ஏன் பெண்ணென்று பிறந்தேன் 24(1) (pre final 1)

IMG-20211007-WA0009 (1)-8d11131f

ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 24(1) (pre final 1)

 

நேர்த்தியாக சேலை மடிப்புகளை நேர்படுத்தி விட்டபடி, கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள் கங்கா.

 

எப்போதும் போல அச்சடித்த அவளது தோற்றம் தான் கண்ணாடியில் தெரிந்தது. ஆனால், இன்று வழக்கத்திற்கு மாறாக வெளுத்து போயிருந்த அவள் முகமும், சிவப்பேறி இருந்த கண்களும், சற்றே தடித்திருந்த இதழ்களும், வித்தியாசத்தை பறை சாற்ற, அதற்கு காரணமானவனைத் திரும்பி முறைத்து வைத்தாள்.

 

கலைந்து கிடந்த மெத்தையில், தலைக்கு கையூன்றி அவளை ரசனையாகப் பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு, அவளது முறைப்பு சிரிப்பை உண்டாக்கியது.

 

“என்னடீ மொறப்பு?” கௌதம் அவளை வேண்டுமென்றே சீண்ட,

 

“மொறைக்காம உங்களுக்கென்ன முத்தமா கொடுக்க சொல்றீங்க?” கங்கா சிடுசிடுத்தாள்.

 

“கொடுக்கலாமே… நோ அப்ஜக்ஷன்.” என்று கண்சிமிட்டியவன் மேல் அவளிடமிருந்து தலையணை பறந்து வர,

 

அதை லாவகமாகப் பிடித்தவன், “ஏய், ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சு பொண்ணுங்க வெட்கப்படுவாங்க, கூச்சப்படுவாங்க, நீ என்னனா முறைக்கிற, அடிக்கிற ராட்சசி!” என்று அவளை மேலும் வம்புக்கழைத்தான்.

 

“பேசாதீங்க கௌதம். எல்லாத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு நடத்திக்கிறதே உங்க வேலையா போச்சு. அன்னைக்கு நம்ம கல்யாணத்திலயும் அப்படித்தான், நேத்து நைட்டும் அப்படித்தான்…” அவன்மீது குற்றம் சாட்டினாள் கங்கா.

 

“வெட்டியா நாலு வருசத்தை கழிச்சாச்சு, நேத்து நைட் முழுக்க உன்ன சும்மா பக்கத்துல வச்சு பொம்ம கதை காட்ட நான் என்னை லூசாடீ?” அவனும் வம்பாக பேச, கங்காவால் பதில் பேச முடியவில்லை. அவனை மேலும் முறைக்கத்தான் முடிந்தது.

 

“முதல்ல நீங்க எழுந்து ரெடி ஆகுங்க, எனக்கு டைம் ஆகுது.” அவனை அவசரப்படுத்தி பேச்சை மாற்ற முயன்றாள். 

 

“போடிங்க… உன் சின்சியாரிட்டில தீய வைக்க.” அவன் போர்வையை நன்றாக இழுத்துப் போர்த்திக்கொள்ள, கங்கா இப்போது இறங்கி வந்தாள்.

 

“ப்ளீஸ் கௌதம், நான் போய் தான் ஆகணும். வரமுடியாதுன்னு எல்லாம் இப்ப சொல்ல முடியாது, கல்யாணப் பொண்ணு எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. என்னை டிராப் பண்ணுங்க ப்ளீஸ்…” 

 

அவள் கெஞ்சலில் அவனும் வேண்டா வெறுப்பாக தலையசைத்தபடி, அவளை நெருங்கி நின்றவன் பெருமூச்செறிந்தான். “விடிஞ்சும் விடியாம இப்படி ஃபிரஷ்ஷா குளிச்சிட்டு நிக்கிறியேடீ… எனக்கு அப்படியே உன்ன…” அவளை இடையோடு வளைத்து இழுத்து, தாமதிக்காமல் அவள் தேனிதழ்களில் தன் தாகம் தீர்த்துக்கொள்ள முயன்றான்.  

 

அவன் முற்றுகையில் திணறிப் போனவள், அவன் முற்றுகை முடியாமல் நீளவும் உணர்ச்சி பெருக்கில் கிறங்கி நின்றாள். அதுவும் போதாமல் அவன் கைகள் அவளை கட்டவிழ்க்க முயல, சுதாரித்து விலகிக் கொண்டாள்.

 

“ப்ச் கங்கா…” சிணுங்கியபடி யாசித்து அடம்பிடித்தவனை, வலுக்கட்டாயமாக குளியலறைக்குள் தள்ளி கதவைச் சாத்திய பின்னர், தன்னையும் மீறி அவளுக்கு சிரிப்பு வந்திருந்தது.

 

“கதவை திறடி, இப்ப குளிக்கிற மூட் சுத்தமா இல்ல எனக்கு.” கௌதம் உள்ளிருந்து குரல் கொடுக்கவும்,

 

“பத்து நிமிசம் தான் உங்களுக்கு டைம் கௌதம், ஒழுங்கா குளிச்சிட்டு வாங்க. உங்க விளையாட்டெல்லாம் அப்புறம் வச்சுக்கோங்க.” கங்கா உத்தரவாகச் சொன்னாள்.

 

“அப்போ… அப்புறம் வச்சுக்கலாம்னு சொல்ற…?” அவனது இழுவையான மறுகேள்வி குறும்பில் கொப்பளித்து வரவும், இதுவரை வெளிவராத வெட்கம் இப்போது அவள் முகம் முழுவதும் பரவி குறுகுறுக்க வைப்பதாய்.

 

காரில், அவளை சீண்டியும் கொஞ்சியும், அவளிடம் முறைப்பையும் திட்டையும் வாங்கியபடி, கங்காவை திருமண மண்டபத்தின் முன் இறக்கி விட்டான் கௌதம்.

 

இப்போதே அவளுக்கு அரை மணிநேரம் தாமதமாகி இருந்தது. வழியில் இரண்டு முறை அவளை அழைத்து போன் காலும் வந்திருந்தது. அத்தனை அவசரத்திலும் கங்கா அவனுக்காக தாமதித்து, “நீங்களும் உள்ள வரலாமே கௌதம்.” அவனிடம் கேட்டாள்.

 

இந்த சில மணிநேர பிரிவைக் கூட தாங்கமாட்டாமல் கேட்பவளை ஆதுரமாக பார்த்தவன், “இப்ப உள்ள வந்து நான் என்னடி பண்ண போறேன். நீ போய் உன் ஒர்க் முடிச்சிட்டு வா, நான் இங்கயே  உனக்காக காத்திட்டிருப்பேன்.” என்று அவள் மென்னிதழில் வலிக்காமல் முத்தமிட்டு அனுப்பி வைத்தான்.

 

தாமதமாக வந்ததற்கு ஒரு சாரி சொல்லிவிட்டு, மணப்பெண் அலங்காரத்தைத் தொடங்கி விட்டாள் கங்கா, மற்ற அவசியமற்ற கேள்விகளுக்கு இடமளிக்காமல்.

 

தன் கைவேலையை வேகவேகமாக செய்து கொண்டிருந்தாலும், அடிக்கடி கௌதமை தேடி ஓடிய மனதை இழுத்துப் பிடித்து தன் வேலையில் கவனத்தைச் செலுத்தி செய்ய வேண்டியிருந்தது அவளுக்கு. இதுவரை அனுபவிக்காத இன்ப அவஸ்தையை அவளுக்கு தந்திருந்தான் அவன்.

 

மணப்பெண் அலங்காரத்தோடு சேர்த்து, சில உறவுக்காரப் பெண்களுக்கும் அலங்காரம் செய்ய வேண்டி இருந்ததால், நேரம் வேறு இழுத்துக்கொண்டு போனது. எப்போதும் நிறுத்தி நிதானமாகப் பார்த்து பார்த்து தன் பணியை நிறைவாக செய்யும் பழக்கம் கொண்டவள் அவள்‌. எப்போது தன் வேலை முடியும் என்று படபடக்கும் மனநிலையை வேறு வெறுத்துக் கொண்டிருந்தாள்.

 

தான் செய்த அலங்காரம் சரியா என்று ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்து திருப்தியான பிறகே, கங்காவிற்கும் நிம்மதி மீண்டிருந்தது. இன்றைய மனநிலையில் ஏதேனும் சொதப்பி விடுவாளோ என்று பயந்து வேறு இருந்தாள். இப்போது பேரழகாய் தன் முன் நின்ற மணப்பெண்ணைத் தன் திறன்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டவள், அவளுக்கு தன் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டாள். 

 

தன் அலங்காரப் பொருட்களை எல்லாம் வேகமாக எடுத்து அடுக்கிக் கொண்டவள், அவர்களிடம் விடைபெற்று, உடனே அங்கிருந்து கிளம்பி வெளியே வந்து விட்டாள்.

 

ஆனால், கௌதம் காத்திருப்பதாக சொன்ன இடத்தில் அவன் கார் இல்லாதிருக்க, சுற்றிமுற்றி தேடிப் பார்த்தாள். 

 

அப்போது தான் இருள் பிரிந்து மெல்லிய வெளிச்சம் பரவி கொண்டிருந்தது. இதமான விடியற்காலை வேளையில் அவளின் பார்வையும் மனதும் தன்னவனைத்தேடி அலைப்பாய்ந்தது.

 

அங்கே, எங்கும் அவன் கார் தென்படவில்லை. சட்டென கலவரம் சூழ்ந்த தன் மனதை சற்று நிதானப்படுத்தியவள், தன் திறன்பேசியில் பிளாக் லிஸ்டில் வைத்திருந்த கௌதம் எண்ணை விடுவித்து, அவனுக்கு அழைப்பு விடுக்க, மறுமுனை பிஸி என்று வரவும், அவள் மனது மேலும் சோர்ந்து போனது.

 

‘இப்போது என்ன பிரச்சனை எங்களுக்கிடையில் வந்து நிற்கிறதோ? நிஜமாய் அவருடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை தனக்கு கொடுத்து வைக்கவில்லையோ!’ 

 

இதுவரை அவள் வாழ்வில் சந்தித்திருந்த தொடர் ஏமாற்றங்கள் அவளை இப்போது நிலைக்குலையச் செய்தன. 

 

கண் இழந்தவளுக்கு திடுமென பார்வை கிடைத்து, மறுநொடி பரிக்கப்பட்டது போல பரிதவித்து நின்றிருந்தாள் கங்கா.

 

கௌதம் மீது அவளுக்கு நம்பிக்கை இருந்தது தான், ஆனால் தங்கள் விதியை நினைத்து தான் வெகுவாக பயந்து போனாள்.

 

சற்றுநேரம் அவளை தவிக்கவிட்ட பிறகு,‌ கௌதமின் கார் அவளருகில் வந்து நின்றது. அவள் பக்க கதவைத் திறந்து, உள்ளே ஏறச் சொல்லி கைகாட்டியவனை மலங்க மலங்க பார்த்து நின்றாள் கங்கா.

 

அவள் முகம் பார்த்து ஏதோ தவறென்று உணர்ந்து கொண்ட கௌதம், “என்னாச்சு கங்கா, கிளம்பலாம் வா.” காரிலிருந்து எட்டி அவள் கையைப் பற்றி உள்ளே இழுத்து அமர்த்திக் கொண்டவன், காரை செலுத்தினான்.

 

“எங்க போயிருந்தீங்க கௌதம்?” கங்கா தன் குரலை இயல்பாக்கி கேட்டாள்.

 

“கார் பார்க்கிங்ல நிறுத்தி இருந்தேன்டா. ஏன் நான் உன்ன விட்டு ஓடிபோயிட்டேன்னு பயந்துட்டியா? கால் பண்ணி இருந்த.” 

 

கௌதம் விளையாட்டாகத் தான் அவளைச் சீண்டினான். ஆனால் கங்கா உடைந்து கலங்கி விட்டாள். அவன் என்னவென்று கேட்கும் முன்னமே அவன் நெஞ்சில் முகம் பதித்து அழத் தொடங்கினாள்.

 

“ஹேய்… என்னாச்சுடீ?” என்றவன் சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தினான்.

 

அவள் முகம் நிமிர்த்தியவன், அழுகையில் சிவந்திருந்த அவளின் முகம் பார்த்து, “அடியே, என் அழுமூஞ்சி பொண்டாட்டி, எதுக்கு அழறன்னு சொல்லிட்டு அழுது தொலை.” என்று கேட்டான் சலிப்பாக.

 

“நான் பயந்துட்டேன் கௌதம்.” கங்கா சொல்லவும், அவனுக்கு புரிந்தது.

 

“ஓ… உன்கிட்ட என் வேலைய முடிச்சிட்டு உனக்கு கம்பி நீட்டிட்டு போயிட்டேன்னு நினச்சுட்டியா? எவ்வளோ நல்ல எண்ணம்டீ உன் புருசன் மேல உனக்கு.” கௌதம் புருவத்தை நெறித்து அவளை முறைத்தான்.

 

“அப்படியெல்லாம் எப்பவும் உங்களை நான் தப்பா நினைக்க மாட்டேன். என்னை விட்டு போற மாதிரி மறுபடி ஏதாவது ஆகிடுச்சோன்னு பயந்துட்டேன்.” எனவும்,

 

“ஏதாவதுனா… எனக்கு ஆக்ஸிடென்ட்…” மேலும் ஏதோ சொல்ல வந்தவன் வாய் மேலேயே யோசிக்காமல் அடித்திருந்தாள் கங்கா.

 

“தப்பா பேசாதீங்க, உங்க அப்பா, அம்மா ஏதாவது சொல்லி உங்களை அழைச்சிட்டு போயிட்டாங்களோன்னு மட்டும் தான் பயந்தேன்.” என்றாள் வேகமாக.

 

கௌதம் இப்போது அவளை இன்னும் முறைத்தான். “ஹேய், பைத்தியம் மாதிரி உளறாத. முன்ன மாதிரி அவங்க பிளே பண்ணா நம்பற அளவுக்கு நான் இப்ப முட்டாளா இல்ல. அப்ப நமக்குள்ள இருந்த சிச்சுவேஷன் வேற. இப்ப எல்லாமே மாறி போச்சு. நீயோ நானோ இப்ப யார் கட்டுப்பாட்டுலயும் இல்ல. இனி இந்த வாழ்க்கை நமக்கானது மட்டும் தான். இனி நமக்குள்ள யாரும் வர அனுமதி இல்ல. இதை உன் மரமண்டைல நல்லா ஏத்தி வச்சிக்க.” என்று அவள் தலையில் தட்டிவிட்டு காரை எடுத்தான்.

 

கங்காவின் அறிவுக்கு அவன் சொல்வது எல்லாம் நன்றாகவே புரிந்து இருக்கிறது தான். ஆனாலும் அவள் மனதுக்குள் தான் ‌போராட்டம். அது வீண் என்று அவளுக்கு தெரிந்தும் கூட, அவளால் அதை தடுத்து நிறுத்த முடியவில்லை.

 

தன் மேல் கையை இறுகப் பற்றிக்கொண்டு தோள் சாயந்தவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு சாலையில் கவனம் வைத்தான் கௌதம். அவளது பயம் அவனுக்கு புரிந்தது தான். விரைவிலேயே அவள் அந்த பயத்திலிருந்து வெளிவந்து விடுவாள் என்ற‌ நம்பிக்கையும் அவனுக்கு இருந்தது.

 

அவனது அந்த நம்பிக்கையைக் குலைக்க வேண்டும் என்று தான், திலோத்தமாவும் மனோகரும் காலையிலேயே அவன் வில்லாவிற்கு வந்து அங்கே அவர்களது வரவிற்காக காத்திருந்தனர்.

 

வீட்டின் கேட்டைத் தாண்டி நுழையும்போதே, தன் தந்தையின் கார் நிற்பதைக் கவனித்த கௌதம் கைலாஷின் மனது துணுக்குற்றது. தன் அப்பா, அம்மாவை சமாளிப்பது அவனுக்கொன்றும் பெரிய விசயம் இல்லை தான். ஆனால்… 

 

இன்னும் தன்னை ஒண்டிக் கொண்டு மனம் பேதளித்து அமர்ந்திருப்பவளைப் பார்த்தான். இந்த நிலையில் கங்கா அவர்களை துணிச்சலாக எதிர்கொள்வாளா? என்ற தயக்கம் அவனுக்கு ஏற்பட்டது.

 

“கங்கா… நாம வந்துட்டோம்.” கௌதம் குனிந்து சொன்னதும் தான் அவனிடமிருந்து விலகி அமர்ந்தாள்.

 

“நீ இப்படி பயந்தா நான் எப்படி என் வொர்க் எல்லாம் பார்க்கறதுடி?” அவன் அவளிடம் கேட்க,

 

“சாரி கௌதம், பயம் எல்லாம் இல்ல. என்னவோ உங்களை காணோம்னு கொஞ்சம்…” கங்காவிற்கு தன்‌ முட்டாள்தனம் இப்போது நன்றாகவே புரிந்தது.

 

“சரிதான், நீ பயந்தாங்கொள்ளியா இல்ல தைரியசாலியான்னு இப்ப நான் வைக்க போற டெஸ்ட்ல தெரிய வந்திடும்.” அவன் யோசனையாகச் சொல்ல,

 

“என்ன டெஸ்ட்?” கங்கா புரியாமல் கேட்டாள்.

 

“அங்க பாரு, அப்பாவோட கார். எங்க அம்மாவும் அப்பாவும் நமக்காக தான் உள்ள வெயிட்டிங். நீ உள்ள வந்து அவங்களை தைரியமா ஃபேஸ் பண்ணணும். சும்மா அவங்க காட்டுற பூச்சாண்டிக்கு எல்லாம் பயந்துட்டு என்னை அம்போன்னு விட்டு ஓடிபோகக் கூடாது.” விளையாட்டு பேச்சோடு அவளுக்கு சூழ்நிலையை உணர வைத்தான்.

 

கங்கா தலையாட்டிக் கொண்டாள். அவர்களை எதிர்கொள்ள வேண்டியது வரும் என்பது கங்காவிற்கும் தெரிந்திருந்தது. ஆனால் இத்தனை சீக்கிரம் வரும் என்று தான் அவள் எதிர்பார்க்கவில்லை. கேளாமல் கொள்ளாமல் அவள் மனதிற்குள் பயமும் பதற்றமும் மையம் கொள்ள, அதை வெளிக்காட்டாமல், கணவனுடன் இறங்கி நடந்தாள்.

 

***