ஏன் பெண்ணென்று பிறந்தேன் 22

ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 22(1)

 

திருமண வரவேற்பு கொண்டாட்டமாக ஆரம்பித்திருந்தது. அந்த மண்டபத்தின் ஓர் ஓரத்தில் யார் கண்ணையும் கவராதபடி அமர்ந்திருந்தாள் கங்கா. சற்றுமுன் தான் மணப்பெண்ணுக்கான பிரைடல் மேக்கப் முடித்துவிட்டு இங்கே வந்து அமர்ந்தாள். 

 

மணப்பெண் கீர்த்தியும் அவளது அம்மா உமாவும் வேதா அழகு நிலையத்தின் நிரந்தர வாடிக்கையாளர்கள். கீர்த்திக்கு சென்னையில் திருமணம் முடிவாகி இருக்க, மணப்பெண் அலங்காரத்திற்காக கங்காவை அழைத்திருந்தனர். இதுபோல மணப்பெண் அலங்காரத்திற்கு வெளியூர் போவது இயல்பாதலால் கங்காவும் தொழில் நிமித்தமாக வந்திருந்தாள்.

 

இப்போது அவளது வேலை முடிந்து விட்டது, இனி விடியற்காலையில் முகூர்த்தத்திற்கு அலங்காரம் செய்ய வேண்டும். அருகிலுள்ள தங்கும்விடுதியில், மணப்பெண் உறவினர்களோடு சேர்த்து கங்காவிற்கும் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. விருந்து முடித்துக்கொண்டு அங்கே செல்ல காத்திருக்கிறாள்.

 

தான் செய்த அலங்காரத்தில் பேரழகியாய் ஒளிர்ந்த மணப்பெண்ணைப் பார்க்கும்போது அவளுக்குள் நிறைவும், அதேசமயம் சற்று பெருமையாகக் கூட தோன்றியது. அதோடு அலங்காரத்தில் சிலவகை திருத்தங்கள் செய்தால், இன்னும் நன்றாக இருக்கும் என்று அவற்றையும் மனதில் குறித்துக் கொண்டாள்.

 

மணமேடையில் திருமண கோலத்தில் மணமக்களைக் கவனித்திருந்தவளுக்கு, கேளாமல் கௌதமின் முகம் மனதில் தோன்றியது. தங்கள் திருமண நாளில், மணமேடையில், தன் அருகில் கணவனாய் அமர்ந்திருந்த கௌதமை விழிகள் விரிய அவள் பார்த்தது, நினைவுப்பெட்டகத்தில் இருந்து மேலெழுந்தது.

 

அன்று புது மாப்பிள்ளையாக அவனது தோற்றம், அங்கிருந்த யாரையும் வியக்க வைத்த அவனது வனப்பு, அவள் மேல் வாஞ்சையோடு படர்ந்த அவன் பார்வை, அவள் மென்கரத்தை ஆதரவாய் அழுத்திப் பற்றிக்கொண்ட அவன் ஸ்பரிசம்… சட்டென விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.

 

அவள் இதயம் வழக்கத்திற்கு மாறான அதிவேகத்துடன் தடதடத்தது. இதுபோல மணமக்களைப் பார்க்கும்போது, தன் திருமண நாளும், கௌதம் நினைவும் வருவது அவளுக்கு சாதாரணம் தான் என்றாலும், ஏனோ இன்று மிகுந்த பாரமாக உணர்ந்தாள்.

 

அவள் துவண்டு விழும் நேரத்தில் ஆபத்பாந்தவனாக அவளைத் தாங்கிப் பிடித்தவன், அடுத்த சில மணி நேரங்களிலேயே அவளை சில்லு சில்லாய் உடைத்து சிதறவிட்டு மறைந்துவிட்டான்.

 

இரவும் பகலுமாக எத்தனை எத்தனையோ நாட்கள் அவளைக் கடந்து விட்டன, ஆனால் இன்னும் அவள் அந்த நாளிலேயே, அன்றைய நிகழ்வுகளிலேயே உறைந்துபோய் கிடக்கிறாள். அவளின் அன்றாட செயல்கள் அவளது புற நடமாட்டம் மட்டுமே, அவள் மனதும் நினைவும் அந்த ஒரு நாளிலேயே சிக்குண்டு கிடக்கிறது.

 

இதுவரை அந்த நாளை விட்டு வெளிவர அவள் முயன்றதில்லை, விரும்பியதுமில்லை. தன் காயத்தை நாவால் நக்கி நக்கி தன் வலியை ருசி பார்த்துக்கொள்ளும் ஐந்தறிவின் குணம், அவளுக்குள்ளும் மிச்ச சொச்சம் ஒட்டியிருக்க, தன் மனக்காயங்களை மறுபடி மறுபடி அவ்வப்போது மீட்டெடுத்து வலியோடு ருசி பார்த்துக்கொள்கிறாள் அவளும்.

 

இப்போது, அங்கே சுற்றி இருக்கும் ஆரவாரங்களில் வழக்கம்போல கங்காவின் மனம் செல்லவில்லை. தன் திறன்பேசியை எடுத்து இயக்கி, அதில் நுழைந்து தன்னை மறக்க முயன்றிருந்தாள் கங்கா.

 

சற்று நேரத்தில் அங்கே ஏதோவொரு பரபரப்பு தொற்றிக்கொள்ள,‌ கங்கா என்னவென்று தலை நிமிர்த்தி பார்த்தாள். மாப்பிள்ளை வீட்டார் யாரையோ பவ்வியமாக முன்வந்து  வரவேற்றனர். அவர்களைச் சுற்றி சலசலப்பு அதிகமிருக்க, யாரோ பெரிய புள்ளி போல என நினைத்துக்கொண்டவள், மீண்டும் திறன்பேசியில் கவனமாகவும், அவன் பெயர் அவள் செவிப்பறையில் மோதியது.

 

“ஹே… நிஜமா அவர் கௌதம் கைலாஷ் தானா?”

 

“ஆமா பா, பார்க்க ஆள் செமயா இருக்காரு இல்ல?”

 

“ஹேய் வா, முடிஞ்சா அவர்கூட ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்” என்று துள்ளிக்குதித்து ஓடினர் அவள் பக்கமிருந்த சில இளம்பெண்கள்.

 

அவன் பெயரைக் கேட்டதும் கங்காவிற்குள்ளும் பரபரப்பு தொற்றிக் கொள்ள, அவனைப் பார்க்கவென சட்டென எழுந்தவளுக்கு, அவள் கால் ஒத்துழைக்காமல் தடுமாற வைக்க, இருக்கையைப் பிடித்து சமாளித்து மறுபடி அமர்ந்து விட்டாள்.

 

தன் நிலைமை தெரிந்தும் வேகமாக எழுந்து கொண்ட தன் மடத்தனத்தை நொந்து கொள்ளத் தான் முடிந்தது அவளால்.

 

அவள் எழுந்த வேகத்தில் ஒரு பக்கம் திறன்பேசியும், மறுபக்கம் கைப்பையும் விழுந்து கிடக்க, வெளிப்படையாக தன் நெற்றியில் அடித்துக்கொண்டு, குனிந்து அவற்றை எடுத்து மடிமேல் வைத்துக்கொண்டவளது கண்கள், அவனைத்தான் தேடி அலைப்புற்றது.

 

நல்லவேளையாக கௌதம் கைலாஷ் மேடையில், தன் நண்பனான மணமகனைக் கட்டி அணைத்து வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தான். மணமகளுக்கு கைக்கொடுத்து வாழ்த்தைப் பகிர்ந்தவன், இருவருக்கும் சேர்த்து பரிசு பொருளை வழங்கிவிட்டு, இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு நகர்ந்தான்.

 

இப்போதும் அவனைச் சுற்றி அத்தனை பேர் நின்றிருக்க, கங்காவால் அவன் முகத்தை முழுமையாகக் கூட பார்க்க முடியவில்லை. எழுந்து முன்னால் சென்று பார்க்கலாம் தான், ஆனால் அவன் பார்வையில் தான் பட்டுவிட்டால்… அது அவளுக்குத் தேவையற்றதாகத் தோன்றியது. 

 

சுயமி எடுக்க அவனை அணுகியவர்களை நயமாக மறுத்துவிட்டு, உடன் வந்த தன் நண்பர்களோடு, வந்தபடியே அங்கிருந்து சென்றும் விட்டான் கௌதம் கைலாஷ்.

 

கங்காவிற்குள் அத்தனை ஆசுவாசம்! இங்கே வந்ததிலிருந்து அவனை ஒருமுறை பார்க்க முடியுமா என்று அவள் மனது அடித்துக்கொண்டே இருந்தது. மற்ற நாட்களானால் இத்தகைய‌ ஏக்கம் ஏற்பட்டிருக்காதோ என்னவோ, ஆனால் இன்று எனும்போது அவளின் பேதை மனது சற்றே பித்தாகி இருந்தது.

 

எதற்கும் கொடுத்து வைக்காத தனக்கு, இன்று அவனைப் பார்க்கும் வாய்ப்பும்‌ இருக்கவே போவதில்லை என்று மருகிக் கொண்டிருந்தாள். ஆனால், அவனை தூரத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பாவது கொடுத்து வைத்திருக்கிறதே என்று நிஜமாகவே‌ நிறைந்து போனாள். இமைகளை அழுத்தி மூடி இந்த நிமிடத்தை நெஞ்சப் பெட்டகத்தில் சேமித்து வைத்தவளின், இமைதாண்டி சிறு துளி கண்ணீர் கசியப் பார்த்தது. நிஜநிஜமாய் இந்த நொடி அவளுக்குள் இதம் தருவதாய்.

 

சற்றுநேரத்தில் தன்னை மீட்டுக்கொண்டவள், பேருக்கு விருந்தை கொரித்துவிட்டு பெண் வீட்டாரிடம் விடைபெற, 

 

“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு கங்கா, சொந்தக்காரங்க எல்லாரோட சேர்ந்து நீயும் ஓட்டலுக்கு பஸ்ல போகலாம்.” மணப்பெண்ணின் அம்மா உமா கூறினார்.

 

“பரவால்ல க்கா, பக்கத்துல தான நான் ஆட்டோ பிடிச்சு போயிப்பேன்.” கங்கா சொல்லவும்,

 

“அதுவும் சரிதான் கங்கா, நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோ மார்னிங் சீக்கிரம் எழணும் இல்ல.” அவர் விடை கொடுக்க, புன்னகையுடன்‌ தலையசைத்து வெளியே நடந்தாள்.

 

மண்டபத்து  வாயிலை விட்டு வெளியே வந்தவள், சற்று தள்ளி சாலையோரம் சென்று ஆட்டோவைப் பார்த்து நிற்க, சற்று தூரத்தில் சாலையோரம் நின்றிருந்த கார் அவள் பார்வையில் பட்டது. 

 

அது அவன் கார் போலவே அவளுக்குத் தோன்றிய நொடி, கார் கதவைத் திறந்து கௌதம் வெளியே வந்து நின்றான்.

 

அவனைப் பார்த்ததும் கங்காவின் விழிகள் விரிய, சட்டென பார்வையைத் திருப்பிக் கொண்டாள். இமைகளை அழுத்தி மூடித் திறந்தவள்,

‘அச்சோ… அப்ப‌ இவரும் என்னை பார்த்துட்டாரா? இவ்வளவு நேரமா எனக்காகக் தான் வெயிட் பண்றாரா என்ன?’ யோசித்தபடி அவன் புறம் மெல்ல திரும்பிக் கவனிக்க, 

 

அவள்மீது அழுத்தமாகப் படிந்திருந்த அவன் பார்வை ஆம் என்றது.

 

கங்காவிற்கு அய்யோ என்றானது. ‘நல்லவேளை மண்டபத்துக்குள்ள என்னைப் பார்த்தும் என்கிட்ட பேச வரல. அதுவரைக்கும் நிம்மதி’ என்றெண்ணிக் கொண்டவள், அவனைத் தவிர்த்து, சாலையின் மறுபுறம் ஆட்டோ வருகிறதா என்று கவனிக்கலானாள்.

 

அவள் வேண்டுமென்றே தன்னைத் தவிர்ப்பதைக் கண்டுகொண்ட கௌதமனுக்குள் திகுதிகுவென கோபமேறியது. அவளைப் பிடித்து தரதரவென இழுத்து வந்து காருக்குள் தள்ளி பூட்ட வேண்டும் என்ற அளவு ஆத்திரம் எழ, தன்னை நிதானித்துக் கொண்டவன், தன் கார் மீதே சாய்ந்து நின்று கொண்டான்.

 

வந்த ஒன்றிரண்டு ஆட்டோவும் அவள் கையசைப்பிற்கு நிற்காமல் பறந்து போக, வேறு ஆட்டோ எதுவும் வருவதாகத் தெரியவில்லை. அவன் முன்னால் அவள் தன் பொறுமையை இழுத்துப் பிடிப்பது வேறு சிரமமானது.

 

ஆனாலும், கௌதம் தன்னிடம் வந்து ஏதும் பேசாமல் இருப்பதில் அவளுக்குள்  நிம்மதியும் அலைப்புறுதலும் சரிபாதியாக மையமிட, என்றும் இல்லாமல் இன்று அவள் மனதை நிலைநிறுத்துவது அவளுக்கு கடினமாகத்தான் தோன்றியது.

 

கைகளைக் கட்டிக்கொண்டு காரில் ஒய்யாரமாகச் சாய்ந்தபடி, அவளின் தவிப்பைத் தான் அவனும் கவனித்துக் கொண்டிருந்தான். 

 

‘உனக்கு இது தேவைதான்டீ, நல்லா அவஸ்தப்படு. நான் வந்து உன்னை கூப்பிட்டா சும்மா விறைப்பா பிகு பண்ணிப்ப இல்ல. இன்னும் எவ்வளவு நேரம் நீ அங்கேயே நிக்கிறேன்னு நானும் பார்க்கிறேன்.’ கங்காவை வறுத்தெடுத்தபடி அவனும் நின்றிருந்தான்.

 

நிமிடங்கள் நகர நகர, அந்த பாதையில்  ஒரு ஆட்டோ கூட வருவதாகயில்லை. ஒரே இடத்தில் நின்றிருப்பதில் அவள் காலில் வலியெடுப்பது போல வேறு தோன்றியது. மறுபடி திரும்பி மண்டபத்திற்குள் போய் விடலாமா என்று கூட எண்ணிக் கொண்டாள். ஆனாலும் அதை செயல்படுத்தத் தான் அவளுக்கு மனம் வரவில்லை.

 

இன்னும் பத்து நிமிடங்கள் கழிந்த பிறகே ஒரு ஆட்டோ அந்த சாலையில் வந்தது. கங்காவின் கையசைப்பிற்கு நிற்கவும், ஒரு நிம்மதி மூச்சோடு ஆட்டோவின் அருகில் நடந்தாள்.

 

கௌதமின் முகம் மொத்தமாக இருளடைந்து போனது. முகம் சிவக்க, பற்களைக் கடித்து நொறுக்குபவன் போல நறநறத்து அவளை முறைத்து நின்றிருந்தான்.

 

ஆட்டோவில் ஏறும் முன்பு அவனைத் திரும்பிப் பார்த்தவளுக்கு என்னவோ போலானது. உள்ளுக்குள் மனம் கசிந்தது. 

 

கங்கா ஆட்டோ ஓட்டுநரிடம் ஏதோ சொல்ல, அடுத்த நொடி அவளை விட்டு ஆட்டோ நகர்ந்து போனது.

 

கௌதம் சின்ன வியப்புடன் கண்களைச் குறுக்கி அவளைத்தான் பார்த்திருந்தான். 

 

கங்கா அவன் புறம் முழுதாக திரும்பி அவன்மீது நேர் பார்வையைச் செலுத்தி நின்றாள்.

 

அப்போதும் கௌதம் அசையவில்லை. அவளிடமிருந்து பார்வையை விலக்கவும் இல்லை. ‘அவளுக்கும் தனக்கும் இடையில் மிஞ்சிப் போனால் பத்து பதினைந்து அடி இடைவெளி இருக்குமா?’ அவன் மூளை கணக்கிட்டது, ‘இந்த இடைவேளியை விட்டது அவள் தானே, அவளே வந்து குறைக்கட்டும்’ அவன் மனம் வாதிட்டது.

 

சில நொடிகள் தயங்கிய கங்கா, அந்த தார் சாலையில் அவனை நோக்கி முதல் அடியை எடுத்து வைத்தாள்.

 

கௌதம் இதழ்கள் தன்னால் மெல்ல மெல்ல விரிந்தது. ஆனாலும் கூட அவன் அசைந்தானில்லை. கங்கா அவனை நோக்கி தான் வந்தாள்.

 

கருத்த இரவில் கருத்த தார் சாலையில் அவள் மட்டும் மெதுமெதுவாக நடந்து வருவது அவனுக்கு ஏதோ மாய காட்சி போல தோன்றியது. அவளை ரசனையாகப் பார்த்து நின்றிருந்தான்.

 

அவள் தன்னந்தனியாக நடந்து வருகையில், அவளின் சாய்ந்த நடை கூட தனித்தன்மையாகத் தோன்றியது அவனுக்கு.

 

அவனுக்குள் சட்டென ஒரு சந்தேகம் தோன்ற, பார்வையை மேலே உயர்த்தி வானத்தை ஆராய்ந்தான். இருண்ட வானத்தில் வெள்ளிப்பூக்களாக நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்க, வெண்ணிலவு மட்டும் தென்படவில்லை.

 

அந்த வெண்ணிலா பெண் தான் வானிலிருந்து தரையில் குதித்த வேகத்தில், காலில் அடிப்பட்டு சாய்ந்து சாய்ந்து நடந்து வருகிறாளோ! அவனது கற்பனை எங்கெங்கோ பறந்து செல்ல, அதை முடக்கி வைக்கவும் அவன் விரும்பவில்லை.

 

கங்கா அருகே வந்ததும், எதையும் முகத்தில் காட்டாமல் கார் கதவைத் திறந்து வைத்தான். அவனிடம் ஏதோ சொல்ல வந்தவள், அவனது முகம் பார்த்து எதுவும் சொல்லாமல் காருக்குள் ஏறி அமர்ந்து கொண்டாள். அதுவரை பிடித்து வைத்திருந்த சந்தோச புன்னகையைச் சட்டென உதிர்த்தவன், மறுபடி தன் முகத்தை அமைதியாக வைத்தபடி, காரின் மறுபக்கம் வந்து, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை கிளப்பினான்.

 

இரவு சாலையில் அந்த கார் நகர்வேனா என்று ஊர்ந்தது. அவள் பேசுவாள் என்று அவனும், அவன் பேசுவான் என்று அவளும் அமைதி காக்க, அந்த காருக்குள் கலையாத நிசப்தத்தின் சத்தமற்ற ரீங்காரம்.

 

அவள் பேசுவதாக இல்லை என்றுணர்ந்தவன், தானே அந்த அமைதியைக் கலைத்தான்.

 

“எங்க போகணும்?” இறுகிய குரலில் அவன் கேள்வி வர,

 

“விஆர் லாட்ஜ் போகணும்” அவள் சொன்னதும் அவளை முறைத்தவன், காரை எதிர்புறம் திருப்பி செலுத்தினான்.

 

“ராங் ரூட்ல போறதை கூட கவனிக்க மாட்டியா?” அவளை சுர்ரென்று கடிந்து கொண்டான்.

 

“நீங்க அழைச்சிட்டு போகும்போது எனக்கு ரூட் பத்தி எதுக்கு கவலை?” 

 

அதிராத அவள் பதிலில், அவளை ஒருபக்க பார்வையில் கவனித்தவன், “நான்தான் உன்ன பாதியிலேயே விட்டு ஓடி போறவனாச்சே, இப்ப மட்டும் என்ன புதுசா என்மேல நம்பிக்கை?” ஆற்றாமையாக அவள்மீது கேள்வியை வீசினான்.

 

அவள் அன்று, தன்னை சற்றும் நம்பாமல் பேசியதை அவனால் இப்போது வரை ஜீரணிக்கவே முடியவில்லை. அந்த கோபம் அவன் முகத்திலும் வார்த்தையிலும் கூட தெறித்தது.

 

கங்கா அவனுக்கு பதில் தர விழையவில்லை. அவனிடம் திரும்பி அவன் முகத்தை ஒருவித பரிதவிப்போடு பார்த்தவள், அவனது அருகாமையை மனதில் தேக்கிக் கொண்டவளாக இமைகளை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.

 

அவள் இறங்க வேண்டிய இடம் அதற்குள் வந்துவிட, அவளை அத்தனை சீக்கிரம் இறக்கிவிட மனமற்று, தன் காரை மறுபுற‌ கிளைப்பாதையில் திருப்பி சுற்று பாதையில் செலுத்தினான் கௌதம்.

 

அவளைப் பார்த்தான், கண்கள் மூடி இருந்தவளின் முகம் ஆழ்ந்த அமைதியை பிரதிபலித்தது. தன் அமைதியைக் குலைத்துவிட்டு அவள் மட்டும் சலனமற்று இருப்பதில் அவனுக்கு கடுப்பேறியது.

 

அவள்மேல் அவனுக்கு அத்தனை கோபம், ஆத்திரம்,‌ ஆதங்கம், ஆற்றாமை இருந்த போதும், ஏனோ அவளிடம் எதையும் காட்ட மனம் வரவில்லை. முதலிலேயே தன்னால் அதிக வலிகளைப் பட்டு விட்டாள். இனியும் அவளை வேதனைப்படுத்தக்கூடாது என்று தன்னை முயன்று நிதானப்படுத்திக் கொண்டிருந்தான்.

 

அவனது இந்த நிதானத்தை எத்தனை தூரம் அவனால் தாக்குப்பிடிக்க முடியும் என்பதில் அவனுக்கும் சந்தேகமே!

 

இப்போது கூட கங்காவைத் தனியே ஏதேவொரு லாட்ஜில் தங்க விடுவதில் அவனுக்கு துளி கூட விருப்பமில்லை. தான் அழைத்தாலும் அவள் தன்னுடன் வர ஒத்துக்கொள்ள மாட்டாள் என்பதில், அவனுக்கு மேலும் ஆத்திரம் அதிகமானது தான் மிச்சம். அந்த ஆத்திரத்தில் காரின் வேகத்தைக் கூட்டி செலுத்தினான்.

 

சட்டென காரின் வேகம் கூடியதில் கங்கா கண்விழித்து என்னவென்று பார்க்க, கௌதம் முகத்திலிருந்த இறுக்கம் அவளை என்னவோ செய்தது.

 

“கௌதம்…” அவன் பெயரை மெதுவாக உச்சரித்து அழைத்தாள்.

 

அவன் அவள் புறம் திரும்பாமல், “உன்னோட தன்னம்பிக்கையையும், யாரையும் எதிர்பார்க்காம சொந்த கால்ல தனிச்சு நிக்கணும்ற உன் சுயமரியாதையையும் நான் குறை சொல்லல கங்கா, ஆனா, என்கூட வாழ மறுக்கற பாரு… அதுல தெரியறது உன் வறட்டு பிடிவாதம் மட்டும் தான்.”  அவள் மீது காய்ந்தான்.

 

‘வறட்டு பிடிவாதமா? தனக்கா!’ அவளுக்குள் துணுக்குற்றாலும், வெளியே நிர்சலனமான பார்வையை அவன்மீது பதித்திருந்தாள்.

 

அவளின் இந்த அமைதி அவனை மேலும் கடுப்பாக்கியது. அவளிடம் ஏதாவது எதிர்வினை இருந்தால் தானே அவனாலும் அவளைக் கையாள முடியும். இப்படி சின்ன சின்ன இயல்பான உணர்ச்சிகளைக் கூட வெளிக்காட்டாமல், உள்ளுக்குள் கடினப்பட்டு கிடப்பவளை எப்படித் தான் கையாள்வது? 

 

“இப்ப நீ வாழற வாழ்க்கைய நான் குறை சொல்லல கங்கா, என்னோட கைகோர்த்து வா, நாம நம்ம வாழ்க்கைய இன்னும் அழகா, நிறைவா வாழலாம்னு தான் சொல்றேன். உனக்கு புரியலயா? இல்ல புரிஞ்சும் புரியாம உன்ன நீயே ஏமாத்திக்கிறியா?” கௌதம் இன்னும் படபடவென பேச, கங்காவின் முகத்தில் யோசனை ரேகைகள் தென்பட்டன.

 

“உன்ன மட்டும் வச்சு யோசிக்காத கங்கா, உன்னோட என்னையும் சேர்த்து யோசிச்சு பாரேன்… துரதிஷ்டவசமா இத்தனை நாள் என்னால உன்கூட இருக்க முடியாம போச்சு தான், இப்ப நாம சேர்ந்து வாழ வாய்ப்பு கிடைச்சும், நம்ம வாழ்க்கையை வாழ மறுக்கிறது தப்பு கங்கா…” கௌதம் அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.

 

“நம்மளோட இவ்வளவு நீண்ட பிரிவுக்கு நம்ம அப்பா, அம்மா மட்டுமில்ல, நாமளும் தான் முக்கிய காரணம்! அந்த ஒரு நாள்ல உன்ன நானோ, என்னை நீயோ புரிஞ்சிக்க வாய்ப்பு கிடைக்கல. நானாவது உன்ன தேடி அலைஞ்சேன். ஆனா, நீ… என்னோட விசிட்டிங் கார்ட் உன்கிட்ட இருந்ததுதானே, என் நம்பருக்கு ஒரேயொரு கால் பண்ணி இருக்கலாமே…” அவன் ஆதங்கமாக கேட்க, கங்கா வாய் திறந்தாள்.

 

“உங்க கார்ட்ட எப்படியோ தொலைச்சிட்டேன். எத்தனை முறை தேடி பார்த்தும் கடைசி வரைக்கும் கிடைக்கவே இல்ல.” என்று விரக்தியாக பதில் சொன்வளை, ஆறுதலாக இழுத்து அணைத்துக்கொள்ளத் தோன்ற, அன்று போல அவள் விருப்பமின்றி அவளிடம் உரிமை எடுத்துக்கொள்ள அவளது ஒதுக்கம் தடுத்தது.

 

எனவே, தன் கையை ஸ்டீயரிங் வீலில் அடித்துக்கொண்டவன், “பாஸ்ட்ட கிளறி கிளறி பேசுறதால வீண் மன கஷ்டம் தான் மிச்சம். அந்த பாஸ்ட்ட விட்டு வெளிய வா கங்கா. இந்த நிமிஷம் உன் கூட உன் பக்கத்துல நான் இருக்கேன். என்னை பீல் பண்ணு கங்கா… லிவ் இன் த பிரசென்ட்!” அவள் கரத்தை அழுத்தமாய் பற்றி வேண்டினான்.

 

அவள் பதிலின்றி பார்வையைத் தழைத்துக் கொள்ள, அவனுக்குள் கோபம் பெருகியது. அவள் கரத்தைச் சட்டென உதறி விட்டவன்,

 

“இத்தனை நாள் உன் வாழ்க்கைய மத்தவங்க தான் பாழாக்கிட்டு இருந்தாங்க, இப்ப நீயே அதை பாழாக்கிக்கிற போடி!” என்று வெறுப்பாய் அவளிடமிருந்து முகம் திருப்பிக் கொண்டான். 

 

தான் இத்தனை சொல்லியும் தன் பிடிவாதத்தில் நிற்பவள் மேல், தன் மனது விட்டுவிடும் போலானது அவனுக்கு. 

 

கங்கா கண்கள் தளும்ப உதட்டைக் கடித்து தன்னை சமாளித்துக் கொண்டிருக்க, அவளை அப்படி பார்க்கவும் அவனுக்கு இன்னும் கடுப்பேறியது.

 

“இப்ப எதுக்குடி சும்மா அழுது காட்டுற? உனக்கு அழுது வாழ்றது தான் பிடிச்சிருக்குன்னா வாழ்க்கை முழுக்க இப்படியே அழுது சாகு போ!” கௌதம் கோபத்தில் வார்த்தையை விட்டிருந்தான்.

 

தன்னை வெறுத்துப் பேசியவனை வெறுமையாகப் பார்த்தவள், “இதுதான் என் விதி போல கௌதம்… நாம வாழ்க்கையில ஒண்ணு சேரணும்னு விதிக்கப்படல. நாம பிரிஞ்சு வாழத்தான் எழுதி இருக்கு போல!” கங்கா விரக்தியாக மொழியவும், அவளது பேச்சு அவனை மேலும் ஆத்திரமடையச் செய்தது. 

 

“விதி மண்ணாங்கட்டினு உப்பில்லாத கதைய சொல்லி நீதான் உன் வாழ்க்கைய அழிச்சிட்டு இருக்க இப்போ… இப்பவே இந்த காரோடவே உன்ன என் இடத்துக்கு தூக்கிட்டு போக எவ்வளோ நேரம் ஆகும் எனக்கு… ஏன் செய்யாம இருக்கேன், நீ முழுமனசோட என்னோட வாழ வரணும்ன்ற ஒரே காரணத்திற்காக தான். உன்னல்லாம்…” அவள் முகத்திற்கு நேராகக் கையைக் கொண்டு வந்தவன், கங்கா மிரண்டு பார்க்க, “ச்சே…” சலிப்போடு கையை உதறிவிட்டு சாலையில் கவனம் செலுத்தினான்.

 

கங்கா அதற்கு மேல் ஏதும் பேசி அவனை கோபப்படுத்த விரும்பாமல் அமைதியாகிவிட்டாள். ஆனால் அவள் மனது எப்போதும் போல உள்ளுக்குள் ஓலமிட்டது.

 

‘தனக்குத் தான் அவனிடம் சரியாக பேசத் தெரியவில்லையோ? என் மன வலியை அவனால் தான் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லையோ? ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாமல் எது எங்களைத் தடுக்கிறது? சேரவும் முடியாமல் விலகவும் முடியாமல் இப்படி இடையில் தத்தளிக்கும் நிலை, இத்தனை வருட பிரிவை விட பெருவேதனையாக வதைக்கிறதே!’ கங்கா மனம் எங்கெங்கோ முட்டி மோத, அவள் இறங்க வேண்டிய இடமும் வந்திருந்தது.

 

கங்கா அவனைப் பார்க்க, கௌதம்  இருளடர்ந்த முகத்துடன் காரை நிறுத்தி இருந்தான்.

 

அவனை அப்படிப் பார்க்க மனம் தாளாதவள், “அப்பவும் இப்பவும் நீங்க எனக்காக யோசிக்கிறது எனக்கு புரியுது கௌதம்… ஆனா, நீங்க கேக்கற சம்மதத்தை தர… எனக்குள்ள அவ்வளோ பயம் வந்து போகுது!” தயங்கித் தயங்கி அவள் பேசத் தொடங்கவும், அவன் அவளை எரிப்பது போல பார்த்தான்.

 

“நிஜமா உங்கமேல நம்பிக்கை இல்லாம இல்ல, சூடுபட்ட பூனையோட மனநிலையில நான் இருக்கேன்… நிஜமா ரொம்ப ரொம்ப பயப்படுறேன் கௌதம்… என் பயத்தை யாருகிட்ட எப்படி சொல்றதுன்னு கூட எனக்கு தெரியல… 

 

ரெண்டு வருசம் முன்ன வரை என் கஷ்டத்தை சொல்லி அழ, ஆறுதல் சொல்ல தாத்தாவாவது இருந்தாரு… அவருக்கு அப்புறம் எனக்குன்னு யாருமே இல்ல… யாருகிட்டயும் மனசு விட்டு என்னால எதையும் சொல்லி அழவும் முடியல…

 

வீட்டுக்குள்ள எனக்காக யோசிக்கவோ, என்னை தாங்கவோ யாருக்கும் விருப்பமில்ல. மஹா எனக்காக பேசுவா தான்… ஆனா அவ சின்ன பொண்ணு, அவகிட்ட என் கஷ்டத்தை சொல்லி அவளை வேதனைப்படுத்த எனக்கு மனசு வராது.

 

வெளியே யார்கிட்டயாவது சொன்னா, அவங்க என் பலவீனத்தை தப்பா பயன்படுத்துவாங்களோன்னு பயமா இருக்கும். அது ஒருமாதிரி பாதுகாப்பில்லாத உணர்வு கௌதம்! அதனாலயே யாருகிட்டையும் எதையும் சொல்லமாட்டேன்… 

 

வலிச்சாலும் தாங்கிப்பேன், அழுகை வந்தாலும் யார் முன்னாடியும் கண்ணீரைக் காட்ட மாட்டேன். இவ்வளோ பெரிய உலகத்துல நான் மட்டும் தனியா இருக்கிறமாதிரி இருக்கு கௌதம்…” 

 

கலங்கியவளாக கங்கா பேசிக்கொண்டே போக, கேட்டுக் கொண்டிருந்த கௌதமின் நெஞ்சம் அழுத்தினாலும், குறுக்கே ஏதும் பேசாமல் அவளைப் பேசவிட்டான். அவளது மன அழுத்தங்களைக் கொஞ்சமாவது தன்னிடத்தில் இறங்கி வைக்கட்டும் என்று அவளை பேசவிட்டான். தன்னவள் இப்படி தன்னிடம் மனம் திறந்து பேச வேண்டும் என்று தானே அவனும் விரும்புகிறான். 

 

“இன்னைக்கு என்ன நாள்னு உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” அவன் முகத்தை ஏறிட்டு, கங்கா பரிதவிப்பாக கேட்க,

 

இப்போதைய நிலையில் அவனால் எதையும் யோசித்துப் பார்க்க முடியவில்லை. அவனது மனமும் மூளையும் மொத்தமாக துவண்டிருக்க, இல்லையென்று மெதுவாக தலையசைத்தான்.

 

கங்காவின் முகத்தில் வேதனை சாயல் அதிகம் படர்வது போல் தோன்றியது. “இன்னைக்கு… இன்னைக்கு… நம்ம கல்யாண நாள்!” வருத்தம் வழிய சொல்லிவிட்டு கங்கா கண்களை மூடி திறந்தாள்.

 

கௌதம், தன் நெற்றியை அழுத்தி தேய்த்துக் கொண்டான். இன்றைய நாளை மறந்த தன் மடத்தனத்தை தானே உள்ளுக்குள் நொந்து கொள்ளத்தான் முடிந்தது அவனால். இன்றைக்கு என்று அவளை தான் அதிகம் திட்டிவிட்டது வேறு அவனுக்கு வருத்தமேற்றியது. 

 

“சாரி கங்கா, நான் மறக்கல… இந்த ஒன் வீக் வொர்க் டென்ஷன்ல…” அவன் சங்கடமாக அவளுக்கு விளக்கம் சொல்ல முயல,

 

“பரவால்ல கௌதம் விடுங்க. நீங்க சந்தோசமா ஞாபகத்துல பொத்தி வச்சிக்க வேண்டிய லிஸ்ட்ல கண்டிப்பா இந்த நாள் இருக்கப்போறதில்ல… ஆறாத ரணத்தை தந்திருந்தாலும் இந்த நாள் எனக்கு மறக்கப் போறதுமில்ல…” 

 

கங்கா வெறுமையாக சொல்ல, இப்போது கௌதம் பேச்சின்றி அவள்முன் தவித்திருந்தான். 

 

கங்கா முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு, நழுவும் தன் திடத்தை மீட்டுக் கொண்டாள். “இன்னைக்கு உங்கள பார்ப்பேனான்னு மனசு அடிச்சிட்டே இருந்தது… உங்களை பார்த்தது மட்டுமில்ல, அதிகமா பேசிட்டேன்னு கூட நினைக்கிறேன். நான் போறேன், எனக்கு லிஃப்ட் கொடுத்ததுக்கு தேங்க்ஸ் கௌதம்.” 

 

தன் கைப்பையையும் மேக்கப் பையையும் எடுத்துக்கொண்டு கங்கா இறங்கத் தயாராக, கௌதம் காரை உயிர்ப்பித்து வேகமாக சாலையில் பறக்கவிட்டான். 

 

கங்கா திகைத்து, “என்னாச்சு கௌதம்? எங்க போறீங்க இப்ப?” சற்று பதற்றமாகக் கேட்க,

 

“நான் கூட வரும்போது ரூட்ட பத்தி கவலைப்பட மாட்டேன்னு சொன்னல்ல, இப்பவும் கவலைப்படாத.” 

 

அவன் அழுத்தமான குரலில் சொன்னதை எப்படி எடுத்துக்கொள்ளவென்று அவளுக்கு புரியவில்லை. 

 

***

 

பெண் வருவாள்…

 

(காத்திருந்து படித்து விருப்பங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்… அடுத்த பதிவு விரைவில்…)