ஏன் பெண்ணென்று பிறந்தேன் 8

IMG-20211007-WA0009 (1)-bd50c61e

ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 8

 

வேதா அழகு நிலையத்தில் நிகழ்ந்த நிகழ்வில் கங்காவின் மனமும் உடலும் ஓய்ந்து போயிருந்தது. 

 

வழக்கம் போல இரவு ஒன்பது மணிக்கு வீடு வந்து சேர்ந்தாள். உடல்கழுவி இலகுவான உடைக்கு மாறியவளுக்கு சாப்பிடும் எண்ணம் சுத்தமாக இருக்கவில்லை. ஆனாலும் மல்லிகா, மறுபடி மறுபடி மகளை சாப்பிட அழைத்ததால் அரை மனதுடன் தான் வந்தமர்ந்தாள்.

 

எப்போதும் கூடத்து தரையில் அமர்ந்து உணவு உண்பது வழக்கம். அங்கே அமர்ந்ததும், தாளித்த பருப்பு கடைசலின் மணமும், அரைத்த தேங்காய் சட்னியின் வாசமும், கூடவே கல் தவாவில் வார்த்த தோசையின் இதமான சுவையும், அவள் வயிற்றுக்குள் லேசாக பசியைத் தூண்டி விடத் தான் செய்தது. 

 

தோசையைப் பிய்த்து சட்னியில் தொட்டு வாயருகே வரும்போது, கங்காவிற்கு ஏதோ வித்தியாசமாகப் பட்டது. தயக்கத்துடன் நிமிர்ந்து தன் எதிரில் வந்தமர்ந்த அப்பாவை பார்த்தாள். 

 

வழக்கமாக மாடசாமி, கங்காவுடன் சாப்பிடமாட்டார். ஒன்று அவள் சாப்பிடும் முன்னோ அல்லது டிவி முன் பிரம்பு நாற்காலியில் அமர்ந்தோ தான் உண்பார். அதுவும் இரவு சாப்பாடு அவராக சாப்பிடுவது வெகு சொற்பம். வயிறுமுட்ட குடித்துவிட்டு வந்து,‌ மனைவி தரும் உணவை கீழே மேலே இறைத்து அரைகுறையாக உண்டுவிட்டு படுக்கையில் விழுந்து விடுவார்.

 

தந்தையின் குணத்தைப் பிறந்ததிலிருந்து கண்டிருந்த கங்காவுக்கு, அவர் நல்ல நிலையில், அதுவும் தன்னுடன் சாப்பிட அமர்வது ஏதோ வித்தியாசமாகப் பட்டது.

 

“அக்கா, நான் உனக்கு மொறுமொறுப்பா சூடா ரெண்டு தோசை வார்த்து தரவா?” மாகாலட்சுமி கையில் தோசை திருப்பியை வைத்தபடி, சமையலறை வாசலில் எட்டிப் பார்த்து கேட்க,

 

“அதென்ன உன் அக்காவுக்கு மட்டும் மொறுமொறு தோசை அப்பன்னு ஒருத்தன் இருக்கான்னு தெரியுதா உனக்கு, இதுல காலேஜ் போய் என்ன கிழிக்கிறீயோ?” மாடசாமி இளைய மகளிடம் எரிந்து விழுந்தார்.

 

“ம்ம் அங்க ஹாட் பாக்ஸ் பூரா சுட்டு வச்சிருக்க தோசை கண்ணுக்கு தெரியல?” மகா பதில் கேள்வி தொடுக்க,

 

அவளுக்கு ஏதோ பதில் தர வந்த கணவனை அடக்கிய மல்லிகா, “வார்த்த தோசை வரைக்கும் போதும் மகா, வாயடிக்கிறதை விட்டுட்டு நீயும் வந்து உக்கார்ந்து சாப்பிடு.” என்றார்.

 

கங்காவும் தங்கையைத் தலையசைத்து அழைக்க, “தினமும் குடிச்சிட்டு வந்து ஆட்டம் போடுறவருக்கு மொறுமொறு தோசை தான் குறைச்சலு” மகா வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு, அடுப்பை அணைத்து விட்டு வந்து, கங்காவின் அருகில் சாப்பிட அமர்ந்தாள். 

 

அமைதியாக நால்வரும் உணவு உண்ண தொடங்கினர்.

 

சற்றுநேரம் பொறுத்து, மல்லிகா தயக்கத்துடன் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார். 

 

“கங்கா… இன்னிக்கு நானும் அப்பாவும் போய் கௌரி, கதிர் மாப்பிள்ளைய பார்த்து சமாதானம் பேசிட்டு வந்தோம்…” என்று இழுக்க, கங்கா நிமிர்ந்து கேள்வியாக அம்மாவைப் பார்த்தாள்.

 

“அது… அன்னிக்கு நீ மாப்பிளய பேசினதும் தப்பு தான கங்கா” அவர் மனத்தாங்கலாக கூற,

 

“இதுவரைக்கும் அவங்களை நான் ஏதாவது ஒரு வார்த்தை பேசி இருப்பேனா ம்மா… இப்பவும் என் வாழ்க்கைக்குள்ள அவங்க மூக்க நுழைக்காம இருந்தா நான் எதுவும் வாய திறந்து பேச மாட்டேன்” என்றாள் கங்கா அழுத்தமாய்.

 

அவர்கள் பேச்சைக் கேட்டபடி, மாடசாமி அதிசயமாய் அமைதியாகச் சாப்பிட்டு கொண்டிருந்தார். அவரின் அந்த அமைதியே மகாவிற்கு சந்தேகத்தைக் கிளப்ப, தந்தையை யோசனையோடு பார்த்து வைத்தாள்.

 

“அப்படி சொல்லாத கங்கா, அவங்களும் உன் நல்லதுக்காக தான சொல்றாங்க… நீயும் இப்படியே எவ்வளவு நாளைக்கு இருக்கப் போற?” என்று கேட்ட அம்மாவை கங்கா விரோதமாகப் பார்த்தாள். 

 

“அம்மா… நீயுமா அவங்களுக்கு சப்போர்ட் பண்ற?”

 

“நான் உனக்காக யோசிக்கிறேன் கங்கா, மறுமணம்னு அன்னிக்கு கௌரி சொன்னதும் எனக்கு பக்குனு தான் இருந்துச்சு… இப்ப யோசிக்கும்போது உனக்கும் வாழ்க்கை இருக்குல்ல… நீயும் வாழணும் இல்ல.”

 

மல்லிகா நிதானமாக எடுத்துக் கூற, கங்காவிடம் எந்த பதிலும் இல்லை. 

 

அவளுக்கே அவளுக்கென்று ஒரு வாழ்க்கை! அப்படியொன்று இருக்கிறதா என்ன? 

 

தனக்கு அந்த கொடுப்பினை இல்லை என்றே நம்பினாள் கங்கா. அவளின் வாழ்க்கை மறுபடி மறுபடி அவள் தலையில் வலிக்க அடித்து, அதை நம்ப வைத்திருந்தது… நம்ப வைத்துக்கொண்டும் இருக்கிறது. எப்படி மறப்பாள்? மறக்கவும் இந்த சமூகம் அவளை அனுமதிக்குமா என்ன? 

 

கங்கா தன் முடிவில் உறுதியாக இருந்தாள். அவள் வாழ்க்கை அவளுடையது மட்டும் தான். இனி எதற்காகவும் இன்னொருவனின் கையில் அதைக் கொடுக்க அவள் தயாராக இல்லை. அப்படி கொடுத்து அவள் வாழ்வில் வெளிச்சம் வர வேண்டிய அவசியமும் இல்லை. 

 

அவள் இருளுக்கு பழகிக் கொண்டாள். இனி வெளிச்சத்தைத் தேடவேண்டிய தேவையில்லை அவளுக்கு.

 

அவள் தனித்து கடந்த, கடந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை சூழல் அவளுக்கு அத்தனை உறுதியைத் தந்திருந்தது.

 

“நான் சொல்றது புரியுதில்ல உனக்கு?” மல்லிகா மேலும் கேட்க,

 

“அம்மா, அதான் கௌரி, கதிர் சமாதானம் ஆகிட்டாங்கல்ல, முடிஞ்சது விடு. இன்னும் ஏன் அதையே கிளறிட்டு இருக்க?” அக்காவின் மனநிலை புரிந்து மகா அம்மாவை அடக்க முயன்றாள்.

 

“ஏய் குட்டி, பெரியவங்க பேசிட்டு இருக்கும்போது நீ ஏன் குறுக்கால புகுந்து நாட்டாம பேசுற? வாய மூடு” மாடசாமி அதுவரை இருந்த பொறுமையை இழந்து, சின்ன மகளை அதட்டினார்.

 

“அய்யோ நீங்க சும்மா இருங்களேன் நான் தான் பேசுறேன் இல்ல” மல்லிகா கணவனை அடக்க முயல,

 

“நீ பேசி கிழிச்ச, வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு விசயத்தைச் சொல்லாம சும்மா இழுவையாட்டம் இழுத்துக்கிட்டு” என்று மனைவியிடம் படபடத்தவர், 

 

கங்காவைப் பார்த்து, “இங்க பாரு, கதிர் மாப்பிள்ளையோட கம்பெனி முதலாளிக்கு ரெண்டாங் கல்யாணத்துக்கு பொண்ணு தேடுறாங்களாம். மாப்பிள உன்ன பத்தி எல்லா விசயத்தையும் சொல்லி இருக்காரு. உன் போட்டோ பார்த்ததும் அந்த முதலாளி… பேரு என்னமோ சொன்னாங்களே…? ம்ம் சங்கரன்… அவருக்கு உன்ன புடிச்சி இருக்காம். எப்ப கல்யாணத்தை வச்சுக்கலாம்னு கேக்குறாங்க, நீ பதிலை சொல்லு” என்று கடகடவென ஒப்பித்தார்.

 

அவர் சொன்னதைக் கேட்டு, வாயிலிட்ட உணவு கங்காவின் தொண்டைக்குள் இறங்க மறுத்தது. தொண்டையில் அடைத்த உணவை முயன்று விழுங்கிவிட்டு, “எனக்கு விருப்பமில்லன்னு சொல்லிடுங்க” என்று முடித்து விட்டாள்.

 

“ஏய் பைத்தியக்காரி, அந்த சங்கரன் என்ன சாதாரண ஆளுன்னு நினச்சியா, தோல் கம்பெனி வச்சு பெரிய அளவுல லாபம் பார்க்கறவரு… ஒரு நாளைக்கு அவரு பாக்குற பணம் எம்புட்டுன்னு தெரியுமா உனக்கு…? இல்லாம இருந்து உனக்குன்னு அதிர்ஷ்டம் வந்திருக்கு. காரு, பங்களான்னு சுபயோகமா வாழலாம், இப்ப என்ன சொல்லுற?” வசதி வாய்ப்பைச் சொல்லி ஆசைகாட்டிய ‌மாடசாமி, கங்காவை மேலும் வற்புறுத்தி கேட்டார்.

 

“நான் தான் விருப்பமில்லனு சொல்லிட்டேனே” கங்கா அழுத்தி தன் பதிலைச் சொல்ல, மாடசாமி முகம் கறுத்து போனது.

 

“இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு பேசாத கங்கா, நல்ல இடமா தோனுது, கொஞ்சம் யோசிச்சு பாரேன். கதிர் மாப்பிள ஒன்னுக்கு ரெண்டுமுறை அழுத்தி சொல்லுச்சு, அவங்க முதலாளி அதிர்ந்து கூட பேச மாட்டாராம். அவ்வளோ தங்கமான குணமாம்” மல்லிகாவும் தன் பங்குக்கு அவளிடம் பேசினார்.

 

“அம்மா ப்ளீஸ்… உங்களுக்கு புண்ணியமா போகும் என்னை இப்படியே விட்டுடுங்க” என்ற கங்கா, எச்சில் கையிலேயே கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு எழுந்து சென்று விட்டாள்.

 

மல்லிகாவின் முகமும் வீழ்ந்து விட்டது. “நான் தான் சொன்னேன் இல்ல, உன் மக நாம சொன்னா எல்லாம் காதுல வாங்க மாட்டா, பணம், சொத்துன்னு திமிரேறிக் கிடக்குறா…” என்றுவிட்டு மாடசாமியும் எழுந்து கொண்டார்.

 

மகாலட்சுமி இதை அனைத்தையும் கவனித்தவள், தன் மொபைலில் கதிர் வேலை பார்க்கும் கம்பெனியை தேடல் பொறியில் இட்டு, அந்த கம்பெனி முதலாளி சங்கரன் பையோடேட்டாவை எடுத்துப் பாரத்தவள் முகம் சட்டென மாறிப்போனது.

 

கவலையாக தன் எதிரில் அமர்ந்திருந்த அம்மாவை எரிக்கும் பார்வை பார்த்தவள், வாய்வரை வந்த வார்த்தைகளைத் தொண்டைக்குள் அப்படியே விழுங்கிக் கொண்டு எழுந்து விட்டாள்.

 

தான் அம்மாவிடம் கோபப்பட்டு சத்தமிட்டால் அது நிச்சயம் கங்காவை எட்டிவிடும். இந்த விசயம் அவளுக்கு தெரிந்தால் மேலும் உடைந்து போவாள் என்று எண்ணியவளுக்கு, கதிர், கௌரியின் மேல் அத்தனை ஆத்திரமாக வந்தது.

 

***

 

மறுநாள் காலையில் கங்கா அழகு நிலையம் செல்லும் வழியில் கதிரவன் நிற்பதைப் பார்த்தும், கண்டுகொள்ளாமல் செல்ல நினைக்க, அவன் அவள் வண்டியின் குறுக்கே நிற்குமாறு கையசைத்தான். 

 

வேறுவழியின்றி அவளும் தன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, அவனை திகைப்பாகப் பார்த்தாள்.

 

கௌரியுடன் திருமணமான நாளிலிருந்து கங்காவிடம் கதிர் நேரடியாகப் பேசியதும் இல்லை. பேச முயன்றதுமில்லை. இன்று என்ன புதிதாக? என்று யோசனையோடு அவனை பார்த்தவள், “என்ன நீங்க மட்டும் தனியா நிக்கிறீங்க? கௌரி, பசங்க எல்லாம் எங்க?” என்று விசாரித்தாள்.

 

“அங்க…” கதிர் பார்வை சென்ற இடத்தில் பார்த்தாள். அருகிருந்த கடை ஒன்றில், கௌரி, குழந்தைகளும் ஏதோ வாங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆனாலும் கௌரியின் பார்வை இவர்களிடமே பதிந்திருந்திருக்க, கங்காவுக்குப் புரிந்துவிட்டது. 

 

“சொல்லுங்க மிஸ்டர் கதிரவன்?” அவனிடம் நேரடியாகக் கேட்டாள்.

 

சற்று தயங்கியவன், “முதல்ல என்னை தப்பா நினைக்காதீங்க கங்கா… நானோ கௌரியோ நீங்க நல்லா வாழணும்னு தான் நினைக்கிறோம்” அவன் சொல்ல,

 

“சரி, அப்புறம்?” என்றாள் இவள்.

 

ஒரு மரியாதைக்காக கூட ஸ்கூட்டியில் இருந்து இறங்காமல் அமர்ந்தபடியே, கேட்டவளைப் பார்த்து அவனுக்குள் எரிச்சலானது. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் பொறுமையாக அவளுக்குப் புரியவைக்க முயன்றான்.

 

“ஏன் கல்யாணத்துக்கு மறுப்பு சொல்றீங்க கங்கா?”

 

“அது என் சொந்த விசயம். உங்ககிட்ட அதை சொல்ல வேண்டிய அவசியம் இல்ல.” 

 

“இல்ல… அதுவந்து… நான் என்ன சொல்றேன்னா…”

 

“ம்ம் சொல்லணும்னு வந்துட்டீங்க, சொல்லிட்டு போங்க.” 

 

கங்காவின் இந்த பட்பட்டென்ற பதில் பேச்சு கதிரவனைத் திணற வைத்தது. 

 

‘எப்படி வந்தாலும் கேட்ட போட்றாளே’ தனக்குள் நொந்து கொண்டவன், “நான் உங்களுக்கு தெளிவா புரிய வைக்கிறேன்… கொஞ்சம் குறுக்க பேசாம‌ கேளுங்களேன்” அவன் தழைந்து சொல்ல, அவள் வயிற்றின் குறுக்கே இருகைகளையும் கட்டிக்கொண்டு அவனை நேராக பார்த்தாள், சொல்லு என்பதைப்போல.

 

அவனுக்கு புரிந்தது, முன்னர் எடுத்ததற்கெல்லாம் பயந்து நடுங்கி, அழுது ஒடுங்கிப் போன கங்கா இவளல்ல என்று. 

 

“சங்கரன் சார் ரொம்ப நல்லவரு, பரம்பரை பரம்பரையா பெரிய வசதியான குடும்பம் அவரோடது. அவருக்கு உங்களைப் பிடிச்சிருக்கறது ரொம்ப பெரிய விஷயம் கங்கா… இத்தனை நாள் உங்க வாழ்க்கையைப் பத்தி நீங்க யோசிக்கலனாலும் இனியாவது யோசிச்சு நல்ல முடிவா எடுங்க” என்றவன் கங்காவின் பதிலை எதிர்பார்த்து பேச்சை நிறுத்தினான்.

 

ஆனால் அவள் பதில் பேசாமல் அமைதியாகவே இருக்க, அவனே தொடர்ந்து பேசினான்.

 

“அவ்வளோ பெரிய மனுஷன் என்கிட்ட கேட்கும்போது எப்படி மறுப்பு சொல்ல முடியும் கங்கா? இப்படியே தனியா நீங்களும் எத்தனை நாளைக்கு இருப்பீங்க? நீங்களே யோசிச்சு சொல்லுங்க” என்றான்.

 

அதுவரை பொறுமையாக கேட்டிருந்தவள், “ஓ உங்க முதலாளி கேட்டதால என்கிட்ட இப்படி கெஞ்சிட்டு இருக்கீங்களா மிஸ்டர்? இதுவே உங்க அருமை பெருமை வாய்ந்த முதலாளி உங்க பொண்டாட்டிய பிடிச்சிருக்கறதா சொல்லியிருந்தா, என்ன செஞ்சு இருப்பீங்க?” ஆத்திரமாகக் கேட்டுவிட,

 

“கங்கா… என் பொண்டாட்டி உன்னோட தங்கச்சி நினைவுல வச்சு வார்த்தைய அளந்து பேசு” கதிரவன் கோபமாக எச்சரித்தான்.

 

“உங்க மனைவிய சொன்னா மட்டும் கோபம் வருதா சார், நானும் ஒருத்தரக்கு மனைவி தான். அவர் என்கூட இல்லாம இருக்கலாம், அதனால நான் அவருக்கு பொண்டாட்டி இல்லன்னு ஆகாது. ஞாபகத்துல வச்சுக்கங்க” என்று விட்டு மேலும் அவனிடம் பேச்சு வளர்க்க விரும்பாமல், தன் ஸ்கூட்டியை உயிர்ப்பித்து வேகமெடுத்தாள்.

 

கதிரவன் அப்பட்டமான எரிச்சலைக் காட்டியது. கணவனிடம் விரைந்து வந்த கௌரி, “என்னாச்சுங்க?” ஆர்வமாக விசாரிக்க,

 

“நொன்ன ஆச்சு, உன் அக்கா இன்னும் அவளை அம்போனு விட்டு ஓடிபோன புருஷன் வருவான்னு காத்துட்டு இருக்காளாம்… போதுமா” என்றான் எரிச்சலாக.

 

“நான் தான் சொன்னேனே, அவ அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டானு, நீங்க தான் கேக்கல. முதலாளிக்காக சமாதானம் வேற பேச வந்துட்டீங்க… நான் தெரியாம தான் கேக்குறேன், அவருக்கு கங்காவ விட்டா வேற பொண்ணே கிடக்காதா என்ன?” கௌரி நொடிந்து கொண்டாள்.

 

தன் கணவன் இந்தவொரு விசயத்திற்காக கங்காவிடம், தழைந்து போய் பேசுவதில் இவளுக்கு சுத்தமாக விருப்பமில்லை.

 

“அடிபோடி, சாருக்கு புடிச்சிருக்கு அவ்வளவு தான், வேற பேசாத விடு” என்றவன் அத்தோடு பேச்சை நிறுத்திக் கொண்டான்.

 

வசதிவாய்ப்பு, ஊனத்தையும் பார்க்காமல், சங்கரன் எதற்கு கங்காவை திருமண செய்ய இத்தனை ஆர்வம் காட்டுகிறார் என்பதின் காரணம் அவனுக்கும் நன்றாகவே புரிந்திருந்தது. அதை அவனால் கௌரியிடம் விளக்கிச் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்ள முடியாது. எனவே நழுவிக்கொண்டான்.

 

ஆனாலும், தன் முதலாளியின் விருப்பத்தை நிறைவேற்ற வேறென்ன வழி என்று யோசித்தான். கங்கா மட்டும் சங்கரனுக்கு மனைவியாகிவிட்டால், அது கதிரவனுக்கு கொள்ளை லாபம் தானே. அந்த பேராசையே அவனை ஊக்கியது. 

 

***

 

நேற்று இரவு அம்மா, அப்பாவின் வற்புறுத்தல், இன்று காலையில் கதிரவன், கௌரியின் வற்புறுத்தல்… இந்த சூழ்நிலை கங்காவிற்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாய்.

 

யாரிடமாவது தன் மனவேதனையைச் சொல்லி அழுது தீர்த்துவிட்டால் மனபாரம் குறையுமா? என்று மனம் ஏங்கினாள்.  

 

தேங்கிய நீரில் படிந்திருக்கும் பாசியாய், எண்ணங்கள் தேங்கிய அவள் மனதிலும் வெறுமை படிந்து கிடந்தது.

 

‘தயவுசெய்து என்னை இப்படியே வாழ விடுங்களேன் நான் சாகும் வரை…’ யார் செவிகளையும் சேராமல் அவள் உள்ளம் ஓலமிட்டுக் கொண்டிருந்தது.

 

***

 

பெண் வருவாள்…

 

(மன்னிக்கவும் பிரண்ட்ஸ்… என்னால சொன்ன நாளைக்குள்ள பதிவுகளை தர இயலவில்லை. என்னால் முயன்றவரை முயற்சி செய்கிறேன் 🙏🙏🙏 அடுத்த பதிவு, அடுத்த ஞாயிறு அன்று தர முயற்சிக்கிறேன்.

 

தொடர்ந்து லைக்ஸ், கமெண்ட் தந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து தோழமைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏)