ஏன் பெண்ணென்று பிறந்தேன் 1(2)

images (14)-aedd8de6

ஏன் பெண்ணென்று பிறந்தேன் 1(2)

பெண் 1(2)

 

தன் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு கங்கா தலை நிமிர்ந்து பார்த்தாள். ‘வேதா பெண்கள் அழகு நிலையம்’ பெயர் பலகை அவள் பார்வையில் பளிச்சிட்டது.

 

தன் தாய்வழி தாத்தாவின் உதவியோடு கங்கா தொடங்கிய அழகு நிலையம் இது. இவள் நொண்டி எந்த வேலைக்கும் லாயக்கற்றவள் என்றும், இவள் வாழாவெட்டி நமக்கு சகுனத் தடை என்றும் ஒதுங்கி ஒதுக்கியவர்களுக்கு மத்தியில், தன் பேத்தியாளும் சொந்த சம்பாத்தியத்தில் நிமிர்ந்து வாழ முடியும் என்று நம்பிக்கை சொல்லி அவளுக்கான பயிற்சியையும் தொழிலையும் அமைத்து தந்தவர் கங்காவின் சதாசிவம் தாத்தா. அவரின் விருப்பப்படி தான் அவரின் அன்பு மனைவி வேதநாயகி பெயரை சுருக்கி தன் அழகு நிலையத்திற்கு ‘வேதா’ என்ற பெயரை வைத்திருந்தாள் கங்கா.

 

இந்த மூன்று வருடங்களில் நகரின் விரல் விட்டு எண்ணக்கூடிய முதல் தரமான அழகு நிலையங்களில் வேதா பெண்கள் அழகு நிலையமும் ஒன்று. அழகு கலையில் அவளுக்கிருந்த திறமையும் செய்யும் வேலையில் அவளுக்கு இருந்த நேர்த்தியும் கங்காவின் தனிமையையும் வெறுமையையும் விரட்டியடித்து இருந்தது. அவளுக்குள் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் வளர செய்திருந்தது.

 

இன்றும் மனதில் எழுந்த புத்துணர்வோடு கதவை திறக்க, சௌபாக்கியம் அம்மா கனிந்த முகத்துடன் கங்காவை வரவேற்றார். வேதா நிலையத்தின் பெருக்கி துடைத்து சுத்தம் செய்யும் கடைநிலை வேலை செய்பவர். இவரைத் தவிர பிரேமா, ரேவதி, சாயா என்ற மூன்று அழகுக் கலையில் அனுபவமும் திறமையும் கொண்ட பெண்கள் கங்காவிற்கு கீழே வேலை செய்கிறார்கள். 

 

சாமி படத்திற்கும் தன் தாத்தா, பாட்டி படத்திற்கும் மலர்ச்சரம் இட்டு விளக்கேற்றி வணங்கி கொண்டாள் கங்கா தினப்படி வழக்கமாய்.

 

“பாக்யம்மா, உங்க வேலை முடிச்சிட்டீங்கன்னா, எனக்காக நாலு இட்லி மட்டும் வாங்கிட்டு வரீங்களா? ப்ளீஸ்” கங்கா கண்களை சுருக்கி கேட்க, சௌபாக்கியம் அவளை முறைத்துப் பார்த்தார்.

 

“என்ன கங்கா புள்ள நீ, வாரத்துக்கு நாலு நாளு இப்படி வெளியவே வாங்கி சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கிறீயே, உனக்கு வெந்த சோத்தை போடக்கூட உன் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் நோவுதா? அந்த செலவு இந்த செலவுன்னு உன்கிட்ட பணத்தை கறக்கும் போது மட்டும் இனிக்கிதா?” அவரின் கேள்வி அங்கலாய்ப்பாய் வந்தது. அந்த ஊரிலேயே வசிப்பவர் என்பதால் அந்த அம்மாவிற்கு கங்கா குடும்பத்தைப் பற்றிய எல்லா விஷயங்களும் நன்றாகவே தெரிந்திருந்தது.

 

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல பாக்யம்மா, காலையில எனக்கு சுத்தமா பசியே இல்ல. இப்ப பசிக்குது அதான் கேட்கிறேன்” என்று கங்கா நிதானமாக பதில் தர, “என்னவோ போ புள்ள, உன் வாழ்க்கை எப்ப விடியுமோ?” என்று இட்லி வாங்கிவர கடைக்குச் சென்றார் அவர்.

 

கங்கா சாப்பிட்டு முடிக்கவும் பிரேமா, ரேவதி, சாயா வரவும் சரியாய் இருந்தது. அதே நேரத்தில் முன்பதிவு செய்தவர்களும் ஒவ்வொருவராய் வர வேதா அழகு நிலையம் சுறுசுறுப்பும் கலகலப்புமாக வழக்கம்போல களைகட்ட ஆரம்பித்தது. நாள் முழுவதும் ஓய்வு சாய்வின்றி ஒப்பனை வேலைகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டன.

 

எத்தனை தான் அவள் உலகம் வேதா நிலையத்தோடு அடங்கிப்போனாலும், இந்த நான்கு ஆண்டுகளில் அந்த ஒரு நாளின் அவமானத்தை மறக்க, அவளைச் சுற்றி இருந்தவர்கள் யாரும் அவளை அனுமதிக்கவில்லை.

 

கை கொம்பினை ஊன்றி ஊன்றி அவள் நடக்கும் போதெல்லாம் அவளை குப்பையாய் வெளியே தள்ளிவிட்ட சம்பவம் தான் அவளின் கண்முன் தோன்றி அவளை நோகடிக்கும். எனவேதான் வீட்டுக்குள்ளும் வேதா நிலையத்திற்குள்ளும் ஊன்றுகோல் இன்றி சுவரைப் பிடித்தபடி நடக்க முயன்றாள்.

 

அவளின் ஒன்றரை வருட தொடர் முயற்சி அவளுக்கு எதிர்பாராத பலனை தந்திருந்தது. அவளால் ஊன்றுகோல் இல்லாமலேயே நடக்க முடிந்தது. இப்போதும் வேகமாய் நடக்க முடியாது என்றாலும் மெதுவாய் ஓரளவிற்கு நேராகவே அவளால் நடக்க முடியும். உற்று நோக்கும் போது மட்டும் தான் அவள் நடையில் மாற்றம் மற்றவர்களுக்கு புலப்படும். சாதாரணமாய் வித்தியாசம் தோன்றாது தான்.

 

தன் நினைவு ஓட்டத்தில் இருந்து விடுபட, மணி இரவு ஒன்பது காட்டியது. பிரேமாவும் சாயாவும் கிளம்பி விட்டிருந்தனர். ரேவதியும் கிளம்பிக் கொண்டிருந்தாள். கங்காவும் அவளுடன் கிளம்பி அரை மணி நேரத்தில் தன் ஸ்கூட்டியில் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

 

அவள் உள்ளே வரும்போதே பேச்சு குரல் வாசல் வரை கேட்டது. கூடத்து பிரம்பு நாற்காலியில் கதிரவன் அமர்ந்திருக்க, மல்லிகா, மாடசாமி தன் மருமகனிடம் இனிக்க இனிக்க பேசிக்கொண்டிருந்தனர்.

 

கங்காவின் பார்வையில் சின்னதாய் ஒரு தேடல் ஒட்டிக் கொண்டு வீடு முழுக்க ஒரு முறை அலைபாய்ந்தது. அவளின் தேடலுக்கு பரிசாக மஹாலட்சுமி இரண்டரை வயது ஆண் குழந்தையோடு பேசியபடியே சமையல்கட்டில் இருந்து வெளியே வந்தாள்.

 

“வா க்கா, இங்க பார்த்தியா இந்த வாலு என்னமா பேசறான்” என்று சொல்ல, புன்னகையோடு குழந்தையின் எதிரில் முட்டியிட்டு அமர்ந்தவள், “பேச கத்துக்கிட்டீங்களா,  இந்த செல்லகுட்டி பேர் என்ன சொல்லுங்க பார்க்கலாம்?” குழந்தையின் கன்னம் தொட்டு கேட்டாள்.

 

“பியபூ” என்று அழகு மழலையில் பதில் சொன்னவனை அப்படியே அள்ளி தூக்கி அணைத்து கொண்டாள் கங்கா. அவள் அணைப்பில் குழந்தை சிணுங்கினான்.

 

“நான் பெரியம்மா கண்ணா, என்னை தெரியலையா?” என்று கங்கா ஏமாற்றமாய் வினவ, பிரபு இல்லை என்று முகம் சிறுத்து தலையாட்டினான்.

 

அதேநேரம் கங்கா கையிலிருந்த குழந்தையை வெடுக்கென இழுத்து கொண்டாள் கௌரி. 

 

நிமிர்ந்தவள், “நல்லா இருக்கியா கௌரி, குழந்தை நல்லா வளர்ந்துட்டான்” இயல்பாய் தங்கையிடம் நலம் விசாரித்தாள்.

 

“நல்லா இருக்கேன். உன்ன பார்த்து பேச தான் வந்தோம். அவர் காத்துட்டு இருக்கார் சீக்கிரம் வா” என்ற கௌரி இடுப்பில் எட்டு மாத பெண் குழந்தையை இறுக்கியபடி, பிரபுவின் கையைப் பிடித்து இழுத்து கொண்டு நடந்தாள்.

 

கங்கா ஒரு நொடி தன்னையே நொந்து கொண்டாள். இவள் அவளின் குழந்தைகளை நெருங்குவதை கௌரி எப்போதுமே விரும்பியதில்லை. அதன் காரணம் கங்காவிற்குமே புரிந்தது தான். எங்கே அக்காவின் துரதிஷ்டம் தன் பிள்ளைகளுக்கும் ஒட்டிக் கொள்ளுமோ என்ற பேதை தாயின் பயம் அது. அதனை உணர்ந்து கங்காவும் விலகி செல்வாள் தான். 

 

என்னவோ இப்போது குழந்தையின் மழலையைக் கேட்டதும் தன் நிலையை மறந்து போனது அவள் தவறு தானே!

 

மெதுவாய் நடந்து வந்து கூடத்தின் கம்பத்தில் சாய்ந்து நின்றாள். கதிரவன் எப்போதும் போல கங்காவை நேராக பார்ப்பதை தவிர்த்து, பேச்சை ஆரம்பிக்கும்படி தன் மனைவியிடம் தலையசைத்தான்.

 

“இன்னும் எத்தனை நாளைக்கு க்கா இப்படியே இருக்க போற? உனக்கான வாழ்க்கையை நீயும் வாழணும் இல்லையா!” கௌரி கேட்க, கங்கா தங்கையை விளங்காத பார்வை பார்த்தாள்.

 

கௌரி, “இங்க பாருக்கா, உனக்கும் வயசு இருக்கு. கல்யாணம், புருஷன், புள்ளை குட்டின்னு நீயும் பார்க்க வேணாமா?”

 

கங்கா, “மறந்துட்டியா கௌரி, எனக்கு எப்பவோ கல்யாணம் முடிஞ்சுடுச்சு”

 

“ஆமா, பெரிய கல்யாணம். தாலிய கட்டிட்டு ஓடி போனவனுக்காக இன்னும் காத்துக்கிடக்க போறியா? போனவன் திரும்பி வருவான்னு எந்த நம்பிக்கையில உன் கழுத்துல அந்த தாலிய சுமந்து கிடக்க?” கௌரியின் பேச்சில் வேகம் கூடியது.

 

“அவர் திரும்பி வராரோ? இல்லையோ? சாதி சனத்து முன்னாடி, அக்னி சாட்சியா என் கழுத்தில ஏறின மாங்கல்யம் இது. ஏனோ தானோன்னு என்னால் தூக்கி எறிய முடியாது” கங்காவின் பதில் திடமாக வந்தது. இதில் கங்காவுக்கு எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

 

“வாயிக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல உனக்கு. ஒரே முகூர்த்தத்தில் ஒரே மேடையில ரெண்டு கல்யாணம் நடக்கக் கூடாது, நடந்தா கங்கா, கௌரி நிலைமைதான் வரும்… தங்கை கௌரி புருஷன், புள்ளைன்னு நல்லா இருக்கா. அவளோட அக்கா கங்கா, வாழாவெட்டியா ஒன்னுமில்லாம கிடக்கிறான்னு எல்லாரும் பேசும்போது எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?” கௌரி படபடவென பொரிந்தாள்.

 

இதற்கு கங்காவிடம் பதிலில்லை. மௌனமாக நின்றாள். 

 

“இப்ப எதுக்காக பழசெல்லாம் கிளற கௌரி அக்கா நீ?” மஹாலட்சுமி குறுக்கே புகுந்து கேட்டாள்.

 

“எல்லா கங்காவோட நல்லதுக்காக தான். அவளுக்கு ஒரு சம்மந்தம் வந்து இருக்கு அதான்” கௌரி போட்டு உடைக்க, அங்கிருந்த அனைவரின் முகமும் அதிர்ச்சியில் வெளுத்தது.

 

மாடசாமியின் முகத்தில் இருள் பரவ, மல்லிகா தன் வாயை கைகளால் பொத்திக் கொண்டார்.

 

“என்னடி உளற? கங்காவுக்கு அடுத்த கல்யாணமா!” மல்லிகா மகளை கண்டித்தார்.

 

“இதுல என்ன அத்த தப்பு? கங்காவோட எதிர்காலத்துக்காக தான் நாங்க சொல்றோம்” கதிரவனின் குரல் அங்கே ஓங்கி ஒலித்தது.

 

அதில் கங்காவின் இதழோரம் பரிகாச புன்னகை வந்து நின்றது.

 

“மிஸ்டர் கதிரவன், உங்களுக்கு இந்த புரோக்கர் வேலை தவிர இன்னும் நிறைய வேலை இருக்கும்னு நினக்கிறேன். முதல்ல போய் அதை கவனிங்க” என்று அழுத்திச் சொல்லி விட்டு தன் அறையை நோக்கி நடந்தாள்.

 

“என் புருஷன மரியாதையா பேசு கங்கா, உனக்காக தானே இவ்ளோ யோசிக்கிறாரு அவர்” கௌரியின் ஆவேச வார்த்தைகள் காதில் விழுந்தும் அதனை ஏற்காமல் அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டாள்.

 

கௌரி இரண்டு மூன்று முறை கதவை தட்டி கத்திவிட்டு, அந்த இரவு நேரத்திலும் தன் கணவன், குழந்தைகளை இழுத்துக்கொண்டு கொண்டு சென்று விட்டாள். கோபித்துக்கொண்டு போகும் மகளையும் மருமகனையும் சமாதானம் செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர் மல்லிகாவும் மாடசாமியும்.

 

இங்கு நடப்பது எல்லாம் மஹாலட்சுமிக்கு ஏதோ நெருடலாகவே தோன்றியது. என்னவாயிருக்கும் என்ற யோசனையுடனே அறைக்குள் வந்தவள் கங்காவின் முகத்தை பார்த்து மிரண்டு தான் போனாள்.

 

கண்களில் நீர் கசியும் அளவு சிரித்துக் கொண்டிருந்தாள். “என்னாச்சு க்கா உனக்கு?” மஹா பதற்றமாக அவள் அருகில் வந்தவள், குடிக்க தண்ணீர் எடுத்து கங்காவிடம் நீட்டினாள்.

 

அதை மறுத்தவள், “உனக்கே சிரிப்பு வரல மஹா, எனக்கு அவங்க மாப்பிள்ளை பார்க்கிறாங்களாம்” என்று ஏளனமாய் வந்தது அவள் குரல்.

 

“இது சிரிக்கிற விஷயம் இல்லக்கா, இதுல வேற ஏதோ இருக்கு. இத்தனை நாள் இல்லாம இப்ப மட்டும் உன் வாழ்க்கை மேல கௌரியும் கதிரும் அக்கறையா பேசுறாங்க. இது எனக்கு புதுசா தோனுது” என்றாள் சின்னவள்.

 

தங்கையின் சந்தேகம் கங்காவிற்கும் சரி எனப்பட்டது. “அது எதுவேணா இருந்துட்டு போகட்டும். நமக்கு என்ன, நீ உன் வேலையை பாரு” என்று கங்கா நகர்ந்தாள்.

 

அன்றைய இரவில் கங்காவின் உறக்கம் தூரமானது. தன் வாழ்வில் நடந்தேறும் விசித்திரங்களை எண்ணி சலிப்பு தட்டியது அவளுக்கு.

 

“யாரோட பொண்டாட்டிக்கு யாரு மாப்பிள்ளை பார்க்கிறது…?”  

 

அந்த இரவின் நிசப்தத்தில், கங்கா வாய்விட்டு சொல்லி கொள்ள, அவளின் மென்மையான முகத்தில் அத்தனை இறுக்கம் பரவியது.

 

***

பெண் வருவாள்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!