ஏன் பெண்ணென்று பிறந்தேன் 14
அவள் மனம் ஓர் ஆழ்ந்த நிம்மதியில் அமிழ்ந்திருந்தது. இந்த உணர்வை இன்னதென்று அவளால் குறிப்பிட்டு சொல்லவும் இயலவில்லை. இதயத்தில் ஏறியிருந்த பாரம் குறைந்த உணர்வு.
ஆம். திருமணமான நாளிலிருந்து அவளை அழுத்தியிருந்த பாரம், இன்று தான் குறைந்திருந்தது. இப்படியொரு நாளை தன் வாழ்நாளில் தந்த அந்த இயற்கைக்கு அவள் நன்றிக்கடன் பட்டிருப்பதாக எண்ணினாள்.
எதிர்பாரா சூழ்நிலையில் எதிர்பாராத விதத்தில் இந்த உண்மை வெளிப்பட்டிருக்காவிடில், தன் காலம் முழுவதும் கௌதம் கைலாஷை தவறானவனாகவே எண்ணி நொந்திருப்பாள். அவனும் கங்காவை தவறாக எண்ணியே வெறுத்திருப்பான்.
ஏதோ புண்ணியத்தில் தங்களுக்கு உண்மை தெரிந்துவிட்டது. தர்க்கரீதியாக இந்த உண்மை அப்படி ஒன்றும் பெரிதில்லை. ஆனால், உணர்வு ரீதியாக இந்த உண்மை எல்லாவற்றையும் விட பெரிது அவர்களுக்கு.
இன்றைய யோசனையில் கங்காவிற்கு உறக்கம் வரவில்லை. காய்ச்சலும் முழுதாக விடாமல் விட்டுவிட்டு வர, மாத்திரை எடுத்துக் கொண்டு தான் படுத்திருந்தாள். ஆனாலும் உறக்கம் வருவதாக இல்லை.
அவள் கைவிரல்கள் தன் கழுத்தில் இருந்த தங்க தாலியை வருடிக் கொண்டிருந்தன. அர்த்தமில்லாமல் இத்தனை நாட்கள் அவள் கழுத்திலிருந்த இந்த மாங்கல்யத்திற்கு இன்று அர்த்தம் இருப்பதாக தோன்றியது அவளுக்கு.
இவள் கழுத்தில் இருக்கும் இந்த மாங்கல்யம் அவளுக்கு எத்தனை எத்தனை ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் வாங்கி தந்திருக்கிறது!
‘கட்டின புருசனே வேணானு உதறிட்டு போயிட்டானாம், அப்புறம் எதுக்கு அலங்காரமா இவ தாலிய மாட்டிக்கினு திரியறா?’ என்ற ஊராரின் பேச்சுகள் ஒருபுறம்,
‘குறைஞ்சது நாலு பவுனு தேறும். வித்தெடுத்தா வேற செலவுக்குனா ஆகும், எதுக்கு அத்த வீணா உன் கழுத்துல சுமந்துட்டு இருக்கிற?’ சொந்தங்களின் பேச்சுகள் ஒருபுறம்,
‘வெத்து மஞ்ச கயிறா இருந்தா அப்பவே கழட்டி போட்டுருப்பா, தங்க தாலி இல்ல அதான் கழுத்துல போட்டிருக்கா’ குடும்பத்தினரின் ஏச்சு ஒருபுறம்.
இப்படி எத்தனை விதமான பேச்சுக்கள் அவளை தாக்கிய போதும், அவளுக்கு தன் மாங்கல்யத்தைக் கழற்றி எறிய மனம் வரவில்லை. தான் திருமணமானவள் என்பதற்கான ஒரே அடையாளம் அது. அந்த அடையாளத்தையும் இழக்க அவளுக்கு தைரியமில்லை.
அவளின் சதாசிவம் தாத்தா, இறப்பதற்கு ஒருவாரம் முன்பு கூட, ஏதோ உந்துதலில் அவளிடம் தயங்கி பேச்சை ஆரம்பித்திருந்தார்.
“கங்காமா… இந்த தாத்தாவோடது ஒன்னு உன்கிட்ட இருக்குமா… அதை நான் திருப்பி கேட்டா தருவியாமா?” வழக்கத்திற்கு மாறான அவரின் தளர்ந்த குரலில், கங்கா அவரை கவலையாக நிமிர்ந்து பார்த்தாள்.
“என்னமா பார்க்குற, தரேன்னு சொல்லேன்” வெளிப்படையாக அவரின் குரல் கெஞ்சியது.
அவள் மென்மையான குரலில், “என்ன கேள்வி தாத்தா இது? நீங்க தான்னு கேட்டா தந்துட்டு போறேன். என்ன வேணும் கேளுங்க?” என்றாள்.
“என் வேதவநாயகியோட தாலி வேணும்மா…” கம்மிய குரலில் அவர் கேட்டதும், கங்கா அதிர்ந்து எழுந்து நின்றாள்.
அனிச்சையாக அவள் வலக்கரம் உயர்ந்து, அவள் மாங்கல்யத்தை இறுக்கமாக பற்றி இருந்தது. தன்னால் அதை தர முடியாது என்பதாக, அவள் இடவலமாக தலையசைத்தாள்.
“உன் பாட்டி உனக்கு துணையா இருப்பா, உன் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்னு நம்பி தான்மா அவளோட மாங்கல்யத்தை உனக்கு கொடுத்தேன்… இப்படி மொத்தமா வாழ்க்கைய தொலைச்சிட்டு நிக்கிறீயே மா… அவ தாலி உனக்கு ராசி இல்ல போல, என்கிட்டயே தந்துடு ராசாத்தி…” அவர் கலங்கி கேட்கவும், கங்காவின் விழிகளும் கலங்கி வழிந்தன.
“பாட்டியோட தாலில குத்தங்குறை இல்ல தாத்தா, எனக்கு தான் கல்யாண வாழ்க்கை யோகமில்ல! அவருக்கும் எனக்கும் கல்யாண பந்தம், இந்த தாலில மட்டும் தான் ஒட்டியிருக்கு தாத்தா… இதையும் என்னால இழக்க முடியாது.” என்றாள் தலை கவிழ்ந்து.
“உன்ன இப்படி அம்போனு விட்டுட்டு போனவனயா நினைச்சிட்டு இருக்கமா நீ? நானும் அவனை நல்லவன்னு நினச்சிட்டேனேமா… உன்ன அவன் நல்லா வாழ வைப்பான்னு நம்புனேனே, இப்படி வாழாவெட்டியா விட்டுட்டு போயிட்டானே!”
எப்போதும் பேத்திக்கு தைரியம் சொல்பவர், ஏனோ அன்று கலங்கி புலம்பினார்.
“அவன் உனக்கு வேணாம்மா, இந்த கிழவன் எத்தனை நாள் இருப்பேனோ, அதுக்குள்ள உன்ன ஒரு நல்லவனோட வாழ வைக்கணும் மா…” என்றவரை கங்கா இடைமறித்தாள்.
“எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு தாத்தா… என் வாழ்க்கைல கல்யாணம் ஒருமுறை தான். அது முடிஞ்சு போச்சு. இனி அதைப்பத்தி பேச்செடுக்காதீங்க.” அவரிடம் உறுதியாக மறுத்தாள்.
“இப்பனு நான் சொல்லல மா, நாள பின்ன உனக்குன்னு துணை வேணும்னு உனக்கே தோணலாம் இல்லயா! அப்ப உனக்கான வாழ்க்கைய நீ அமைச்சிக்க, இந்த தாலி உனக்கு இடைஞ்சலா இருக்க வேணாம்னு தான் இப்ப கேக்குறேன்.” அவர் பாசமாக சொல்ல, அவள் சிறிதாக புன்னகைத்தாள்.
“அந்த சூழ்நிலை கண்டிப்பா எனக்கு வராது தாத்தா, நான் சூடு பட்ட பூனை மாதிரி. முதல் ரெண்டு தடவ செஞ்ச தப்ப அடுத்த தடவையும் செய்ய துணியமாட்டேன். இனி எதுக்காகவும் ஒருத்தன்கிட்ட என் வாழ்க்கைய ஒப்படைக்க துணியமாட்டேன். தனியாவே என்னால தலைநிமிர்ந்து வாழ முடியும் தாத்தா.”
கங்கா அன்று அத்தனை உறுதியாக சொன்னதன் பிறகு, சதாசிவம் தாத்தாவும் அதற்குமேல் பேத்தியை வற்புறுத்தவில்லை. அவள் தலையை வருடி விட்டு சென்றார். அவ்வளவுதான் அடுத்த வாரமே, உன் வாழ்க்கையை இனி நீ தனியாகவே பார்த்துக்கொள் என்று அவளை விட்டு மொத்தமாக சென்றேவிட்டார்.
தாத்தாவின் இழப்பில் துவண்டு இருந்தவளுக்கு, தன் குடும்பமே பெரிய ஆதரவென்று நம்பி இருந்தாள். ஆனால், தாத்தா சொத்து முழுவதும் அவளுக்கு எழுதி வைத்த விசயம் தெரிய வந்ததும், அவளின் அம்மா, அப்பா உட்பட எல்லாருமே அவளை வேறாக பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
கௌரி பற்றி சொல்லவே வேண்டாம். ஏதோ அவளின் உத்தம கணவனை அக்கா களவாடி விடுவாள் என்ற பயத்திலேயே கங்காவிடமிருந்து ஒதுங்கி விலகி போவாள். பிள்ளைகளைக் கூட அவளிடம் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்வாள். ஒருநாளைக்கு மேல் தாய் வீட்டில் தங்கவும் முடியாமல் வந்த வேகத்தில் அடித்துப் பிடித்து ஓடி விடுவாள். அதையெல்லாம் பார்த்த கங்காவில் இதழில் கேலியான புன்னகை மட்டுமே.
இவர்களைப் பற்றி முன்னமே அறிந்திருந்ததால் தான் சதாசிவம் தாத்தா அனைத்து சொத்துக்களையும் தனக்கு உரிமையாக்கி இருக்கிறார் என்று எண்ணும்போது அவள் நெஞ்சம் நெகிழ்ந்து போனது. இத்தகைய பேரன்பு கிடைக்க அவளும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
தாத்தாவின் நினைவில் கங்காவின் விழிகளில் கண்ணீர் நிறைந்திருந்தது. அவளுக்கு தன் தாத்தாவிடம் இப்போது சொல்ல வேண்டும் போலிருந்தது, கௌதம் மீது தவறில்லை என்று. அவனும் என்னைப்போல பெற்றவர்களை நம்பி ஏமாந்தவன் என்று.
“இன்னும் தூங்காம என்ன க்கா பண்ற?” பாதி தூக்கத்தில் எழுந்த மகாலட்சுமி, கண்களைக் கசக்கிக்கொண்டே கங்காவை அதட்ட,
“என்னடி சத்தம் உசருது? நான் உனக்கு அக்காவா? இல்ல நீ எனக்கு அக்காவா?” கங்கா தங்கையை சிரிப்புடன் முறைத்தாள்.
“நீ நடுராத்திரி பேய் மாதிரி முழிச்சிட்டு கிடந்தா திட்டாம கொஞ்சுவாங்களா? கண்ணமூடி தூங்கு க்கா.” மகா இன்னும் சத்தமிட,
“ஷூ அச்சோ கத்தாத மகா, நான் தூங்குறேன் தாயே” என்று போர்வையை இழுத்து போர்த்தி படுத்தவள் சற்று நேரத்திலேயே கண்ணயர்ந்திருந்தாள்.
அவள் உறக்கத்திற்கு சென்றதை கவனித்த பிறகு தான், மகா திரும்பி படுத்து தன் விட்ட தூக்கத்தைத் தொடர்ந்தாள்.
***
பிள்ளைகளின் வாழ்க்கை எப்போதுமே பெற்றோர்களின் கையில் என்று சொல்வார்கள். ஒருவனின் எல்லா ஏற்ற இறக்கங்களிலும் பெற்றவர்களின் தாக்கம் இருக்கவே செய்கிறது.
ஒரு குழந்தை இந்த உலகை முதன் முதலில் பெற்றவர்களின் பார்வையிலேயே பார்க்கிறது. உடலளவில் ஜீன்கள் மூலமாக மட்டுமின்றி, உள்ளத்து உணர்வுகள் மூலமாகவும், பெற்றவர்கள் தன் பிள்ளைக்கு இன்றிமையாதவராக இருக்கின்றனர்.
இன்னும் சொல்லப்போனால், ஒருவன் வயதாகி இறக்கும் தருவாயிலும் அவன் மனது, இல்லாது போன தன் அம்மா, அப்பாவைத் தேடத்தான் செய்கிறது.
தன் பிள்ளைக்காக எதையும் செய்யும் தியாகிகளாக இருக்கும் பெற்றவர்களையும் பார்க்கிறோம். தங்களின் விருப்பங்கள், எதிர்பார்ப்புகளை பிள்ளைகள் மீது திணிக்கும் பெற்றவர்களையும் நாம் பார்க்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, தன் சுயநலத்திற்காக பிள்ளைகளின் வாழ்வை பலியிடும் பெற்றோரும் இருக்கவே செய்கின்றனர்.
இதில், கௌதம் கைலாஷின் பெற்றோர்கள் இரண்டாவது ரகம் என்றால், கங்காவின் பெற்றவர்கள் மூன்றாவது ரகம்.
விவரம் தெரிந்த சிறு வயதிலிருந்தே தன் தாய், தந்தையின் அதீத பாசத்தில் மிதந்தபடி வளர்ந்தவன் கௌதம் கைலாஷ். அவன் குறை என்று யோசிக்கும் அளவிற்கு கூட வழியில்லாது அவன் கேட்டது, பார்த்ததை எல்லாம் அவனுக்கு உடமையாக்கினர் திலோத்தமா, மனோகர். அவனது விருப்பங்களுக்கு அவர்கள் மறுப்போ தடையோ எதுவும் சொன்னதில்லை.
சின்ன வயதிலிருந்தே சற்று இளகிய மனம் கௌதமிற்கு. வறுமை, பசியில் சாலையோரம் கையேந்துபவர்களைப் பார்த்தால், இளகிவிடுவான். நூறு, ஐநூறு என்று அவர்கள் தட்டில் இடுவான்.
“அந்த பிச்சக்காரங்களுக்கு எல்லாம் இவ்வளோ காசு போட கூடாது கௌதம், சில்லறை போட்டா போதும்.” திலோத்தமா மகனுக்கு எடுத்துச் சொல்ல,
“ஐயோ மம்மி, நம்ம கிட்ட தான் நிறைய காசு இருக்கில்ல. அப்ப ஏன் நாம சில்லறைய கொடுக்கணும். நாம கொடுக்குற காசுல அவங்க நல்ல சாப்பாடு சாப்பிடுவாங்க இல்ல.” என்று சிறுவனான கைலாஷ் கேள்வி கேட்டு வைப்பான்.
“ஆமாண்டா, பிச்சக்காரங்களுக்கு நல்ல சோறு போட தான் நான் ஓடி ஓடி சம்பாதிக்கிறேன் பாரு.” மனோகர் மகனிடம் நொந்து கொள்வார்.
பெரியவனான பிறகும் கஷ்டம் என்று வந்து நிற்கும் நண்பர்களுக்கு இவன் தாராளப்பிரபுவாக வாரி வழங்க, அவனை இழுத்துப் பிடிப்பதே பெற்றவர்களுக்கு வேலையாகப் போனது.
அவனின் அந்த இளகிய குணம் தான் அவனை கங்காவின் புறம் சாய்த்தது. அவளிடம் அழகு, படிப்பு, குடும்பம், அந்தஸ்து, தகுதி எதையும் பார்க்காது அவளை தன் மனைவியாக ஏற்க வைத்தது.
இதுவரை தன் விருப்பத்திற்கு மறுப்பு சொல்லாத பெற்றவர்கள் கங்காவையும் ஏற்றுக்கொள்வார்கள் என்று அவன் அத்தனை திடமாக நம்பினான். அவன் நம்பிக்கை பொய்த்துப் போன நொடியில் அவன் மொத்தமாக இடிந்து போனான்.
கங்கா தந்த விவாகரத்தில், அவனுடைய ஆற்றாமையும் கோபமும் மொத்தமாக அவளிடம் திரும்ப, அவளை தனியாளாக தேடி அலைந்த தருணங்களில், இந்த மொத்த உலகிலும் அவன் மட்டும் தனித்துவிடப்பட்டதாக உணர்ந்தான்.
அதுவரை அவனுக்கு பெற்றவர்கள் மேலிருந்த பிடிப்பு, அத்தருணத்தில் தான் விட்டுப்போனது. திலோத்தமா, மனோகர் கைப்பிடிக்குள் அடங்கி இருந்தவன் மெதுமெதுவாக அவர்கள் பிடி நழுவி சென்றான்.
தனக்கென சுயமான தொழிலும் வருமானமும் இருந்திருந்தால், தன் மனைவியாக வந்தவளை இப்படி தொலைத்திருக்க சந்தர்ப்பம் வாய்த்திருக்காது என்று ஆதங்கப்பட்டவன், தன் தந்தையின் தொழிலிலிருந்து விலகி வேறு தொழில் செய்ய முனைந்தான்.
அப்போது திரைத்துறை நண்பர்கள் கொடுத்த யோசனை தான் திரைப்பட தயாரிப்பு. அன்றைய மன அழுத்தத்தில் கண்மூடித்தனமாகத் தான் அந்த தொழிலில் இறங்கினான். ஆனால், முட்டிமோதி தொழிலை கற்றுக் கொண்டு தனக்கென தனி பெயரையும் திரைத்துறையில் நிலைநாட்டிக் காட்டி இருக்கிறான்.
அப்போதே பிடிப்பு குறைந்திருந்த பெற்றவர்கள் மீது இப்போது மொத்தமாக கசப்பு சேர்ந்திருந்தது கௌதமிற்கு. அவர்கள் அவனை திட்டமிட்டு ஏமாற்றி இருக்கிறார்கள் என்று தெரிந்ததில் இருந்து வெறுத்துப் போனான் அவன்.
விடாமல் அடித்துக்கொண்டிருந்த கைபேசியை அவன் எடுக்கவேயில்லை. திலோத்தமா, மனோகர் தான் மாறி மாறி அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் எப்போதும் போல சாதாரணமாக பேச முடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை. ஏமாற்றப்பட்டதின் வலி அவன் மனதை கனக்கச் செய்திருந்தது.
சரித்திரன் திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் அவனுக்காக அங்கே காத்திருக்க, இவனோ இங்கே கங்காவின் மனமாற்றத்திற்காக காத்திருந்தான். இப்போது அவனின் ஆறுதல் அவள் தான் என மனம் கூக்குரலிட்டது. ஆனாலும் தன் மனைவியை எவ்விதம் அணுகுவது என்று புரியாமல் தவித்திருந்தான்.
இத்தனை வருடங்கள் தன் துணை இல்லாமல் அவள் பட்ட காயங்களை ஆற்ற வேண்டிய பொறுப்பும் அவனுக்கு இருந்தது. அதற்கு அவள் அவனை அனுமதிக்க வேண்டுமே! எத்தனை சுலபமாக அவனை மறுத்துவிட்டு சென்று விட்டாள் என்றெண்ணி கௌதம் தொய்ந்து போனான்.
‘ஆம், கங்காவிற்காக நான் என்ன செய்து இருக்கிறேன், அவள் என்னை ஆதாரமாக கருத்துவதற்கு. அன்பு, பாசம், காதல், நேசம், நம்பிக்கை, உரிமை இதில் எதையுமே அவளுக்கு கொடுத்ததில்லையே. எப்படி அவள் என்னை ஏற்றுக்கொள்வாள்?’ தனக்குத்தானே கேட்டுக்கொண்டு பெருமூச்செறிந்தான்.
முதலில் கங்காவிடம் பொறுமையாக பேசி தன் மேல் நம்பிக்கை வர வைக்க வேண்டும் என்ற யோசனையுடனே உறங்கிப் போனான் கௌதம் கைலாஷ்.
***
வெகுநாளைக்கு பிறகான நிம்மதியான உறக்கம் கங்காவிற்கு. அவள் கண் விழிக்கும்போதே ஏழை தாண்டி இருந்தது மணிமுள்.
‘அய்யோ இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா!’ என்று அரக்க பறக்க எழுந்து, குளித்து தயாராகி வெளிவந்தவளுக்கு, அங்கே அவளுக்காக காத்திருந்தவர்களைப் பார்த்ததும் முகம் மாறியது.
காலையிலேயே கதிரவனும் கௌரியும் அங்கே வந்து நடுக்கூடத்தில் அமர்ந்திருந்தனர். உடன் மல்லிகா, மாடசாமி கூட.
கங்கா சற்று தயங்கி, அவர்களை நெற்றி சுருக்கி சந்தேகமாகப் பார்த்தாள்.
“ஏதோ உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு எம் புருசன் உன்ன தேடி வந்து பேசினா, நீ அவர அவமானப்படுத்துவியா?” தமக்கையின் முகம் பார்த்ததுமே கௌரி கத்த ஆரம்பித்து விட்டாள்.
அவர்கள் வந்திருக்கும் நோக்கம் கங்காவிற்கு புரிந்துவிட்டது. இன்றோடு இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று முடிவெடுத்தவள், கௌரிக்கு பதில் தராமல், தன் கைபேசியை எடுத்தாள்.
சாயாவிற்கு அழைத்து, “நான் வர கொஞ்சம் லேட்டாகும் சாயா, நீங்க பாத்துக்கோங்க.” என்று சொல்லி வைத்தாள்.
“நான் இங்க கத்திட்டு இருக்கேன், கண்டுக்காம நீ பாட்டுக்கு போன்ல பேசுற? ஓ… சம்பாதிக்கிறன்ற திமிரு உனக்கு. கைல நாலு காசு புரண்டா, கூட பொறந்த தங்கச்சி கூட மறந்து போயிடும் இல்ல உனக்கு.” கௌரி ஆவேசமாக பொரிய,
இப்போதும் கங்கா அவளுக்கு பதில் தரவில்லை. தன் கைகளை வயிற்றின் குறுக்கே கட்டிக்கொண்டு, தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்று, காச்மூச்சென்று கத்திய தங்கையை நேராக பார்த்தாள்.
கங்காவின் இந்த தோரணை புதிது. இப்படி யாராவது குரலுயர்த்தி பேசும் இடங்களில் கங்கா நிற்கவே மாட்டாள். அதைப்பற்றி பேச்செடுக்க வேண்டாம் என்று முடிவாக சொல்லிவிட்டு நகர்ந்து விடுவாள். ஆனால் இன்றோ அவள் அசராது நிற்கும் தோரணை கௌரியை சற்று அசைத்துப் பார்த்தது.
கௌரி கப்பென வாய்மூடி கொள்ள, கதிரவன் அவர்களை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான். அவனுக்கு வந்த வேலை முடிந்தால் போதும். இன்று எப்படியும் கங்கா, தன் எம்டி உடனான திருமணத்திற்கு ஒத்துக்கொள்வாள் என்று திடமாக நம்பினான். தன் மனைவியின் பேச்சு சாதுர்யத்தில் அவன் கொண்டிருந்த நம்பிக்கை அது.
“கங்கா, எத்தனை முற சொன்னாலும் நீ கேக்கவே மாட்டியா? நம்ம வீட்டு மாப்பிள்ளைய சும்மா சும்மா அவமானப்படுத்தறது நல்லதில்ல. ஏன் தான் இப்படி பண்றயோ.” மல்லிகா பெரிய மகளை கண்டித்து தலையில் அடித்துக் கொள்ள,
“அவளால அவ தங்கச்சி சந்தோசமா வாழறத பார்த்து பொறாம, அதான் இப்படி மரியாதை இல்லாம நடந்துக்குறா.” மாடசாமி தன் பங்குக்கு குற்றம் சாட்டினார்.
அவர்கள் பேச்சு சத்தம் கேட்டு, தன் அவசர குளியலை முடித்து வேகவேகமாக உடைமாற்றி ஓடிவந்தாள் மகாலட்சுமி. கங்காவிற்காக அவள்தான் பேச வேண்டும் என்று ஈரம் சொட்டிய முகத்தைக் கூட முழுதாக துடைக்காது, அவர்கள் முன் வந்து நின்றாள்.
“என்ன காலங்காத்தால பஞ்சாயத்தை கூட்டி இருக்கீங்க? உங்களுக்கு எல்லாம் வேற வேலை இல்லயா? அக்காவ எதுக்கு இப்படி ரௌண்ட் கட்டி டார்ச்சர் பண்றீங்க?” சின்னப்பெண்ணின் ஆதங்கமான கேள்வியில், பெரியவர்கள் முகத்தில் ஏகத்துக்கும் கோபமேறியது.
“மஹா, காலேஜ்க்கு உனக்கு நேரமாச்சு பாரு நீ கிளம்பு. நான் பேசிக்கிறேன்.” கங்கா தங்கையை சமானப்படுத்தி அனுப்ப முயல,
“என்ன க்கா பேசுவ நீ? நீ வாயில்லாத பூச்சின்னு தெரிஞ்சு தான கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தாம, போயும் போயும் அம்பது வயது கிழவனுக்கு உன்ன கட்டி வைக்க இவ்வளோ பண்றாங்க இவங்கெல்லாம்…” மஹாலக்ஷ்மி சீறிக்கொண்டு பதில் சொன்னாள்.
கங்காவிற்கும் இந்த செய்தி புதியது. ஆனாலும் சிரிப்பு தான் வந்தது. தன் வாழ்க்கையை ஏதோ விளையாட்டு திடல் போல அவர்கள் பயன்படுத்த முயல்வது, அவளின் சுய கௌரவத்தை உரசி பார்க்க, நிமிர்ந்த அவள் பார்வையில் தீயின் தகிப்பு.
***
(பெண் வருவாள்)
(பெண் வருவாள்னு சொல்லிட்டு நான் பாட்டுக்கு லேட்டா தான் கூட்டிட்டு வரேன்… 🙏🙏🙏 வழக்கம்போல என்னோட மன்னிப்பை ஏத்துக்கோங்க மக்கா🙏🙏🙏)
(அடுத்தபதிவு புதன்கிழமை… கண்டிப்பா கொடுத்துடுவேன் ப்ரண்ட்ஸ், நான் சீக்கிரம் டைப் பண்ண ஆசீர்வாதம் பண்ணிட்டு போங்க பா🙏🙏🙏)