமின்றி அவனுக்கு ஏதாவது ஒரு வகையில் மிகப்பெரும் தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்றும் அவளைத் தூண்டிக் கொண்டிருக்க, உண்மையிலேயே அவள் மனதில் இருப்பது அவன் மீதான வெறுப்பா? இல்லை காதலா? என்பதை இனி வரும் நாட்கள் தான் அவளுக்குத் தெள்ளத் தெளிவாக உணர்த்தும்……