எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – Epilogue

IMG_20221031_134812

எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – Epilogue

நான்கு வருடங்களுக்குப் பிறகு…..

கோயம்புத்தூரில் இருக்கும் அந்த பிரபலமான கல்லூரி வளாகம் முழுவதும் மாணவர்களும், அவர்களது உறவினர்களும் நிறைந்து போயிருக்க, அங்கிருந்த மாணவர்கள் அனைவரது முகத்திலும் சொல்லிலடங்கா சந்தோஷம் நிறைந்து போயிருந்தது.

அந்த சந்தோஷத்திற்கான காரணம் வேறு எதுவும் அல்ல, அன்று அவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடக்கவிருப்பது தான்.

தங்கள் ஆசைக்கேற்ப தாங்கள் விரும்பிய துறையைப் படித்து முடித்தாயிற்று, இனி தமக்கென ஒரு அடையாளத்தை தாம் பெற்றுக் கொள்ளலாம் என்கிற பூரிப்பான எண்ணங்களுடன் ஒவ்வொரு மாணவர்களும் நடமாடிக் கொண்டிருக்க, அந்த மாணவர் கூட்டத்திற்கு நடுவே மாயாவும் சந்தோஷம் பொங்க நின்று கொண்டிருந்தாள்.

அவளது பல வருடக்கனவு இன்று நிறைவேறப் போகிறது என்கிற சந்தோஷம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் இன்னும் ஒரு வாரத்தில் சித்தார்த்தை கரம் பிடிக்கப் போகிறோம் என்கிற உணர்வும் சேர்த்து அவளை மேலும் மேலும் பூரிப்படையச் செய்திருந்தது.

மாயாவின் படிப்பு முடியும் வரை அவளைத் தொல்லை செய்யக்கூடாது என்று உறுதியாக முடிவெடுத்திருந்த சித்தார்த் அதற்கேற்றாற்போல் தன் காதலையும், தனது ஆசைகளையும் தனக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைத்திருக்க, நாளாக நாளாக அவளுக்கு அவன் மீதான காதலும், மரியாதையும் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே இருந்தது.

சாவித்திரியும் சித்தார்த்தின் சொல்லுக்கு கட்டுப்பட்டு மாயாவின் படிப்பு முடியட்டும் என்று காத்திருக்க, அவளும் வேறு எந்த விடயங்களிலும் தன் மனதை அலைபாய விடாது மிகச்சிறப்பாக தனது படிப்பை முடித்திருந்தாள், அதுவும் அந்தக் கல்லூரியில் முதல் மாணவியாக.

அவளது படிப்பு முடிந்த கையோடு பிரபலமான ஒரு நிறுவனம் அவளைத் தங்களிடம் வேலைக்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்க, அவனது நிறுவனத்தை விட்டு வேறு இடத்திற்கு தான் வேலைக்குச் சென்றால் அதை நினைத்து சித்தார்த் ஏதாவது மனம் வருந்தி விடுவானோ என்று மாயா தவித்துப் போக, அவனோ அந்த விடயத்தைக் கேட்டு அவளை மனதார வாழ்த்துயிருந்தான்.

“நிஜமாகவே உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையா சித்தார்த்?” மாயா பத்தாவது முறையாக அதே கேள்வியை சித்தார்த்தைப் பார்த்து வினவ,

அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவன், “நீ வேலைக்குப் போவதில் எனக்கு என்ன அம்மு பிரச்சினை இருக்க முடியும்? இன்னும் சொல்லப்போனால் நீ வேலைக்குப் போகாமல் இருந்தால் தான் எனக்குப் பிரச்சினையே” என்று கூற,

அவளோ, “ஐயோ! நான் அதைக் கேட்கலைங்க, உங்க கிட்ட வேலைக்கு வராமல் இன்னுமொரு இடத்துக்கு நான் வேலைக்குப் போவது உங்களுக்குப் பிரச்சனை இல்லையான்னு கேட்டேன்” என்றவாறே சிறு தயக்கத்துடன் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

“அம்மும்மா, ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கோ, எனக்கு இப்படி ஒருத்தரைக் கட்டுப்படுத்தி ஒரு கூட்டுக்குள் அடைத்து வைப்பதில் விருப்பம் கிடையாது. உன்னோட வாழ்க்கையில் உன்னோட விருப்பு, வெறுப்புக்களை முடிவு செய்வதில் நான் கருத்து வேண்டுமானால் சொல்லுவேனே தவிர என் கருத்தை திணிக்க மாட்டேன். இது உன்னோட வாழ்க்கை, ஷோ முடிவுகளும் உன்னோடது தான். நீ என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு பக்கபலமாகத் தான் நான் இருப்பேனே தவிர, தடையாக இருக்கவே மாட்டேன். இப்போ நீயும், நானும் ஒரே விதமான துறையைச் சேர்ந்தவங்களாக இருந்தாலும் நீயும், நானும் ஒரே இடத்தில் இருக்கும் போது நம்ம பலத்தையும், பலவீனத்தையும் தைரியமாக வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல் ஒரு தயக்கம் இருக்கலாம், இதுவே புது இடம், புது சூழல், புது மனுஷங்கன்னு வந்தால் அது வேற மாதிரி ஒரு அனுபவத்தை நமக்கு கொடுக்கும், அந்த அனுபவம் உனக்கு கிடைக்கணும்ன்னு நான் ஆசைப்படுறேன், இது என்னோட கருத்து தானே தவிர, முடிவு இல்லை. ஷோ இனி நீ யோசித்து நல்லா முடிவாக எடு” என்று விட்டு சித்தார்த் அவளது கரத்தை ஆதரவாக அழுத்திக் கொடுக்க, அவளோ கண்கள் கலங்க அவனது தோளில் வாகாக சாய்ந்து கொண்டாள்.

“நீங்க என் வாழ்க்கையில் கிடைக்க நான் ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணியிருக்கணும் சித்தார்த். எனக்காக நீங்க ஒவ்வொரு விஷயத்தையும் யோசிச்சு, யோசிச்சு பண்ணுவதைப் பார்க்கும் போது இதற்கெல்லாம் நான் என்ன பதிலாக கொடுக்க முடியும்ன்னு எனக்குத் தெரியலை சித்தார்த்” என்று கூறிய மாயாவின் முகத்தை மெல்ல நிமிர்த்தியவன்,

“நீ என்ன கொடுக்க முடியும்ன்னு நான் சொல்லவா?” என்றவாறே அவளது காதருகில் குனிந்து ஏதோ சொல்ல, அவளோ சிறு வெட்கத்துடன் அவனைத் தள்ளி விட்டு விட்டு வெட்கத்தினால் ஏற்பட்ட தன் முகச்சிவப்பை மறைக்க பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டு நின்றாள்.

மாயாவின் முகச்சிவப்பைப் பார்த்ததும் சித்தார்த்தின் மனம் தாறுமாறாக ஆட்டம் போட ஆரம்பிக்க, அதற்குள் அவளது பட்டமளிப்பு விழாவிற்கான நிகழ்வுகள் தொடங்கப் போவதற்கான அறிவிப்பு வந்து அவனது ஆட்டத்திற்கு தற்காலிக தடையைப் போட்டிருந்தது.

அதன் பிறகு மாயாவின் பட்டமளிப்பு விழா முடிவடைந்ததும் அவர்களது திருமணத்திற்கு தேவையான ஆடைகள், நகைகள் என எல்லாவற்றையும் வாங்கியவர்கள் தங்கள் திருமணத்திற்கான நாளை வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

மாயாவும், சித்தார்த்தும் அந்த ஒரு வார காலத்தில் இருந்த ஒவ்வொரு நொடிகளையும் எண்ணி எண்ணி வெகு சிரமப்பட்டு அவற்றை நெட்டித் தள்ளியிருக்க, அவர்கள் எதிர்பார்த்திருந்தது போல அவர்கள் திருமணத்திற்கான அந்த நாள் இனிதே விடிந்திருந்தது.

சித்தார்த்தின் வீட்டிலேயே அவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க, ஏற்கனவே ஒரு அரண்மனையின் தோற்றத்தை ஒத்திருந்த அந்த வீடு இப்போது திருமணத்திற்கான அலங்காரமும் ஒன்று சேர ராஜ கம்பீரமாகத் தோற்றமளித்துக் கொண்டிருந்தது.

பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து மணமகனுக்கு உரிய கம்பீரத்துடன் அய்யர் சொன்ன மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு அமர்ந்திருந்த சித்தார்த், தன் உயிரினுள் நிறைந்தவள் தன் உரிமையாக மாறப் போகும் அந்த நொடியை எதிர்பார்த்துக் காத்திருக்க, மறுபுறம் மாயா பொன்னிற பட்டு சேலை அணிந்து அதற்கேற்றாற்போல் ஆபரணங்கள் சூடி தன் தோழிகளின் கேலிகளைக் கேட்டு சிறு வெட்கச் சிரிப்புடன் திருமண மேடையை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அய்யர் சொல்லிக் கொண்டிருந்த மந்திரங்களை உச்சரித்தபடியே மாயா நடந்து வரும் புறமாக தற்செயலாக திரும்பிப் பார்த்தவன் அவளைப் பார்த்த அந்தக் கணமே தன்னைச் சுற்றி நடக்கும் அத்தனையையும் மறந்து போனவனாக அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நிற்க, அவன் பின்னால் நின்று கொண்டிருந்த கௌசிக் அவனது தோளில் தட்டி, “அண்ணா, போதும் உன் டாமைக் கொஞ்சம் மூடு. ஓவரா ஜொல்லு விட்டு முன்னாடி இருக்கும் நெருப்பை அணைச்சுடாதே” என்று கூற, சித்தார்த்தோ சிறு வெட்கத்துடன் தன் பார்வையை தாழ்த்திக் கொண்டு மாயாவைக் கரம் பிடிக்கப் போகும் அந்தத் தருணத்தை எதிர்பார்த்திருக்க, அவனது எதிர்பார்ப்பைக் காலம் தாழ்த்தாமல் மாயா அவனது கைகளிலிருந்த பொற்தாலியை தன் மனதார ஏற்றுக் கொண்டிருந்தாள்.

திருமணத்திற்கான சடங்குகள் எல்லாம் முடிவடையும் வரை பொறுமையாக அமர்ந்திருந்த சித்தார்த் அவ்வப்போது யாரும் பார்க்காத தருணம் மாயாவைச் சீண்டி அவளது வெட்கச் சிவப்பை தன் மனம் நிறைய ரசிக்கவும் தவறவில்லை.

எல்லா சடங்குகளும், நிகழ்வுகளும் முடிந்து மாயாவிற்கும், சித்தார்த்திற்கும் அவர்கள் எதிர்பார்த்த தனிமை கிடைத்திருக்க, அந்தத் தனிமையில் நிலவிய அமைதியை யார் கலைப்பது என்று தெரியாமல் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டே அவர்கள் அறைப் பால்கனியில் நின்று கொண்டிருக்க, அந்த அமைதியைக் கலைப்பது போல குளிர் காற்று வந்து அவர்கள் இருவரையும் ஆசையாகத் தழுவிச் சென்றது.

அந்தக் காற்று ஏற்படுத்திய குளிரில் சித்தார்த் தன் கைகள் இரண்டையும் தேய்த்து தன் கன்னத்தில் வைத்துக் கொள்ள, அவனைப் பார்த்து சிரித்துக் கொண்ட மாயா, “என்ன சித்தார்த் சார், இந்த சின்னக் குளிர் காற்றைக் கூட தாங்க முடியலைன்னா எப்படி? நாங்க எல்லாம் எவ்வளவு பெரிய குளிரை எல்லாம் பார்த்தவங்க தெரியுமா? எங்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். வேணும்னா நீங்க என் கையைப் பிடித்துக்கோங்க அப்போ உங்களுக்கு குளிர் விளங்காது, இல்லைன்னா அப்புறம் இந்தக் குளிருக்கே உங்களுக்கு வெடவெடன்னு பல்லு எல்லாம் அடிச்சுக்கப் போகுது, அப்புறம் இருக்கிற ஒண்ணு, ரெண்டு பல்லும் விழுந்துடும்” என்றவாறே அவனைப் பார்த்து சிரிக்க ஆரம்பிக்க,

அவனோ கண்ணிமைக்கும் நொடிக்குள் அவளை இழுத்து தன் கை வளைவுக்குள் கொண்டு வந்த விட்டு, “என்ன பண்ணுவது மாயா மேடம்? நாங்க வளர்ந்த இடம் அப்படி, ஆனா நீங்க இயற்கையான குளுகுளு ஏசி ஏரியாவிலேயே இருந்து வந்தவங்க உங்களுக்கு இதெல்லாம் சின்னக் குளிர் தான். ஆனா எங்களுக்கு இதுவே அதிகம். அப்புறம் நீங்க சொன்ன ஐடியா நல்லா இருந்தது, ஆனா அதில் ஒரு திருத்தம் என்னன்னா உங்க கையைப் பிடித்து குளிர் காய்வதற்கு பதிலாக உங்களையே பிடிச்சுக்கலாமே, ஏன்னா இந்த முறையைத் தான் இனித் தொடர்ந்து பயன்படுத்திக்கலாம்ன்னு இருக்கேன்” என்றவாறே அவள் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக் கொள்ள, அவளோ அவன் மீசை முடிகள் ஏற்படுத்திய சிலிர்ப்பில் மேல் சிலிர்க்க அவனிடமிருந்து சிறு வெட்கத்துடன் விலகி நின்று கொண்டாள்.

“எங்க போறீங்க மாயா மேடம்? நீங்க சொன்ன ஐடியா தானே இது?” என்றவாறே சித்தார்த் அவளைப் பிடிக்கத் தன் கையை நீட்ட, அவளோ அந்தப் பால்கனியைச் சுற்றி ஓடி அவனுக்கு சிறு நேரம் போக்கு காட்டி விட்டு பின் அவன் எதிர்பாராமலேயே அவன் மீது சட்டென்று சாய்ந்து கொண்டாள்.

“நான் இன்னைக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் சித்தார்த், என்னோட மனசுக்குப் பிடித்த எல்லா விஷயங்களும் என்னோட கையில் இப்போ என் கிட்ட இருக்கு. இந்த ஒரு தருணத்திற்காகத் தான் நான் இத்தனை வருஷங்களைத் தியாகம் பண்ணேனோ என்னவோ?”

“அதை ஏன் தியாகம்ன்னு சொல்லுற அம்மு? உன்னோட ஆசைகளை அடைவதற்கான ஒவ்வொரு படிகள்ன்னு சொல்லலாமே? நீ கடந்து வந்த ஒவ்வொரு வருஷமும் தான் உனக்கான பாதையைத் தேடிப் போகச் சொல்லி உன்னை தூண்டியிருக்கு, அந்தத் தூண்டுதல் தான் உன்னோட இலட்சியத்தை அடைய உனக்கு உதவி பண்ணியிருக்கு, இல்லையா?”

“ம்ம், ஆமா. நான் ஒவ்வொரு விஷயத்திலும் இருக்கும் பிரச்சினையைப் பற்றித் தான் அதிகமாக பார்ப்பேன், யோசிப்பேன், ஆனா நீங்க அதில் இருக்கும் நல்ல விஷயங்களை பார்த்து, யோசித்து எவ்வளவு தெளிவாகப் பேசுறீங்க. நான் உங்க கிட்ட இருந்து நிறைய விஷயம் கத்துக்கணும் போலவே” மாயா சிறு புன்னகையுடன் அவனைப் பார்த்து கண்சிமிட்டி சிரிக்க,

அவளை மேலும் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன், “அதற்கென்ன எல்லாவற்றையும் சொல்லித் தந்துட்டாப் போச்சு, இப்போவே ஒவ்வொன்றாக சொல்லித் தர ஆரம்பிக்கிறேன்” என்றவாறே அவளது விழிகள் இரண்டிலும் தன் இதழ் பதிக்க, அவளோ அவன் கொடுத்த முதல் முத்தத்தில் தன்னை மறந்து போய் நின்று கொண்டிருந்தாள்.

அந்த இரவு நேரம் ஏற்படுத்திய ஏகாந்தமான சூழ்நிலை, தன் கைவளைவுக்குள் மயங்கி நிற்கும் தன் மனம் கவர்ந்தவள் என அந்தத் தருணம் சித்தார்த்தின் மனதை ஏதேதோ செய்வது போல் இருக்க, வெகு சிரமப்பட்டு தன் மனதை அடக்கிக் கொண்டவன், “சரி மாயா, ரொம்ப நேரம் ஆச்சு, போய்த் தூங்கலாம். காலையில் இருந்து சடங்கு அது, இதுன்னு நீயும் ரொம்ப டயர்டா இருப்ப இல்லையா? மற்ற விஷயங்களைப் பற்றி நாம அப்புறமாகப் பேசலாம் என்ன?” என்றவாறே அறையை நோக்கி அவளை அழைத்துக் கொண்டு செல்லப் பார்க்க, அவளோ அந்த இடத்தை விட்டு அசைய மாட்டேன் என்பது போல நின்று கொண்டிருந்தாள்.

“என்னாச்சு அம்மு? உனக்கு தூக்கம் வரலையா?” சித்தார்த்தின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றவள்,

“திடீர்னு உங்களுக்கு என்ன ஆச்சு சித்தார்த்? இவ்வளவு நேரம் நல்லாத்தானே பேசிட்டு இருந்தீங்க?” என்று வினவ,

அவனோ, “எனக்கு என்ன? ஒண்ணும் இல்லையே?” என்று கூற, அவளோ அவனை நம்ப மாட்டேன் என்பது போல பார்த்துக் கொண்டு நின்றாள்.

“இல்லை, நீங்க எதையோ மறைக்குறீங்க? இவ்வளவு நேரமும் என்னோட ரொம்ப நெருக்கமாக பேசிட்டு இருந்த நீங்க, இப்போ சட்டுன்னு விலகிப் போக என்ன காரணம்? நான் ஏதாவது உங்களைக் கஷ்டப்படுத்திட்டேனா?” மாயா அவனைப் பார்த்து கண்கள் கலங்கி நிற்க,

“ஐயோ! என் அசட்டுப் பொண்ணே!” என்றவாறே அவளது விழிகளைத் துடைத்து விட்டவன்,

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை அம்மு. நமக்கு இப்போதான் கல்யாணம் ஆகி இருக்கு, அதனால இப்போவே உன்னை நான்… அது, ப்ச், நீ நல்ல வேலைக்கு போகணும், உன் கரியரில் முன்னுக்கு வரணும்னு உனக்கு நிறைய ஆசை இருக்கு இல்லையா அம்மு? அதுதான் இப்படி எல்லாம் பேசி உன்னோட மனதை அலைபாய விடக்கூடாதுன்னு பார்த்தேன்” என்று கூற, அவளோ அவனது கன்னத்தில் சட்டென்று முத்தமிட்டிருந்தாள்.

மாயாவின் அந்தத் திடீர் முத்தத்தை எதிர்பாராத சித்தார்த் திகைத்துப்போய் நிற்க, அவனருகில் மேலும் நெருங்கி நின்றவள், “என்ன நடந்தாலும் நீங்க எப்போதும் எனக்கு பக்கபலமாக இருப்பீங்கன்னு நான் நம்புறேன் சித்தார்த், அதனால் உங்களுக்கு எந்தவொரு தயக்கமும் வேண்டாம்” என்றவாறே மாயா அவனது இதழில் அழுந்த முத்தமிட்டு விட்டு வெட்கத்துடன் அவனிடமிருந்து விலகப் பார்க்க, அவனோ அவள் ஆரம்பித்த செயலை இப்போது தன் வசம் பொறுப்பெடுத்திருந்தான்.

மாயாவின் காதலும், சித்தார்த்தின் காதலும் அங்கே ஒருவரை மாற்றி ஒருவர் கட்டிப் போட்டு வைத்திருக்க, இனி அவர்கள் வாழ்வில் என்றென்றும் சந்தோஷமே.

காதலுக்கு ஒரு வரையறையோ, எல்லையோ இல்லை என்று சொல்வது போல் இங்கே சித்தார்த் மற்றும் மாயாவின் காதலுக்கும் எல்லையில்லை.

சித்தார்த் மற்றும் மாயா தங்கள் காதலை அடைய பல துன்பங்களை அனுபவித்து இருந்தாலும், இறுதியில் அது அவர்களுக்கு வழங்கியிருப்பது இன்பத்தை மாத்திரமே.

அது மட்டுமில்லாமல் இந்த இன்பத்தினால் அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் காதல் இனி என்றென்றும் எல்லையில்லா இன்பமான காதலே!

 

error: Content is protected !!