ஏன் பெண்ணென்று பிறந்தேன் 12

IMG-20211007-WA0009-76356088

ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 12

 

மங்கல வாத்தியங்கள் முழங்க, மந்திரங்கள் ஒலிக்க, கௌதம் கைலாஷ், கங்காவின் கழுத்தில் பொன்தாலி பூட்டினான். 

 

மண்டபத்தில் கூடியிருந்தவர்கள் ஆச்சரியத்துடனும் சற்று பொறாமையுடனும் மணமக்களை மலர் தூவி ஆசி வழங்கினர். கங்காவின் அருகில் அமர்ந்திருந்த கௌதமின் செழிப்பான தோற்றம் அங்கிருந்த அனைவரையுமே பொறாமை கொள்ள செய்திருந்தது. 

 

“நொண்டி பொண்ணுக்கு வந்த வாழ்வை பாரேன்!” போன்ற வார்த்தைகள் அங்கங்கே அடிப்பட்டு கங்காவின் காதையும் எட்ட தவறவில்லை. அதை கேட்ட பிறகுதான் சற்று பார்வையை உயர்த்தி கௌதமை பார்த்தாள்.

 

செதுக்கிய முகம், தந்த நிறம், வளர்த்தியான உருவம், பிரகாசமான களைபொருந்திய அவன் பக்கவாட்டு தோற்றம் அவளை வசீகரிப்பதாய். அவளையும் மீறி அவள் கண்கள் அவன் தோற்றத்தை தன்னுள் பதித்துக்கொள்ள முயல, பெண்மைக்குள் சங்கடம் தொற்றிக்கொள்ள, சட்டென தலைகவிழ்ந்து கொண்டாள்.

 

முதலில் கங்கா – கௌதம் திருமணம் முடிந்த பிறகு, அடுத்து கௌரி – கதிரவன் திருமணம் அதே மேடையில் நடைப்பெற்றது. சொந்தங்கள் எல்லாம் அந்த திருமணத்தில் கவனம் செலுத்த, தாலி பூட்டிய சற்று நேரத்தில், கௌதமிற்கு, கங்காவுடன் பேசவும் தனிமை கிடைத்திருந்தது. 

 

மணமகள் அறையில் தான் இருவரும் அமர்ந்திருந்தனர். அவள் கட்டிலின் ஓரம் அமர்ந்திருக்க, அவன் அவளெதிரில் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து இருந்தான்.

 

கங்கா முன்பு அணிந்திருந்த கூரை சேலை, கௌரிக்கென மாறி இருக்க, வேறு மஞ்சள் நிற பட்டு சேலையில் தான் மணமேடை ஏறி இருந்தாள் கங்கா. கௌதம் கூட வெள்ளை பட்டு வேட்டி சட்டையை மிக பிரயத்தனப்பட்டு அணிந்திருந்தான். 

 

அவளுக்கான மாங்கல்யம் பற்றி சற்று தயங்கியபோது, சதாசிவம் தாத்தா தன் மனைவி வேதவல்லியின் மாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்தார்.

 

“இது கங்காவோட பாட்டி, என் பொண்டாட்டியோட மாங்கல்யம்… ரொம்ப ராசியானது. வாழ்ந்தவரைக்கும் மகராசியா வாழ்ந்து, சுமங்கலியா தெய்வமாகிட்டவ. இந்த தாலிய கங்காவுக்கு கட்டுங்க, என் வேதா ஆசி எப்பவும் எங்க பேத்திக்கு இருக்கும்.” என்று தந்தார்.

 

கௌதமும் மறுப்பு சொல்லாமல் பெற்றுக் கொண்டவன், “தாத்தா, தாலில மஞ்ச கயிறு கோர்க்க‌ வேணா, இந்த செயின் கோர்த்து தாங்க, என் மனைவிக்கு தங்கத்துல தாலி கொடி ஏறணும்.” என்று தன் கழுத்திலிருந்த தங்க சங்கிலியைக் கழற்றி தந்திருந்தான். 

 

இதுநாள் வரை அவன் கழுத்தில் கிடந்த‌ தங்க சங்கிலி, இப்போது கங்காவின்‌ கழுத்தில் மாங்கல்யமாக பொருந்தியிருந்தது.

 

நிமிடங்கள் கழிய, அவளாக எதுவும் பேசுவதாக அவனுக்கு தோன்றவில்லை. 

 

எனவே, “கங்கா… உனக்கு இந்த மேரேஜ்ல ஓகே தான?” என்று கேட்டான்.

 

அவள் புதுவித தயக்கத்துடன் பேச நா எழாமல் அமைதியாக இருந்தாள். 

 

“சாரி, இதை நான் கல்யாணத்துக்கு முன்ன கேட்டிருக்கணும். பட் அப்ப சரியா பேச சான்ஸ் கிடைக்கல. இப்ப உன் வாயால சம்மதம் கேட்டா எனக்கு நல்லாயிருக்கும்னு தோனுது.” கௌதம் அவளிடம் மறுபடி கேட்க, இப்போதும் அவளிடம் பதிலில்லை. 

 

“கங்கா உனக்கு என்னை பிடிச்சிருக்கு இல்ல?” கௌதம் சற்று அழுத்தமாக கேட்க,

 

“எனக்கு… பயமாயிருக்கு!” என்றாள் அவள்.

 

“பயமா? எதுக்கு?” என்று அவளிடம் கேட்டவன் பார்வை, அவள் முகத்தில் வாஞ்சையாக படர்ந்தது.

 

“தெரியல… ஆனா ரொம்ப பயமா இருக்கு!” திருவிழாவில் தொலைந்த பிள்ளை போல அவள் பரிதவிப்பது அவனுக்கு புரிந்தது. 

 

தான் உட்கார்ந்திருந்த இருக்கையை அவளருகில் சற்று நெருங்கிபோட்டு அமர்ந்தவன், அவள் கையை ஆறுதலாக பற்றிக்கொண்டான். அவளின் சில்லிட்டிருந்த கரம் அவன்‌ உள்ளங்கையின் வெப்ப தீண்டலில் நடுங்கியது.

 

“ஹே ரிலாக்ஸ் கங்கா” என்று தன் பிடியில் சற்றே அழுத்தம் தந்தவன், அவள் வலது கரத்தை எடுத்து தன் இருகரங்களுக்குள் பொத்திக்கொண்டான்.

 

கங்கா தலை நிமிரவில்லை. அவள் உதடுகள் நடுங்கி, இமைகள் தாண்டி கண்ணீர் வழிந்தது. 

 

அவள் முகத்திற்காக இவனும் தலைதாழ்த்தி குனிந்து அவளின் கலங்கி சிவந்த முகத்தை வாஞ்சையோடு பார்த்தவன், ஒற்றை விரலால் அவள் முகத்தை நிமிர்த்தி, அவள் கண்ணீரைத் துடைத்து விட்டான். அவனது இத்தனை உரிமையான நெருக்கம், அவளுக்கு சங்கடத்தையும், புரியாத பயத்தையும் கொடுத்தது.

 

“இனி நீ அழக்கூடாது கங்கா, எதுக்காகவும் யாருக்காகவும் பயப்படவும் கூடாது. தலைநிமிர்ந்து தைரியமாக எல்லாரையும் ஃபேஸ் பண்ணணும். ஏன்னா, நீ இப்ப வெறும் கங்கா இல்ல… மிஸஸ் கங்கா கௌதம் கைலாஷ்!” அவன் அவளுக்கு தைரியம் சொல்ல, அவள் கண்கள் அவனை நேராக சந்தித்தன. அவளின் தெளிந்த பார்வையில் அவனுக்கான நம்பிக்கை சிறிதாய் துளிர்ந்திருந்தது.

 

“நீங்க என்மேல பாவப்பட்டு தான… என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?” கங்கா சங்கடமாக கேட்க, கௌதம் முகம் சற்று யோசனைக்குச் சென்று திரும்பியது.

 

“நீ ரொம்ப யோசிச்சு எல்லாத்தையும் குழப்பிக்காத கங்கா, எது எப்படியோ இனி நாம ரெண்டு பேரும் சேர்ந்து தான் லைஃப் ரன் பண்ண போறோம். நாம புரிஞ்சிகிட்டு விட்டுக்கொடுத்து சந்தோஷமா வாழ்வோம்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. உனக்கும் அந்த நம்பிக்கை இருக்கணும்.” கௌதம் எடுத்துச் சொல்ல, கங்கா சம்மதமாக தலையசைத்தாள். 

 

அவளின் தெளிந்த முகத்தைப் பார்த்து இதமாய் புன்னகைத்தவன், தான் பற்றியிருந்த அவள் கரத்தை எடுத்து அவள் உள்ளங்கையில் இதழ் பதித்தான். கங்கா சட்டென தன் கரத்தை இழுத்துக்கொண்டு அவனை மிரண்டு பார்த்தாள். அவளின் மிரட்சியில் கௌதம் வாய்விட்டு சிரித்துவிட, அவளை வெட்கம் வந்து போர்த்திக்கொண்டது. மறுபடி தலைகவிழ்ந்து கொண்டாள்.

 

சற்று நேரத்தில், மணமக்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடானது. மாடசாமி, மல்லிகா, சதாசிவம் தாத்தா மேலும் இரு சொந்தங்கள் கௌதம், கங்காவுடன் கிளம்ப, மற்றவர்கள் கதிரவன், கௌரியை அழைத்து சென்றனர்.

 

கௌதம், கங்காவை காரில் அழைத்துக்கொண்டு தன் வீட்டுக்கு வரும் வழியிலேயே, தன் அம்மா, அப்பா குடும்பம் பற்றி அவளிடம் ஓரளவு தெளிவுபடுத்திக் கொண்டு வந்தான். 

 

“மாம், டாட்க்கு நான்னா எப்பவுமே ஸ்பெஷல் தான். நான் எது கேட்டும் அவங்க மறுத்ததே இல்ல. அவ்வளோ லவ் என்மேல. இப்படி சொல்லாம கொள்ளாம திடீர்னு மேரேஜ் பண்ணிட்டு போய் நின்னா, அவங்களுக்கும் ஷாக்கா தான் இருக்கும். கோபமும் வரும்.” கௌதம் சொல்ல சொல்ல, கங்காவின் முகம் பயத்தில் வெளுத்தது.

 

“ஹேய் கங்கா, அவங்கள நான் சமாளிச்சிடுவேன். சிச்சுவேஷன் எடுத்து சொன்னா கண்டிப்பா புரிஞ்சுக்குவாங்க.” என்று நம்பிக்கை சொல்ல, கங்காவும் அப்போதைக்கு அவன் நம்பிக்கையைக் கடனாக எடுத்துக் கொண்டாள்.

 

பங்களாவிற்குள் வந்து நின்ற காரிலிருந்து மாலையும் கழுத்துமாக இறங்கிய கௌதம், கங்காவை பார்த்ததும், வேலையாட்களிடையே பரபரப்பு கூடியது.

 

சில நிமிடங்களில் வாசலுக்கு ஓடிவந்த திலோத்தமா கண்டது, மணக்கோலத்தில் தன் மகனையும், அவனுக்கு சற்றும் பொருத்தமில்லாமல், சுயமாக நிற்கவும் இயலாமல் இரு புறமும் ஊன்றுகோலூன்றி நின்றிருந்த ஒரு சாதாரண பெண்ணையும் தான்.

 

அதை பார்த்தவருக்கு மனம் பொறுக்கவில்லை. வேகமாக வந்தவர், கௌதம் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார்.

 

“என்ன பண்ணி வச்சிருக்க கௌதம்? உனக்கு புத்திகெட்டு போச்சா? எங்ககிட்ட ஒரு வார்த்தையும் சொல்லாம, எப்படிடா நீ உனக்கே கல்யாணம் செஞ்சுக்கவ? நாங்க என்ன செத்தா போயிட்டோம்?” என்று அவன் சட்டையைப் பிடித்து ஆவேசமாக உலுக்கி கேட்டு கதறினார் திலோத்தமா.

 

அவர் கௌதமை அடித்ததிலேயே கங்காவும், அவளுடன் வந்திருந்தவர்களும் மிரண்டு பார்த்து இருந்தனர்.

 

அம்மா தந்த அடிகளைப் பெற்றுக்கொண்டவன், அவர் கைகளைத் தடுத்துப் பிடித்து, “மாம்… ஜஸ்ட் ரிலாக்ஸ், என்ன நடந்ததுன்னு நான் உங்களுக்கு சொல்றேன். வாங்க உள்ள போய் பேசலாம்.” என்றவனை முறைத்தவர்,

 

“என்ன… இந்த பிச்சகாரியையும், இந்த கும்பலையும் நம்ம பங்களாக்குள்ள விடணுமா? நம்ம வாசப்படி மிதிக்க இவளுக்கு தகுதி இருக்கா?” திலோத்தமா ஆத்திரமாக பேசினார்.

 

கௌதம், “மாம்… கொஞ்சம் யோசிச்சு பேசுங்க, இப்ப கங்கா என்னோட மனைவி. அவளை நீங்க அவமானப்படுத்தி பேசறது, என்னையும் சேர்த்து அவமானப்படுத்துற மாதிரி.” 

 

யாரோ ஒரு பெண்ணுக்காக தன்னிடம் குரலுயர்த்தி பேசும் மகனை, தோற்று போனவராக பாரத்தார் திலோத்தமா. 

 

அவரின் கண்கள் கலங்குவதைக் கண்டு மனமிரங்கியவன், “மாம் ப்ளீஸ், என் சிச்சுவேஷன் புரிஞ்சிக்கங்க, என்னால தான் இந்த பொண்ணு எல்லாத்தையும் இழந்துட்டு இருக்கா… நான் செஞ்ச தப்புக்கு, அவளுக்காக நான் கொஞ்சமாவது சப்போட்டா இருக்கணும்னு நினைக்கிறேன் மாம்.” அவருக்கு சூழ்நிலையைப் புரிய வைக்க முயன்றான்.

 

ஆனால், அவனது எந்த விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை. 

 

“நீ இப்படி முட்டாள்தனமா இருக்காத கௌதம். இந்த உலகத்திலேயே ரொம்ப ரொம்ப அழகான பொண்ண தேடி உனக்கு கட்டி வைக்கணும்னு எவ்வளோ ஆசைப்பட்டேன்டா, ஆனா நீ போயும் போயும் இவள… ச்சே இவகூட எல்லாம் உன்னால எப்படிடா இருக்க முடியும்?” கங்காவை அருவருப்பாக பார்த்தவர், கௌதமிடம் ஆற்றாமையாக அங்கலாய்த்தார்.

 

“மாம்… ஏன் இப்படி பேசுறீங்க? கங்கா ரொம்ப நல்ல பொண்ணு மாம், நீங்க அவளபத்தி தெரியாம இப்படி பேசாதீங்க. நீங்களும் கூட லவ் மேரேஜ் தான பண்ணிக்கிட்டீங்க?” கௌதம் கேட்கும்போதே, மனோகர் தன் காரை நிறுத்திவிட்டு வேகமாக அங்கே வந்தார். விசயம் கேள்விப்பட்டு அடித்துப் பிடித்து வந்திருந்தார் மனிதர்.

 

அங்கே நின்றிருந்தவர்களை அதிருப்தியாக பார்த்தவர், மகனிடம் வந்து, “நானும் திலோவும் உண்மையா காதலிச்சு, ரெண்டு குடும்பத்து சம்மதத்தோட முறையா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்டா… நீ இவளை காதலிச்சியா? ஏதோ கில்ட்டி ஃபீலிங்ல, அவ கழுத்துல தாலிக்கட்டி கூட்டிட்டு வந்திருக்க… இதுக்கு பேரு கல்யாணமா?” மனோகரும் காட்டமாக கேட்டார்.

 

“டேட், என்னால ஒரு பொண்ணு பாதிக்கப்படுறதை சும்மா வேடிக்கை பார்த்திட்டு இருக்க முடியல. அதான் இந்த முடிவெடுத்தேன், என்னை வேற என்ன செய்ய சொல்றீங்க?” கௌதமும் தன்நிலையை வெளிப்படையாகச் சொல்லிவிட்டான். 

 

இப்படி வீட்டிற்குள்ளே கூட விடாமல், வெளியே நிறுத்தி வைத்து பேசுவது அவனுக்கு எரிச்சலை தந்தது. அப்பாவும் அம்மாவும் வாதத்தை நீடித்துக் கொண்டே போவது வேறு அவனை வெறுப்பேற்றியது.

 

‍”மாம் ப்ளீஸ்‌ சீன் கிரியேட் பண்ணாதீங்க‍, கங்காவால ரொம்ப நேரம் நிக்க முடியாது. முதல்ல உள்ள போகலாம்.” என்றான்.

 

“நீ என்ன சொன்னாலும் சரி, அவள இந்த வீட்டுக்குள்ள வர ஒத்துக்க மாட்டேன். நீ மட்டும் உள்ள வா.” திலோத்தமா உறுதியாக மறுத்தார்.

 

“நோ மாம், கங்கா இல்லாம நான் உள்ள வர மாட்டேன்.” கௌதம் உறுதியாகச் சொல்ல,

 

“அப்ப நீயும் அவளோடவே போடா…” மனோகர் ஆத்திரமாக சொல்லிவிட்டார்.

 

ஒருநொடி திகைத்து நின்றுவிட்ட கௌதம், “நீங்க என்னை புரிஞ்சிப்பீங்கன்னு நினச்சேன். நீங்க இவ்வளோ ரூடா நடந்துப்பீங்கன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணல. இட்ஸ் ஓகே நாங்க போறோம்.” என்று அவன் கங்காவுடன் திரும்பி நடக்க, திலோத்தமா மகனை பிடித்து இழுத்து அவனை உலுக்கினார்.

 

“போன்னு சொன்னா நீ எங்களவிட்டு போயிடுவியா நீ? உனக்கு நாங்க எல்லாம் வேணாமா? ஏன் கௌதம் இப்படி பண்ற?” என்று அவன் மார்பில் சாய்ந்து கதறினார்.

 

அவனுக்கு அம்மாவின் தனக்கான பாசம் தெரியுமாதலால், அவன் முகமும் வருத்தத்தைக் காட்டியது. “என்னை என்ன செய்ய சொல்றீங்க மாம்? நீங்க இப்படி எங்கள வெளியே நிக்க வச்சு விரட்டறது எனக்கு அவமானமா ஃபீலாகுது.” கௌதம் நொந்தபடி சொன்னான்.

 

அங்கு நடக்கும் எதுவும் கங்காவிற்கு சரியாகப்படவில்லை. அவள் முகம் முழுவதும் கலக்கமும் பதற்றமும் சூழ்ந்திருந்தது.

 

“இது ஒரு பொண்ணோட வாழ்க்கை நீங்களும் கொஞ்சம் பொறுமையா பேசுங்க மா, பெரிய மனசு பண்ணி எங்க பேத்திய ஏத்துக்கங்க.” சதாசிவம் தாத்தா கையெடுத்து கும்பிட்டு அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

 

“என் மகன் ஏமாந்தவன்னு அவன் தலையில இந்த நொண்டிய கட்டிவிட்டுட்டு இப்ப இவள நாங்க ஏத்துக்கணும் வேறயா? நாங்க யாரு, எங்க ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியுமாயா உங்களுக்கெல்லாம்? பெருசா பேச வந்துட்டீங்க.” மனோகர் அவர்களை தரக்குறைவாக பேச, அவர்களும் பதில் பேச, அங்கே வார்த்தை மோதல் தொடங்கியது.

 

“உங்க மகன் கொழுப்பெடுத்து போய் காரை விட்டு மோதுனதால தான, எங்க பொண்ணுக்கு இந்த நிலைமை. அதை மறச்சிட்டு என்னவோ உத்தமர் போல பேசுறீங்க.”

 

“அதுக்காகத்தான் பணத்தை கொட்டி கொடுத்தேனே, அது உங்களுக்கு பத்தலனா இன்னும் எவ்ளோ பணம் வேணும் எடுத்து வீசறேன். பொறுக்கிட்டு போய் தொலைங்க.”

 

“யோவ் பெரிய மனுசன்னு பார்த்தா பொண்ணோட வாழ்க்கைய விலை பேசுறீயா, உன் மகன் கட்டுன தாலி எங்க பொண்ணு கழுத்துல இருக்கு. அதுக்கான ஆதாரமும் இருக்கு. இனி நீங்க ஏமாத்த முடியாது.” என்று சட்டம் பேசினர்.

 

“போதும் நிறுத்துங்க… இங்க யாரும் யாரையும் ஏமாத்த போறதில்ல!” என்று கோபமாக சொன்ன கௌதம், “நாங்க போறோம் மாம், உங்க மனசு மாறினா கால் பண்ணுங்க.” என்று கங்காவை அழைத்துக்கொண்டு காரை நோக்கி நடந்தான். மற்றவர்களும் அவனுடன் நடந்தனர்.

 

மனோகர் அடுத்தென்ன செய்வது என்று புரியாமல் நிற்க, திலோத்தமா உள்ளே ஓடினார். 

 

உள்ளே சென்ற வேகத்தில் கையில் கேனோடு வெளியே வந்தவர், “கௌதம்… நீ அவளோட போன… நான் இங்கயே இப்பவே என்னை கொளித்துக்குவேன்!” என்று மிரட்டிய திலோத்தமா தன்மேல் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டார்.

 

“வாட் நான்சென்ஸ்… என்ன மாம் செய்றீங்க?” என்று கௌதம் சத்தமிட, அவர் தீக்குச்சியை உரசி நெருப்பு மூட்டி இருந்தார். மனைவியைத் தடுக்க முயன்ற மனோகரும், மகனின் பரிதவிப்பைக் கண்டு சற்று தாமத்தித்தார். 

 

பெற்றவர்கள் இருவரும் எப்படியாவது தன் மகனை தன்னிடம் இருத்திக்கொள்ள முயன்றனர். அதை உணராதவன், கங்காவை விட்டு ஓடிவந்து அம்மாவை தடுத்து, அணைத்துக்கொண்டான்.

 

“ஏன் மாம் இப்படி செய்றீங்க? உங்களுக்கு ஒன்னும் ஆகல இல்ல?” கௌதம் பதற்றமாக கேட்க, திலோத்தமா அவன் கைகளில் கண்மூடி சரிந்தார். 

 

“டேய், முதல்ல திலோவ உள்ள தூக்கிட்டு போடா, மத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்.” என்று மனோகர் சொன்னதும், அவனுக்கும் வேறு தோன்றவில்லை. திலோத்தமாவை கைகளில் ஏந்திக்கொண்டு உள்ளே சென்றான்.

 

கங்காவின் பார்வை போகும் அவனையே அசையாமல் பார்ந்திருந்தது. அவளின் நெஞ்சம் மொத்தமாக அசைந்து போயிருந்தது. 

 

“இன்னும் ஏன் இங்க நிக்கிறீங்க? கிளம்புங்க வெளியே…” மனோகர் அவர்களை துரத்த முற்பட, மீண்டும் அவர்கள் நியாயம் கேட்டனர்.

 

மனோகர் அவர்களிடம் பேச்சை வளர்க்காமல், அவர்களை விரைவாக வெளியேற்றும்படி வேலையாட்களிடம் உத்தரவிட்டு உள்ளே விரைந்தார். அதில் கோபமாகி இவர்கள் சத்தமிட, பத்து வேலையாட்களுக்கு அவர்களை தடுத்து வெளியேற்ற முயன்றனர். கங்காவையும் இழுத்து வெளியே தள்ள, அவள் நிற்க முடியாமல் தரையில் விழுந்திருந்தாள்.

 

வெளியே நடப்பதைக்‌ கவனத்தில் கொள்ளாத கௌதம், அம்மாவிற்கு என்னவானதோ என்று பயந்து டாக்டருக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தான்.

 

கங்காவும் அவள் குடும்பத்தினரும் கோபமாக வெளியேறிவிட்டனர் என்று மட்டும் தான் மனோகர் கௌதமிடம் சொல்லி இருந்தார்.

 

அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. உடனே சென்று கங்காவை பார்க்க நினைத்தான். ஆனால், திலோத்தமாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அன்று முழுவதும் அவனால் எங்கும் நகரமுடியவில்லை. திலோத்தமா அவனை நகரவிடாமல் பிடித்து வைத்திருந்தார்.

 

அந்த ஒரேயொரு நாள்தான் எல்லாமே முடிந்து விட்டிருந்தது. மறுநாள் கௌதம் கங்காவின் வீட்டிற்கு சென்று பார்க்க, அங்கே யாருமே இருக்கவில்லை. இரவோடு இரவாக அவர்கள் குடும்பமே சென்னையை விட்டு சென்றிருந்தனர்.

 

அன்று காலை, கங்காவிடம் பேரம் பேசி, அவர்கள் கேட்டதைவிட அதிக பணத்தை செட்டில் செய்ததாக கூறி, கங்கா கையோப்பமிட்ட விடுதலை பத்திரத்தை மனோகர் கௌதமிடம் நீட்டினார். கௌதம் அதை நம்பாமல் தான், கங்காவை தேடி ஓடி வந்திருந்தான். ஆனால் அவனுக்கு மிஞ்சியதெல்லாம் ஏமாற்றம் மட்டும் தான்.

 

தன்னைவிட பணத்தை பெரிதென்று நினைத்து ஓடிபோனாளென்று கங்கா மீது அவனுக்கு அத்தனை கோபம், ஆத்திரம் பொங்கியது. இப்படி ஒருத்திக்காக தான் இத்தனை செய்தோமே என்று தன்மீதும் அவனுக்கு கோபம் எழுந்தது.

 

அதன்பிறகு அவன் யாரிடமும் எதுவும் பேசவில்லை. தனக்குள்ளே புழுகிக்கொண்டிருந்தான். கொஞ்ச நாட்கள் கங்காவை அங்கிங்கென்று இலக்கின்றி தேடியும் அலைந்தான். அப்போதும் அவள் பாவமென்று அவன் ஒரு மனம் கனத்தது. இல்லை அவள் தூரோகி என்று அவன் மறுமனம் கனன்றது. அந்த போராட்டத்தில் இருந்து வெளிவர அவனுக்கு சில மாதங்கள் ஆகியிருந்தது.

 

அவனைச் சுற்றி எல்லாமே எப்போதும் போலத்தான் இருந்தது. அவன் அப்பா, அம்மா, அவர்கள் வீடு, அவர்கள் தொழில், அவன் நண்பர்கள் என்று எதுவும் மாறவில்லை. ஆனால் அவன் மாறிவிட்டிருந்தான். தனக்குள்ளேயே கொஞ்ச கொஞ்சமாக இறுகி போயிருந்தான்.

 

தனக்கு மனமாற்றம் தேவை என்று தந்தையின் தொழிலை விட்டு விலகி, சினிமா தயாரிப்பு தொழிலில் இறங்கினான். புது தொழில், புது சூழ்நிலை, அதிலிருந்த சவால்கள் என அவனை ஆக்கிரமித்துக்கொள்ள, இப்போது அவனும் சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயரை நிலைநாட்டி இருக்கிறான்.

 

பழைய நினைவுகளின் தாக்கத்தில் கௌதமுக்கு உறக்கம் வருவதாக இல்லை. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் முடிந்த பின்னரும் கூட, தன் மனதில் கங்காவினால் ஏற்பட்ட தாக்கம் குறைந்திருக்கவில்லை என்று விரக்தியோடு எண்ணிக்கொண்டான்.

 

***

 

கங்காவும் அன்றைய இரவில் தூக்கம் தொலைத்து தான் கிடந்தாள். பழைய நினைவுகளின் தாக்கம் அவளையும் எப்போதும் போல தாக்கிக்கொண்டிருக்க, அதன் தாக்குதலை அவளும் தாங்கிக்கொண்டிருந்தாள்.

 

அன்றைய இக்கட்டான திருமண சூழ்நிலையில் எதையும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. உனக்காக நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை தந்தவன், அப்போதே அவளை தெருவில் வீசிவிட்டு போவானென்று அவளும் நினைத்திருக்கவில்லை.

 

தன்னை வீதியில் தள்ளிவிட்ட அவமானம், என்றும் அவளுக்குள் மறையாது. திருமண கோலத்தில்,  இருபுறமும் தாங்கி வந்திருந்த ஊன்றுகோல்களும் பக்கத்திற்கு ஒன்றாய் அவளோடு விழுந்து கிடக்க, 

அந்த நிலையில் அவளால் சுயமாக எழுந்து நிற்கவும் முடியவில்லை. எட்டி தன் ஊன்றுகோலை பற்றி எழவும் முடியவில்லை. மனம் நொந்து, உணர்வுகள் வெந்து வெடித்தழ மட்டுமே முடிந்தது.

 

சுற்றியிருந்த அனைத்தையுமே மறந்து, அத்தனை சத்தமாக கத்தி கதறி அழுதிருந்தாள் கங்கா. அப்போதுதான் மல்லிகா மகளை கவனித்து வந்து தூக்கினார். 

 

அவளின் கத்தலும் கதறலும் கேட்க வேண்டியவனுக்கு கடைசிவரை கேட்கவே இல்லை. இனி கேட்க போவதுமில்லை என்று விரக்தியாக எண்ணிக் கொண்டாள்.

 

***

பெண் வருவாள்…

 

(தாமத்தத்திற்கு மன்னிக்கவும்… கதையின் நிறை குறைகளை கூறுங்கள் திருத்திக் கொள்கிறேன்… காத்திருந்து தொடர்ந்து படித்துவரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏 அடுத்த பதிவு விரைவில் தர முயற்சிக்கிறேன்)