தன் ஆற்றாமை ஆத்திரத்தை அடக்கிக்கொள்ள வழியின்றி, அத்தனை வேகத்தையும் தன் தொழிலில் திருப்பினான் கௌதம் கைலாஷ்.
திடீரென அவன் இட்ட வேலைகள், நடைமுறைப்படுத்திய யோசனைகள் மற்றவர்களை திகைக்க வைத்தது. கௌதமின் இத்தனை அசுர வேகத்தில், விஜயன் கூட திணறித்தான் போனான்.
முன்னர் திட்டமிட்டப்படியே, ‘சரித்திரன்’ பட வெளியீட்டை மிக பிரம்மாண்டமாக கௌதம் எடுத்து நடத்தி இருந்தாலும், முதல் நாள் அத்தனை ஒன்றும் படத்தின் வெற்றி பேசப்படவில்லை.
சொல்லி வைத்ததைப் போல, இவர்கள் பட வெளியீட்டுக்கு மறுநாள், பிரபல நடிகரின் படம் வெளியானதில், சரித்திரன் படம் வெகுவாக பின்னுக்குத் தள்ளப்பட்டது.
இது எல்லாம் முன்னரே எதிர்ப்பார்த்தது என்றாலும், கௌதம் இதை இப்படியே விடுவதாக இல்லை. படம் வெளியீட்டின் பிறகே படக்குழவினருக்கு மூச்சு திணறும் வேலைகள் தரப்பட்டன. கௌதம் எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவன் போல, தன் படத்தின் விளம்பரத்திற்கு நீராய் காசை அள்ளி இறைத்தான். அவனது நண்பர்கள் கூட இதெல்லாம் வீண் வேலை என்று அவனை அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால் அவன் நிற்கவில்லை.
எப்போதும் எதையும் நிதானமாக கையாள்பவன், புயல் போல சீறிக் கொண்டிருந்தான். அதன் விளைவாக, அடுத்த பத்து நாட்களில் பட்டித்தொட்டி எல்லாம் சரித்திரன் படம் பேசு பொருளானது.
ஒருவாரம் முன்பு எந்த ஆர்பாட்டமும் இன்றி திரையரங்குகளில் ஓடிய அதே படம் இன்று, ஆர்ப்பாட்டமும் ஆரவாரமுமாக திரையிட்ட திரையரங்குகளில் எல்லாம் களை கட்ட தொடங்கி இருந்தது.
திடீரென எப்படி எல்லாம் தலைகீழானது என்று யாருக்கும் புரியவில்லை.
உண்மையில் ஒரு வரலாற்று போராளியின் உண்மை வரலாற்றில் கற்பனை சாயமேற்றி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சரித்திரன்.
சரித்திரன் கதையின் உண்மை சாரத்தை படம் வெளியிடும் வரை கௌதம் கைலாஷ் வெளியிட்டு இருக்கவில்லை. படத்தின் இயக்குநர், நடிகர்கள் மற்றும் படக்குழுவினரையும் வெளியிட அனுமதிக்கவில்லை.
முதல்நாள் படம் எந்தளவு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கவனித்தவனுக்கு, ஓரளவு திருப்தி ஏற்பட, அடுத்த நாள் வெளிவந்த ‘மாஸ்’ திரைப்படம் அந்த திருப்தியை தகர்த்தெறிந்து இருந்தது. அதன்பிறகு தான், சரித்திரன் கதையின் உண்மை சாரத்தை கசியவிட்டு, மக்களின் ஆர்வத்தை தூண்டிவிட்டான் கௌதம்.
தன் நாட்டை மீட்க போராடும் சத்திரிய வீரன் அரசியல் சதிகளில் சிக்கி, போராடி வெளிவருவது பற்றிய கதைக்களத்தைக் கொண்டது. அவனுக்கு உதவியாக வரும் கதாநாயகியின் கதாபாத்திரமும் எல்லோராலும் பேசப்பட்டது. கதை மாந்தர்களின் நடை, உடை, பாவனை, நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் ஒவ்வொன்றும் அலசப்பட்டது.
வலைத்தளங்களின் தேடல் பொறியில், சரித்திரன் படத்தின் தேடல் அதிகரித்தது. சமூக வலைத்தளங்களில் அதன் கதைக்களம் பற்றிய அலசல்கள், விவாதங்கள், மீம்ஸ், நேர்மறை வாதங்கள், எதிர்மறை வாதங்கள் என அடிப்பட்டு ஓய்ந்தது.
இந்த தலை கீழ் மாற்றத்தில், மாஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர் திலீபன் சண்முகம், எங்கே தவறினோம் என்று யோசிக்கலானார். நட்சத்திர கதாநாயகனின் படமாதலால் மாஸ் படத்தின் வெற்றியும் சொல்லும்படி தான் இருந்தது. ஆனால், சரித்திரன் படத்தை மொத்தமாக தோல்வியடையச் செய்யவும், பிலீம் பேக்கரி நிறுவனத்தை மூலையில் தூக்கி எறிய அவர் எடுத்த முயற்சிகளும் ஒன்றுமில்லாமல் போனதில் அவருக்கு ஆத்திரமானது.
கிட்டத்தட்ட தோல்வி நிலைக்கு கொண்டு வந்திருந்த படத்தை எப்படி கௌதம் கைலாஷ் தூக்கி நிறுத்தினான் என்பது மட்டும் அவருக்கு சற்று வியப்பாகவே இருந்தது.
தயாரிப்பாளர் சங்கத்தில் அவரை எதிர்கொண்டு வந்த கௌதமை பார்த்து, சற்று சங்கடமாகவே நின்றார் அவர்.
அவன் நேருக்கு நேராக ஏதாவது பேசிவிட்டால், இத்தனை பேருக்கு முன் தன் கௌரவம் என்னாகுமோ? என்று கவலை கொண்டவர், அவன் என்ன பேசினாலும் பேச்சை அவன் புறமே திருப்பி விட தயாராக, முகத்தில் ஒட்ட வைத்த புன்னகையுடன் நின்றார்.
அவரை பார்த்ததும் கௌதம் முகத்திலும் மென்னகை அரும்ப அவரிடம் வந்தவன், அவர் எதிர்பாராத வகையில் அவர்முன் குனிந்து ஒற்றைக்கையால் அவர் காலை தொட்டு ஆசி பெற, அவர் கைகள் அனிச்சையாக உயர்ந்து ஆசி வழங்கியது.
முகம் முழுவதும் பூரித்த புன்னகையுடன், “நல்லா இருங்க தம்பி, உங்க படம் பார்த்தேன் வியந்துட்டேன், ஜெயிச்சு காட்டிட்டீங்க.” என்று புகழ்ந்தார்.
“எல்லா உங்க வழிகாட்டுதல் தான் சார், உங்களை போல பெரியவங்க வழியில நாங்க முன்னேறோம்.” இளகிய முகத்துடன் பவ்வியமாக பதில் சொன்னவனை ஆராய்ச்சியாக பார்த்து தலையசைத்துவிட்டு நகர்ந்தார் அவர்.
‘இந்த பையன் உண்மையாவே பேசறானா? இல்ல நம்மள பார்த்து நக்கல் பண்ணி நடிக்கிறானா? முகத்தை பார்த்தா சாதாரணமா தான் இருக்கு. இவனுக்கு எதிரா எல்லாத்தையும் செஞ்சது நாம தான்னு இவனுக்கு தெரியுமா? தெரியாதா?’ குழப்பம் தெளியாமலேயே அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் முகத்தில் குழப்ப ரேகையை கவனித்த கௌதம் கைலாஷின் இதழ்கள் அர்த்தமான மென்னகையில் நெளிந்தது.
***
“ஏன் க்கா இப்படி பண்ற?” மஹாலக்ஷ்மி சலித்துக்கொண்டே கேட்க,
“அன்னிக்கு கௌதம் மாமா கிட்ட ஏன் அவ்வளோ ஹார்ஷா பேசிட்டு வந்திருக்க? உனக்காக கௌதம் இறங்கி வரும்போது நீயும் கொஞ்சம் இறங்கி வந்தா தான் என்ன? நீயும் உன் பிடிவாதமும்.”
“நான் அவர்கிட்ட பேசினதையெல்லாம் உன்கிட்ட இப்படி ஒப்பிச்சே ஆகணுமா? என்ன இப்படிப்பட்ட பழக்கம் அவருக்கு?” அவனை வெளிப்படையாக கடிந்தாள்.
“நீ ஏன் அவர்கிட்ட இதெல்லாம் தொண்டி துருவி கேக்கற? என்ன கெட்ட பழக்கம் இது உனக்கு?” கங்கா தங்கையையும் கடிந்தாள்.
“அட போ க்கா, நம்ம வாழ்க்கையை அழிக்கற அளவு பிடிவாதம் பிடிக்கிறது, ரொம்ப தப்பு க்கா. உன்கிட்ட இருந்து நான் நிச்சயமா இதை எதிர்பார்க்கல.
கௌதம் திரும்பி வந்ததை பார்த்ததும் எனக்கும் அவர் மேல கோபம் வந்துச்சு தான், நான் ஒரு அடி விட்டு… ம்க்கும்” மஹா பேச்சு வேகத்தில் உளறிவிட்டு நிறுத்த,
“என்னது அடியா?” கங்கா விளங்காமல் கேட்டாள்.
“அது… உனக்கு மாமா மேல கோபம்னா ஊமை குத்தா நாலு குத்து வச்சுட்டு சேர்ந்து வாழறதை விட்டுட்டு… நீ என்னவோ ரொம்ப சொதப்பற க்கா.” தன் பேச்சை மாற்றிவிட்டு, அவளை நொந்து கொண்டாள்.
“ஏய் வாலு, அவரை நான் எதுக்கு அடிக்கணும்? நடந்த எதுக்கும் அவர் பொறுப்பில்ல. அதோட என்னை மாதிரி அவரும் பாதிக்கப்பட்டு இருக்காங்க.” கங்கா சொல்ல,
“அவர்மேல தப்பில்லன்னு தெரிஞ்சும் ஏன் க்கா, நீ விலகி போற?”
“வேற என்னை செய்ய சொல்ற? அவர் வந்து வான்னு கூப்பிட்டதும், எல்லாத்தையும் மறந்திட்டு அவர் பின்னாலேயே போக சொல்றீயா? அவர் மேல எனக்கு கோபம் இல்ல தான், ஆனா மலையளவு வருத்தம் இருக்கே… அதை எங்க நான் இறக்கி வைக்க?” கங்கா ஆற்றாமல் கேட்க, மஹாலட்சுமிக்கும் கவலையானது.
“நீ சொல்றது எனக்கு புரியுது க்கா, நீ கௌதம் பத்தியும் கொஞ்சம் யோசிச்சு பாரேன். அவரை மீறி உங்க வாழ்க்கையில ஏதேதோ நடந்து போச்சு. அது எல்லாத்தையும் மறந்து இத்தனை வருஷம் கழிச்சு உனக்காக வந்து நிக்கிறார் இல்ல. யார் இருப்பாங்க அவரைப் போல?”
எப்படியாவது அக்காவின் வாழ்க்கை நலம்பெற வேண்டும் என்ற எண்ணம் மஹாவை தொடர்ந்து வாதாட வைத்தது.
கங்கா தங்கையின் முகத்தை நேராக பார்த்துப் பேசினாள். “முதல்ல நீ என்னையும் கௌதமையும் பத்தி இவ்வளவு யோசிச்சு குழப்பிக்காத மஹா. உன் படிப்புல உன் கவனத்தை செலுத்துற வழிய பாரு.
அதோட அவர், அப்பவும் சரி இப்பவும் சரி
என்மேல இருக்க ஆசையிலயோ, விருப்பத்தலயோ என்னோட வாழணும்னு நினைக்கல. அவர் எனக்கு வாழ்க்கை கொடுத்தா அவருக்குள்ள இருக்கற குற்றலுணர்வும் அனுதாபமும் சரியாகிடும்னு நினச்சு தான் என்னை தேடி வரார். மத்தபடி அவருக்கு என்மேல காதல், கத்திரிக்கா எல்லாம் எதுவும் இல்ல.
இப்படி அவர் என்னை கன்வின்ஸ் பண்ண நினைக்கிறது… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மஹா. இன்னும் சொல்ல போனா, எங்க நான் மனசு மாறி அவருக்கு சம்மதம் சொல்லிடுவேனோன்னு பயமா கூட இருக்கு… உணர்ச்சிவசப்பட்டு அப்படி நான் ஏதாவது பைத்தியக்காரத்தனம் பண்ணிட்டா… மறுபடி அவர்கிட்ட ஏமாந்து நிக்க வேண்டிய நிலை தான் வரும் எனக்கு!
வேண்டவே வேண்டாம்… நான் இப்படியே இருந்திறேனே… மறுபடியும் உடஞ்சு போனா என்னை சேர்த்து ஒட்ட வைக்க நம்ம தாத்தா கூட இப்ப நம்ம கூட இல்ல… கௌதம் கிட்ட சொல்லிடு அவர் ஆசைப்பட்ட தீப்தியை கல்யாணம் பண்ணிட்டு எங்கயாவது போயிட சொல்லிடு. என்னை நிம்மதியா விட்டுட சொல்லிடு!”
கங்கா பேசுவதைக் கேட்க கேட்க, மஹாவிற்கும் கௌதம் அக்காவின் மீது கொண்ட அன்பின் மீது சந்தேகம் எழுந்தது.
அவனும் அப்படித்தானோ! கங்கா கிடைக்கும்வரை பின்னால் சுற்றிவிட்டு பின் அக்கறை காட்டாமல் விலகி சென்றுவிடும் ஆண்சாதியோ! சின்னவள் குழம்பிப் போனாள்.
மேலும் கங்கா ஏதோ சொல்ல வர, அறை வாசலில் நின்றிருந்த மல்லிகாவை பார்த்ததும் அமைதியானாள்.
இரண்டு பெண்களையும் ஆராய்ச்சியாகப் பார்த்தபடி உள்ளே வந்த மல்லிகா, “அக்காவும் தங்கச்சியும் அப்படியென்ன தான் வாய் ஓயாம பேசிக்கிட்டே இருப்பீங்களோ?” என்று கேட்டார்.
“நாங்க என்ன பேசினா உனக்கு என்னமா இப்ப?” மஹா துடுக்காக கேட்க,
“நான் உங்க அம்மாடீ, கொஞ்சமாவது அந்த எண்ணம் இருக்கா உங்க ரெண்டு பேருக்கும். ஒருத்தி என்கூட முகங்கொடுத்து பேசறதே இல்ல. இன்னொருத்தி என்னை மதிக்கிறதே இல்ல.” அவர் புலம்பினார்.
“என்ன மரியாதை கொடுக்கல ம்மா நாங்க உனக்கு? சும்மா வாயிக்கு வந்ததை புலம்பாத. அப்புறம் கங்காவ பத்தி பேச உனக்கோ உன் புருஷனுக்கோ எந்த தகுதியும் இல்ல.
அவ இடத்துல நான் இருந்திருந்தா உங்க ரெண்டு பேரையும் எப்பவோ வீட்ட விட்டு தொரத்தி இருப்பேன்.” மஹா படபடவென பொரிய,
கங்கா தங்கையைப் பார்வையால் கண்டித்துவிட்டு, “ஏதாவது செலவுக்கு வேணுமாமா?” என்று தன் கைப்பையை எடுத்தாள்.
மல்லிகாவின் முகம் திகுதிகுவென சிவந்தது. “அவ என்னவோ எங்களை வெளிய துரத்துவன்னு சொல்றா, நீ என்னனா பணத்துக்காக தான் நான் வந்த மாதிரி பேசற, என்னங்கடி நெனச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் மனசுல?
மொத்தமா மூணு பொண்ணுங்கள பெத்தெடுத்து, குடிக்கார புருசனோட மல்லுக்கட்டி உங்களை வளர்த்து விட்டதுக்கு நாக்கு மேல பல்ல போட்டு நல்லாத்தான் பேசுறீங்கடீ. பெத்தவ வயித்த பத்தி எரிய வெக்காதீங்க சொல்லிட்டேன்.” என்று கண்களில் நீர் திரள, கத்திவிட்டு நகர்ந்த தாயை மஹா மிரள பார்த்து நின்றாள்.