சித்தார்த், கௌசல்யா மற்றும் கௌசிக் ஊருக்குச் செல்வதற்காக வேண்டி தங்கள் பொருட்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி வைத்துக் கொண்டு நிற்க, சாவித்திரி மாத்திரம் எந்தவொரு வேலையையும் முழுமையாக மனமொத்துச் செய்ய முடியாதது போல சோர்வாக அமர்ந்திருந்தார்.
எப்போதும் கலகலப்பாக சுற்றி வரும் தங்கள் அன்னை இப்போது சோர்வாக ஒரு இடத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்து குழப்பம் கொண்ட சித்தார்த், “அம்மா! என்ன ஆச்சு உங்களுக்கு? உடம்புக்கு எதுவும் முடியலையா? ரொம்ப டல்லாக இருக்கிற மாதிரி தெரியுது” என்று வினவ,
அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவர், “உடம்புக்கு எல்லாம் எதுவும் இல்லை சித்தார்த் பையா, மனது தான் ஒரு மாதிரி கவலையாக இருக்கு. ஊருக்குப் போவதற்கு இன்னும் நான்கு, ஐந்து மணி நேரம் இருக்குத்தானே? அதற்கு முன்னாடி ஒரு தடவை மாயாவைப் போய் பார்த்துட்டு வரலாமா?” என்று கேட்க, சித்தார்த் அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.
“என்னாச்சு சித்தார்த்? பதிலே சொல்ல மாட்டேங்குற?”
“அதில்லைம்மா, இன்னைக்கு அவங்க வேறு எங்கேயாவது வேலையாகப் போய் இருந்தால் எங்கேன்னு போய் தேடுறது, அதுதான் யோசிக்கிறேன்”
“நேற்று நான் மாயா கூட பேசினேன்பா, அவ இன்னைக்கு வீட்டிலேதான் இருப்பேன்னு சொன்னா. அவ அப்பாவும் உடம்பு சரியில்லாமல் இருக்காரு, அப்படியே அவ வீடு வரைக்கும் போய் அவரையும் பார்த்துட்டு ஊருக்குப் போகலாமா?” சாவித்திரி ஏக்கமாக சித்தார்த்தைப் பார்த்து வினவ, அவரது ஆசைக்கு மறுப்பு சொல்ல மனமில்லாதவன் சரியென்று தலையசைத்திருந்தான்.
“ஹையோ! ரொம்ப தாங்க்ஸ் டா சித்தார்த் பையா, நான் இப்போவே போய் ஸ்வீட் ஏதாவது இருக்கும், அதை எடுத்துட்டு வர்றேன், நீ போய் வண்டியை ரெடி பண்ணு, நம்ம போகலாம்” என்றவர் சிறு குழந்தை போல் சந்தோஷமாக சமையலறை நோக்கிச் செல்ல,
அவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு நின்றவன் சட்டென்று ஏதோ ஞாபகம் வந்தவனாக, “சாவிம்மா எல்லாம் ஓகே, அவங்க வீட்டு அட்ரஸ் எனக்குத் தெரியாதே” என்று கூற,
அவரோ, “அதெல்லாம் நான் தெளிவாக அவகிட்ட கேட்டு வைச்சுட்டேன், நீ வண்டியை ஓட்டிட்டு மட்டும் வந்தால் போதும்” என்றவாறே முகம் கொள்ளாப் புன்னகையுடன் அவனைப் பார்த்து கண்ணடித்து விட்டுச் செல்ல, சித்தார்த் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே தங்கள் காரை நோக்கி நடந்து சென்றான்.
“மாயா முன்னால் இனிமேல் போகக்கூடாதுன்னு எல்லாம் அன்னைக்கு முடிவெடுத்தேன், ஆனா இப்போ மறுபடியும் அவளைத் தேடிப் போய் சங்கடப்படுத்தப் போறேனோ தெரியலையே, என்னைப் பார்த்தால் அவ எப்படி ரியாக்ட் பண்ணுவா? கண்டிப்பாக கோபப்படுவா, வேறு என்ன பண்ணுவா? ஏன்னா நம்ம வாய் அப்படி ஒரு வேலையைத் தான் செய்து வைத்திருக்கு. சரி, பரவாயில்லை. ஊருக்குப் போவதற்கு முன்னாடி ஒரு தடவை நாமும் மாயாவைப் பார்த்துவிட்டு போகலாம், அவளை இனி எப்போ நம்ம பாப்போம்ன்னு தெரியலையே” என தனக்குள் பேசியபடியே சித்தார்த் தங்கள் காரை இயக்க ஆரம்பிக்க, சரியாக சாவித்திரியும் அங்கே வந்து சேர்ந்திருந்தார்.
“சரிடா கண்ணா, போகலாம்” என்றவர் மாயாவின் வீட்டுக்குச் செல்லும் வழியை சொல்லிக் கொண்டே வர சித்தார்த்தும் அமைதியாக தங்கள் காரை இயக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்.
பாதையின் இருபுறமும் ஊசியிலை மரங்கள் நிறைந்திருந்த ஒரு சாலையைக் கடந்ததும் அந்த சாலையை ஒட்டியது போல இருந்த ஒரு வீட்டின் முன்னால் தங்கள் காரை நிறுத்தச் சொன்ன சாவித்திரி அந்த வீட்டின் அருகே சென்று பார்க்க, அதுவோ ஆள் அரவமின்றி பூட்டிக் கிடந்தது.
“என்ன இது? வீடு பூட்டியிருக்கு. இந்த வீட்டைத் தானே மாயா அவளோட வீடுன்னு சொன்னா?” என்றவாறே சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தவர் அந்த வீட்டின் அருகே இருந்த இன்னொரு வீட்டின் முன்னால் சென்று நிற்க, சித்தார்த் அவசரமாக தன் காரிலிருந்து இறங்கி சாவித்திரியின் அருகே சென்று நின்று கொண்டான்.
“என்னாச்சு ம்மா, வீடு எதுன்னு நினைவு இல்லையா?”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை டா, வீடு பூட்டி இருக்கு அதுதான்”
“நான்தான் அப்போவே சொன்னேனேம்மா, அவங்க வேலையாக எங்கேயாவது போயிருப்பாங்கன்னு. நீங்கதான் சர்ப்ரைஸ் அது, இதுன்னு சொல்லி ஒரு கால் கூட எடுக்காமல் புறப்பட்டு வந்துட்டீங்க, இப்போவாச்சும் அம்.. க்கும், மாயாவுக்கு கால் பண்ணிப் பாருங்க” என்று கூறிய சித்தார்த்தைப் பார்த்து சரியென்று தலையசைத்தவர் தன் ஃபோனை எடுத்துக் கொண்டு சற்று தள்ளிச் சென்ற தருணம் அவர்கள் நின்று கொண்டிருந்த வீட்டில் இருந்து ஒரு பெண் வெளியேறி வந்தார்.
“யாரு சார் நீங்க? யாரு வேணும்?”
“அது இந்த வீட்டில் மாயான்னு ஒருத்தங்க இருந்தாங்களே, அவங்களைத்தான் பார்க்க வந்தோம், வீடு பூட்டியிருந்தது, அவங்க எங்கேன்னு உங்களுக்குத் தெரியுமா?”
“மாயாவா? மாயா உங்களுக்கு என்ன வேணும்? இதற்கு முன்னாடி உங்களை நான் இங்கே பார்த்தது இல்லையே” புதிதாக ஒரு ஆடவன் வந்து மாயாவைப் பற்றி விசாரிப்பதைப் பார்த்து சிறு சந்தேகம் கொண்டது போல அந்தப் பெண் சித்தார்த்தைப் பார்த்து வினவ,
அவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவன், “யாரோ ஒரு பையன் புதிதாக வந்து ஒரு பொண்ணைப் பற்றி விசாரிப்பதைப் பார்த்து நீங்க சந்தேகப்படுவது தப்பே இல்லை மேடம், ஆனா ஆக்சுவலா மாயாவைப் பார்க்க வந்தது நான் இல்லை, எங்க அம்மா தான்” என்றவன் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த தன் அன்னையைப் பார்த்து கையசைக்க, அவரும் அவனது அருகில் வந்து நின்று கொண்டார்.
“மாயா ஃபோனை எடுக்கவே இல்லை சித்தார்த் பையா, இப்போ என்ன பண்றது? ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ?” என்றவாறே சாவித்திரி சிறு கவலையுடன் சித்தார்த்தைப் பார்த்து வினவ,
அவரது தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்தவன், “அதெல்லாம் ஒன்னும் இருக்காதும்மா. இவங்க கிட்ட கேட்டுப்பாருங்க, மாயாவைப் பற்றி நான் கேட்டால் என்னை சந்தேகமாகப் பார்க்கிறாங்க” என்றவன் சற்றுத் தள்ளி நின்று கொள்ள,
அவனைப் பார்த்து சமாளிப்பது போல புன்னகை செய்த அந்தப் பெண், “அப்படி எல்லாம் இல்லை தம்பி, இதுவரைக்கும் உங்களை இங்கே பார்த்தது இல்லையா அதுதான், மற்றபடி வேறு எதுவும் இல்லை. அப்புறம் மாயா பக்கத்தில் இருக்கும் ***** ஹாஸ்பிடலுக்கு போயிருக்கா. கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி மாணிக்கம் அண்ணாவுக்கு திடீர்னு மூச்சுத் திணற ஆரம்பிச்சுடுச்சு, அதுதான் அவரை அங்கே அட்மிட் பண்ணியிருக்கா, நானும் அவளுக்கு கால் பண்ணேன், அவ எடுக்கல, நீங்க வேணும்னா அங்கே போய் பாருங்க” என்று கூறிய அடுத்த நொடியே சித்தார்த் மற்றும் சாவித்திரி அவசர அவசரமாக அந்த ஹாஸ்பிடல் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.
அந்த ஹாஸ்பிடல் செல்லும் வழி முழுவதும் சித்தார்த் மற்றும் சாவித்திரி மாயாவை எண்ணி வெகுவாகத் தவித்துப் போனது மட்டுமின்றி அவளுக்கு எந்தவொரு கஷ்டங்களும் வந்து விடக்கூடாது என்று வேண்டிக்கொள்ள மறக்கவும் இல்லை.
***** ஹாஸ்பிடல் முன்னால் தன் வண்டியை நிறுத்திய சித்தார்த் சாவித்திரியை அழைத்துக் கொண்டு நேராக ரிசப்ஷன் சென்று விசாரிக்க, அவர்கள் மாணிக்கத்தை அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருப்பதாக சொன்னார்கள்.
“ஐ.சி.யூ வா?” என்றவாறே சாவித்திரி அந்த இடத்தில் தயங்கி நிற்க, அவரை ஆறுதல் படுத்தி அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கி அழைத்துச் சென்றவன் அங்கே ஒரு நாற்காலியில் உண்ரவே இல்லாத சிலை போல அமர்ந்திருந்த மாயாவைப் பார்த்ததும் முற்றிலும் நொறுங்கித் தான் போனான்.
அன்று ஐந்து வருடங்களுக்கு முன்னால் அவளை இறுதியாகப் பார்த்த போது அவளது முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தையும், கவலையையும் இப்போது மறுபடியும் அவளது முகத்தில் பார்த்ததும் அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
இன்னும் சொல்லப்போனால் தன் அருகில் நின்று கொண்டிருந்த தன் அன்னை கூட அவனுக்கு மறந்து தான் போனார்.
மாயாவின் கலங்கிய தோற்றத்தைப் பார்த்ததும் கால்கள் தடுமாற அவளருகில் சென்று நின்றவன், “அம்மு!” என நா தழுதழுக்க அழைக்க, அவளோ அவனது அழைப்பைக் கேட்டதும் சுற்றம் மறந்து அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
அவளை அந்தக் கணமே தன் அணைப்பில் வைத்து ஆறுதல் படுத்தி வேண்டும் என்பது போல அவனது மனம் பதற, அவனது கைகளோ அவனறியாமலேயே அவளை நோக்கி நீண்டது.
அவனது அழைப்பிற்காக காத்திருந்தது போல மாயாவும் நொடியும் தாமதிக்காமல் அவனது அணைப்பில் தஞ்சம் புகுந்தது கொள்ள, அந்த நொடியே சித்தார்த் தன் வாழ்க்கையில் இனி ஒருபோதும் மாயாவை இழந்து விடவே கூடாது என்று உறுதியாக முடிவெடுத்துக் கொண்டான்.
சில நாட்களுக்கு முன்பு அவளது வாழ்வை விட்டு மொத்தமாக தூரமாகிப் போக நினைத்தவன் இப்போது அவளைத் தனது வாழ்க்கையாகவே மாற்றிக் கொள்ள முடிவெடுத்திருக்க, அவர்கள் இருவரது மௌனமான காதலை சாவித்திரி உணர்ந்து கொள்ளாமல் இருக்க முடியுமா என்ன?
மாயா அழுது முடிக்கும் வரை அமைதியாக நின்று கொண்டிருந்தவர் அவளது அழுகை குறைவடைந்ததும் அவளது அருகில் வந்து அவளது தலையை வருடிக் கொடுக்க, அந்த ஸ்பரிசத்தில் அவரை நிமிர்ந்து பார்த்தவள் அப்போதுதான் தான் சித்தார்த்துடன் எந்தளவிற்கு நெருக்கமாக நின்று கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டாள்.
‘நான் எப்படி இப்படி எல்லாம் பண்ணேன்? ஐயோ! ஏன் மறுபடியும் மறுபடியும் இவர் முன்னால் நான் பலவீனமாக மாறிப் போறேனோ தெரியலையே’ மாயா தன்னைத்தானே கடிந்து கொண்டபடி சித்தார்த்தை விட்டு விலகி நிற்க, அவனுக்கும் தன் அன்னையின் முன்னால் அப்படி நடந்து கொண்டது என்னவோ போல் தான் இருந்தது.
தன் அன்னையை எதிர்கொண்டு பார்க்கத் துணிவின்றி சித்தார்த் தயங்கி நிற்க, அவனை அந்த சங்கடமான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றுவது போல மாணிக்கம் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து வெளியே வந்த நர்ஸ் ஒருவர், “மேடம் இங்கே மாயா?” என்று வினவ, மாயா அவசரமாக அவரருகில் சென்று நின்று கொண்டாள்.
“நான் தான் சிஸ்டர் மாயா. அப்பா எப்படி இருக்காங்க? நான் அவரைப் பார்க்கலாமா?”
“நீங்க தாராளமாக பார்க்கலாம் மேடம், ஆனா அவரோ நிலைமை கொஞ்சம் கிரிடிக்கல் தான் மேடம், அப்புறம் அவரு சித்தார்த் கூட பேசணும்னு சொல்லிட்டே இருக்காரு. கொஞ்சம் அவரை அவசரமாக வர சொல்லுறீங்களா?” என்று கூற, சித்தார்த் மட்டுமின்றி சாவித்திரி மற்றும் மாயா கூட அவனை ஆச்சர்யமாகத் திரும்பிப் பார்த்தனர்.
“என் கூடவா? நல்லா கேட்டீங்களா சிஸ்டர்? சித்தார்த்னா சொன்னாங்க?”
“ஆமா சார், அவரால் ரொம்ப நேரம் பேச முடியாது, கொஞ்சம் சீக்கிரமாக வாங்க” என்று விட்டு அந்த நர்ஸ் மீண்டும் உள்ளே சென்று விட,
‘தன்னோடு என்ன பேசப் போகிறார்?’ என்ற யோசனையுடன் சித்தார்த் அவரைப் பின் தொடர்ந்து செல்ல, சாவித்திரியும், மாயாவும் கூட அதே யோசனையுடன் அவனைப் பின் தொடர்ந்து சென்றனர்.
சித்தார்த்தைப் பார்த்ததும் முயன்று வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் அவனைத் தன்னருகே வரும்படி சைகை செய்தவர், மாயாவையும் தன்னருகே வரும்படி சைகை காட்டி விட்டு தன் நடுங்கும் கரங்களால் மாயாவின் கையை எடுத்து சித்தார்த்தின் கையில் வைத்து அழுத்திக் கொடுத்தார்.
மாணிக்கம் என்ன சொல்ல வருகிறார் என்று சித்தார்த்தும், மாயாவும் புரிந்து கொண்டாலும் தன் தந்தையின் செயலைப் பார்த்து சற்று கோபம் கொண்ட மாயா, “அப்பா! நீங்க என்ன பண்ணுறீங்க? இந்த நேரத்தில் இது எல்லாம் அவசியம் தானா?” என்றவாறே தன் கையை விலக்கப் பார்க்க, அவரோ அவளது கையை சித்தார்த்தின் கையிலிருந்து விலக்க முடியாதவாறு பிடித்துக் கொண்டார்.
“தம்பி, அன்னைக்கு நீங்க சொன்ன விஷயத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் நான் தப்பு பண்ணிட்டேன், என் பொண்ணோட வாழ்க்கையை நானே நாசம் பண்ணிட்டேன், அதற்காகத்தான் அந்தக் கடவுள் எனக்கு இப்படி ஒரு தண்டனையைக் கொடுத்துட்டாரு. இதற்கு அப்புறம் நான் உயிரோடு இருப்பேன்னு எனக்கு நம்பிக்கை இல்லை, இத்தனை நாட்களாக நான் இறந்து போயிட்டால் என் பொண்ணு என்ன பண்ணுவான்னு தெரியாமல் ரொம்ப தவிச்சுப் போனேன், ஆனா மறுபடியும் உங்களைப் பார்த்ததாக அம்மு சொன்னதற்கு அப்புறம் தான் எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது, இனி என் அம்முவைப் பார்த்துக்க நீங்க இருக்கீங்க.
எனக்குத் தெரியும் என் பொண்ணு உங்க மேலே கோபமாக இருக்கிறேன்னு சொல்லுறா, ஆனா உண்மையாகவே அவ மனதில் கோபம் இல்லை, இன்னமும் அவ உங்களை விரும்பிட்டே தான் இருக்கா. இப்போ நான் உங்க கிட்ட கேட்கிறது என்னோட கடைசி ஆசைன்னு கூட வைச்சுக்கோங்க தம்பி, என் பொண்ணைப் பத்திரமாகப் பார்த்துக்கோங்க” தான் பேச வந்த விடயத்தை எந்தவொரு தடங்கலும் இல்லாமல் தட்டுத்தடுமாறி சொல்லி முடித்த மாணிக்கம் மாயாவின் புறம் திரும்பி,
“இந்த அப்பா எப்பவுமே உன்கிட்ட கேட்காமல் அவராகவே முடிவெடுத்து ஒரு விஷயத்தைப் பண்ணிடுறார்னு நீ என் மேலே கோபப்படலாம் அம்மு, இதற்கு முதல் நான் அப்படி பண்ண விஷயங்கள் எல்லாம் தப்பானது தான், ஆனா இந்தமுறை நான் பண்ண விஷயம் நிச்சயமாக தப்பாகாது, ஏன்னா இந்தமுறை எல்லாம் தெரிவு செய்தது நீதான், நான் அதை முடிச்சு வைத்திருக்கேன் அவ்வளவுதான். உனக்கு நல்லாப்படிச்சு, பெரிய இடத்தில் வேலைக்குப் போய் உன்னை நம்பி இருக்கும் எல்லோரையும் நல்லாப் பார்த்துக்கணும்னு ரொம்ப ஆசை இல்லையா? இனிமேல் அந்த ஆசையை நீ எந்தத் தடையும் இல்லாமல் நிறைவேற்றலாம் அம்மு, இனிமேல் நீ உன் வாழ்க்கையை உனக்காக வாழ ஆரம்பிக்கலாம், அதுவும் உன் மனசுக்குப் பிடித்த அந்த நபர் கூடவே” என்றவாறே சித்தார்த்தை சுட்டிக் காட்டியவர் மாயாவைப் பார்த்து தன் இரு கரம் கூப்பி,
“இந்தப் பாவி அப்பனை மன்னிச்சுடு அம்மும்மா, இன்னும் கொஞ்ச நேரத்தில் பத்மா இருக்கும் இடத்திற்கு நானும் போயிடுவேன். அங்கே அவகிட்ட போய் சொல்லுவேன், நம்ம பொண்ணை ஒரு பாதுகாப்பான இடத்தில் ஒப்படைச்சுட்டேன் பத்மான்னு ரொம்ப தைரியமாக சொல்லுவேன், அவ ரொம்ப சந்தோஷப்படுவா, நானும், அவளும் இந்த உலகத்தில் உன் கூட இல்லாவிட்டாலும் எங்க அன்பும், பாசமும் எப்போதும் உன்னைச் சுற்றி இருந்துட்டே இருக்கும் அம்மு. இனிமேல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமாக இரு, இந்த அப்பாவோட கடைசி ஆசையை மட்டும் தட்டிக்கழிச்சுடாதே அம்மு!” என்றவாறே மெல்ல மெல்ல தன் கையை விலக்கி கொள்ள, மாயா சிறு பதட்டத்துடன் அவரது கையை இழுத்துப் பிடித்துக் கொண்டாள்.
“அப்பா, அப்பா. அப்பா, உங்களுக்கு எதுவும் ஆகாதுப்பா, நீங்க சீக்கிரமாக குணமாகிடுவீங்க, நீங்க வேணும்னா பாருங்க, நீங்க ஆசைப்பட்டபடி எல்லாம் நல்ல படியாக நடக்கும். எனக்கு உங்க மேலே எந்தக் கோபமும் இல்லைப்பா. நான் எப்பவுமே உங்க அம்மும்மா தான், என்னைப் பார்க்கும் போதெல்லாம் நீங்க ரொம்ப மனசு கஷ்டப்படுவீங்கன்னு தான் நான் உங்க முன்னாடி வராமல் இருந்தேன்ப்பா, மற்றபடி உங்க மேலே நான் எப்படி கோபப்பட முடியும்? எனக்கு நீங்க மட்டும் தானே ப்பா சொந்தம்? நீங்களும் என்னை விட்டுட்டுப் போனால் நான் என் பண்ணுவேன்? நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்பேன் ப்பா, ஆனா என்னை இப்படி தவிக்க விட்டுட்டு போயிடாதீங்கப்பா. ஆமா, எனக்கு சித்தார்த்தை இன்னமும் பிடிக்கும் தான், அவரை இப்பவும் நான் விரும்புறேன் தான், போதுமா? நான் தான் எல்லாவற்றையும் சொல்லிட்டேனேப்பா, என்னை ஏமாற்றிடாதீங்கப்பா” என்றவாறே மாயா கண்ணீர் மல்க அவரைப் பார்த்துக் கெஞ்சிக் கொண்டு நிற்க, எந்த விடயத்தைக் கேட்க மாணிக்கம் இத்தனை நாட்களாக தன் உயிரை இழுத்துப் பிடித்து வைத்திருந்தாரோ இப்போது அந்த விடயத்தை தன் காது குளிரக் கேட்ட திருப்தியோடு அந்த உலகை விட்டு அவரது உயிர் மெல்ல மெல்ல விடைபெற்றுக் கொண்டது……