ஏன் பெண்ணென்று பிறந்தேன் 11

IMG-20211007-WA0009 (1)-398055ff

ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 11

அன்று இரவு, ஓட்டல் அறையில் தங்கி இருந்த கௌதம் கைலாஷின் தூக்கம் தூரம் போயிருந்தது. ஏதோ அசௌகரியமான… பாரமான உணர்வு அவனை மூச்சு முட்ட வைக்க, நிலையில்லாமல் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தான். 

 

அவனது மன உளைச்சலின் இடையே அவன் கைபேசி இசை எழுப்ப, திலோதமா தான் அழைத்து இருந்தார். தலையை அழுத்தி கோதிக் கொண்டவன், அழைப்பை ஏற்றான்.

 

“எஸ் மாம்.”

 

“என்ன கௌதம் இதெல்லாம்?” அவர் எடுத்ததும் கேட்க,

 

“என்ன மாம்?” அவனுக்கு எதுவும் விளங்கவில்லை.

 

“தீப்திய ஏன் கஷ்டப்படுத்துற கௌதம்? பாவம்டா அவ சின்ன பொண்ணு.”

 

“நான் அவளை கஷ்டப்படுத்துறேனா? நான் அவகிட்ட பேச கூட இல்ல மாம்.”

 

“இடியட், பிரச்சனையே அதுதான். நீ அவளை கண்டுக்க மாட்டேங்கிறன்னு சொல்லி தான் அவ கஷ்டப்படுறா.” என்றார்.

 

“அவதான் நான் பேச வந்தா கூட முகத்தை திருப்பிட்டு போறா, நான் என்ன செய்ய?” அவன் புகார் வாசித்தான்.

 

“அவளை சமாதானம் படுத்தணும்டா, இதுகூட தெரியாதா உனக்கு?”

 

“ப்ச்”

 

“ஏன் இப்படி அலுத்துக்கிற, உனக்கு தீப்திய பிடிச்சிருக்கா இல்லையா? இப்பல்லாம் நீ நடந்துக்கறதைப் பார்த்து எனக்கே டவுட் வருது.” அவர் சந்தேகமாக கேட்க,

 

“தீப்திய எனக்கு பிடிக்கலனு நான் எப்ப சொன்னேன் மாம்?”

 

“இப்படி சுத்தி வளைச்சு பேசாத கௌதம், எனக்கு நேரடியான பதில் வேணும்… தீப்திய பிடிக்கலன்னு நீ சொல்லல தான். அதேநேரம், உங்க கல்யாணத்துலயும் நீ ஆர்வம் காட்டலயே! ஏன் இப்படி இருக்கடா? உன்ன நினச்சு எனக்கும் மனோக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு.” அவர் குரல் தழுதழுக்க முடித்தார்.

 

கௌதம் அவருக்கு பதில் சொல்லவில்லை. அவன் ஆழ்ந்த மூச்செடுத்து விட்டான்.

 

“உண்மைய சொல்லு கௌதம், உன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்க?” திலோத்தமா விடாமல் கேட்க,

 

“எனக்கு கல்யாணத்துல எந்த ப்ராப்ளமும் இல்ல மாம். பட் அதுக்கு முன்ன நான் தீப்தி கிட்ட பேசணும்.”

 

மகன் சொன்னதில் அவர் முகம் சற்று தெளிய, “உன் பக்கத்துல தான இருக்கா, போய் பேசுடா, ரெண்டு பேரும் எவ்வளோ வேணா பேசிக்கோங்க, அடிச்சு பிடிச்சு கல்யாணத்துக்கு மட்டும் ஓகே சொன்னா போதும்டா… உன் கல்யாணத்தைப் பார்க்க ஆசையா காத்துட்டு இருக்கோம்பா.” என்று உற்சாகமாக சொன்னவர், அடுத்து மகன் சொன்ன பதிலில், அவரின் உற்சாகமெல்லாம் மொத்தமாக வறண்டு போனது.

 

“எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு மாம்.” கௌதம் இதை சாதாரணமாகத் தான் சொன்னான். ஆனால் திலோதமா இதயத்தில் அவன் சொன்ன வார்த்தைகள் இடியின் தாக்கத்தை ஏற்படுத்தின.

 

“கௌதம்…!” அவரின் குரல் உடைந்தது.

 

“சாரி மாம், என்னை பத்தின உண்மைய மறைச்சு என்னால தீப்திய மேரேஜ் பண்ணிக்க முடியாது. நான் அவகிட்ட நடந்த எல்லாத்தையும் சொல்ல போறேன்… அதுக்கப்புறமும் அவளுக்கு ஓகேனா, நாம கல்யாண விசயத்தை மூவ் பண்ணலாம்.” அவன் உறுதியாக சொல்லிவிட, திலோத்தமாவிற்கு பதறிக் கொண்டு வந்தது.

 

“என்னன்னு சொல்ல போற நீ? உனக்கு நடந்ததுக்கு பேரு கல்யாணமா? கேவலம் பணத்துக்காக உன்ன விட்டு ஓடிபோனவளைப் பத்தி தீபூ கிட்ட சொல்லி அவளை மூட் அவுட் பண்ணாத கௌதம்.” அவரின் வார்த்தைகள் வேகவேகமாக வந்து விழுந்தன.

 

“எனக்கு நடந்தது எதுவா வேணா இருக்கட்டும் மாம். என்னை கட்டிக்க போற பொண்ணுக்கு நிச்சயம் அந்த விசயம் தெரிஞ்சி இருக்கணும்.” கௌதம் பதில் நிதானமாக உறுதியாக வந்தது.

 

“நோ கௌதம். நீ சொல்ல வேணா… நான்… நான் தீபூ கிட்ட பொறுமையா எடுத்து சொல்றேன். ப்ளீஸ் எதையாவது சொல்லி அவ மனசை காயப்படுத்திடாத.” ஒருவித பதற்றத்துடன் மகனுக்கு எடுத்துச் சொன்னார்.

 

தீப்தியின் குணம் பற்றி திலோத்தமாவிற்கு நன்றாகவே தெரியும். எதையும் மேலோட்டமாக அனுகுபவள் அவள். எதிலும் ஆழ்ந்து சிந்தித்து முடிவு எடுக்கும் பொறுமை அற்றவள். ஒருவிதத்தில் கௌதம் சொல்வது போல முதிராத குழந்தை மனம் கொண்டவள். அவளுக்கு மட்டும் இந்த விசயம் தெரிந்தால், நிச்சயம் உடைந்து போவாள் என்ற பயம் அவருக்கு.

 

அவர் பயத்தை அவனும் உணர்ந்துதான் இருந்தான். அதனால்தான் இதுவரை அவளிடம் இதைப்பற்றி பேச்செடுக்காமல் பொறுமை காத்தான். ஆனாலும் அவளிடம் எதையும் மறைக்கும் எண்ணமில்லை அவனுக்கு.

 

எனவே, “ஓகே மாம், நீங்க பேசிட்டு சொல்லுங்க, தீப்தியோட முடிவு எதுவா இருந்தாலும் நான் மனப்பூர்வமா ஏத்துக்கிறேன். இது அவளோட வாழ்க்கை, முடிவு செய்ய வேண்டிய முழு உரிமையும் அவளுக்கு மட்டும் தான் இருக்கு.” என்றவன், “பை மாம், குட் நைட்.” என்று கைபேசியை அணைத்து மேத்தைமேல் வீசினான்.

 

அவன் மனது மறுபடி அலைபாய தொடங்கியது. தீப்தி முடிவைப் பற்றி அவனுக்கு கவலை இருக்கவில்லை. அவள் ஒருவேளை மறுத்தாலும், அவன் தன் மாமன் மகளின் மேல் கொண்ட பாசம் மாற போவதில்லை. இருந்தாலும் அந்த ஒருநாள் தன் வாழ்வில் வந்திருக்க வேண்டாமே… அவன் மனது மறுபடி அலற்றியது. அப்படி நேர்ந்திருக்க வேண்டாமே என்ற ஆற்றாமை அவனுக்குள்… இத்தனை வருடங்கள் கடந்த பிறகும் அன்றைய நிகழ்வின் தாக்கம் ஆறாத காயமாக இன்றும் வேதனை கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறது. மெத்தைமேல் அப்படியே பொத்தென்று விழுந்தவன், கண்களை மூடிக் கொண்டான். 

 

இன்று காலை அவன் முன்னால் மயங்கி சரிந்து விழுந்த கங்காவின் தோற்றம் காட்சியாகி, அவன் உயிரை வதைக்கச் செய்வதாய்… 

 

கூடவே, அவள் காரில் அடிபட்டு இரத்தம் தோய்ந்த முகத்துடன் வலியில் துடித்த காட்சி அவன் நெஞ்சை அழுத்திப் போவதாய்… 

 

மேலும், ஊன்றுகோல் தாங்கி, மணப்பெண் கோலத்தில் அவள் கலங்கி நின்ற தோற்றமும், மனக்கண் முன்னால் தோன்ற… இறுக மூடியிருந்த அவன் இமையோரம், ஈரம் துளிர்த்து கசிவதாய்.

 

***

 

நான்கு வருடங்கள் முன்பு,

 

அந்த திருமண மண்டபத்திற்குள் தயக்கத்துடன் நுழைந்திருந்தான் கௌதம் கைலாஷ். அழையா விருந்தாளியாக அங்கே வருவது அவனுக்கு சங்கடமாக இருந்தாலும், கங்கா என்ற அந்த அப்பாவி பெண்ணிற்காக அங்கு வந்திருந்தான்.

 

நேற்று எதேச்சையாக அவன் காரிலிருந்த கங்காவின் கல்யாண பத்திரிக்கை, அவன் கண்ணில் பட்டது. எடுத்து பிரித்து பார்க்க, அதில் அவள் பெயரோடு சேர்த்து, உலர்ந்து போன அவளின் உதிரக் கரைகளும். அதை பார்க்கும்போதே மனதிற்கு கஷ்டமாக தோன்றியது.

 

கங்காவின் திருமணம் முடிந்திருக்குமா? என்ற யோசனை எழ, அவன் விசாரித்தபோது தான் இன்று திருமணம் என்பது தெரிய வந்தது. அதற்குப் பிறகு அவன் தாமதிக்கவில்லை. திருமண மண்டபத்தின் முகவரி கிடைத்தவுடன் வந்துவிட்டான். தன்னால் தடைப்பட்ட அவளின் திருமணம் நடந்தால் அவனுக்கும் நிம்மதி. அந்த நிம்மதி உணர்வை எதிர்பார்த்தே அங்கே வந்திருந்தான்.

 

ஆனால், அந்த இடம் அசாதாரண சுழலில் இருந்தது. அது வெகு சாதாரண ரக மண்டபமாக தெரிய, ஹால் நிரம்பவும் மக்கள் கூடியிருந்தனர். அந்த மக்களிடம் பலவிதமான சலசலப்புகள் கேட்க, ‘முகூர்த்த நேரம் முடிந்தும் திருமணம் நடக்கவில்லை’ என்ற பேச்சு தான் அதிகம் அடிபட்டது. 

 

‘அய்யோ… என்ன பிரச்சனை?’ என்று அவன் சுற்றும் பார்க்க, அலங்கரிக்கப்பட்ட திருமண மேடை வெறிச்சோடி இருந்தது. மங்கல வாத்திய முழக்கங்கள் இன்றி, வெறும் பேச்சு சலசலப்பு சத்தங்களே அங்கே அதிகம் கேட்டது.

 

கூட்டத்தில் இருந்து ஒதுங்கி நடந்தவன், மணமகள் என்று எழுதப்பட்டிருந்த அறையை நோக்கி நடந்தான். அந்த அறையின் கதவு உட்புறமாக தாழிடப் பட்டிருக்க, சற்று தயங்கி கதவைத் தட்டினான்.

 

கதவு திறந்து கொண்டது. அந்த வீட்டின் சில்வண்டு மகாலட்சுமி தான் கதவைத் திறந்துவிட்டிருந்தாள். மணப்பெண், மாப்பிள்ளை வீட்டு குடும்ப நபர்கள் அனைவரும் அந்த சிறிய அறையில் தான் குழுமியிருந்தனர். அனைவரின் முகத்தைப் பார்க்கும்போதே ஏதோ விவாதத்தில் இருப்பதாக தோன்றியது. கௌதம் பார்வை அவர்களிடையே அலசி கங்காவிடம் சென்று நின்றது. 

 

இருபக்க கைகளிலும் ஊன்றுகோலூன்றி, முகூர்த்தத்திற்கு உரிய மஞ்சள் நிற நூல் புடவை அணிந்து, சில பொன் நகைகளோடு, முழு பூ அலங்காரத்தில், தேம்பி அழுது கொண்டு நின்றிருந்தாள் கங்கா. அவள் எதிரில், பட்டு வேட்டி சட்டையில் இறுகி கறுத்த முகத்துடன் நின்றிருந்தான் கதிரவன்.

 

“ஏ கழுத, கதவ தொறக்க வேணானு சொன்னா எதுக்கு சும்மா சும்மா கதவ தொறந்து விடுற?” மாடசாமி மகளை திட்டிவிட்டு, உள்ளே வந்த கௌதமைப் பார்த்தவர் வாய் மூடிக் கொண்டார்.

 

“என்ன பிரச்சனை இங்க?” கௌதம் நேரடியாக மாடசாமியிடம் கேட்டு விட்டான்.

 

“நீங்களே இந்த நியாயத்தை கேளுங்க சார், மணமேடை வரைக்கும் வந்துட்டு, இப்ப எங்க பொண்ணைக் கட்டிக்க மாட்டேன்னு சொல்றாங்க…” மாடசாமி ஆவேசமாக கதிரவனைக் கைகாட்டி பேச, கதிரவனின் அப்பா ஆத்திரமாக முன் வந்தார்.

 

“யோவ், நீயெல்லாம் மனுசனாயா? உன் பொண்ணால நடக்க முடியுமானு எத்தனை முறை நாங்க கேட்டிருப்போம்… கால் சீக்கிரம் குணமாயிடும்னு டாக்டர் சொன்னாருன்னு வாய் கூசாம புழுகினயேயா… இப்பதான எங்களுக்கே உண்மை தெரிஞ்சது, உன் பொண்ணால இனி ஜென்மத்துக்கும் நடக்க முடியாதுன்னு. உன் நொண்டி பொண்ண கட்டிட்டு அவதிபடணும்னு என் மகனுக்கு என்னயா தலையெழுத்து?”

 

அவர் சொன்னதைக் கேட்டு, கௌதம் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. “கங்கவால நடக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னதை நீங்க யார்கிட்டேயும் சொல்லவே இல்லயா?” தன்னை மீறிய அதிர்ச்சியில் மாடசாமியிடம் கேட்டு விட்டான். அதில் மாடசாமி தலையைக் கவிழ்ந்து கொண்டார்.

 

“இவ்ளோ பெரிய விஷயத்தை மறைச்சு என் பேத்திய இந்த நிலைமையில கொண்டு வந்து நிறுத்திட்டியே, பெத்த பொண்ணு கல்யாணத்துல எதை மறைக்கணும்னு விவஸ்தை இல்ல உனக்கு?” கங்காவின் தாத்தா சதாசிவம், தன் மருமகனை ஆதங்கமாக கடிந்து பேச,

 

“மாமா, கங்கா கண்ணாலம் நடக்கணும்னு தான் மறைச்சேன். இவரு தான சொன்னாரு கங்கா எப்படி இருந்தாலும் கட்டிக்கிறேன்னு… இப்ப மட்டும் என்னவாம்” என்று கதிரவனைக் காட்டி, மாடசாமி தன்னை நியாயப்படுத்த முயன்றார்.

 

“இங்க பாருங்க, ஏதோ எதிர்பாராம கங்காவுக்கு ஆக்ஸிடன்ட் ஆச்சு, சரி அவ முழுசா குணமாகி வந்துடுவான்ற எண்ணத்துல தான், நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கிட்டத்தட்ட மூனு மாசம் வரைக்கும் காத்திருந்தேன். அதுக்காக இப்படி நடக்கவே முடியாதவளைக் கட்டிக்கிட்டு அவதிப்பட நான் தயாராயில்ல.” கதிரவன் தன் முடிவை உறுதியாகச் சொல்லிவிட்டான்.

 

அவனுக்கு கங்காவை பிடித்துத்தான் இத்தனை மாதங்கள் அவளுடனான திருமணத்திற்குக் காத்திருந்தான். ஆனாலும் பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக நொண்டி பெண்ணை திருமணம் செய்வதைப் பற்றி அவனால் யோசிக்க கூட முடியவில்லை. 

 

கங்காவால் இனி நடக்கவே முடியாது என்ற உண்மை கடைசி நேரத்தில் தான் அவனுக்கே தெரிய வந்திருந்தது. அதுவும் நேற்று பெண்ணழைப்பில் போட்டோ எடுக்க கூட, அவளால் ஊன்றுகோலின்றி நிற்க முடியாமல் அவதிப்பட்டதைப் பார்த்தபோது தான் கதிரவனுக்கு சந்தேகமே வந்திருந்தது. அதன்பிறகு அவன் விசாரிக்கச் சொல்ல, கிடைத்த தகவல் அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் பேரடியாக.

 

“கதிர் தம்பி, உங்க நிலைம எனக்கு புரியுது பா, அதேபோல கொஞ்சம் கங்கா நிலமையும்‌ யோசிச்சு பாருப்பா… அவளுக்கு விபத்தாகி, நடக்க‌ முடியாம போனதுல அவளோட தப்பு என்னயிருக்கு? இப்ப மணமேடை வரைக்கும் வந்து அவ கல்யாணம் நின்னு போனா அவளோட வாழ்க்கையே அழிஞ்சு போயிடும் பா… கொஞ்சம் பெரிய மனசு பண்ணி எங்க கங்காவ ஏத்துக்கோ பா.” சதாசிவம் தாத்தா, தன் பேத்திக்காக கதிரவன் கையைப் பிடித்து கொண்டு, காலில் விழாத குறையாக கெஞ்சினார்.

 

இதைப்பார்த்த கங்காவின் மனது மேலும் வேதனைப்பட்டது. தன் தாத்தா தனக்காக இப்படி கெஞ்சுவதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதேநேரம் அத்தனை பேர் முன்பு வாய் திறந்து பேசும் துணிவும் அப்போது அவளுக்கு இருக்கவில்லை. உடல் ஊனத்தோடு சேர்த்து, வாயையும் ஊமையாக்கிக் கொண்டு அழுதபடி நின்றிருந்தாள்.

 

அவரது கையிலிருந்து தன் கரத்தை உருவிக்கோண்ட கதிரவன், “நான் ரொம்ப சாதாரண மனுசன் தாத்தா, உங்க நொண்டி பொண்ணுக்காக என் வாழ்க்கையை தியாகம் செய்ற அளவுக்கு பெரிய மனசெல்லாம் எனக்கு கிடையாது.” கதிரவன் முகத்தில் அறைந்தாற்போல சொல்லிவிட, பெரியவர் மனம் கலங்கி விட்டார்.

 

அங்கே மேலும் வாதங்கள் தொடர்ந்தன. அது எதுவுமே கௌதம் காதை தாண்டி மூளையைச் சேரவில்லை. எதிலிருந்தோ தப்பிக்க வேண்டும் போல, அந்த இடத்தைவிட்டு வேகமாக சென்றுவிட அவன் கால்கள் பரபரத்தன. ஆனாலும் கங்கா மீது படிந்திருந்த அவன் பார்வை, அவனை அங்கேயே அசையமாட்டாமல் நிறுத்தி இருந்தது.

 

“தாத்தா… போதும்… எனக்காக யாரும் கெஞ்ச வேணாம்… விட்டுடுங்க…” அந்த கூச்சல் குழப்பத்தில், கங்கா தேம்பிக் கொண்டே சொன்னது அங்கிருக்கும் யார் காதிலும் விழவில்லை. அத்தோடு கிட்டத்தட்ட ஒருமணிநேரமாக ஊன்றுகோல் தாங்கி நின்றபடியே அழுதுகொண்டு இருக்கிறாள். அதனால் அவளின் கால்களிலும், ஊன்றுகோல் அழுத்தியதால் கைகளின் அக்குள் பகுதிகளிலும் வலி உயிர் போக, கங்காவிற்கு நிற்பது பெரும் வேதனையாக இருந்தது.

 

“இப்ப கடைசியா என்னதான் சொல்ல வரீங்க?” யாரோ ஒருவர் கேட்க,

 

கதிரவனின் அப்பா, “ஒரு நொண்டி பொண்ண என் பையனுக்கு கட்டி வைக்க முடியாதுங்க, வேணும்னா அவங்களோட ரெண்டாவது பொண்ண கட்டிக்கொடுக்க சொல்லுங்க, இல்லனா ஆள விடுங்க நாங்க கிளம்புறோம்.” முடிவாகச் சொல்லிவிட்டார்.

 

“ஏம்பா மாடசாமி, நீ என்னப்பா சொல்ற? மாப்பிள்ள ஏதோ பெரிய மனசு பண்ணி உன் ரெண்டாவது பொண்ணு கௌரிய கட்டிக்க முன்வந்து இருக்காரு. மறுப்பு சொல்லாம கல்யாணத்த முடிக்கிற வழிய பாருப்பா.” சொந்தத்தில் இருந்த ஒரு நீதிமான் தீர்பை சொல்லிவிட,

 

“அப்ப எங்க கங்காவோட வாழ்க்கை?” சதாசிவம் தாத்தா கோபமாக கேட்டார்.

 

அங்கே ஒரு நொடி நிசப்தம் வந்து போனது. “கௌரிய கதிரவனுக்கு கட்டிக்கொடுக்க எங்களுக்கு சம்மதம்… ஒருத்தி இல்லன்னாலும் இன்னொரு பொண்ணாவது வாழட்டும்!” மாடசாமி சொல்லிவிட, மாப்பிள்ளை வீட்டாரின் முகத்தில் தெளிவு பிறந்தது. 

 

“சரி சரி சட்டுபுட்டுன்னு கௌரிய அலங்காரம் பண்ணி கூட்டிட்டு வாங்க.” என்று அவர்கள் அறையை விட்டு கிளம்பினர்.

 

கங்கா ஓய்ந்துபோய் அருகிருந்த கட்டிலில் தடுமாறியபடி அமர்ந்து கொண்டாள். அங்கே எதுவும் புரியாமல் திருதிருத்து விழித்து நின்றிருந்த கௌரியை, உறவுக்கார பெண்கள் உள்ளே இழுத்து சென்று அவசரமாக அவளுக்கு அலங்காரம் செய்தனர்.

 

பேத்தியை பரிதாபமாக பார்த்த சதாசிவம், “உன் வாழ்க்கை போச்சே மா!” என்று கலங்கினார். மாடசாமி தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு நின்றிருக்க, மல்லிகா பெரிய மகளை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தார்.

 

இத்தனைக்கும் கௌதம் அங்கே தான் நின்றிருந்தான். அவனை பார்த்தவர், “நீ ஏன்பா இன்னும் இங்க நிக்கிற, போ பா, என் பேத்தி வாழ்க்கைய ஒன்னுமில்லாம அழிச்சுட்ட, சந்தோஷமா? நீங்கல்லாம் நல்லா இருப்பீங்க!” சதாசிவம் ஆதங்கமாக அவனிடம் கைகூப்பினார்.

 

அந்த பெரியவரின் வார்த்தைகள், கௌதமிற்கு சுருக்கென்று தைத்தது. “நான்… தெரியாம தான்…” அவன் வார்த்தைகள் திணறின.

 

“நீங்க தெரியாம செஞ்ச தப்புக்கு, வாழ்க்கை முழுக்க என் பேத்தி இல்லபா, தண்டனை அனுபவிக்கணும்!” அவர் சொல்லவும், மல்லிகா இன்னும் கதறி அழுதார். கங்காவின் மனதின் பாரம் இன்னும் கூடியது. 

 

கண்ணீர் உலர்ந்த முகத்துடன் ஓய்ந்துபோய் அமர்ந்திருந்த அவளின் தோற்றம் அவனுக்கு பரிதாபமானது. அவளை சில நொடிகள் பார்த்தவன், ஒரு முடிவெடுத்தவனாக நிமிர்ந்து, “நான் கங்காவ கல்யாணம் பண்ணிக்கிறேன்!” என்றான் கௌதம். அங்கிருந்த அனைவருக்குமே சட்டென மின்சாரம் பாய்ந்த உணர்வு. 

 

சதாசிவம், மாடசாமி, மல்லிகா மற்றும் அங்கிருந்த சிலரின் பார்வையும் அவன்மீது திகைப்பாக படிந்தது. ஆனால் அவன் பார்வை கங்காவின் முகத்தில் மட்டும் தான் நிலைத்திருந்தது. அவள் அதிர்ந்து அவனை ஏறிட்டாள். 

 

அந்த நொடியில் அவள் மனம் முழுவதும் பயம் மட்டுமே சூழ்ந்தது. அவளின் அந்த பய உணர்வை அவள் முகமும் பார்வையும் அப்படியே அவனிடம் பிரதிபலித்தது.

 

***

 

பெண் வருவாள்…

 

(எப்பவும் போல இப்பவும் லேட்…☹️ தயவு செய்து மன்னிக்கவும். அடுத்த பதிவு விரைவில் தர முயற்சிக்கிறேன். தொடர்ந்து விருப்பங்களையும் கருத்துக்களையும் அளித்து, ஊக்கம் தரும் தோழமைகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏)