ஏன் பெண்ணென்று பிறந்தேன் 9

IMG-20211007-WA0009 (1)-ed36f8bb

ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 9

 

நேற்று இரவு அப்பாவின் வற்புறுத்தல், இன்று காலையில் கதிரவனின் பேச்சு‌ என, இந்த சூழ்நிலை கங்காவிற்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாய்.

 

யாரிடமாவது தன் மனவேதனையைச் சொல்லி அழுது தீர்த்துவிட்டால் மனபாரம் குறையுமா? என்று மனம் ஏங்கினாள்.  

 

தேங்கிய நீரில் படிந்திருக்கும் பாசியாய், ஆறா துயர நினைவுகளின் தேக்கமான அவள் மனதிலும் வெறுமையும் விரக்தியும் படிந்து கிடந்தது.

 

‘தயவுசெய்து என்னை இப்படியே வாழ விடுங்களேன் நான் சாகும் வரை…’

 

அந்த விரக்தியின் தகிப்பில், யார் செவிகளையும் சேராமல் அவள் உள்ளம் ஓலமிட்டுக் கொண்டிருந்தது.

 

தன் மனது இவ்வாறு பரிதவிக்கும் போது கங்கா சென்று சேரும் இடம் அறிவு இல்லம். இப்போதும் அங்கு தான் வந்திருந்தாள்.

 

இல்லத்திற்குள் நுழைந்தவளுக்கு அங்கிருந்த சூழ்நிலை வித்தியாசமாகப் பட்டது. எப்போதும் வெறிச்சோடி கிடக்கும் முன்புறத்தில் இப்போது வெளியாட்கள் நடமாட்டம் அதிகம் இருந்தது.  

 

அங்கேயே தயங்கி நின்றவளை, “கங்கா மா, வாங்க வாங்க” என்று கோவிந்தன் அண்ணா அழைக்க, அவளும் சிறு மென்னகை தந்து அவரிடம் வந்தாள்.

 

“ஏதாவது பிரச்சனையா கோவிந்தண்ணா, இவ்வளோ ஆளுங்க வந்து இருக்காங்க?” அவள் கேட்க,

 

“அட பிரச்சனை எதுவும் இல்லமா, நம்ம இல்லத்துல ஷூட்டிங் நடக்குது, நேத்து தான் ஸ்டார்ட் பண்ணாங்க.” என்று உற்சாகமாகச் சொன்னவர், 

 

“போன வாரம் ரெண்டு பேரு வந்து நம்ம இல்லத்தை சுத்தி பார்த்துட்டு போனாங்கல்ல, அவங்கதான் மா வந்திருக்காங்க. பெரிய ஐயா கூட இவ்வளோ சீக்கிரம் ஷூட்டிங் வைப்பாங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல. நேத்துல இருந்து நம்ம இல்லமே திருவிழா போல இல்ல இருக்கு…” கோவிந்தன் வளவளத்துக் கொண்டே போக, 

 

கங்கா அப்படியே உறைந்து நின்று விட்டாள், சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த கௌதமின் பார்வை அவள்மேல் அழுத்தமாய் பதிந்திருப்பதைக் கண்டு.

 

அவளுக்கு, ‘அய்யோ!’ என்றிருந்தது. சற்று ஆசுவாசம் தேடி அங்கு வந்தால், இங்கே தனக்கு முன்னால் அவன் நிற்கிறானே! என்றிருந்தது அவளுக்கு. 

 

ஒரே சமயத்தில் அனைத்து பக்கங்களில் இருந்தும் ஒன்றுபோல் மனஅழுத்தம் சேர, அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மூச்சு‌முட்டும் உணர்வு.

 

அன்று போல் அவன் அழுத்தப் பார்வையை இன்று நேராக எதிர்கொள்ளும் திடம் அவளிடம் இருக்கவில்லை. அவனை ஏறிட்ட அவள் கண்களில் கண்ணீர் தளும்பி வர, உதடுகள் அழுகையில் துடிக்க, கைகளால் தன் வாயைப் பொத்திக்கொண்டு எதிர்புறம் திரும்பி நடந்தாள்.

 

முதலிலேயே ரணப்பட்டு இருந்தவள், இப்போது அவன் முன்பு, உடைந்து போகும் பலவீனத்தின் விளிம்பில் இருந்தாள்.

 

கங்காவின் கலங்கிய முகத்தைப் பார்த்ததும் கௌதமின் நெற்றி தசைகள் சுருங்கின. ‘அன்று தன்னை பார்த்து செருக்கோடு நிமிர்ந்தவளா இவள்? இப்போது எதற்கு காரணமே இல்லாமல் அழுகை முகத்தைக் காட்டிவிட்டு போகிறாள்?’ இரண்டுமே அவனுக்கு முரணாகப் பட்டது. அவள் தன்னிடம் நடிக்கிறாளோ? என்று கருதிக்கொண்டான்.

 

எந்த வகுப்பறை‌ செல்ல வேண்டும் என்று விவரம் கேட்டறிந்து, வகுப்பறை உள்ளே நுழைந்தவளை அங்கிருந்த பிள்ளைகள் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி அசைத்து, உற்சாகமாக வரவேற்றனர்.

 

முயன்று தன் முகத்தில் புன்னகையை வரவைத்து தேக்கி பிடித்துக் கொண்டவள், அன்றைக்கான தன்னம்பிக்கை கதையை சுவாரஸ்யம் சேர்ந்து அவர்களுக்குச் சொல்ல ஆரம்பித்தாள். அவளுக்கும் இப்போது அந்த கதையின் சாரம் தேவையாக இருந்தது.

 

தன் வாழ்வில் எல்லாவற்றையும் இழந்த ஒருவன், விடாமுயற்சி கொண்டு மீண்டு எழுந்து வெற்றி அடைந்த ஒருவனின் கதை அது.

 

முக்கால் மணிநேரம் வகுப்பெடுத்து முடித்தவள், அந்த வகுப்பின் சூழ்நிலையில் தன்னையும் ஓரளவு மீட்டு கொண்டு, பிள்ளைகளிடம் விடைபெற்று வெளியே வந்தாள். 

 

இன்று முழுவதும் இங்கிருக்கும் குழந்தைகளுடன் சற்று இளைப்பாரும் எண்ணத்தில் தான், வேதா நிலையத்தின் பொறுப்பை சாயாவிடம் ஒப்படைத்து வந்திருந்தாள். ஆனால், அவன் இருக்கும் இந்த இடத்தில் அவளால் எங்ஙனம் இளைப்பாற முடியும்? 

 

அவசர வேலை இருப்பதாக இல்லத்தின் பொறுப்பாளரிடம் சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியே நடந்தாள். 

 

“கங்கா…!” வெளிவாயில் நோக்கி தளர்ந்து நடந்தவளை, கௌதமின் குரல் நிறுத்தியது.

 

அங்கே வேப்ப மரத்தடியில் நிறுத்தப்பட்டு இருந்த காரின் மேல் சாய்ந்து நின்றபடி, அவளை பார்த்திருந்தான் கௌதம்.

 

அவன் அழைப்பு, அழுத்தமான அந்த குரல், கங்காவின் அடிவேரை அசைத்துப் பார்த்தது. காரம்பட்டது போல அவள் கண்கள் மறுபடி கலங்கி வர, ‘அய்யோ’ என்று தன்னையே நொந்து கொண்டாள் அவள்.

 

தன் அழைப்புக்கு நின்றவள், திரும்பி தன்னிடம் வராமல் அப்படியே நின்றிருப்பது அவன் கோபத்தைக் கிளறியது.

 

“கங்கா…” இப்போதும் மேலும் அழுத்தம் கூட்டி அவளை அழைத்தான். அவள் ஒரு பெருமூச்சுடன் அவன்முன் வந்து நின்றாள்.

 

ஏதோ நோயுற்றவள் போன்ற அவளின் தோற்றம், அவன் பார்வையைக் கூர்மையாக்கியது. 

 

உள்ளுக்குள் உடைந்துபோய் சோர்ந்து போயிருந்த கங்கா, அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. பார்வையைத் தாழ்த்தியபடி அமைதியாக நின்றிருந்தாள். 

 

“நீ நல்லா இருக்கியா?” நிச்சயம் அவன் விசாரிப்பில் அக்கறை இருக்கவில்லை. 

 

அவளும் நிமிரவில்லை. பதில் தரவுமில்லை.

 

“ம்ம் பார்க்க… முன்னவிட இப்ப நல்லாவே இருக்கற மாதிரி தான் தெரியுது” நக்கலாய் அவனே தன் கேள்விக்கு பதிலும் சொன்னவன், “உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” ஏதோபோல கேட்டான். அவள் கழுத்தில் இருந்த பொன் தாலி மீது பார்வை பதித்து.

 

கங்கா கண்களை அழுத்தமூடி திறந்தாள். அவள் இமை தாண்டி கசிந்த ஒற்றை கண்ணீர் துளி, கீழே மண்ணில் பட்டு தெறித்தது.

 

அவளின் மௌனம் அவனை அவமதிப்பதாக தோன்ற, பற்களை நறநறத்தபடி, “எத்தனை குழந்தைங்க?” அடுத்த கேள்வி அம்பை எய்தான். 

 

அது குறி தப்பாமல் சரியாக தாக்கி, அவள் நெஞ்சின் வலியைக் கூட்டவும் செய்தது.

 

அதற்குமேல் தங்கமாட்டாமல், மெல்ல நிமிர்ந்து, அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தவளின் கண்கள் ஏனோ மங்கலானது. 

 

எதிரில் நிற்பவனின் உருவம் எங்கோ தூரமாய் விலகிப்போவது போல் தெரிய, வேரற்ற மரமாக, தரையில் நினைவிழந்து சரிந்தாள் கங்கா.

 

“ஏய்…” திடீரென்று அவள் மயங்கி விழவும், அவன் உள்ளம் பதறத் தான் செய்தது.

 

“அச்சோ, கங்காமாவுக்கு என்னாச்சு…?” யாரோ அவள் விழுந்ததைப் பார்த்து குரல் கொடுக்க, நாலைந்து பேர் பெண்களும் ஆண்களுமாக அவளிடம் ஓடிவந்தனர்.

 

அதற்குள் தன் காரிலிருந்த தண்ணீர் பாட்டலை எடுத்து திறந்து, அவள் முகத்தில் தெளித்து, அவளை எழுப்ப முயன்றான் கௌதம்.

 

ஆனால் அவளிடம் எந்த அசைவும் இருக்கவில்லை. அவனுக்குள் நிஜமாகவே பயம் பரவியது. அவளை தொட்டு தூக்கவும் அவனுக்குள் ஏதோவொரு தயக்கம் தடுத்தது. 

 

அதற்குள் வந்தவர்கள் கங்காவின் முகத்தை தட்டி எழுப்ப முயன்று முடியாமல், அங்கிருந்த வீல் சேரை தள்ளி வந்து அவளை தூக்கி அதில் அமர் வைத்து உள்ளே தள்ளிச் சென்றனர். 

 

இத்தனையையும் ஒரு பார்வையாளனாய் பார்த்தபடி, தெளிவற்று நின்றிருந்தான் கௌதம்.

 

ஒருமணிநேரம் கழித்து,

 

கங்கா கண்விழிக்கும் போது, அவள் எதிரில் இந்திரா நின்றிருந்தார். அறிவு இல்லத்தின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர் அவர்.

 

“மேடம்…” சோர்வாக அழைத்து எழுந்துக்கொள்ள முயன்றவளின் உடல் தோய்ந்து போய் இருந்தது. வாய்க்குள் குமட்டிக் கொண்டு வரும் உணர்வு வேறு. இருகைகளால் வாயைப் பொத்தி கொண்டு அவள் எழ, அவர் புரிந்தவராக, அந்த ஓய்வறையில் இருந்த குளியறை கதவைக் கைகாட்டினார்.

 

வயிற்றைப்பிரட்டிக் கொண்டு வாந்தி எடுத்தவளுக்கு, கொஞ்சம் நஞ்சம் இருந்த வலுவும் மொத்தமாக வடிந்த உணர்வு. அவளை கேளாமல் கண்கள் பொலபொலவெனக் கண்ணீர் வடித்தது. முகத்தை அழுத்திக் கழுவிக்கொண்டு வெளியே வந்து, அந்த கட்டிலில் மறுபடி சோர்ந்து போய் அமர்ந்தாள்.

 

“என்னாச்சு‌ கங்கா உனக்கு? என்ன பைத்தியக்காரத்தனம் இது? உன்ன தைரியமான பொண்ணுன்னு நினச்சேன், உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல” இந்திரா படபடவென அவளிடம் பொறிய, கங்கா புரியாமல் அவரைப் பார்த்தாள்.

 

“காலையில இருந்து எதுவுமே சாப்பிடலையா நீ? மென்சஸ் டைம்ல இப்படித்தான் பட்டினி கிடப்பீயா? அதோட உனக்கு பீவர் வேற இருந்திருக்கு, அதைக்கூட கவனிக்காம…” அதற்குமேல் பேசாமல், சலிப்பாக தலையை அசைத்தார்.

 

அப்போதுதான் கௌதம் அந்த அறையை நெருங்கி இருந்தான். இந்திரா பேசுவது அவன் செவிகளில் தெளிவாக விழ, அப்படியே தேங்கி நின்று விட்டான்.

 

“சாரி மேடம், எனக்கு பீவர் இருக்கறதை நான் கவனிக்கல. மார்னிங்கல இருந்து டயர்டா இருந்தது அதுக்காக தான் போல” என்றாள் கங்கா, ஓய்ந்துபோனக் குரலில்.

 

“இது நல்லதில்ல கங்கா, உன் உடல்நிலையைக் கூட கவனிக்காம… நல்லவேளை இங்கேயே மயக்கம்போட்டு விழுந்த, இதுவே வெளியே எங்காவது விழுந்திருந்தா…!? இனிமேலாவது கொஞ்சம் கவனமா இருக்க பாரு” என்று கண்டித்துவிட்டு, எலுமிச்சை சாறு நிரம்பிய தம்ளரை அவளிடம் நீட்டினார்.

 

அதை நன்றியோடு பெற்றுக் கொண்டவள், “சாரி மேடம், உங்களுக்கு தொந்தரவு கொடுத்துட்டேன்” என்று மன்னிப்பையும் வேண்டிக்கொண்டாள்.

 

“பரவால்ல, ஆனா இப்ப உன் நிலைமைய பார்த்தா, உன் வீட்ல உன்ன யாரும் அக்கறையா பார்த்துக்கறவங்க இல்லனு படுது. அப்படி ஏதாவது உன் வீட்ல பிரச்சனைனா, நீ இந்த இல்லத்துக்கே வந்துடலாம்… எல்லாரும் இருந்தும் அனாதையா வாழுறவங்களுக்கும் எங்க இல்லத்துல இடமுண்டு!” என்று சொல்லிவிட்டு சென்றவரை, கங்காவின் கலங்கிய பார்வை அதிர்வோடு பின்தொடர்ந்தது.

 

‘அப்ப எல்லாரும் இருந்தும் நான் அனாதையா?’ அவளுள் எழுந்த கேள்வியே அவளை நடுங்கச் செய்வதாய்.

 

அவளுக்குள் எழுந்த அதே கேள்வி, அறைக்கு வெளியே நின்ற அவனுக்குள்ளும் எழுந்தது. 

 

கண்களில் கண்ணீர் வழிய உடைந்து போய் அமர்ந்திருந்தவளைப் பார்க்க, அவனுக்குள் வலியோடு கூடிய அழுத்தம். மேலும் அங்கே நிற்காமல் திரும்பி நடந்தான் கௌதம்.

 

அன்றய விபத்தில் சிக்கி, மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்த கங்காவின் தோற்றம், அவன் நினைவலையில் அலைந்தெழுந்து காட்சியானது.

 

அன்றும் இப்படித்தான் ஓய்ந்து உடைந்து போய், காலில் பெரிய கட்டோடு படுக்கையில் கிடந்தாள் அவள்.

 

***

 

விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் இருந்த பல் நோக்கு தனியார் மருத்துவமனையில் கங்காவை அனுமதித்திருந்தான் கௌதம். அந்த மருத்துவமனையின் முதன்மை மருத்துவர், அவனுடைய தந்தைக்கு நன்றாக தெரிந்தவர் என்பதால், போலீஸ், விசாரணை என்ற எந்த கெடுபிடியும் இன்றி கங்காவை அட்மிட் செய்து, உடனே சிகிச்சையும் தொடங்கி இருந்தனர்.

 

கௌதம் அவரிடம் கேட்டதெல்லாம் ஒன்று தான், “ப்ளீஸ் அங்கிள், எப்படியாவது அந்த பொண்ணை காப்பாத்திடுங்க” என்று கலங்கி நின்றவனைப் பார்க்க அவருக்கு பாவமாக இருந்தாலும், கோபமும் வந்தது.

 

“ஏன் கௌதம் இவ்வளோ‌ கேர்லஸ்னஸ் உனக்கு? ஹேங்கோவர் இருக்கும்போது உன்ன யாரு ட்ரைவ் பண்ண சொன்னது முட்டாள்… அதுலயும் அவ்வளவு ஸ்பீட் அவசியமா உனக்கு…?” என்று அவனை லெப்ட் அன்ட் ரைட் வாங்கி விட்டார். 

 

எல்லா திட்டுகளையும் பொறுமையாக கேட்டுக்கொண்டவனுக்குள், ‘கங்கா பிழைத்துவிட வேண்டும், தன்னால் ஓர் உயிர் போகக்கூடாது’ என்ற வேண்டுதல் மட்டுமே.

 

மாலைவரை அங்கேயே தவிப்புடன் உட்கார்ந்து இருந்தவன், “கங்காவின் உயிருக்கு ஆபத்தில்லை” என மருத்துவர் சொன்ன பிறகுதான் நிம்மதியாகி வீட்டிற்கு கிளம்பினான்.

 

விபத்தைப் பற்றி கேள்விப்பட்டதும் அதிர்ந்து கலங்கிபோயிருந்த திலோதமா, கௌதம் வந்ததும் அவனை

தலை முதல்‌ கால் வரை பரிதவிப்பாகப் பார்வையால் ஆராய்ந்தார். 

 

“எனக்கு‌ ஒன்னுமில்ல மாம்… பட் அந்த பொண்ணுக்கு தான்… ரொம்ப பிளீடிங் ஆகிடுச்சு‌ மாம்… கார் ஃபுல்லா ரத்தம்…” தப்பு செய்த பிள்ளையாக‌ கலங்கி நின்ற மகனை அணைத்து ஆறுதல்படுத்தி, தன் மடிசாய்த்துக் கொண்டார் திலோதமா. 

 

மனோகர், “இந்த விசயத்தை இதோட விட்டுடு கௌதம், கேஸ் போலீஸ் வரை போகாம நான் பார்த்துக்கிறேன்” என்று தைரியம் சொல்லி, மகனின் தோளைத் தட்டிவிட்டு நகர்ந்தார்.

 

பெற்றவர்கள் இருவருக்கும் தங்கள் ஒற்றை மகனின் நலமே பெரிதாகப்பட்டது. அந்த விபத்து போலீஸ் வரை செல்லாமல் இருக்க, என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தார் மனோகர்.

 

அவன் அம்மா, அப்பாவின் ஆற்றுதலும் தேற்றுதலும் கூட அவனை அமைதிப்படுத்தவில்லை. உண்ணவும் முடியவில்லை உறங்கவும் முடியவில்லை. அவன் பொழுதுபோக்குகள் எதிலும் மனம் நிலைக்காமல், ஒருவித நெருடலுடனே வலம் வந்தான்.

 

இரண்டு நாட்கள் பொறுத்தவன், மூன்றாவது நாளே கங்காவை அனுமதித்து இருக்கும் மருத்துவமனை அறை வாசலில் நின்றிருந்தான்.

 

கங்காவை நல்ல நிலையில் பார்த்து விட்டாலாவது தன் குற்றவுணர்ச்சி குறையுமா? என்ற நப்பாசையில், அறை கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

 

அங்கே அவள் கட்டிலில் சாய்ந்த வாக்கில் அமர வைக்கப்பட்டிருந்தாள். அவளின் வெளிரிய முகமும், உலர்ந்த கண்களும் பார்க்க, அவனுக்கு மேலும் கவலையானது.

 

கங்காவின் அருகில் பள்ளி சிறுமி ஒருத்தி மட்டும் அமர்ந்து, அவளின் கைபற்றி அழுது தேம்பியபடி பேசிக் கொண்டிருந்தாள்.

 

“நான் ரொம்ப பயந்துட்டேன் க்கா, இப்பவும் ரொம்ப வலிக்குதா?” அந்த சிறுமியின் பார்வை பெரிய கட்டு போடப்பட்டிருந்த கங்காவின் கால் மீது வேதனையாக படிந்து மீண்டது.

 

“இப்ப பரவால்ல மகா… வலி கொஞ்சம் குறைஞ்சிருக்கு.” என்று தங்கையை சமாதானம் செய்தவளின் குரலும் முகமும் அவளின் வலியையும் உயிர் வேதனையையும் அப்பட்டமாக காட்டியது.

 

“ஏன் க்கா இப்படி ஆச்சு? நீ கொஞ்சம் பார்த்து வந்திருக்க கூடாதா க்கா?” மகா அழுதபடியே கேட்க, அந்த கேள்வியில் கங்காவிற்கு அலுப்பு தட்டி போனது.

 

‘நீ கொஞ்சம் பார்த்து வந்திருக்க கூடாதா கங்கா?’ இதே கேள்வியைத் தான் அவள் அம்மா ஆற்றாமையாகக் கேட்டிருந்தார்.

 

‘நீ பார்த்து வந்திருக்கலாம் இல்ல?’ இதே கேள்வியைத் தான் அவள் அப்பா ஆத்திரமாகக் கேட்டிருந்தார்.

 

‘நீ கொஞ்சம் பார்த்து வந்திருக்கலாம் இல்ல கங்கா?’ இதே கேள்வியைத் தான் அவளை மணந்து கொள்ள காத்திருப்பவனும் அக்கறையாகக் கேட்டிருந்தான்.

 

இப்போது அதே கேள்வியைத் தான் அவள் தங்கையும் பரிதவிப்பாகக் கேட்கிறாள்!

 

‘நான் பார்த்து தான வந்தேன்…!’ என்று நினைக்கும் போதே அவளுக்கு அழுகை தான் வந்தது.

 

அந்த ஒரு நொடி அசம்பாவிதத்தில் அவள் அனுபவிக்கும் வலியை, வேதனையை வெறும் வார்த்தைகள் கொண்டு விளக்கத் தெரியவில்லை அவளுக்கு. அப்படி விளக்கினாலும் அவள் வலி குறையப்போவதும் இல்லை.

 

தங்கையின் கேள்விக்கு பதிலின்றி கங்கா மௌனமாக, 

“உன் அக்கா பார்த்து தான் வந்தாங்க… அவங்கள கவனிக்காம வந்தவன் நான் தான்” என்று கௌதம், மகாவின் கேள்விக்கு பதில் தந்தபடி உள்ளே வந்தான்.

 

உள்ளே வந்த புதியவனை பெண்கள் இருவரும் குழப்பமாக பார்த்தனர். 

 

“யாரு நீங்க?” மகா தான் அவனிடம் கேள்வியை வீசினாள்.

 

அச்சிறு பெண்ணை வாஞ்சையாகப் பார்த்தவன், “நான் கௌதம் கைலாஷ்… உன் அக்காவோட இந்த நிலைக்கு காரணம் நான் தான்…” சங்கடமாக அவன் சொல்லவும், மகாலட்சுமியின் சின்ன முகத்தில் திகுதிகுவென கோபம் எரிந்தது.

 

“படுபாவி, ஒழுங்கா காரோட்ட தெரியாதா உனக்கு? நீ மோதறத்துக்கு என் அக்கா தான் கிடைச்சாளா? உன்னால காலொடஞ்சி கிடக்கிறா பாரு” அவள் அழுகையும் ஆத்திரமுமாக அவனை திட்ட, கௌதம் அவர்கள் முன்பு தலை தாழ்த்திக் கொண்டான். 

 

“மகா, அமைதியா இரு” என்று தங்கையை அடக்கியவள், அவனைப் பார்த்து, “என்னை அங்கேயே சாகட்டும்னு விட்டுட்டு போகாம… காப்பாத்தனது ரொம்ப நன்றி சார்… இனிமேலாவது அவ்வளோ வேகமா கார் ஓட்டாதீங்க… எனக்கு கொடுத்த வலிய வேற யாருக்கும் கொடுத்துடாதீங்க சார்… ப்ளீஸ்” என்று கெஞ்சலோடு முடிக்க, அவன் தொண்டை அடைத்தது.

 

“சாரி…” என்றான் ஒற்றை வார்த்தையாய். அவளிடம் வேறு என்ன சொல்லி மன்னிப்பை வேண்டுவது என்றும் புரியவில்லை அவனுக்கு.

 

கங்கா அமைதியாக இருக்க, அவன், ‘சாரி’ மகாவுக்கு கோபத்தைக் கிளப்பியது.

 

“சாரி சொன்னா மட்டும் ஆச்சா? அடுத்த வாரம் எங்க கங்காவுக்கு கல்யாணம்… அது தெரியுமா உனக்கு? இப்படி என் அக்காவ காலொடச்சி படுக்கைல விழ வச்சி இருக்கியே நீ நல்லா இருப்பியா?” சின்னவள் துள்ளிக் கொண்டு சண்டைக்கு வர, அவன் சற்று மிரண்டுதான் போனான்.

 

கங்கா தங்கையின் கையைப் பிடித்து இழுத்து அவளை அமைதிப்படுத்த முயன்றாள்.

 

அந்த அக்கா, தங்கைகளை சற்றே ஆர்வமாக கவனித்து நின்றிருந்தான் கௌதம்.

 

மகாவின் இந்த கொந்தளிப்பு அவன் முகத்தில் தெளிவை தந்தது. அவள் இன்னும் சற்று வளர்த்தியாக இருந்திருந்தால், இந்நேரம் தன் சட்டை காலரை பிடித்து உலுக்கி இருப்பாள் என்று நினைக்க, அவனிதழில் மெல்ல புன்னகையும் எட்டிப் பார்த்தது.

 

சின்ன பெண் என்றாலும் மகாவிடம் இருந்த தெளிவும் தைரியமும் கங்காவிடம்‌ இருக்கவில்லை. அவளின் முகமும் பார்வையும் தயக்கத்தையும் பயத்தையும் தான் வெளிப் படுத்தியது. 

 

கங்காவும் பெரிய பெண்ணாக தெரியவில்லை. இருபதின் தொடக்கத்தில் தான் இருந்தாள். அவளின் ஒட்டிய உடல்வாகு அவளை இன்னும் சிறிய பெண்ணாகத்தான் காட்டியது.

 

‘ச்சே பாவம், இவளை போய் காயப்படுத்தி விட்டேனே’ என்று தனக்குள் நொந்து கொண்டான். 

 

அதேநேரம் அந்த அறைக்குள் நுழைந்த மாடசாமி அவனை சந்தேகமாகப் பார்த்தார்.

 

மகா, “அப்பா இவன் தான் அக்காவ ஆக்ஸிடென்ட் பண்ணது, இப்ப வந்து சாரி கேக்கறான் பாரு ப்பா” என்று அழுகை குரலில் கத்தி சொன்னாள்.

 

மகள் சொன்னைதைக் கேட்டதும் மாடசாமியின் கண்கள் பளிச்சிட்டன.

 

“நான் இவர்கூட பேசிக்கிறேன், அம்மா வெளியே சாப்பாடு எடுத்துட்டு வரா பாரு, நீ போய் இட்டுக்குனு வா போ குட்டி” என்று சின்ன மகளை விரட்டினார். அவளும் சரியென்று சென்றாள்.

 

‘இவர் பங்குக்கு என்ன திட்ட போறாரோ?’ என்று கௌதம் பார்த்து நிற்க, மாடசாமி கேட்ட முதல் கேள்விலேயே அவன் முகம் மாறிப்போனது. கூடவே கங்காவின் முகமும்.

 

“நேத்து தான் உங்க அப்பன், போலீஸுக்கு போவ கூடாதுன்னு ஏதோ காசை காட்டிட்டு போனாரு. அம்புட்டு காசும் ஹாஸ்பிடல் செலவுக்கே போதல… இப்ப நீ வந்துகிற மேல கொடுத்துட்டு போறது” என்று கேட்ட தந்தையை கங்கா திகைத்துப் பார்க்க, கௌதம் யோசனையுடன் பார்த்தான்.

 

“இந்த ஹாஸ்பிடல்ல டிரீட்மெண்ட்க்கு இதுவரைக்கும் எவ்வளவு செலவாகி இருக்குனு உங்களுக்கு தெரியுமா?” கௌதம் கேட்க, மாடசாமி சட்டென பதிலின்றி திருதிருத்தார்

 

“அது தெரிஞ்சா நீங்க மயக்கம் போட்டு விழுந்துடுவீங்க…” என்றவன், “உங்க பொண்ணோட இந்த நிலைமைக்கு நான் காரணமானதால தான், டிரீட்மெண்ட் செலவு மொத்தமும் நான் ஏத்துட்டு இருக்கேன். அதனால இங்க யாரும் உங்ககிட்ட ஒரு பைசா கூட கேட்டிருக்க மாட்டாங்க… 

 

அதோட எங்கப்பா உங்களுக்கு கொடுத்த அமௌண்ட் எவ்வளவுன்னு எனக்கு தெரியும். நீங்கல்லாம் ஒருவருசம் உக்கார்ந்து சாப்பிட்டா தான். அந்த பணத்தை தின்னு செரிக்க முடியும்! சும்மா உளறாதீங்க” என்றான் அழுத்தமாய்.

 

“நல்லா இருந்த என் பொண்ண அடிச்சு போட்டு நல்லாத்தான் பேசுற நியாயம்?” மாடசாமி எகிற,

 

“இப்ப என்ன, உங்களுக்கு பணம் வேணும் அவ்வளவு தானே?” கௌதம் எரிச்சலாகக் கேட்க, 

 

“என் பொண்ணு நிலைமைக்கு நீ எவ்ளோ கொட்டி குடுத்தாலும் தீராது பா” என்றார் மாடசாமி சற்றும் அலட்டிக்கொள்ளாமல்.

 

தன் கண் முன்னாலேயே தன்னை வைத்து பேரம் நடக்க, கங்கா துடிதுடித்து போனாள். “அப்பா… தயவுசெஞ்சு என்னோட வலிய காசாக்க பாக்காதீங்க ப்பா…” அவள் அழுதுகொண்டே சொல்ல, “ஏய் நீ வாய மூடு” அவர் அதட்டல் விட, அவள் வாய்பொத்தி கொண்டாள்.

 

“நீ சொல்லு சார், எவ்வளோ குடுப்ப?” அவர் சற்றும் லஜ்ஜையின்றி கேட்க, அங்கே வாய்பொத்தி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தவளைப் பார்க்க, கௌதமுக்கு பாவமாகத் தான் இருந்தது.

 

“உங்களுக்கு எவ்ளோ வேணுமோ தரேன், வெளியே போய் பேசலாம் வாங்க” என்று அங்கிருந்து அகன்றான். அவரும் அவர் பின்னாலேயே அகன்றார்.

 

அன்று தான் முதல் முறையாக, உடலால் மட்டுமின்றி மனதாலும் உடைந்து போனாள் கங்கா…

 

***

 

பெண் வருவாள்…