ஏன் பெண்ணென்று பிறந்தேன் 1(1)

IMG-20211007-WA0009-e5083e0b

ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 1(1)

 

விடியற்காலை பொழுதில் காய்ச்சும் பசும் பாலின் மணம் அந்த சுற்றுக்கட்டு வீடெங்கும் இதமாய் பரவியது.

பாத்திரத்தில் எழும்பி பொங்கிய புதுப் பாலை டம்ளர்களில் ஊற்றி, காஃபி தூளும் சர்க்கரையும் அதில் இட்டு ஆற்ற, நாசியில் நுழைந்த காஃபியின் மணம் புத்துணர்வை தருவதாய்.

உறக்கம் கலைந்து எழுந்து வந்த மல்லிகா, சமையற்கட்டில் தன் மூத்த மகளை பார்த்து அதிசயித்தார்.

“என்ன கங்கா, காலங்காத்தால எழுந்து நீயே காஃபி வேற போடுற, இன்னைக்கு மழை வரும் போல!” என்று கிண்டலாகவே கேட்டார்.

“இல்ல ம்மா. தூக்கம் சரியா வரல. தலை வேற வலிச்சிட்டே இருக்கு. காஃபி குடிச்சா நல்லா இருக்கும்னு தோனுச்சு அதான் ம்மா” அதிராத வார்த்தைகள் அவளின் பதிலாய்.

“ம்ம் சரிதான் இந்த ஒத்த தலைவலி உன்ன விட மாட்டேன்னு அடம் பிடிக்குதே. எத்தனை மாத்திரை, மருந்து சாப்பிட்டும் ஏன் இப்படி மறுபடி மறுபடி வந்து உன் தூக்கத்தை கெடுக்குதோ”
அவர் அலுத்து கொள்ள, விரியாத புன்னகையை பதிலாய் தந்தாள் கங்கா.

“சரி நீ காஃபி குடிச்சிட்டு, கொஞ்ச நேரம் படுத்து எழு. அந்த மனுசன் வெள்ளனே எழுப்ப சொன்னாங்க” என்று காஃபி நுரை தளும்பும் இரண்டு தம்ளர்களை எடுத்து கொண்டு கணவனை எழுப்ப சென்றார்.

கங்கா தனக்கான காஃபி தம்ளரை எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைய, அப்போது தான் கண்களை கசக்கி கொண்டு எழுந்து அமர்ந்த மகாலட்சுமி, காஃபியின் மணத்தை ஆழமாய் உள்ளிழுத்து, “எனக்காக காஃபி எடுத்துட்டு வந்தியா, தேங்க் யூ சோ மச் க்கா” என்று கங்காவின் கையிலிருந்த தம்ளரை வாங்கி, “ம்ம் ம்ம் ம்ம்” ருசித்து பருகலானாள்.

தங்கை காஃபி பருகும் அழகை பார்க்க கங்காவிற்கு சிரிப்பு தான் வந்தது.
“என்ன மேடம், இன்னைக்கு சீக்கிரமே எழுந்திட்டிங்க போல?” கங்கா மென்னகையோடு கேட்க,

“நெக்ஸ்ட் வீக் செமஸ்டர் வருது க்கா. இன்னையில இருந்து மார்னிங் ரெகுலரா படிக்கணும்” மகா வளர்ந்த குழந்தையாய் சிணுங்கியபடி வெற்று தம்ளரை அக்காவிடம் கொடுத்து விட்டு, தன் புத்தகத்தை திறந்து படிக்க அமர்ந்து விட, பெரியவள் மறுபடியும் சமையலறை நோக்கி நடந்தாள் தனக்கான காஃபியை தயாரிக்க.

கங்கா ஒற்றை கால் தாங்கி தாங்கி மெதுவாய் நடந்து வருவதைப் பார்த்த மாடசாமியின் முகம் அப்பட்டமாய் எரிச்சலைக் காட்டியது. தோளில் இருந்த துண்டை உதறி போட்டு கொண்டு மறுபடி தன் அறைக்குள்ளேயே புகுந்து கொண்டார் அவர்.

“என்ன மாமா, எங்கேயோ அவசரமா போகணும்னு கிளம்பிட்டு திரும்பி வரீங்க?” மல்லிகா படுக்கையை சரி செய்தபடி கணவனை வினவ,

“ஆமா, ஒருத்தன் கிட்ட கொடுத்த பணத்தை வசூலிக்க கிளம்பினேன். அதான் உன் நொண்டி மவ குறுக்க வந்துட்டாளே! இனிமே போற காரியம் எப்படி விளங்கும்? நான் அப்பறம் போயிக்கிறேன்” என்று மீண்டும் கட்டிலில் உடல் சாய்த்து கொண்டார் மாடசாமி.

“நம்ம கங்காவ பத்தி நீங்களே இப்படி பேசறீங்களே, எத்தனை முறை சொன்னாலும் உங்க காதுல ஏற போறதும் இல்ல. என்ன மனுசனோ” மல்லிகா தலையில் அடித்துக் கொண்டார். தன் கணவனின் விளங்காத புத்தியை உணர்ந்து இருந்ததால், மேலும் ஏதும் பேசவில்லை.

அவர்களின் பேச்சு சமையலறையில் இருந்த கங்காவின் காதுகளில் தெளிவாகவே விழுந்தது. அப்படி ஒன்றும் அவர்கள் சிறு குரலில் பேசவில்லையே, விடியற்காலையின் பேரமைதியில் தந்தையின் தகரக் குரல் இவளை எட்டாமல் போவதற்கு.

உடைய தயாரான தன் மனநிலையை ஆழ மூச்செடுத்து சமன்படுத்திக் கொள்ள முயன்றவள், நேராய் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

திருமணம் என்று முடிந்த பின்னரும் வாழாவெட்டி என்று தாய்வீடு தஞ்சம் புகுந்த தனக்கு இந்த கொடுஞ் சொற்கள் புதியது அல்ல தான்…! எனினும், கேட்டு கேட்டு மரத்து போன பின்னும் கூட, இப்போதும் அவள் உள்ளத்தில் ஊமை வலி தெறிக்கத்தான் செய்கிறது. அதன் காரணம் விளங்காதவளாய், சில்லிட்டு இருந்த நீரை மோந்து மோந்து தன் தலையில் ஊற்றி கொண்டாள்.

உள்ளுக்குள் பற்றி எரியும் வேதனை தீ சற்றேனும் அணையுமா என்ற வேண்டுதலாய்…

***

 

புனித கங்கை போற்றும் தூய்மை அவள்… தேவதை வரமாய் பூமியைச் சேர்ந்தவள் அவள்… அவளின் உடலையும் வாழ்வையும் ஊனமாய் மாற்றியது விதியின் செயலன்று. பாழ்பட்ட மனித உள்ளங்களின் இருள் சூழ்ந்த சுயநலத்தின் வெளிப்பாடு…!

தன்னை நோக்கி விழும் கற்களுக்கு பரிசாய் சுவைமிக்க கனியை அளிக்கும் தெய்வத்தாருவான கங்காவின் உணர்ச்சிமிகு வாழ்க்கை பயணத்தில் நாமும் உடன் செல்வோம் மாறாத ரசனையோடு…

***