எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 22 (Final)

IMG_20221031_134812

எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 22 (Final)

தன் போனில் வந்திருந்த செய்தியைப் பார்த்த நொடியிலிருந்து மாயாவிற்கு இருப்புக் கொள்ளவேயில்லை.

இப்போதே சித்தார்த்தை உடனடியாக சந்தித்து இதைப்பற்றி பேசியாக வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டவள் தன்னறையிலிருந்து வெளியேறி அவனைத் தேடிக் கொண்டே நடந்து செல்ல, அவளது நல்ல நேரம் சித்தார்த் படியேறி மொட்டை மாடிக்கு செல்வது அவளது விழிகளுக்குள் அகப்பட்டது.

அவனைப் பார்த்ததுமே, “சித்தார்த் நில்லுங்க” என்றவாறே அவனைப் பின் தொடர்ந்து ஓடிச் சென்றவள் அவன் மொட்டை மாடிக்கு சென்ற பின்னர் தான் அவனைப் பிடித்திருந்தாள்.

யாரோ தன்னைப் பின் தொடர்ந்து ஓடி வருவது போல் கேட்ட சத்தத்தில் சற்று பயத்துடன் திரும்பிப் பார்த்த சித்தார்த் அங்கே மூச்சிறைக்க நின்று கொண்டிருந்த மாயாவைப் பார்த்து அதிர்ச்சியாகித் தான் போனான்.

“மாயா? நீ இங்கே, இந்த நேரத்தில் என்ன பண்ணுற?”

“ஒரு…ஒரு நிமிஷம்” என்றவாறே தன் நெஞ்சை நீவி விட்டு தன்னை சற்று நிதானப்படுத்திக் கொண்டவள்,

“உங்களுக்கு எப்பவுமே மெதுவாக நடக்கத் தெரியாதா? அன்னைக்கு ஊட்டி கோவிலில் வைத்தும் இப்படித்தான் தடதடன்னு போனீங்க, இன்னைக்கும் இப்படி” என்று கூற,

அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டவன், “என்ன பண்ணுறது, எல்லாம் உற்பத்தியாளர்களின் வழி, அது சரி, நீ எதற்காக என்னைப் பின்தொடர்ந்து வந்த?” என்று வினவ, அப்போதுதான் அவளுக்கு தான் அவனைப் பார்க்க வந்த விடயமே நினைவுக்கு வந்தது.

“அட மறந்தே போயிட்டேன் பாருங்க” என்றவள் தனது ஃபோனில் வந்திருந்த செய்தியை அவனுக்கு காட்ட,

அதை வாங்கிப் பார்த்தவன், “அட வாழ்த்துக்கள் மாயா! ஃபோட்டோ கிராபிக் காம்பிடேஷனில் முதலாவதாக வந்திருக்க, எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு தெரியுமா?” என்று கூற, அவளோ அவனைக் கோபமாக முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

“இதெல்லாம் என்னது சித்தார்த்? நான் எதற்காக இந்தப் போட்டியில் முதலாவதாக வரணும்? இன்னும் சொல்லப்போனால் நான் எதுவுமே பண்ணலேயே, அப்படி இருக்கும் போது என்ன இதெல்லாம்?”

“என்ன நீ எதுவும் பண்ணலையா? அப்போ அந்த ஃபோட்டோ எல்லாம் எடுத்தது யாரு? நீதானே?”

“அது அன்னைக்கு உங்களுக்கு உதவி பண்ண நான் எடுத்துக் கொடுத்தேன், ஏன் அதற்கு அப்புறம் நீங்களும் சில ஃபோட்டோ எடுத்தீங்க தானே? அதை இந்தப் போட்டிக்கு அனுப்பி இருக்கலாமே? நான் எடுத்த போட்டோவை எதற்காக அனுப்புனீங்க?”

“ஏன்னா உனக்கான அங்கீகாரம் உனக்கு கிடைக்கணும்னு தான்”

“என்ன? எனக்குப் புரியலை” சித்தார்த்தின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாமல் மாயா குழப்பமாக அவனைப் பார்த்துக் கொண்டு நிற்க, அவளைப் பார்த்து புன்னகைத்த வண்ணமே அவளை அங்கிருந்த நாற்காலியில் அமரும் படி சொன்னவன் அவளெதிரில் கிடந்த இன்னுமொரு நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

“நான் எத்தனையோ ஃபோட்டோ அந்தக் காட்டிற்குள் வைத்து எடுத்தேன் தான், இல்லைன்னு சொல்லலை, ஆனா அந்த ஃபோட்டோ எதிலையும் நான் எதிர்பார்த்த ஒரு உயிர்ப்பு இல்லை. ஆனா நீ எடுத்த போட்டோ ஒண்ணு, ரெண்டாக இருந்தாலும் அது எல்லாவற்றிலும் ஒரு உயிர்ப்பு இருந்தது, ஒரு உயிரோட்டம் இருந்தது. அவ்வளவு அழகான விஷயத்தை நீ அத்தனை இலகுவாக அந்தக் கேமராவிற்குள் அடக்கி கொண்டு வந்திருந்த, அதுதான் அதற்கான அங்கீகாரம் உனக்கு கிடைக்கணும்னு ஆசைப்பட்டேன், உன்னைக் கேட்காமல் உன் டீடெயில்ஸ் கொடுத்தது தப்புதான், ஆனா அதில் எந்தவொரு தப்பான எண்ணமும் இல்லை மாயா”

“ஆனா இந்த ஃபோட்டோ கிராபிக் காம்பிடேஷன் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது? இந்த ஒரு தருணத்திற்காகத் தானே நீங்க இத்தனை வருஷமாக காத்திருந்தீங்க? உங்களோட சின்ன வயது ஆசையே இந்த ஃபோட்டோகிராஃப் தானே? அதை இவ்வளவு எளிதாக உங்களால் எப்படி விட்டுக் கொடுக்க முடிந்தது?”

“இதற்கு நான் பதில் சொல்லணும்னா நீ என்னோட ஒரு கேள்விக்கு பதில் சொல்லியே ஆகணும்”

“என்ன அது?”

“எனக்கு ஃபோட்டோ கிராஃபிக் பிடிக்கும்னு உனக்கு எப்படித் தெரியும்? இதுவரைக்கும் நான் யார்கிட்டேயும் இதைப்பற்றி இவ்வளவு ஆழமாக பேசியதே இல்லையே, அப்புறம் எப்படி உனக்குத் தெரியும்?” சித்தார்த்தின் கேள்வியில் சற்று சங்கடத்துடன் தன் தலையைக் குனிந்து கொண்டவள்,

“அது, அது அப்பப்போ சாவித்திரி ஆன்டி உங்களைப் பற்றிப் பேசுவாங்க, அப்போ கொஞ்சம் கொஞ்சமாக உங்களைப் பற்றி நானும் ஏதாவது கேட்டுத் தெரிஞ்சுப்பேன்” என்று கூற, சித்தார்த் அவளது சங்கடத்தையும், அதை மீறித் தென்பட்ட வெட்கத்தையும் பார்த்து தனக்குள்ளேயே புன்னகைத்துக் கொண்டான்.

“அப்போ என்னைப் பற்றி தெரிந்து கொள்ளுவதில் மாயா மேடம்க்கு இன்னமும் ஆர்வம் இருக்குது போல?” சித்தார்த்தின் கேள்வியில் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு, “நீங்க முதல்ல பேச்சை மாற்றாதீங்க, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க. எதற்காக உங்களோட ஆசையை விட்டுக் கொடுத்தீங்க? சின்ன வயதிலிருந்தே ஒரு விஷயத்தை ஆசைப்பட்டு அது கைக்கெட்டும் தூரத்திற்கு வந்த பிறகு அதை இழக்கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம்ன்னு எனக்கு நல்லாவே தெரியும், அப்படி இருக்கும் போது எதற்காக இதெல்லாம்?” என்று வினவ,

அதற்கும் பதிலாக புன்னகை செய்தவன், “ஒருத்தரோட திறமையை வளர்த்துக் கொள்ள நம்மால் ஒரு உதவி செய்ய முடியும்ன்னா அதைக் கண்டிப்பாக செய்தே ஆகணும், இது என்னோட கொள்கை. ஆரம்பத்தில் இருந்தே உன்னோட ஆசை நிறைவேறணும்னு தான் நான் என்னோட ஆசைகளை மறைத்தேன், இந்த ஃபோட்டோ கிராஃபிக் எனக்கு மட்டுமில்ல, உனக்கும் பிடிக்கும்னு எனக்குத் தெரியும். நான் அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்திருந்த போது உங்க வீட்டு சுவற்றில் நீ எடுத்த ஒன்றிரண்டு ஃபோட்டோ பார்த்தேன், அதில் எவ்வளவு நுணுக்கம், எவ்வளவு நேர்த்தி இருந்தது தெரியுமா? அப்போதான் எனக்கு உன்னோட விருப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்தது. எங்க அம்மா கிட்ட உன்னைப் பற்றி சொல்ல வேண்டாம்னு நீ சொல்லியிருந்தாலும் எங்க அம்மா ஒரு அப்பாவி, வாய் தவறி அப்பப்போ அதை, இதை உளறிடுவாங்க, அப்படித்தான் உனக்கும் இதில் நிறைய ஆர்வம்ன்னு எனக்கு ஊர்ஜிதமானது. இப்படி ஒரு வாய்ப்பு மறுபடியும் எனக்கு கிடைக்கலாம், ஆனா உனக்கு கிடைக்குமான்னு அப்போ இருந்த நிலைமையில் எனக்குத் தெரியல, அதனாலதான் உனக்கு கிடைத்த ஒரு பெறுமதியான வாய்ப்பாக இதை மாற்றிக்கிட்டேன், அவ்வளவுதான்” என்றவாறே இயல்பாக தன் தோளை உலுக்க, மாயாவோ அவனை வியப்பாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“எல்லா விடயத்திலும் என்னைப் பற்றி யோசிக்கும் நீங்க அன்னைக்கு மட்டும் நான் சொன்னதைக் கேட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?” என்றவாறே மாயா அங்கிருந்து விலகிச் சென்று நின்று கொள்ள,

சித்தார்த் சிறு தயக்கத்துடன் அவளை விட்டு சற்று விலகி நின்று கொண்டு, “நான் இப்போதும் சொல்லுறேன் மாயா, நான் எப்பவுமே யாருக்கும் கெடுதல் விளைவிக்கணும்னு நினைச்சது இல்லை, நம்ம அப்பா, அம்மா கிட்ட நம்ம எந்தளவிற்கு உண்மையாக இருக்கிறோமோ அந்தளவிற்கு அவங்க நம்ம கிட்ட நெருக்கமாக இருப்பாங்க என்கிற விஷயத்தை நான் என் வாழ்க்கையில் இருந்து தான் கற்றுக்கிட்டேன், அதைத்தான் நான் அன்னைக்கும் பண்ணேன், ஆனா அது இப்படி எல்லாம் தலைகீழாக மாறும்ன்னு எதிர்பார்க்கல” என்றவன்,

சிறு நேரம் கழித்து தயக்கத்துடன், “நீ இன்னமும் என் மேலே கோபமாகத்தான் இருக்கிறியா மாயா?” என்று வினவ, அவளோ அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தாள்.

“அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க. ஆரம்பத்தில் கோபம் இருந்தது என்னவோ உண்மைதான், ஆனால் நாளாக நாளாக அது தேவையில்லாத ஒன்றுன்னு புரிஞ்சுது. நீங்க எனக்கு நல்லது பண்ணுறேன்னு தான் உண்மையைச் சொன்னீங்க, ஆனா அது அப்போ தப்பாக போயிடுச்சு, உண்மையைச் சொல்வது அவ்வளவு பெரிய தப்பு ஒண்ணும் இல்லையே, இது எல்லாம் இப்போதான் எனக்கே புரிய ஆரம்பித்தது, அப்புறம் அந்தக் கோபம் எல்லாம் அப்படியே காணாமல் போயிடுச்சு”

“அப்போ இப்போ என் மேலே கோபம் இல்லேன்னா உன் மனதில் என்னைப் பற்றி என்ன நினைக்குற மாயா?” சித்தார்த்தின் கேள்வியில் சிறு தடுமாற்றத்துடன் தன் பார்வையை அவன் புறம் இருந்து விலக்கிக் கொண்டவள் அவனது கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்க,

அவளது தடுமாற்றத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டவன், “நீ உன் மனதில் என்ன இருக்குதுன்னு சொல்வதற்கு முன்னாடி நான் என் மனதில் என்ன இருக்குன்னு சொல்லிடுறேன்” என்றவன் அத்தனை வருடங்களாக தன் மனதிற்குள் பூட்டி வைத்திருந்த மாயா மீதான காதல் ரகசியத்தை சொல்ல ஆரம்பித்தான்.

“உண்மையைச் சொல்லப் போனால் நான் ஊட்டி வந்த அன்னைக்கே எனக்கு உன்னைப் பிடிச்சுப் போயிடுச்சு. அன்னைக்கு அந்தப் பசங்க உன் கிட்ட வம்பு பண்ணும் போது என்ன பண்ணுறதுன்னு தெரியாமல் உன்னோட அழகான கண்ணு ரெண்டும் நாட்டியமாடிட்டு இருந்ததே, அப்போவே நான் விழுந்துட்டேன். இருந்தாலும் கண்டதும் காதல் எல்லாம் அவ்வளவு ஈஸியாக கிடைச்சுடுமா என்னன்னு ஒரு தயக்கத்துடன் தான் உனக்கே தெரியாமல் அன்னையிலிருந்து உன்னை பாலோ பண்ண ஆரம்பித்தேன். நீ ஸ்கூல் போறப்போ காலையில் நேரத்திற்கே அந்தத் தெருவில் வந்து நின்று நீ போவதைப் பார்த்துட்டு இருப்பேன், அப்புறம் நீ ஸ்கூல் விட்டு வரும்போது உன் ஸ்கூல் முன்னாடி இருக்கும் ஒரு கடையில் என் பிரண்ட்ஸோடு உட்கார்ந்து பேசுவது மாதிரி உன்னைத்தான் பார்ப்பேன். முதல் இரண்டு நாள் நீ என்னைக் கவனிக்கல, அதற்கு அப்புறம் தான் நீ என்னைக் கவனிச்ச. அதற்கு அப்புறம் நீ என்னை பாலோ பண்ணி வர்றேன்னு தெரிந்தும், தெரியாதது மாதிரி நான் இருந்தேன். அன்னைக்கு நான் கோவிலில் இருந்து அவசரமாக வந்ததே உன்னைப் பார்க்கப் போகணும்னு தான், ஆனா அந்தக் கடவுளோட விளையாட்டு உன்னையே என் கிட்ட வந்து பேச வைத்தாரு. என் பிரண்ட்க்கு அப்போவே என் மேலே டவுட் வந்தது, ஆனாலும் நான் சமாளிச்சுட்டேன், அந்த நொடிக்கு அப்புறம் தான் நானும் தப்பு பண்ணிட்டேன்னு எனக்குத் தோண ஆரம்பித்தது. ஒரு சின்னப் பொண்ணு மனசை சலனப்படுத்திட்டோம்ன்னு ரொம்ப கவலையாக இருந்தது.

அதுதான் அடுத்த நாள் காலையிலேயே ஊருக்குப் போக முடிவு பண்ணேன், ஆனா என் பிரண்ட்ஸ் விடல, அதற்கு அப்புறம் பார்க்கில் வைத்து நடந்தது தான் உனக்குத் தெரியுமே? எனக்கும் கூடப் பிறந்த ஒரு தங்கச்சி இருக்கா, அவளுக்கும் உன் வயது தான், அப்படி இருக்கும் போது அவளுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருந்தால் ஒரு அண்ணனாக நானும் இது எல்லாம் இப்போ வேண்டாம்னு தான் சொல்லியிருப்பேன், அதே போலத்தான் உன்னோட லைஃப் நல்லா இருக்கணும்னு அன்னைக்கு என்னோட ஆசைகளை மறைத்தேன், ஆனாலும் இந்த ஐந்து வருஷத்தில் ஒரு தடவை கூட அந்த சம்பவங்களை எல்லாம் நான் நினைக்காமல் இருந்ததே இல்லை. அப்பப்போ உன்னோட அந்தக் கலங்கிய கண்களும், முகமும் எனக்கு ஞாபகம் வந்துட்டே இருக்கும், அதை எப்படி சமாறிக்கிறதுன்னு தெரியாமல் தான் இந்த ஃபோட்டோ கிராஃபிக்கை மறுபடியும் தொடங்கினேன், ஆனா அப்போதும் பிரச்சினை முடியல, அடிக்கடி ஒரு கனவு வந்துட்டே இருக்கும், நான் தனியாக காட்டிற்குள் போய் ஒரு புலி கிட்ட மாட்டிக்கிட்ட மாதிரி. அதற்கும் என்ன தீர்வுன்னு எனக்குத் தெரியாமல் இருந்த போது தான் நான் ஊட்டி வந்து உன்னை சந்தித்தேன்.

உன்னை முதல் தடவை பார்த்த போதே எனக்கு உன்னை ரொம்ப நாளாக தெரியும் போல உணர்வு இருந்தது, ஆனா எங்கேன்னு தெரியல, அது மட்டுமில்லாமல் நீயும், நானும் அடிக்கடி சண்டை வேறு போடுவோமா அதைப்பற்றி அப்புறம் நான் யோசிக்கவே இல்லை. அன்னைக்கு நீ என்னை அந்தப் புலி கிட்ட மாட்டாமல் காப்பாற்றிக் கொண்டு வந்த பிறகு தான் நீ யாருன்னு என் கிட்ட சொன்ன, அப்போதான் இத்தனை நாட்களாக எனக்குள் இருந்த மர்மம் எல்லாம் விலகியது போல இருந்தது. உன்னைத் தேடி நான் வந்ததால் தான் என்னோட எல்லாக் குழப்பங்களுக்கும் பதில் கிடைச்சதுன்னு எனக்கு அப்போதான் புரிந்தது. இதை எல்லாம் அப்போவே உன்கிட்ட சொல்ல நினைச்சேன், ஆனா நீ உன்னோட வாழ்க்கையில் என்ன நடந்ததுன்னு சொன்னதைக் கேட்ட பிறகு என்னாலே எதையுமே ஏற்றுக் கொள்ள முடியல, நீ நல்லா இருக்கணும்னு நினைச்சு நான் பண்ண விஷயம் இப்படி மாறும்ன்னு எதிர்பார்க்கல, அதற்கு அப்புறம் நீயும் என்னை விட்டு விலகிப் போக நினைச்ச, உன்னோட ஆசையை மதித்து நானும் அதற்கு இடம் கொடுத்தேன், ஆனா மறுபடியும் நீ கோயம்புத்தூர் வந்திருக்கும் விஷயத்தைக் கேள்விப்பட்ட போது உனக்கும், எனக்கும் ஏற்பட்ட இந்த உறவு அத்தனை எளிதில் முடிந்து போகாதுன்னு எனக்குப் புரிந்தது, அப்போதான் எனக்கு ஒரு உண்மை புரிய ஆரம்பித்தது, என்னோட தேடலுக்கான மொத்தப் பதிலும் நீதான் மாயா, நீ மட்டும்தான்!

இத்தனை வருஷமாக நான் உன் கிட்ட சொல்ல நினைத்த வார்த்தைகள் என்ன தெரியுமா? ஐ லவ் யூ அம்மு, ஐ லவ் யூ சோ மச். என் மனதார நான் உன்னை காதலிக்கிறேன், என்னோட வாழ்க்கை முழுவதையும் நான் உன்னோடு பகிர்ந்து கொள்ளணும்ன்னு ஆசைப்படுறேன், உன்னோட சந்தோஷம், துக்கம், வெற்றி, தோல்வி என எல்லா விடயத்திலும் நானும் உன்னோடு வரணும்னு நான் ஆசைப்படுறேன், அது மட்டுமில்லாமல் நீ உன் வாழ்க்கையில் இனி அடையப்போகும் ஒவ்வொரு வெற்றியிலும் ஒரு நண்பனாக, ஒரு கணவனாக, எல்லாமுமாக இருந்து உன்னை சந்தோஷமாகப் பார்த்துக்கணும்ன்னு ஆசைப்படுறேன், நீ என்னைக் கல்யாணம் பண்ணிப்பியா அம்மும்மா?” என்றவாறே சித்தார்த் மாயாவைத் திரும்பிப் பார்க்க, அவளோ அவன் பேசிய விடயங்களைக் கேட்டு தன் கண்களில் இருந்து வடிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைக்கவும் உணர்வின்றி நின்று கொண்டிருக்க, சித்தார்த் சிறு புன்னகையுடன் மெல்ல அவள் விழிகளைத் துடைத்து விட்டான்.

“இனிமேல் இந்தக் கண்களில் இருந்து கண்ணீர் வரவே கூடாது அம்மு, இனி எப்போதும் உன் வாழ்க்கையில் நானும் ஒரு அங்கமாக இருப்பேன், அது உன்னோட சம்மதம் இருந்தால் மட்டுமே!” என்று விட்டு சித்தார்த் அவளது கைகளை ஆதரவாக அழுத்திக் கொடுக்க எண்ணி அவளது கையைப் பிடிக்கப் பார்த்து விட்டு, பின்னர் தன் முடிவை மாற்றிக் கொண்டு தன் கையைப் பின்னிழுக்கப் பார்க்க, அவளோ சிறு புன்னகையுடன் அவனது கரங்களை இன்னமும் அழுத்தமாக பிடித்துக் கொண்டாள்.

“நீங்க மறுபடியும், மறுபடியும் என் வாழ்க்கையில் வந்தது ஏதோ தற்செயல்ன்னு தான் நான் நினைச்சேன், ஆனா இது எல்லாம் ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட விஷயம்ன்னு இப்போதான் எனக்குப் புரிந்தது சித்தார்த். உங்க மேலே நான் வைத்திருந்த காதல் ஒரு போதும் மாறாது, அது இடைப்பட்ட அந்தக் காலத்தில் மறைந்து போய் இருந்தாலும் மாறியிருக்க முடியாது, இனியும் மாறாது” என்றவள் சிறு புன்னகையுடன் சுற்றிலும் ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு,

“ஐ லவ் யூ சோ மச் சீனியர் சித்தார்த், நானும் உங்களை என் மனதார நேசிக்கிறேன், அப்பவும், இப்பவும், எப்பவுமே!” என்றவாறே வெட்கத்துடன் அவன் மீது சாய்ந்து கொள்ள, சித்தார்த் சந்தோஷத்தில் கலங்கிய தன் கண்களைத் துடைத்து விட்டபடியே அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

இந்த ஒரு அழகான தருணத்தை அனுபவிக்க அவர்கள் இருவரும் எத்தனையோ விடயங்களைக் கடந்து வர வேண்டியிருக்க, அதை அவர்கள் வெற்றிகரமாக கடந்தும் வந்திருந்தார்கள்.

இப்படி ஒரு நாளிற்காகத் தானே தாங்கள் இத்தனை வருடங்களாக ஏங்கியிருந்தோம் என்கின்ற மனநிலையில் சித்தார்த்தும், மாயாவும் தங்களை மறந்து நின்று கொண்டிருந்த போது, “சித்தார்த் பையா, இப்போவே எல்லாவற்றையும் சொல்லி முடிச்சிட்டேன்னா அப்புறம் கல்யாணத்துக்கு பிறகு பேச எதுவுமே இருக்காது பாரு” என்று சாவித்திரியின் குரல் கேட்க, அவர்கள் இருவரும் சட்டென்று ஒருவரை விட்டு ஒருவர் விலகி நின்று கொண்டனர்.

தன் அன்னையின் குரல் எங்கிருந்து வருகிறது என்றவாறே தன் பார்வையை சுழல விட்ட சித்தார்த், மொட்டை மாடிக்கு வரும் கதவின் அருகே நின்று கொண்டிருந்த தன் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் பார்த்து சமாளிப்பது போல சிரித்துக் கொண்டே அங்கிருந்து விலகிச் செல்லப் பார்க்க, கௌசல்யா மற்றும் கௌசிக் அவனை அங்கிருந்து நகர விடாமல் வளைத்துப் பிடித்துக் கொண்டனர்.

“எங்க சார் ஓடப் பார்க்குறீங்க? இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு யோசிப்பது போல முகத்தை வைச்சுக்கிட்டு அப்போவே லவ்ஸ் பண்ணியிருக்கீங்க, இதையெல்லாம் எங்க கிட்ட சொல்லவே இல்லை, ஆனா நான் கிஷோரை லவ் பண்ணுவதை மட்டும் சொல்லணுமா?” என்றவாறே கௌசல்யா அவனது காதைப் பிடித்துக் கொள்ள, சாவித்திரி அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே மாயாவை தன்னோடு சேர்த்து இறுக அணைத்து விடுவித்தார்.

“எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு மாயா, நான் ஆசைப்பட்டது போல நீயே என் வீட்டு மருமகளாக வரப்போற, இதை விட வேறு என்ன சந்தோஷமான விஷயம் இருக்க முடியும் சொல்லு? இனி நான் ஒரு நிமிஷம் கூட லேட் பண்ண விரும்பல. கௌசல்யா, கிஷோர் கல்யாணம் நடக்கும் அன்னைக்கே உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிடலாம், என்ன சரியா?” என்று கேட்ட சாவித்திரியைப் பார்த்து அவசரமாக மறுப்பாக தலையசைத்த சித்தார்த்,

“இல்லைம்மா கல்யாணம் இப்போ வேண்டாம்” என்று கூற, அவனது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அவனை அதிர்ச்சியாகத் திரும்பிப் பார்த்தனர்.

“என்னடா சொல்லுற? ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்லுற? அதுதான் மாயா சம்மதம் சொல்லிட்டாளே? அப்புறம் என்ன பிரச்சினை உனக்கு?” சிறு அதட்டலுடன் கேட்ட வைத்தீஸ்வரனைப் பார்த்து சிரித்துக் கொண்டவன்,

“ஐயோ அப்பா! நான் கல்யாணம் இப்போ வேண்டாம்னு தானே சொன்னேன், எப்பவுமே வேண்டாம்னு சொல்லலையே” என்று கூற, அவரோ அவனைக் குழப்பாமாகப் பார்த்துக் கொண்டு நின்றார்.

“நீ என்னதான் டா சொல்ல வர்ற?”

“மாயா இப்போதான் படிக்க ஆரம்பித்து இருக்கா, இந்த சமயத்தில் கல்யாணம், அது, இதுன்னு அவளுக்கு சிரமம் கொடுக்க வேண்டாம், அவளோட படிப்பு முடிந்து அவ ஆசைப்பட்ட மாதிரியே ஒரு நல்ல வேலைக்கு போக ஆரம்பிக்கட்டும், அதற்கு அப்புறம் கல்யாணத்தை வைச்சுக்கலாம். ஏற்கனவே ஐந்து வருஷம் காத்திருந்த எங்களுக்கு இன்னும் கொஞ்ச வருஷம் காத்திருக்கிறது சிரமமே இல்லை” என்று சித்தார்த் கூறிய அடுத்த நொடியே மாயா அவனை தாவி அணைத்திருக்க, அவனோ சிறு புன்னகையுடன் அவளைத் தட்டிக் கொடுத்தான்.

“உங்களுக்கு எப்படி என் மனதில் இருக்கும் எல்லாமே தெரியுது சித்தார்த்?” மாயாவின் கேள்வியில் அவளைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டவன்,

“அதுதான் மாயா மேலே இந்த சித்தார்த் வைத்திருக்கும் காதல்” என்று விட்டு,

அவளது காதருகில் மெல்லக் குனிந்து, “மாயா மேடம் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு எங்க அப்பா, அம்மா இங்கே இருக்கிறாங்க என்கிற விஷயத்தை மறந்துட்டீங்க போல” என்று கூற, அவளோ வெட்கம் தாளாமல் சட்டென்று அவனை விட்டு விலகி நின்று கொண்டாள்.

மாயாவின் முகச்சிவப்பைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவளைத் தன்னருகே அழைத்துக் கொண்ட சாவித்திரி, “இப்படி ஒரு நல்ல பொண்ணு என் மருமகளாகவும், அவளோட உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கும் ஒரு நல்ல பையன் எனக்கு மகனாகவும் கிடைத்தது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். இன்னைக்கு மாதிரி என்னைக்கும் நீங்க இரண்டு பேரும் சந்தோஷமாக இருக்கணும்” என்றவாறே வைத்தீஸ்வரனும், சாவித்திரியும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க, மாயா மற்றும் சித்தார்த் ஒருவரை ஒருவர் காதலோடு பார்த்துக் கொண்டனர்.

எத்தனை தடைகள், தடங்கல்கள் வந்தாலும் சித்தார்த் மீது மாயா கொண்ட காதலையும், மாயா மீது சித்தார்த் கொண்ட காதலையும் மாற்றி விட முடியாது.

இன்னும் சொல்லப்போனால் அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த காதல் எல்லையில்லாதது.

அவர்கள் இருவரும் கொண்டிருக்கும் அந்த எல்லையில்லா இன்பம் கொண்ட காதல் அவர்கள் வாழ்வில் இனி என்றென்றும் சந்தோஷத்தை மட்டுமே அள்ளி வழங்க வேண்டும், அவர்களை என்றென்றும் இதேபோல் இணைத்தும் வைத்திருக்க வேண்டும்.

**********சுபம்**********

error: Content is protected !!