ஏன் பெண்ணென்று பிறந்தேன் 20

 ஏன் பெண்ணென்று பிறந்தேன் 20

 

கௌதமனுக்கு மனது ஆற்றவேயில்லை. கங்கா தன்னை நம்ப ஏன் இத்தனை யோசிக்கிறாள் என்று அவனுக்கு புரியவில்லை. முதல் பிழை என்றால் முற்றும் பிழையாகத்தான் போய்விடுமா என்ன? அவனால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.

 

இப்படி அவன்மேல் சிறிதும் நம்பிக்கையற்று, அவனை வேதனை தீயில் வாட்டுவதும் அவள் தவறு தானே! கௌதமனின் புண்பட்ட மனம் கங்காவிடம் நியாயம் கேட்டு அரற்றியது.

 

அதேசமயம், தான் எத்தனை வருந்தி அழைத்தும் மாத கணக்கில் கௌதம் வீட்டுக்கு வராமல் இருப்பது திலோத்தமாவை கவலைக்கொள்ளச் செய்திருந்தது. அவன் எதற்கோ தங்கள் மீது கோபமாக இருக்கிறான் என்பது மட்டும் அவனை பெற்றவர்களுக்குப் புரிந்தது. ஆனால் அதற்கான காரணத்தையும் அவன் இதுவரை சொல்லாமல் இருப்பது அவர்கள் கவலையை மேலும் கூட்டுவதாக.

 

மகனின் இத்தகைய பிடிவாதப் போக்கு, திலோத்தமாவின் பொறுமையை வெகுவாக சோதித்து இருக்க, நேராக கௌதம் தங்கி இருக்கும் வில்லாவிற்கு, கணவனை இழுத்துக்கொண்டு வந்திருந்தார் அவர்.

 

கௌதம் மூன்று வருடத்திற்கு முன்பே பார்த்து பார்த்து வாங்கி இருந்த வில்லா அது. அவன் தந்தையின் பங்களாவை விட சற்று சிறியதாக இருந்தாலும், கடற்கரையை ஒட்டி, வீட்டின் முன்புறம் தோட்டத்தின் அமைப்போடு, கடல் காற்றின் இதமான வருடலுடன் அந்த இடம் வெகு இதமாக இருந்தது.

 

தன் அறை பால்கனியில் நின்று, விஜயனுடன் திறன்பேசி வழி சில விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தான் கௌதம் கைலாஷ்.

 

“எல்லா அரேன்ஜ்மென்ட்ஸும் பக்காவா ரெடி சார், நாளைக்கு புரோஸஜர் எல்லாம் முடிச்சிட்டு நாம  கம்பெனியை டேக் ஓவர் பண்ண வேண்டியது தான்.” விஜயன் விவரம் சொல்ல,

 

“ஓகே குட், அகைன் தரவா செக் பண்ணிக்கோ, நாளைக்கு எந்த தடங்கலும் வரக்கூடாது…” என்றவன், வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு கீழே கவனித்தான். 

 

காருக்குள் இருந்து இறங்கிய மனோகரும் திலோத்தமாவும் அங்கே சுற்றி ஒருமுறை பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தனர்.

 

கௌதம் அவர்களின் வரவை ஓரளவு எதிர்பார்த்து தான் இருந்தான். எனவே, “வீ வில் டிஸ்கஸ் திஸ் லேட்டர் விஜய்.” என்று பேச்சை இடைவெட்டி தொடர்பை துண்டித்தான்.

 

இனி எதுவும் இலை மறை காய் மறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று முடிவிற்கு வந்திருந்தவன், தன் அப்பா, அம்மாவை எதிர்கொள்ள தயாராக கீழே இறங்கிச் சென்றான்.

 

“ஹாய் டேட், வாங்க மாம்.” என்று வரவேற்றபடி மாடிப்படிகளில் இறங்கி வந்த மகனை, அவர்கள் இருவரின் பார்வையும் முறைப்பாக பார்த்தது. 

 

அவர்கள் முறைப்பைக் கண்டு கொள்ளாமல், “ஏன் நிக்கிறீங்க, உக்காருங்க.” என்று உபசரித்தவன், “குமாரண்ணே… ட்டூ காஃபி, ஆஃப் சுகர்.” சமையல்காரருக்கு குரல் கொடுத்துவிட்டு, அவனும் அவர்கள் முன்னால் சோஃபாவில் அமர்ந்தான்.

 

“என்னாச்சு கௌதம் உனக்கு? கொஞ்ச நாளாவே நீ சரியில்ல.” மனோகர் எடுத்தவுடன் நேரடியாக மகனிடம் கேட்க, திலோத்தமா அவன்மீது பதித்த பார்வையை விலக்காமல் அமர்ந்திருந்தார்.

 

“நத்திங் பா, ஆஷ் யூஷ்வல் ஆல் இஸ் வெல்.” கௌதம் மேலோட்டமாக பதில் தர, அதற்குள் சமையல்காரர், இடையே வந்து அவர்களுக்கு பவ்வியமாக குளம்பி பரிமாறிவிட்டு நகர்ந்தார்.

 

“எங்களுக்கு அப்படி தோணலடா, உங்கிட்ட ஏதோ மிஸ் ஆகுது. எங்களை அவாய்ட் பண்ற மாதிரி ஃபீல் ஆகுது.” மனோகர் காபி கப்பை கையில் வைத்தபடி கேட்க, கௌதம் பதில் பேசாமல் அமர்ந்திருந்தான்.

 

“தீப்திகாக யோசிக்கிறியா கௌதம்? உங்க மேரேஜ் விஷயத்தில நாங்க கம்பல் பண்ண கூட இல்லயே. எல்லாமே உங்க ரெண்டு பேர் விருப்பத்துக்கு தான விட்டிருக்கோம்.” தீப்தி உடனான திருமணப் பேச்சு தான் அவன் ஒதுக்கத்திற்கு காரணம் என்று தானாய் யூகித்துக் கொண்டு பேசினார் மனோகர்.

 

கௌதமனின் முகம் சற்று இறுக்கம் காட்டியது. ஆனாலும் ஏதும் பதில் தர முன்வரவில்லை அவன்.

 

“ஏதாவது வாய தொறந்து பேசித் தொலைடா…” திலோத்தமா அதுவரை இழுத்துவைத்த பொறுமையை இழந்து அவனிடம் குரல் உயர்த்தவும்,

 

“நான் என்ன மாம் பேசணும்?” வெகு நிதானமாகக் கேட்ட அவனின் எதிர் கேள்வி அவரை மேலும் ஆத்திரமூட்டியது.

 

“நான் உன் அம்மா கௌதம், உன்ன சுமந்து பெத்து பேர் வச்சு சீராட்டி பாராட்டி வளர்த்தவ நான். என்கிட்ட பேச உனக்கு எதுவுமே இல்லாம போச்சா?”

 

அவன் அமைதியாக இருக்கவும், மேலும் அவரே தொடர்ந்தார்.

 

“முதல்ல இதுக்கு பதில் சொல்லு, என்கிட்ட ஒருவார்த்தை கூட கேக்காம, எதுக்காக இங்க வந்து தனியா தங்கிட்டு இருக்க?”

 

“நான் இன்னும் ஸ்கூல் பையன் இல்ல மாம், விருப்பப்பட்ட இடத்துல தங்க எனக்கு முழு உரிமையும் இருக்கு.” என்றவனை அவர் கண்கள் இடுங்கப் பார்த்தார்.

 

“ஓ… நீ பெரியவனா வளர்ந்துட்டேன்னு சொல்ல வரீயா? நீ கூன் விழுந்து கிழவனானாலும் எனக்கு புள்ள தான்டா, அதை ஞாபகம் வச்சுக்கோ. நீ இங்க தங்கினதை நான் தப்பு சொல்லல, எங்ககிட்ட சொல்லாம கொள்ளாம இங்க மாச கணக்கா இருக்கிறத்துக்கான காரணத்தை தான் கேக்குறேன் நான்.”

 

“பெரிசா காரணம் ஏதுமில்ல மாம், தோணுச்சு வந்து தங்கிட்டேன் அவ்வளோ தான்.”

 

அவனது விட்டேற்றியான பதில் பெற்றவர்களைத் திருப்தி படுத்தவில்லை.

 

“சரி விடு, நம்ம வீட்டுக்கு எப்ப வருவ?”

 

அவன்‌ தோள் குலுக்கி விட்டு அமைதியாகவே இருந்தான்.

 

“இதுக்கென்ன அர்த்தம்? நீ நம்ம வீட்டுக்கு வர மாட்டேன்னா?”

 

“விருப்பமில்லன்னு அர்த்தம் மாம். இனி என் வாழ்க்கைய என் விருப்பப்படி அமைச்சுக்கலாம்னு…” 

 

கௌதம் சொல்லி முடிக்கும் முன் திலோத்தமா எழுந்து அவனிடம் வேகமாக வர, அவனும் நிதானமாக எழுந்து நின்றான்.

 

“உன் இஷ்டப்படினா? அப்ப நாங்க உனக்கு தேவையில்லையா? என்ன நினச்சிட்டு இப்படியெல்லாம் செஞ்சுட்டு இருக்க? நான் என்ன பத்து புள்ளயாடா பெத்து வச்சிருக்கேன்? ஒத்த புள்ள நீ மட்டும் தான எங்க ஆசைக்கும் ஆஸ்திக்கும். என்னவோ எங்களை விட்டு தனியா போற மாதிரியே பேசறீயே கௌதம்…”  

 

என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியவரின் கைகளைச் சலனமில்லாமல் தன்னிடமிருந்து விலக்கி விட்டவனை அவன் அம்மா திகைத்துப் பார்த்தார். கௌதம் இப்படி நடந்து கொள்பவன் இல்லையே!

 

“திலோ, நீ எதுக்காக இவ்வளோ டென்சன் ஆகுற? இப்ப அவன் கைல அதிகமா காசு புழங்குதில்ல, அதனால தான் இப்படி இருக்கான் விடு.” என்று மனோகர் மனைவியைத் தோளைணைத்து சமாதானப்படுத்த முயன்றார்.

 

“அது எப்படிங்க அவனை விட முடியும்?” என்று கணவனிடம் கேட்டவர், மகனிடம் திரும்பி சற்று நிதானத்தை வரவைத்து பேசினார்.

 

“உனக்கென்ன கௌதம் தனியா இருக்கணும் அவ்வளோதான, அதுக்காக இப்படியாடா தனியா தங்கி இருப்ப மடையா. கல்யாணத்தை பண்ணிட்டு நீயும் தீப்தியும் சேர்ந்து இங்க வந்து தங்கினா நாங்க வேணாம்னா சொல்ல போறோம்.” என்று இலகுவாக சொன்னவரை வெறுமையான அவன் பார்வை மோதியது.

 

மகனின் பார்வையைப் புரிந்துகொள்ள முடியாமல், திலோத்தமா முகம் யோசனை காட்டவே,

 

“நீங்க தான் வெல் பிளான் பண்ணி எனக்கு கல்யாண வாழ்க்கையே இல்லாம பண்ணிட்டீங்களே மாம்!” இறுகிய குரலில் கேட்டவனை, திகைத்து பார்த்தனர் இருவரும்.

 

“என்ன கௌதம் ஏதேதோ உளர்ற, உனக்கும் தீப்திக்கும் நடுவுல ஏதாவது பிராப்ளமா?” திலோத்தமா இப்போதும் புரியாதது போல கேட்க, மனோகருக்கு ஏதோ பொரி தட்டியது. மகனை ஆராய்ச்சியாகப் பார்த்தார்.

 

அன்னையை நேராக பார்த்து மறுப்பாக தலையசைத்தவன், “கங்காவ என்ன பண்ணீங்க நீங்க?” என்று கேட்டான்.

 

உடனே திலோத்தமா முகம் மாறிப்போனது. “உனக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியாதாடா, இன்னொரு முறை அந்த நொண்டி பேரை எடுத்தா நான் மனுசியா இருக்க மாட்டேன்.” அவர் எரிந்து விழவும், கௌதம் முகத்தில் கோப சிவப்பேறியதை வியப்பாகக் கவனித்தார் மனோகர்.

 

“கங்கா என்னோட மனைவி மாம்…!” கௌதம் அழுத்தமாகச் சொன்னதும்,  திலோத்தமாவிற்கு இன்னும் எரிச்சல் அதிகமானது. ஆத்திரமாக அவன் கன்னத்தில் அறைந்து விட்டார். 

 

அன்னையின் அடியை வாங்கிக் கொண்டும் அவன் அசையாமல் நின்றான்.

 

“நீ வேணான்னு காச வாங்கிட்டு போனவள இன்னும் பொண்டாட்டினு சொல்ல உனக்கு வெக்கமா இல்ல?” ஆத்திரத்தில் கண்கள் விரிய அவர் கேட்க,

 

கௌதம் பற்களைக் கடித்துக்கொண்டு பேசினான். “நிஜமா அசிங்கமா இருக்கு மாம், உங்களை நம்பி… உங்களுக்காக… என்னை நம்பி வந்தவளை அம்போன்னு விட்டுட்டேனே… எனக்கு என்னை நினச்சாலே வெறுப்பா இருக்கு மாம், நானெல்லாம் ஆம்பளன்னு சொல்றத்துக்கு கூட அசிங்கப்படறேன்.” 

 

அவமானத்தில் முகம் கறுக்க, மூக்கு விடைக்க, கண்கள் கலங்க பேசிய மகனை, திலோத்தமா அதிர்ந்து பார்த்தார்.

 

“நான்… நான் தான் அவளோட காலை முடமாக்கினேன்… அட்லீஸ்ட் அவ வாழ்க்கையவாவது காப்பாத்தணும்னு தான் அவளை கல்யாணம் பண்ண முடிவெடுத்தேன்… அவகிட்ட சம்மதம் கூட கேக்கல மாம் நானு.” அவன் தொண்டை கரகரக்க பேசினான். 

 

“என்னை பிடிச்சிருக்கான்னு கேட்டதுக்கு என்ன சொன்னா தெரியுமா? ‘பயமாயிருக்கு’ன்னு சொன்னா மாம்… அவ பயத்தை நீங்கெல்லாம் நிஜமாக்கிட்டீங்க இல்ல… இல்ல, நானும் தான் அவள விட்டுட்டேன்… மொத்தமா விட்டுட்டேன்.” என்று கலங்கி பேசிவனுக்கு அவர்கள் பதில் தேடிக் கொண்டிருந்தனர்.

 

“டேய், நாங்க உனக்காக தான எல்லாம் செஞ்சோம்?”

 

“எனக்காக என்ன செஞ்சீங்க டாட்? துரோகம்… பச்ச துரோகம் தான் நீங்க எனக்காக பண்ணது! உங்களை மலை போல நம்பினதுக்கு என்னை படு மோசமா ஏமாத்தி இருக்கீங்க இல்ல… நானும் ஏமாந்து இருக்கேன்… உங்க அருமை பெருமையான மகனை ஏமாளியா, கோமாளியா ஆக்கிட்டீங்க நீங்கெல்லாம்.” ஏமாற்றத்தின் வெளிப்பாடாய் அவன் அடி மனதின் ஆழத்தில் இருந்து, கனத்து வந்த சொற்களை உதாசீனப்படுத்துவது எளிதாக இல்லை பெரியவர்களுக்கு.

 

“கௌதம், நீ ஏதோ தப்பா புரிஞ்சிட்டு பேசற…” மனோகர் தயங்கி மழுப்ப முயல,

 

“எல்லாத்தையும் தப்பா தான் பா புரிஞ்சிட்டு இருந்தேன். இப்ப எல்லாம் தெளிவா தெரிஞ்சிட்டு கூட, என்னால எதையும் சரி பண்ண முடியலயே… தோத்து போயிட்டேன் பா… என் வாழ்க்கையில ரொம்ப கேவலமா தோத்துட்டு இருக்கேன் பா.” முகம் அவமானத்தில் சிவந்து கலங்க‌ பேசினான்.

 

“எப்பவோ நடந்து முடிஞ்சதை நினச்சு இப்ப ஏன் இவ்வளோ டென்ஷன் ஆகுற கௌதம். நடந்தது எல்லாமே உன் நல்லதுக்காகத் தான். கேவலம் ஒரு நொண்டி கூட உன் வாழ்க்கை எவ்வளவு மோசமா இருந்து இருக்கும் யோசிச்சு பாரு.” 

 

மகனின் தோள் தொட்டு சமாதானம் செய்ய முயன்ற திலோத்தமா கரத்தை அவன் தட்டி விட, அதில் அவருக்கு அவன் மீது கோபம் வந்தது. 

 

“எவளோ ஒருத்திக்காக எங்களை ஒதுக்கிடுவியா கௌதம்? நீ செஞ்ச பைத்தியக்காரத்தனத்தை நாங்க சரிக்கட்டி இருக்கோம். அதுக்கு நீ சந்தோஷப்படணும். 

 

நீ இவ்வளோ ஃபீல் பண்றீயே அவ, இந்நேரம் நாம கொடுத்த பணத்துல சொகுசா தான் வாழ்ந்துட்டு இருப்பா. நீ கட்டின தாலிய கழட்டி எறிஞ்சிட்டு, எவனையோ கல்யாணம் கட்டிக்கிட்டு புள்ளையும் பெத்து இருப்பா…” திலோத்தமா படபடத்துக்கொண்டே போக,

 

“என் கங்கா அப்படி இல்லமா…” என்று குறுக்கே விழுந்த அவன் குரல், அவர் பேச்சின் நீட்சியை அறுத்தது.

 

பெரியவர்கள் இருவரும் அவன் சொன்னதை அதிர்ந்து உள்வாங்க முயன்றனர்.

 

“கங்காவ நீ பார்த்தியா கௌதம்?” மனோகர் சந்தேகமாக கேட்க,‌ அவன் ஆம் என்பதாக தலை அசைத்தான்.

 

“என்னை பாருங்க, எப்படி இருக்கேன் நான்?” என்று கைகளை விரித்து தன் தோற்றத்தைக் காட்டியவன், “எனக்கு என்ன குறை? காசு, பணம், சொத்து, புகழ்… பட் என் வொய்ப் அங்க வாழாவெட்டின்ற பேரோட இருக்கா மா… இதைவிட என்ன பெருசா என்னை அவமானப்படுத்த முடியும்? நான் உயிரோட இருக்கிறதே வேஸ்ட்ன்னு தோணுது…” தன்னையே வெறுத்துக் கொண்டு சொன்னான்.

 

திலோத்தமா மொத்தமாக ஓய்ந்து போய் சோஃபாவில் சரிந்து அமர்ந்து விட்டார். 

“போச்சு… எல்லாமே போச்சு… அவள பார்த்தது மட்டுமில்லாம, அவ சொன்னதை எல்லாம் நம்பி எங்களையே தப்பா பேசற இல்ல நீ? எங்களவிட உனக்கு அந்த நொண்டி…”

 

“கங்காவ அப்படி சொல்லாதீங்க மாம்…” கௌதம் குரல் அதட்டலாக அவர் மேல் விழ,

 

“என்னை எதிர்த்து பேசற அளவுக்கு வந்திட்டியா கௌதம். உனக்கு என்மேல இருக்க பாசம் கூட போச்சா?” என்றவர் கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது.

 

கௌதம் பார்வை அன்னையின் மீது வெறுமையாக படிய, அவன் பேசினான்.

 

“பர்ஸ்ட் டைம் பார்க்கும்போது உங்களுக்கு கங்காவ பிடிக்காம போயிருக்கலாம். அவமேல உங்களுக்கு வெறுப்பு கூட வந்திருக்கலாம், ஆனா என்னோட இடத்தில என்னோட ஃபீலிங்க்ஸ நீங்க புரிஞ்சிக்கவே இல்லல? 

 

எனக்கு கங்கா மேல இரக்கம் மட்டும் இருந்திருந்தா, ஒரு செக் எழுதி நீட்ட எனக்கு எவ்வளவு நேரம் ஆகி இருக்கும்?” என்று சொல்லி மறுப்பாக தலையசைத்தவனுக்கு, அன்றைய திருமண நாள் நிகழ்வுகள் பச்சை ரணமாய் நினைவில் காட்சியானது.

 

“நீ என்ன சொல்ல வர கௌதம்?” மனோகர் தான் கேட்டார். அவருக்கு இந்த விவாதம் தங்களுக்கு எதிரான பாதையில் போவது விபரீதமாகத் தோன்றியது.

 

“நான் முழு மனசோட விரும்பி தான் கங்காவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ப்பா… ஏதோவொரு வகையில அவமேல அட்ராக்ட் ஆகி இருக்கேன். இல்லனா எப்படி முன்ன பின்ன தெரியாத பொண்ண கல்யாணம் செய்ற முடிவை அத்தனை துணிச்சலா எடுத்து இருப்பேன் சொல்லுங்க? அதுவும் உங்ககிட்ட கூட சொல்லாம?”

 

கௌதமனின் விளக்கத்தில் பெற்றவர்கள் அடிமடியில் கலக்கம் உண்டாவது போன்ற பதட்டமான உணர்வு பரவியது.

 

மனோகர், “சரிடா இப்ப அதுக்கு நீ என்ன பண்ண போற?” சற்று கோபமாகவே கேட்டார்.

 

கௌதம் அவர்களிடம் இருந்து பார்வையை விலக்கி, வேறுபுறம் வெறித்து நின்றான். “நான் செய்யறத்துக்கு இனி எதுவுமே இல்ல… நான் கெஞ்சி கேட்டும் அவ என்னோட வாழ வரமாட்டேன்னு சொல்லிட்டா… என்மேல துளி நம்பிக்கை கூட இல்லன்னு சொல்லிட்டா, எப்படி நம்புவா?! என்னோட சேர்ந்து வாழறதை விட, காலம்பூரா தனியா இருக்கறதே மேல்னு சொல்லிட்டா…” என்று சொன்னவன் தாள முடியாத ஆத்திரத்தில், தன் எதிரில் இருந்த பொருட்களை எல்லாம் கைகளால் வீசித் தள்ளினாள்.

 

பெற்றவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர். “கங்காவ நீ எப்போ எங்க பார்த்த?” மனோகர் விசாரிக்கவும், 

 

அவர் புறம் திரும்பியவன், “நான் எதுக்கு என் கங்கா பத்தி உங்களுக்கு சொல்லணும் டேட்? மறுபடி அவகிட்ட போய் என் வாழ்க்கைக்கு பேரம் பேசவா? இல்ல, ஏதாவது பண்ணி அவளை அங்கிருந்தும் விரட்டி விடவா?” என்றவன் தாளாத ஆத்திரத்தில் அவர் சட்டையைப் பிடித்து உலுக்கி இருந்தான்.

 

“கௌதம்…!” திலோத்தமாவின் அதட்டலில் நிதானத்திற்கு வந்தவன், தன் தந்தையின் சட்டையில் இருந்து கைகளை விலக்கி, “சாரி டேட், ஏதோ கோபத்துல… மன்னிச்சிடுங்க.” என்று அவர் சட்டையில் கசங்கிய இடத்தை தேய்த்து சரிசெய்தபடி மன்னிப்பையும் வேண்டிக்கொண்டான்.

 

மனோகருக்கு பேச்சு வரவில்லை. மகனை வேதனையோடு பார்த்து நின்றிருந்தார். அவரின் பார்வையைத் தாங்கியவன், “ரியலி சாரி டேட், நான்… இப்படி ஏதாவது உங்களை ஹர்ட் பண்ணிடுவேனோன்ற‌ பயத்துல தான் விலகி இருக்கேன். என்னை இப்படியே விட்டுடுங்க‌ ப்ளீஸ்.” கௌதம் தளர்ந்து‌ சொன்னதில் இருவருமே கலங்கி போயினர்.

 

“என்ன சொல்ற கௌதம் நீ? அப்ப நம்ம வீட்டுக்கு நீ வரவே மாட்டியா?” திலோத்தமா அதிர்ந்து கேட்க, 

 

“வருவேன் மாம், நிச்சயமா வருவேன். பட் தனியா இல்ல, என் மனைவியோட சேர்ந்து உங்களை பார்க்க வருவேன். ஆனா எப்போன்னு தான் தெரியல. கங்கா என்னை சீக்கிரம் ஏத்துக்கணும்னு வேண்டிக்கோங்க மாம்” என்றவனை முகம் கசங்க பார்த்தார் அவர்.

 

“அப்ப… தீப்தியோட கதி என்னடா ஆகுறது? உன் மேல உயிரையே வச்சிருக்கா டா அவ. உடஞ்சி போயிடுவா” அவர் கண்கள் கலங்கி, கன்னங்களில் கண்ணீர் கோடிட்டது.

 

தயங்காமல் அவர் கண்ணீரைக் கைக்குட்டை எடுத்து ஒற்றி எடுத்தவன், “அவளையும் நீங்க தான் சமாதானப்படுத்தணும். எங்கேயோ ஓடி ஆடிட்டு விளையாட்டுத்தனமா இருந்த பொண்ண, படிப்ப கூட கட் பண்ணிட்டு இங்க கூட்டிட்டு வந்தது நீங்க தான? என்னை பத்தி பேசி பேசி அவளுக்கு என் மேல ஆசை வர வச்சதும் நீங்க தான? இப்பவும் அவளை நீங்க தான் மீட்டு எடுக்கணும்.”

 

“என்னடா இப்படி சொல்ற? உனக்கு தீப்தி மேல விருப்பம் இல்லன்னு என்கிட்ட பொய் சொல்லாத.” அவர் ஆதங்கமாக கேட்டார்.

 

மறுத்து தலையசைத்தவன், “இல்ல மாம், என் மாமா பொண்ணு மேல எனக்கு பாசம் இருக்கு, அக்கறை இருக்கு. மத்தபடி, விருப்பம், காதல் எல்லாம் நீங்க எங்க மேல திணிச்சது தான், இப்ப வரைக்கும் என்னால அவளை சின்ன பொண்ணா தான் பார்க்க முடியுது. சாரி.” 

 

கௌதம் சொன்னதில் பெற்றவர்களின் முகம் வெளுத்துப்போனது.

 

***

 

பெண் வருவாள்…

 

(அடுத்து pre final பதிவு விரைவில்…)