எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 06

IMG_20221031_134812-eb822bff

எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 06

சித்தார்த் தனது வீட்டினருடன் ஊட்டி வந்து சேர்ந்து அன்றோடு ஐந்து நாட்கள் நிறைவு பெற்றிருந்தது.

இந்த ஐந்து நாட்களில் தனது மனதுக்குப் பிடித்தது போல் தெரிந்த காட்சிகளையும், தன் கண்களுக்கு புலப்பட்ட மிருகங்களையும் படம் பிடித்தவன் அதை எல்லாம் தனது மடிக்கணினியில் போட்டு ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னதான் அவன் எடுத்திருந்த புகைப்படங்கள் எல்லாம் ஒரு மூன்றாம் நபரால் ரசித்துப் பார்க்கும் படி இருந்தாலும், ஒரு புகைப்படக் கலைஞனாக அவனால் அந்த புகைப்படங்கள் எதையுமே மனதொன்றி ரசித்து பார்க்க முடியவில்லை.

அவன் எடுத்திருந்த அந்த புகைப்படங்கள் அனைத்திலும் ஏதோ ஒன்று குறைவது போலவே அவனுக்கு தென்பட்டது.

அவன் என்ன நோக்கத்தோடு இங்கே புகைப்படங்கள் எடுக்க நினைத்து வந்திருக்கிறானோ அது இன்னமும் தனக்கு கிடைக்கவில்லை என்பது போலவே அவனது உள்மனது அவனுக்கு உணர்த்துவது போல இருந்தது.

இன்னும் ஒரு வாரமே இங்கே இருக்கப் போகிறோம் என்கிற நிலையில் இனியும் காலத்தை தாழ்த்துவது சரியில்லை என்று புரிந்து கொண்டவன் இனிவரும் நாட்களுக்குள் எப்படியாவது தன் மனதுக்கு திருப்தி அளிக்கும் ஒரு புகைப்படமேனும் எடுத்து விட வேண்டும் என்று உறுதியாக முடிவு செய்து கொண்டான்.

தான் எடுத்த உறுதியான முடிவுடன் சித்தார்த் மெல்ல மெல்லத் தூக்கத்தை தழுவியிருக்க, அதே சமயம் மாயா வழமை போன்று தன் அறை ஜன்னலோரமாக அமர்ந்து கொண்டு வானில் தெரிந்த நிலவை கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள்.

இந்த ஐந்து நாட்களில் அவள் முற்றாக தனது மனச்சிறைக்குள் இருந்து வெளியே வந்து சாவித்திரியுடன் பேசிப் பழகியிருக்காவிட்டாலும், தன்னால் முடிந்த அளவு அவருடன் சில விஷயங்களைப் பேசி தன் மனதில் இருக்கும் கவலைகளை அந்தப் பொழுதில் மறக்கும் வகையில் சிரித்து பேசி பழக ஆரம்பித்திருந்தாள்.

மாயா சிரித்துப் பேசி பழக ஆரம்பித்து சில நாட்களிலேயே அவளிடம் அவளது கவலைகளைக் கேட்டு அவளை மீண்டும் பழைய நிலைக்கு தள்ள விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்த சாவித்திரியும் அவளோடு இயல்பாகவே பேசிப் பழக ஆரம்பித்திருந்தார்.

இந்த ஐந்து நாட்கள் ஊட்டியில் பல இடங்களை சுற்றி பார்த்திருந்தவர்கள் நாளை காலையில் மலை ஏறி செல்லலாம் என்று முடிவு எடுத்திருந்தனர்.

கௌசிக் மற்றும் கௌசல்யா ஊட்டியில் தாங்கள் செலவிடும் ஒவ்வொரு நிமிடங்களையும் அத்தனை சந்தோஷமாக கழித்துக் கொண்டிருந்தது மட்டுமின்றி இப்போதே நாளை காலை மலையேறுவதற்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்திருந்தனர்.

தன் பிள்ளைகள் மூவரது முகங்களிலும் தெரியும் சந்தோஷத்தைப் பார்க்கும் போது சாவித்திரிக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது மட்டுமன்றி அந்த மகிழ்ச்சி எப்போதும் அவர்களுடன் நிலைத்திருக்க வேண்டும் என்றும் ஆசையாக இருந்தது.

ஒருவழியாக காலை விடியலை எட்டிப் பிடித்திருந்தவர்கள் அன்றைய நாளை எப்படி செலவிடுவது என்கிற ஆவலுடன் தங்கள் பயணத்தை இனிதே ஆரம்பித்திருந்தனர்.

தான் வழக்கமாகச் செல்லும் வனப்பகுதிக்கு வந்து சேர்ந்திருந்த சித்தார்த் இந்த ஐந்து நாட்களாக வனத்துறை அதிகாரிகள் சொல்லியனுப்பிய பாதையில் தான் சென்று வந்திருந்தான், ஆனால் இன்று அதே வழியில் சென்றால் தனது மனதுக்குப் பிடித்தது போல் எந்தவொரு புகைப்படங்களையும் எடுக்க முடியாது என்று எண்ணிக் கொண்டவனாக தான் வழக்கமாகச் செல்லும் பாதைக்கு எதிர்ப்புறம் தெரிந்த பாதையை நோக்கி நடந்து செல்லத் தொடங்கினான்.

அந்தப் புதிய பாதை வழியாக சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்தவனுக்கு சில நொடிகள் கழித்தே தன் கையிலிருந்த ஜி.பி.எஸ் கருவி பற்றிய நினைவு வந்தது.

வனத்துறை அதிகாரிகள் சொன்ன பாதையை விட்டு தான் தனியாக இன்னொரு பாதையில் சென்று கொண்டிருப்பது அவர்களுக்குத் தெரிந்தால் இனிமேல் தன்னை இந்தக் காட்டிற்குள் அனுமதிக்காமல் விட்டாலும் விடலாம் என்று நினைத்துக் கொண்டவன் சிறிது நேரம் யோசனைக்குப் பின்னர் தன் கையில் இருந்து ஜி.பி.எஸ் கருவியை அணைத்து தனது பையில் போட்டுக் கொண்டு, “எப்படியும் வழக்கமாக காட்டை விட்டு வெளியே போகும் நேரத்திற்கு முன்னாடியே நம்ம வெளியாகிடலாம், அப்போ அங்கே வைத்து ஜி.பி.எஸ்ஸைப் பார்த்து இது எப்படி ஆஃப் ஆச்சுன்னு எதுவுமே தெரியாத மாதிரி ஒரு டிராமாவ பண்ணிடுவோம். அப்போதான் யாருக்கும் சந்தேகம் வராது, அதோடு இன்னைக்கு ஏதோ நிறைய பேரு இங்கே வந்து ஏதோ சூட்டிங் பண்ணிப் போவதாக வேறு சொன்னாங்களே, ஷோ நம்மளை அவ்வளவு தனியாக யாரும் கவனித்துப் பார்க்க மாட்டாங்க” என்று எண்ணிக்கொண்டவன் உற்சாகமாக விசில் அடித்தபடியே முன்னேறி நடந்து செல்ல தொடங்கினான்.

அதே சமயம் மறுபுறம் மலையேறச் சென்றிருந்த மாயா,சாவித்திரி, கௌசிக் மற்றும் கௌசல்யா ஆரம்பத்தில் உற்சாகமாக மலையேற தொடங்கியிருந்தாலும், நேரம் செல்லச் செல்ல சூரியக் கதிர்கள் தங்கள் மீது விழ ஆரம்பித்திருந்ததும் சற்று களைத்துப் போனவர்களாக அந்த இடங்களை சுற்றி பார்த்தபடியே மெல்ல மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தனர்.

கௌசிக் மற்றும் கௌசல்யா சாவித்திரி, மாயாவை விட்டு சிறு தூரம் முன்னால் நடந்த சென்று கொண்டிருக்க சாவித்திரியின் நடையின் வேகத்திற்கு ஈடு கொடுத்தபடி மாயாவும் நடந்து சென்று கொண்டிருந்தாள்.

எப்போதும் கலகலப்பாக ஏதாவது பேசி சிரித்துக்கொண்டு வரும் சாவித்திரி அன்று அமைதியாக வருவதைப் பார்த்து அவரிடம் அதை பற்றி கேட்கலாமா வேண்டாமா என்று பலமுறை முயற்சி செய்திருந்த மாயா ஒரு சில கணங்களுக்கு பின் தன் வாய்விட்டே அவரிடம் அதைப் பற்றி கேட்டிருந்தாள்.

“என்னாச்சு ஆன்ட்டி? வழக்கமாக ஏதாவது பேசி சிரிச்சிட்டே வருவீங்க இன்னைக்கு இவ்வளவு அமைதியாக இருக்குறீங்க? ஏதாவது பிராப்ளமா உங்களுக்கு இவ்வளவு தூரம் நடப்பது கஷ்டமாக இருக்கா?” என்று வினவ,

அவளைப் பார்த்து சமாளிப்பது போல சிரித்துக் கொண்டவர், “இதற்கு முன்னாடி இவ்வளவு தூரம் நடந்ததே இல்லையா அதான் கொஞ்சம் டயர்டா இருக்கு, வேற ஒன்னும் இல்லை. ஆனா இதை கௌஷி கிட்ட சொல்லிடாத மா அப்புறம் அவங்க ரெண்டும் நம்மை விட்டுட்டு தனியா போயிருவாங்க. நான் மெதுவா மெதுவாக நடந்தாலும் பரவாயில்லை, பசங்களைத் தனியாக இந்த இடத்தில் அனுப்பி வைக்க பயமாக இருக்கு” என்று கூற, அவளும் சிறு புன்னகையுடன் அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டது போல தலையசைத்து விட்டு வேறு கதைகள் பற்றி பேசிக்கொண்டே அவருடன் நடக்க ஆரம்பித்து இருந்தாள்.

சிறிது தூரம் சென்றதும் கௌசிக் மற்றும் கௌசல்யா களைத்துப் போனவர்களாக ஒரு இடத்தில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்திருந்த யோகா மேட்டை விரித்து அதில் அப்படியே உறங்கி விட, அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே சாவித்திரி மற்றும் மாயா அவர்களை விட்டு சற்றுத் தள்ளி ஒரு பெரிய மரத்தின் நிழலில் அமர்ந்து கொண்டனர்.

சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்த சாவித்திரி மாயாவிடம் ஏதோ கேட்க வருவதும், தயங்குவதும் போல இருக்க, அவரது முகத்தில் தெரிந்த தயக்கத்தை உணர்ந்து கொண்டவளாக அவரைப் பார்த்து புன்னகை செய்தவள், “என்ன சாவித்திரி ஆன்ட்டி என்கிட்ட ஏதாவது கேட்கணுமா? நீங்க ரொம்ப நேரமாக ஏதோ கேட்க வர்றீங்க போல இருக்கு, ஆனா தயங்கி தயங்கி எதுவும் பேசாமல் இருப்பது போலவும் இருக்கு. என்னாச்சு ஆன்ட்டி? எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்க”என்று கூற,

அவளது தோளில் தனது கையை வைத்து அழுத்திக் கொடுத்தவர், “என்னடா இவ மறுபடியும் தொடங்கிட்டாளான்னு மட்டும் நினைச்சுக்காதே மாயா, ஏனோ தெரியல நீ இந்த கொஞ்ச நாளாக சந்தோஷமாக சிரித்துப் பேசினாலும் ஏதோ ஒரு கவலை உன் முகத்தில் இருந்து கொண்டே தான் இருக்கு. நான் ஒவ்வொரு தடவையும் அதைப் பற்றி கேட்க நினைப்பேன், ஆனா அப்புறம் நான் கேட்கும் விஷயம் உன்னைக் காயப்படுத்தி அப்புறம் மறுபடியும் நீ கவலையாகிட்டேனா என்ன பண்ணுவது? அதுதான் இதைப் பற்றி கேட்கலாமா? வேண்டாமான்னு ஒரே குழப்பம்” என்று கூற, மாயா சிறு புன்னகையுடன் அவரது கையில் தனது கையை வைத்து அழுத்திக் கொடுத்தாள்.

“எங்க அம்மா மாதிரியே நீங்களும் என்னை ரொம்ப நல்லாப் புரிந்து வைத்திருக்கீங்க ஆன்ட்டி”

“நீ பேசுற தொனியை வைத்துப் பார்த்தால் உன் அம்மான்னா உனக்கு ரொம்ப இஷ்டம் போல இருக்கே. சரி, அப்போ சொல்லு. உன் அம்மா பேரு என்ன? அவங்க என்ன பண்ணுறாங்க?” சாவித்திரியின் கேள்வியில் தன் கண்கள் கலங்க அவரை நிமிர்ந்து பார்த்தவள்,

“என்னோட அம்மா பேரு பத்மாவதி, அவங்க இப்போ அங்கே நிம்மதியாக இருக்காங்க” என்றவாறே வானை நோக்கி தன் விரலை சுட்டிக் காட்ட, சாவித்திரி சற்றே அதிர்ந்து போனவராக அவளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

“ஐ அம் ரியலி சாரி மாயா, நான் கேட்டது உன் மனசை நிச்சயமாக காயப்படுத்தி இருக்கும். தயவு செய்து என்னை மன்னிச்சுக்கோ”

“ஐயோ ஆண்ட்டி! அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் என் அம்மா இத்தனை சீக்கிரமாக என்னை விட்டுப் போனது எனக்கு தினமும் கஷ்டமாகத் தான் இருக்கு, ஆனால் அது என்னதான் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் அந்த நிதர்சனத்தை நாம ஏத்துக்கிட்டு அதை கடந்து போகத் தானே வேணும்? அதுதானே வாழ்க்கை? இந்த மூணு வருஷத்தில் நான் அதை நல்லபடியாக புரிஞ்சிக்கிட்டேன் ஆன்ட்டி” என்று கூற,

“மறுபடியும் தப்பாக எடுத்துக்காதே மாயா, அம்மாவுக்கு என்ன நடந்தது?ஏதாவது உடம்பு முடியலையா”என்று கேட்ட சாவித்திரியைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள்,

“அவங்க உயிர் இத்தனை சீக்கிரத்தில் இந்த உலகத்தை விட்டுப் போக நானும் ஒரு வகையில் காரணமாகிட்டேன் ஆன்ட்டி, அதுதான் எனக்கு அத்தனை குற்ற உணர்ச்சியாக இருக்கு” என்றவாறே அவரது தோளில் சாய்ந்து கண்ணீர் விட, சாவித்திரி மேலும் அதிர்ந்து போனவராக என்ன பேசுவது என்று புரியாமல் அமர்ந்திருந்தார்.

ஒரு சில நொடிகள் தன் மனக்குமுறல் குறையும் வரை தன் கண்ணீரை வெளியேற்றியவள் சில நொடிகளுக்குப் பின்னர் தன்னை சுதாரித்துக் கொண்டு சாவித்திரியை நிமிர்ந்து பார்த்தாள்.

“எங்க அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நானும் என் அண்ணாவும் தான் பசங்க. என்னதான் எங்க அண்ணன் வீட்டுக்கு ஒரே ஆண் பிள்ளையாக இருந்தாலும் என் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் தான் செல்லப் பிள்ளை. அதனாலேயே என் அண்ணனுக்கும், எனக்கும் அடிக்கடி சண்டை வரும், ஆனாலும் எங்க வாழ்க்கை எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சந்தோஷமாகத்தான் போயிட்டு இருந்துச்சு.

எங்க அப்பா பேரு நாராயணன், அவரு சின்ன வயதிலிருந்தே இந்த ஊட்டியில் டூரிஸ்ட் கைட்டாக இருந்தவரு, அவருகிட்ட இருந்து தான் நான் இந்த தொழிலைக் கற்றுக்கிட்டேன், எங்க அம்மா எஸ்டேட்டில் தேயிலைத் கொழுந்து பறிக்கப் போவாங்க. எங்க அம்மா, அப்பா உழைச்சுட்டு வர்ற பணம் எங்களோட சின்னக் குடும்பத்தோட தேவையைப் பூர்த்தி செய்ய ரொம்ப தாராளமாக இருந்தது, இருந்தாலும் நான் பெரியவளாகி காலேஜ் போய் படிச்சு எங்க அம்மா, அப்பாவை நல்லாப் பார்த்துக்கணும்னு நினைச்சேன், ஆனா என் விதி என் கூட ரொம்ப நல்லா விளையாடிடுச்சு.

ப்ளஸ் டூ படிச்சுட்டு இருக்கும் போது நான் பண்ண ஒரு விஷயம் என் வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப் போட்டுடுச்சு. நான் பண்ண அந்த விஷயம் என்னவோ என் தப்புதான், ஆனா அதற்காக நான் என் அம்மா, அப்பா கிட்ட எவ்வளவோ மன்னிப்பு கேட்டேன், அம்மா இரண்டு, மூணு நாள் கழித்து என்னை மன்னித்தாங்க, ஆனா என் அப்பா அந்த மன்னிப்பை ஏற்றுக்கல. நான் ப்ளஸ் டூ எக்ஸாம் எழுதி ஒரு மாதத்தில் அவசர அவசரமாக எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க”

“என்னது உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா மாயா?” சாவித்திரியின் அதிர்ச்சியான கேள்வியில் அவரைப் பார்த்து ஆமோதிப்பது போல தலையசைத்தவள்,

“கல்யாணமும் ஆகிடுச்சு, அந்தக் கல்யாணம் நடந்து இரண்டே வாரத்தில் என்னோட கல்யாண வாழ்க்கையும் முடிவுக்கு வந்து மூணு வருஷத்துக்கு முன்னாடி சட்டபூர்வமாக எனக்கு விவாகரத்தும் ஆகிடுச்சு” என்று கூற, சாவித்திரி தன் மனதார மாயாவை எண்ணி வருந்திக் கொண்டு அமர்ந்திருந்தார்.

“நான் பண்ண தப்பை மறந்து, என் அம்மா, அப்பாவோட ஆசைக்காக என் ஆசையை மறந்து நான் அந்தக் கல்யாணத்தை பண்ணிக்கிட்டேன். அந்த வயதில் குடும்ப வாழ்க்கைன்னா என்னன்னு கூட எனக்குத் தெரியாது, கல்யாணம் ஆன அன்னைக்கே அந்த ஆளுகிட்ட என்ன காரணத்திற்காக எனக்கு இவ்வளவு அவசரமாக கல்யாணம் பண்ணி வைச்சாங்கன்னு சொன்னா அவரு என்னைப் புரிஞ்சுகிட்டு எனக்கு ஆறுதலாக இருந்து என்னை மேலே படிக்க வைத்து வேலைக்கு எல்லாம் அனுப்ப அனுமதி கொடுப்பாருன்னு ஏதேதோ கனவு கண்டு அந்த ஆளுகிட்ட நடந்த விஷயங்களை எல்லாம் மறைக்காமல் சொன்னேன், அதற்கு எனக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா?”

“என்ன மாயா?”

“இதோ, இதுதான்” என்றவள் தான் அணிந்திருந்த முழுக்கை ஆடையின் கையை மடித்து விட்டு தனது கையை காண்பிக்க அதில் சூடு போட்டது போல பல காயங்கள் காணப்பட்டது.

“அய்யய்யோ! என்ன மாயா இது?”

“உண்மையாக இருந்ததற்கு பரிசு ஆன்ட்டி. இப்படி பல கொடுமைகளை அந்த ஆளுகிட்ட அனுபவிச்சேன். அப்படியும் இப்படியுமாக இரண்டு வாரம் அங்கே தாக்குப் பிடித்து இருந்தேன், அதற்கு அப்புறம் அங்கே இருக்க முடியாதுன்னு முடிவெடுத்துட்டு என் வீட்டுக்கே திரும்பி வந்தேன். அங்கே திரும்பி வந்தபோது எங்க அப்பா சொன்னாரு பாருங்க வார்த்தைகள்.

‘நீ பண்ண காரியத்திற்கு இப்படி சரி ஒருத்தன் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டானேன்னு நினைச்சு சந்தோஷப்படு, அதை விட்டுட்டு இப்படி எல்லாம் இங்கே வந்து நிற்காமல் அங்கேயே போய் உன் வாழ்க்கையை வாழு’ ன்னு சொன்னாரு. சத்தியமாக சொல்லுறேன் ஆன்ட்டி எங்க அப்பா அப்படி ஒரு விஷயம் சொல்லுவாங்கன்னு நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கல, அன்னைக்கு அவர் பேசிய வார்த்தைகளைக் கேட்டு ஏற்பட்ட வலி இந்தச் சூட்டுக் காயத்தினால் கூட எனக்கு அந்தளவிற்கு வலிக்கல ஆன்ட்டி, அப்படி வலிச்சது அவங்க சொன்னது.

அதற்கு அப்புறம் அம்மாதான் அப்பா கிட்ட சண்டை போட்டு என்னை வீட்டுக்குள்ள எடுத்தாங்க, அதற்கு அப்புறம் கொஞ்ச நாள் கழித்து அந்த ஆளை சட்டரீதியாக விவாகரத்து பண்ணேன், அந்த நேரம் எல்லாம் எங்க அண்ணனும், அண்ணியும் எங்க கூட ஒரே வீட்டில் தான் இருந்தாங்க, எனக்கு விவாகரத்து ஆனதற்கு அப்புறம் அவங்க என் கூட ஒரே வீட்டில் இருக்க முடியாதுன்னு சொல்லிட்டு வீட்டை விட்டு போயிட்டாங்க. நடந்த எல்லா விஷயங்களையும் யோசித்து யோசித்து எங்க அம்மா ஒரு நாள் மொத்தமாக என்னை விட்டுப் போயிட்டாங்க. எங்க அம்மா இறந்து போன அதிர்ச்சி ஒரு பக்கம், அண்ணா வீட்டை விட்டுப் போன சோகம் ஒரு பக்கம்ன்னு அப்பாவுக்கு பக்கவாதம் வந்துடுச்சு, அந்த நிலைமையில் நானும் அவரை விட்டுட்டு போனால் நான் அவர் மேலே இதற்கு முன்னாடி வைத்திருந்த மதிப்புக்கும், பாசத்திற்கும் அர்த்தமே இல்லைன்னு புரிந்தது.

அதற்கு அப்புறம் அவங்க பண்ண தொழிலை நான் பார்க்க ஆரம்பித்தேன், ஆரம்பத்தில் ஒரு பொண்ணு கைடாக வர்றான்னு சிலர் ஏளனமாகப் பார்த்தாங்க, சிலர் அத்துமீறப் பார்த்தாங்க, அதற்கு அப்புறம் கௌசல்யாவோட ஃபிரண்ட் என்னைப் பற்றி உங்க கிட்ட தகவல் சொன்னாளே அவ எனக்கு தூரத்து சொந்தம், அந்தப் பொண்ணு தான் ஆன்லைனில் இப்படி டூரிஸ்ட் கைட் பற்றி போடலாம்னு சொல்லிக் கொடுத்து எல்லாமே பண்ணித்தருவா. இப்போ கூட அவதான் டூரிஸ்ட் டீடெயில்ஸ் எல்லாம் பார்த்து சொல்லுவா, எனக்கு அந்தளவிற்கு ஆன்லைன் பற்றி எல்லாம் தெரியாது. ஏதோ எங்க அப்பாவுக்கு அன்னைக்கு அன்னைக்கு மருந்து, மாத்திரை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு உழைக்கிறேன், கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து அவரை நல்லபடியாக குணம் ஆக்கிட்டேனா போதும், அவ்வளவுதான் ஆன்ட்டி என்னோட வாழ்க்கை ரகசியம்” என்று கூற,

“மாயா!” என்றவாறே அவளைக் கண்கள் கலங்க அணைத்துக் கொண்டவர்,

“உன்னோட மனது ரொம்ப ரொம்ப தங்கமானது மாயா, இப்படி ஒரு பொண்ணு கிடைக்க உன் அம்மா, அப்பா எவ்வளவு புண்ணியம் பண்ணுணாங்களோ தெரியல. நான் என் மனசார சொல்லுறேன், நிச்சயமாக உன் நல்ல மனதுக்கு உனக்கு சிறப்பான ஒரு எதிர்காலம் அமையும், நீ வேணும்னா பாரு” என்று கூற,

“உங்க வார்த்தை திருவார்த்தையாக பலிக்கட்டும் ஆன்ட்டி” என்றவள் தன் கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்து விட்டு,

“சரி ஆன்ட்டி, ரொம்ப நேரம் ஆகிடுச்சு, நம்ம மலையில் இருந்து இறங்க ஆரம்பிப்போம்” என்றவாறே கௌசிக் மற்றும் கௌசல்யாவை அழைத்துக் கொண்டு தன் மனதிலிருந்த பாரம் சற்றே குறைந்தவளாக அந்த மலையில் இருந்து இறங்க ஆரம்பித்தாள்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!