ஏன் பெண்ணென்று பிறந்தேன் 19(2)

IMG-20211007-WA0009 (1)-897fbc38

ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 19(2)

 

சட்டை பாக்கெட்டில் இசைத்த திறன்பேசியை எடுத்துப் பார்த்தவனின் முகத்தில், எங்கிருந்தோ ஓடிவந்து மென்னகை ஒட்டிக்கொண்டது.

 

அழைப்பை ஏற்றவன், “ஹே மச்சினி, எப்படி இருக்க?” குறும்போடு ஒலித்த அவன் குரலுக்கு மாறாக, எதிர்முனையில் மஹாவின் கேள்வி வேகமாக ஒலித்தது.

 

“நீங்க கங்காவ லவ் பண்றீங்களா? இல்லயா?” 

 

கௌதமின் மென்னகை மேலும் விரிய, “என்ன திடீர்னு இப்படியொரு கேள்வி?”

 

“கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க.” என்று அதிகாரம் செய்தவளிடம்,

 

“ம்ம்… லவ் இல்லன்னு சொன்னா என்ன பண்ணுவ?” நீட்டி முழக்கி வம்பிழுத்தான் அவன்.

 

“அக்கா மேல லவ் இல்லனா எதுக்கு அவ பின்னாடி சுத்தறீங்க? அவளோட‌ நிம்மதிய மறுபடி கெடுக்கவா? கங்கா தெளிவா தான் இருக்கா, உங்களை நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கா… நான் தான் முட்டாள் மாதிரி உங்கள நம்பினேன்.” மஹா படபடவென பேசிக்கொண்டே போக, கௌதம் முகம் இறுகியது.

 

“அப்படியென்ன சொன்னா உன் அக்கா?” காட்டமாகவே கேட்டான்.

 

“உங்களுக்கு அவ மேல அன்பு, காதல் எல்லாம் எதுவுமில்ல. உங்க மனசுல இருக்க குற்றவுணர்வ போக்கிக்க தான் அவளை ஏத்துக்க நினைக்கிறீங்க. நீங்க காட்டற‌ அக்கறைய உண்மைன்னு நம்பி, அப்புறம் ஏமாந்து போக அவளுக்கு சக்தி இல்லன்னு சொல்றா… நீங்களும் அவ சொல்ற மாதிரி தான்…” அவள் பேச்சை முடிக்கும் முன்னே அவன் இடைவெட்டினான்.

 

“அப்ப உன்‌ அக்காவுக்கு என் மேல நம்பிக்கை இல்ல அதான? என்ன செஞ்சா தான் உன் அக்கா என்னை நம்புவா? முன்ன நடந்ததெல்லாம் என்னை மீறி நடந்துடுச்சு, நான் என்ன செய்யட்டும்?

 

முன்ன அவ நடக்க முடியாம இருக்கும்போதே என் உள்ளங்கைல வச்சு அவளை தாங்கணும்னு நினச்சிருந்தேன். என்னால முடிஞ்ச எல்லா சந்தோசத்தையும் அவளுக்கு கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். அப்ப எதுவும் நடக்காம போயிடுச்சு… தப்பு தான், என்னோட கவனக்குறைவால கங்காவை தவறவிட்டது தப்புதான். அதுக்காக இப்பவும் அப்படியே இருப்பேனா என்ன? என்னை பத்தி என்ன தான் நினச்சிருக்கா அவ?” கௌதம் ஆதங்கமாக குரல் உயர்த்தினான்.

 

அவன் குரல் உயர்த்தவும் மஹாவின் குரல் சற்று இறங்கி ஒலித்தது. “அவளுக்கு நம்பிக்கை வர மாதிரி நீ என்ன செஞ்சிருக்க மேன்? நேரா தைரியமா வந்து எங்க அப்பா, அம்மா கிட்ட சொல்லிட்டு கங்காவ அழைச்சிட்டு போயிருக்க வேண்டியது தான? நீயெல்லாம் இன்னும் கோழை தான் மேன்.”

 

“நீ என்னை பத்தி என்ன வேணா நினச்சிக்க மஹா, எனக்கு கவலையில்ல. எங்களை பிரிச்சுவச்ச உங்க அப்பா, அம்மா சம்மதமோ, என் அப்பா, அம்மா சம்மதமோ எனக்கு தேவையும் இல்லை. அவசியமும் இல்லை. என்கூட வாழ என் பொண்டாட்டியோட சம்மதம் மட்டும் எனக்கு போதும்.”

 

கௌதம் அழுத்திச் சொன்னதும் இருபுறமும் சிறிது மௌனம் நிலவியது.

 

“நீங்க தான் அக்காவ காதலிக்கலன்னு சொல்றீங்களே… அப்ப எப்படி?”

 

“என்ன சும்மா காதல் காதல்னு? எனக்கும் கங்காவுக்கும் நடுவுல காதல் இருக்கா இல்லயான்ற‌ ஆராய்ச்சி இப்ப அவசியமா? அப்படி காதல் இல்லனா நாங்க வாழவே முடியாதா என்ன?

 

போய் கங்காகிட்ட சொல்லு மஹா, எனக்கு இந்த காதல், ஐ லவ் யூ மேல எல்லாம் பெருசா எந்த தாட்டும் இல்ல. கங்கா என்னோட பொண்டாட்டின்ற உரிமைக்கு மேல எனக்கு வேற எதுவும் பெரிசில்லை… நான் அப்பறம் பேசறேன் பை.” என்று பேச்சின் வேகத்துடனே தொடர்பை துண்டித்து விட்டான்.

 

சிறிய பெண் மஹாலக்ஷ்மியை இடை நிறுத்தி தாங்கள் இருவரும் இப்படி பேசுவது அவனுக்கு கவலையைத் தந்தது. இனி எதுவென்றாலும் கங்காவிடம் நேரடியாகவே பேசிக்கொள்வது என்று முடிவெடுத்துக்கொண்டான் கௌதம்.

 

மஹாவிற்கு இப்போது குழப்பம் அதிகமானது தான் மிச்சம். விருப்பமும் காதலும் இன்றி உறவு நிலைக்காது என்று கங்கா சொன்னதும் சரியெனப்பட்டது, கணவன், மனைவி உரிமையைத் தாண்டி காதலென்ற பேச்சுக்கு அவசியம் என்ன என்ற கௌதம் வாதமும் சரியெனவே பட்டது, இருவரின் பக்கமும் பேச முடியாமல் சின்னவள், தன் வாய்க்கு பிளாஸ்திரி போட்டு ஒட்டிக்கொண்டாள். ‘அட போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும்!’ என்று.

 

***

 

கௌதமினால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை, கங்காவைக் காண தார் சாலையில் தன் காரை விரட்டிக் கொண்டிருந்தான் அவன்.

 

சரித்திரன் திரைப்படம் அவன் எதிர்பார்த்ததை விட, அதிக வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருப்பதில் அவனுக்குள் அத்தனை மகிழ்ச்சி.

 

அவனைவிட அவன் வெற்றியில் அதிகமாக மகிழ்ந்தது என்னவோ தீப்தி தான். படத்தின் வெற்றியை அறிந்தவுடன் அவன் வேலை இடத்திற்கே தேடி வந்தவள், துள்ளி குதித்தோடி வந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவன் கன்னங்களில் தன் லிஃப்டிக் தடத்தை அழுத்தமாக பதித்து, தன் அளவற்ற மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டாள்.

 

தீப்தியை தன்னிடம் இருந்து விலக்கவும் மறந்தவனுக்கு, கங்கா தன் வெற்றிக்கான சிறு வாழ்த்தைக் கூட இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை என்ற ஏக்கம் மேலோங்கி, அவனை கவலை கொள்ளச் செய்தது.

 

அவன் மொத்தமாக நஷ்டமாகி கடனாளியாகத் தான் போகிறான் என்று அவன் காதுபட பேசியவர்கள் கூட, அவனது வெற்றியைப் பார்த்து பிரமித்து பாராட்டி இருக்க, 

 

அவனை திறமையற்றவன், பிழைக்க தெரியாதவன், அறிவற்றவன் என்று ஆத்திரத்தில் திட்டிப்போன கௌதமின் தந்தை மனோகர் கூட, “சாதிச்சிட்டடா, என் மகன்னு நிரூபிச்சிட்ட.” என்று பெருமை பொங்க வாழ்த்தி இருக்க,

 

“இப்ப தான் நீ நினச்ச மாதிரி ஜெயிச்சிட்டியே கௌதம். இப்பவாவது வீட்டுக்கு வாடா, உன்ன பார்க்கணும் போல இருக்குடா.” என்று திலோத்தமா பிள்ளை பாசத்தில் உருகி அழைத்திருக்க,

 

அவருக்கு மேல் தீப்தி, அவனை உரிமையோடு அணைத்து முத்தமும் பதித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து இருந்தாள்.

 

இப்படி அவனைச் சுற்றி இருக்கும் அனைவரும் அவன் வெற்றிக்கான வாழ்த்துக்களை பாராட்டுக்களை ஏதோவொரு வகையில் தந்திருக்க, அவனுக்கென உரிமையானவள் சிறிதும் அவன் வெற்றியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தாது ஒதுங்கி நிற்பது, அவனுக்குள் ஆதங்கத்தையும் ஏமாற்றத்தையும் அதிகமாக்கியது.

 

தனக்கு அவள் மேலிருக்கும், ஆசையும் விருப்பமும் அவளுக்கு தன் எழவில்லையா? என்றெண்ண, அவன் ஏக்கம் இன்னும் கூடிக்கொண்டு தான் போனது.

 

அதேநேரம் அங்கே, மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி உற்சவ திருவிழா கொண்டாட்டங்கள் களைக்கட்டி இருந்தன. 

 

கங்கா காலையில் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்திருந்தாள். திருவிழாவின் பதினெட்டு நாட்களும் அந்த ஊரே உயிர்புடன் இயங்குவதை பார்க்கவும், எங்கும் பக்தி பாடல்களும், கொண்டாட்ட ஆர்பாட்டங்களைக் கேட்கவும் அவள் மனதுக்குள் ஏதோ ஒருவித நிறைவு தோன்றும். 

 

சிறு வயதில் தாத்தா, பாட்டியின் விரல் பிடித்தபடி சுற்றி பார்த்த விழா, மனம் நொந்திருந்த வேளைகளில் அவளது தாத்தா அழைத்துச் சென்று, ‘ஆண்டவன் எப்பவும் உனக்கு துணையிருப்பான்மா’ என்று தேறுதல் படுத்திய விழா, இப்போதெல்லாம் முடிந்தால் தங்கையோடு இல்லையேல் பாக்கியம்மாவோடு ஓய்வு பொழுதில் சென்று வணங்கிவிட்டு வருவாள். இன்றும் பாக்கியம்மாவோடு தான் சென்று வந்திருந்தாள்.

 

விஷேச நாட்களில் பொதுவாக அழகு நிலையத்தில் அத்தனை வேலை இருக்காது என்பதால், மாலையில் விரைவிலேயே மற்றவர்கள் கிளம்பி இருந்தனர். கங்கா கிளம்பும் நேரத்தில் ஒரு பெண்மணி வந்திருக்க, அவருக்கான முகப்பூச்சை முடிக்க அவள் மட்டும் தாமதித்திருந்தாள்.

 

வெளியில் தூரமாய் ஒலித்த மேளவாத்திய சத்தமும், வானவேடிக்கை வெடிச்சத்தமும் திருவிழா கொண்டாட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

 

அந்த பெண் கிளம்பியதும், அழகு நிலையத்தின் உட்புற அறையில், முகப்பூச்சிற்கான கலவைகளைக் கலந்தெடுத்த கிண்ணங்கள் மற்றும் சில பொருட்களை கழுவி துடைத்து அதற்குரிய இடத்தில் அடுக்கி வைத்து கொண்டிருந்தவளுக்கு, ஏதோ எச்சரிக்கை உணர்வு எழ, திரும்பி பார்த்தாள்.

 

அங்கே, அவளைப் பார்த்தபடி நின்றிருந்த கௌதம் கைலாஷைப் பார்த்து திடுக்கிட்டவளாக, “கௌதம்… நீங்க இங்க…?” கங்கா நம்பமுடியாமல் கேட்க,

 

“ஆமா நான் தான். உன்னால நம்ப முடியலையா?” அவளிடமே கேள்வியைத் திருப்பினான்.

 

அவளுக்கு இப்போதுதான் சூழ்நிலை புரிய வர, “ஐயோ கௌதம் நீங்க எப்படி உள்ள வந்தீங்க?” பதறி கேட்க,

 

“ஏன், வாசல் வழியா தான் வந்தேன்.” என்றவன் அவளை நோக்கி வந்தான்.

 

“அச்சோ! பார்லர்க்கு உள்ள ஜென்ட்ஸ் நாட் அலௌட். வெளியவே எழுதி இருக்குமே.” அவள் பதற்றம் கூடியது.

 

“ஆமா, பார்த்தேன். அந்த ரூல்ஸ் எல்லாம் வெளி ஆளுங்களுக்குத் தான்… உன் ஆளுக்கு இல்ல.” வெகு இயல்பாக தன் நெற்றியோடு நெற்றி முட்டிச் சொன்னவனை, மூச்சு முட்டும் உணர்வோடு வெறித்தாள்.

 

அவளின் அதிர்ந்த தொற்றத்தை ரசித்தவன், “உன்மேல எனக்கு செம கோபம் தெரியுமா? உன்கிட்ட சண்டை போடணும்னு தான் இவ்வளோ தூரம் வந்தேன். பட், உன்ன இங்க இப்படி தனியா பார்த்ததும், என் கோபமெல்லாம் எங்க போச்சுன்னே தெரியல.”

 

உற்சாகமாக உரைத்தவன், மென்மையாய் அவள் நெற்றியில் இதழ் ஒற்றி எடுக்க, அவள் தேகம் அதிர்ந்து அடங்கியது.

 

“என்ன… பண்றீங்க நீங்க? விலகுங்க.” கங்கா அவனை விலக்க முயல, அவள் கரத்தை தடுத்துப் பிடித்து தன்புறம் இழுத்துக் கொண்டான்.

 

“உன்ன விட்டு விலகுற ஐடியா எல்லாம் இல்ல கங்கா… நான் உன்ன தேடி வரேன், உனக்காக ஏங்கி தவிக்கிறேன். உனக்கு என்மேல அப்படி எந்த ஃபீலிங்ஸ்ஸும் இல்லயாடீ?” அவன் முகம் சுருக்கி கவலையாக கேட்கவும்,

 

“சும்மா விளையாடாதீங்க கௌதம், முதல்ல இங்கிருந்து வெளியே போங்க, யாராவது நம்மள பார்த்தா தப்பா நினைப்பாங்க.” தன் கரத்தை அவன் பிடியிலிருந்து உருவிக்கொண்டு அவனை விரட்டவும், அவனுக்கு விட்டிருந்த கோபம் மறுபடி சுர்ரென்று ஏறியது.

 

“என்ன தப்பா நினைப்பாங்க கங்கா? உன்னோட இருக்க எனக்கு உரிமை இல்லையா? இன்னும் சொல்லணும்னா எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு.” என்று உரிமை போர்க்கொடி தூக்கியவனை, அவள் அய்யோ என்று பார்த்து வைத்தாள்.

 

“எல்லாம் புரிஞ்சு தான் பேசறீங்களா நீங்க? முதல்ல கிளம்புங்க நாளைக்கு மார்னிங் நாம பேசலாம்.”

 

“ஏன் இப்ப என்னை விரட்டிட்டே இருக்க? எதுக்கு மார்னிங், இப்ப பேச என்ன வந்தது உனக்கு?”

 

“ஏன் கௌதம் என்னோட நிலைமைய புரிஞ்சிக்காம‌ அடம்பிடிக்கிறீங்க? நாம இப்படி தனியா…” சூழ்நிலை தந்த பயத்தில் பதறி போனவளின் படபடத்த மென் இதழ்களின் குறுக்கே ஒற்றை விரல் வைத்து, அவள் பேச்சை நிறுத்தினான்.

 

அவனது இத்தனை நெருக்கமும் உரிமையும் கங்காவிற்குள் பயத்தையும் பதற்றத்தையும் அதிகரித்து கொண்டே போனது. அவனை அங்கிருந்து விரட்ட வழி தெரியாமல் திகைத்து நின்றிருந்தாள்.

 

“ஏன் இவ்வளோ டென்ஷன் கங்கா? ஜஸ்ட் ரிலாக்ஸ்.” பரிவாய் சொன்னவன் கைகள் அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டன. 

 

வெகு மென்மையான அணைப்பு தான் இருந்தாலும், அவளுக்குள் சுனாமி பேரலையின் தாக்கங்கள்! அவன் நெஞ்சின் கதகதப்பை உணர்ந்தவளின் விழிகளில் கண்ணீர் கரித்துக் கொண்டு வர, ஓவென கதறி கத்தி அழ வேண்டும் போல் உந்துதல் எழுந்தது. தொண்டைக்குழி அடைக்க, தன்னை சமாளிக்க முயன்றிருந்தாள்.

 

கங்காவின் உணர்விற்கு முற்றிலும் நேர் எதிராக, கௌதமனுக்கு மேக வெளியில் மிதக்கும் உணர்வு. அவளிடம் சண்டை போடவே ஓடிவந்திருந்தவன், இந்த தனிமையையும் இனிமையையும் நிச்சயம் அவன் எதிர்பார்க்கவில்லை. உடல் நடுங்க தன் கையணைப்பில் அடங்கி இருந்தவளை உணர்ந்தவனுக்கு, அவளை அப்படியே தன்னுடன் தூக்கிச் சென்று விடலாமா என்ற பேராசை.

 

மெல்லியலாளின் நடுக்கத்தைப் போக்குபவனாக மேலும் அவளை தன்னுள் சேர்த்துக்கொள்ள, அவள் பயந்து விலகவே முயன்றாள்.

 

“ப்ச், பயப்படாத கங்கா நான் இருக்கேன்ல.” அவள் காதோரம் அவன் வார்த்தைகள் நம்பிக்கை சொல்லின.

 

‘இது கனவு தான்… நிச்சயம் இது கனவே தான்! இதோ முயன்று கண்களை திறந்து விட்டால் இந்த பாழ் கனவு கலைந்து போகும்!’ அவள் உள் மனம் கூச்சலிட்டது. 

 

அவள் கடினப்பட்டு தன் கண்களை திறக்க முயல, அவனது முரட்டு இதழ்கள் அவள் இமைகள் மீது மெத்தென்று பதிந்து, அவளின் சிப்பி இமைகளை தன்னால் பூட்டிக் கொள்ளச் செய்தன.

 

வெகு அரிதாக அமைந்திட்ட இந்த தனிமையை இழக்க மனம் வரவில்லை அவனுக்கு. கண்ணாடி பதுமையை கைகளில் ஏந்தியவன் போன்று, மென்மையிலும் மென்மையாய், அவளை கலவரம் செய்யாமல், அவளிதழ் ஒற்றி எடுத்தவனை, வேகமாய் தன்னிடமிருந்து விலக்கி தள்ளி இருந்தாள் கங்கா.

 

இதமான‌ உணர்வுகள் அறுபட்டு நிமிர்ந்தவன் முன் கண்கள் சிவக்க ஆவேசமாக நின்றிருந்தாள் அவள்.

 

“என்ன செய்றீங்க நீங்க? ஒருமுறை சொன்னா உங்களுக்கு புரியாதா? என்னை அசிங்கப்படுத்தணும்னே இப்படியெல்லாம் செய்றீங்களா?” கோப மூச்சுகள் வாங்க ஆத்திரமாய் கத்தியவளைப் பார்த்து அவனுக்கும் கோபமானது.

 

“என்ன பெருசா செஞ்சுட்டேன் உன்ன? எதுக்கு இப்படி ஒன்னுமில்லாததை எல்லாம் பெருசாக்கி பேசற? நான் உன்ன தொடறது‌ உனக்கு அசிங்கமா தோணுதா?” அவனும் அவளிடம் சீறினான்.

 

“ஆமா அசிங்கம் தான், என்னை அவமானப்படுத்துற எதுவும் எனக்கு‌ அசிங்கம் தான்…” சொன்னவளின் கழுத்தை கோபமாக பிடித்திருந்தான்.

 

அன்று அவன் சொன்ன அதே வார்த்தைகள், ‘ச்சே உன்ன தொட்டா கூட எனக்கு அசிங்கம் ஒட்டிக்கும்.’ இன்று அவளிடமிருந்து திரும்பி இருக்க, அவன் கோபம் இன்னுமே அதிகமானது.

 

“என்னை கோபப்படுத்தி பார்க்காத கங்கா, என் பொறுமையும் ஓரளவுக்கு தான். நான் தொட்டதுல என்னடீ நீ கெட்டு போன மாதிரி பேசற? கட்டின பொண்டாட்டி கிட்டயும் எட்டி நின்னு பேச நான் என்ன கேண கிறுக்கனா?”

 

அவன் கோபத்தை சிறிதும் லட்சியம் செய்யும் நிலையில் இல்லை அவள். தன் கழுத்தை பற்றி இருந்த அவன் கரத்தை வேகமாக தட்டி விட்டாள்.

 

“என்ன பெருசா பொண்டாட்டினு உரிமை கொண்டாடிட்டு வரீங்க, எப்ப உங்க வீட்ட விட்டு என்னை விரட்டி அடிச்சீங்களோ அங்கயே அப்பவே உங்க பொண்டாட்டி செத்து போயிட்டா… என்கிட்ட உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல. மறுபடி என்னை நெருங்க நினைச்சீங்க…” அவள் எச்சரிக்கை போல பேச,

 

“என்னடீ பண்ணுவ நீ?” அவனும் அவளை அடிப்பது போல நெருங்கி வந்தான்.

 

“நான் தான் பிடிக்கலன்னு சொல்றேனே ஏன் என்னை டார்ச்சர் பண்றீங்க… உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல… எல்லாமே எப்பவோ அறுந்து போச்சு.” கங்கா தன்னை மீறி அவனிடம் கத்தினாள். அவள் கத்தலையும் மீறி வெளியே வானவேடிக்கை சத்தம் பெரிதாக ஒலித்துக் கொண்டிருந்தது.

 

“என்னை பிடிக்காம தான் நான் கட்டின தாலிய இன்னும் சுமந்துட்டு இருக்கியா கங்கா? நான் உனக்கு வேண்டாம்னா நான் கட்டின தாலி மட்டும் எதுக்கு உனக்கு, அதையும் கழட்டி வீசிடு.” அவனும் ஆத்திரத்தில் அறிவிழந்த வார்த்தைகளை கொட்டினான்.

 

சொந்தம், பந்தம், உற்றார், ஊரார் என எல்லாரும் சொன்ன அதே வார்த்தையை, இன்று அவனும் சொல்லிவிட்டிருந்தான். அதை தாங்க முடியாமல் வாய்விட்டு அழுதே விட்டாள் அவள்.

 

சிறுமி போல, தேம்பி தேம்பி அழுபவளை பார்க்க அவனுக்குள் ஜீவன் வடிந்தது. மறுபுறம் அவள் பிடிவாதமும் அவனுக்குள் கோபமேற்றியது.

 

“இப்ப எதுக்குடீ இப்படி அழற? நீ சொன்னதை தான நானும் சொன்னேன். நான் கட்டின அந்த தாலிக்கு கொடுக்கற மரியாதைய கூட நீ எனக்கு கொடுக்கல இல்ல?” 

 

கங்கா இருகைகளாலும் முகத்தை அழுத்த துடைத்து, உடைந்த தன்னை மீட்டுக் கொண்டு நிமிர்ந்தாள். அவள் பேச்சிலும் இப்போது நிதானம் மீண்டிருந்தது.

 

“ஆமா, எனக்கு இந்த தாலி முக்கியம் தான். நீங்க என்னை விட்டு போனதுக்கு அப்புறமும் என்னை உங்க மனைவியா அடையாளப்படுத்தினது இந்த தாலி மட்டும் தான். வாழாவெட்டியா தனியா வாழற பொண்ணுங்கள மத்தவங்க பார்வை எப்படி பார்க்கும்னு உங்களுக்கு தெரியுமா? எந்த பொறுக்கியும் தப்பான எண்ணத்துல என்னை நெருங்க விடாம பாதுகாத்தது இந்த தாலி தான்…

 

உங்களை சுத்தி இருக்க உலகம் வேற கௌதம், என்னை சுத்தி இருக்க உலகம் மொத்தமா வேற. நம்மள இப்படி ஒண்ணா பார்க்கிற யாரும், கங்காவோட புருஷன் திரும்பி வந்துட்டான்னு சொல்ல மாட்டாங்க. அந்த கங்கா யாரோ ஒரு கார்காரன் கூட தப்பான உறவுல இருக்கான்னு தான் சொல்லுவாங்க…” பேசும்போதே அவள் நெஞ்சமெல்லாம் கசந்து எரிந்தது.

 

“அப்படி யார் உன்ன தப்பா சொல்லுவாங்க நானும் பார்க்கிறேன் வா… இப்பவே இந்த ஊருக்கே கேக்குற மாதிரி கத்தி சொல்றேன்… நீ என் பொண்டாட்டினு.” அவன் வீரமாய் அவள் கைப்பற்றி அழைக்க, 

 

தன் கையை இழுத்துக் கொண்டவள், “சொல்லிட்டு நீங்க போயிடுவீங்க… அப்புறம் நான் என்ன ஆவேன்?”

 

“நான் ஏன் உன்ன விட்டு போகப் போறேன்? இப்பவே உன்ன எங்கூட அழைச்சிட்டு போக தயாரா இருக்கேன்.” கௌதம் அழுத்தமாக சொல்ல, அவள் நம்பிக்கையற்று தலையசைத்தாள்.

 

“நீங்க என்னை விட்டுட்டு போயிடுவீங்க கௌதம்…!” 

 

கங்காவின் நம்பிக்கை அற்ற வார்த்தைகளில், கௌதம் முழுவதுமாக அடிப்பட்டு தோற்றுப் போனான்.

 

***

 

பெண் வருவாள்…

 

அடுத்த பதிவு விரைவில் 🙏🙏🙏