ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 21
அன்று கௌதம், வேதா அழகு நிலையத்திற்குள் தனியே வந்து சென்றதற்குப் பிறகு, கங்காவின் வீட்டில் கிட்டத்தட்ட புயல் வீசி, பேய் மழை கொட்டி, இன்னும் சேதாரங்கள் அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது.
முன்பே, கௌதமனை யாரோ கார்க்காரன் என்று பழி சொல்லிப்போன கௌரி, கதிரவனுக்கு, முன்பு போலவே இப்போதும் கௌதம் பார்லரில் கங்காவை தனிமையில் சந்தித்துச் சென்ற விசயம் தெரிந்திருந்தது.
வேறு ஊரில் வசிக்கும் அவர்களுக்கு இதெல்லாம் எப்படி தெரிந்தது? யாரது தன்னை இத்தனை கண்காணித்து உளவு சொல்வது? என்று கங்காவிற்கு தெரியவில்லை. அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கவும் அவர்கள் யாரும் விடவில்லை.
அக்கா தவறான வழியில் போகிறாள் என்று கங்கா மீது பழி சொல்லி, கௌரி வடிக்கட்டாத வார்த்தைகளைக் கொட்டினாள்!
சின்ன மகள் சொன்னதை அப்படியே நம்பிய மல்லிகாவும், தன் மூத்த மகளின் மீது சிறிதும் நம்பிக்கையற்று, கங்காவின் புத்தி தடம் மாறிப் போனதே என்று கதறி ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்!
மாடசாமி பற்றி சொல்லவே வேண்டாம், குடும்ப மானம் போனது, மகளின் ஒழுக்கம் கெட்டு போனது என்று எகிறிக் கொண்டு, கங்காவை அடித்துவிடும் அளவுக்கு நெருங்கி விட்டார்.
குறுக்கே வந்து மாமனாரை தடுத்த கதிரவன், காதும் காதும் வைத்தது போல கங்காவை தன் முதலாளிக்கு திருமணம் செய்து விடலாம் என்ற அவனது ஆறிப்போன திட்டத்தை இப்போது மறுபடி சுட வைக்க முயன்றான்.
அதுவரை தன் கண் முன்னே நடக்கும் நாடகத்தை, கங்கா எந்த சலனமும் இன்றி, கைக்கட்டியபடி அமைதியாக, நேர் பார்வையாகப் பார்த்து நின்றிருந்தாள்.
அவளது பொறுமையை மேலும் சோதிக்கும் விதமாக, கங்காவை ஒழுக்கம் கெட்டவளாக சித்தரித்து, காதால் கேட்க இயலாத வார்த்தைகளை அவர்கள் வரைமுரையின்றி பேசவும்,
“போதும் நிறுத்துங்க எல்லாரும்…” பெரிதாக குரலுயர்த்தி கத்தி விட்டிருந்தாள்.
“இப்ப என்ன? என்னை வந்து பார்த்துட்டு போனது யாருன்னு உங்களுக்கெல்லாம் தெரியணும் அவ்வளோ தானே?” அவர்களைப் பார்த்து ஆத்திரமாக கேட்டாள்.
“ஆமாண்டி சொல்லு? எவன்டீ அவன் பொறுக்கி பொறம்போக்கு, இந்த மாடசாமி போண்ணுகிட்ட வாலாட்டினவன், அவன் கைய கால வெட்டி முச்சந்தியில போட்றேன்.” மாடசாமி தொடையைத் தட்டிக் கொண்டு குதிக்க, தன் தந்தையைக் கேவலமாக ஒரு பார்வை பார்த்தாள் கங்கா.
“சொல்லு கங்கா, யாரது? என்ன சொல்லி உன்ன ஏமாத்துனான் அவன்?” கௌரியும் முன்வந்து கேட்க,
“அவனோட பேரை மட்டும் சொல்ல சொல்லு, அவன் எங்க இருந்தாலும் உண்டு இல்லன்னு பண்ணிடலாம்” வழக்கத்திற்கு மாறாக கதிரவனும் வீரவசனம் பேசினான்.
“அவர் பேரை சொன்னா போதும் இல்ல உங்களுக்கு…” என்று சற்று நிதானித்தவள், “கௌதம் கைலாஷ்… ஊரறிய, உங்க எல்லார் முன்னையும் என் கழுத்துல தாலி கட்டின என் புருசன் அவரு!” என்றாள் அத்தனை கர்வமாய்.
எப்படி எங்கிருந்து வந்தது அவளுக்குள் அத்தனை கர்வம் என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனாலும் சற்றும் தளராமல் முழு உரிமையோடு தன்னவன் பெயரை உச்சரித்தாள் கங்கா.
விட்டு பிரிந்திருந்த காலத்திலேயே அவனை விட்டுக்கொடுக்காதவள், அவளை ஏற்றுக்கொள்ள அவன் வேண்டி நிற்கும் இப்போதா விட்டுக்கொடுத்து விடுவாள்?
கௌதம் பேரை கேட்டதுமே அங்கிருந்தவர்கள் வாயடைத்துப் போய் நின்று விட்டனர். அவர்களால் அடுத்து யோசிக்கக் கூட முடியவில்லை, கங்கா சொன்னதை முழுதாக நம்பவும் முடியவில்லை. நம்பாமல் விடவும் முடியவில்லை. கங்கா இதுவரை எதற்கும் பொய்யுரைத்தது இல்லை என்பது வேறு அவர்களை யோசிக்க வைத்தது.
“ஓ… அவன் எப்ப திரும்பி வந்தான்? அதுவும் இத்தனை வருசம் கழிச்சி பொண்டாட்டி ஞாபகம் வந்துச்சாமோ அவனுக்கு?” முதலில் கதிரவனிடம் இருந்து தான் தெனாவெட்டான கேள்வி வந்தது.
“கௌரி… என் புருசன மரியாதை இல்லாம பேச வேணாம்னு சொல்லி வை. இல்ல மரியாதை கெட்டு போயிடும் உங்களுக்கு.” கங்கா காரமாகவே எச்சரித்தாள்.
“ஆமா, விட்டு ஓடிப்போனவனுக்கு மரியாதை ஒன்னு தான் கேடு.” கௌரியும் அசட்டையாகப் பேச, அதற்குமேல் அவர்கள் பேச்சைக் கேட்கும் பொறுமையில்லை பெரியவளுக்கு.
“இப்பவே, நீங்க ரெண்டு பேரும் என் வீட்ட விட்டு வெளிய போயிடுங்க… கௌரி, இனி என் தரப்புல இருந்து உனக்கு எந்த சீர் செணத்தியும் வராது!” கங்காவின் அதிரடி உத்தரவில் அவர்கள் அதிர்ந்து தான் போயினர்.
“என்ன கங்கா விளையாடுறியா? சொத்து உன் பேர்ல இருந்தா நீ என்னவேணா பேசுவியா?” கௌரி கொதித்து கேட்க,
“இப்ப நீங்க ரெண்டு பேரும் வெளிய போகலை… நான் போலீஸ்க்கு போன் போட வேண்டியதா இருக்கும்.” கங்கா தன் கைபேசி எடுக்கவும்,
அவள் நிச்சயம் அப்படி செய்வாள் என்பதில் கதிரவனுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. அதில் கடுப்பானவன், “ச்சே… வாடி போலாம்.” என்று தன் மனைவி கௌரியை இழுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.
சின்ன மகளையும், மருமகனையும் சமாதானப்படுத்த பின்னாலேயே ஓடும் மல்லிகா கூட, இப்போதைய அதிர்ச்சியில் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.
“கங்கா… நிஜமா உன் புருசன் தான் வந்தாரா? என்கிட்ட கூட சொல்லல பாருடி நீ. இத்தனை நெஞ்சழுத்தும் பொம்பளைக்கு ஆகாது சொல்லிட்டேன்.” என்று மல்லிகா திகைப்பும் ஆற்றாமையுமாக பேச, கங்கா அம்மாவிடம் பார்வையைத் திருப்பினாள்.
“எதுக்குடி வந்தாராம்? நீதான் அப்பவே விடுதலை பத்தரத்துல எல்லாம் கையெழுத்து போட்டு கொடுத்துட்டியே… இன்னும் வேறெதாவது கையெழுத்து போட வேண்டி கேக்க வந்தாரா?” மல்லிகா சந்தேகமாக கேட்கவும்,
“நீ பொசுக்குன்னு கையெழுத்து எல்லாம் போட்டு கொடுத்துடாத கங்கா, நான் பேசறேன் அவரு கிட்ட.” மாடாசாமி நெருங்கி வந்து பவ்வியமாக வேறு சொல்லவும், கங்காவின் ஆத்திரம் உச்சிவரை ஏறியது.
“என்கூட நீங்க பேசறது இதுவே கடைசியா இருக்கட்டும்… இனி ஒருவார்த்தை என்கிட்ட பேசுனீங்க, அம்மா, அப்பான்னு கூட பார்க்க மாட்டேன், இந்த வீட்ட விட்டு உங்களையும்… வெளியே துற… துறத்திடுவேன்!” என்று சொல்லும்போதே அவள் குரல் உடைந்து கண்கள் உடைப்பெடுக்க, அவர்கள் முன்னால் நிற்க முடியாமல், அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள் கங்கா.
வெளியே பெற்றவர்களின் கத்தல்களும் சாபங்களும் அவளை எட்ட, மேலும் அவள் உடைந்து தான் போனாள்.
வீட்டோடு எதுவும் நிற்கவில்லை. வீட்டை தாண்டி, தெருவை தாண்டி, ஊரையும் தாண்டி, வேதா அழகு நிலையம் இருக்கும் கடைத்தெரு வரை, கங்காவின் பேச்சு அரைப்பட்டது.
‘அந்த கங்காவை பார்க்க அடிக்கடி யாரோ வெளியாளு வந்துட்டு போறானாம்!’
‘ச்சே அந்த பொண்ணு, நல்ல பொண்ணுயா தப்பா பேசாத.’
‘அட நானே கண்ணால பார்த்தேங்கிறேன்!’
‘ஆத்தாடி! அப்படியா?’
‘இந்த காலத்துல யாரையும் நம்ப முடியறதில்ல!’
‘அய்யோ, வந்தது கங்காவோட ஓடி போன புருசன் தானாம்!’
‘புருசனா இருந்தா ஏன் ஒளிஞ்சி பார்த்துட்டு போவணும்?’
‘ஆளு சோக்கா தான் இருந்தான். பெரிய காரு வேற ஓட்டிட்டு வந்தான்’
இன்னும் பலபல பேச்சுக்கள்!
கங்கா எங்கு போனாலும், புதிதாய் அவள் மீது படியும் குறுகுறு பார்வைகள், அவளை அதிகம் சஞ்சலப்படுத்தியது.
வேதா அழகு நிலையத்திற்கு உள்ளேயும் இவ்வித சங்கடங்கள் தொடரத்தான் செய்தது.
“என்ன கங்கா, வெளியே ஏதேதோ பேச்சு அடிபடுது?” இப்படி சுற்றி வளைத்து கேட்கும் வாடிக்கையாளர் பெண்கள் ஒவ்வொருவரிடமும் கங்காவால் என்னவென்று தன் வாழ்க்கை நிலையை விளக்கிச் சொல்ல முடியும்?
“எம்மா, வந்த வேலைய மட்டும் பார்த்துட்டு போ மா, சும்மா வாயளக்காத, ஊரு ஆயிரம் பேசும், வருச கணக்கா எங்க கங்கா புள்ளய பார்க்கற இல்ல நீயே நாக்கு மேல பல்ல போட்டு பேசுனா நாக்கு அழுகிடும் பாத்துக்க.”
பாக்கியம்மா பேச்சில் கங்காவின் மனதிற்குள் புதுவெள்ளம் பாய்ந்து பெருகும் உணர்வலை, அவளை மீண்டும் தூக்கி நிறுத்திவிடும்.
மஹாவோடு சேர்ந்து, சாயா, ரேவதி, ரேணுகா மூன்று சின்ன பெண்கள் கூட, கங்காவுக்கு ஆதரவாக இருந்ததில் அவளுக்குள் அத்தனை ஆறுதல்.
ஆனாலும், இத்தனை பேச்சுக்கும் தன்னை ஆளாக்கிய கௌதம் மீது கங்காவிற்கு அத்தனை ஆத்திரமும் கோபமும் தீயென பரவ, உள்ளுக்குள் அவன்மேல் அத்தனை புகைந்து கொண்டிருந்தாள்.
கௌதமனின் அழைப்புகள் எதையும் அவள் ஏற்றுக்கொள்ளாததோடு, அவன் எண்ணையும் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்து விட்டிருந்தாள்.
“மறுபடி மறுபடி சொல்றேன் மஹா, கௌதம் மாமா மண்ணாங்கட்டின்னு அவர்கிட்ட போன்ல பேசுற வேலையெல்லாம் வச்சுகிட்ட, என்னோட பேசறதை மறந்துட வேண்டி இருக்கும்.” எப்போதுமில்லாத கடுமையோடு கங்கா எச்சரிக்க, மஹாவின் முகம் வாடிப்போனது.
“கங்கா, கௌதம் இங்க நேர்ல வந்தா உன்ன தப்பா பேசறவங்க வாயெல்லாம் அடங்கி போயிடும் சொன்னா கேளு.” தழைந்த குரலில் மஹா எத்தனை எடுத்துச் சொல்லியும் பெரியவள் கேட்பதாக இல்லை.
“போ போய் அவரை மறுபடி இங்க வர சொல்லு, நான் இன்னும் உயிரோட இருக்கிறது பிடிக்கல போல அவருக்கு. என்னோட வாழ்க்கைய அழிச்சது பத்தாதுன்னு, இப்ப மானத்தையும் வாங்கியாச்சு, இப்ப வந்து மிச்சமிருக்கற என் உயிரையும் எடுத்துட்டு போகச் சொல்லு.”
கங்கா இத்தனை வலியான வார்த்தைகளைப் பயன்படுத்தியதில், மஹாலட்சுமியும் அமைதியாகிப் போனாள். ஆனாலும் தமக்கை அறியாமல் கௌதமனுக்கு இங்கு நடப்பதைச் சொல்லி, தன் பங்கிற்கு அவனை ஒருமுறை வறுத்தெடுத்து விட்டே அமைதியானாள்.
நிலைமை இத்தனை மோசமாகும் என்று கௌதமனுக்கும் தெரிந்திருக்கவில்லை. கங்கா தன்னை நம்பவில்லையே என்ற ஆற்றாமையில் அவனும் அவளிடம் கோபம் கொண்டிருந்தான். இப்போது மஹா சொல்லி நிலமை தெரிந்த பிறகும் கங்காவிற்காக வர முடியாத சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருந்தான் அவன்.
வெளி நாட்டு பயணங்களில் சுற்றிக் கொண்டிருந்தான். திரைப்படத் தயாரிப்பு தவிர, முக்கிய தொழிலை ஏற்று நடத்த அவனும் சில வருடங்களாக முயற்சியில் இருந்தான். அதற்கான வாய்ப்பு இப்போது தான் அவனுக்கு அமைந்திருந்தது.
மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிப்பில் இருந்த அந்த நிறுவனம், இப்போது சில வருடங்களாக பொறுப்பான தலைமை இன்மையால் கடுமையான சரிவிற்கு சென்று, விற்கும் நிலைக்கு வந்திருந்தது.
அந்த நிறுவனத்தைக் கைப்பற்றி, சரிந்திருந்த தொழிலை மீட்டெடுக்கும் முயற்சியில், கௌதமனும் அவனது நண்பர்களுடன் இறங்கி இருந்தான். அதன் காரணமாகவே இந்த தொழில்முறை வெளிநாட்டு பயணங்களில் சிக்கி இருந்தான். அவனது நண்பர்களும் தொழிலை மேம்படுத்தும் வெவ்வேறு வேலைகளில் கவனமாக இருக்க, இவனாலும் பாதியில் திரும்ப முடியாத சூழ்நிலை.
இன்னும் எத்தனை காலம் தான் தன்னையும் அவளையும் இப்படி பிரித்து வைத்து வேடிக்கை காட்டும் எங்களின் பொல்லாத விதி? என்று நொந்து கொண்டனுக்கு மொத்த ஆதங்கமும் மனைவியின் மீது திரும்பி இருந்தது.
இனியும் அவளின் சம்மதத்திற்காக காத்திருந்து பயனில்லை. அடுத்த முறை அவள் மறுத்தாலும், அவளை தன்னுடன் இழுத்துக்கொண்டு வந்துவிட வேண்டும் என்று மனதிற்குள் உரு ஏற்றிக் கொண்டிருந்தான் கௌதம் கைலாஷ்.
அப்படி அவனால் கங்காவின் விருப்பமின்றி அவளை கடத்திக் கொண்டு வர முடியுமா என்ன?
***
பெண் வருவாள்…
(காத்திருப்புக்கு நன்றி… அடுத்த பதிவு விரைவில் 🙏🙏🙏)