எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 02

IMG_20221031_134812-de70f958

எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 02

சாவித்திரி இல்லம்
பழங்காலத்து அரண்மனையின் தோற்றத்தை ஒத்திருக்கும் அந்த சாவித்திரி இல்லம் தான் சித்தார்த்தின் பெற்றோரின் ஒரே பூர்வீக சொத்து.

வைத்தீஸ்வரன் தான் படித்த விடயங்களையும், தன் மனைவிக்கென அமைக்க நினைத்து தன் மனதிற்குள் வைத்திருந்த ஆசைகளையும் வைத்து பார்த்துப் பார்த்து அமைத்த அந்த இல்லம் தான் சாவித்திரி இல்லம்.

அந்தப் பகுதியிலேயே சாவித்திரி இல்லம் தான் பாரிய தோற்றத்தைக் கொண்டது அத்துடன் பழமையானதும் கூட.

அந்த இடத்தை கடந்து செல்வோர் அனைவரும் அந்த இல்லத்தை ஒரு தடவையேனும் வியந்து பாராட்டாமல் சென்றதில்லை, அத்தனை அழகாக, நுணுக்கமாக அந்த இல்லத்தை அமைத்து இல்லை இல்லை செதுக்கியிருந்தார் வைத்தீஸ்வரன்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற கூற்றிற்கு ஏற்றாற்போல் சற்று அந்தக் கூற்றிற்கு மாற்றமாக தன் தந்தையை விட இன்னும் சில மடங்கு முன்னோக்கி சென்றிருந்த சித்தார்த் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் அந்த இல்லத்தில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்த திட்டம் தீட்டியிருக்க, இப்போது சாவித்திரி இல்லத்தில் அந்த மாற்று வேலைகள் தான் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

தன் அலுவலக வேலைகள் முடிந்து முற்றிலும் களைத்துப் போனவனாக வீட்டிற்கு திரும்பி வரும் சித்தார்த், அதே களைப்பான மனநிலையுடன் தங்கள் வீட்டில் நடக்கும் வேலைகளை மேற்பார்வை செய்ய ஆரம்பித்து விடுவான்.

ஆரம்பத்தில் அவனது வேலைப்பளுவைப் பார்த்து கவலை கொண்டிருந்த சாவித்திரி அவனது இந்த வேலைப்பளுவைக் குறைக்க தன்னால் என்ன செய்ய முடியும் என்று தினமும் யோசிக்காமல் இருந்ததில்லை.

பின் நாளடைவில் ஒவ்வொரு விடயங்களாக யோசித்துப் பார்த்தவர் அவனது வேலைப்பளுவைக் குறைப்பதை ஒரு சாக்காக சொல்லியேனும் அவனைப் போலவே இந்த டிசைனிங் துறையில் ஆர்வமுள்ள ஒரு பெண்ணை அவனுக்குத் துணைவியாக அமைத்து விட வேண்டும் என்று தீர்மானமாக முடிவெடுத்துக் கொண்டார்.

தன்னுடைய முடிவைப் பற்றி முதலில் அவர் சொன்னது சித்தார்த்திடம் தான், ஆனால் அதற்குப் பதிலாக அவன் சரி என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை, நேரம் வரும் போது பார்க்கலாம் என்று விட்டு கடந்து சென்றிருந்தான்.

என்னதான் சாவித்திரி கலகலப்பாக பேசிப் பழகக் கூடியவராக இருந்தாலும் இன்னும் இரண்டு வருடங்களில் முப்பது வயதை நெருங்கப் போகும் தனது மகனை எண்ணி அவரால் கவலை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

ஒவ்வொரு நாளும் இந்த ஒரு விடயம் மாத்திரம் அவரது சிந்தனையை எப்போதும் சிதறடித்துக் கொண்டேதான் இருக்கிறது.

எப்போதும் போல அன்றும் தனது மகனது மனது எப்போது மாறுமோ என்கிற யோசனையுடன் தங்கள் வீட்டு முற்றத்தில் நடந்து கொண்டிருந்த வேலைகளை கண்காணித்த படி சாவித்திரி அமர்ந்திருந்த தருணம், சரியாக சித்தார்த்தின் வாகனமும் அந்தப் பாரிய காம்பவுண்ட் சுவற்றைக் கடந்து உள் நுழைந்து வந்து கொண்டிருந்தது.

சித்தார்த் வருவதைப் பார்த்ததுமே இவ்வளவு நேரமாக தான் தனது வேலைகளை மறந்து சிந்தித்துக் கொண்டே அமர்ந்திருக்கிறோமே என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவர், அவசர அவசரமாக அவனுக்குத் தேவையான மாலை நேர உணவை தயார்படுத்த ஆரம்பித்தார்.

சித்தார்த்திற்கு பிடித்தமான டார்க் காஃபியை பிளாஸ்க்கில் ஊற்றி எடுத்தவர், இன்னும் சில சிற்றுண்டிகளையும் எடுத்துக் கொண்டு அவனது அறைக்குச் செல்ல எண்ணித் திரும்ப, அவனோ சமையலறை வாயிலில் தன் கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு தன் அன்னையைப் பார்த்து புன்னகை செய்த வண்ணம் நின்று கொண்டிருந்தான்.

வழமைக்கு மாறாக தன் மகனின் முகத்தில் தெரிந்த மாற்றத்தைப் பார்த்து குழப்பம் கொண்ட சாவித்திரி தன் கையிலிருந்த தட்டை அப்படியே வைத்து விட்டு, “என்னடா இது அதிசயமாக இருக்கு? என் பையன் கிச்சன் பக்கம் எல்லாம் வந்திருக்கான்? அதுவும் ஆபிஸ் முடிந்து வீட்டுக்கு வந்த உடனேயே இப்படி வந்து நிற்கிறான்? இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லையே, ஒருவேளை என் பையன் உடம்பில் ஆவி ஏதாவது புகுந்துடுச்சோ?” என்றவாறே அவனை மேலும், கீழும் பார்த்தவர்,

“வீட்டுக்கு வந்ததும், வராததுமாக இப்படி டூத் பேஸ்ட் விளம்பரம் பண்ணுறவன் மாதிரி பல்லைக் காட்டிட்டு நிற்கிறான்னா கண்டிப்பாக ஏதோ ஒண்ணு நடந்திருக்கு. டேய் சித்தார்த் பையா! என்னாச்சுன்னு சொல்லுடா? ஏதாவது ஆவி புடிச்சிருந்தால் பேய் ஓட்டுறவர் கிட்ட கூட்டிட்டு போய் மந்திரிச்சு பார்க்கச் சொல்லுறேன், என்னாச்சுன்னு சொல்லுடா?” என்று வினவ, அவனோ தன் இடுப்பில் கை வைத்துக்கொண்டு தன் அன்னையை முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றான்.

“ஒரு மனுஷன் சிரிச்ச முகமாக நின்னா கூட குத்தமா? இந்த உலகத்தில் நல்லதுக்கே காலம் இல்லை போல. சாவித்திரி அம்மா! சத்தியமாக உங்க கூட முடியல அம்மா! நானே எவ்வளவு ஆசையாக ஒரு நல்ல விஷயத்தைப் பற்றி உங்க கிட்ட சொல்லாம்ன்னு வந்தேன், ஆனா நீங்க என்னடான்னா?” சித்தார்த் சிறிது சலித்து கொண்டபடியே அங்கிருந்து சோர்வாக நகர்ந்து செல்ல,

‘நல்ல விஷயமா? ஒருவேளை இந்தப் பையன் அம்மாவோட ஆசையை நிறைவேற்றலாம்ன்னு நினைத்து கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்ல வந்திருப்பானோ? ஐயோ! சாவித்திரி இப்படி உன் வாயைக் கொடுத்து எல்லாவற்றையும் கெடுத்துட்டியேடி! முதல்ல சித்தார்த் கிட்ட அது என்ன விஷயம்ன்னு கேளு’ என தன்னைத்தானே கடிந்து கொண்டு அவனின் பின்னாலேயே நடந்து சென்றவர்,

“சாரிடா கண்ணா! நான் ஏதோ வழக்கமாக பேசும் ஞாபகத்தில் அப்படி சொல்லிட்டேன், சாரிடா கண்ணா. அதோடு வழமைக்கு மாற்றமாக நீ இப்படி ஏதாவது பண்ணால் இந்தப் பச்ச மண்ணுக்கு எப்படிடா தெரியும்?” என்று வினவ,

அவனோ, “யாரு? நீங்க பச்ச மண்ணா?” என்று அதிர்ச்சியானது போலக் கேட்டான்.

“சரி, சரி அதெல்லாம் போகட்டும், என்ன அந்த நல்ல விஷயம்? சீக்கிரமாக சொல்லுடா கண்ணா, எனக்கு ஆர்வத்தில் கை, கால் எல்லாம் அப்படியே நாட்டியம் ஆடுது, இங்கே பாரு” என்றவாறே சாவித்திரி தன் கைகளை நீட்ட,

அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டவன், “இப்போ நான் சொல்லப் போகும் விஷயத்தைக் கேட்டு நீங்க அப்படியே ஷாக்காகி நிற்கப் போறீங்க ம்மா. இது என்னோட ரொம்ப நாள் ஆசை, இப்போதான் அதை நிறைவேற்ற எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கு. இந்த வாய்ப்பை நான் நிச்சயமாக மிஸ் பண்ண மாட்டேன் பாருங்க” என்று கூற, இப்போது அவனது பேச்சைக் கேட்டு சாவித்திரி சற்றுக் குழம்பித்தான் போனார்.

‘என்ன இது ரொம்ப நாள் ஆசைன்னு எல்லாம் சொல்லுறான்? ஒருவேளை சின்ன வயதிலிருந்து யாரையாவது லவ் பண்ணி இப்போதான் அது சக்ஸஸ் ஆகி இருக்குமோ? இல்லேன்னா ப்ரேக்அப் ஆகி மறுபடியும் ஒண்ணு சேர்ந்து இருப்பாங்களா? இல்லை வேறு மாதிரி ஏதாவது’ என சாவித்திரி தனக்குள்ளேயே ஏதேதோ கற்பனை செய்து கொண்டு அமர்ந்திருந்த வேளை,

“அம்மா! அம்மா! நான் பேசுவதைக் கவனிக்குறீங்களா? இல்லையா?” என்று சித்தார்த் அவரது தோளைத் தொட்டு உலுக்க,

அவரோ, “ஆஹ்ஹா! கேட்டுட்டுத்தான் இருக்கேன், சொல்லுப்பா. என்ன விஷயம் அது?” என்றவாறே அவனைப் பார்த்து வினவ, சித்தார்த் தன் கையிலிருந்த பத்திரிகையை அவரது முகத்தின் முன்னால் விரித்துக் காட்டினான்.

‘என்ன இது? இந்தப் பையன் கல்யாணப் பத்திரிகை எல்லாம் அடிச்சுட்டானா என்ன?’ சித்தார்த் தன் முன்னால் காண்பித்தது என்ன பத்திரிகை என்று கூட சரியாக கவனிக்காமல் அதைக் கைகள் நடுங்க வாங்கிப் பார்த்தவர் அதில் ஒரு பக்கம் முழுவதும் பெரிதாக பிரசுரிக்கப்பட்டிருந்த புகைப்படப் போட்டிக்கான விளம்பரத்தைப் பார்த்து தன் தலையில் அடிக்காத குறையாக தன் மகனின் புறம் திரும்பிப் பார்த்தார்.

“இதுதான் அந்த நல்ல விஷயமா கண்ணா?” சாவித்திரி தன்னால் முடிந்த மட்டும் இயல்பாக இருப்பது போல சித்தார்த்தைப் பார்த்து வினவ,

அவரைப் பார்த்து ஆமோதிப்பது போல தலையசைத்தவன், “ஆமாம்மா, இதை விட வேறு என்ன நல்ல விஷயம் இருக்குன்னு சொல்லுங்க? இப்படி ஒரு போட்டியில் கலந்துக்கணும்னு எனக்கு எவ்வளவு வருஷமாக ஆசை தெரியுமா? இந்த தடவைதான் எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கு” என்று கூற, தன் மகனின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்ததும் தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டவர் புன்னகை முகமாக அவனைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

“நீ சந்தோஷமாக இருந்தால் அதுவே எனக்கு போதும் டா கண்ணா, சரி எப்போ போட்டோ எடுக்க ஆரம்பிக்கப் போற? இன்னும் இரண்டு, மூணு நாளில் வீட்டு வேலை எல்லாம் முடிந்துடும், அதற்கு அப்புறம் உனக்கு நிறைய நேரம் கிடைக்கும் இல்லையா?”

“ம்ம்ம்ம்ம்ம், ஆமாம்மா. நானும் அதைத்தான் யோசிச்சேன், இப்போ கம்பெனியில் போயிட்டு இருக்கும் பிராஜெக்டும் இந்த வாரத்திற்குள் முடிந்துடும், ஷோ அதற்கு அப்புறம் புது பிராஜெக்ட் தான் ஆரம்பிக்கணும், அதை ஆரம்பித்து எல்லாம் ரெடி பண்ணிக் கிஷோர் கிட்ட பொறுப்பு கொடுக்கலாம்ன்னு இருக்கேன். அப்படியே அப்பப்போ அப்பாவையும் கொஞ்சம் கண்காணிக்க சொல்லலாம்னு இருக்கேன்”

“அப்படி எத்தனை நாளைக்கு ஃபோட்டோ எடுக்கப் போற? ஏதோ மாதக்கணக்கில் ஊரை விட்டு போவது மாதிரி பேசுற? இதில் என்ன சொல்லி இருக்கு, மிருகங்களைத் தானே ஃபோட்டோ எடுக்கணும்? அதற்கு எதற்கு இவ்வளவு சிரமம்? நம்ம வீட்டுக்கு பால் கொண்டு வர்ற பழனியோட போனேன்னா அவரு தொழுவத்தில் ஆடு, மாடு இருக்கு, அதை ஃபோட்டோ எடுக்கலாம், அதற்கு அப்புறம் அவரோட கோழிப்பண்ணையும் பார்த்து ஃபோட்டோ எடுத்துட்டு வந்துடலாமேடா. அதற்கு மேலேயும் வேணும்னா நம்ம தோட்டத்தில் அணில், குருவி, காக்கா, கிளின்னு எவ்வளவு வரும்? அதை எல்லாம் ஃபோட்டோ எடுத்தேன்னு வை, நீதான் இந்த போட்டியில் பர்ஸ்ட் வருவ, வேணும்னா பாரு” சாவித்திரி சொன்ன விடயங்களைக் கேட்டு தன் தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த சித்தார்த்,

“அம்மா! நீங்க நிஜமாகவே இதைப் பண்ண சொல்லுறீங்களா? இல்லை என்னைக் கலாய்க்குறீங்களா?” என்று வினவ, அவரோ அவசரமாக மறுப்பாக தலையசைத்தார்.

“டேய் சித்தார்த் பையா! நான் எவ்வளவு சீரியஸாக உனக்கு ஐடியா சொல்லித் தர்றேன், நீ என்னடான்னா இப்படி கேட்குற?” என்றவாறே சாவித்திரி பாவமாக தன் முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க,

அவரைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்த சித்தார்த், “அம்மா! வர வர உங்களுக்கு விளையாட்டு ஜாஸ்தி ஆயிடுச்சு, இதில் சொல்லியிருக்கிறது வனவிலங்குகள் பற்றி, வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகள் பற்றி இல்லை” என்று கூற,

அவரோ, “காக்கா, குருவி எல்லாம் நம்ம வளர்க்கிறோமா என்ன?” என்றவாறே சித்தார்த்தின் புறம் திரும்ப, அவனோ அவரை முறைத்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“சரி, சரி, அதெல்லாம் வளர்ப்பு பிராணிகள் தான். அது சரி, அப்போ நீ என்ன பண்ண திட்டம் போட்டு இருக்க? நீ பேசுவதை வைத்துப் பார்த்தால் எல்லாவற்றையும் பக்காவாக பிளான் பண்ணிட்டு வந்து என்கிட்ட தகவல் சொல்லுற மாதிரி இல்லையா இருக்கு?”

“ஹையோ! என் புத்திசாலி அம்மா. கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்க” என்றவாறே தன் அன்னையின் கன்னத்தைப் பிடித்து ஆட்டியவன்,

“நான் இரண்டு வாரம் ஊட்டிக்கு போகலாம்ன்னு இருக்கேன்” என்று கூற,

சாவித்திரியோ, “இரண்டு வாரமா?” என்றவாறே அவனைப் பார்த்து அதிர்ச்சியாகி அமர்ந்திருந்தார்.

“ஆமா, இரண்டு வாரம் தான், அதோடு எனக்கு வேறு வழியும் இல்லை ம்மா, உண்மையை சொல்லப்போனால் இரண்டு வாரமும் கம்மி தான், இருந்தாலும் உங்களுக்காகத் தான் இரண்டு வாரத்தில் வர முடிவெடுத்தேன். ஆனா நீங்க ஒண்ணும் கவலைப் பட வேண்டாம், எப்படியும் நான் சீக்கிரமாக வர ட்ரை பண்ணுறேன்.

எனக்குப் புரியுது, நீங்க என்னை ரொம்ப மிஸ் பண்ணுவீங்க, ஆனாலும் நான் கண்டிப்பாக போயே ஆகணும் ம்மா, ப்ளீஸ்ம்மா. நான் போயிட்டு வரவா?” சித்தார்த் சாவித்திரியின் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சலாக வினவ,

அவனது கையை சட்டென்று உதறி விட்டவர், “எப்படி, எப்படி? நீ மட்டும் ஜாலியாக இரண்டு வாரம் நல்லா ஊர் சுற்றிப் பார்ப்ப, நாங்க இங்க உங்களையே நினைச்சு ஃபீல் பண்ணணுமா? அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை ராஜா, மரியாதையாக என்னையும் உன் கூட கூட்டிட்டு போற, நானும் ஊட்டியை சுற்றிப் பார்க்கணும்” என்று கூற, அவனோ அவரை பார்த்து திகைத்துப்போய் அமர்ந்திருந்தான்.

“அம்மா! அப்போ நீ உன் பையன் இரண்டு வாரம் உன்னைப் பிரிந்து இருப்பான்னு ஷாக் ஆகலயா?”

“இதற்கெல்லாம் யாராவது ஷாக் ஆகுவாங்களா? நான் ஷாக் ஆனது இரண்டு வாரம் ஊட்டியை நீ மட்டும் எப்படி தனியா ஜாலியாக சுற்றிப் பார்க்கலாம்ன்னு தான்”

“சபாஷ் மம்மி! சபாஷ்! உங்களை நினைச்சு ரொம்ப பெருமையாக இருக்கு”

“அதெல்லாம் அப்புறம் பெருமை பட்டுக்கலாம், சரி, நம்ம எப்போ கிளம்பலாம்ன்னு சொல்லு?”

“அம்மா! நான் ஒண்ணும் ட்ரிப் போகல, காட்டுக்குள்ளே விலங்குகளை ஃபோட்டோ எடுக்கப் போறேன், இதில் எப்படிம்மா உங்களையும் நான் கூட்டிட்டு போக முடியும்? உங்களைத் தனியாக அங்கே விட்டுட்டா போக முடியும்?”

“ஓஹ்! எனக்குத் துணை வேணும்னா கௌசல்யாவையும், கௌசிக்கையும் கூட்டிட்டு வர்றேன். நீ உன் பாட்டுக்கு ஃபோட்டோ எடு, நாங்க எங்க பாட்டுக்கு ஊட்டியை சுற்றிப் பார்க்கிறோம்”

“ஆனா ம்மா, அங்கே உங்களை எப்படிக் தனியாக விட்டுட்டு போறது? கௌசல்யாவும், கௌசிக்கும் சின்னப் பசங்க, அப்பாவையும் அழைச்சுட்டுப் போக முடியாது, அப்புறம் இங்கே வேலை எதுவும் நடக்காது, அதெல்லாம் சரி வராதும்மா” சித்தார்த் முதல் முறையாக தன் அன்னை கேட்ட ஒரு விடயத்தை மறுத்துச் சொல்கிறேமே என்கிற குற்றவுணர்வுடன் தயங்கியபடி அமர்ந்திருந்த வேளை,

“அதெல்லாம் யூ டோண்ட் வொர்ரி பிரதர், எல்லாத்துக்கும் டூரிஸ்ட் கைட் நான் ஏற்பாடு பண்ணிடுறேன்” என்றவாறே கௌசல்யா தன் அன்னைக்கும், அண்ணனுக்கும் நடுவில் வந்து அமர்ந்து கொண்டாள்.

“ஏய் வாலு! அப்போ இவ்வளவு நேரமாக நானும், அம்மாவும் பேசுனதை எல்லாம் ஒட்டுக் கேட்டுட்டு நின்னியா?” சித்தார்த் கௌசல்யாவின் தலையில் குட்டு வைக்க,

தன் தலையை தேய்த்து விட்டபடியே அவனது கையைத் தட்டி விட்டவள், “ஆமா பெரிய சிதம்பர ரகசியம், அம்மாவுக்கும், பிள்ளைக்கும் இப்படி மொக்கையாக கதை பேசுறது தான் வேலை, அதை நாங்க ஒட்டு வேற கேட்கணுமாமே?” என்றவாறே தன் அன்னையின் புறம் திரும்பி,

“மை டியர் சாவி, எனக்கு இன்னும் இரண்டே நாளில் செமஸ்டர் எக்ஸாம் முடிந்துடும், அதற்கு அப்புறம் எனக்கு ஒரு மாதம் லீவோ லீவு, அதனால நம்ம எல்லோரும் ஊட்டி போறோம், டாட்” என்று கூற,

“ஆமா, போறோம்” என்றவாறே கௌசிக்கும் எங்கிருந்தோ ஓடி வந்து அவர்கள் எதிரில் அமர்ந்து கொண்டான்.

“நீ எங்கே இருந்துடா வந்த?” கௌசிக்கின் திடீர் வருகையில் சற்றே திடுக்கிட்டு போன சாவித்திரி புன்னகை முகமாக சித்தார்த்தின் புறம் திரும்பி,

“சித்தார்த் கண்ணா! இப்படி இந்தப் பிஞ்சுக் குழந்தைங்க மனசில் ஆசையை விதைச்சுட்டு ஏமாற்றிடாதேடா! பாவம் டா குழந்தைக்கு” என்று கூற,

“யாரு, இதுங்க குழந்தைங்களா?” என்றவாறே தன் தலையில் தட்டிக் கொண்டவன்,

“சரி, இனி நீங்க எல்லோரும் ஒரு முடிவு எடுத்துட்டீங்க, இதற்கு அப்புறம் நான் வேணாம்னு சொன்னா மட்டும் விடவா போறீங்க? அடுத்த வாரம் புதன்கிழமை ஊட்டி போறோம், தேவையான திங்க்ஸ் எல்லாம் எடுத்து வைங்க” என்று விட்டு அங்கிருந்து சென்று விட, சாவித்திரி, கௌசல்யா மற்றும் கௌசிக் துள்ளிக்குதித்து தங்கள் சந்தோஷத்தைப் பரிமாறிக் கொண்டனர்.

தன் அன்னையினதும், தங்கை, தம்பியினதும் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டவன், ‘அவர்களது இந்த சந்தோஷம் எப்போதும் நிலைத்து நிற்க வேண்டும், அதற்கு பதிலாக தன் சந்தோஷத்தையும் இழக்கத் தயாராக இருப்பேன்’ என்றெண்ணியபடியே தன் அறையை நோக்கிச் சென்று விட, அவன் மனதிற்குள் நினைத்த அந்த ஒரு விடயம் வெகு விரைவில் நடக்கத் தான் போகிறது, ஆனால் என்ன அந்த உண்மை இப்போது அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!