IMG_20221031_134812

எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 19

தான் சொன்ன விடயத்தைக் கேட்டுப் பதில் எதுவும் சொல்லாமல் ஒருவரையொருவர் பார்த்தபடி அமர்ந்திருந்த சாவித்திரி மற்றும் வைத்தீஸ்வரனின் எதிரே சென்று முழங்காலிட்டு அமர்ந்து கொண்ட சித்தார்த், “என்னாச்சு ம்மா, என்னாச்சு ப்பா, இரண்டு பேரும் எதுவுமே பேசாமல் இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்? ஒருவேளை உங்களுக்கு கிஷோரைப் பிடிக்கலையா? இல்லை அவன் நம்ம கிட்ட வேலை பார்க்குற பையன்னு ஏதாவது யோசிக்குறீங்களா?” என்று வினவ,

அவசரமாக அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்த வைத்தீஸ்வரன், “சேச்சே! கிஷோரைப் போய் நாங்க அப்படி நினைப்போமா? அவனையும் உன்னை மாதிரி, கௌசிக் மாதிரி இந்த வீட்டில் ஒரு ஆளாகக் தான் நான் எப்போதும் பார்த்திருக்கேன். அது மட்டுமில்லாமல் கிஷோரையும், அவனோட குடும்பத்தையும் ரொம்ப வருஷமாக நமக்குத் தெரியும், அவங்க ரொம்ப நல்லவங்க தான், அதில் எங்களுக்கு எந்தவொரு தடங்கலும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் பசங்க சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம். ஆனால் நாங்க அமைதியாக இருப்பதற்கு காரணம் கிஷோர் இல்லை கௌசல்யா தான். இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு நம்ம கிட்ட அவ ஒரு வார்த்தை கூட சொல்லலையே, அப்படி அவ கிஷோரை விரும்புவதாக சொல்லியிருந்தால் நாங்க என்ன வேண்டாம்னு சொல்லவா போறோம்? அவ விருப்பத்தை மீறி நாங்க ஏதாவது பண்ணியிருக்கோமா என்ன?” என்று வினவ, அவனோ சிறு புன்னகையுடன் தன் தந்தையின் கரத்தை ஆதரவாக அழுத்திக் கொடுத்தான்.

“ஐயோ அப்பா! நீங்க இவ்வளவு ஃபீல் பண்ணும் அளவுக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை, என்ன தான் பெற்றவங்க பிள்ளைகளோட பிரண்ட்லியா பழகினாலும் இந்த மாதிரி விஷயங்களை அவங்களால் ஓபனாக சொல்லி விட முடியாதுப்பா. காதல்ன்னு வந்துட்டாலே எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் ஒரு சின்ன தயக்கம் வரத்தான் செய்யும். அது மட்டுமில்லாமல் கௌசல்யாவுக்கு நீங்க வரன் பார்க்கும் விஷயம் இன்னுமே தெரியாது, ஒருவேளை அவளுக்கு இது முன்னாடியே தெரிந்திருந்தால் அவ இவ்வளவு தூரம் இதை எல்லாம் விட்டிருக்கவே மாட்டா. நீங்க ஏன் அவகிட்ட இதைப்பற்றி சொல்லல?”

“அவ சின்னப் பொண்ணு தானே டா சித்தார்த் பையா, வீணாக அதை இதை சொல்லி அவ மனசை அலைபாய விடலாமா? அதுதான் எல்லாம் சரியான பிறகு அவகிட்ட இதைப்பற்றி பேசலாம்ன்னு இருந்தேன்” என்று கூறிய சாவித்திரியைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்துக் கொண்டவன்,

“யாரு அவ சின்னப் பொண்ணா? இதைப் போய் அவகிட்ட சொல்லிடாதீங்கம்மா, அவளே விழுந்து விழுந்து சிரிப்பா. சின்னப் பொண்ணாம்மே, அந்த சின்னப் பொண்ணு தான் கிஷோரை மிரட்டாத குறையாக பயமுறுத்தி வைத்திருக்கா, நீங்க வேற” என்று பேசிக் கொண்டிருக்கும் போது கௌசல்யா தன் போனைப் பார்த்து சிரித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைவதைக் கண்டு கொண்ட சித்தார்த் தன் பெற்றோரின் புறம் திரும்பி,

“அம்மா, அப்பா, அதோ கௌசல்யா வர்றா. கொஞ்ச நேரம் அவளை வைத்து ஒரு டிராமா பண்ணப் போறேன், ஷோ தயவுசெய்து நீங்க சிரித்தோ அல்லது ஓவராக ஆக்ட் பண்ணியோ என்னை மாட்டி விட்டுடாதீங்க. கிஷோரோட அம்மா, அப்பா வர்ற வரைக்கும் மேடமை கொஞ்சம் அலற விடுறேன்” என்றவன் கீழே குனிந்து தன் போனைப் பார்த்தபடி நடந்து வந்து கொண்டிருந்த கௌசல்யாவின் எதிரே சென்று நிற்க, அவளோ அவனைப் பார்க்காமல் வந்து அவன் மேல் மோதி கீழே விழுந்திருந்தாள்.

தான் விழுந்த கோபத்தில் தன் எதிரே யார் நிற்கிறான் என்பதைப் பாராமல் எழுந்து நின்றவள், “தடிமாடு, இப்படியா வழியில் வந்து நிற்ப? தடிமாடு, தடிமாடு” என்றவாறே நிமிர்ந்து பார்க்க, அங்கே சித்தார்த் நின்று கொண்டிருந்தான்.

சித்தார்த்தைப் பார்த்ததும் சட்டென்று தன் வாயை மூடிக்கொண்டவள், “ஐயோ! சித்தார்த் அண்ணா நீயா? நான் அந்தக் கௌசிக்ன்னு நினைத்து திட்டிட்டேன், சாரி. நீ ஏண்ணா இப்படி வழியில் வந்து நின்ன?” என்று வினவ,

அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றவன், “மேடம் தான் உங்களைச் சுற்றி என்ன நடக்கிறதுன்னு கூடத் தெரியாமல் போனில் மூழ்கியிருக்கீங்களே. அப்படி வழியில் ஆள் நிற்பது கூடத் தெரியாமல் அந்த போனில் என்ன பார்த்து சிரிக்குறீங்க மிஸ்.கௌசல்யா, எங்ககிட்ட சொன்னால் நாங்களும் சிரிப்போமே” என்றவாறே அவளது போனை வாங்கப் பார்க்க, அவளோ தன் கையை சட்டென்று பின்னிழுத்துக் கொண்டாள்.

“சித்தார்த் அண்ணா! இது என்ன புதுப் பழக்கம்? அடுத்தவங்க ஃபோனை இப்படி பார்க்கலாமா?”

“அடுத்தவங்களா? நீ என் தங்கச்சி ம்மா. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஊட்டியில் வைத்து என் ஃபோனை நீங்க பறிச்சுப் பார்த்தது எல்லாம் மறந்து போயிடுச்சுன்னு நினைக்கிறேன், நான் வேணும்னா ஞாபகப்படுத்தவா?”

“வேண்டாம், இப்போ என்ன என்னோட போன் வேணும், அவ்வளவுதானே? இந்தா பார்த்துக்கோ” என்றவாறே கௌசல்யா தன் போனை சித்தார்த்தின் புறம் நீட்ட,

அவனோ, ‘என்ன இவ, இவ்வளவு சீக்கிரமா ஃபோனை நீட்டுறா? எப்படி இவளை வம்பிழுக்கிறது?’ என்றவாறே அவளது கையை கீழிறக்கி விட்டு,

“சரி, சரி பரவாயில்லை. இன்னும் கொஞ்ச நாளில் கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்குப் போகப் போற, அதனால் சண்டை வேண்டாம்” என்று சொல்ல, அவன் கூறியதைக் கேட்டு கௌசல்யா அவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

“எது இன்னும் கொஞ்ச நாளா? சித்தார்த் அண்ணா என்ன சொல்லுற நீ?” கௌசல்யாவின் முகத்தில் தெரிந்த பதட்டத்தைப் பார்த்ததும் தனக்குள் சிரித்துக் கொண்டவன்,

“ஆமா ம்மா கௌசல்யா, உனக்கு ஒரு வரன் பார்த்து இருக்கோம், பையன் ரொம்ப நல்ல பையன், அவனோட குடும்பமும் ரொம்ப நல்லவங்க, உன்னைப் பற்றி அவங்களுக்கு நல்லாவே தெரியுமாம், அதனால் இன்னைக்கு ஒரு சம்பிரதாயத்திற்காக உன்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்க” என்று கூற,

அவளோ அதிர்ச்சியாக தன் அன்னையின் புறம் திரும்பி, “அம்மா, என்னம்மா இது? அண்ணா என்னன்னவோ எல்லாம் சொல்லுறாங்க, நீங்க கூட என் கிட்ட இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லலையே?” என்று வினவ,

“சொல்லியிருந்தால் என்ன பண்ணியிருப்ப?” என சாவித்திரியை முந்திக்கொண்டு சித்தார்த் அவளைப் பார்த்து கேட்டிருந்தான்.

“எனக்கு இதெல்லாம் வேண்டாம்ன்னு சொல்லியிருப்பேன், நான் வேறு ஒருத்தரை விரும்புறேன்னு சொல்லியிருப்பேன்”

“எது லவ்வா? சும்மா விளையாடாதே கௌசி! சரி, சரி உன் விளையாட்டை எல்லாம் அப்புறம் வைச்சுக்கோ, மாப்பிள்ளை வீட்டில் இருந்து அவங்க வர்ற நேரம் ஆச்சு, சீக்கிரமாக போய் ரெடி ஆகிட்டு வா” என்றவாறே சித்தார்த் அவளது கையைப் பிடிக்கப் பார்க்க,

சட்டென்று தன் கையை விலக்கி எடுத்துக் கொண்டவள், “முடியாது, நான் என்ன சொல்ல வர்றேன்னு கூட கேட்காமல் நீங்க பாட்டுக்கு ஏதேதோ பேசுறீங்க. முதல்ல நான் யாரை விரும்புறேன்னாச்சும் கேளுங்களேன்” என்றவாறே வைத்தீஸ்வரனின் அருகில் சென்று நின்று கொண்டவள்,

“அப்பா, என்னப்பா நீங்க கூட எதுவும் பேசாமல் இருக்கீங்க? என் விருப்பம் தான் உங்க விருப்பம்ன்னு எல்லாம் அடிக்கடி சொல்லுவீங்க. இப்போ இந்த விஷயத்தில் மட்டும் அமைதியாக இருக்கீங்க, நான் ஆரம்பித்திலேயே இதைப்பற்றி சொல்லி இருக்கணும், கொஞ்ச நாள் போகட்டும், என்னோட ரிசர்ச் வர்க் முடிந்ததும் சொல்லாம்ன்னு அமைதியாக இருந்தது என் தப்புதான், ஐ யம் சாரிப்பா, நான் இப்போவே எல்லாவற்றையும் சொல்லிடுறேன், ஏதாவது பேசுங்கப்பா” என்றவாறே கெஞ்சலாக அவரைப் பார்த்து வினவ, அவரோ சிறு தயக்கத்துடன் சித்தார்த்தைத் திரும்பிப் பார்த்தார்.

தன் தந்தையினதும், அன்னையினுதும் பார்வை சித்தார்த்தின் புற்ம நிலைகுத்தி நிற்பதைப் பார்த்து சற்று கோபமாக அவனெதிரில் வந்து நின்று கொண்டவள், “அப்போ நீங்க தான் அம்மாவையும், அப்பாவையும் இதற்கெல்லாம் சம்மதிக்க வைத்திருக்கீங்க அப்படித்தானே?” என்று வினவ,

அவனும் இயல்பாக, “அப்கோர்ஸ், இங்கே நடக்கும் எல்லாவற்றுக்கும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே நான் தான்” என்று கூற, அவளோ கோபமாக அவனுக்குப் பதில் பேசப் பார்த்து விட்டு வெளியே கேட்ட கார் சத்தத்தில் சட்டென்று அமைதியாகிப் போனாள்.

“அதோ மாப்பிள்ளை வீட்டில் இருந்து ஆளுங்க வந்துட்டாங்க” சித்தார்த் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே வாயிலை நோக்கி ஜாடை காட்ட,

தன் கலங்கிய கண்களைத் துடைத்தபடியே அங்கிருந்த கண்ணாடியாலான பூச்சாடியைத் தூக்கியவள், ” இன்னைக்கு அவங்க இந்த வீட்டிற்குள்ளே கால் வைக்கட்டும், இந்த பூச்சாடி அந்த மாப்பிள்ளையோட தலையை இரண்டாக்கும் பார்த்துக்கோ” என்றவாறே வாயிலை நோக்கிப் போகப் பார்க்க, அவனோ அவசரமாக அவளைப் பிடித்து நிறுத்தினான்.

“அடிப்பாவி! நீ இந்தளவிற்கு ரவுடித்தனம் எல்லாம் பண்ணுவியா? உன்னைக் கட்டிக்கப் போற அந்தக் கிஷோர் ரொம்ப பாவம்”

“எந்தக் கிஷோராக இருந்தாலும்…” என கோபமாக பேசிக் கொண்டிருந்த கௌசல்யா கிஷோர் என்ற பெயரைக் கேட்டதும் சட்டென்று சித்தார்த்தின் புறம் திரும்பிப் பார்த்து விட்டு, வாயில் புறம் திரும்பிப் பார்க்க, அங்கே கிஷோர் தன் அன்னை, தந்தையுடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

“அப்போ கிஷோர் தான் நீங்க பார்த்த மாப்பிள்ளையா?”

“நாங்க இல்லை, நீ. நீயும், கிஷோரும் லவ் பண்ணுற விஷயம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தே தெரியும், நான் தான் அதை வெளியே காண்பிக்கல. எப்போவாச்சும் வாயைத் திறந்து சொல்லுவீங்கன்னு வெயிட் பண்ணேன், இரண்டு பேரும் வாயே திறக்கல, ஆனா இன்னைக்கு உன் ஆளு ஒரு விஷயத்தில் வாய் உளறி மாட்டிக்கிட்டான், அதுதான் எல்லாம் தெரிந்த உடனே பெரியவங்க கிட்ட சொல்லி பேச ஏற்பாடு பண்ணிட்டேன்” என்று விட்டு சித்தார்த் கௌசல்யாவைப் பார்த்து புருவம் உயர்த்த, அவளோ அவனைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“இதற்காக நீ இந்த அண்ணனுக்கு நன்றி எல்லாம் சொல்லணும்ன்னு அவசியம் இல்லை, இது எல்லாம் என்ன பெருமையா? என்னோட கடமை”

“ஓஹ்! அப்படியா? அப்போ அப்படியே இருந்துக்கோ” என்றவள் சித்தார்த்தின் முகம் ஏமாற்றத்துடன் சுருங்கிப் போவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே தன் அன்னையின் அருகில் சென்று நின்று கொள்ள, அதன் பிறகு அங்கே பெரியவர்களின் பேச்சுவார்த்தையே மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தது.

இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து ஒரு சுபமுகூர்த்த நாளில் கிஷோர் மற்றும் கௌசல்யாவின் நிச்சயதார்த்தத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் அதன் பிறகு, இரண்டு மாதங்கள் கழித்து அதாவது கௌசல்யாவின் ரிசர்ச் வேலைகள் முடிவடைந்ததும் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் அங்கிருந்த பெரியவர்கள் ஒன்றாக இறுதி முடிவை எடுத்திருந்தனர்.

அங்கே நடப்பது எல்லாம் கனவு போல் இருந்தாலும் அவை எல்லாம் நல்லபடியாக நடந்து முடியக் காரணமாக இருந்த தன் அண்ணனின் அருகில் வந்து அமர்ந்து கொண்ட கௌசல்யா, “சித்தார்த் அண்ணா, உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை, எல்லாம் அப்படியே கனவு மாதிரி இருக்கு. இந்த உலகத்திலேயே உன்னை மாதிரி ஒரு பெஸ்ட் அண்ணா யாருக்கும் இருக்க மாட்டாங்க, ஐ லவ் யூ சோ மச் அண்ணா” என்றவாறே அவனது தோளில் சாய்ந்து கொண்டு,

“ஆனா எல்லோருக்கும் எது தேவை, எது பிடிக்கும்ன்னு பார்த்து பார்த்து பண்ணுற நீ மட்டும் உன் விருப்பத்தை வெளியே சொல்லாமல் இருக்குறியேண்ணா” என்று கூற, சித்தார்த் அவளைப் பார்த்து புன்னகைத்தபடியே அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தான்.

“நான் என் விருப்பத்தை வெளியே சொல்லலேன்னு யாரு சொன்னா? நீங்க எல்லோரும் சந்தோஷமாக இருந்தால் அதுவே எனக்கு சந்தோஷம் தானே? என் செல்ல ராட்சசி தொங்கச்சி சாரி,சாரி தங்கச்சிக்கு கல்யாணம் ஆகப்போகிறது, இதை விட வேறு என்ன எனக்கு வேணும்?”

“மாயா!” கௌசல்யாவின் ஒற்றை வார்த்தையில் சட்டென்று அமைதியாகிப் போனவன்,

“இந்த விடயத்தில் முடிவெடுக்க வேண்டியது நம்ம இல்லை கௌசல்யா, மாயா தான். அதனால இதைப்பற்றி இனிமேல் பேச வேண்டாம்” என்றவன்,

“நீ கண்டதையும் யோசிச்சு உன் சின்ன மூளையைக் கசக்கிப் பிழியாமல் இப்போ இருந்தே நிச்சயதார்த்தத்திற்கு ரெடி ஆகும் வேலையைப் பாரு” என்று விட்டு அங்கிருந்து சென்று விட, அவளோ தன் அண்ணனைப் பார்த்து புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள்.

‘உன் நல்ல மனசுக்கு கண்டிப்பாக உனக்குப் பிடித்த விஷயம் சீக்கிரமாகவே கிடைக்கும் ண்ணா. கிடைக்கும் இல்லை கிடைக்கணும்’ என தன் அண்ணனின் ஆசைக்காக தன் மனதிற்குள் கடவுளிடம் வேண்டிக் கொண்ட கௌசல்யா தன் வேலைகளை கவனிக்கச் சென்று விட, அவள் வேண்டுதலை நிறைவேற்றுவது போல அன்றிலிருந்து இரண்டு நாட்கள் கழித்து ஒரு சம்பவம் சித்தார்த்தின் வாழ்வில் நிகழ்ந்திருந்தது.

அன்றைய நாள் ஒரு முக்கியமான நபரை சந்திப்பதற்காக வேண்டி சித்தார்த் வெளியே செல்ல வேண்டியிருக்க, கிஷோரும் அவனுடன் இணைந்து காரில் சென்று கொண்டிருந்தான்.

அந்த நபர் சித்தார்த்துடன் ஒரு புதிய வேலை ஒப்பந்தத்திற்காக அவனை சந்திக்க அழைப்பு விடுத்திருக்க அவரைப் பார்க்கச் செல்லுகையில் வெறுங்கையுடன் செல்வது சரியில்லை என்று நினைத்துக் கொண்டவன் ஏதாவது வாங்கிக் கொண்டு செல்லலாம் என்றவாறே வெளியே தன் பார்வையைச் சுழல விட அந்த இடத்தில் அவனுக்கு புலப்பட்டது இயற்கை மற்றும் செயற்கை பூக்கள் நிறைந்த ஒரு பெரிய பூக்கடை.

அந்த இடத்தைப் பார்த்ததுமே அங்கே செல்லலாம் என்று முடிவெடுத்தவன் தன் காரில் இருந்து இறங்கிக் கொண்டு தன் ஃபோனைப் பார்த்தபடியே அந்த கடைக்குள் நுழைந்து கொண்டான்.

ஒரு பெண் அவனுக்கு முதுகு காட்டியபடி நின்றுகொண்டு புதிதாக வந்திருந்த பூக்களை எல்லாம் ஒழுங்கு படுத்தி வைத்துக் கொண்டிருக்க, “மேடம், ரெட் அன்ட் வைட் ரோஸ் வைத்த ஒரு லார்ச் சைஸ் பொக்கே கொடுங்க, கொஞ்சம் சீக்கிரமாக கொடுத்தால் நன்றாக இருக்கும்” என தன் ஃபோனைப் பார்த்தபடியே கூற, மறுபுறம் அந்தப் பெண் அந்த இடத்திலேயே அசையாமல் நின்று கொண்டிருந்தாள்.

கீழே குனிந்தபடி நின்றிருந்த சித்தார்த்திற்கு தன் எதிரே நின்று கொண்டிருந்த பெண்ணின் கால்கள் வெகு நேரமாக அந்த இடத்திலேயே நிற்பது தென்பட, ‘என்ன இது? ஆர்டர் சொன்னால் ஒண்ணு தர்றேன்னு சொல்லணும், இல்லை தரலேன்னு சொல்லணும், அதை விட்டுட்டு இப்படி அசையாமல் நிற்கிறாங்க, ஒருவேளை காது கேட்காதோ?’ என்றவாறே நிமிர்ந்து பார்த்தவன், அங்கே அவனைப் பார்த்து அதிசயித்து நின்று கொண்டிருந்த மாயாவைப் பார்த்து திகைத்து நின்றான்.

“மாயா?”

“சித்தார்த்!”

“மாயா, நீ இங்கே எப்படி?”

“அது, அது நான் இங்கே பார்ட் டைம்மா வர்க் பண்றேன்”

“பார்ட் டைம்மா? இந்த வருமானம் உனக்குப் போதுமாக இருக்கா?”

“பரவாயில்லை, ஏதோ என்னோட தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கு”

“அதற்கில்லை மாயா, நீ படிக்கும் கோர்ஸ் எப்படியானதுன்னு எனக்குத் தெரியும், அதற்கு பிராக்டிகல் பண்ணவே கொஞ்சம் செலவு ஆகுமே, அதுதான் கேட்டேன். தப்பாக எடுத்துக்காதே”

“சேச்சே! அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. ஊரில் வீட்டை வாடகைக்கு விட்டிருக்கேன், அதில் கொஞ்சம் வருமானம் வரும், அப்புறம் இங்கே லீவு கிடைக்கும் போது ஊட்டிக்குப் போய் என்னோட கைடு வேலையையும் பார்ப்பேன், ஷோ சமாளிக்கும் அளவுக்கு வருமானம் இருக்கு”

“இப்படி ஓய்வே இல்லாமல் இருப்பது கஷ்டமாக இல்லையா மாயா?”

“இதற்கு முன்னாடி நான் அனுபவித்த கஷ்டங்களை விட இது ஒண்ணும் அவ்வளவு கஷ்டமாக இல்லை” மாயாவின் கூற்றில் சித்தார்த்தின் முகம் சட்டென்று வாடிப் போய் விட,

அவளோ சற்று அவசரமாக, “நான் உங்களைப் பற்றி எதுவும் சொல்லல, என்னோட அம்மா, அப்பா இறந்து போனதைப் பற்றி சொன்னேன். நீங்க இப்படி சட்டுன்னு முகம் வாடிப் போக வேண்டாம், பார்க்க கஷ்டமாக இருக்கு” என்று கூற, சித்தார்த் அவளை ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தான்.

சித்தார்த்தின் பார்வையில் தெரிந்த ஆச்சரியத்தையும், அதை மீறித் தென்பட்ட காதலையும் பார்த்து திக்கு முக்காடிப் போனவள் சட்டென்று தன் பார்வையை விலக்கிக் கொண்டு, “நீங்க கேட்ட பொக்கேவை ஒரு பத்து நிமிஷத்தில் ரெடி பண்ணித் தர்றேன்” என்றவாறே தன் வேலையைக் கவனிக்கத் தொடங்க, சித்தார்த் சிறு புன்னகையுடன் அவள் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

அப்போதே மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட ரோஜாப்பூக்களை நிறம் வாரியாகப் பிரித்து வைத்திருக்க, அவற்றில் இருந்து தேவையான அளவு பூக்களை எடுத்து கட்டியவள் சித்தார்த்தின் புறம் திரும்பி, “கார்டில் ஏதாவது எழுதணுமா?” என்று வினவ,

அவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன், “ஃப்ரம் யுவர் லவ்வபல் சித்தார்த்” என்று கூற, மாயா அவனைப் பார்த்துக் கொண்டே அவன் சொன்னவற்றை செய்து முடித்தாள்.

“சரி, நான் வர்றேன் மாயா” என்றவாறே அங்கிருந்து புறப்பட்ட சித்தார்த் தன் காரில் ஏறி அமர்ந்து கொண்டு மாயாவின் புறம் திரும்பிப் பார்க்க, அத்தனை நேரமும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றவள் இப்போது அவனது பார்வை தன் மீதிருப்பதைப் பார்த்ததும்,

“அச்சச்சோ!” என்றவாறே சட்டென்று மறுபுறம் திரும்பிக் கொள்ள, அவனோ சிறு புன்னகையுடன் அவளது ஒவ்வொரு அசைவையும் ரசித்துப் பார்த்தபடி தன் காரின் இருக்கையில் கண் மூடி சாய்ந்து கொண்டான்……

error: Content is protected !!