ஏன் பெண்ணென்று பிறந்தேன் 16

IMG-20211007-WA0009 (1)-3cbb4e51

ஏன் பெண்ணென்று பிறந்தேன் 16

 

அன்றைய காலைப்பொழுது மிகவும் தவிப்பாக இருந்தது அவனுக்கு. அலையலையான யோசனைகளும் சிந்தனைகளும் நெஞ்சில் மோத, நேற்று மாலை வந்தது போல இன்றும் வேதா அழகு நிலையம் முன்பு காரை நிறுத்திவிட்டு, கங்கா வரவிற்காக காத்திருந்தான் கௌதம் கைலாஷ்.

 

இப்போது தான் மீசை அரும்பும் இளைஞனைப் போல, அவனது மேல் மனம் புரியாத பரிதவிப்பில் ஊசலாட, அடி மனமோ ஆழ்ந்த அமைதியில் நிதானம் காட்டியது.

 

ஒரு நாள் கூட முழுதாய் நீடிக்காத அவளுடனான திருமண வாழ்க்கை, நரகமான நான்கு வருடங்கள் நீண்ட நெடும் பிரிவு. அவர்கள் இருவருக்குள்ளும் பேச்சோ, பழக்கமோ கூட பெரிதாக இதுவரை இருந்திருக்கவில்லை.

 

கங்காவின் குணநலன் பற்றியோ, பிடித்தம், பிடித்தமின்மை பற்றியோ அவனுக்கு ஒன்றுமே தெரியாது. தன்னை பற்றியும் அவளுக்கு பெரிதாக எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று அவன் எண்ணம் ஓடியது.

 

உயிரும் உடலும் கலந்த மிக புனிதமான  கணவன், மனைவி உறவு அவர்களுடையது. ஆனால், அத்தகைய உன்னத உறவில் இணைந்திருக்கும் இருவருக்கும், தங்கள் இணையைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்று யோசிக்க, அவனிதழில் ஒரு வெற்று புன்னகை.

 

இத்தனை நாட்கள்… அல்ல வருடங்கள் அவளை நினைக்கும் போதெல்லாம் வெறுத்தே பழகிவிட்டான். தவறிக் கூட மனைவியின் மீது ஆசையோ, ஆர்வமோ வந்ததில்லை. அப்படி மனம் அலைய சாத்தியக் கூறுகளும் வாய்க்கவில்லை.

 

இப்போது அந்த சாத்தியக்கூறுகள் அவனுக்கு தென்பட்டன. ஆம், இதுநாள் வரை கங்காவை அவன் வெறுத்து இருந்தாலும், அவளுக்கு அவன் தந்த மனைவி என்ற உரிமையைப் பறிக்கத் துணியவில்லை. 

 

அவனுக்கும் தனக்குமான திருமண உறவிலிருந்து முழுதாக தான் விலகிக் கொள்வதாகவும், இனிவரும் எந்த சூழ்நிலையிலும் அவனிடம் எந்த வகையிலும் உரிமை கோரமாட்டேன் என்றும், கங்கா கையெழுத்திட்ட விடுதலை பத்திரம், இன்னும் அவனிடம் தான் பத்திரமாக இருக்கிறது. இன்னும் அதில் தன் கையெழுத்தை இடாமல் தான் வைத்திருந்தான் கௌதம்.

 

அவனுக்கு கங்காவை ஏற்றுக்கொள்வதில் தடையோ, தயக்கமோ ஏதுமில்லை. அவன் தாய், தந்தை பற்றி அவன் யோசிக்கவும் விரும்பவில்லை. ஆனால் கங்கா?

 

கங்காவைப் பற்றித்தான் அவன் சிந்தனை எல்லாம். நேற்று எத்தனை தெளிவாக அவனை மறுத்துவிட்டு போனாள்? அவளின் அந்த தெளிவு தான் அவனை அசைத்துப் பார்த்தது. 

 

அன்று பரிதவித்து நின்ற அப்பாவி பெண் கங்காவை வெகு சுலபமாக இவனால் மனைவியாக்கிக்கொள்ள முடிந்தது. ஆனால், இப்போது தன் மனைவியான அதே கங்காவை, தன் வாழ்வில் இணைத்துக்கொள்வது அத்தனை சுலபாக இருக்கவில்லையே! என்று எண்ண, சிறிதான புன்னகை அரும்பியது அவனுக்கு.

 

உலகம் புரியாத அரைகுறை பெண்கள், எந்த வகை ஆண்களிடமும் சுலபமாக விழுந்து விடுவார்கள். ஆனால், கங்கா போன்ற, மனதாலும் உடலாலும் கடினப்பட்ட முழு பெண்ணை வீழ்த்துவது எந்த ஆணுக்கும் அத்தனை சுலபமான ஒன்றல்ல போலும்.

 

தயக்கமும் பயமும் கலந்த கலவையாக தன்னருகில் மணப்பெண்ணாய் அமர்ந்திருந்த அந்த கங்காவை தேடியது கௌதமனின் மனது. அவனது சிறு தீண்டலுக்கும், ஒரு முத்தத்துக்கும் உடல் அதிர்ந்து போன அவனது பேதை மனைவி, அவனுக்கு திரும்ப கிடைப்பாளா? ஆண் மகனாய் அவனது உள்ளம் ஏங்கத்தான் செய்தது.

 

கௌதம் தன் பின்னந்தலையைத் தானே தட்டிக்கொண்டு, தரிக்கெட்டு ஓடும் தன் எண்ணவோட்டங்களுக்கு அணையிட்டான். நிமிர்ந்து அழகு நிலையத்தைப் பார்க்க, இன்னுமே கங்கா வந்திருக்கவில்லை.

 

‘அவள் ஏன் இன்னும் வரவில்லை?’ அவனுக்குள் எழுந்த கேள்வியை யாரிடம் கேட்டு தெரிந்து கொள்ள என்று பரபரத்தான்.

 

ஆசிரமத்தில் கங்காவைப் பார்த்ததும் அவளைப்பற்றி அவன் கேட்டறிந்து கொண்டது இந்த வேதா அழகு நிலையம் பற்றி மட்டும் தான். மற்றபடி அவள் வீட்டு விலாசமோ, கைபேசி எண்ணைக் கூட அவனுக்கு விசாரிக்கத் தோன்றவில்லை. அப்போதைய வெறுப்பில் எதையும் அறியவும் முனையவில்லை.

 

இப்போது சொந்த மனைவி எங்கிருக்கிறாள் என்றுகூட ஒன்றுமே தெரியாமல் இருக்கும் அவன் நிலை அவனுக்கே பரிதாபமாக தோன்றியது. 

 

இரண்டு மணிநேர காத்திருப்பிற்கு பிறகும் கங்காவை காண முடியாமல் சலிப்புற்றவனை, தொடர்ந்து வந்த அலைபேசி அழைப்புக்கள் வேறு டென்ஷன் ஏற்றின.

 

சரித்திரன் பட வெளியீட்டு வேலைகள் ஒருபுறம், புதிய படத்தின் படப்பிடிப்பில் பார்க்க வேண்டிய வேலைகள் மறுபுறம் என அவனை இழுக்க, தன் காரை உயிர்ப்பித்து வேகமெடுத்தான்.

 

“ஏய், உனக்காக நான் இங்க காத்திட்டு இருக்கேன், நீ எங்க போனடீ? இத்தனை வருஷம் என்னை காக்க வச்சது‌ பத்தலையா உனக்கு?” அவன் வாய் தன்னால் முணுமுணுத்தது. 

 

அவன் மனைவி இத்தனை நேரம் தன் குடும்பத்தாருடன் நடத்தி ஓய்ந்த போராட்டத்தைப் பற்றி அவன் அறிய வாய்ப்பில்லை தான். கௌதம் அங்கிருந்து சென்ற சில நிமிடங்களில், கங்காவும் மஹாவும் அங்கே வந்து இறங்கினர்.

 

ஆசிரமத்தின் சுற்றுப் பகுதிகளில் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. கௌதம் எல்லாவற்றையும் ஒருபார்வை பார்த்து வர, படக்குழுவினர்கள் தங்களின் நிறை குறைகள், தேவைகளை அவனிடம் பட்டியலிட்டு சொல்ல, அனைத்தையும் தலையசைப்புடன் உள்வாங்கிக் கொண்டான்.

 

அங்கே தீப்தியின் பார்வை மட்டும் வெளிப்படையாகவே, கௌதம் மீது அனலை கக்கிக்கொண்டு இருந்தது. அதை கௌதம் கவனிக்கவும் இல்லை. கவனித்தும் பொருட்படுத்தவுமில்லை. ஆனாலும் சுற்றி இருந்தவர்களின் பார்வையும் கவனமும், அவர்கள் இருவரையும் மிக சுவாரஸ்யமாக நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.

 

தன் காட்சி முடிந்து தீப்திக்கு ஓய்வு தரப்பட, அதற்குமேல் பொறுமையிழந்தவள் போல், அங்கிருந்த யாரையும் பொருட்படுத்தாமல், வேகமாக கௌதமிடம் வந்து, அவன் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தாள்.

 

படத்தின் நகர்வைப் பற்றி இயக்குநருடன் விவாதித்து கொண்டிருந்த கௌதம், தீப்தியின் இந்த அதிரடியில் சற்று திகைத்து, அவள் இழுப்பிற்கு இணங்கி அவளுடன் நடந்தான். 

 

இந்த தருணத்தை இழக்க விரும்பாதவர்கள் அவசரமாய் அவர்கள் இருவரையும் தங்கள் கைபேசியில் படம் எடுத்துக் கொள்ள, அதைக் கவனித்த கௌதமின் முகம் இறுகிப்போனது.

 

தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் வந்தவள், “உனக்கு என்னாச்சு கௌதம்? ஏன் இப்படி என்னை அவாய்ட் பண்ற? என்னை நோகடிக்கிற தெரியுமா நீ?” என்றாள், அழுகைக்கு தயாரவது போல அவள் உதடுகள் துடித்தன.

 

அவள் பிடியில் இருந்து தன்கையை உதறித் கொண்ட கௌதம், “அறிவிருக்கா தீப்தி உனக்கு? எதையும் முன்ன பின்ன யோசிச்சு செய்ய மாட்டியா? நீ என்னை இழுத்துட்டு வந்ததை எல்லாரும் பார்த்ததோட இல்லாம ஃபோட்டோ வேற எடுத்தாங்க. ச்சே.” என்று அவளைக் கடிந்தான்.

 

“அய்யோ!” அவன் சொன்னதைக் கேட்டு தீப்தி உள்ளம் பதறியது. “யாரு ஃபோட்டோ எடுத்த மடையன்? உடனே அவனை அந்த ஃபோட்டோவ டெலிட் பண்ண சொல்லு போ…” அவனை விரட்டினாள்.

 

கௌதம் தலையை இருபுறமும் சலிப்பாக ஆட்டிவிட்டு, “ஒருத்தர் ரெண்டு பேர் எடுத்திருந்தா கேக்கலாம்.” என்றான்.

 

“என்னது?” என்று விழித்தவள், “அச்சச்சோ, அப்ப நாளைக்கு நம்ம பிக் தான் சோஷியல் மீடியால டிரண்டிங்கா… போச்சு.” தீப்தி கலவரமாக சிணுங்கினாள்.

 

கௌதம் நெற்றியை தேய்த்துவிட்டு கொண்டான். 

 

“நீ போய் அவங்களை எல்லாம் மிரட்டு மாம்ஸ், யாரும் சோஷியல் மீடியால நம்ம பிக்ஸ் ஷேர் பண்ண கூடாதுன்னு ஆர்டர் போடு.” என்றவளை வினோதமாக பார்த்தவன்,

 

“நான் போய் இப்படி சொன்னா, அதுக்காகவே வேணும்னு போடுவாங்க தீபதி, செய்யறதெல்லாம் செஞ்சுட்டு இப்ப அய்யோ அம்மானு புலம்பு.” என்றான்.

 

தீப்திக்கு மொத்தமாக முகம்வாடி விட்டது. “உன்கூட பேசி டுவல்வ் டேஸ் ஆச்சு தெரியுமா கௌதம்? அதான்… உன்ன கோபத்துல புடிச்சு இழுத்துட்டு வந்துட்டேன். இப்படி ஆகும்னு எனக்கு தெரியாது. இப்ப என்ன பண்றது?” அவள் பரிதவித்து கேட்க, கௌதம் முகம் இளகினான்.

 

“ப்ச் விடு தீப்தி, இதெல்லாம் நீ வொர்ரீ பண்ணிக்க வேணாம். அப்படி நம்ம போட்டோ டிரெண்டிங் ஆன கூட, நீ செம ஃபேமஸ் ஆகிடுவ. அந்த ஆங்கள்ல யோசிச்சு பாரு.” கௌதம் சொன்ன சமாதானத்தில் அவள் கண்கள் பளிச்சிட்டன.

 

“ஓ மை காட்! அப்ப வேற பிராப்ளம் எதுவும் வராதில்ல?” தீப்தி துள்ளலாக கேட்க, அவன் இல்லையென்று தலையாட்டியதும், பாய்ந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

 

கௌதம் தன்னிடமிருந்து அவளை பிரித்து நிறுத்தி, “இப்ப தான சொன்னேன், அதுக்குள்ள நீ…” அவன் முடிக்காமல் முறைக்க, தீப்தி அவசரமாக சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, யாரும் தங்களைக் கவனிக்கவில்லை என்று,  நெஞ்சில் இரு கைகளையும் வைத்து, நிம்மதி மூச்சை விட்டாள்.

 

கௌதம் இன்னும் அவளை முறைத்துக் கொண்டு தான் நின்றிருந்தான். “கவனி தீப்தி, இந்த சினிமா ஃபீல்ட்ல எல்லாரோட பார்வையும் நம்மள பின் தொடர்ந்துட்டே இருக்கும். நாம தான் நம்ம பர்சனலை சரியா மேனேஜ் பண்ணி காப்பாத்திக்கணும். இப்படி உணர்ச்சிவசப்பட்டு நம்ம பலவீனங்களை வெளிப்படுத்திடக் கூடாது. நீ புத்திசாலி பொண்ணு தான், பட் உன்னோட சிறுபிள்ளத்தனத்தை குறைச்சுக்கோ.” என்று அறிவுறுத்தினான்.

 

“போ மாம்ஸ், சும்மா நீ அட்வைஸ் பண்ணிட்டே இருக்க. ஐ நோ, எங்க எப்படி நடந்துக்கணும்னு எனக்கும் நல்லா தெரியும்.” தீப்தி முகம் சுருக்கினாள்.

 

“நல்லா தெரிஞ்சவ மாதிரி நீ நடந்துக்கலையே.” அவன் விடாமல் பேச,

 

“நான் உன்மேல முதல்லயே ரொம்ப கோபமா இருக்கேன் கௌதம். நீ மேல மேல என்னை வாரி டென்ஷன் படுத்தாத.” என்று சிடுசிடுத்தாள்.

 

“நான் என்ன பண்ணேன்?” அவன் கைகளை விரித்து கேட்க,

 

“என்னை அவாய்ட் பண்ண, என்கிட்ட பேசல, உனக்கு என்மேல லவ்வே இல்ல போ.” ஒவ்வொன்றாக சொன்னவளின் குரல் கரகரத்தது.

 

“என்னை கண்டுக்காம அவாய்ட் பண்ணி போனது நீதான் தீப்தி, நானில்ல.” அவன் தன் விளக்கம் தர,

 

“ஆமா… நான் கோபமா போனா நீ என்னை கன்வின்ஸ் பண்ணணும் இல்ல? சாரி கேக்கணும், சமாதானம் பண்ணணும் இல்லயா?” மூக்கை உறிஞ்சிக் கொண்டு, மேக்கப் கலையாமல் கைக்குட்டையால் ஒற்றி எடுத்து பேசிவளை, சிறு மென்னகை அரும்ப பார்த்தான் கௌதம்.

 

“நான் எதுக்கு உன்கிட்ட சாரி கேக்கணும்?” அவன் புருவங்கள் கேள்வியாக நெற்றி மேடேறி இறங்கின.

 

“பின்ன, உன் ஃபிலிம்ல எனக்கு நீ சான்ஸ் கொடுக்கல இல்ல. என்னை அலையவிட்ட இல்ல, அதுக்காக.” என்று குற்றம் சாட்டினாள்.

 

“இப்ப நீ என் படத்துல தான நடக்கிற தீப்தி.” 

 

“ஆமா, அது நீ கொடுத்த சான்ஸ் ஒன்னுமில்ல, நான் ஆடிஷன் போய், என் திறமைய பார்த்து எனக்கு கிடைச்ச சான்ஸ் இது.” என்று அழுத்தி பேசிவளின் தலையில் தட்டியவன்,

 

“நானும் அதைத்தான் சொல்றேன் மண்டு. உன் லைஃப்ல  ஃபர்ஸ்ட் சான்ஸ் நானோ இல்ல வேற யாரோவோ கொடுத்ததா இருக்கறதை விட, அது உன் திறமையால வந்ததா இருந்தா, அந்த வாய்ப்போட மதிப்பு என்னனு உன்னால முழுசா உணரமுடியும்.

 

பை சான்ஸ், நான் உனக்கு என் படத்துல நேரா சான்ஸ் தந்திருந்தேன்னு வை. உன் ஃபிரண்ட்ஸ் என்ன சொல்லுவாங்க, ‘உன் மாமா பெரிய புரோடியூசர், அதான் உனக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைச்சிருக்குன்னு’ ஈஸியா சொல்லிட்டு போயிடுவாங்க.

 

இப்ப அவங்களால அப்படி ஈசியா சொல்ல முடியாதில்ல, ஏன்னா இந்த சான்ஸ் என் தலையீடு இல்லாம முழுக்க உன்னோட முயற்சி, திறமையால வந்தது. அதுல உன் பெருமை இன்னும் கூடி இருக்கு தானே!”

 

கௌதம் விளக்கி சொன்ன விதத்தில், தீப்தியின் முகத்தில் பிரகாசம் கூடியது. “அட, நான் இப்படி யோசிக்கவே இல்ல பாரேன் கௌதம், யூ ஆர் ஆல்வேஸ் ஸோ ஸ்வீட்…” என்று அகமகிழ்ந்து துள்ளிக்கொண்டு மீண்டும் அவனை அணைத்துக்கொள்ள பாய்ந்தாள்.

 

கௌதம் ஓரடி பின் வாங்கியவன், தன் இருகைகளையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு, கண்களைச் சுருக்கி அவளை அமர்த்தலாக பார்த்து நிற்க, தீப்தியின் முகத்தில் அழகியலாய் அசட்டு சாயல் வழிந்தது.

 

“அது… நான்… லவ் யூ சோ மச் மாம்ஸ்!” என்று திணறி, அவனால் தன்னுள்ளே பொங்கி பெருகும் காதலை, கண்கள் மின்ன சொன்னாள்.

 

முதல்முறை அவளின், ‘ஐ லவ் யூ’ அவனுக்குள் சங்கடத்தை ஏற்படுத்தியது. இனியும் தீப்தியிடம் எதையும் மறைக்கக் கூடாது என்ற முடிவுடன், “நேரமாச்சு பாரு, முதல்ல போய் ஷூட்டிங் முடிச்சிட்டு வா… நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும். டைம் கிடைக்கும் போது பேசலாம்.” என்றான் கௌதம்.

 

தீப்தி, வேகமாக தலையாட்டிவிட்டு சந்தோஷமாக துள்ளி ஓடினாள்.

 

தீப்தியிடம் பேசும் முன் கங்காவிடம் பேசிவிட வேண்டுமே, என்று எண்ணம் ஓட, ‘கங்கா பார்லர் வந்திருப்பாளா?’ என்ற யோசனையுடன் மீண்டும் அவளைக் காண விரைந்தான் கௌதம்.

 

மதிய உணவு வேளை முடிந்த அந்த நேரத்திலும் வேதா அழகு நிலையம் தொய்வின்றி நடந்து கொண்டிருந்தது. நாளை முகூர்த்த நாள் என்பதால் நிறைய பெண்கள், அழகு நிலையத்தை தேடி வந்திருந்தனர் போலும்.

 

மறுபடி அங்கேயே காத்திருக்க வேண்டிய நிலை கௌதமிற்கு. ‘அட என்னடா இது?’ என்றிருந்தது அவனுக்கு.

 

வெளியே கங்காவின் ஸ்கூட்டியைக் கவனித்தவன், அவள் உள்ளே தான் இருக்கிறாள் என்று புரிந்து கொண்டான். ஆனால், ‘எப்படி உள்ளே செல்வது?’ நெற்றியைத் தன் கையால் குத்திக் கொண்டான்

 

நேற்று போல் ஹார்ன் அடித்து இன்றும் அலப்பறை செய்தால், அது பொறுக்கித்தனமாக இருக்கும் என்று எண்ணி அதை விடுத்தான். நேற்று ஏதோவொரு வேகத்தில் அப்படி செய்தது. அதனால் கங்காவிற்கும் சங்கடமாகும் என்று அவளுக்காகவும் யோசித்தான்.

 

‘பேசாமல் நேராக பார்லருக்குள் நுழைந்து விட்டால் என்ன?’ என்ற கௌதம் வேகத்தைத் தடை செய்தது, அங்கே கொட்டை எழுத்தில் எழுதி ஒட்டியிருந்த, ‘ஆண்களுக்கு அனுமதியில்லை’ என்ற வாசகம்.

 

“அடச்சே, என்னடா எனக்கு வந்த சோதனை? என் பொண்டாட்டிய பார்க்கக்கூட தயங்கி திணற வேண்டியதா இருக்கு?” என்று நொந்து கொண்டான்.

 

உரிமையோடு அவளைக் கைப்பற்றி அழைத்து வர முடியாமல், தனக்குள் ஏற்படும் இந்த தயக்கம், அவனை சோர்வடையச் செய்தது. ‘கங்கா என் மனைவி…’ என்று எல்லாருக்கும் கேட்குமாறு கத்தி சொல்ல வேண்டும் போல இருந்தது அவனுக்கு. ஆனால் இதெல்லாம் இவன் எடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம்.

 

நெற்றியைத் தேய்த்துக்கொண்டே என்ன செய்யலாம் என்று அவன் யோசித்திருக்கும்போதுதான், அழகு நிலையத்தின் கண்ணாடி கதவைத் திறந்து வெளியே வந்தாள் ஒரு பெண்.

 

அவளை பார்த்ததும் அவன் கண்களில் மின்னல். 

 

அவள் சாலையில் இறங்கி எதிர் பக்கம் வேகமாக நடக்க, கௌதம் தன் காரிலிருந்து இறங்கி, அவளின் பின்னோடினான்.

 

“ஏய்… ஏய் உன்னத்தான் நில்லு…” அவள் பெயர் அவனுக்கு நினைவில்லாமல் போக, பொதுவாக அழைத்தான். 

 

அவள் திரும்பியும் பாராமல் நேராக நடக்க, “ஏய்… குட்டிப்பொண்ணு… கொஞ்சம் திரும்பி பார் என்னை.” அவன் இன்னும் சத்தமாக குரல் கொடுக்க, அவள் நடையின் வேகத்தைக் குறைத்து, நெற்றி தசைகள் சுருங்க, திரும்பிப் பார்த்தாள்.

 

கௌதம் வேக எட்டுக்கள் எடுத்து வைத்து அவளிடம் வந்து நின்றான். “ஏய்… நீ… கங்காவோட குட்டி சிஸ்டர் தான? கரைக்டா?” அவன் சற்று மூச்சுவாங்கியபடி, வாஞ்சையாக வினவினான்.

 

அதுவரை அவனை அதிர்ந்து பார்த்து நின்ற மஹாவிற்கு, அவன் கேள்வியில் முகம் திகுதிகுவென எரிய ஆரம்பிக்க, அதே வேகத்தில், அவன் கன்னத்தில் ஓங்கி அறை வைத்திருந்தாள்.

 

அதைச் சற்றும் எதிர்பாராத கௌதம் ஒரு நொடி அதிர்ந்து நிற்க, “நீ ஏன்டா இங்க வந்த? கங்கா பேரைச் சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு? அவளுக்கு வாழ்க்கை கொடுக்குறேன்னு பெருசா சீன் போட்டுட்டு, அவளை அம்போன்னு விட்டு ஓடி போனவன் தான நீ? ச்சே!” மஹாலட்சுமியின் ஆவேசமான பேச்சைக்கேட்டு, வாயடைத்து நின்றிருந்தான் கௌதம் கைலாஷ்.

 

***

 

பெண் வருவாள்…

 

(தொடர்ந்து விருப்பங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் அனைத்து தோழமைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்  🙏🙏🙏 சின்ன எபி தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க, நெக்ஸ்ட் எபி பெருசா தரேன் பா.)

 

அடுத்த பதிவு புதன்கிழமையன்று…

 

❤️❤️❤️