ஏன் பெண்ணென்று பிறந்தேன் 17

IMG-20211007-WA0009 (1)-8313eaec

ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 17

 

இதுவரை கௌதமிடம் யாரும் கைநீட்டியதில்லை. முதல் முதலில் ஒரு சிறு பெண்ணிடம் அறை வாங்கி நிற்பது, அவனுக்குள் சட்டென, அவமான உணர்வையும் கோபத்தையும் ஒருங்கே எழச் செய்தது.

 

அவன் முகமாற்றத்தை கவனித்த மஹாவிற்கு உள்ளுக்குள் குளிர் பரவிட, முகம் வெளுத்துப் போனாள்.

 

கௌதமை  அங்கே பார்த்ததே பெரிய  அதிர்ச்சி என்றால், தான் அவனை அடித்து விட்டது அதற்குமேல் அதிர்ச்சியைத் தந்தது அவளுக்கு. தான் அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தில் நிற்பவனை எப்படி, எந்த தைரியத்தில், கைநீட்டி அடித்துவிட்டாள்? என்பதை யோசிக்க, அவளுக்கே கண்ணைக்கட்டியது.

 

அவனை அறைந்த தன் கையையும், அவன் முகத்தையும் மாறி மாறி பார்த்தவள், சுற்றிலும் பார்த்தாள். மதிய நேரமாதலால் அங்கே சொல்லும்படி யாரும் இருக்கவில்லை. தூர அங்கங்கே நின்றிருந்திருந்த ஒரு சிலரும் அவர்களைக் கவனித்ததாக தெரியவில்லை.

 

உள்மன உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் அவளின் முகத்தைப் பார்த்தவனுக்கு, மெல்ல கோபம் குறைந்தது. 

 

“ஏய், நீ என்னை அடிச்சிட்ட?” என்று அதட்டல் விட்டவன் குரலிலும் அத்தனை கோபம் தெறிக்கவில்லை.

 

அதில், சற்று தன் தைரியத்தை மீட்டுக் கொண்டவள், “ஆமா அடிச்சேன், ஒரு அறையோட விட்டேனேன்னு சந்தோசப்படுங்க” என்று காரமாகவே பதில் தந்தாள்.

 

அவளை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தவன், “பிஞ்சு மொளகா சைஸ் இருந்துகிட்டு, என்னமா காந்துற நீ?” என்றவன் மனமும் இப்போது இயல்பு நிலைக்கு மீண்டிருந்தது.

 

ஏனோ அந்த சிறு பெண்ணின் மீது கோபத்தை இழுத்து வைக்க அவனால் முடியவில்லை. முன்பு பள்ளி சிறுமியாக ஓரிரண்டு முறை அவளை பார்த்து இருந்த ஞாபகம் அவனுக்கு, மேலோட்டமாக வந்து போனது. 

 

அவள் தங்கையைப் போல கங்காவும் தைரியமானவளாக இருந்தால் நன்றாயிருக்கும் என்று எப்போதோ அவன் மனதில் எண்ணம் தோன்றியதும் கூட, நினைவிருந்தது அவனுக்கு. எல்லாவற்றிற்கும் மேல், அவள் கங்காவின் தங்கை. அவனுக்கு மச்சினி முறை வேறு. கோபம் எங்கே என்று நிற்கும்?

 

அவன் பேச்சு தன்னை வம்பு இழுப்பதாக அவளுக்குத் தோன்ற, “அவ்வளோ தான் மரியாதை உங்களுக்கு. வீணா எதுக்கு என்னை கூப்பிட்டு வச்சு வம்பு வளர்க்குறீங்க?” என்று கடுகடுத்தாள்.

 

“ஓஹ் இதான் நீ எனக்கு கொடுத்த மரியாதையா?” என்றவன், தன் கன்னத்தைத் தேய்த்து காட்ட, மஹாவின் பார்வை தன்னால் சங்கடம் காட்டியது.

 

அவளுக்கு புரியத்தான் செய்தது, என்ன இருந்தாலும் அவள் அவனை அடித்தது தவறென்று. அதனால், “நான்… நான் உங்கள அடிக்கணும்னு அடிக்கல, கங்காவோட எல்லா கஷ்டத்துக்கும் நீங்க தான காரணம். அதான்… என்னையும் மீறி… அடிச்சுட்டேன். தப்பு தான் ஆனாலும் என்கிட்ட சாரி எல்லாம் எதிர்பார்க்காதீங்க.” என்றாள் வீம்பாக.

 

அவள் பேச்சில் கௌதம் புருவங்கள் உயர்ந்தன. “உன் சாரி எல்லாம் எனக்கு வேண்டாம், உன் பேர் என்னனு சொல்லு முதல்ல?” என்று கேட்டான்.

 

அவள் அவனை வித்தியாசமாகப் பார்த்து, “மஹாலக்ஷ்மி!” என்று வேண்டா வெறுப்பாய் தன் பெயரை உச்சரிக்க,

 

“குட், மஹா நான் கங்கா கிட்ட பேசணும். அதுக்கு உன்னோட ஹெல்ப் வேணும்.” கௌதம் அவளிடம் நேரடியாக கேட்டான்.

 

“நீங்க எதுக்கு சார் கங்கா கிட்ட பேசணும்? எங்க வீட்ல அவளை பிச்சு திண்றது போதாதா, குறைக்கு நீங்க வேற அவளை காயப் படுத்தணுமா? 

 

கங்காவுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு தான் அவளை மிரட்டி எழுதி வாங்கிட்டு போயிட்டீங்க இல்ல சார்… இப்ப எந்த உரிமையில அவகிட்ட பேச கேக்குறீங்க?” மஹா அவனிடம் ஆதங்கமாக வார்த்தைகளைக் கொட்டினாள்.

 

“உங்க வீட்ல கங்காவுக்கு என்ன பிரச்சனை மஹா? மறுபடி பணம் கேட்டு உங்கப்பா டார்ச்சர் பண்றாரா?” கௌதம் கோபமாக கேட்க,

 

“எங்க வீட்டு பிரச்சனைய பத்தி உங்ககிட்ட சொல்ல வேண்டியது இல்ல மிஸ்டர்.” என்று மேலும் அவனிடம் பேச பிடிக்காமல் திரும்பி நடந்தவளை, கைப்பற்றி இழுத்து தன் முன்னால் நிறுத்தினான் கௌதம்.

 

“மஹா…” அவள் பெயரை அழுத்தமாக உச்சரித்தவன், தன்னை நிதானமாக்கிக் கொண்டு, “நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு மஹா,‌ எனக்கு தெரிஞ்சு உங்க பேமிலல கங்கா மேல அக்கறையா இருக்கிறது நீ மட்டும் தான். நான் பேச வந்திருக்கிறதும் கங்காவுக்காக தான், என்னை புரிஞ்சிக்க டிரை பண்ணேன்.” அவன் குரல் அவளிடம் கெஞ்சிற்று.

 

மஹா அவன் பிடியிலிருந்து தன் கையை விலக்கிக்கொண்டு, “நான் இப்ப என் ஃபிரண்ட பார்க்க போயிட்டு இருக்கேன். சீக்கிரம் சொல்லுங்க.” என்றாள்.

 

“எங்கயாவது உக்கார்ந்து பேசலாமே, இப்படி நடுரோட்டுல…” கௌதம் தயங்க, 

 

“பக்கத்துல கோயில் இருக்கு. எதுவா இருந்தாலும் பத்து நிமிஷத்துல சொல்லுங்க, எனக்கு டைம் இல்ல.” என்றவளை கண்கள் சுருக்கி பார்த்தவன், அவளுடன் நடந்தான்.

 

சிறிய பிள்ளையார் கோயில் அது. பிரகாரத்தின் பக்கவாட்டு படிக்கட்டில் இருவரும் அமர்ந்ததும், “கங்காவ எதுக்காக உங்க வீட்ல டார்ச்சர் பண்றாங்க? அதை முதல்ல சொல்லு மஹா?” கௌதம் மனம் பொறுக்காமல் வினவ,

 

இவனிடம் சொல்லி என்னவாகப் போகிறது என்ற ரீதியில் அவனைப் பார்த்தவள், “ஒரு பணக்கார கிழவனுக்கு ரெண்டாந்தாரமா கங்காவ கட்டி வைக்க  அவளை வற்புறுத்திட்டு இருக்காங்க. போதுமா? இதை கேட்டதும் உங்க காது குளிர்ந்து போச்சா?” என்றவள், அவன் முகம் இறுகியதைக் கவனித்து வாய்மூடிக் கொண்டாள்.

 

“யார் பொண்டாட்டிக்கு யார் மாப்பிள பார்க்கிறது?” என்று ஆத்திரமாக கேட்டவனின் பற்கள் நறநறத்தன.

 

கங்கா சொன்னதை. அப்படியே இவனும் சொல்ல, மஹா அவனை சற்று வியந்து பார்த்தாள். “ஓ… உங்களுக்கு இப்ப தான் கங்கா உங்க பொண்டாட்டின்னு ஞாபகம் வந்திருக்கா மிஸ்டர்! இத்தனை வருஷம் அம்னீஷியாவுல இருந்தீங்களா என்ன?” அவனிடம் கேலியான கேள்வியையும் வைத்தாள்.

 

கௌதம் சிறு சங்கடத்துடன், தங்கள் பெற்றோர் செய்த தந்திரங்களை அவளிடம் மேலோட்டமாகச் சொன்னவன், “நேத்து உண்மை தெரிஞ்சதும் கங்காவ தேடிவந்து அவகிட்ட மன்னிப்பு கேட்டேன். எப்பவும் கங்காவ ஏமாத்தணும்ற எண்ணம் எனக்கு இல்ல. இப்பவும் அவளோட சேர்ந்து வாழத்தான் நினைக்கிறேன்.” என்றான்.

 

மஹாவால் அவன் சொல்வதை நம்பமுடியவில்லை. அவன் மீதும் அவளுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. “நீங்க சொன்ன எதுலயும் நீங்க சம்பந்தப் படலன்னு நான் எப்படி சார் நம்பறது? இவ்வளவு நாள் இல்லாம இப்ப சட்டுன்னு உங்களுக்கு உண்மை தெரிஞ்சிடுச்சா… நல்லாவே கதை கட்டுறீங்க சார். இதையெல்லாம் நீங்க சொன்னதும் அப்படியே நம்பறத்துக்கு நான் ஒண்ணும் கங்கா இல்ல சார்.” என்றவளை அயர்ந்து போய் பார்த்தான். 

 

“உனக்கு எப்ப என்மேல நம்பிக்கை வருதோ, அப்ப நீ என்னை நம்பிககோ! இப்ப கங்காவ சந்திச்சு பேசணும். அதுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணு.” என்று கேட்டான்.

 

மஹா சட்டென அவனுக்கு எந்த பதிலும் தரவில்லை. சற்று நேரம் யோசித்து‌, பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாக தலையசைத்துவிட்டு எழுந்து கொண்டாள்.

 

சின்னவளின் தலையசைப்பே கௌதமிற்கு, அப்பாடா என்றிருந்தது. தன் விசிட்டிங் கார்டை அவளிடம் நீட்டினான். 

 

அதை வாங்கி பார்த்தவளின் ஒற்றை புருவம் வியப்பில் உயர, “நீங்க… நிஜமா நீங்க தான் சினி புரோடியூசர் கௌதம் கைலாஷா…? வாவ் என்னால நம்பவே முடியல.” என்று உற்சாக குரலில் சொன்னவள், அவனது புன்னகையுடன் கூடிய தலையசைப்பில், மீண்டும் தன் கெத்தை விடாமல் இழுத்துப் பிடித்து கொண்டாள்.

 

“ம்ம் நீங்க பெரிய ஆளு தான் சார். அதான் கங்கா போல அப்பாவி பொண்ணுங்க லைஃப்ல ஈஸியா விளையாடி பார்க்கிறீங்க போல.” மஹா அவனை குற்றம்சாட்ட, கௌதம் தலையை சலிப்பாக அசைத்துவிட்டு, முன்னே நடந்தான்.

 

“ஈவ்னிங் கங்கா ஃபிரியா இருந்தா பேசலாம். டைம் கேட்டு கால் பண்ணு. எங்க மீட் பண்ணலாம்னு சொல்லு.” என்று சொல்லிவிட்டு செல்பவனை, யோசனையுடன் பார்த்து நின்றிருந்த மஹா, தன் தோழியைச் சந்திக்க விரைந்தாள்.

 

கௌதம் சொன்ன விசயங்கள் ஒவ்வொன்றும் அவளுக்குள் அலைமோதிக் கொண்டிருந்தது. சுற்றி இருப்பவர்களின் சுயநலம், வாழ வேண்டிய இருவரின் வாழ்க்கையை எத்தனை திசை மாற்றி போட்டிருக்கிறது என்று எண்ணியவள் பெருமூச்செறிந்தாள். 

 

‘கௌதமை சந்தித்தைப் பற்றி ஏன் கங்கா என்னிடம் கூட சொல்லவில்லை?’ என்று நினைக்க, அவளுக்கு மனதில் பாரம் ஏறியது. கௌரி அவளை தவறாக பேசியும், கங்கா கௌதமைப் பற்றி சொல்லாததை யோசித்துப் பார்த்தவளுக்கு, அக்காவின் பொறுமையின் மீது கோபம் கோபமாக வந்தது.

 

***

 

மாலை ஆறு மணிக்கு, மஹாலக்ஷ்மி அழைத்திருந்த பூங்காவின் வெளியில் தன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, மெதுவாக உள்ளே நடந்தாள் கங்கா. 

 

கௌதமுடன் சந்திப்பு பற்றி ஏதும் சொல்லாமல், “உன்கிட்ட முக்கியமா பேசணும், நீ நேரா பார்க் வந்துடு கங்கா, நான் வெயிட் பண்றேன்” என்று மட்டும் கூறியிருந்தாள் மஹாலக்ஷ்மி. 

 

கங்காவிற்காக காத்திருந்த கௌதம், தன் மச்சினியைக் கவனிக்கிறேன் என்ற பெயரில் அவளை வேண்டுமென்றே வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான்.

 

“சாக்லேட் சாப்பிடறியா மஹா?”

 

“ம்ஹூம்.”

 

“ஐஸ்கிரீம் வாங்கி வரவா?”

 

“வேணாம்.”

 

“ஓ அப்ப உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு வாங்கி தரேன்.”

 

“எனக்கு ஒண்ணும் வேணாம்.” அவள் சிடுசிடுத்தாள்.

 

“அட்லீஸ்ட் லாலிபாப்? பஞ்சு மிட்டாயாவது…?” கௌதம் இழுக்க,

 

“என்னை பார்த்தா எல்கேஜி பாப்பா மாதிரி தெரியுதா உங்களுக்கு?” மஹா அவனை முறைக்க, 

 

அவன் அசறாமல், “பாப்பா மட்டும் தான் இதெல்லாம் சாப்பிடணும்னு இல்ல மஹா, உன்ன மாதிரி ஆங்கிரி பேர்ட்ஸ் கூட சாப்பிடலாம்.” என்று இழுத்துச் சொன்னான். 

 

மஹா அவனை நேராக முறைத்து, “நீங்க என் அக்காவ கரைட் பண்ண வந்தீங்களா? இல்ல என்னையா? ஏன் புரோடியூஸரே என்னை டார்ச்சர் பண்றீங்க?” அவளின் சிடுசிடுப்பை மீறியும் அவளது துடுக்குப் பேச்சு எட்டி பார்த்தது.

 

“உன் அக்காவ கரைட் பண்றதோட… சைட்ல உனக்கும் ரூட் விடலாம் தான?” என்று சொல்லி அவன் வாய்க்குள் சிரிக்க,

 

“யோவ் புரோடியூஸரே, உன் புத்தி இப்படி போகுதா? உன்ன போய் நல்லவன்னு நினச்சேன் பாரு.” என்று வேகமாக திரும்பி நடந்தாள்.

 

“ஏய் நில்லு மஹா” வாய்கொள்ளா புன்னகையுடன் அவளை கத்தி அழைத்தான் கௌதம். அவள் நிற்பதாக இல்லை.

 

“ஏய் மச்சினி… நில்லு” என்று அழைக்க, அவள் சட்டென நின்று அவனை நோக்கி வேகமாக வந்து கண்களை உருட்டி, கோப மூச்சு வாங்கியபடி, “அக்காவுக்கும் தங்கச்சிக்கும் ஒன்னா ரூட் விடற உனக்கெல்லாம் கங்காவ தர முடியாது… நீ போலாம் போயா.” என்றாள் அதே கோபத்துடன்.

 

அவளின் அந்த கோபம் அவனுக்கு சிரிப்பை வரவழைக்க, “என் வாலு மச்சினி, நீ எனக்கு மக மாதிரி, உன்ன போய் நான் தப்பா பார்ப்பேனா?” என்றான் முகம் முழுவதும் சிரிப்பொழுக.

 

மஹாலட்சுமி அவன் பரிவான வார்த்தையில் அசைவற்று நின்று விட்டாள். 

 

‘டொய்ன் டொய்ன் டொய்ய்ன்…’ 

 

அவள் பின்னணியில் வயலின் இசை வழிவது போல மாயை கூட தோன்றியது.

 

“நிஜமாவா? என்னை தங்கச்சி மாதிரின்னு சொல்லாம மக மாதிரின்னு சொன்ன பாரு, அங்க நிக்கிற மாமா நீ!” 

 

அவள் அவனை உரிமையோடு அழைத்து பேச, அதற்கும் அவன் புன்னகை வழிந்தது.

 

“எனக்குன்னு ஒண்ணு ஒண்ணும் பார்த்து செய்யும்போது கங்காவும் இப்படித்தான் சொல்லுவா, நான் அவளுக்கு மக மாதிரின்னு… நான் தான் திட்டுவேன், நான் உனக்கு தங்கச்சி மட்டும் தான்னு.

 

அவளுக்கு குடும்பம், குழந்தைனு எதுவும் கொடுத்து வைக்கலன்னு, என்னை மகளா நினச்சு, என்னையே பிடிச்சிக்க நினைக்கிறா மாமா. நான் அதுக்கு ஒத்துக்கல. கங்காவுக்கான வாழ்க்கை அவளுக்கு கிடைக்கணும். அவள் முழு சந்தோசமா அவளோட நிறைவான‌ வாழ்க்கையை வாழணும்.

 

தனக்குன்னு யாருமே இல்லன்ற ஏக்கம்‌‌ அவளுக்கு. அம்மாவும் அப்பாவும் அவமேல கொஞ்சம் அக்கறை காட்டி இருந்தா கூட, அவங்களுக்காக அவ எல்லாத்தையும் செஞ்சு இருப்பா, இப்பவும் செய்றா தான், ஆனா கடமைன்னு செய்யறதும் அன்பால செய்யறதும் வேற வேற தான.”

 

ஒரே மூச்சாய் தன் மனதில் உள்ள அனைத்தையும் கொட்டிவிட்ட மஹாவை வாஞ்சையாக வருடியது அவன் பார்வை. “இனி கங்காவ எதுக்கும் நான் ஏங்க விடமாட்டேன் மஹா, பிராமிஸ்” என்று அவன் உறுதி தரவும், கங்கா அவர்களை நெருங்கவும் சரியாக இருந்தது.

 

தங்கை உடன் கௌதமை அங்கே பார்த்ததும், சற்று தயங்கி முன்னேறி அவர்களிடம் வந்து நின்றாள்.

 

கௌதம் பார்வை அவள் முகத்தில் வாஞ்சையாக படர்ந்தது. கூந்தல் கற்றைகள் கலைந்து அவள் முகத்தில் படிந்திருக்க, மாசுமருவற்ற அவள் முகம் சோர்வில் வாடி துவண்டு தெரிந்தது.

 

“நீங்க… மஹா கூட எப்படி?” கங்கா புரியாமல் அவனை கேட்க,

 

வழக்கம்போல கௌதம் பதில் தரும்முன், மஹா முந்திக் கொண்டாள். “இவரு, உன்ன பார்த்து பேசணும்னு நம்ம பார்லர் வெளிய கிடையா கிடந்தாரா, நீ வெளியே வரல, நான் தான் வந்தேன். என்கிட்ட வந்து கெஞ்சி கேட்டதால போனா போகுதுன்னு இங்க வர சொன்னேன்.” 

 

“மஹா, என்ன விளையாட்டு பேச்சு இது? அவரு வயசுக்காவது நீ மரியாதை கொடுத்து பேசு.” கங்கா தங்கைக்கு அறிவுறுத்த, 

 

அதில் மூண்ட சிரிப்பை கௌதம் இதழ் மடித்து மறைத்துக் கொண்டவன், “என்னை பார்த்ததும் எனக்கு கொடுக்க வேண்டிய மரியாதை எல்லாம் சிறப்பாவே கொடுத்துட்டா… அப்படித்தானே மஹா?” கௌதம் தன் கன்னத்தைத் தேய்த்தபடி கேட்க, மஹா சங்கடத்துடன் திருதிருவென விழித்தாள்.

 

அவர்கள் இருவரையும் கவனித்த கங்கா, “அப்படி என்ன பண்ண மஹா?” என்று கேட்க,

 

“நானா? நான் ஒண்ணுமே பண்ணல க்கா.” இருகைகளையும் விரித்துச் சொன்னவள், “நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க, நான் போய் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்திறேன்.” என்று, மஹா அவர்களுக்கு தனிமை தந்து நழுவிக் கொள்ள, கௌதம் சிரித்தே விட்டான்.

 

கங்கா அவனிடம் திரும்பி, “அவளுக்கு கொஞ்சம் அவசர புத்தி, அதோட உங்க மேல கோபமா வேற இருந்தா, அவ உங்கள ஏதாவது தப்பா பேசி இருந்தா, மனசுல வச்சுக்காதீங்க.” என்று கூற,

 

“ஹே கங்கா, அதெல்லாம் நான் எதுவும் நினச்சுக்கல, இப்ப நானும் மஹாவும் ராசி ஆகிட்டோம் தெரியுமா?” என்றான்.

 

அவன் பதிலில் நிம்மதியானவள், “நீங்க எதுக்கு என்னை பார்க்க வந்தீங்க கௌதம்? மறுபடி ஏதாவது பிரச்சனையா?” கவலையுடன் வினவினாள். ஏதோ பிரச்சனைக்காகத் தான் அவன் தன்னை தேடி வந்திருக்கிறான் என்றுதான் பட்டது அவளுக்கு.

 

ஆம் என்பது போல தலையசைத்தவன், “முதல்ல நீ உக்காரு கங்கா. ஏன் இவ்வளோ டயர்டா தெரியற? உனக்கு குடிக்க ஏதாவது வாங்கி வரவா?” அவளிடம் பரிவாக வினவ,

 

“இல்ல, எதுவும் வேணா…” என்று மறுத்தவள், தன் கைகளால் முகத்தை துடைத்துவிட்டு, அவன் கைகாட்டிய இடத்தில் அமர்ந்து கொண்டாள்.

 

“இப்ப சொல்லுங்க, என்ன பிராப்ளம்?” கங்கா மறுபடி கேட்கவும்,

 

“என் பிரச்சனை என்னன்னு சொன்னா… நீ எனக்காக வருவியா?”

 

கௌதம் கேள்வி அவளுக்கு புரிந்தும் புரியாததாக இருந்தது. எனவே, “என்னால முடிஞ்சதை செய்றேன்.” என்றாள் தயக்கமாக.

 

“அப்ப சரி, நீ என்கூட வா, எனக்கு பொண்டாட்டியா!” 

 

கௌதம் சொன்னதும் திகைத்து எழுந்தவள், “என்ன? நான்… நான் எப்படி? என்னாச்சுன்னு தெளிவா சொல்லுங்க ப்ளீஸ்.” அவள் மனத்திற்குள் படபடப்பு கூடியது.

 

கௌதம் சாதாரணமாக, “ஏன் இவ்வளவோ ஷாக் கங்கா? நாம உக்கார்ந்து பேசலாம்.” என்றவன், அவள் இரு தோள்களைப் பற்றி அமர வைத்து, அவளருகில் சற்று இடைவெளி விட்டு தானும் அமர்ந்து கொண்டான்.

 

கங்காவின் பார்வை அவனிடம் கேள்வியாக நிலைத்திருந்தது. அவள் இடக்கரம் பற்றி, அவன் தன் வலக்கரத்தோடு சேர்த்துக்கொள்ள, கங்கா சட்டென தன் கையை விலக்கிக் கொள்ள முயன்றாள்.

 

தன் பிடியை இறுக்கியவன், “ஜஸ்ட் ரிலாக்ஸ் கங்கா… அடிமுட்டாள்தனமா ஏமாந்து போய் இத்தனை வருஷம் உன்ன பிரிஞ்சு ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். இனியும் உன்ன என்னால பிரிஞ்சு இருக்க முடியாது. நீ என்கூடவே வந்திடு கங்கா.” அவன் அவளிடம் யாசிப்பவனாக கேட்க, அவள் கண்களை அழுத்த மூடி திறந்தாள்.

 

“பிளீஸ் கௌதம் என்கைய விடுங்க முதல்ல.” கங்கா அழுத்தி சொல்ல, அவன் தன் பிடியை மெல்ல தளர்த்தினான்.

 

தன் கரத்தை வேகமாக விடுவித்து கொண்டவள், “இப்ப எதுக்காக பழைய குப்பை எல்லாம் கிளறீங்க? நான் தான் நேத்தே தெளிவா சொல்லிட்டேனே?” அதே வேகத்தில் அவனிடம் கேட்டாள்.

 

“என்னை வேணான்னு சொல்றது தான் உன்னோட தெளிவா கங்கா?” அவன் கேள்வி ஆதங்கமாக வந்து விழுந்தது.

 

“என்னால உங்களோட ஆர்கியூ பண்ண முடியாது கௌதம். முதல்லயே நான் சோர்ந்து போயிருக்கேன். பிளீஸ்…” அவள் குரல் சோர்ந்து ஒலிக்க, அவனுக்கும் துன்பமானது.

 

“அட என்ன இது, என் ஒரு பேச்சுக்கே இப்படி ஜகா வாங்குற நீ? நான் உன்கூட லைஃப் லாங் ஆர்கியூ பண்ண பிளான் போட்டுருக்கேன்.” கௌதம் பேச்சை மாற்றவும், கங்கா வெறுமையாக புன்னகைத்தாள்.

 

“நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க கௌதம். முன்னமும் இப்படித்தான் பேசி என் மனசுல நம்பிக்கைய விதைச்சீங்க… ஆனா, உங்க அம்மாவுக்கு ஒண்ணுன்ன உடனே, என்னை அம்போன்னு விட்டு போயிட்டீங்க… இப்ப இத்தனை வருஷம் கழிச்சு, மறுபடி வந்து அதையே பேசுறீங்க. வேணா கௌதம்… என்னை விட்டுடுங்களேன்.” சொல்லும் போதே அவள் விழிகளில் நீர் தேங்க, முகத்தை வேறுபுறம் திருப்பி, கண்ணீரை உள்ளிழுத்துக் கொள்ள முயன்றாள்.

 

அவள் வார்த்தைகளில், மொத்தமாக அடிவாங்கி, வீழ்ந்து போனான் கௌதம். “தப்புதான்… உன்ன அப்படி விட்டு போயிருக்க கூடாது நான்… அதுக்கான தண்டனைய தான் இப்ப வரைக்கும் அனுபவிச்சிட்டு இருக்கேன். உன்மேல எனக்கு எல்லா உரிமையும் இருந்தும் இப்படி தயங்கி எட்டி நிக்கிறேன். 

 

நான் தெரியாம செஞ்ச தப்புக்கு, என்னை மொத்தமா ஒதுக்கிடுவியா கங்கா? எனக்கொரு வாய்ப்பு கூட கொடுக்க மாட்டியா?”

 

“இப்படி உளறாதீங்க, இந்த பேச்சே நமக்குள்ள வேணாம். உங்களுக்குன்னு ஒரு அழகான லைஃப் இருக்கு. எனக்காக யோசிச்சு உங்க சந்தோசத்தை கலச்சிக்காதீங்க. 

 

நாம ஒண்ணும் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க இல்ல, என்மேல பாவப்பட்டு நடந்த கல்யாணம் இது. நமக்கு ஆதாரமே சரியில்ல, அதான் நம்ம கல்யாண வாழ்க்கையும் சரியா அமையாம போச்சு போல.”

 

“கங்கா, அப்படியெல்லாம் எதுவுமில்ல, இப்ப நீ சம்மதம் சொல்லு, நான் எல்லாத்தையும் சரியா மாத்தி காட்டுறேன்.” 

 

அவளுள் மரித்த நம்பிக்கையை கௌதம் உயிர்பிக்க முயன்றான். ஆனால் வறண்ட நெஞ்சத்தில் எதையும் தூளிர்விக்க வகை அறியாமல் மறுத்து தலையசைத்தாள் அவள்.

 

“நான் என்ன செஞ்சா நீ என்னை நம்புவ? உனக்காக எது செய்யவும் நான் தயாரா இருக்கேன். ஏதாவது சொல்லு. இப்படி மொத்தமா என்கிட்ட இருந்து ஒதுங்கி போகாத, எனக்கு வலிக்குது.” 

 

கௌதம் கேட்டதும், அவள் பார்வை அவன் முகத்திற்காக உயர்ந்தது. “நீங்க ரொம்ப எமோஷனலா யோசிக்கிறீங்க கௌதம், அதான் இப்படி பேசுறீங்க. அதோட உங்களுக்கு இளகின மனசு, அதான் எனக்காக இவ்வளோ இறங்கி வரீங்க. எனக்கு உங்கள புரியுது.

 

ஆனா, என்னையும் நீங்க புரிஞ்சிக்கங்க. உங்கள போல எமோஷனலா யோசிக்கவோ, பேசவோ, எனக்கு உங்களமாதிரி இளகின மனசெல்லாம் இல்ல. எதையும் கடந்து போற அளவுக்கு திடமான மனசோட தான் நான் இருக்கேன். இருப்பேன்.

 

அப்புறம், நீங்க வாழ்க்கை கொடுக்க முன்வந்த, அந்த பாவப்பட்ட காலொடஞ்ச கங்கா இப்ப இல்ல. இந்த கங்காவுக்கு யாரும் வாழ்க்கை கொடுக்க வேண்டிய அவசியமில்ல. யாரோட அனுதாபமும் அவளுக்கு தேவையுமில்ல.” என்றவள், எழுந்து நின்றாள்.

 

கௌதம் பேச்சற்று அவளை பார்த்திருந்தான். 

 

“உங்கமேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு கௌதம். மறுபடியும் நீங்க இந்த பேச்சை எடுக்க மாட்டீங்கன்னு நம்புறேன்.” என்றுவிட்டு அவள் திரும்பி நடக்க,

 

“உன் மரியாதையெல்லாம் எனக்கு தேவையில்ல கங்கா…” கௌதமின் உயர்த்திய குரலில், அவள் நின்று திரும்பினாள்.

 

“எனக்கு நீதான் வேணும்… நான் தொட்டு தாலிகட்டின என் பொண்டாட்டியோட சந்தோசமான வாழ்க்கைய வாழணும்.

 

அன்னிக்கு உன்மேல ஏற்பட்ட அனுதாபத்துல நான் உன்ன கல்யாணம் பண்ணி இருக்கலாம், இப்ப உன்மேல இருக்க உரிமையில மட்டும்தான் நான் உன்னோட வாழ விரும்பறேன். 

 

உனக்கான உன்னோட வாழ்க்கைய வாழ மறுக்கற அளவுக்கு உன் மனசு இறுகி போயிருக்கா கங்கா?

 

முதல்ல உன்னோட உணர்வுகளை மறைச்சு புதைச்சு நீ போட்டிருக்க இந்த முகமுடிய கழட்டி எறிஞ்சிட்டு வா கங்கா, உனக்காக நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன்.” 

 

அவன் இரு கைகளை விரித்து அவளை அழைக்க, ஓடிப்போய் அவன் கைகளுக்குள் புகுந்து, கதற துடிக்கும் தன் மனதை இழுத்துப் பிடித்துக் கொண்டவள், அவன் ஆறுதலை மறுத்து இடவலமாக தலையசைத்து, திரும்பி நடந்தாள்.

 

கௌதம், அவளை நிறுத்தும் வழி புரியாமல் இறுகி நின்றான்.

 

“ப்ச் ப்ச்… நினச்சேன், கங்காவாவது இறங்கி வரதாவது?” அவன் பின்னால் இருந்து மஹாவின் குரல் கேட்டு திரும்பினான்.

 

“ஏய் வாலு, நீ இங்க தான் இருந்தியா?” கௌதம் அவளிடம் இயல்பாக பேச முயல,

 

“ரொம்ப ஃபீல் பண்ணாத மாம்ஸ், நீயும் நல்லாதான் பர்ஃபார்ம் பண்ண. ஆனா, கங்காவுக்கு கொஞ்சம் டைம் கொடு.” என்றாள் மஹா.

 

கௌதம் ஆமோதிப்பாக தலையசைத்து, “அப்ப நீ கங்காவோட நம்பர் கொடு.” என்றான் சட்டென்று.

 

“ஆஹான், எதுக்கு அவ என்னை மொத்தவா?”

 

“எனக்காக ரெண்டு அடி வாங்க மாட்டியா? அதோட உன் அக்கா மனசு மாறும் வரைக்கும் என்னால இங்க வெயிட் பண்ண முடியாது. என் வொர்க் என் கழுத்துல கயிறு கட்டி என்னை சென்னைக்கு இழுக்குது. அதான் நம்பர் கேக்குறேன்.” என்று கௌதம் விளக்க,

 

“சரி சரி, நான் அடிச்சதை அக்கா கிட்ட சொல்லாம இருந்தீங்க இல்ல, அதுக்காக நம்பர் தரேன்.” என்றவள் கங்காவின் திறன்பேசி எண்ணோடு சேர்த்து, தன்னுடைய எண்ணையும் தந்துவிட்டு கங்காவிடம் விரைந்தாள்.

 

***

 

பெண் வருவாள்…

 

(ஒருநாள் தாமதத்திற்கு கங்கா, கௌதம் தான் காரணம் மக்களே! நான் இல்ல… நானும் முக்கி முனகி டைப் பண்றேன். ரெண்டு பேரும் எதுக்கும் ஒத்தே வர மாட்டேன்னு அடம்பிடிக்கிறாங்க… அதால எழுதி அழுச்சு, அழுச்சு எழுதி இதோ கொண்டு வந்துட்டேன்… உங்களை காக்க வைத்ததுக்கு மன்னிச்சுக்கோங்க மக்கா🙏🙏🙏

 

அடுத்த பதிவு ஞாயிறு அன்று…:)