ஏன் பெண்ணென்று பிறந்தேன் 18

IMG-20211007-WA0009 (1)-ca2de187

ஏன் பெண்ணென்று பிறந்தேன் 18

‘சரித்திரன்’ திரைப்படம் வெளியாகும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. அதற்கான விளம்பரங்கள், போஸ்டர்கள், டீசர் என எல்லாம் ஆர்ப்பாட்டமாக நடைபெற்று கொண்டிருக்க, கெளதமும் படக்குழுவினரும் பரபரப்புடன் ஓய்வின்றி அடுத்தடுத்த பணிகளில் ஓடிக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் அவர்களுக்கு அடுத்தடுத்த அடிகளும் காத்திருந்தது.

முதலில் இப்படத்தை திரையிடக் கூடாது என்று அடுத்தடுத்து தொலைபேசி மிரட்டல்கள் வந்தன. கெளதம் அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

ஆனால், விஜய் சற்று பயந்து, அதைப்பற்றி காவல் துறையில் புகார் கொடுக்கலாம் என்று கூற, கௌதம் சற்று யோசித்து விட்டு, அதற்கெல்லாம் அவசியமில்லை என்று விட்டான்.

அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத விதத்தில், சரித்திரன் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றத்தில் அவசர வழக்கு பதியப்பட்டது. படக்குழுவினர் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்து போயினர். 

பிலிம் பாக்டரி சார்பில் அந்த வழக்கை எதிர்த்து மனு சமர்பிக்கப்பட, அவசர வழக்காக விசாரித்து, அடுத்த இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பின் படத்தை வெளியிட அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த படத்தின் அடுத்தடுத்த தொடர் சிக்கல்கள் பட விநியோகஸ்தர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்த, படத்தை எடுத்து திரையிட அவர்களும் தயங்கினர்.

திரைப்படத்தின் வெளியீடு நெருங்கும் நிலையில், அனைத்து வேலைகளும் அப்படியே ஸ்தம்பித்து தேங்கி நின்றன. கௌதம், திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்தான். அவனுக்குள் மேலும் மேலும் அழுத்தம் கூடிக்கொண்டே போனது வேறு.

இதற்கிடையே திலோத்தமா, மகன் வீட்டிற்கு வருவதில்லை என்று அவன்மேல் ஆதங்கத்தைக் கொட்டினார். மனோகர், இந்நிலையில் படத்தை வெளியிட்டால் நிச்சயம் அது நஷ்டமாகும் என்று மகனிடம் அங்கலாய்த்துக் கொண்டார். தீப்தி தன் பங்குக்கு புலம்பித் தள்ளி அவனை சங்கடத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தாள். 

ஒரு நிலைக்கு மேல் அவர்கள் யாருடைய அழைப்பையும் ஏற்காமல் தவிர்த்து விட்டான் கெளதம்.

அவனுக்கு இப்போது சிறியதாக ஓர் இளைப்பாறல் தேவையாக இருந்தது. சிறு எதிர்பார்ப்புடன் கங்காவிற்கு அழைப்பை விடுத்தான். வழக்கம்போல அவன் மனைவி அழைப்பை ஏற்கவில்லை. அவனது மனது மேலும் சுணங்கிப்போனது.

‘கங்கா, பிக் அப் மை கால். நான் உன்கூட பேசணும். முதல்லையே ரொம்ப நொந்து போயிருக்கேன். நீயும் என்னை அவாய்ட் பண்ணாத.’ அவளுக்கு மெசேஜ் ஒன்றை தட்டிவிட்டான்.

சில நிமிடங்கள் பொறுத்து அவளிடமிருந்து அழைப்பு வந்தது. அவன் அழைப்பை ஏற்றதும், “என்னோட காலை பிக் அப் பண்ண கூட இவ்வளோ தயங்குவியா நீ?” அவளிடம் உரிமை கோபம் காட்டினான் கெளதம்.

“நான் இப்போ ஒரு கிளாஸ்ல இருக்கேன். அப்புறம் பேசுறேன்.” மறுமுனையில் கங்கா சிறு குரலில் கூற,

“கிளாஸ்? என்ன கிளாஸ பத்தி சொல்ற நீ? என்னை அவாய்ட் பண்ண ஏதாவது உளறாத கங்கா.” 

அவனுக்கு நிஜமாகவே அவள் மீது கோபம் கோபமாக வந்தது. இத்தனை நாட்களில் எத்தனை முறை அவன் அவளிடம் பேச முயன்றிருப்பான், முதல் முறை எடுத்து பேசியதோடு சரி. அடுத்தடுத்த முறைகளில் அவள் தன் எண்களைப் பார்த்தே பதிலளிக்க மறுக்கிறாள் என்று புரிந்து கொண்டவனுக்கு, அவளிடம் கோபம் வரத்தான் செய்தது.

“இல்ல கெளதம், நிஜமா…” அவள் மறுபடி சொல்லவும்,

“சரி, இப்ப நீ எங்க இருக்க?” என்று வினவினான்.

“அது… சென்னைல.” கங்கா தயங்கி சொல்லவும், அவனது உள்ளம் கேளாமல் துள்ளியது.

“ஹே நிஜமாவா? பிளேஸ் சொல்லு நான் உடனே வரேன்.” என்று பரபரத்தவனை அவள் மறுத்தாள்.

“உங்களுக்கு சிரமம் வேண்டாம், பரவால்ல விடுங்க.”

“நீ முதல்ல இடத்தை சொல்லு கங்கா?” அவன் கேள்வியில் அழுத்தம் கூடி இருக்க, கங்கா வேறு வழியின்றி இடத்தைச் சொன்னாள்.

அடுத்த நாற்பது நிமிடங்களில் தன் முன்பு வந்து நின்ற கெளதமின் தோற்றத்தைக் கவனித்தவளின் மனம் அவனுக்காக இளகியது.

எப்போதும் நேர்த்தியான மிடுக்கான தோற்றத்தில் இருப்பவனை, இப்போது அப்பட்டமாக சோர்வை காட்டிய முகம், தூக்கம் தொலைத்து சிவப்பேறிய கண்கள், சவரம் செய்யப்படாத தாடை என பார்க்க, அவன் நிலை அவளுக்கு பாவமாக இருந்தது.

“சென்னை வரைக்கும் வந்து இருக்க, என்கிட்ட சொல்லணும்னு கூட தோணல இல்ல உனக்கு?” கங்கா எதிர் வந்ததும் அவன் முதல் கேள்வி ஆதங்கமாக அவளை மோதியது.

தான் போகும் இடம் பற்றிய விவரங்களை அவனிடம் சொல்ல வேண்டுமா? அவளுக்குப் புரியவில்லை. இதுவரை அவளிடம் யாரும் இத்தனை உரிமை எடுத்து விசாரித்ததில்லை.

இதுபோல, தனியார் மற்றும் அரசு சார்பில் நடைபெறும் அழகு கலை குறித்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் எங்கு நடந்தாலும் கங்கா தவறாமல் கலந்து கொள்வாள். இதைப்பற்றி வீட்டில் விவரம் சொன்னாலும், ‘அங்க போறதால உனக்கு என்ன காசா கிடைக்க போவுது? அவ்வளோ தூரம் போயிட்டு வரத்துக்கு பார்லர்ல உக்காந்து ரெண்டு மூஞ்சிக்கு சாயம் பூசி விட்டாலாவது நாலு காசு கிடைக்கும்.’ என்ற ரீதியில் பதில் வர அமைதியாகி விடுவாள்.

அழகு கலையில் தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், இத்துறையில் புதிதாக வந்திருக்கும் தொழில்நுட்பம் பற்றியும், புதிய அழகு சாதன பொருட்கள் பற்றியும், அறிந்துகொள்ள இது போன்ற சிறப்பு பயிற்சி வகுப்புகள் அவளுக்கு பேருதவியாக இருக்கின்றன என்பதை அவள் எடுத்துச் சொன்னாலும், அதை பொறுமையாகக் கேட்டு புரிந்து கொள்ளும் வகையில் வீட்டில் யாருக்கும் பொறுமை இருப்பதில்லை. அதனால் அவளும் விளக்கம் சொல்வதில்லை.

தான் கேட்டதற்கு பதில் தராமல், தன்னை குழப்பத்துடன் பார்த்து நிற்பவளின் முன்பு சொடக்கிட்டவன், “இப்ப சொல்லலனா பரவாயில்ல, இனி என்கிட்ட கண்டிப்பா சொல்லணும் சரியா?” கெளதம் இலகுவாக கேட்க, 

அவன் சொல்வது முழுதாக புரியாமலேயே சரியென்று தலை ஆட்டினாள்.

“உன்னோட கிளாஸ் முடிஞ்சது இல்ல. அப்ப நாம கிளம்பலாம் வா.” என்று கெளதம் கார் கதவை அவளுக்காக திறந்து விட,

“இல்ல, நாங்க டீம்மா வந்து இருக்கோம்.” என்று கங்கா மறுக்க, அவனது பொறுமை வடிய பற்களை நறநறத்தான்.

“சும்மா டென்ஷன் ஏத்தாத கங்கா, உன் டீம்க்கு பை சொல்லிட்டு, என்னோட வர.” என்று உத்தரவிட்டான்.

சற்று தயங்கியவள், தன்னுடன் வந்தவர்களிடம் விடைபெற்று அவனுடன் கிளம்பினாள்.

அவன் காரில், அவனருகில் அமர்ந்தவளுக்கு, அடி மனதில் வலியும் பயமும் ஒன்றாக பரவியது. திருமணம் முடிந்து அவனோடு இப்படி சேர்ந்து வந்த நினைவும், அதன் பிறகு நடந்த அவமானங்களும், நிகழ்வுகளும், நேற்று நடந்தது போல அவளை அச்சப்படுத்திப் பார்க்க, அவன் பக்கத்தில் முகம் வெளுத்து அமர்ந்திருந்தாள்.

மாறாக, கங்காவின் இந்த அருகாமை கெளதமிற்கு பெரும் ஆறுதலாக இருந்தது. 

“உன்ன என் பக்கத்துல கொண்டு வர நான் எவ்வளோ மெனக்கெட வேண்டி இருக்கு ம்ம்?” என்று அவளிடம் உற்சாகமாக அலுத்துக் கொண்டான் அவன்.

“இல்ல. அது… கெளதம், இப்போ என்னை எங்க கூட்டிட்டு போறீங்க?” கங்காவிற்கு பழக்கமற்ற அந்த சூழலில் பேச்சு திணறியது.

“ம்ம்… எங்க போலாம்? ஓட்டல் போலாமா?” கெளதம் கேட்க, அவள் சற்று தணிந்து மெதுவாக தலை அசைத்தாள்.

சற்று நேரத்தில், நட்சத்திர ஓட்டல் அருகில் அவன் காரை நிறுத்த, “இங்கயா சாப்பிட?” கங்கா வாய்விட்டு கேட்டேவிட்டாள். பழக்கமற்ற அந்த இடம் அவளை தயங்க செய்தது.

“ம்ம். வேறெங்க சாப்பிட? வா.” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு நடந்தான்.

கெளதமுடன் இப்படி தனியாக வந்தது கங்காவிற்கு ஏதோபோல படபடப்பை உண்டாக்கியது. அவனது தயாரிப்பு நிறுவனத்தின் படம் வெளி வருவதில் அதிக சிக்கல்கள் ஏற்பட்டு, அவன் வருத்தத்தில் இருப்பதாக மகாலட்சுமி சொல்லி கவலைப்பட, கங்காவிற்கும் வருத்தமானது.

இப்போது சோர்ந்து தெரிந்த அவனைப் பார்க்க, அவளுக்கும் கவலையாக இருக்கவே, அவன் அழைத்ததும் பெரிதாக மறுக்க இயலாமல் உடன் வந்திருந்தாள். ஆனாலும் இப்போது அவனுடன் வந்தது தவறோ என்று அவளுக்குள் கேள்வி எழுந்தது. மேலும் தங்களை யாரேனும் சேர்த்து பார்த்தால், தவறாகிவிடுமோ என்ற தேவையற்ற பயமும் அவளை தேங்க செய்தது.

சாதாரணமாகவே மெதுவாக நடக்கும் கங்கா தன் தயக்கத்தில் பின் தங்கிவிட, வேக எட்டுக்கள் வைத்து முன்னேறிய கெளதம் சற்று தூரம் சென்ற பிறகே, அவளைத் திரும்பி பார்த்து தன்னை நொந்து கொண்டான்.

அதே வேகத்தில் அவளிடம் ஓடி வந்தவன், “ஹே, சாரி சாரி… நீ மெதுவா நடப்பன்னு நான் மறந்துட்டேன்.” என்றவனுக்கு, கங்கா சிறு மென்னகை தந்து உடன் நடந்தாள். அவன் அவள் மேல் காட்டும் அக்கறை, அவளின் இதயக் கதவுகளை தட்டிப் போவதாய்.

பிரத்யேக அறையில் இருவரும் அமர, உற்சாகமாக உணவு வகைகளை ஆர்டர் செய்த கெளதமை கங்கா யோசனையாகப் பார்த்து, “உங்க பிராப்ளம் எல்லாம் சால்வ் ஆகிடுச்சா?” என்று வினவினாள்.

“ம்ம்… நீ ஓகே சொன்னா இப்பவே எல்லா பிரச்சனையும் தீர்ந்து போயிடும்.” என்று இலகுவாக சொன்னவனை அவள் புரியாமல் பார்த்தாள்.

“அதெப்படி நான் ஓகே சொன்னா தீரும்? எனக்கு புரியல.” அவள் மேலும் குழப்பி கேட்க,

“இப்படி நாம யாரோ போல பார்க்கறது, யாரோ போல பட்டும் படாம பேசிக்கிறது, என் கூட சேர்ந்து வர கூட நீ இவ்வளோ யோசிக்கறது, இதெல்லாம் கஷ்டமா இருக்கு கங்கா. உன் பார்வை நேசமா என்மேல பதியணும், நீ என்கிட்ட உரிமை எடுத்து பேசணும், அதுக்கு நீ ஓகே சொன்னா மட்டும் போதும்.”

கெளதம் உருக்கமாய் சொல்ல, கங்கா தன் நெற்றியைப் பிடித்துக் கொண்டாள். 

“ஐயோ கெளதம், நான் கேட்டது இதைப்பத்தி இல்ல. உங்க படம் ரிலீஸ் ஆகுறதுல ஏதோ பிரச்சனைனு கேள்விப்பட்டேன், அதான் கேட்டேன்.” என்றாள்.

அதுவரை இலகுவாக இருந்த அவன் முகத்தில் மெல்ல இறுக்கம் எட்டிப் பார்த்தது. 

“நாளைக்கு மார்னிங் கண்டிப்பா படம் ரிலீஸ் ஆகும் கங்கா, அதுல எந்த மாற்றமும் இல்ல. பட், படம் எந்த அளவுக்கு ரீச் ஆகும்னு இப்போ சொல்லமுடியாது.”

“ஏன் அப்படி சொல்றீங்க? ஃபர்ஸ்ட் லுக், டீசர் எல்லாம் ரொம்ப நல்லா இருக்குன்னு மஹா சொன்னாளே, அப்ப படமும் நல்லா தான இருக்கும்.” அவள் கேட்க,

“என்னோட படம்னு தெரிஞ்சும்… அப்ப நீ டீசர் கூட பார்க்கல?” உரிமையான முறைப்பு அவனிடம்.

“இல்ல… எனக்கு சினிமால அவ்வளவு இன்ட்ரஸ்ட் இல்ல, மொலோடி சாங்க்ஸ் கேப்பேன். அவ்வளோதான்.” அவள் விளக்கம் சொன்னாள். 

அவளை ஆழ பார்த்தவன், “ஒரு படம் நல்லா இருக்கு, நல்லா இல்லன்றதை தவிர, அந்த படம் ரிலீஸ் ஆகி சக்ஸஸ் ஆக நிறைய விசயங்கள் இருக்கு கங்கா.” என்றான்.

அவன் சொல்வது அவளுக்கு முழுதாக விளங்காமல் பார்க்க, “உனக்கு புரியலனா விடு, முதல்ல சாப்பிடு.” என்று உணவை அவளுக்கும் சேர்த்து எடுத்து வைத்தான்.

“படம் சரியா போகலைனா உங்களுக்கு கஷ்டம் தானே? உங்களால சமாளிக்க முடியுமா? என் கஸ்டமர்ஸ் கிட்ட எல்லாம் உங்க படத்தை தியேட்டர்ல போய் பார்க்க சொல்லவா?” கங்கா மனம் தாங்காமல் கேட்க, உணவை வாயிலிட்டு மென்றபடி கெளதம் புன்னகைத்தான்.

“உன் கஸ்டமர்ஸ் கிட்ட என்னனு சொல்லுவ கங்கா? என் ஹஸ்பெண்ட் தயாரிச்ச படம், ஃபேமிலியோட போய் பாருங்கன்னு சொல்லுவியா?” அவன் குறும்பாக கேட்டதில் அவளுக்கு புரை ஏறிவிட்டது.

“ஹே! ரிலாக்ஸ்.” என்று அவளருகே தண்ணீர் டம்ளரை நகர்த்தி வைத்தவன், அவள் சங்கடமாக தண்ணீர் பருகுவதை அசையாத பார்வையுடன் பார்த்திருந்தான். 

அவனது பேச்சும், பார்வையும் கங்காவின் சங்கடத்தை மேலும் அதிகமாக்குவதைக் கவனித்தவனுக்கு ஐயோ என்றிருந்தது. தலையைக் குலுக்கிக் கொண்டு பேச்சை மாற்றினான்.

“இப்ப சுச்சுவேஷன் கொஞ்சம் கஷ்டம் தான் கங்கா. புதுசு புதுசா பிராப்ளம் கிரேட் ஆகிட்டே இருக்கு. முடிஞ்சளவு சமாளிச்சிட்டு இருக்கோம். ப்ச், என்னவோ இந்த படம் எங்களை ரொம்ப படுத்தி எடுக்குது.” என்றவன் கவலையை மறைத்து சிரித்துக் கொண்டான்.

அவன் கவலை கங்காவையும் பாதிக்க, “கவலைப்படாதீங்க கௌதம், நாம சவாலா துணிஞ்சி, தடைகளை மோதி உடச்சு ஜெயிக்கிற விசயம், நமக்கு விலமதிப்பில்லா வெகுமதியைக் கொடுக்கும். கண்டிப்பா உங்களோட எஃபெக்ட் எதுவும் வீணாகது.” 

இத்தனை நாட்கள் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொள்பவள், இன்று அவனுக்கு தேறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவன் பார்வை அவளை வாஞ்சையாக தழுவியது. அவன் மனைவி வளர்ந்துவிட்டாள் தான், முன் போன்ற மருண்ட பார்வை இல்லை; முதிராத பேச்சு இல்லை; உற்றவரை சார்ந்திருக்கும் கோழைத்தனம் இல்லை; துணிவையும் தைரியத்தையும் வளர்த்துக் கொண்டு இருக்கிறாள். இப்போது அவன்முன் மொத்தமாக மாறி தெரிகிறாள் தான், ஆனாலும் அவளின் இளகிய மனதை தொலைக்காமல் இருக்கிறாள். இன்னும் அதிகமாய் அவனை ஈர்க்கிறாள்.

“சூர் கங்கா. பட், அப்படி ஒருவேளை நான் லாஸ் ஆகி, மொத்தமா சரிஞ்சுட்டேன்னா… நீ என்னை தாங்கிக்குவ இல்ல? பணம், சொத்து எல்லாம் இழந்து நடுத்தெருவில நின்னா… நீ உன் கூட்டுக்குள்ள என்னை சேர்த்துக்கவ இல்ல?” 

அவளது ஈர்ப்பின் வயப்பட்டு அவனும் பாவமாக உளறி கொட்ட, கங்காவுக்கு நெஞ்சம் திடுக்கிட்டது. 

‘ஒருவேளை அப்படி நடந்தால்…!’ தன் தரிக்கெட்ட யோசனைக்கு சட்டென‌ தடை விட்டவள், “அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது. லாஸ் ஆனா கூட… உங்களுக்கு நடுத்தெருவுல நிக்கிற… நிலமை எப்பவும் வராது. உங்க அப்பா, அம்மா உங்களை அப்படி விடமாட்டாங்க.” என்றாள் வேகமாய்.

“நான் சொல்றதை நம்ப மாட்டேங்கிற பார்த்தியா?” அவன் கண்கள் சுருக்க,

“நம்பற மாதிரி சொல்லணும்பா நீங்க. நீங்களெல்லாம் பரம்பரை பணக்காரங்க, உங்க அப்பா, அம்மா உங்கமேல அவ்வளோ பொஸஸிவ்வா இருக்காங்க. உங்கள ஓடிவந்து தாங்கிக்க மாட்டாங்களா?” என்றவளுக்கு தன்நிலையும் நினைவு வர,

“எனக்கு தான் அப்படி விதி எழுதியிருக்கு… உங்க வீட்டுல இருந்து வெளியே தெருவுல தள்ளிவிட்டு… அம்மா, அப்பாவுக்கும் பிடிக்காத பொண்ணாகி, சமூகமும் அதிரஷக்கட்டைன்னு முத்தரை குத்தி…” 

கௌதம் அவள் கையை அழுத்த பற்றி, அவள் பேச்சை நிறுத்தினான். தீப்பட்ட புழுவாய் அவன் உள்ளம் சுருண்டு போனது. அவளின் உணர்ச்சி துடைத்த முகமும், கலக்கம் மறைத்து தாழ்ந்திருந்த இமைகளும் அவன் இதய சதையைக் கிழிக்கும் வேதனை தர, கண்களை அழுத்த மூடி திறந்தான்.

கங்கா அவன் பிடியிலிருந்து தன் கரத்தை உருவிக்கொள்ள முயல, அவன் பிடி இறுகியதில் அவன் மென்கரம் வலியெடுக்க, நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். பற்களை கடித்து முகம் இறுகி இருந்தான் அவன்.

‘தான் ஏதேனும் தவறாக சொல்லிவிட்டோமா?’ அவளுக்கு புரியவில்லை. 

“கௌதம்?” 

“உனக்கு எங்க வீட்டுல அவ்வளவு அவமானம் ஏற்பட்டதுன்னு எனக்கு சத்தியமா தெரியாது கங்கா. யாரும்… யாருமே என்கிட்ட சொல்லல, எவ்வளோ முட்டாளா இருக்கேன் இல்ல நானு.” 

வலியோடு சொன்னவனை, வெறுமையாக பார்த்திருந்தாள் அவள்.

“அதனால தான இந்த முட்டாளோட வாழ வர மறுக்கிற?” என்று கேட்டவன், தன்னையே வெறுத்து, அவள் கையை விடுவித்தான்.

அவனது எந்த கேள்விக்கும் கங்காவிடம் பதிலில்லை. மௌனமாக இருந்தாள்.

“என்னை நம்பி வந்த என் மனைவி கூட வாழ கூட அனுமதிக்காத என் அம்மாவோட கௌரவம், அப்பாவோட அந்தஸ்து ரெண்டையும் அப்பவே வெறுத்துட்டேன். அப்பா, அம்மாவோட நிழல்ல இருக்கிறதால தான் என் முடிவுல என்னால உறுதியா இருக்க முடியாம போச்சுன்ற கோபம் எனக்கு. அந்த கோபத்துல தான் ஃபேமிலி பிஸ்னஸ்ல இருந்து முழுசா விலகி வந்து, ஃபிரண்ஸோட சேர்ந்து புரோடக்ஷன் கம்பெனி ஆரம்பிச்சேன். என்னோட தொழில்ல ஒரு நிலைல நிக்க, இவ்வளோ வருஷம் எடுத்துச்சு எனக்கு.” கௌதம் தன்நிலையை அவளிடம் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தான்.

“எப்போ, அவங்க தான் திட்டம் போட்டு நம்மள பிரிச்சாங்கன்னு தெரிஞ்சதோ, அப்பவே வீட்ட விட்டு வெளியேறிட்டேன் கங்கா. நான் அவங்ககிட்ட நியாயம் கேக்கல, சண்டயும் போடல, அறிவுகெட்டத்தனமா அவங்க சொன்னதெல்லாம் நம்பின என்மேல தான் எனக்கு கோபம். இனி ஜென்மத்துக்கும் அவங்க சொல்ற எதையும் என்னால நம்ப முடியாது கங்கா! எனக்கு எவ்வளோ லாஸ் ஆனாலும் அவங்கிகிட்ட போய் நிக்க மாட்டேன்.”

கௌதம் சொல்லவும் கங்காவின் விழிகள் திகைப்பில் விரிந்தன.

“அவசரப்படாதீங்க கௌதம். அவங்க உங்க மேல இருக்க பாசத்துல தான் அப்படி செஞ்சு இருப்பாங்க, எந்த அப்பா அம்மாவுக்குத்தான் தன் பையன நொண்டி பொண்ணு கூட சேர்த்து பார்க்க மனசு வரும்?” 

கங்கா அவனை சமாதானப்படுத்த முயல, “லூசு, நீ அப்படி ஆனதுக்கே காரணம் நான் தானே.”

“அதை ஒன்னும் நீங்க வேணும்னு செய்யலையே, விடுங்க.” 

“பாவத்தை எல்லாம் நான் செஞ்சுட்டு, பழியும் தண்டனையும் மட்டும் உனக்கு கொடுத்துட்டேன் இல்ல கங்கா!” கௌதம் ஆற்றாமல் பேச, 

“போதும் கௌதம், முடிஞ்சது எதையும் நம்மால மாத்த முடியாது விட்டுடுங்க. இப்ப இருக்கிற பிரச்சனைய பத்தி யோசிக்கலாம்.” அவளுக்கு இந்த பேச்சு பிடிக்கவில்லை.

அதை உணர்ந்தவன் மேலும் அதைப்பற்றி பேசி அவளை வேதனைப்படுத்த விரும்பாமல், “என்னோட தொழில்ல என்ன செய்யணும்னு எனக்கு தெரியும். சோ, யூ டோண்ட் வொர்ரி கங்கா. ம்ம்… இப்ப கொஞ்சம் சறுக்கல் தான், ஆனா முழுகி போகமாட்டேன், எழுந்து வந்துடுவேன்.” அவன் நம்பிக்கையாகச் சொன்னதில் அவள் முகமும் தெளிந்தது.

இருவரும் உணவு அருந்தியபடி, கௌதம் பேச்சை மேலும் வளர்க்க விரும்பி, கங்காவின் விருப்பு, வெறுப்புகளைப் பற்றி ஆர்வமாக வினவ, அவளின் பதில் எல்லாம் வேதா அழகு நிலையம், அதன் வளர்ச்சி, தன் தொழில் வளர்ச்சியில் எதிர்கால திட்டம் என நீண்டது.

கௌதமுக்கு சற்று சலிப்பு தட்டினாலும், அவள் தன் தயக்கம் விட்டு அவனிடம் நீளமாக பேசவும், அவள் தொழில் நாட்டத்தை உள்வாங்கிக் கொள்ள முயன்றான்.

“இப்ப பெண்கள் மாடர்ன் டேட்டூஸ் விரும்பி போட்டுக்குறாங்க, அந்த பச்சை குத்துறது பத்தியும் கோர்ஸ் முடிச்சு இருக்கேன். என்ன, அங்க ஊர்ல அவ்வளோவா லேடிஸ் யாரும் டாட்டூ போட வரதில்ல. மெட்ரோ சிட்டி ஏரியாலனா நிறைய கஸ்டர்மர்ஸ் விரும்பி வந்து போட்டுப்பாங்க.” 

பேஷியல் தொடங்கி டாட்டூ வரைக்கும் அவள் பெற்ற பயிற்சிகளையும் தொடர் முயற்சிகளையும் கேட்க கேட்க, அவனுக்கு சற்று வியப்பாகவும் இருந்தது.

“உனக்கு இந்த ஃபீல்ட் ரொம்ப பிடிச்சிருக்கு போல கங்கா.” கைலாஷ் வியப்பு தொணியில் கேட்க,

“ம்ம்… ரொம்ப… பிடிக்கும் கௌதம். என்னை சுத்தி எதுவுமே சரியில்லாத போதும், நான் என்னை சரியா தகவமைத்துக் கொள்ள எனக்கு இந்த தொழில் தான் பேருதவியா இருந்தது.

எனக்குன்னு எந்த பிடிப்பும் இல்லாம நான் அந்தரத்துல ஊசலாடிட்டு இருந்தப்ப, தாத்தா தான், ‘அழகு கலை பத்தி கத்துக்கோமா’ன்னு என்னை வற்புறுத்தி டிரைனிங் சேர்த்து விட்டார். முதல்ல எனக்கு அவ்வளவு ஆர்வம் வரல, போக போக அதையே கெட்டியா பிடிச்சிக்கிட்டேன். 

அழகு கலையை பொறுத்தவரை உழைப்புக்கேற்ற போதிய வருமானமும் கிடைக்குது, மனசுக்கு பிடிச்ச நல்ல பொழுதுபோக்காவும் இருக்கு.” என்றவளின் திறன்பேசி அழைக்கவும் எடுத்துப் பேசியவள், “இதோ வந்துட்டேன் செல்வி.” என்று விட்டு, பதற்றமானாள்.

“அச்சோ கௌதம் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்துட்டேன், ஃபிரண்ட்ஸ் வெயிட் பண்றாங்க நான் கிளம்பணும்.” என்று அவசரமாக எழுந்தவள், நிலைதடுமாறி சமாளித்து நின்றாள்.

“ஹே பார்த்து கங்கா!” என்றவன் அவள் கைப்பற்றி அவள் நேராக நிற்க உதவ,

“ஒன்னுல்ல… ஜஸ்ட் ஸ்லீப் ஆகிடுச்சு, போலாம்.” என்று அப்போதும் பரபரத்தவளை, தன்னுடன் அழைத்து வெளியே நடந்தான்.

அவளின் அவசரத்திற்கு மாறாக, கௌதம் மெதுவாக காரை இயக்க, கங்காவால் அவனை முறைக்க கூட முடியவில்லை. தன்னையே தான் நொந்து கொண்டாள். அவளது தொழிலைப் பற்றி யாரேனும் கேட்டால் போதும், வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே போவாள், இந்த பழக்கத்தை தவிர்க்க முயன்றும் அவளால் முடிந்ததில்லை.

வீட்டில் உள்ளவர்கள் லாப கணக்கை தவிர்த்து, பெரிதாக தொழில் விசயம் பற்றி கேட்டுக் கொள்வதில்லை. ஆனால் பார்லரில் யாரேனும் கேட்டு விட்டால் போதும், அப்போது மட்டும் கங்காவிற்கு பேச்சு அருவியாக கொட்டும்.

கௌதம் அந்த பேச்சை ஆரம்பிக்கவும், ஆர்வக்கோளாறில் சொல்லி விட்டாள். இப்போது தான் அதிகம் பேசிவிட்டோமோ? என்று அவளுக்குள் நெருடலானது.

கங்காவின் உடன் வந்த தொழிற்முறை தோழிகள், வாடகை காருடன் காத்திருக்க, கங்காவை அவர்களுடன் அனுப்ப கௌதமிற்கு சுத்தமாக மனம் வரவில்லை.

காரை நிறுத்தியவுடன் இறங்க முயன்றவளைத் தடுத்து, அவள் வலக்கரத்தை தன் கரத்தோடு சேர்த்தவன், “போகாத கங்கா… என்னோடவே இருந்துடு ப்ளீஸ்…” கௌதம் பரிதவிப்பாக கேட்க, கங்கா அவனை திகைப்பாக பார்த்தாள். 

கொண்டவன் துணை தேவைப்பட்ட இக்கட்டான எத்தனையோ நேரங்களில், இவள் தனித்து போராடி, கடந்து வந்திருக்கிறாள். 

அவள் உடைந்து விழுந்த வேளையில் எழுந்து நிற்க, சிறு கரம் நீட்டாமல் மறைந்தவன் தான், இப்போது அவளே நிமிர்ந்து நடை பழகிய பின், இருகரம் விரித்து அவளை தாங்க அழைக்கிறான்.

அவமானங்களும் மனக்காயங்களும் தனிமையும் புரையோடிப்போன அவளின் நெஞ்சத்தை மென் உணர்வுகள் ஆட்கொள்வது அத்தனை சுலபா என்ன?

மறுப்பாக தலையசைத்தவள், “இன்னொரு முறை இப்படி கேட்டு என்னை சங்கடமாக்காதீங்க கௌதம், நான்… என்னால எதையும் மறக்க முடியாது. என்னை சுத்தி இருக்க யாரும் எதையும் நான் மறந்து போக என்னை அனுமதிச்சதும் கிடையாது. 

இப்படி புதுசா நீங்க என்னை பார்க்கறதையும், உங்க பேச்சையும் கேட்கும்போது, நிஜமா எனக்கு பயமா இருக்கு கௌதம்… நான் ஒருமுறை பட்டதே நான் சாகுற வரைக்கும் போதும். நீங்க கொடுக்குற எந்த வாழ்க்கையும் எனக்கு வேணாம். 

என்னை இப்படியே விட்டுடுங்க, என்னோட வாழ்க்கைய நானே வாழ்ந்துட்டு போயிறேன். என்னை பத்தி யோசிக்கிறதை விட்டுடுங்க.” 

கங்கா சொன்னதும், கௌதம் தன் கரத்தை சட்டென எடுத்துக்கொண்டான். 

கங்கா காரிலிருந்து இறங்கி சென்று, தன் தோழிகளுடன் வாடகை காரில் கிளம்பி விட, அவள் விலகிப் போவதை இயலாமையுடன் பார்த்திருந்த கௌதம் முகத்தில், இறுக்கம் ஏறி, கறுமை பரவியது. 

அவனுக்குள் அத்தனை கோபம் கிளர்ந்தது, அவள் மீது, தன் மீது, தன் பெற்றோர் மீது, அவள் குடும்பத்தார் மீது, இந்த சமூகத்தின் மீது, தங்களை இந்நிலையில் நிறுத்தி வைத்த விதியின் மீதும்…

***

பெண் வருவாள்…

(அடுத்த பதிவு விரைவில் 🙏🙏🙏)