எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 05

IMG_20221031_134812-f6531233

எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 05

சிறு வயது முதல் விதம் விதமாக ஒவ்வொரு நாளும் தான் எப்படி எல்லாம் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்று சித்தார்த் ஆசை கொண்டிருந்தானோ அதை நிறைவேற்றுவது போல தன் கண்ணுக்கு விருந்தாக காட்சியளித்த ஒவ்வொரு விடயங்களையும் தனது புகைப்படக்கருவியில் பதிவு செய்து கொண்டவன் அதை ரசித்துப் பார்த்தபடியே தான் செல்ல வேண்டிய இடத்தை வந்து சேர்ந்திருந்தான்.

சித்தார்த் ஏற்கனவே காட்டிற்குள் செல்ல அனுமதி எடுத்திருந்ததனால் பொதுமக்கள் நலன் கருதி காட்டின் எல்லைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வனத்துறை அதிகாரிகள் அவனது அனுமதிக் கடிதத்தைப் பார்த்து விட்டு மாலை மூன்று மணிக்குள் காட்டை விட்டு வெளியே வந்து விட வேண்டும் என்று சொல்லியது மட்டுமின்றி அவனது கையோடு ஒரு சிறு ஜி.பி.எஸ் கருவியையும் கொடுத்து அனுப்பியிருந்தனர்.

முதல் முதலாக பள்ளிக்கூடம் செல்லும் குழந்தை எத்தனை ஆவலாக ஒவ்வொரு இடங்களையும் வியந்து பார்த்து, சொல்லிலடங்கா சந்தோஷத்துடன் தன் பயணத்தை ஆரம்பிக்குமோ அதேபோலத்தான் சித்தார்த்தின் மனநிலையும் இருந்தது.

தன் கண்ணில் படும் சிறு முயல், பறவைகள் தொடக்கம் புல்லில் அமர்ந்திருக்கும் சிறு பூச்சிகளைக் கூட நுணுக்கமாக படம் பிடித்துக் கொண்டவன் நேரம் போவதே தெரியாமல் அந்தக் காட்டைச் சுற்றி வலம் வரத் தொடங்கினான்.

இங்கே சித்தார்த் தன்னை மறந்து இயற்கையோடு ஒன்றிப் போயிருந்த தருணம் மறுபுறம் மாயா ஊட்டியின் பிரபலமான அரசு ரோஜாப் பூந்தோட்டத்திற்கு சித்தார்த்தின் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வந்நிருந்தாள்.

பல வகையான ரோஜாப்பூக்களின் அணிவகுப்பைப் பார்த்ததும் கௌசல்யாவும், கௌசிக்கும் தங்கள் ஃபோனை எடுத்து ஆள் மாற்றி ஆள் புகைப்படம் எடுக்க ஆரம்பித்திருக்க, அவர்களைப் பார்த்து புன்னகை செய்தபடியே சாவித்திரி அங்கே ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தார்.

கௌசிக் மற்றும் கௌசல்யா வெகு நேரமாக அந்த இடத்திலேயே மாறி மாறி நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க, சாவித்திரிக்கோ வெகு நேரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது ஏதோ போல இருந்தது.

தன்னால் இப்படி வெகு நேரமாக நிற்க முடியாது என்று எண்ணிக் கொண்டவர் கௌசல்யாவை அழைக்கலாம் என்று அவளை நோக்கி திரும்பப் பார்க்க, சட்டென்று அவரது கண்கள் இரண்டும் இருட்டிக் கொண்டு வருவது போல இருந்தது.

தன்னைச் சுற்றிலும் இருட்டாகியதை உணர்ந்த சாவித்திரி எங்கே தான் கீழே விழுந்து விடுவோமோ என்கிற பயத்தில் அருகிலிருக்கும் ஏதாவது ஒரு பொருளைப் பிடித்துக் கொள்ளலாம் என்றெண்ணி தன் கையை நீட்ட, அது சரியாக மாயாவின் தோளைப் பற்றிப் பிடித்துக் கொண்டது.

சட்டென்று தன் தோளில் ஒரு கரம் பதிய பதட்டத்துடன் திரும்பிப் பார்த்த மாயா நிற்க முடியாமல் தடுமாறிக் கொண்டு நின்ற சாவித்திரியைப் பார்த்ததுமே, “மேடம், உங்களுக்கு என்ன ஆச்சு? உங்க பசங்களை கூப்பிடவா?” என்று பதட்டத்துடன் வினவ,

ஒரு சில நொடிகள் கழித்து தன்னை சுதாரித்துக் கொண்டு அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவர், “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மாயா, என்னதான் நம்ம துருதுருவென வேலை செய்பவராக இருந்தாலும் வயது செல்லச் செல்ல ஒவ்வொருவரது உடல்நிலையிலும் சில சில மாற்றங்கள் வரத்தானே செய்யும். அதுபோலத்தான் இதுவும், இது ரொம்ப நேரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்ததால் வந்த தடுமாற்றம் தான், வேறு ஒண்ணும் இல்லை, அதோடு பசங்க சந்தோஷமாக இருக்கத் தான் ரொம்ப ஆசையாய் வெளியே வந்திருக்காங்க, அப்படியிருக்கும் போது நான் என்னோட இந்த சின்ன தடுமாற்றத்தைக் காரணம் காட்டி அவங்களை கவலைப்பட வைக்க வேண்டாம்ன்னு பார்க்குறேன்” என்று கூற,

அவரை ஒரு சில கணங்கள் வியப்பாக பார்த்துக் கொண்டு நின்றவள், “உங்க பசங்க ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணியிருக்காங்க” என்று மெல்லிய குரலில் கூற, சாவித்திரி அவளை சட்டென்று வியப்பாகத் திரும்பிப் பார்த்தார்.

“இப்போ ஏதாவது சொன்னியா மாயா?”

“ஆஹ்! இல்லை மேடம் எதுவும் இல்லை, நம்ம மற்ற இடங்களுக்கும் போகணுமே, பசங்களை கூப்பிடவா? இன்னும் இந்த கார்டனில் பார்க்க வேண்டியது நிறைய இருக்கு, இதை முடிச்சுட்டு போட் ரைடிங் போகலாம்” என்று கூறிய மாயாவைப் பார்த்து புன்னகை செய்தவர் கௌசல்யா மற்றும் கௌசிக்கை வரச்சொல்லி விட்டு அந்தப் பூந்தோட்டத்தை உற்சாகமாக வலம் வர ஆரம்பித்தார்.

மாயா சொன்னது போலவே அந்தப் பூந்தோட்டத்தை சுற்றிப் பார்த்தவர்கள் அடுத்ததாக போட் ரைடிங் நடக்கும் இடத்திற்கு செல்ல, அது சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வருகை தரும் காலம் என்பதனால் அங்கு மீதமிருந்த படகில் நான்கு பேராவது வர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தாங்கள் நான்கு பேர் தானே இருக்கிறோம் என்றெண்ணி மாயாவையும் தங்களுடன் வரும்படி சாவித்திரி எவ்வளவோ அழைத்தும் அவளோ தன்னால் முடியாது என்று மறுத்து விட, இறுதியில் கௌசிக் மற்றும் கௌசல்யா மாத்திரமே போட் ரைடிங் செல்ல முடிவெடுத்துச் சென்றிருந்தனர்.

தன்னால் தான் சாவித்திரி போட் ரைடிங் செல்லவில்லை என்று புரிந்து கொண்ட மாயா சிறு தயக்கத்துடன், “நீங்க பசங்க கூட போயிருக்கலாமே மேடம், நீங்க எல்லாரும் ஃபேமிலியாக ஊர் சுற்றிப் பார்க்க வந்திருக்கீங்க, அப்படி இருக்கும் போது இப்படி மூன்றாவது ஆளுக்காக நீங்க எதற்காக கஷ்டப்படணும்?” என்று வினவ,

அவளை ஆச்சரியமாக திரும்பிப் பார்த்தவர், “மூன்றாவது ஆளா? அது யாரு?” என்று பதிலுக்கு வினவ, அவளோ பதில் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

“நீ நேற்று என் பையன் பேசியதை நினைத்துத்தானே இப்படி எல்லாம் பேசுற மாயா?”

“அய்யய்யோ! அப்படி எல்லாம் எதுவுமே இல்லை மேடம், இன்னும் சொல்லப்போனால் அவங்க சொன்னதில் எந்தவொரு தப்புமே இல்லை, ஏன்னா இந்தக் காலம் அப்படி எல்லோரையும் மாற்றி வைத்திருக்கு. அதோடு வேலை செய்யும் இடத்தில் பலவகையான பேச்சுக்களை எல்லாம் கடந்து தான் போகணும், அப்போதான் நம்ம வாழ்க்கையை கொண்டு போக முடியும், அதனால அவங்க பேசிய விஷயங்களை எல்லாம் நான் அப்போவே மறந்துட்டேன்”

“நிஜமாகவே நீ மறந்துட்டியா?” சாவித்திரியின் கேள்விக்கு மாயா ஆமோதிப்பாக தலையசைக்க,

அவளது கரத்தின் மேல் தன் கரத்தை வைத்தவர், “நான் ஒரு விஷயம் கேட்டால் மாயா தப்பா நினைச்சுக்க கூடாது, சரியா?” என்று வினவ,

அவரைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள், “நான் எப்போதும் எதையும் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டேன், நீங்க கேளுங்க மேடம்” என்று சொல்லியிருந்தாள்.

“உன்னோட வாழ்க்கையில் ஏதோ ஒரு பெரிய பிரச்சினை இருக்கு, அதை நினைத்து நீ ரொம்ப கவலைப்படுற. அப்படித்தானே?” சாவித்திரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஒரு கணம் திகைத்துப்போய் நின்றவள் உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டு,

“ஐ யம் சாரி மேடம், எங்க கஸ்டமர்ஸ் கிட்ட எங்களைப் பற்றிய பர்சனல் விஷயங்களை நாங்க பகிர்ந்துக்க மாட்டோம், அதேமாதிரி அவங்களோட பர்சனல் விஷயங்களையும் நாங்க விசாரிக்க மாட்டோம், இது எங்க பாலிசி. தயவுசெய்து தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று கூற, சாவித்திரியின் பார்வையோ அவளை மெச்சுதலாக நோக்கியது.

“பரவாயில்லை மாயா, நான் நினைச்சதை விட நீ ரொம்ப ஸ்மார்ட் தான், ஆமா நீ என்ன படிச்சிருக்க? அச்சோ! இந்தக் கேள்வி சரி கேட்கலாம் தானே?” சாவித்திரியின் பார்வை மாயாவைத் தயக்கத்துடன் நோக்க,

அவரைப் பார்த்து ஆமென்றும், இல்லையென்றும் ஒன்று சேர தலையசைத்து விட்டு, “ப்ளஸ் டூ” என்றதோடு தன் பேச்சை நிறுத்திக் கொண்டு அதன் பிறகு தன்னைப் பற்றி எந்தவொரு விடயத்தையும் அவரிடம் பகிர்ந்து கொள்ள முயலவில்லை, மாறாக தான் அவர்களை அழைத்துக் கொண்டுச் செல்லும் இடங்களைப் பற்றி மாத்திரம் பேசத் தொடங்கியவள் தன் எதிரே உள்ளவர்களைப் பேசவே விடவில்லை என்று கூட கூறலாம்.

மாலை மூன்று மணியாகும் வரை அன்றைய நாளில் செல்வதற்காக அவர்கள் திட்டம் தீட்டியிருந்த எல்லா இடங்களிற்கும் அவர்களை அழைத்துக் கொண்டு சென்றிருந்த மாயா, அடுத்த நாள் காலையும் எட்டு மணிக்கே வந்து அவர்களை அழைத்துக் கொண்டு செல்வதாக சொல்லி விட்டு அந்த இடத்திலிருந்தே தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லப் போவதாக சொல்லியிருக்க, சாவித்திரியோ அதைப் பிடிவாதமாக மறுத்து விட்டார்.

“நீ என்னதான் கைடாக இருந்தாலும் நீயும் எங்களோட பொறுப்புத்தான் மாயா, அதனால உன்னை எங்கேயிருந்து அழைச்சுட்டு வந்தோமோ அதே இடத்தில் தான் இறக்கி விடுவோம், அது உங்க ரூல்ஸில் இருக்குத் தானே. அதாவது பிக்கப் அன்ட் டிராப் கஸ்டமர்ஸ் தான் பண்ணணும்னு?” சாவித்திரி கேட்ட கேள்விக்கு பதில் எதுவும் பேசாமல் அவரருகில் ஏறி அமர்ந்து கொண்டவள் அவர்கள் வீடு வந்து சேரும் வரை மறந்தும் கூட சாவித்திரியைப் பார்க்கவே இல்லை.

ஏனோ தான் இறுதியாகப் பேசிய விடயம் அவரை வெகுவாக காயப்படுத்தி விட்டது போலும் என்கிற குற்றவுணர்ச்சியில் தன்னைத் தானே கடிந்து கொண்டு அமர்ந்திருந்தவள், அவர்கள் வீட்டில் வந்து இறங்கிக் கொண்டதும் சிறு தயக்கத்துடன் சாவித்திரியின் எதிரில் சென்று நின்று கொண்டாள்.

“ஐ யம் சாரி மேடம், நான் உங்களைக் கஷ்டப்படுத்தணும்னு எதுவும் பேசல, என்னோட நிலைமையை யார் கிட்டவும் நான் அவ்வளவு சுலபத்தில் சொல்ல விரும்ப மாட்டேன், அதுதான் அப்படி சொன்னேன், நான் பேசியது உங்களைக் கஷ்டப்படுத்தியிருந்தால் தயவுசெய்து என்னை மன்னிச்சுடுங்க. நான் வேணும்னே அப்படி எல்லாம் பேசல” மாயா பேசி முடிக்கும் வரை தன் கையைக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டு நின்றவர்,

நீண்ட பெருமூச்சு விட்டபடியே, “மன்னிக்க முடியாது” என்று வரியில் பதில் கூற, அவளோ கவலை சூழ அவரைப் பார்த்தபடியே அங்கிருந்து புறப்பட்டுச் செல்லப் பார்க்க, சாவித்திரி சட்டென்று அவளது கையை எட்டிப் பிடித்துக் கொண்டார்.

“அட, என் அப்பாவிப் பொண்ணே! மன்னிக்க முடியாதுன்னு சொன்னால் ஏன்னு கூட கேட்காமல் அப்படியே போயிடுவியா? என்ன பொண்ணும்மா நீ?” சாவித்திரி விளையாட்டாக சலித்துக் கொண்டு மாயாவின் தோளில் தட்ட,

அவரை வியப்பாக பார்த்துக் கொண்டு நின்றவள், “உங்களால் மட்டும் எப்படி இப்படி எல்லோர் கூடவும் கொஞ்ச நேரத்திலேயே சகஜமாகப் பழக முடியது மேடம்?” என்று வினவ, அவரோ வாய் விட்டுச் சிரித்துக் கொண்டே அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தார்.

“நாங்க ஊட்டிக்கு வர்றதுக்கு முன்னாடியே என் பொண்ணு உன்னைப் பற்றி கொஞ்சம் கொஞ்சம் சொல்லி இருந்தா மாயா. அதாவது உன் வீட்டில் நீயும், உன் அப்பாவும் தான் இருக்கீங்க, அப்பாவுக்கு உடம்பு சரி இல்லை, நீ தான் வீட்டையும், அப்பாவையும் பார்த்துட்டு இருக்கேன்னும் சொன்னா. அதைக் கேட்டதிலிருந்தே உன் மேலே எனக்கு ஒரு பிடிப்பு வந்துடுச்சு. இப்படித் தனியாளாக, தைரியமாக இருக்கும் பொண்ணுங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், அதனாலதான் ஆரம்பித்ததிலிருந்தே உன்னோட ஃபிரண்ட்ஸ் ஆக ரொம்ப ட்ரை பண்ணுறேன், ஆனா நீதான் என்னைக் கண்டுக்காமல் ஏதோ ஸ்கூல் டிரிப் வந்த பசங்க மாதிரி மணிக்கு ஒரு தடவை மேடம், மேடம்ன்னு ஏலம் போடுற. நீ எப்போ என்னை அழகாக ஆன்ட்டின்னு சொல்லிப் பேசுறியோ அப்போதான் நான் உன்னை மன்னிப்பேன், இல்லேன்னா அதுவரைக்கும் உன் மேலே எனக்கு கோபம் தான்” என்றவாறே சாவித்திரி தன் முகத்தை பாவமாக வைத்துக் கொள்ள,

அவரைப் பார்த்து வாய் விட்டு சிரித்துக் கொண்ட மாயா, “உங்க கூட கொஞ்ச நேரம் பேசினாலே போதும், என்னைச் சுற்றி இருந்த எல்லாப் பிரச்சினைகளும் காணாமல் போயிட்ட மாதிரி இருக்கு. மனசார சொல்லுறேன், இன்னைக்கு நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன், இந்த சந்தோஷத்தைக் கொடுத்த உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மே… ஆன்ட்டி” என்று கூற,

அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டவர், “நீயும் என் பொண்ணு கௌசல்யா மாதிரி தான் மாயா, ஒரு அம்மாவாக உன்னோட கண்ணில் தெரியும் ஏக்கத்தை நான் உணர்ந்தேன், அதனாலதான் நான் உன்னைப் பற்றிக் கேட்டேன், மற்றபடி நானும் உன்னை மாதிரி ரொம்ப ஸ்டிர்க்ட் ஆபிஸர் தான் பார்த்துக்கோ” என்று கூற,

மாயா மீண்டும் சிரித்துக் கொண்டே, “சரி ஆன்ட்டி, நான் கிளம்புறேன். நாளைக்கு பார்க்கலாம். அன்ட் லெட் பீ பிரண்ட்ஸ்” என்றவாறே அவரது கையைப் பற்றி குலுக்கி விட்டு அவரிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு என்றுமில்லாதவாறு ஒரு சந்தோஷமான மனநிலையுடன் தன் வீட்டை நோக்கி நடை போடத் தொடங்கினாள்.

மாயா சாவித்திரியை இதற்கு முன்பு ஒரு தடவை கூட சந்தித்ததில்லை, அப்படியிருக்கையில் முதல் தடவை பார்த்த போதே அவர் மீது ஏதோ ஒரு விதமான பாசவுணர்வு அவளுக்குள் ஏற்பட்டிருந்தது.

அந்தப் பாசவுணர்வு தான் இன்று அவரது ஒரு முக மாற்றத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் அவரோடு சென்று அவளை சகஜமாகப் பேசச் செய்திருந்தது.

வெகுநாள் கழித்து தன் கவலைகள் மறந்து தன்னை சந்தோஷமாக இருக்கச் செய்த சாவித்திரி எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே மாயா வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த தருணம் அவளுக்கு நேர் எதிராக சித்தார்த் நடந்து வந்து கொண்டிருந்தான்.

சாவித்திரியுடனான தன் உரையாடலை எண்ணி ஒருவிதமான சந்தோஷமான மனநிலையுடன் தன் முகத்தில் மாறாத புன்னகையுடன் மாயா நடந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்து சில நொடிகள் மெய் மறந்து நின்ற சித்தார்த் உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு, “என்ன மேடம், ரோட்டில் தனியாக சிரிச்சுட்டு வர்றீங்க? ஏதாவது புதுவிதமான டிரெயினிங்கா? இல்லை காலையில் கீழே விழுந்ததில் ஏதாவது அடி பட்டுடுச்சா?” என்று வினவ,

தன் முகத்தில் இருந்த புன்னகை சட்டென்று மறைய அவனை முறைத்துப் பார்த்தவள், “ரோட்டில் போற, வர்ற பொண்ணுங்க கிட்ட இப்படித்தான் பேசணும்னு உங்களுக்கு டிரெயினிங் கொடுத்தாங்களா?” என்று பதிலுக்கு அவனைப் பார்த்து வினவினாள்.

“போற, வர்ற பொண்ணுங்களா? இந்த ரோட்டில் நம்ம இரண்டு பேரு தான் இருக்கோம், அப்படி இருக்கும் போது போற, வர்ற பொண்ணுங்க கிட்ட எப்படி மேடம் நான் வம்பு பண்ணுவேன்?”

“இதோ பாருங்க, நான் உங்க ஃபேமிலிக்கு கைடாக வந்திருக்கும் ஒரு எம்ப்ளாயி, அதைத்தவிர என் கிட்ட தேவையில்லை வீண் பேச்சு வேண்டாம், அப்புறம் இவ கிட்ட எதற்கு பேச்சுக் கொடுத்தேன்னே ரொம்ப வருத்தப்படுவீங்க”

“மேடம் மிரட்டல் கொடுப்பதில் பி.எச்.டி முடித்து இருப்பீங்க போல, காலையில் ஒரு மாதிரி, இப்போ ஒரு மாதிரி. நான் பார்க்கும் நேரமெல்லாம் ரொம்ப கடுகடுன்னு இருக்குறீங்க. ஆனாலும் இந்த இரண்டு மிரட்டலுக்கும் நடுவில் இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி அழகாக சிரிச்சுட்டு வந்தீங்க இல்லையா? அதுதான் உங்களுக்கு ரொம்ப பக்காவா இருக்கு, இந்தக் கோபம் செட் ஆகல”

“ஓஹ்! அப்படியா? அப்போ நான் இனிமேல் சிரிக்கப் போறதே இல்லை, எப்போதும் கோபமாகவே இருக்கப் போறேன், போதுமா?” சித்தார்த்தைப் பார்த்து எரிந்து விழுந்தவள் அவனைத் தாண்டி வேகமாக கடந்து செல்லப் பார்க்க, அதற்குள் அவன் மீண்டும் அவளெதிரில் வந்து நின்று கொண்டான்.

“மிஸ்டர், உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை? இப்போ எதற்காக என் கிட்ட இப்படி வம்பு பண்ணுறீங்க? மரியாதையாக என் வழியில் இருந்து நகருங்க, இல்லேன்னா உங்களை உண்டு, இல்லைன்னு பண்ணிடுவேன்” என்றவாறே மாயா தன் கைப்பைக்குள் ஏதோ ஒரு பொருளைத் தேட ஆரம்பிக்க,

அவனோ, “காலையில் உன் மேலே வேணும்னே வந்து இடித்ததற்கு ஐ யம் ரியலி சாரி மாயா” என்று வெகு இயல்பாகப் பேச, மாயாவோ அவனை அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தாள்.

“என்ன சாரியா?”

“ஹ்ம்ம்ம்ம், ஆமா. ஆக்சுவலா நான் காலையிலேயே உன் கிட்ட சாரி கேட்க வந்தேன், ஆனா நீங்க தான் நான் இருந்த பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கல. இப்போ உன்னைப் பார்த்ததும் சாரி கேட்கணும்னு தான் வந்தேன், ஆனா ஏனோ தெரியல, உன்னைச் சீண்டிப் பார்க்கணும் போல இருந்தது, அதுவும் தப்புத் தான், இருந்தாலும் பரவாயில்லை, இதற்கும் சேர்த்து ஐ யம் சாரி. அப்புறம் இனி உன் கிட்ட நான் இப்படி எல்லாம் வம்பு பண்ண மாட்டேன், அதுபோல நீயும் எப்போதும் சந்தோஷமாக இரு, இது என்னோட ஒரேயொரு பாசமான வேண்டுகோள், பாய்” என்று விட்டு சித்தார்த் அவளைப் பார்த்து புன்னகைத்தபடியே அங்கிருந்து சென்று விட, மாயா அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் ஏதோ கனவுலகில் நடப்பது போல தன் கற்பனைகளில் சஞ்சரித்தபடியே தன் வீட்டை நோக்கி புறப்பட்டுச் சென்றாள்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!