ஏன் பெண்ணென்று பிறந்தேன் 13

IMG-20211007-WA0009 (1)-7b9afea3

ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 13

 

திலோத்தமாவின் மனம் ஆறுவதாக இல்லை. எப்போதோ முடிந்து போனதாக நினைத்த விசயம், இப்போது மீண்டும் தோண்டி எடுக்கப்படுவதில் அவருக்கு சற்றும் உடன்பாடு இருக்கவில்லை. கௌதம் ஏன் அந்த பெண் விசயத்தில் இத்தனை அழுத்தமாக இருக்கிறான் என்று அவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

 

தன் மடிகணினியில் பங்குச்சந்தை புள்ளிகளின் ஏற்ற இறக்கங்களைக் கவனித்துக் கொண்டிருந்த மனோகர், தன் காதல் மனைவியின் தவிப்பைக் கண்டு கொள்பவராகத் தெரியவில்லை.

 

“மனோ… இங்க எனக்கு டென்ஷன் ஏறிட்டு இருக்கு. நீங்க என்ன அந்த ஸ்க்ரீனுக்குள்ள தலைய விட்டுட்டு இருக்கீங்க.” என்று அவர் கணவனிடம் அங்கலாய்க்க,

 

“என்னாச்சு திலோ டியர், ஏன் வீணா டென்ஷன் ஏத்திக்கற நீ?” அவர் வாய் அக்கறையாக கேட்டாலும், அவரின் பார்வை திரையிலிருந்து நகருவதாக இல்லை.

 

திலோத்தமா கோபமாக அந்த மடிகணினியை மூடி தூர வைத்துவிட்டு, கணவனை முறைத்து நின்றார். 

 

“திலோ நீ பண்றது சரியே இல்ல, எவ்வளோ இம்பார்டன்ட் வொர்க் பார்த்துட்டு‌ இருந்தேன் தெரியுமா?” மனோகரும் மனைவியைக் கடிந்தார்.

 

“அதைவிட நம்ம கௌதம் லைஃப் இம்பார்டன்ட்.” அவர் அழுத்தமாகச் சொல்ல,

 

“கௌதம் லைஃப்ல இப்ப என்ன சிக்கல்?” மனோகர் ஊஞ்சலில் கைகளைக் கட்டி அமர்ந்தபடி கேட்டார். 

 

“புதுசா எந்த சிக்கலும் இல்ல, பழைய சிக்கல் தான். அந்த… அந்த நொண்டி பொண்ண பத்தி, நம்ம தீப்திகிட்ட எல்லாத்தையும் சொல்ல போறதா சொல்றான்.” என்று முகத்தைச் சுருக்கியவாறு கணவனின் அருகில் அமர்ந்து கொண்டார் திலோத்தமா.

 

வீட்டின் பின்புற தோட்டத்து ஊஞ்சலில் அமர்ந்து தான், இருவரும் வழக்காடிக் கொண்டிருந்தனர்.

 

“யார பத்தி சொல்ற…?” என்று யோசித்தவர், “ஓ அந்த கங்கா பொண்ணு பத்தி சொல்றீயா?” என கேட்க,

 

“கங்காவோ மங்காவோ அவ பேரை பத்தி நமக்கென்ன?” என்று எரிச்சலுற்றவர், “கௌதம் ஏன் இன்னும் அவ பேரை மறக்காம இருக்கான்? அந்த கண்றாவி கல்யாணத்தைப் போய் தீப்தி கிட்ட சொல்லியே ஆகணும்னு வேற சொல்றான்.” என்று படபடத்தார்.

 

படபடக்கும் மனைவியின் தோளை வளைத்துக் கொண்டவர், “ரிலாக்ஸ் டியர், நீ இவ்வளோ டென்ஷனாகி உன் பிபிய ஏத்திக்கிற அளவுக்கு இது பெரிய மேட்டரே இல்ல. கௌதம் தீபூவ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலியே, அவன் லைப்ல நடந்த ஜஸ்ட் எ இன்ஸிடண்ட் பத்தி அவளுக்கு தெரியப்படுத்த நினைக்கிறான்.” என்று அவருக்கு சமாதானம் சொன்னார் மனோகர்.

 

“ஐயோ மனோ… தீப்திக்கு இதெல்லாம் தெரியவே வேணா, அவளுக்கு தெரிஞ்சா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு கூட நமக்கு தெரியாது.”

 

“இவ்வளவு தானே, நான் கௌதம் கிட்ட பேசறேன் விடு.” என்று அவர் புன்னகைக்க, திலோதமாவும் முகம் இளகினார்.

 

“ஆனாகூட எப்படி மனோ, காசை வாங்கிட்டு ஊரை விட்டே ஓடிபோனவளைப் போய், இவன் நினவுல வச்சிருக்கான். அந்த ஒருநாள்லயே அவ நம்ம கௌதமை அவ்வளோ பாதிச்சிட்டாளா?” 

 

திலோத்தமாவால் அந்த ஒன்றை மட்டும் ஜீரணிக்கவே முடியவில்லை. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள்… அப்படி ஒருத்தியின் தடம் மொத்தமாக அழிப்பட்டு போன பிறகு, கௌதம் அந்த விசயத்தைப் பற்றி சொன்னது, அவரை என்னவோ செய்தது.

 

மனோகர் உதட்டை பிதுக்கி தோள் குலுக்கினார். “அந்த பொண்ணு மேல கௌதம்க்கு ஆசை, காதலெல்லாம் வந்திருக்காது…” என்று இழுத்தார்.

 

“அது எனக்கும் தெரியும், போயும் போயும் அந்த பிச்சக்காரிய போய் என் பையனுக்கு பிடிக்குமா என்ன? அவளும் ஆளும் பார்க்கவே சகிக்கல.” திலோத்தமா முகத்தை அத்தனை வெறுப்பாக சுழித்துக் கொண்டார். 

 

மனோகர், மனைவி பேச்சை ஆமோதித்து தலையசைத்து விட்டு, சிறு மேஜையில் இருந்த தேநீர் குவளையை எடுத்து, அவரிடம் கொடுத்துவிட்டு தானும் பருகலானார்.

 

சற்று நேரம் தேநீரின் இதமான சுவையில் பேச்சுக்கள் அவசியப்படவில்லை. 

 

சட்டென்று திலோத்தமா, “ஏங்க மனோ, அந்த நொண்டி பொண்ணு இன்னுமா உயிரோட இருக்கும்? இந்நேரம் செத்து போயிருப்பா இல்லை?” என்று கேட்டார். 

 

அப்போதுதான் வீட்டுக்குள் வந்த கௌதம் கைலாஷின் செவிப்பறையை அந்த கேள்வி பலமாக தாக்கி, அவனை தேங்க செய்தது. 

 

அவர்கள் தோட்டத்தின் புறம் திரும்பி அமர்ந்திருக்க, தங்கள் பின்னால் வந்து நின்ற மகனை இருவரும் கவனிக்கவில்லை.

 

மனைவியின் கேள்வியில் சற்று திகைத்த மனோகர், “நீ ஓவரா யோசிக்கிற திலோ, அந்த பொண்ணால நடக்க தான் முடியாது. மத்தபடி ரொம்ப ஸ்டாராங் கேர்ள் தான்.” என்று சொல்ல, திலோத்தமா முகம் கடுமை காட்டியது.

 

“என்ன நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணி பேசற மாதிரி இருக்கு?”

 

“சப்போர்ட் இல்ல டியர், நான் பார்த்ததை தான் சொல்றேன்.”

 

‍”என்ன பார்த்தீங்க பெருசா?”

 

“அன்னிக்கு டைவர்ஸ் பேப்பர்ல அந்த பொண்ணோட சைன் வாங்கறத்துக்காக, நானே நேரா அவங்க வீட்டுக்கு போனேனில்ல. அப்ப நான் எவ்வளவு பேசியும் அந்த பொண்ணு மசியவே இல்ல. முழுசா ஒரு கோடி ரூபா செக்க நீட்டினேன், அதையும் தூக்கி எறிஞ்சிட்டா! சுயமா எழுந்து நடக்க முடியலனா கூட, என்னமா கான்ஃபிடண்டா மறுத்து பேசினா தெரியுமா? 

 

ஆள வச்சு கொன்னுடுவேன்னு மிரட்டி கூட பார்த்தேன். அவளோட சொந்த காரங்க எல்லாம் கூட பயந்தாங்க, பட் அவ பயப்படல… கடைசியா, கௌதம் பேரை சொன்னதும் தான். கொஞ்சம் இறங்கி வந்தா… அவன் தான் உன்னோட வாழ முடியாதுன்னு டைவர்ஸ்ல சைன் வாங்கிட்டு வர சொன்னான்னு சொன்னேன், அப்பவும் அவ நம்ப மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சா. 

 

கௌதம் அவசரப்பட்டு உன்ன கட்டிக்கிட்டானே தவிர உன்னோட வாழறதுல அவனுக்கு கொஞ்சமும் விருப்பமில்ல. உங்க உறவை முறிச்சிக்க தான் என்னை அவனே அனுப்பி வச்சான்னு சொன்னதுக்கு அப்புறம் தான் சைன் பண்ணி கொடுத்தா.” மனோகர் அன்று நடந்ததைச் சொல்ல சொல்ல, 

 

கேட்டுக் கொண்டிருந்த கௌதமின் இதயத்துடிப்பு, ஏகத்துக்கும் வேகமெடுத்து துடித்தது. தாங்கள் ஏமாற்றப்பட்டதின் ஆற்றாமை, ஆவேசம், அவனை நிலைக்குலையச் செய்தது. 

 

திலோத்தமா, “இதெல்லாம் தான் அப்பவே என்கிட்ட சொல்லிட்டீங்களே, இப்ப எதுக்கு மறுபடி ரீப்ளே பண்ணிட்டு இருக்கீங்க… அவ அந்த செக்க வாங்கலனா என்ன, அவளோட அப்பந்தான் முழுசா செக்கை வாங்கிட்டு, சென்னைய விட்டு ராத்திரியோட காலி பண்றத்துக்கு தனியா வேற காச கறந்துட்டு போனானே.” என்று அங்கலாயத்தார்.

 

மனோகர், “ஆமா ஆமா, உன் மகன் முட்டாள் தனமா செஞ்சு வச்சதுக்கெல்லாம், நான் தான் தண்டம் வைக்க வேண்டியதா போச்சு.” என்று நொந்து கொண்டார்.

 

“அதை விடுங்க மனோ, விசயத்துக்கு வாங்க, தப்பி தவறி கூட இந்த விசயத்தை பத்தி கௌதம் தீப்தி கிட்ட பேசவே கூடாது… தீப்திய கூட சமாளிச்சிக்கலாம். ஆனா இதெல்லாம் கொஞ்சம் வெளியே கசிஞ்சா கூட, நமக்கு எவ்வளவு கௌரவ குறச்சல்… கண்டிப்பா இந்த விசயம் வெளியே வரவே கூடாது.” திலோத்தமா வேகத்துடன் பேசிக்கொண்டே போனார்.

 

அதற்கு மேல் அவர்கள் பேச்சைக் கேட்கும் மனோதிடம் அவனுக்கு இருக்கவில்லை. வேகமாக தன் அறைக்குள் நுழைந்தவன், வழக்கத்திற்கு மாறாக கதவை ஆவேசமாக அறைந்து மூடி தாழிட்டு கொண்டான். 

 

தன் அறை சோஃபாவில் தொப்பென்று அமர்ந்தவனால், எதையும் யோசிக்கக் கூட முடியவில்லை. அவன் கண்முன் மீண்டும் மீண்டும் கங்காவின் முகமே வந்து நின்றது. மூச்சு காற்றுக்காக தண்ணீருக்குள் தவிக்கும் உணர்வு. அவனால் பொறுக்க முடியவில்லை. சட்டென எழுந்தவன், வந்த வேகத்திலேயே காரை எடுத்துக்கொண்டு விரைந்தான். 

 

சென்னையிலிருந்து மன்னார்குடி கிட்டத்தட்ட ஏழு மணிநேர பயண தூரம். தூரம் கூட அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. கங்காவை பார்த்தே ஆகவேண்டும் என்ற உந்துதல், தன் உடல் அசதியையும் கருத்தில் கொள்ளாது விரைந்தான். 

 

அவளிடம் சென்று என்ன பேச வேண்டும் என்று கூட அவனுக்கு யோசனை இல்லை. அவளை உடனே பார்க்க வேண்டும் அவ்வளவுதான்.

 

ஒருநாள், இரண்டு நாள் இல்லை, மொத்தமாக நான்கு ஆண்டுகள், கங்காவை எண்ணி எண்ணி வெறுத்து புழுகி மடிந்திருக்கிறான்.

 

இத்தனை ஆண்டுகள், அவளுக்காக தான் எல்லாம் செய்ய போய், கடைசியில் கேவலம் காசை பார்த்ததும் தன்னை தூக்கி எறிந்து போனாளா? என்ற ஆத்திரம், கோபம் அவனை உள்ளுக்குள் அரித்தெடுத்துக் கொண்டிருந்தது. 

 

அவள் அப்படியில்லை என்ற உண்மை உடைந்த நொடி, அவனுக்குள் சொல்லில் அடங்காத தடுமாற்றங்கள்! 

 

இதற்கெல்லாம் காரணம் தன் பெற்றோர் என்பது கூட அவனை பெரிதாக பாதிக்கவில்லை. அவனை எப்போதும் பாதிக்கும் ஒரே விசயம், கங்கா தான். இப்போதும் அவளுக்காகவே ஓடினான்.

 

நேற்றிரவு முழுவதும் தூக்கமின்றி நடந்த நிகழ்வுகளை அசைப்போட்டு இருந்தவன், விடியற்காலையில் சென்னையை நோக்கி கிளம்பி இருந்தான். அடுத்த வாரம் சரித்திரன் படம் வெளியீடு என்பதால் அதற்கான பணிகளை கவனிக்க வேண்டி இருந்தது. அந்த பணிகளை ஓரளவு கவனித்துவிட்டு, வீட்டிற்கு வந்தவன், அங்கே கிடைத்த செய்தியில், வந்த வேகத்திலேயே திரும்பிக் கொண்டிருந்தான்.

 

***

 

வழக்கமான மாலை வேளையில், வேதா அழகு நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அழகுபடுத்தும் பெண்கள், அழகாகும் பெண்கள், தங்கள் முறைக்காக காத்திருக்கும் பெண்கள் என அந்த இடம் அழகு பெண்களால் நிரம்பி இருந்தது. 

 

அவர்களின் சலசலக்கும் பேச்சு சத்தங்கள் கூட, அந்த இடத்திற்கு புது சோபையை தந்து கொண்டிருந்தது. 

 

கங்காவும் ஒரு பெண்ணின் முகத்தில் தன் கைவண்ணத்தைக் காட்டிக் கொண்டிருந்தாள். தொழில் அர்பணிப்பில் அவளின் முகத்திலும் தெளிவு மீண்டிருந்தது. அவள் அப்படித்தான், எத்தனை அழுத்தத்தில் இருந்தும் தன்னை மீட்டுக்கொள்ள, இத்தனை காலங்களில் அவள் கற்றிருந்தாள்.

 

வெளி சாலையில் தொடர்ந்து ஒலித்த ஹாரன் சத்தம், அந்த பெண்களின் கவனத்தையும் கலைத்து வெளியே பார்க்க வைத்தது. தன் ஈர கைகளைத் துடைத்துவிட்டு கங்காவும் வெளியே வந்து பார்த்தாள்.

 

ஹாரன் ஒலிப்பதை நிறுத்திவிட்டு, கௌதம் கைலாஷ் தன் காரில் இருந்து இறங்கி, அவளை பார்த்து நின்றான். கங்கா அவனை புரியாமல் பார்த்தாள். சாலையின் எதிர்பக்க ஓரத்தில் அவன் கார் அருகில் நின்றிருந்தான் அவன். 

 

கௌதம் தனக்காக தான் இங்கு வந்து நிற்கிறானா? அவளுக்குள் சந்தேகம் எழுந்தது. இங்கும் ஏதாவது பிரச்சனை செய்வானோ? என்று அவளை தயங்கவும் வைத்தது. ஆனாலும் அவன் தன் மேல் பதித்திருந்த அசையாத பார்வையைத்‌ தவிர்க்க முடியாமல், அவனை நோக்கி மெல்ல நடந்தாள்.

 

சாலையைக் கடந்து தன்னை நோக்கி வருபவளைத் தவிப்பாக பார்த்து‌ நின்றிருந்தான் கௌதம் கைலாஷ். 

 

இருபுறமும் பலவித அத்தியாவசிய கடைகள் அமைந்திருக்க, எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும் நகரின் முக்கிய பகுதி அது. இப்போதும் அவர்களைச் சுற்றி கணிசமான ஆட்களும், சாலைகளில் வேகமெடுத்து பறக்கும் வாகன இறைச்சலும் அங்கே சூழ்ந்திருந்தது. 

 

அக்கம் பக்கம் கடைகளில் இருப்பவர்கள் பார்வையும் கவனமும் தன்மேல் படிவதைக் கவனித்தபடி, ஒருவித சங்கடத்துடன் கங்கா அவனெதிரில் வந்து நின்றாள்.

 

கௌதம் பேச வாயெடுக்கும் முன், “ப்ளீஸ் கௌதம்… இங்க எந்த பிரச்சனையும் பண்ணாதீங்க. நான் தான் உங்க வழிக்கே வரலயே… சத்தியமா இனியும் வரமாட்டேன். இப்படி தேடி வந்து சீன் கிரேட் பண்ணாதீங்க. என்னை விட்ருங்க.” கங்கா தாழ்ந்த குரலில் அவனிடம் வேண்ட,

 

கௌதம், “நான் உன்கிட்ட சாரி சொல்லணும் கங்கா.” என்றவனை, வித்தியாசமாக பார்த்தாள்.

 

“என்ன?”

 

“நான்… உன்ன தப்பா நினச்சுட்டேன் கங்கா! நான் உனக்காக அவ்வளோ ரிஸ்க் எடுத்தும், நீ கேவலம் என் அப்பா காட்டின காசுக்காக  என்னைவிட்டு போயிட்டன்னு நினச்சு… அவ்வளோ கோபம் எனக்கு.

 

பட், இன்னைக்கு தான் தெரிஞ்சது, நீ காசு வாங்கிட்டு என்னைவிட்டு போகலனு. அப்பா என் பேரை சொல்லி உன்ன குழப்பினதால டைவர்ஸ் பேப்பர்ஸ்ல சைன் பண்ணி இருக்கனு!” 

 

அவன் தயங்கி சொல்ல, அவள் நெற்றி தசைகள் யோசனையில் சுருங்கி விரிந்தன. 

 

“நீங்க தான, என்னை மாதிரி நொண்டி பொண்ணோட… காலம் பூரா வாழ முடியாதுன்னு… நம்ம கல்யாணத்த முறிச்சிக்க கையெழுத்து வாங்கிட்டு வர சொல்லி, உங்க அப்பாகிட்ட…” அவனை ஒற்றை விரலில் சுட்டி, முழுதாக பேச வராமல் திக்கி திக்கி கங்கா கேட்க, 

 

கௌதம் இல்லையென்று மறுப்பாக தலையசைத்தான்.

 

“அப்பா உன்கிட்ட பொய் சொல்லி இருக்காரு கங்கா…” என்றவன் குரல் அவமானத்தில் தேய்ந்தது.

 

கங்கா இன்னும் அவனை நம்பாமல் தான் பார்த்திருந்தாள். 

 

தன்னை அவளிடம் நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்தான் அவன்.

 

“நான் ஏனோதானோன்னு அவசரப்பட்டு உன்ன கல்யாணம் பண்ணிக்கல கங்கா. உனக்காக எப்பவும் நான் இருக்கணும்னு உறுதியெடுத்து மனப்பூர்வமா தான் உன் கழுத்துல தாலி கட்டினேன்.

 

அம்மா, அப்பா கிட்ட உனக்காக அவ்வளவு வாதாடினதை கேட்டும், எப்படி நான் உன்ன விலக்கி வைப்பேன்னு நீ நினச்ச? 

 

டைவர்ஸ்ல நீ சைன் போட்டதா அப்பா சொல்லியும் நம்பாம, நேரா உன்ன பார்க்க தான் ஓடி வந்தேன். அங்க நீங்க யாருமே இல்ல. அப்பவும் நாள் கணக்குல சென்னை ஃபுல்லா உன்ன தேடி அலைஞ்சேன் தெரியுமா?” கௌதம் தன் நிலைப்பாட்டை அவளிடம் சொல்ல, கங்கா அவனை அசையாது பார்த்திருந்தாள்.

 

“நிஜமா… நிஜமா நீங்களா என்னை ஒதுக்கலையா?” அப்போதும் நம்ப முடியாமல் திணறலாக, விழியோரம் ஈரம் கசிய கேட்டவளுக்கு பதிலாக, மறுப்பாக தலையசைத்தான்.

 

கங்கா ஆழ்ந்த மூச்செடுத்து, இமைகளை அழுத்த மூடி திறந்தாள். அவளுக்குள் மலைபோல் கனத்த பாரம்‌ சிறிது சிறிதாக உருகி கசியும் உணர்வு.

 

வெற்று வார்த்தைகளில் விவரிக்க முடியாத நிம்மதி, ஆசுவாசம் பரவியது அவளுள்.

 

நீ வாழ்க்கைக்கு தகுதியற்றவள் என்ற முத்திரை இட்டு ஒதுக்கித் தள்ளுவது எத்தனை வலி மிகுந்த உணர்வு. கதிரவன் அவளை அப்படிதான் ஒதுக்கி தள்ளினான். பெரிதாக நம்பிக்கை தந்து மாலையிட்ட கௌதமும் அவளை அப்படித்தான் ஒதுக்கி தள்ளி, குப்பையென தெருவில் வீசி போனதாக எண்ணி எண்ணி எத்தனை துடித்து துவண்டிருப்பாள்? ஏன் உயிரை மாய்த்துக்கொள்ள கூட துணிந்திருப்பாள்! ஆனால் அன்று அவள் தாத்தா அவளை சாக விடவில்லை. இதோ இப்போதும் அவள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள்.

 

அது‌ பொதுவிடம் என்பதையும் மறந்து, சுற்றி அவளை கவனிப்பவர்களையும் மறந்து, உணர்ச்சிமிகுதியில் பேச்சற்று அவன் முன் கைக்கூப்பினாள். 

 

“ஏய் கங்கா என்னாச்சு?” கௌதம் பதற,

 

“ரொம்ப தேங்க்ஸ் கௌதம்… மத்தவங்க மாதிரி நீங்களும் என்னை உங்க வாழ்க்கையில இருந்து குப்பையா தூக்கி எறிஞ்சிட்டீங்கன்னு நினச்சிருந்தேன்… நீங்க அப்படி இல்ல. என்னை நீங்களா வேணானு ஒதுக்கல… இது போதும் எனக்கு! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!” என்றாள்.

 

அவளுக்குள் அவன் மீது ஒட்டியிருந்த நம்பிக்கை மீண்டிருந்தது. இதைவிட பெரிதாக அவள் எதையும் பெற்றுவிட போவதில்லை. அவளை பொறுத்தவரை மற்ற எல்லாவற்றையும் விட அதுவே பெரிது, கொண்ட நம்பிக்கையைக் காப்பது!

 

அவளின் நிலை அவனுக்கும் ஓரளவு புரிந்தது. அவனுக்கும் தான் தந்த நம்பிக்கையை முழுதாய் காக்க வேண்டிய கடமை இருக்கிறதே. “நம்ம பிரிக்கணும்னு தான் இவ்வளோ டிராமா பண்ணி இருக்காங்க என் பேரண்ட்ஸ்! பணத்துக்கு ஆசைப்பட்டு இதுக்கெல்லாம் உன் பேரண்ட்ஸும் உடந்தையா இருந்துருக்காங்க.” கௌதம் அவளுக்கு முழுதாக புரிய வைக்க ‌நினைத்தான். 

 

கங்கா கண்களைத் துடைத்துக் கொண்டு தலையாட்டினாள். “எனக்கு தெரியும். உங்க அப்பாகிட்ட பணம் வாங்கினதை பத்தி, எங்கப்பா போதையில ஒருநாள் உளறிட்டாரு… அப்ப எனக்கு கஷ்டமா தான் இருந்தது… இப்ப இல்ல.” என்றாள் அவள் வெறுமையாய்.

 

கௌதம் அவளை அசையாது பார்த்தான். அவன் மனம் அவளுக்காக கசிந்தது. “உன்ன பத்தி புரிஞ்சிக்க ரொம்ப லேட் பண்ணிட்டேன், அதுக்கு சாரி! இப்ப என்கூட வந்துடு கங்கா… வருவியா?” கௌதம் அவளிடம் கனிவாக கேட்க, கங்கா அதிர்ந்து நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தவள், மறுப்பாக தலையசைத்தாள்.

 

“வேணா கௌதம்… நான் இப்ப நல்லா தான் இருக்கேன். நீங்களே பார்க்கறீங்கல்ல, என் சொந்த கால்ல சுயமா நிக்கறேன். முன்ன போல உங்க அனுதாபத்துக்கு ஆளான, நொண்டி பொண்ணா நான் இப்ப இல்ல. இனி என்னை பத்தி கவலைப்படாதீங்க. உங்களுக்கு கல்யாணம்னு சொன்னீங்கல்ல, ஹேப்பி மேரிட் லைஃப். எப்பவும் ஹேப்பியா இருங்க.” என்று வாழ்த்தியவள், திரும்பி நடந்தாள்.

 

கௌதம் ஒரு நொடி அவளை பிரமிப்பாய் பார்த்தவன், “ஏய் கங்கா…” அவளை அழைத்தான்.

 

அவனை கடந்து சாலையின் மறுபக்கம் வந்திருந்தவள், அவன் அழைப்புக்கு திரும்பி, இதமான புன்னகையுடன், “பை…” என்று இதழசைத்துவிட்டு, முன்னேறி நடந்தாள்.

 

இமைகளை தட்டி விழித்த கௌதம் முகத்திலும் அவளின் இதமான புன்னகை ஒட்டிக்கொண்டது. அவள் அழகு நிலையத்திற்குள் போகும் வரை பார்த்து நின்றவன், ஒற்றை பெருமூச்சோடு தன் காரை கிளப்பி சென்றான்.

 

அவனுக்கு புரிந்தது. இவள் பழைய கங்கா இல்லையென்று. இவனிடம் இரண்டு வார்த்தைகள் முழுதாக பேச கூட திக்கிய அந்த கங்கா இல்லை இவள்! எப்போதும் கண்ணீரும் களையிழந்த முகமாக ஓய்ந்து கிடந்தவள் அல்ல இவள். புதிய மனிதர்களை கண்டு மருண்டு பின்வாங்கும் பயந்தவளும் இல்லை… இவள் தைரியமானவள், நம்பிக்கையானவள், எதையும் எதிர்கொள்ளும் திடம் பெற்றவள் என்று எண்ணிப் பார்த்தவனுக்கு புன்னகை விரிந்தது.

 

ஆம், இவனும் இப்போது பழைய கௌதம் இல்லையே, முன்பின் யோசனையின்றி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுப்பதற்கு. இப்போது அவனுக்கு நிதானம் வந்திருந்தது. தொழில் நேர்த்தி அவனுக்கு சில வாழ்க்கை பாடங்களையும் கற்று தந்திருந்தது.

 

இத்தனை நேரம் அவன் மனதை அழுத்தி இருந்த ஏதோ ஒன்று கரைந்து போக, இப்போது அவன் பொறுமையாக யோசித்து, தங்கள் வாழ்க்கைக்கான ஒரு நிலையான முடிவை எடுக்க வேண்டும் என்று உறுதி ஏற்றுக் கொண்டான். 

 

***

 

பெண் வருவாள்…

 

(மூனு வாரமா முக்கி முனகி இந்த பதிவு தரேன் மக்களே… உங்க யாரையும் காக்க வைக்காம யூடி கொடுக்கணும்னு தான் நான் முயற்சி பண்றேன். ஆனா எனக்கு முன்னால ஏழரை சரியா என்னை வச்சு செய்யுது… இது சின்ன கதை தான் ப்ரண்ட்ஸ். இன்னும் கிட்டத்தட்ட ஏழு எபிக்குள்ள கதை முடிஞ்சிடும். தொடர்ந்து என்னை நச்சரித்து எழுத வைக்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி)