ஏன் பெண்ணென்று பிறந்தேன் 23

IMG-20211007-WA0009 (1)-f79105c2

ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 23 

 

இரவின் வெறிச்சோடிக் கிடந்த சாலையில், கௌதம் தன் விருப்பம் போல் காரை பறக்கவிட்டிருந்தான். 

 

சென்ற வாரம் கூட, அவனுக்கு திருமண நாள் நன்றாகவே நினைவில் இருந்தது. அதற்குள் அடுத்தடுத்த பிரச்சனைகள், தொழில் சம்பந்தமாக, திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் என்று அவனை அழுத்தியதில், இன்றைய நாளை எங்கோ மனதின் மூலையில் தொலைத்து விட்டிருந்தான்.

 

இன்று காலையில் தான் சென்னைக்கு வந்து இறங்கி இருந்தான். அசதியில் சற்று ஓய்வு எடுத்தவனுக்கு அடுத்தடுத்த தொழிற்முறை சந்திப்புகள் வரிசை கட்டி நின்றன. இதற்கிடையில் தனது கல்லூரி நண்பனின் திருமண வரவேற்பை தட்டிக்கழிக்க முடியாமல்தான் வந்திருந்தான். எதிர்பாராத விதமாக அங்கே கங்காவை பார்த்தது அவனுக்கு இன்ப அதிர்ச்சிதான்.

 

உடனே அவளை நோக்கி அடியெடுத்து வைத்த கால்களை அதட்டி அடக்கி விட்டான். இப்போது அவளை தேடிச்சென்று பேசினாலும் அவள் முகம் கொடுத்து பேசுவாளா என்ற சந்தேகம் அவனுக்கு. மேலும் இத்தனை பேர் முன்னால் அவள் சங்கடமாகவும் கூடும் என்றெண்ணி, அவளை கண்டும் காணாமல் இருந்து கொண்டான். 

 

ஆனாலும் அவள் கண்கள் தன்னைக் காண அலைப்பாய்வதைக் கண்டவனுக்கு, உள்ளுக்குள்ளே பனிமழை பொழியும் உணர்வு. 

 

அவனுக்குத்தான் முன்பே தெரியுமே கங்காவிற்கு அவனை எத்தனை பிடிக்குமென்று. இல்லையென்றால் விட்டுப்போனக் கணவன் கட்டிய தாலியை இன்னும் பொக்கிஷமாக அணிந்திருப்பாளா என்ன?

 

அவள் அந்த தாலிக்காக ஆயிரம் காரணங்களை அடுக்கினாலும், அதில் முதல் காரணம் அவன் உரிமையோடு அவளுக்கு பூட்டியது அது என்பதால்தானே.

 

கௌதமுடைய இத்தனை அதீத பொறுமைக்கு காரணம் கூட, கங்கா அவன் மீது கொண்டிருக்கும் நேசத்தின் ஆழத்தை அவனுமே உணர்ந்திருப்பதால் தானே.

 

இருந்தும் அவளைத் தன்னுடன் வர எது தடுக்கிறது என்பதுதான் அவனுக்கு இதுவரை புரிந்திருக்கவில்லை. இப்போது அதுவும் ஓரளவு அவனுக்கு புரிந்துவிட்டது. அது கங்காவின் பயம்.

 

அன்று திருமண நாளில் அவளுக்கு ஏற்பட்ட அடுத்தடுத்த அவமானங்களும், அதனை தொடர்ந்த உதாசீனங்களும் அவளை விரக்தி மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறது என்பதை அவள் பேசும்போதே அவனாலும் உணர முடிந்தது.

 

அவளின் இவ்வித பயத்தையும், விரக்தி மனப்பான்மையையும், அவளை தன்னருகே இருத்திக் கொண்டுதான் மெல்ல மெல்ல மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்துத்தான் அவளை இப்போது அழைத்துச் செல்கிறான்.

 

இருளின் பக்கம் நின்று வெளிச்சத்தைப் பார்க்க பயம் கொள்ளும் பேதையாய் அவளிருக்க, அவளது கரம் பற்றி வெளிச்சத்தின் பாதையில் அழைத்துச் செல்லும் பெருந்துணையாய் இனி தானிருக்க வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டான் கௌதம்.

 

“எங்க போறோம்னு சொல்லிட்டாவது கூட்டிட்டு போங்க கௌதம், இப்படி எதுவும் சொல்லாம அழைச்சிட்டு போனா என்ன அர்த்தம்?” கங்கா பொறுமையற்று அவனிடம் கேட்க,

 

அவள் பக்கம் சற்றே சாய்ந்தவன், “உன்ன கடத்திட்டு போறேன்.” என்று சொல்லி கண்சிமிட்டி புன்னகைத்தான்.

 

தன்மேல் சாய்ந்தவனைத் தள்ளிவிட்டு, கதவோடு ஒன்றிக்கொண்டவள், “நீங்க விளையாடறதுக்கு நேரங்காலம் இல்லயா? மார்னிங் நாலு மணிக்கெல்லாம் கல்யாணப் பொண்ணுக்கு மேக்கப் ஸ்டார்ட் பண்ணணும் கௌதம். இப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா தான் எர்லி மார்னிங் எழ சரியா இருக்கும், உங்க விளையாட்டை ஓரங்கட்டி வச்சுட்டு என்னை ஓட்டல்ல விடுங்க ப்ளீஸ்.” கங்கா அவனிடம் தன் நிலையை எடுத்துரைத்தாள். 

 

“மார்னிங் ஃபோர் ஓ கிளாக் உன்ன மண்டபத்துல விடறது என் பொறுப்பு.” எனறவன், கதவோடு ஒட்டி இருந்தவளை இழுத்து நேராக அமர வைக்க, அவள் சங்கடமாகப் பார்த்தாள்.

 

அவள் தலையில் செல்லமாகத் தட்டியவன், “சரியான மக்கு மந்தாரம்டீ நீ!” என்று கேலி பேசி சிரித்து வைத்தான்.

 

அவனை முறைக்க முயன்றவள் முடியாமல் வெளிப்புறம் பார்வையைத் திருப்பிக் கொண்டாள். அவனது சகஜமான சீண்டலுக்கு கூட தன் மனம் படபடப்பதை அவளால் உணர முடிந்தது. ‘கௌதம் சொல்வது போல தான் மக்கு மந்தாரம்தான் போல.’ என்று எண்ணிக்கொண்டு மௌனத்தைப் பூட்டி கொண்டாள்.

 

அவள் மறுபடி மோன நிலைக்குப் போனதைக் கவனித்தவன், சலிப்பாக தலையசைத்துவிட்டு, சாலையில் கவனத்தைச் செலுத்தினான்.

 

கிட்டத்தட்ட நாற்பது நிமிட பயணத்திற்குப்பிறகு, அவனது வில்லாவின் போர்டிக்கோவில் காரை நிறுத்திவிட்டு திரும்பி பார்த்தான். கங்கா இருக்கையில் அமர்ந்தபடியே உறங்கிப் போயிருந்தாள்.

 

அவள் முகத்தை வாஞ்சையாகப் பார்த்தவன், காரிலிருந்து இறங்கி மறுபக்கம் கதவைத் திறந்து அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டான்.

 

அவன் தூக்கிக் கொண்டதும் விழித்துக் கொண்டவள், “ஐயோ கௌதம்… என்ன பண்றீங்க நீங்க? என்னை கீழ விடுங்க.” அவள் பதறி இறங்க முயல,‌ 

 

அவளை நழுவ விடாமல் பிடித்துக் கொண்டவன், “ஷூ… கங்கா கத்தாத, வீட்டுல வேலைக்காரங்க எல்லாம் இருக்காங்க. அப்புறம் என்னை பொறுக்கின்னு நினச்சுப்பாங்க.” கௌதம் எச்சரிக்க, கப்பென வாய்மூடி அமைதியானாள்.

 

“குட்” அவளை மெச்சியபடி அவன் நடக்க, “நம்மள இப்படி பார்த்தா கூட அவங்க நம்மள தப்பா தான் நினைப்பாங்க, ப்ளீஸ் என்னை இறக்கி விடுங்க.” கங்கா குரலைத் தாழ்த்தி அவனிடம் கெஞ்சவும்,

 

இதழ் மடிப்பில் சிரிப்பை அடக்கியபடி அவளை மெதுவாக தரையில் நிற்க வைத்தவன், “ம்ம் உனக்கும் நம்ம வீட்டுக்குள்ள முதல் முறை வரும்போது வலது கால் எடுத்து வச்சு வரணும்னு சென்டிமென்ட் இருக்கும் இல்ல. வெல்கம் டூ அவர் ஹோம்…!” அவளை வரவேற்றான்.

 

“உங்க வீடா…!” என்று அதிர்ந்து கேட்டவளின் குரல் பயத்தில் இறங்கி ஒலித்தது. 

 

“இப்ப தான சொன்னேன் நம்ம வீடுன்னு.” கௌதம் அவளைத் திருத்தினான்.

 

பார்வையை உயர்த்தி அந்த வீட்டை கலவரத்துடன் பார்த்தாள். பாதிக்கு மேல் இருள் போர்த்தி இருக்க, அவளுக்கு எதுவும் சரியாக தெரியவில்லை. 

 

அதே கலவரத்துடன் கௌதமைப் பார்த்தவள், “வாங்க சீக்கிரம் இங்கிருந்து போயிடலாம். என்னை உங்க அம்மா, அப்பா பார்த்தா கோபப்படுவாங்க.” என்று பதற்றமாக திரும்பி செல்ல முயன்றவளை, இழுத்துப் பிடித்து நிறுத்தியவன், 

“ஏய்… அவங்க யாரும் இங்க இல்ல. நான் தான் உன்கூட இருக்கேன்ல்ல, ஏன் இப்படி பயப்படுற?” அடி குரலில் அவளை அதட்டினான்.

 

அவனது தோளைணைப்பில் இருந்தபடி நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள், “அவங்களை பார்த்ததும் நீங்க என்னைவிட்டு அவங்க கூட போயிடுவீங்க.” அவள் பரிதவித்து சொன்னதும், கௌதம் உள்ளுக்குள் நொறுங்கிப் போனான்.

 

“தப்புதான்… இனி எதுக்காகவும் உன்ன விடமாட்டேன் கங்கா, ப்ராமிஸ்.” கௌதம் கரகரத்த குரலில் உறுதி கூறினான்.

 

அவனது தவித்த குரலில், அவனை தயங்கி பார்த்திருந்ததவள், “அது… பரவால்ல கௌதம்! நாம வேறெங்காவது போகலாமா…? இங்க வேணாம்.” மறுத்துக் கூற,

 

கண்களை அழுத்த மூடி திறந்தவன், “இங்க உனக்காக ஒரு சர்பிரைஸ் இருக்கு கங்கா… அதை மட்டும் வந்து பாரேன்.” கௌதம் கெஞ்சுவது போல அழைக்கவும், மிகுந்த தயக்கத்துடன் தான் அவனுடன் வீட்டுக்குள் நடந்தாள்.

 

வீட்டின் உட்புற அமைப்பு கண்களைக் கவர்வது போல வெகு அழகாய் இருந்தது. ஆனால் அதை ரசிக்கும் மனநிலையில் தான் அவள் இல்லை. 

 

“மேல வா… ஸ்டெப்ஸ் ஏற முடியும் இல்ல?” மாடியைக் கைகாட்டி அவன் வினவ, கங்கா தலையசைத்து, அவனுடன் மெதுவாக படிகளில் ஏறினாள்.

 

கங்காவை தன் வீட்டிற்கு அழைத்துப் போகிறேன் என்று சற்றுமுன் அவனுள் மண்டியிருந்த உற்சாகமெல்லாம், கங்காவின் ஒற்றை கேள்வியில் மொத்தமாக வடிந்திருந்தது அவனுக்கு. 

 

‘ஏன் தங்களுக்கு மட்டும் இந்த நிலை? எங்கே எப்படி தவறு நேர்ந்தது? தங்களின் அழகான மணவாழ்க்கை இத்தனை சிக்கலாக ஏன் மாறிப்போனது?’ அவன் உள்ளுக்குள் வெதும்பினான்.

 

மாடியில் பக்கத்திற்கு ஒன்றாக மூன்று அறைகள் இருந்தன. எல்லா அறையின் கதவுக்கு மேலும் சிறிய மின்விளக்கின் வண்ண ஒளி கசிந்து கொண்டிருந்தது. அதையெல்லாம் கவனித்தவளுக்கு, அங்கு எதிலும் மனம் ஒன்ற மறுத்தது. 

 

“என்ன சர்பிரைஸ் கௌதம்? நான் சீக்கிரம் போகணுமே… இப்பவே பதினொரு மணி ஆச்சு.” கங்கா கவலையாக அவனிடம் சொல்ல, கௌதம் அவளுக்கு பதில் தரவில்லை. 

 

பிடித்திருந்த அவள் கையை விடாமல், முதலில் இருந்த அறைக்கு முன் வந்தவன் கதவைத் திறந்து, உள்ளே அழைத்து வந்தான்.

 

அந்த அறையும் அரை இருளில் தான் இருந்தது. கங்கா, அவன் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு சுற்றும் முற்றும் கலவரமாகப் பார்க்க, அவன் சுவிட்சை அழுத்தியதும், மின்னலாய் அந்த அறை முழுவதும் ஒளிவெள்ளம் பரவியது. 

 

கங்காவின் கண்கள் கூசி பின் நேராக, அவள் எதிரே கண்ட காட்சியில் மொத்தமாக நெகிழ்ந்து போனாள். நம்பமுடியாத ஆச்சரியத்துடன் அவள் விழிகள் விரிய, கௌதம் கரத்தை விடுத்து, அதைப் பார்த்தபடியே முன்னேறிச் சென்றாள்.

 

கங்காவின் முக பாவனையைப் பார்த்திருந்தவனுக்கும் மனது லேசான உணர்வு. இதுவரை முடிந்த கசப்பான நிகழ்வுகளைத் தாண்டியும் தங்கள் உறவு கெட்டிப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை மீண்டிருந்தது அவனுக்கு. கௌதம் இப்போது கங்காவை கனிவாய் பார்த்து நின்றான். 

 

கௌதம் கங்காவின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டும் தருணத்தின் நிழற்படம், பெரிதாக அழகாய் பிரேம் செய்யப்பட்டு, அவனது அறையின் நேர்பக்க சுவரின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. கங்கா அதைத்தான் சற்று எக்கி, மென்மையாய் வருடி, அத்தனை நெகிழ்ச்சியாகப் பார்த்திருந்தாள்.

 

அந்த நிழற்படத்தில் கங்கா, சின்ன பெண்ணாய் தெரிந்தாள். முகத்தில் அழுத தடத்தைக் கூட மறைக்காமல், ஒட்டிய அவள் தேகத்தை மேலும் ஒடுங்கியபடி, தலையை முழுவதுமாக குனிந்திருக்க, யாரோ பெண்மணியின் கை போட்டோவிற்காக அவள் முகத்தை நிமிர்த்தி பிடித்திருந்தது. சிவந்திருந்த அவள் கண்களில் கண்ணீர் தடம் கூட அப்படியே பதிவாகி இருந்தது. 

 

தன்னைத்தானே பார்த்துச் சிரித்துக் கொண்டவள், அவளருகே சற்று சாய்ந்து அமர்ந்தபடி, தெளிந்த முகத்துடன் அவள் கழுத்தில் பாந்தமாய் தங்கத்தாலியைப் பூட்டிக்கொண்டிருந்த கௌதம் முகத்தைப் பார்த்தவள், நிழற்படத்தில் அவனை மென்மையாய் வருடித் தந்தாள். 

 

கங்காவிற்கு ஏனோ இந்த கணம் கனவு போல தோன்றியது. கனவல்ல நிஜம் என்பதைப்போல், கௌதம் பின்னிருந்து அவளை மென்மையாய் அணைத்தபடி, அவளோடு சேர்ந்து அந்த நிழற்படத்தைப் பார்த்தான்.

 

“உனக்கு இந்த சர்பிரைஸ் பிடிச்சிருக்கா கங்கா? நீ ஹேப்பி தானே?” கௌதம் அவள் காதருகே குனிந்து இசைவாய் கேட்க, “ம்ம்…” நெகிழ்ந்த நெஞ்சத்தோடு தலையசைத்தாள்.

 

கௌதம் இன்னும் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி கொள்ள, கங்கா அவன் கை அணைவுக்குள் சுழன்று திரும்பி அவன் முகம் பார்த்தாள். 

 

“இந்த போட்டோ… இந்த போட்டோ… உங்களுக்கு எப்படி…? நான் கூட…” திக்கித் திணறி தடுமாறியவளை, ஆறுதலாக அணைத்துக் கொண்டவன்,

 

“ஹே ரிலாக்ஸ் கங்கா…” அவள் முதுகைத் தட்டி வருடிக் கொடுத்தான். அவள் இத்தனை உணர்ச்சி வசப்படுவாள் என்று அவனும் எதிர்பார்த்திருக்கவில்லை. கௌதமின் அணைப்பில் இருப்பதைக் கூட உணர முடியாமல், உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்திருந்தாள் அவள்.

 

அவன் முகத்தை ஏறிட்டவள், “எப்படி கிடைச்சது உங்களுக்கு?” ஆர்வமாகக் கேட்க, 

 

கேளாமல் கிடைக்கப்பெற்ற அவளின் இத்தனை நெருக்கத்தை ரசித்தவன்,‌ இதமாய் இதழ் மலர்ந்தான். 

 

“உன்ன தேடி அலைஞ்சதா சொன்னேன் இல்ல, அப்போ தான் நம்ம கல்யாணத்துக்கு போட்டோ எடுத்த போட்டோகிராபரையும் தேடி புடிச்சேன். அவனுக்கும் நீங்கெல்லாம் எங்க போனீங்கன்ற விவரம் தெரியல. உன் தங்கச்சியோட கல்யாண போட்டோஸ் மட்டும் யாரோ வந்து வாங்கிட்டு போனதா சொன்னவன், நம்ம கல்யாண போட்டோஸ அவங்க வேணாம்னு சொல்லிட்டதா சொல்லி என்கிட்ட கொடுத்தான்…

 

அப்ப எனக்கு நிஜமா ரொம்ப கஷ்டமா இருந்தது… நீ என்னை வேணாம்னு முடிவெடுத்து தான் மேரேஜ் ஃபோட்டோஸ் கூட வாங்காம போயிட்டியோன்னு உன்மேல கோபம் கூட வந்தது…”

 

கௌதம் சொல்லிக்கொண்டே போக, கங்கா அவன் சொல்வதை விழியசையாமல் கேட்டுக்கொண்டே இருந்தாள்.

 

அவளது நெற்றியில் வழிந்த முடிக்கற்றைகளை மென்மையாய் விலக்கி விட்டவன், “ஒன் டைம் நீ கிடைக்காம நான் ரொம்ப டென்ஷன்ல இருந்தேனா… உன்மேல செம கோபம் வேற… அன்னிக்கு கோபத்துல இருந்த எல்லா போட்டோஸையும் கிழிச்சு போட்டுட்டேன்! என்னவோ இந்த ஒரு ஃபோட்டோவ மட்டும் கிழிக்க மனசு வராம தூக்கி மூலையில் போட்டு வச்சிருந்தேன்.”

 

அவன் சொல்ல சொல்ல கங்காவின் முகம் வாடியது. அவனிடமிருந்து விலகி நின்றாள். அவனும் அவளை தடுக்கவில்லை. 

 

“அப்ப ஏதோ கோவத்துல கிழிச்சி போட்டேன்டீ. இப்ப எனக்கும் ஃபீலிங்கா தான் இருக்கு… இப்ப எனக்கு உண்மை தெரிஞ்ச அப்புறம், நீ மட்டுந்தான் எனக்கு எல்லாம்னு முடிவெடுத்தப் பிறகுதான், தேடி எடுத்து இந்த போட்டோவ பெருசா ஃபீரேம் பண்ணி… நம்ம பெட்ரூம்ல மாட்டினேன்.” 

 

கௌதம் விளக்கமாக அவளுக்கு விளக்கவும், கங்காவின் முகம் கூம்பிப்போனது. மறுபடி திரும்பி அந்த நிழற்படத்தையே இமை அசையாது பார்த்தாள்.

 

அவனும் அவளை தொந்தரவு செய்யவில்லை. இருவருக்கு குடிக்க ஏதாவது எடுத்து வர உத்தரவிட்டு வந்தவன், அவள் இன்னும் அப்படியே நின்றிருக்க, “நீ பார்த்தது போதும் வாடி, இனி லைஃப் லாங் அதை தான் பார்த்திட்டு இருக்கப்போற.” என்று அவன் கேலி பேசியும் அவள் பார்வையைத் திருப்பாமல் நின்றிருக்க, 

 

அருகில் வந்து அவளது தோள் பற்றி காதருகே குனிந்தவன், “இன்னும் எவ்வளோ நேரம் இப்படியே நின்னுட்டு இருப்ப, வந்து ரெஸ்ட் எடு. காலையில சீக்கிரம் எழணும்னு சொன்னல்ல.” என்றான்.

 

“எனக்கு… இந்த ஃபோட்டோவ தரீங்களா கௌதம்?” அவள் குரல் கலங்கி கேட்க, கௌதம் அவன் முன்னால் சென்று அவள் முகத்தை பார்த்தான். அவள் விழிகள் கலங்கி இருந்தது.

 

“ஹே லூசு… இப்ப எதுக்குடி அழற?” அவளை அதட்டினான்.

 

“என்கிட்ட… உங்களோட… ஒரு… போட்டோ கூட… இல்ல!” அவள் தேம்பலோடு சொல்ல,

 

“அதான் நான் முழுசா உன் முன்னாடி இருக்கேன்லடி, ஃபோட்டோ எதுக்கு எக்ஸ்ட்ராவா?” என்று அவளை தேற்றுபவனாக, அவளது இடக்கன்னத்தில் கரம் பதித்து, அவளது முன்னுச்சியில் இதமாய் இதழ் பதித்தான்.

 

“இப்படி ஒவ்வொன்னா நினச்சு நினச்சு கவலைப்பட்டு அழறதை முதல்ல விடு கங்கா… முடிஞ்சு போன எதையும் உன்னாலயோ என்னாலயோ மாத்தி அமைக்க முடியாது. ஆனா இப்ப, இந்த நிமிஷத்தை, நமக்கு பிடிச்ச மாதிரி ரொம்ப அழகா மாத்த முடியும்! மாத்த…லா…மா?” 

 

குறும்புடன் கேட்டபடி அவள் முகம் நோக்கி தாழ, மிரண்டு போனவள் அவனிடமிருந்து விலகி நின்று கொண்டாள். அவளது மிரட்சியைக் கண்டு கௌதம் சிரித்து வைக்க, கங்கா அவனை முறைத்து வைத்தாள்.

 

“இதுக்காகத் தான் என்னை இங்க அழைச்சிட்டு வந்தீங்களா? உங்கள ரொம்ப நல்லவர்னு நினச்சிருந்தேன்.” தன் இடையில் கையூன்றி அவனிடம் படபடத்தவளைப் பார்த்து அவன் இன்னும் சத்தமாக சிரித்தான்.

 

அவளது கை சந்தில் தன் கைவிட்டு அவளை தன் அருகில் இழுத்துக் கொண்டவன், “ஃபர்ஸ்ட் நைட்ல, புது பொண்டாட்டி கிட்ட புருசன் எவ்வ்வ்…ளோ நல்லவனா நடந்துப்பான்னு நான் சொல்லட்டா?” 

 

கண்களில் சிரித்து தன்னை வம்பிழுப்பவனைப் மேலும் முறைத்தவள், “உங்க பேச்சே சரியில்ல கௌதம்… முதல்ல நாம கிளம்பலாம் வாங்க.” என்று நகர்ந்தவளை அவன் பிடித்து நிறுத்தினான்.

 

“உன்ன கிளம்ப விடுற ஐடியா எல்லாம் எனக்கில்ல. பாலை குடிச்சிட்டு போய் தூங்கு. மார்னிங் உன்ன மண்டபத்துக்கு அழைச்சிட்டு போறேன்.”  அவள் கையில் பால் டம்ளரை திணித்து தனக்கானதை எடுத்துக் கொண்டான்.

 

கங்கா தயக்கத்துடன் பாலை பருகினாள். இப்படி யாருக்கும் தெரியாமல் இருவரும் ஒன்றாகத் தங்குவது அத்தனை சரியில்லை என்று அவள் மனதிற்குப் பட்டது.

 

“கௌதம்… நான் வேற ரூம்ல தூங்கிக்கிறனே, இங்க தான் நிறைய ரூம்ஸ் இருக்குல்ல.” அவனிடம் கேட்டாள்.

 

“எதுக்கு? என்னோட ஒரே ரூம்ல இருக்கறதுல உனக்கென்ன கஷ்டம்?” கடுப்பாகத்தான் அவனிடமிருந்து பதில் கேள்வி வந்தது.

 

“அது… என்ன இருந்தாலும் யாருக்கும் தெரியாம, நாம இப்படி… தனியா இருக்கறது தப்புன்னு தோணுது.” கங்கா சங்கடமாகச் சொல்ல,

 

நெற்றி தசைகள் சுருங்க அவளை கூர்ந்தவன், “ஓஹ்… அப்ப நாம சேர்ந்து இருக்க யாருகிட்ட பர்மிஷன் கேக்கணும்னு சொல்ற கங்கா? உன் வாழ்க்கைய விட பணத்தை பெருசா நினைக்கிற உன் அம்மா, அப்பா கிட்டயா? இல்ல நானும் நீயும் சேரவே கூடாதுன்னு பிடிவாதமா இருக்கிற என் அம்மா, அப்பா கிட்டயா?” என்று காட்டமாகக் கேட்டான். 

 

அவள் பதிலின்றி தயங்கி நிற்கவும்,‌ அவளை நெருங்கி வந்தவன், “நீயும் நானும் சேர்ந்து இருக்க, உன்னோட விருப்பத்தைத் தவிர, எனக்கு வேற யாரோட பர்மிஷனும் தேவையில்லைடீ. உனக்கு பிடிக்கலனா சொல்லு நான் மொத்தமா விலகிக்கிறேன்! என்னை உனக்கு பிடிக்கலையா?” அவள் கண்களை நேராக கூர்ந்து, அழுத்தமாக கேட்டான்.

 

அவன் பார்வையின் கூர்மையில் அவள் விழிகளின் கருமணிகள் தள்ளாடின. தான் அவனை கோபப்படுத்தி விட்டது அவளுக்கு புரிய, அவனை எப்படி சமாதானம் செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை.

 

கௌதம் இன்னுமே பார்வையை விலக்காமல் அவளது பதிலுக்காக காத்திருக்க, அவனிடம் சொல்ல அவளிடம் வார்த்தைகளில் பதிலிருக்கவில்லை. அவன் நெஞ்சில் தன் முகத்தை புதைத்துக் கொண்டாள். 

 

இந்த நொடிக்காகவே காத்திருந்ததைப் போல, அவன் கைகளும் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டன இறுக்கமாய்.

 

அவர்களிடையே வார்த்தை பரிமாற்றங்கள் அவசியமற்று போயிருக்க, தங்கள் உயிர் துணையின் அருகாமையில் நிறைந்து போய் நின்றிருந்தனர்.

 

நெடுங்கால காத்திருப்பிற்குப் பிறகு அவர்களுக்கு வாய்க்கப்பட்ட நெருக்கம், நெடுந் தவத்திற்குப் பிறகு பெற்ற பெருவரமாய்.

 

அந்த இதமான நொடிகளில் இன்பத்தைச் சேர்க்க விழைபவன் போல, தன் நெஞ்சில் பதிந்திருந்த அவள் முகம் நிமிர்த்தி, அவள் பூமுகம் முழுவதும் தன் இதழ் தடத்தை இலக்கின்றி பதித்து வைத்தவன், இளைப்பாறலாய் அவளது மென் இதழோடு இதழணைத்துக் கொண்டான். 

 

அன்றைக்குப் போல இதமாய் இங்கிதமாக அல்லாமல், அழுத்தமாய் ஆவேசமாய் அவன் முற்றுகையிட, கங்கா திணறிப்போனாள்.

 

அவனில் லயிக்கவும் இயலாமல் விலக்கவும் இயலாமல் அவள் நிலை ஊசலாடியது. அவனது கரங்களும் அவள் மேனியில் அலைப்பாய துவங்க, திடுக்கிட்டவள், “இது… இதெல்லாம் தப்பு கௌதம்…” அவளின் மென்குரல் மேலும் தேய்ந்திட, முணுமுணுப்பாகத் தான் கேட்டது.

 

“நமக்குள்ள எந்த தப்பும் தப்பில்லடி…” கிறக்கமாக வழிந்தது அவன் குரல்.

 

“இப்ப… இப்படி… இது வேணாமே…” அவளது பெண்மை வெகுவாக தயக்கம் காட்டியது.

 

“ஏன்டீ?” இதற்கு மேலும் பொறுமையற்றவனாக, அவளை அணுஅணுவாக களவாடிக் கொண்டிருந்தான் அவன்.

 

“நான்… சொல்றதை நீங்க…” 

 

“ப்ச் ஆர்கியூ பண்ற டைமா இது? என்னை ஃபீல் பண்ணுடி!” அவளது தயக்கங்களையும் தடுமாற்றங்களையும் மறுப்புகளையும் தகர்த்தவன், தன்னவளை முழுதாக அள்ளிக் கொள்ளவே விழைந்தான்.

 

இதயத்தின் தடதடப்போடு தன்னவன் கரங்களில் தன்னை ஈந்தவளின் வியக்கும் பெண்ணழகை கண்முன் களவாடும் ரசிகனாய் அவன்!

 

ஆழியிலே முக்குளிக்கும் அழகே!

ஆவியிலே தத்தளிக்கும் அழகே!

உன் குழலோடு விளையாடும் 

காற்றாக உருமாறி

முந்தானை படியேறவா 

மூச்சோடு குடியேறவா

உன் இடையோடு நடமாடும் 

உடையாக நான் மாறி 

எந்நாளும் சூடேறவா

என் ஜென்மம் ஈடேறவா…

 

உன் திம்மென்ற கன்னத்தில்

திம்மென்ற நெஞ்சத்தில் 

இச்சென்று இதழ் வைக்கவா

இச்சைக்கோர் விலை வைக்கவா

 

உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும்

இப்போதே தடை வைக்கவா

மௌனத்தில் குடி வைக்கவா

 

அகம் பாதி முகம் பாதி

நகம் பாயும் சுகம் மீதி

மறைத்தாலும் மறக்காது அழகே…

 

அடிவானம் சிவந்தாலும் 

கொடிப்பூக்கள் பிளந்தாலும்

உனைப் போல இருக்காது அழகே…

அழகே… அழகே… வியக்கும் அழகே…

 

***

பெண் வருவாள்…