ஏன் பெண்ணென்று பிறந்தேன் 15

IMG-20211007-WA0009 (1)-8c3aef6f

 ஏன் பெண்ணென்று பிறந்தேன் 15 

 

“என்னக்கா பேசுவ நீ? நீ வாயில்லாத பூச்சின்னு தெரிஞ்சு தான கொஞ்சங் கூட மனசாட்சி உறுத்தாம, போயும் போயும் அம்பது வயது கிழவனுக்கு உன்ன கட்டி வைக்க இவ்வளோ பிளான் பண்றாங்க இவங்கெல்லாம்…” மஹாலக்ஷ்மி சீறிக்கொண்டு பதில் சொன்னாள்.

 

கங்காவிற்கும் இந்த செய்தி புதியது. ஆனாலும் சிரிப்பு தான் வந்தது. தன் வாழ்க்கையை ஏதோ விளையாட்டு திடல் போல அவர்கள் பயன்படுத்த முயல்வது, அவளின் சுய கௌரவத்தை உரசி பார்க்க, நிமிர்ந்த அவள் பார்வையில் தீயின் தகிப்பு.

 

மஹாலக்ஷ்மி உடைத்த விசயத்தில் அங்கிருந்த அனைவரது முகங்களும் அதிர்ச்சியைக் காட்டின. கதிரவன் கூட சற்று அதிர்ந்து எழுந்து நின்று விட்டான். தன் எம்டி சங்கரன் பற்றி அனைத்து விசயங்களையும் சொல்லி இருக்கிறானே தவிர வயதை மட்டும் அறுதியிட்டுக் கூறவில்லை. அவரின் வயதை பற்றி கேட்ட மனைவி, மாமியாரிடம் கூட ஏதோ சொல்லி மழுப்பி விட்டிருந்தான். அவரது தோற்றமும் அத்தனை முதுமையைக் காட்டாது என்பதால் தைரியமாகவே இருந்தான். ஆனால், அவன் மச்சினி இப்படி போட்டு உடைப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

 

“மகா… அவருக்கு ஒன்னும் அம்பது வயசில்ல, நாற்பது, நாற்பத்தி அஞ்சு வயசு தான் இருக்கும்.” கதிரவன் திருத்திச் சொல்ல,

 

“ஓஹோ… சரி நீங்க சொல்றதே உண்மையா இருக்கட்டும் மாமா, அப்ப கூட கங்காவோட இருபத்தி நாலு வயசுக்கும், உங்க எம்டியோட நாப்பத்து அஞ்சு வயசுக்கும் டிஃபரன்ஸ் பாருங்க. உங்க கூட பொறந்தவளா இருந்தா இப்படி யோசிப்பீங்களா?” மகா காட்டம் குறையாமல் கேட்டாள்.

 

“ஏய்… வாய மூடு. பெரியவங்க பேசுற இடத்துல உனக்கு என்ன வேல, பள்ளிக்கூடத்துக்கு ஓடு.” மாடசாமி மகளை அதட்டி விரட்ட பார்க்க,

 

“என் அக்காவுக்காக நான் பேசுவேன்.” அழுத்திச் சொன்னவள், “நான் ஸ்கூல் முடிச்சு, இப்ப காலேஜ் போயிட்டு இருக்கேன்… அதுகூட தெரியாம அப்பாவாம் அப்பா.” என்று சத்தமாகவே முணுமுணுத்தாள்.

 

தங்கையை தன்புறம் இழுந்த கங்கா, “நீ கிளம்பு மஹா, நான் பார்த்துக்கிறேன்னு சொல்றேன் இல்ல.” என்று சொல்ல,

 

“போக்கா, இப்பவும் நீ என்னை விரட்ட தான் பார்க்குற? அவங்கள விரட்டி பேச முடியுதா உன்னால.” சின்னவளுக்கு பெரியவள் மீதும் கோபமாக வந்தது.

 

அதற்குள், “ஏங்க மாப்பள, அவருக்கு அவ்வளோ வயசு வித்தியாசம் இல்லன்னு தான முன்ன சொன்னீங்க… இப்ப இப்படி சொல்றீங்க?” மல்லிகா மனம் பொறுக்காமல் மருமகனிடம் கேட்டே விட்டார்.

 

“அது… அதுவந்து அத்த…” கதிரவன் தயங்க, கௌரி கணவனை தாங்க வந்தாள்.

 

“ம்மா… நீ என்ன அவரை நிக்க வச்சு கேள்வி கேக்குற? உம் மக வாழாவெட்டி, போதா குறைக்கு நொண்டி வேற, இதுல இவளை கட்டிக்க மன்மதன் இறங்கி வருவானோ! அவரோட எம்டி எவ்வளோ பெரிய ஆளு தெரியுமா? அவர் நம்ம கங்காவ கட்டிக்க சம்மதிச்சதே பெரிய விசயம். இதுல வயசு தான் ரொம்ப முக்கியமா போச்சா உங்களுக்கு?” கௌரி பேச, மல்லிகாவும் அது சரியோ என்று யோசிக்க, கங்கா பொறுமை இழந்தாள்.

 

“கௌரீ… நான் ஒண்ணும் எனக்கு வாழ்க்கை வேணும்னு உங்ககிட்ட கேக்கல. உங்க இஷ்டத்துக்கு நீங்களா முடிவெடுத்து சும்மா பிரச்சனைய கிளப்பாதீங்க.” தங்கையை அதட்டியவள் அனைவருக்கும் பொதுவாக சொன்னாள்.

 

“பிரச்சனை பண்றது நாங்களா இல்ல நீயா கங்கா? வாழாவெட்டியா வீட்டுக்குள்ள வந்து உக்காந்துட்டு அம்மா, அப்பாவ கஷ்டப்படுத்திட்டு இருக்க நீ! தலையில ஏத்தி வச்ச சுமை மாதிரி, அவங்க உன்ன சுமந்துட்டு இருக்காங்க. வயசான காலத்துல அவங்களுக்கும் நிம்மதி வேணாமா? கடைசிவரைக்கும் உன்ன சுமந்துட்டே அழ சொல்றீயா அவங்கள?” கௌரி அதற்குமேல் பட்டாசாக வெடித்தாள்.

 

“நான்… அம்மா, அப்பாவுக்கு சுமையா இருக்கேன்னு சொல்ல வரீயா கௌரி?” என்று நிதானமாக கேட்ட கங்கா மறுப்பாக தலையசைத்து, “இல்லடி, இது என் வீடு. எனக்காக என் தாத்தா எழுதி வச்ச வீடு. இந்த வீடு‌ மட்டுமில்ல, அவங்க சாப்பிடுற சாப்பாட்டுல இருந்து அவங்க உடுத்துற துணி வரைக்கும் இந்த நொண்டி பொண்ணோட சம்பாத்தியம் தான். இதுல யாரு யாருக்கு சுமையா இருக்காங்கன்னு‌ நீ தெளிவா சொல்லு பார்க்கலாம்?” 

 

கங்காவின் கேள்வியில் பெரியவர்கள் விக்கித்து நிற்க, மகா தன் அக்காவை விழிகளை விரித்து பார்த்தாள். கங்காவின் இந்த புதிய மாற்றம் அவளுக்கு வியப்பாக இருந்தது. உள்ளுக்குள் குதூகலமாகவும் இருந்தது.

 

“ஏய்… என்ன? சொல்லி காட்றீயா? நீதான் பெருசா சப்பாதிக்கறன்ற‌ நினப்பா? உன் அப்பன் நான் சம்பாதிக்கிற காசு எவ்வளோனு தெரியுமாடி உனக்கு? உன் காசு இல்லனா நாங்க பிச்சை எடுக்க போறது மாறி பேசற.” மாடசாமி எகிறிக் கொண்டு பேச,

 

“ஓ… உங்ககிட்ட அவ்வளோ காசு இருக்கா ப்பா? நீங்க சம்பாத்திக்கிற காசுல இதுவரை வீட்டுக்குனு ஒத்த ரூபா செலவு பண்ணி இருப்பீங்களா? தாத்தா இருந்த வரைக்கும் அவர் குடும்ப செலவ பார்த்துக்கிட்டாரு. அப்புறம் நான் பார்த்துக்கிறேன். நீங்க…?” கங்கா சாதாரணமாக கேட்க, மாடசாமிக்கு இன்னும் சுர்ரென்று ஏறியது.

 

“ஏய்… எனக்கு நீ அப்பனா? உனக்கு நான் அப்பனா? மவளே என்னை பார்த்து கணக்கு கேக்குறீயாடீ நீ? அவ்வளோ ஏத்தமாகிடுச்சு இல்ல உனக்கு…” அவர் இன்னும் பேசிக்கொண்டே போக,

 

“ச்சீ வாய‌ மூடுங்க.” கங்காவின் அதட்டலில் அவர் வாய் கப்பென மூடிக்கொண்டது. 

 

“பெருசா காசு காசுன்னு சொல்றீங்களே, அந்த காசு எங்கிருந்து வந்துச்சுன்னு எனக்கு தெரியாதுன்னு நினக்கிறீங்களா?” என்றவளின் தொண்டை அடைக்க,  “என்னோட வாழ்க்கைய பேரம் பேசி அழிச்சி அந்த பணத்தை வாங்கி இருக்கீங்க இல்ல? பெத்த பொண்ணைவிட அந்த பாழா போன காசு பெருசு இல்ல உங்களுக்கு?” விரக்தியாக கேட்டே விட்டாள். 

 

எத்தனையோ நாட்கள் மனதை அரித்து கொன்ற ஒன்றை கேட்டு விட்டாள். இதையெல்லாம் கேட்டகவே கூடாது என்று தன் மனதில் அழுத்தி வைத்திருந்ததை இப்போது வெளியே கொட்டி விட்டாள்.

 

மாடசாமியின் முகம் வெளுத்தது. “அ… அது… நீதான் அந்த ஆளு கொடுத்த செக்க தூக்கி போட்ட, உன் வாழ்க்கை தான் போச்சு, காசாவது வேணுமில்ல. அதான் அத்த நான் எடுத்துக்கினே. இதுல என்ன தப்ப கண்டுட்ட நீ?” அவர் திக்கி திணறி நியாயம் பேச, கங்கா அருவருப்பாக அவரிடமிருந்து பார்வையை திருப்பிக் கொண்டாள். அவரிடம் இப்படிப்பட்ட பதில் தான் வருமென்று அவள் எதிர்பார்த்தது தான். ஆனாலும் தொண்டைக்குள் ஏதோ கசந்து வழியும் உணர்வு.

 

கௌரி தங்கள் அப்பாவை பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள். “இந்த குடிக்கார அப்பன் புத்தி தான் நமக்கு தெரியுமே கங்கா, இவர விடு. நம்ம அம்மாவ பத்தி நினச்சு பாரு. உன் வாழ்க்கை இப்படி ஆச்சுனு உள்ளுக்குள்ள கவலைப்பட்டு கிடக்குறாங்க. அவங்களுக்காகவாவது நீ மனச மாத்திக்கலாமில்ல.” இப்போது சற்று நயந்த குரலில் கௌரி அவளிடம் பேச,

 

“எனக்கு அப்படி எந்த அம்மாவும் இல்ல!” கங்காவின் பதில் வெறுமையாக வந்து விழுந்தது. 

 

“பாவி… என்ன வார்த்தை சொல்லிபுட்ட, பெத்தவ நான் குத்துக்கல்லாட்டம் இருக்கும் போது அம்மா இல்லனு வாய் கூசாம சொல்ற? உனக்கு என்னடி ஆச்சு? எந்த காத்து கருப்பு அடிச்சிச்சு?” மல்லிகா கங்காவை பிடித்து உலுக்க,

 

“உனக்கு இந்த வாழாவெட்டி பொண்ணவிட, வாழப்போன பொண்ணு தான ம்மா முக்கியம்? குடிச்சிட்டு வந்து தினம் அலப்பற பண்ணாலும் உன் புருஷன் தான ம்மா உலகம் உனக்கு! இதுல நான் இருந்தாலும் இல்லாம போனாலும் உனக்கு என்னமா கவலை?” 

 

கங்கா விரக்தியாக கேட்க, பேச்சற்று திகைத்த மல்லிகா, “நான்… உன்ன பெத்தவடீ. என் பொண்ணு பாழா போகணும்னு பெத்த மனசு நினைக்குமா?” அவர் முந்தானையால் வாயைப் பொத்தி அழுதார். அவருக்கு பதில் சொல்ல கங்காவிடம் எதுவும் இருக்கவில்லை. இத்தனை களேபரத்திற்கும் காரணம் கௌரி தான் என்று அவள்மீது கோபம் தான் வந்தது.

 

நிமிர்ந்த கங்கா, “உன்ன போல நான் வெட்டியா இல்ல கௌரீ,‌ காலையில வந்து உக்காந்துட்டு நீ வீண் பிரச்சனைய இழுத்து விட்டுட்டு என் வேலைய கெடுக்குற. உன் மரியாதைய காப்பாத்திட்டு கிளம்பு முதல்ல.” தங்கையை அவள் எச்சரிக்க,‌ கௌரி கேட்பதாக இல்லை.

 

“நான் ஏன் போகணும்? நீதான் பெத்த அம்மா மேல கூட பாசம் வைக்காம கல்லு மனசுக்காரியா இருக்கியே! புருசன் இல்லாம தனியா வாழ்ந்தா இப்படித்தான் கல்லா கிடப்ப நீ!” 

 

“நான் எப்படினா இருந்துட்டு போறேன் நீ கவலைப்பட தேவையில்ல.”

 

“ஆமா உனக்கு யார பத்தியும் கவலையில்ல. இதோ உனக்காக பேச வந்துருக்காளே உன் சின்ன தங்கச்சி, அவளுக்கு நாள பின்ன ஒரு நல்ல வாழ்க்கை அமையணும் இல்லயா? இப்படி நீ அம்மா வீடே கதினு கிடந்தா, அவளை யாரு கட்டிக்க முன் வருவாங்க?” 

 

கதிரவன் சொல்லிக் கொடுத்த விசயங்களை ஒவ்வொன்றாக  அடுக்கி பேசிய கௌரி, எப்படியாவது கங்காவை கார்னர் செய்ய முயன்றாள். 

 

கங்கா பதில் தரும் முன்னால் மஹாலக்ஷ்மி முந்திக்கொண்டு, “என்னை வச்சு அக்காவ கன்வின்ஸ் பண்ண பார்க்குறீயா நீ? அப்படி சீன் பொட்டு வர எவனும் எனக்கு தேவையில்ல. என்னை எனக்காக கட்டிக்க எவன் முன் வரானோ அவனை நான் கட்டிக்கிறேன் போதுமா.” என்றாள் அழுத்தம் திருத்தமாய்.

 

“ஏய் வாயாடி, நான் கங்கா வாழ்க்கைக்காக தான் இவ்வளோ பேசிட்டு இருக்கேன். அவ வாழ்க்கைய பத்தி உனக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கா?” கௌரி மஹாவை குற்றம் சாட்ட,

 

“ஆஹா, உனக்கு அக்கா மேல இருக்க அக்கறை தான் எனக்கு நல்லாவே தெரியுமே. அந்த அரை கிழவனுக்கு கங்காவ கட்டிக்கொடுத்தா, உன் புருஷனுக்கு புரோமோஷன் கிடைக்கும். இன்னும் எம்டியோட சகலயா சீன் போடலாம். அதுக்கு தான புருஷனும் பொண்டாட்டியும் விடாம கங்காவ டார்ச்சர் பண்ணிட்டு இருக்கீங்க?” 

 

மஹாவின் காட்டமான கேள்வியில், கதிரவன், கௌரி இருவருக்கும் கோபமேறியது.

 

“வாய அடக்கி பேசு மகா, சும்மா வாயிக்கு வந்தபடி உளறாத, நான் ஒண்ணும் அப்படிப்பட்டவன் இல்ல.” கதிரவன் அடித்து பேச,

 

“ஏய் கங்கா, சின்ன பொண்ண பேச விட்டு எங்களை அவமானப்படுத்துறீயா நீ? நல்லது சொன்னா கேட்டுக்கணும் இப்படி அகம்புடிச்சு அழுத்தமா நிக்க கூடாது. அப்புறம் கடைசியில உனக்குன்னு யாருமில்லாம அநாதையா தான் நீ கிடக்க வேண்டி வரும். ஏதோ லாட்டரி மாதிரி உனக்கொரு சம்மந்தம் தேடி வந்திருக்கு. புத்திசாலித்தனமா புடிச்சிக்கோ, இல்ல இந்த ஜென்மத்துல நீ ஒண்டி கட்டயா தான் நிக்கணும். சொல்லிட்டேன்.” தன் பங்குக்கு ஒரே மூச்சாக கௌரி பேசினாள்.

 

“போதும் நிறுத்துங்க ரெண்டு பேரும்… மறுபடி மறுபடி என் கல்யாண பேச்சை எடுத்தா எனக்கு கெட்ட கோபம் வரும். எத்தனை தடவ சொல்றலு உங்களுக்கெல்லாம், எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு… நான் வெறும் கங்கா இல்ல. திருமதி. கங்கா கௌதம் கைலாஷ்!” 

 

தன் முழுப்பெயரை கங்கா அத்தனை அழுத்தத்துடன் சொல்ல, அங்கிருந்தவர்கள் வாய் பிளந்து பார்த்தனர்.

 

இதுவரை அவர்கள் யாரும் மறந்தும் கௌதம் பெயரை உச்சரித்தது இல்லை. ஏன் கிட்டத்தட்ட அந்த பெயரை அவர்கள் மறந்து கூட இருந்தனர். கங்காவும் இதுவரை யாரிடம் அவளின் முழுப்பெயரை சொன்னதில்லை. அவள் சொல்லி யாரும் கேட்டதுமில்லை. 

 

முன்பானால், அவள் கணவன் பற்றிய பேச்செடுத்தாலே போதும் அவளை உடைத்து கலங்க வைப்பதற்கு. ஆனால், இப்போது எங்கிருந்து வந்தது கங்காவிற்கு இத்தனை துணிச்சல் என்று அங்கிருக்கும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

 

“ஆமா, அவரோட வாழ எனக்கு கொடுத்து வைக்கல தான். அதுக்காக நான் அவரோட பொண்டாட்டி இல்லன்னு ஆகிடாது. எல்லாரைப் போலவும் புருசன், குழந்தைங்கன்னு குடும்பமா வாழ எனக்கு விதியில்ல தான். அதுக்காக உங்க இஷ்டத்துக்கு என்னை கை பொம்மையா ஆட வச்சு பார்க்கணும்னு நினைக்காதீங்க.” 

 

அவள் தீர்க்கமாக சொல்லி முடிக்க, பேச்சு திசைமாறிப் போவதை உணர்ந்து கொண்ட கதிரவன், “கங்கா பிளீஸ்… நீங்க இப்படி எமோஷனலா திங்க் பண்றது எல்லாம் பிராக்கடிக்கலா ஒத்துவராது. 

எத்தனை நாளைக்கு உங்களால துணை இல்லாம வாழ்ந்திட முடியும்? கொஞ்சம் யோசிச்சு பாருங்க.” என்றான்.

 

“மிஸ்டர் கதிரவன், என் விசயத்துல தலையிடாதீங்கன்னு உங்களுக்கு நான் திரும்ப திரும்ப சொல்றேன். என் தங்கச்சி புருஷன்றதால தான் உங்களுக்கு மரியாதை. அந்த மரியாதைய காப்பாத்திக்க பாருங்க.” 

 

கங்கா பதில் கோபமாக வந்து விழ, கௌரிக்கு மனம் பொறுக்கவில்லை.

 

“நானும் பார்க்கறேன், சும்மா சும்மா அவர எதிர்த்து பேசிக்கிட்டே இருக்க நீ? வீட்டு மாப்பிளைக்கு இதான் நீ தர மரியாதையா? நான் இவ்வளோ எடுத்து சொல்லியும் காதுல வாங்காம பிடிவாதம் பிடிக்கிற இதுதான் நீ உன் கூட பொறந்தவ என்மேல வச்சிருக்க பாசமா?” பெரியவளை குறை பேச,

 

“கூட பொறந்த பாசமா? அப்படிப்பட்ட பாசத்தை பத்தி கூட உனக்கு தெரியுமா கௌரி? எப்பவாவது என்கிட்ட அந்த பாசத்த நீ காட்டி இருக்கியா? 

 

அக்காவ கட்டிக்க வந்துட்டு தங்கச்சிய கட்டிட்டு போன உன் உத்தம புருஷனுக்கு இதைவிட பெருசா எந்த மரியாதைய எதிர்பார்க்குற நீ? 

ரெண்டு நாள் முன்ன கூட உன் புருஷன என்கூட பேசவிட்டு தூர இருந்து வேவு பார்த்துட்டு நின்னவ தான நீ ச்சே… உனக்கு உன் புருஷன் மேல நம்பிக்கை இல்லனா பரவால்ல, கூட பொறந்த என்மேல கூட நம்பிக்கை இல்லாம போச்சு இல்ல. என்னை நீ அவ்வளோ கேவலமா நினச்சு இருக்க இல்ல?” 

 

சொல்லும்போதே நெஞ்சம் அழுத்த, விழிகளில் கண்ணீர் தேங்கியது கங்காவிற்கு.

 

கௌரி அதற்கெல்லாம் அசருவதாக இல்லை. “ஆமா, எனக்கு என் வாழ்க்கை முக்கியம். நான் எல்லாத்தையும் பார்க்கணும். உன்ன மாதிரி புருஷனை தொலைச்சிட்டு நானும் நிக்கக்கூடாது பாரு, அதான் நான் தெளிவா இருந்துக்கிறேன்.

 

எங்களை குத்தம் சொல்ற நீ மட்டும் பெரிய உத்தமி மாதிரி பேசாத கங்கா… நேத்து சாயந்திரம் உன் பார்லர் வாசல்ல யாரோ கார் காரன் கூட இளிச்சு இளிச்சு பேசிட்டிருந்தியே, யாரவன்?” 

 

கண்மூடித்தனமான ஆத்திரத்தில் கௌரி வார்த்தையை விட்டுவிட, கங்கா அவளை அறைந்து விட்டிருந்தாள்.

 

“இனி ஒரு வார்த்தை பேசின… ச்சீ உன்கிட்ட எல்லாம் என்னைப்பத்தி சொல்லி புரூஃப் பண்ண வேண்டிய எந்த அவசியமும் எனக்கில்ல. ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து போயிடு.” கங்காவின் ஆக்ரோஷத்தில், வாங்கிய அறையின் வலியில் கௌரிக்கு கண்கள் கலங்கிக் கொண்டு வந்தது.

 

மல்லிகா யார் பக்கம் பேசுவதென்று புரியாமல் தவித்து நின்றிருக்க, கௌரியை தன்புறம் இழுத்துக்கொண்ட‌ கதிரவன், “இதை கேட்டது உன் தங்கச்சின்றதால நீ அடிச்சிட்ட, மத்தவங்க கேட்டா உன்னால இப்படி கைநீட்ட முடியுமா? தனியா இருக்க பொண்ணுனா இப்படி தான் பிரச்சனை வரும். அத்த, மாமா இப்ப உன்கூட இருக்கறதால யாரும் உன்கிட்ட வாலாட்டாம இருக்காங்க. இல்லனா உன் நிலமை மோசமாயிடும் கங்கா…

 

நாளைக்குள்ள உன்னோட சம்மதத்தை கேட்டிருக்கார் எம்டி. என் சுயநலத்துக்காக மட்டுமில்ல உன் எதிர்காலத்துக்காகவும் தான் நான் இதை சொல்றேன். இதுக்குமேல உன் இஷ்டம் தான்.” அவளிடம் மரியாதை பாவத்தை மாற்றி. நீளமாக சொல்லி முடித்தான்.

 

கங்கா, பார்வையில் வெறுப்பை உமிழ்ந்து விட்டு, மேலும் அங்கே பேச்சை வளர்க்க விரும்பாமல் அகன்று விட்டாள். மஹாலட்சுமியும் அவர்களை முறைத்துக் கொண்டே அக்காவின் பின்னோடு சென்றாள்.

 

கதிரவன் நிலை தான் பெரும் தலையிடியாக போனது. “ச்சே, தெரியாத்தனமா கங்கா பத்தி எல்லாத்தையும் சொல்லி வச்சிட்டேன், இந்த பொண்ணு தான் வேணும்னு எம்டி வேற என் கழுத்த நெரிக்கிறாரு. இதுல உன் அக்காவும் வீம்பா நிக்கிறா.” என்ற புலம்பலோடு கதிரவன் நெற்றியைத் தேய்த்துக்கொள்ள,

 

“அப்படியென்ன அந்த மனுசனுக்கு இவளே வேணுமாம்?” எங்கே மகள் பணவிவரம் கேட்டுவிட போகிறாள் என்று அதுவரை வாய்மூடிக் கொண்டிருந்த மாடசாமி இப்போதுதான் வாய் திறந்தார்.

 

“ம்க்கும்… கங்கா தான் ஒருநாள் கூட அவ புருஷனோட வாழல இல்ல. வாழாவெட்டினா கூட பரவால்ல, அவருக்கு கன்னி கழியாத பொண்ணுதான் வேணுமாம். ச்சே மனுசன் என்னை சாவடிக்கிறாரு.” கதிரவன் பேச்சுவாக்கில் உளறிவிட, கௌரி அவனை உதறிவிட்டு விலகினாள்.

 

“ச்சீ இதுக்கு தான் உங்க முதலாளி கங்காவ புடிச்சு தொங்கறாரா? அவனெல்லாம் ஒரு பெரிய மனுஷனா?” கௌரிக்கு சுறுசுறுவென கோபம் ஏறியது. என்ன இருந்தாலும் ஒரு பெண்ணை உடலளவில் மதிப்பிடுவதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

 

“ஏய், அவர் அப்படி சொன்னா நான் என்னடி பண்ணுவேன்?” கதிரவன் மனைவியிடம் கேட்க,

 

“நீங்க கங்காவ பத்தி இவ்வளோ சொல்ல போயி தான அவனும் கேட்டுருக்கான். அப்போ உங்களுக்கும் அக்கா மேல தப்பான பார்வை இருக்கு இல்ல.” என்று சீறினாள்.

 

“ஏய் சந்தேக பிராணி, உங்கக்காவ வேணானு சொல்லிட்டு தான உன்ன கட்டிக்கிட்டேன். கடைசியில என்னைய சந்தேகப்படுறீயா நீ?” கதிரவனும் ஆத்திரமாக பேச, அங்கே அடுத்தக்கட்டமாக கணவன், மனைவி சண்டை ஆரம்பமாகி இருந்தது.

 

அறைக்குள் அமர்ந்திருந்த கங்கா, இருகைகளாலும் தன் காதுகளை அழுத்தி பொத்திக்கொண்டாள். தன்னை முன்னிருத்தி அவர்கள் கூறும் வார்த்தைகளைக் கேட்டு அவளால் தாங்கமுடியவில்லை.

 

“மஹா, அவங்கள வெளியே போக சொல்லு ப்ளீஸ்…” கங்கா சகிக்க முடியாமல் சொல்ல,

 

“நாம சொன்னா கேக்கற ஜென்மங்களா அவங்க?” என்று சலிப்பாக சொன்னவள், அறையின் கதவு, ஜன்னல்களை எல்லாம் அடைத்துவிட்டு, கங்காவிடம் வந்து நின்றாள்.

 

அவசியமற்ற பேச்சுக்கள், தேவையற்ற விவாதங்கள் அவளது தலைவலியை உசுப்பி விட்டிருந்தது. சற்று முன் இருந்த புத்துணர்வு மொத்தமாக வடிந்து போக, சோர்ந்து போயிருந்தாள் கங்கா.

 

“என்ன க்கா, திடீர்னு கௌதம் பேரை சொல்ற?” தங்கையின் கேள்வியில் நிமிர்ந்தவளிடம் பதில் இல்லை.

 

“நீ இன்னும் அவன புருஷனா நெனச்சிட்டு இருக்கன்னா… மறந்துடு க்கா.” மஹாலக்ஷ்மி ஆதங்கமாக சொல்ல,

 

“மஹா, அவர் வயசுக்காகவாவது மரியாதை கொடுத்து பேசு.” என்று அறிவுறுத்தினாள் பெரியவள்.

 

“நல்லவன் மாதிரி நடிச்சு உன்ன ஏமாத்தி விட்டு ஓடி போனவனுக்கெல்லாம் என்னால மரியாதை கொடுக்க முடியாது.” சின்னவள் பதில் பட்டென்று வந்து விழுந்தது.

 

தங்கையின் துடுக்கு பேச்சில் எப்போதும்போல கங்காவின் மனது சற்று இளகியது. “ஏய் வாயாடி, அவர் கெட்டவரெல்லாம் இல்லடி. விதி தான் எங்களை பிரிச்சு போட்டுடுச்சு. இந்த பேச்சை விடேன்.” என்றாள்.

 

“நீ என்னவோ சொல்ற எனக்கு தான் முழுசா புரியல. சரி விடு, ஏதோ அப்பா உன் வாழ்க்கைய வச்சு காசு வாங்கினாருன்னு இப்ப சொன்னியே, அது என்ன மேட்டர்? நீ அப்படி கேட்டதும் அவரு வாயே திறக்கல கவனிச்சியா?” மஹா சந்தேகமாக கேட்டாள்.

 

தன் வாழ்வில் நடந்த எதையும் சொல்லி சின்னவளான மஹாவின் மனதை குழப்ப கங்காவிற்கு மனம் வரவில்லை. மஹா எந்த நெருடலும் இன்றி அவள் வாழ்வில் முன்னேறி செல்ல வேண்டும் என்று விரும்பினாள் கங்கா. 

 

எனவே, “அதெல்லாம் ஒன்னும் இல்ல மஹா, நீ இதெல்லாம் யோசிச்சு குழப்பிக்காத. நடந்த பிரச்சனையில உனக்கு காலேஜ் போக முடியாம போச்சு பாரு. நீ உன் புக்ஸ் எடுத்துட்டு என்கூட பார்லர் வா, அங்க உக்கார்ந்து ஏதாவது படி. கிளம்பு இப்போ.” என்றாள். 

 

மேலும் அவளை வற்புறுத்தி கேட்க மனம் வராமல், மஹாவும் கிளம்ப, இருவரும் அங்கிருந்த யாரையும் கண்டு கொள்ளாமல் சென்று விட்டனர்.

 

என்ன மறைக்க முயன்றாலும் கௌரி வீசிய வார்த்தைகளில் கங்காவின் இதயம் வெகுவாக ரணப்பட்டு போயிருந்தது.

 

அதுவும் கௌதம் உடன் அவள் பேசியதை வேவு பார்த்து, அவளின் ஒழுக்கத்தின் மீது பழி சுமத்தியதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அந்த ஆதங்கத்தில் அவளை அறைந்திருந்தாள்.

 

‘அங்கே தன்னுடன் பேசியது கௌதம் தான்’ என்ற உண்மையை கங்கா அப்போதே சொல்லி இருந்தால், அவர்கள் வாயெல்லாம் மொத்தமாக அடைத்துப்போயிருக்கும். ஆனால், கௌதமை இப்போது சந்தித்தது பற்றி யாரிடமும் அவள் சொல்லவில்லை. அவனைப்பற்றி அவர்களிடம் சொல்லவும் விரும்பவில்லை. உண்மையில், அவனைப்பற்றி தன் குடுபத்தாரிடம் சொல்ல அவளுக்கு பயமாக இருந்தது.

 

ஆம், பயம் தான். அவள் காலுடைந்து, அவர்கள் கல்யாணம் முறிந்த வரை, எவ்வளவு முடியுமோ அவ்வளவு காசை அவனிடம் இருந்து கறந்திருக்கிறார்கள் இவர்கள். இப்போது அவன் நல்ல நிலையில், அதுவும் பிரபல திரைப்பட தயாரிப்பாளாராக இருப்பது தெரிந்தால், மேலும் தன்னை முன்வைத்து அவனிடம் பணம் பார்க்கவே முயல்வார்கள் என்ற பயமே அவளை வாயடைக்க வைத்திருந்தது.

 

இனி, எந்தவிதத்திலும் அவனுக்கு தொந்தரவாக இருக்க அவளுக்கு எண்ணமில்லை. கொடுத்து வைக்காத வாழ்க்கைக்கு ஏங்கும் பேதை மனதை, அவள் எங்கேயோ எப்போதோ தொலைத்து விட்டிருந்தாள். அவன் வாழ்க்கை அவனோடு, தன் வாழ்க்கை தன்னோடு என்ற மனநிலைக்கு வந்திருந்தாள் அவள்.

 

கௌதம் கைலாஷ், அவளது மனநிலையை மாற்றும் வகை அறிவானா? அல்லது அவனும் அவளிடம் தோற்று விலகுவானா?

 

***

 

பெண் வருவாள்…

 

(அப்பாடா… சொன்னது போலவே கரைக்டா யூடி கொடுத்துட்டேன் பிரண்ட்ஸ்… தொடர்ந்து படித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்…)

 

அடுத்த பதிவு சனிக்கிழமை அன்று.