IMG_20221031_134812

எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 16

மாயாவின் வீட்டிற்குள்ளேயும், வெளியிலும் அவர்கள் வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், அவர்களுக்கென சொந்தம் என்று சொல்லப்பட்டவர்களும் நிறைந்திருக்க, அந்த வீட்டின் நடுவே மாணிக்கத்தின் உயிரற்ற உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது.

நீண்ட நேரமாக அழுதழுது மாயாவின் கண்ணீரும் வற்றிப் போயிருக்க, அவளது விழிகளோ தன் தந்தையின் முகத்திலேயே நிலைகுத்தி நின்றது.

இந்த ஐந்து வருடங்களாக அவரோடு தனக்கிருந்த பந்தமும், இன்று அவர் உயிர் பிரியும் தருவாயில் பேசிய விடயங்களுமே அவளது மனதுக்குள் மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தது.

மாயா தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று மறந்து மாணிக்கத்தின் உடல் முன்னிலையில் அமர்ந்திருக்க சித்தார்த் மற்றும் கௌசிக் தான் அடுத்த அடுத்த விடயங்களை எடுத்துப் போட்டு செய்து கொண்டு நின்றனர்.

அன்றைய தருணம் பார்த்து ரகு கோயம்புத்தூர் சென்றிருக்க, அவன் திரும்பி வர இன்னும் இரண்டு, மூன்று மணிநேரம் ஆகும் என்று அவனது வீட்டினர் சொல்லியிருந்தனர்.

அத்தனை நேரத்திற்கும் அப்படியே இருந்தால் எதுவும் சரியாகாது என்று புரிந்து கொண்ட சாவித்திரி மாயா மற்றும் ரகுவின் மனைவியின் அனுமதியுடன் சித்தார்த்தை எல்லாவற்றையும் முன்னின்று செய்து முடிக்க சொல்லியிருந்தார்.

ரகு வந்ததும் இறுதிக்கிரியைகள் செய்து விடலாம் எனவும், அதற்கு தேவையான ஏற்பாடுகளை இப்போதே செய்து வைத்து விடலாம் என்றும் அவனது மனைவி சொல்லியிருக்க சித்தார்த்தும் தன்னால் முடிந்த மட்டும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துக் கொண்டு நின்றான்.

இரண்டு, மூன்று மணிநேரம் கடந்து சென்ற பிறகு கோயம்புத்தூரில் இருந்து திரும்பி வந்திருந்த ரகு தன் குற்றவுணர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் தன் தந்தையின் இறுதி சடங்குகளை செய்து முடித்திருக்க, சாவித்திரிதான் மாயாவின் அருகிலேயே அவளுக்குத் துணையாக அமர்ந்திருந்தார்.

இத்தனை சிறுவயதில் அவளது வாழ்க்கையில் என்னவெல்லாமோ நடந்து விட்டது இனி வரும் நாட்களாவது அவளுக்கு சந்தோஷத்தை வழங்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டவர் மறந்தும் கூட மாணிக்கம் சித்தார்த்திடம் இறுதியாகப் பேசிய விடயங்களைப் பற்றி அவளிடம் எதுவும் பேசவில்லை.

மாயா இருக்கும் மனநிலையில் இப்படியே அவளை விட்டுவிட்டுச் செல்ல முடியாது என்று புரிந்து கொண்ட சித்தார்த் தன் தந்தையிடம் தாங்கள் அனைவரும் இன்னும் இரண்டு, மூன்று நாட்கள் கழித்தே ஊருக்கு திரும்பி வருவோம் என்று சொன்னது மட்டுமின்றி அன்றிரவு சாவித்திரியை மாயாவுடனேயே தங்கியிருக்குமாறு கூறியிருந்தான்.

மாணிக்கம் இறந்து இரண்டு, மூன்று நாட்கள் கடந்திருந்த நிலையில் வந்திருந்த சொந்தங்களும், நட்புக்களும் கிளம்பிச் சென்று விட, இறுதியாக மாயாவுடன் சித்தார்த்தின் குடும்பத்தினரும், ரகு மற்றும் அவனது மனைவி மாத்திரமே எஞ்சியிருந்தனர்.

இன்னும் சிறிது நேரத்தில் அவர்களும் கிளம்பிச் சென்று விட்டால் தான் அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன் மாயா அமர்ந்திருக்க, அவளெதிரில் வந்து நின்ற ரகு, “மாயா! இனிமேல் நீ தனியாக இங்கே இருக்க வேண்டாம், எங்க வீட்டுக்கு வந்துடு” என்று கூற,

அவனது மனைவி பிரியாவும், “ஆமா மாயா, வா நம்ம வீட்டுக்கு போகலாம்” என்று அழைக்க, அவளோ அவர்கள் இருவரையும் ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தாள்.

“உங்க இரண்டு பேருக்கும் என் பேரெல்லாம் நினைவு இருக்கா?” மாயாவின் கேள்வியில் ரகுவும், பிரியாவும் வாயடைத்துப் போய் நிற்க, அவளோ தன் மனதிற்குள் எரிந்து கொண்டிருந்த கோபத்தீயை அடக்க முடியாமல் அவனை விட்டும் விலகி நின்று கொண்டாள்.

“நீங்க முதல்ல யாரு? உங்களோடு வான்னு சொன்ன உடனே நான் எதற்காக வரணும்?”

“மாயா நான் உன் அண்ணன் ம்மா”

“அண்ணணா? நல்ல காமெடி பண்ணுறீங்க சார் நீங்க. இத்தனை வருஷம் நானும், அப்பாவும் தனியாக இந்த வீட்டில் இருந்த போது அந்த அண்ணண் எங்கே போயிருந்தான்? ஒருதடவை கூட நான் உங்களைப் பார்த்ததே இல்லையே”

“மாயா, நான் வந்து….”

“நீங்க எங்கேயும் வர வேண்டாம் சார். நான் ஒரு விஷயம் சொல்லுறேன் அதை மட்டும் நல்லாக் கேட்டுக்கோங்க. இதோ நிற்குறாங்களே இந்த அம்மா, இவங்களுக்கு என்னை இந்த இரண்டு வாரமாகத் தான் தெரியும், அப்படி இருந்தும் என்னோடு பழகியதை வைத்து என்னைப் புரிஞ்சுக்கிட்டு எனக்கு ஒரு பிரச்சனைன்னு சொன்னதும் அவங்க தனிப்பட்ட விஷயங்களை எல்லாம் ஒதுக்கி வைச்சுட்டு எனக்காக வந்து நின்னாங்க, ஆனா நீங்க? இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன், நீங்க என் சொந்த அண்ணன் தானா?

நீ இந்த வீட்டை விட்டுப் போய் கிட்டத்தட்ட மூன்று வருஷம் இருக்குமா ரகு அண்ணா? இந்த மூணு வருஷத்தில் ஒரு தடவை கூட உனக்கு அப்பாவைப் பார்க்க தோணவே இல்லைல்ல? அம்மா இறந்த அன்னைக்கு கடைசியாக இந்த வீட்டுக்கு நீ வந்துட்டுப் போன, அதற்கு அப்புறம் இன்னைக்கு தான் வந்திருக்க. நீ என்னைப் பற்றி யோசிக்க வேண்டாம், அப்பாவைப் பற்றி யோசித்து இருக்கலாமே, அவரு எனக்கு மட்டும் அப்பா இல்லையே, உனக்கும் அவரு அப்பா தானே? என்கிட்ட வெளிப்படையாக அவரு சொல்லலேன்னாலும் அவரோட கடைசி மூச்சு வரை அவரு உன்னைப் பற்றி யோசிக்காமல் இருந்ததே இல்லை, ஒவ்வொரு நாளும் உன் பெயரை சொல்லிட்டே இருப்பாரு, நான்தான் வேறு ஏதாவது பேசி அந்தப் பேச்சை மாற்றிடுவேன்.

இப்படி மூணு வருஷமா எந்தவொரு தொடர்பும் இல்லாமல் காணாமல் போன என் அண்ணன் திடீர்னு வந்து என் கூட வந்துடுன்னு சொன்னால் என்ன நம்பிக்கையில் நான் உன்கூட வர முடியும்? மறுபடியும் வேறு யாராவது சொல்லுவதைக் கேட்டு என்னை அங்கேயிருந்தும் வெளியே அனுப்ப மாட்டேன்னு என்ன நிச்சயம்? மழை பெய்யும் போது முளைத்து வரும் காளான் மாதிரி திடீரென நீ வருவ, அப்புறம் காணாமல் போவ, இதையெல்லாம் நம்பி நான் உன் கூட வரணுமா?

நீயும் அவரோடு ஒரு பிள்ளைன்னு சொல்லுற ஒரே காரணத்திற்காக தான் அவரோடு இறுதிக்கிரியைகளைச் செய்ய உனக்கு அனுமதி தந்தேன், மற்றபடி உன்னோடு உறவு கொண்டாட நான் ஒருபோதும் நினைக்கல, நீ வந்த வேலை முடிந்தது, அதனால இப்போ தாராளமாக நீங்க கிளம்பலாம், எனக்கான தேவைகளை நிறைவேற்ற எனக்கு ஒரு வேலை இருக்கு, அதுவே எனக்குப் போதும். இந்த வீட்டை விட்டு வெளியே போகும் போது நீ என்ன சொன்ன, ஞாபகம் இருக்கா? இப்படி ஒருத்தி இருக்கும் இடத்தில் இருந்தால் நாளைக்கு உன் வாழ்க்கையும் அப்படி ஆகிடலாம்ன்னு சொன்ன இல்லையா? இப்பவும் நான் அதேமாதிரி தான் ரகு அண்ணா இருக்கேன், என் வாழ்க்கையில் எந்தவொரு மாற்றமும் இல்லை, இப்போ மட்டும் நான் உன் வீட்டுக்கு வந்தால் உன் வாழ்க்கைக்கு எதுவும் ஆகாதா என்ன?” மாயாவின் கேள்விகளுக்கு மறுப்பாக தலையசைத்தவாறே பதிலளிக்கப் போன பிரியாவின் கையை எட்டிப் பிடித்துக் கொண்ட ரகு அவளைப் பார்த்து வேண்டாம் என்பது போல தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்று விட, அவர்கள் வெளியேறி செல்வதைப் பார்த்து சிறு தயக்கத்துடன் அவளருகில் வந்து நின்ற சாவித்திரி அவளது தோளில் மெல்ல தன் கையை வைத்தார்.

“நான் உங்க குடும்ப விஷயத்தில் தலையிடுவதாக நினைக்க வேண்டாம் மாயா, இந்த மாதிரி நேரத்தில் நீ இங்கே தனியாக இருப்பது சரிதானா?” சாவித்திரியின் கேள்வியில் அவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவள்,

“இந்த மூணு வருஷமும் நான் தனியாகத்தான் சாவித்திரி ஆன்ட்டி இருந்தேன், எனக்கு அது ஒண்ணும் பிரச்சனை இல்லை. ஆனா என்னால உங்களுக்குத்தான் நிறைய சிரமம் ஆகிடுச்சு. உங்க குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கலாம்ன்னு தான் நீங்க இங்கே வந்தீங்க, ஆனா இப்போ உங்களையும் தேவையில்லாமல் நான் சிரமப்படுத்திட்டேன், என்னை மன்னிச்சுடுங்க ஆன்ட்டி” என்று கூற,

அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவர், “இதில் என்ன சிரமம்? எப்படியும் நீயும் எங்க…” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே,

“அம்மா!” என அவரை சற்று அதட்டலாக அழைத்த சித்தார்த் அவரது கையைப் பிடித்துக் கொண்டு அவரை அங்கிருந்து வேகமாக வெளியே அழைத்துக் கொண்டு சென்றான்.

“அம்மா, நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க?” சித்தார்த்தின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் நின்று கொண்டிருந்த சாவித்திரி தன் சேலை மடிப்புகளை சரி செய்து கொண்டிருக்க,

அவரெதிரில் வந்து நின்று கொண்டவன், “அம்மா! இன்னும் எத்தனை நாளைக்கு என் கூட பேசாமல் இருக்கப் போறீங்க? நான் நடந்த விடயத்தைப் பற்றி உங்க கிட்ட முன்னாடியே சொல்லாமல் விட்டது தப்புதான், உண்மையாகவே ஊருக்குப் போன அப்புறம் நடந்த எல்லாவற்றையும் உங்க கிட்ட தெளிவாக சொல்லலாம்ன்னு இருந்தேன், ஆனாஇப்படி ஒரு நிலைமை வரும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லைம்மா” என்று கூற, அவரோ அவனைக் கோபமாக முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றார்.

“ஏன்டா இவ்வளவு விஷயம் நடந்திருக்கு அதை நீ அந்த நேரத்தில் சொல்லல பரவாயில்லை, ஏதோ அப்போ பாரின் போகும் பதட்டத்தில் மறந்திருப்ப, ஆனா மாயாவைப் பார்த்த பிறகாவது என்கிட்ட சொல்லத் தோணல இல்லை? அப்படி உண்மையை மறைத்து வைக்கும் அளவுக்கா நான் உன்னோட பழகியிருக்கேன்?”

“ஐயோ அம்மா! என் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் பேசுறிங்களேம்மா, ஆக்சுவலா நான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பார்த்த அதே பொண்ணு தான் இந்த மாயான்னு அவ சொல்லித்தான் எனக்கே கொஞ்ச நாள் முன்னாடி தெரியும், இல்லேன்னா எனக்கே அது தெரியாது”

“நீ என்னடா புதுசா கதை ஏதோ சொல்லுற? அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நீ எப்போ இங்கே வந்த? நீ எப்போ மாயாவைப் பார்த்த?”

“அப்போ மாயா இந்த மூணு நாளில் அதைப்பற்றி எதுவுமே சொல்லலையா?”

“இல்லையே” சாவித்திரி குழப்பம் சூழ சித்தார்த்தைப் பார்த்துக் கொண்டு நிற்க, ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டுக் கொண்டவன் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஊட்டிக்கு தான் வந்த போது நடந்த விடயங்களைப் பற்றி அவரிடம் சொல்லி முடித்தான்.

“அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் நான் உண்மையிலேயே ஊட்டிக்கு வரணும்னு பிளான் பண்ணது அந்தப் பொண்ணு ஐ மீன் மாயாவைப் பார்க்கணும்னு தான்”

“என்ன?” சாவித்திரியின் அதிர்ச்சி கலந்த முறைப்பைக் கண்டும் காணாதது போல தன் முகத்தை திருப்பிக் கொண்டவன்,

“நான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி பார்த்த போது அவ ரொம்ப சின்னப் பொண்ணா இருந்தாம்மா, இரட்டை ஜடை கட்டி, ஸ்கூல் யூனிபார்மில் சின்னப் பொண்ணா பார்த்த பொண்ணு இப்போ இப்படி வளர்ந்து ஒரு கெத்தான பொண்ணாக இருப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கும் ஆரம்பத்தில் மாயாவைப் பிடித்திருந்தது தான், ஆனா அந்த வயதில் தேவையில்லாமல் என்னால அவ வாழ்க்கை வழி தவறிப் போய் விடக்கூடாதுன்னு தான் அவ லவ்வை அன்னைக்கு நான் ரிஜக்ட் பண்ணேன், ஆனா அது இப்படி எல்லாம் சிக்கலை உருவாக்கும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லைம்மா.

நான் ஊட்டி வந்தபோது அன்னைக்கு பார்த்த அந்த பொண்ணு இப்போ ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்துட்டு இருப்பா, என்னை மறந்தாலும் மறந்திருப்பான்னு என்னன்னவோ எல்லாம் நினைச்சுக்கிட்டு இருந்தேன், ஆனா மாயா தான் தான் அந்தப் பொண்ணுன்னு சொன்னதும் எனக்கு எல்லாமே நின்னு போயிடுச்சும்மா, அதுவும் அவ பாஸ்டைக் கேட்ட பின்னாடி மொத்தமாக நான் உடைஞ்சு போயிட்டேன், அவ லைஃப் இப்படி மாற நானும் ஒரு காரணம்ன்னு மாயா சொல்லும் போதெல்லாம் எனக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கும்மா, அவ லைஃப் நல்லா இருக்கணும்னு தான் நான் அன்னைக்கு அப்படி பண்ணேன், ஆனா அதை யாரும் புரிஞ்சுக்கல. மாயா தான் அந்தப் பொண்ணுன்னு தெரிந்த பின்னாடி நான் அவளோடு சகஜமாக பழக ரொம்ப ட்ரை பண்ணேன், ஆனா அவ அதை விரும்பல.

அதனால அவளுக்கு தொந்தரவு கொடுக்காமல் அவளை விட்டு விலகிடலாம்ன்னு தான் நான் முடிவு எடுத்தேன், ஆனா அன்னைக்கு ஹாஸ்பிடலில் அவளை அந்த நிலைமையில் பார்த்ததும் எனக்கு எதுவுமே தெரியல, ஏன் என் பக்கத்தில் இருந்த நீங்க கூட மறந்து போயிட்டீங்க, அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது, மாயா என் மனதில் எப்பவோ இடம் பிடிச்சுட்டா. இதைப்பற்றி எல்லாம் ஆறுதலாக உங்ககிட்ட பேசலாம்ன்னு தான் நான் நினைச்சேன், ஆனா இப்போ நீங்க என் கூட பேசாமல் இருப்பதைப் பார்த்து இதற்கு மேலேயும் இதைப்பற்றி உங்க கிட்ட மறைக்கக்கூடாதுன்னு சொல்லிட்டேன். இதற்கு அப்புறம் உங்க இஷ்டம்மா” என்று கூற, சாவித்திரி சிறு புன்னகையுடன் அவனை தன் தோளோடு சேர்த்து அணைத்து விடுவித்தார்.

“எது எப்படி இருந்தாலும் என் மனதில் இருக்கும் அதே எண்ணம் தான் உன் மனதிலும் இருக்கும்ன்னு எனக்குத் தெரியும் டா சித்தார்த். மாயாவைப் பார்த்த போது எனக்கும் அவளை ரொம்ப பிடித்துப் போயிடுச்சு, அவ நம்ம வீட்டுக்கு மருமகளாக வந்தால் ரொம்ப நல்லா இருக்கும்ன்னு எனக்குத் தோணுச்சு, அதுவும் அவ கதையைக் கேட்ட பின்னாடி நான் எடுத்த முடிவு சரிதான்னு எனக்கு உறுதியாகத் தோணிச்சு, ஆனா நீ என்ன சொல்லுவன்னு தான் நான் யோசிச்சேன், இப்போ அந்தக் கவலையும் இல்லை, மாயாவோட அப்பாவும் இதைத்தானே ஆசைப்பட்டாங்க, அப்போ நம்ம மாயாவை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு போயிடுவோமா?”

“நீங்க என்னம்மா பேசுறீங்க? இது மாயாவோட வாழ்க்கை, முடிவு எடுக்க வேண்டியது அவ. நீங்களோ, நானோ, அவளோட அப்பாவோ இல்லை. அவ அப்பாவோட கடைசி ஆசைன்னா அதைப் பற்றி முடிவு எடுக்க வேண்டியது அவதான், நம்ம எதையும் அவ மேலே திணிக்க வேண்டாம், மாயா இருக்கும் மனநிலையில் இப்போதைக்கு இதைப்பற்றி பேசவே வேண்டாம், இதைப்பற்றி பேச நேரம் இன்னும் வரலம்மா, அதனால மாயா விருப்பப்படி அவ என்ன செய்ய நினைக்கிறாளோ அதை செய்யட்டும், உங்களால் முடிந்த ஆதரவை மட்டும் அவளுக்குக் கொடுங்க, இப்போ நம்ம ஊருக்கு கிளம்பலாம்” என்று கூறிய சித்தார்த்தைப் பார்த்து விருப்பமே இன்றி தலையசைத்தவர் வீட்டிற்குள் சென்று பார்க்க, அங்கே மாயா தான் நின்று கொண்டிருந்த இடத்தில் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.

“என்னம்மா மாயா இது? இப்படியே நின்னுட்டு இருந்தால் கால் வலி வந்துடாது, முதல்ல இப்படி வந்து உட்காரு” என்றவாறே மாயாவின் கையைப் பிடித்து அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமரச் செய்தவர்,

“உண்மையாக ஓபனாக சொன்னால் எனக்கு ஊருக்குப் போக மனசே இல்லை மாயா, ஆனா ஏற்கனவே நாங்க ஊருக்குப் போக தாமதமானதில் அங்கே எல்லாவற்றையும் சித்தார்த்தோட அப்பாவால் சமாளிக்க முடியலை, அதனால் நாங்க இப்போ ஊருக்குப் போய்த்தான் ஆகணும். உனக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் எனக்கு ஒரு கால் பண்ணினால் போதும் சரியா? நான் உடனே ஓடி வந்துடுவேன்” என்று கூற, மாயா அவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டாள்.

“ஐயோ ஆன்ட்டி, உண்மையிலேயே நீங்க என் கிட்ட காண்பிக்கும் இந்தப் பாசமே எனக்குப் போதும், ஏற்கனவே என்னால உங்களுக்கு நிறைய சிரமம்ன்னு எனக்கு குற்றவுணர்ச்சியாக இருக்கு. எனக்கு நீங்க இதுவரைக்கும் பண்ண உதவிகளே போதும் ஆன்ட்டி, இனிமேல் நான் எல்லாவற்றையும் சமாளிச்சுக்கிறேன், எப்படி இருந்தாலும் நம்ம சுயமாக எதையும் செய்யத்தானே வேண்டும்? எப்போதும் இன்னொருத்தங்க வந்து நம்மைக் காப்பாற்றுவங்கன்னோ, நம்ம கூடவே இருப்பாங்கன்னோ நினைக்க முடியாது இல்லையா? அதனால் நீங் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமாக ஊருக்குப் போங்க ஆன்ட்டி” என்று கூறிய மாயாவின் தலையை மெல்ல வருடிக் கொடுத்தவர், தன் மனமேயின்றி அரைமனதோடு அவளிடம் விடைபெற்றுக் கொண்டு தங்கள் ஊரை நோக்கிப் புறப்படத் தயாராக, மறுபுறம் சித்தார்த் தன் மனதில் நிறைந்திருந்தவளை நினைத்தபடியே தன் காரை இயக்க ஆரம்பித்தான்……

error: Content is protected !!