ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 10
அன்றைக்கு பிறகு கங்காவின் பக்கமே கௌதம் போகவில்லை. அவனும் தன் அன்றாட வேலை, பொழுதுபோக்குகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.
ஆனாலும் ஒரு விசயம் மட்டும் அவனிடம் மாறியிருந்தது. அது அவனது வேகம்! ஆம் இப்போதெல்லாம் அவனது கார் சாலையில் பறப்பதில்லை. ஊர்ந்து தான் சென்றது.
அவன் வாழ்க்கையில் வேகத்தடையாக கங்கா வந்திருந்தாள். அவனும் இப்போதெல்லாம் மிதமான வேகத்திற்குப் பழகி இருந்தான்.
சில வாரங்கள் கழித்து, கங்காவை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்போவதாக அவனுக்கு தகவல் வர, மனம் கேளாமல் அவளைப் பார்க்க விரைந்தான்.
கௌதம் அறைக்குள் நுழையும்போது, அங்கே கங்காவும், அவளுடைய அம்மா மல்லிகாவும் கிளம்புவதற்குத் தயாராக இருந்தனர்.
“யாரு தம்பி நீங்க?” மல்லிகா அவனை விசாரிக்க, கௌதமின் பார்வை நேராக கங்கா மீது பதிந்தது.
அன்று பார்த்ததைவிட இப்போது அவள் முகத்தில் சற்று தெளிவு மீண்டிருப்பதைப் பார்க்க, அவனுக்குள் சிறு நிம்மதி.
“ம்மா, அவர் தான்… அந்த கார்காரரு” கங்கா அம்மாவிடம் சிறு குரலாக சொன்னது, அவன் காதிலும் விழத்தான் செய்தது.
‘அவன் இங்கு ஏன் வந்திருக்கிறான்?’ என்று மல்லிகா குழப்பமாக அவனைப் பார்த்தார்.
கௌதம் அவரைக் கண்டு கொள்வதாக இல்லை. “எப்படி இருக்க கங்கா?” அவள் பெயரில் சற்று அழுத்தம் தந்து விசாரித்தான். தன் பெயரை அவள் நினைவு வைத்துக் கொள்ளவில்லை என்ற எண்ணம் அவனுக்குள்.
கங்காவிடம் வாய் வார்த்தையாக பதிலில்லை. தலையை மட்டும் ஆமோதிப்பாக அசைத்தாள்.
அதற்குமேல் அவளிடம் என்ன கேட்பதென்று அவனுக்கு தெரியவில்லை. சற்று திணறியவன், “ஹெல்த்த பார்த்துக்கோங்க, ஏதாவது உதவி தேவப்பட்டா என்னை கான்டாக்ட் பண்ணுங்க” என்று தன் விசிட்டிங் கார்டை அவளிடம் நீட்டினான்.
அதை வாங்கிக்கொள்ள தயங்கி, கங்கா தன் அம்மாவைப் பார்க்க, அவர் தலையசைத்ததும் பெற்றுக் கொண்டாள்.
“தேங்க்ஸ்” அவளுக்கே கேட்காத சிறு குரலில் நன்றியும் சொன்னாள்.
“ஒன்ஸ் அகைன் சாரி… வேற எப்படி உன்கிட்ட மன்னிப்பு கேட்கறதுன்னு தெரியல.” என்றவன், “இப்பல்லாம் நான் ஓவர் ஸ்பீட் எடுக்கறதில்லை, கவனமா தான் டிரைவ் பண்றேன்.” என்று கூடுதலாகச் சொன்னான்.
அவன் கடைசியாகச் சொன்னதில், கங்காவின் கண்கள் அவனை நோக்கி நிமிர்ந்தது.
“நல்லது சார்… அப்பா இப்ப வந்திடுவாரு… நீங்க கிளம்பிடுங்க சார், இல்லன்னா… இப்பவும் உங்ககிட்ட காசு கேப்பாரு” கங்கா கன்றிபோன முகத்துடன் சொல்ல,
“ஓ… ஓகே, டேக் கேர்” என்று விட்டு அவன் வெளியே சென்றான்.
அவன் நகரும் வரை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த மல்லிகா, “கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு? அவன்கிட்ட போய் அப்பா பத்தி தப்பா பேசுற?” என்று மகளை கடிந்தார்.
“நான் உண்மைய தான ம்மா சொன்னேன்… ஒருவேளை இந்த ஆக்ஸிடென்ட்ல நான் செத்து போயிருந்தா கூட அப்பா சந்தோஷப்பட்டிருப்பாரு இல்லமா? அவருக்கு பெரிய தொகையா லம்பா கையில கிடைச்சிருக்கும் இல்லமா?”
கங்காவின் அந்த ஆதங்கமான கேள்வி, வெளியே வந்த கௌதமின் காதில் தெளிவாகவே விழுந்தது. அந்த அப்பாவி பெண் மீது அவனுக்கு பரிதாபம் எழ, மேலும் அங்கே நிற்காமல் நடந்தான்.
***
அன்றே, அப்போதே கங்காவை அவன் கடந்து விட்டதாகத் தான் நினைத்தான் கௌதம்.
தான் செய்த தவறுக்கு அவள் உயிரைக் காப்பாற்றியாயிற்று என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.
ஆனால், இத்தனை வருடங்கள் கடந்தும் அவளைக் கடக்க முடியாமல் தான் தவித்துக் கொண்டிருக்கிறான்.
படப்பிடிப்பு களத்தில் அமர்ந்திருந்த கௌதமின் மனம் தெளிவற்று குழம்பி போய் இருந்தது.
அவன் முன்பு பார்த்த கங்காவின் நிலைக்கும், இன்று பார்க்கும் அவளின் நிலைக்கும் பெரியதாக வித்தியாசம் இருப்பதாகத் தோன்றவில்லை அவனுக்கு.
மனதில் மேலும் மேலும் அவளைப் பற்றிய நினைவுகளே சுழல, தலையை வேகமாக குலுக்கிக் கொண்டவன், தன் கவனத்தை படப்பிடிப்பில் செலுத்த முயன்றான்.
இந்த தலைவலிக்குத் தான் இந்த இடத்தின் படப்பிடிப்பிற்கு வர அவன் முதலில் யோசித்தான். தனக்கு பதிலாக விஜயை அனுப்பவும் நினைத்தான். ஆனால் படத்தின் தயாரிப்பாளராக ஒருமுறையாவது இவன் நேரில் வந்து பார்த்தால்தான் அவனுக்கு திருப்தி. அதோடு கௌதம் இங்கு வர முக்கிய காரணம் தீப்தி!
ஆம், பிரபல மாடல் அழகியான தீப்தி, இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறாள். அவளுக்காக தான் கௌதம் வரவேண்டியதாக போனது. ஆனாலும் கங்காவை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அவனுக்குள் ஏதோவொரு தாக்கத்தை ஏற்படுத்துவதாய்.
படப்பிடிப்பு இலகுவாக நடந்து கொண்டிருந்தது. வளர்ந்து வரும் கதாநாயகன் சித்தார்த்தை படத்தின் நாயகனாக தேர்ந்தெடுத்து இருந்தனர். தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்துவரும் சித்தார்த், முன்னணி கதாநாயகன் அந்தஸ்த்தை எட்டிப்பிடிக்க இந்த படம் சிறந்த வாய்ப்பாக இருக்கும் அவனுக்கு.
முதலில் தன் மாமன் மகளை இந்த படத்தில் தேர்ந்தெடுக்க, கௌதமுக்கு தயக்கம் இருந்தது தான். ஆனாலும் கதையைக் கேட்டதில் இருந்து தீப்தி அவனை வெகுவாக நச்சரிக்க ஆரம்பித்திருந்தாள்.
ஹுரோவுக்கு நிகரான ஹீரோயின் கதாபாத்திரமும் அமைந்த கதையம்சம் கொண்ட திரைக்கதை என்பதால், தீப்திக்கு அந்த வாய்ப்பை இழக்க மனம் வரவில்லை.
அவள் அத்தனை நச்சரித்த பின்னும் கூட, அவளை ஆடிஷனில் கலந்து கொள்ள செய்து, படத்தின் இயக்குநருக்கு அவள் நடிப்பு பிடித்த பிறகே, அவளை கதாநாயகியாக ஏற்றுக்கொண்டு இருந்தான் கௌதம்.
ஒரேயொரு முதல் வாய்ப்புக்காக தன்னை அத்தனை சுத்தலில் விட்டதால், தீப்திக்கு கௌதம் மீது அத்தனை கோபம். இங்கே வந்த பிறகும் அவனிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு இருந்தாள்.
அவளின் சிறுபிள்ளைத்தனமான கோபத்தைக் கண்டவனின் முகத்தில் மெல்லிய புன்னகை சாயல்.
‘இவளை வேற சமாதானப்படுத்தணுமா?’ தனக்குள் சுகமாக அலுத்துக் கொண்டான் கௌதம்.
அவனுக்கு எப்போதுமே தீப்தி ஸ்பெஷல் தான். அவள் என்ன செய்தாலும் அவனால் அவளை வெறுக்க முடியாது. அவள் என்ன கேட்டாலும் மறுக்கவும் முடியாது. ஆனால், அவள் தன்னைக் கேட்டு நிற்கும்போது, அவனுக்குள் ஒரு தயக்கம். ஏதோ வெளிப்படுத்த தெரியாத ஒருவித ஒதுக்கம் அவனிடம் ஒட்டிக் கொண்டது.
கௌதமுக்கு தீப்தியை மிகவும் பிடிக்கும். அவளுக்கு அவனை எந்தளவு பிடிக்குமென்றும் அவனுக்கு தெரியும். ஆனால், அவள்மீது காதல் உண்டா என்று கேட்டால் அவனிடம் பதிலில்லை.
பெண்களோடு பழகுவது அவனுக்கு புதியது ஒன்றுமில்லை. கேளிக்கை விடுதிகளில் இரவு முழுவதும் ஆட்டம் போட்டவனுக்கு, போதையில் தள்ளாடி அவன்மேல் விழும் பெண்களைத் தவிர்க்க முடிந்ததில்லை. அப்போதெல்லாம் இவனும் அதே போதையின் தள்ளாட்டத்தில் தான் இருந்தான். ஆனாலும் எந்த சூழலிலும் எல்லைமீறியதாக அவனுக்கு நினைவில்லை. அது அவன் மனக்கட்டுப்பாட்டை சார்ந்த விசயம்.
அதியசயமாக அவன் வாழ்க்கையில் இதுவரை அவனுக்கு யார்மீதும் காதல் எழவில்லை. அப்போதும், இப்போதும் கூட அவனுக்கு காதல் என்ற உறவின் மீது அத்தனை நம்பிக்கை வந்திருக்கவில்லை.
அவனை பொருத்தவரை காதல் ஒரு காலாவதி ஆகாத துருப்புச்சீட்டு. அதை மையமாக கொண்டு எத்தனை திரைப்படங்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம். நல்ல லாபத்தைப் பெறலாம். அவ்வளவேதான்.
கற்பனையில் மட்டுமே காதல் அழகு, ஆழம் என்று என்ன வேண்டுமானாலும் கதை கட்டலாம். நிதர்சனத்தில் காதல் என்ற சொல் வெறும் உணர்ச்சிகரமான வார்த்தை அவ்வளவே. அதைமீறி அதில் அவன் எதையும் தேட விரும்பியதில்லை.
அதனால் தானோ என்னவோ, தீப்தி மூச்சுக்கு முன்னூறு, ‘ஐ லவ் யூ’ சொன்னாலும், அவை இவனுக்கு வெற்று வார்த்தைகளாக மட்டுமே தோன்றுகிறது.
ஏன், இத்தனைக்கும் அவனுக்கு கங்கா மீது காதல் வந்ததா? என்று கேட்டால்… அந்த கேள்வியே அவனுக்கு அபத்தமாகத் தோன்றும்.
அன்று அவனுக்கு கங்கா மீது இருந்ததெல்லாம் குற்றவுணர்ச்சியும் பரிதாபமும் மட்டும் தான்! இன்று, இப்போது அவள்மேல் இவன் கொண்டிருப்பது வெறுப்பும் கசப்பும் மட்டுமே!
அப்படியிருக்க அங்கே காதல் என்ற சொல் எங்கே முளைத்து தொலைக்கும்?
அங்கே இங்கே சுற்றி மறுபடி கங்காவிடமே வந்து நின்ற தன் மனதை சபித்துக் கொண்டான் கௌதம்.
***
கங்கா, தன்னை மிகவும் பலவீனமாக உணர்ந்தாள். காலையில் இருந்து அவளுக்கு டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. அறிவு இல்லத்தின் மருத்துவர் தான் அவளுக்கு மருத்துவம் பார்த்தார்.
தன்னுடைய இந்த இயலாமை நிலை அவளுக்கு சங்கடமாக வேறு இருக்க, சீக்கிரம் இங்கிருந்து சென்று விட்டால் போதும் என்று கிளம்ப தயாரானாள்.
அவள் நிலையை மேலும் மோசமாக்கவே, கௌதம் அவள்முன் வந்து நின்றான்.
‘அய்யோ’ என்று அவனை சங்கடத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். அவன்முன்னால் இப்படி பலவீனப்பட்டு கிடப்பதே அவளின் விதியாகிப் போனதே! என்று பேதை மனது விரக்தியாக எண்ணிக் கொண்டது.
“இப்ப எப்படி இருக்க கங்கா?” காலையில் அவளை விசாரித்ததற்கும், இந்த விசாரிப்புக்கும் வித்தியாசம் இருந்தது. உண்மையாக அவள் உடல்நலம் குறித்து தான் கேட்டான் போலும்.
ஆனால், இப்போதும் அவளிடம் பதில் கிடைக்கவில்லை.
அவன் இதழ்கடையோரம் வெறுமையான சுழிப்பு வந்து போனது. “இப்படி பேசாம இருந்தே தான் இப்ப இந்த நிலைமையில இருக்க கங்கா… உன்மேல எனக்கு அவ்வளவு கோபம், ஆத்திரம்… ஏன் வெறி கூட இருக்கு! தப்பித்தவறி நீ என் கண்ணுல பட்டா, உன்ன கதறி துடிக்க வைக்கணும்ன்ற அளவுக்கு வெறி இருந்தது எனக்கு…” கௌதம் அமர்த்தலாக பேச, கங்கா அவனை கண்களை விரித்து விளங்காமல் பார்த்தாள்.
“பட் உன்ன இந்த நிலையில பார்த்த உடனே ப்ச்… கொஞ்சம் பரிதாபமா இருக்கு. முன்ன மாதிரி உன்மேல பாவப்பட்டு, மறுபடி நான் முட்டாள் பட்டத்தை வாங்க தயாரா இல்ல. சோ…” குரலை உயர்த்தாமல் பல்லிடுக்குகளில் வார்த்தைகளைக் கடித்து துப்பி தன்னை தூற்றிக் கொண்டிருந்தவனை அசையாமல் பார்த்திருந்தாள் கங்கா.
“நான் உன்ன வெறுக்குறேன்… இந்த உலகத்துல நான் ஒட்டுமொத்தமா வெறுக்குற முதலும் கடைசியுமான பொண்ணு நீ மட்டும் தான்!” என்று ஆக்ரோஷமாக சொல்ல,
“என்ன உளறீங்க?” அவள் கேள்வி தீயாக அவன்மேல் மோதியது. “என்னை நம்ப வச்சு, துடிக்க துடிக்க என் கழுத்தை அறுத்து போட்டுட்டு போனது நீங்க தான், இப்ப என்மேல பழியைப் போட திரும்பி வந்திருக்கீங்களா?” உதடுகள் துடிக்க, முகம் சிவக்க கேட்டாள் கங்கா.
நடந்து முடிந்த எதற்கும் அவனிடம் விளக்கம் கேட்க அவள் நினைக்கவில்லை. அவன் தரும் விளக்கம் எதுவும், இங்கு எதையும் மாற்றப்போவதும் இல்லை. தன்னைச் சுற்றி இருப்பவர்கள் போல அவனையும் சுயநல உருவமாய் தன் மனதில் பதித்துக்கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. அதனாலேயே அவனை தேடி போகாமல் இருந்தாள். தன் வாழ்நாளில் அவனை தப்பித்தவறி கூட சந்திக்கக் கூடாது என்று தினம் தினம் அவள் வைத்த வேண்டுதல்களும் இதற்காகவே! ஆனால், எப்போதும் போல இப்போதும் அவளின் வேண்டுதல் பொய்த்து போயிருந்தது.
‘இந்த துன்பம் மட்டும் ஏன் உனக்கு மிச்சமிருக்க வேண்டும்? இதையும் சேர்த்து அனுபவித்துக் கொள்!’ என்று சாபமிட்டு, எங்கோ இருந்தவனை இவள்முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது அவளது விதி.
அவளது ஆதங்கத்தில் அவன் மனது சற்று அசைந்தது தான். தன் தரப்பில் அவளுக்கு இழைக்கப்பட்டது கொடுமை தான் என்றாலும், அதற்காக அவளது செயலை நியாயப்படுத்த அவனால் முடியுமா?
அவனுக்கு அவளிடம் கத்த வேண்டும் போலிருந்தது. அந்த இடம், அவன் குரலைத் தாழ்த்தி பேசவைத்தது. “நான் வேணான்னு சொல்லி நீங்க பணம் வாங்கினது உண்மையா? இல்லயா? பொய் மட்டும் சொல்லாத உன்ன கழுத்த நெரிச்சு, இங்கேயே கொன்னு போட்டுடுவேன்!”
கங்காவிடம் பதிலில்லை. அவனை தீர்க்கமாய் வெறிந்திருந்த அவள் பார்வையும் அசையவில்லை. அதையும் மீறி அவள் விழிகள் கலங்கியதை அவளால் தடுக்கவும் முடியவில்லை.
அவன் முகத்தில் பரிகாச சாயலின் சலிப்பு தோன்றி மறைந்தது. “பாவம் கங்கா நீ… உன் வாழ்க்கைய நீயே பாழாக்கிட்டு இப்படி பாவமா கிடக்க ச்சு ச்சு... உன்னோட இந்த நிலைமைக்கு நீ யாரையுமே கைக்காட்டி காரணம் சொல்ல முடியாது… இதுக்கெல்லாம் நீ மட்டும் தான் காரணம்! உன்னோட… உன் குடும்பத்தோட பேராசை மட்டும் தான் காரணம்!” கௌதம் அவளை விரல் நீட்டி சொல்ல, கங்காவின் கண்களில் திரண்ட கண்ணீர் இமை தாண்டி வழிந்தது.
அவளின் இந்த கண்ணீர் அவனை மேலும் மேலும் கோபமேற்றியது. “ஏதோ சொல்லுவாங்களே, தூக்கத்தை வித்து கட்டில் வாங்கின கதைனு… அதுமாதிரி தான் நீயும் உன் வாழ்க்கையை வித்து… என்ன வாங்கினையோ? அது உனக்கு தான் வெளிச்சம்.”
கங்கா அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தாள். அவளின் வலி சுமந்த கண்கள் அவனிடம் புரியாத கேள்வி கேட்பது போல் இருந்தது.
“உன்னோட இந்த அப்பாவி லுக்க பார்த்து மறுபடி நான் ஏமாறுவேன்னு நினச்சியா கங்கா?” கூர் ஆயுதம் போன்ற அவன் வார்த்தைகள், சரியாக அவளைத் தாக்கி காயப்படுத்தியது. அப்போதும் அவள் அமைதியாக நின்றாள். இதுபோன்ற கூர் வார்த்தைகளும், காயங்களும் அவளுக்கு புதிது ஒன்றுமில்லை. பழகிப்போனது தான் என்றாலும், இவையெல்லாம் அவன் வாய் வார்த்தையாக வரும்போது, அதை தாங்கிக் கொள்வது அவளுக்கு பெரும் வேதனையாக இருந்தது.
“உனக்கொரு தேங்க்ஸ் சொல்லணும் கங்கா… ஏன்னா, என் மாமா பொண்ணு என்மேல பைத்தியமா இருக்கா? நான் தலையசைச்சா நாளைக்கே கல்யாணம்ற அளவுக்கு… ஆனா எனக்குள்ள நீதான் உறுத்திட்டே இருந்த… இப்ப அந்த உறுத்தல் போயிடுச்சு. இனி என்னோட வாழ்க்கைய நான் வாழப்போறேன்… உனக்கு என்னோட ஆழந்த அனுதாபங்கள்.” அவன் காட்டமாக சொல்ல,
“இதை சொல்ல தான் வந்தீங்கனா, உங்களுக்கு வாழ்த்துக்கள், கிளம்புங்க.” கங்காவின் பதில் முகத்தில் அறைவதாக வர, கௌதம் அவளை எரிப்பதைப் போல பார்த்தான்.
“உன்ன பார்த்து தொலையணும்னு நான் நினச்சது கூட இல்ல. இங்க நீ இருக்கன்னு தெரியாம வந்து தொலைச்சிட்டேன். உன்ன பார்த்தும் தொலைச்சிட்டேன். ஆனா பாரேன், இப்ப உன்ன எதுவும் செய்ய எனக்கு மனசு வரல… ஏன்னா… நீ இப்ப வாழுற வாழ்க்கையே உனக்கு தண்டணை தான்! ஆனாலும் கடவுள் உன் விசயத்துல இவ்வளவு நியாயமா இருக்கக் கூடாது கங்கா?” அவன் பேசிக்கொண்டே போக, அவள் பொறுமை இழந்தாள்.
“போதும் கௌதம்… என் வாழ்க்கைக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. என்னை பத்தி பேசவும் உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல.” அவள் எடுத்தெறிந்து பேசிய விதத்தில் அவன் கரம் அவள் கழுத்தை பற்றியிருந்தது. ஒரு நொடி ஆவேசத்தில் இருக்கும் இடத்தையும் மறந்திருந்தான் அவன்.
அடுத்த நொடி சட்டென கையை எடுத்து உதறிக் கொண்டவன், “ச்சீ உன்ன தொட்டா கூட பாவம் சுத்திக்கும்… இனி என் பார்வையிலயே நீ விழக் கூடாது. அதை சொல்லிட்டு போக தான் வந்தேன்.” என்று எரிச்சலுடன் சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாக அகன்றான்.
கங்கா கண்களை அழுத்த மூடி, தன்னை திடப்படுத்திக் கொள்ள முயன்றவள், ஆழ்ந்த மூச்செடுத்து அங்கிருந்து நகர்ந்தாள்.
தன்னை யார் வெறுத்தாலும் யார் ஒதுக்கினாலும், தனக்காக யாருமே இல்லாமல் போனாலும் கூட, அவள் அவளுக்கான வாழ்க்கையை வாழத்தான் போகிறாள். அதை ஒரு கடமையாக… ஒரு தவமாக…
***
பெண் வருவாள்…
(தாமதமான பதிவுகளுக்கு மீண்டும் என்னுடைய மன்னிப்புகள்… காத்திருந்து படித்து, விருப்பங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏 அடுத்த பதிவில் ப்ளாஷ்பேக் தொடரும் ப்ரண்ட்ஸ். நன்றி)