ஏன் பெண்ணென்று பிறந்தேன் 24(2)(pre final 2)

IMG-20211007-WA0009 (1)-d2119405

ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 24(2) (pre final 2)

 

கௌதம் கூட தன் பெற்றவர்களை இத்தனை விரைவாக எதிர்பார்த்திருக்கவில்லை. இங்கிருந்து தகவல் கசியாமல் அவர்கள் சரியாக இப்போது, வந்திருக்க மாட்டார்கள் என்பதும் அவனுக்கு திண்ணமே. அது யார் என்று கவனிக்க வேண்டும் என யோசித்தபடி, கங்காவை அழைத்துக்கொண்டு, வீட்டுக்குள் நுழைந்தான்.

 

ஏதோ தீவிரமான பேச்சில் இருந்த மனோகரும் திலோத்தமாவும், அவர்கள் வரவை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தனர். கௌதமுடன் கங்காவைப் பார்த்த இருவரின் முகங்களும் இறுகி போனது.

 

அவர்கள் பார்வையிலேயே கங்காவின் மனம் பதைபதைக்க, கௌதமின் முதுகோடு ஒன்றி கொள்ள முயன்றாள்.

 

அவளது பதற்றம் உணர்ந்த கௌதம், “இதுதான் உன் தைரியமா? என்கிட்ட என்னமா வாயடிச்சு என்னை அலைகழிச்ச, இப்ப அவங்களை பார்த்ததும் பம்முற.” அவளுக்கு மட்டும் கேட்குமாறு அவளை சிண்டிவிட, கங்கா சற்று ரோஷமாக அவன் பின்னிருந்து வெளிப்பட்டு, அவனோடு சேர்ந்து வந்தாள்.

 

கங்கா ஊன்றுகோலின்றி நடந்து வருவதை இப்போதுதான் கவனித்த பெரியவர்கள் திகைப்புடன் எழுந்து நின்றனர். 

 

“ஹாய் டாட், ஹாய் மாம்.” கௌதம் இயல்பாக அவர்களிடம் பேச்சைத் தொடங்க, அவர்கள் பார்வை அவன்மீது எரிதழலை வீசியது.

 

திலோத்தமா பார்வை கங்காவை ஆராய்ச்சியாக அளந்தது.

 

அன்று இருபக்கம் ஊன்றுகோல் தாங்கி, நேராகக் கூட நிற்க முடியாமல் வளைந்து நின்றிருந்த அவளது தோற்றத்தையும், கருத்த முகம், சிறுத்த உடலாக களை இழந்து கிடந்த கங்காவின் முகத்தையும், நினைவில் கொண்டு வந்தார். இப்போது தன் எதிரில் வந்து நிற்கும் இந்த கங்காவின் தோற்றத்தைச் சிறிதும் அவளது பழைய தோற்றத்துடன் பொருத்த முடியாமல் குழம்பினார் அவர்.

 

இத்தனை ஆண்டுகளில் கங்காவின் உயரம் கூடியிருந்தது. அழகுக்கலையில் வல்லவளானவள் தன்னையும் தன் அழகையும் திறம்பட பேணியதின் விளைவாக, தெளிந்த முகத்துடன், நேர்த்தியான சேலையில்,‌ குற்றம் சொல்ல இடமளிக்காத வகையில், கௌதமுக்கு தோதான இணையாக நிமிர்வாக நின்றிருந்தாள் கங்கா.

 

“என்னடா? மறுபடியும் இந்த பிச்சக்காரிய வீட்டுக்கு அழைச்சிட்டு வந்திருக்க?” எடுத்தவுடன் மனோகர் மகனிடம் எரிந்து விழுந்தார்.

 

“அப்பான்னு உங்கமேல மரியாதை வச்சிருக்கேன் டேட், அதை காப்பாத்திக்க வேண்டிய போறுப்பு உங்களுக்கும் இருக்கு. என்னை தப்பா எதுவும் பேச வச்சிடாதீங்க ப்ளீஸ்.” கௌதம் தீவிரமான குரலில் தந்தையை எச்சரிக்க, அவர் முகம் அவமானத்தில் கறுத்துப்போனது.  

 

“கௌதம்…” திலோத்தாமாவின் அழைப்பு அதட்டலாக ஒலித்தது.

 

அவர் அதட்டலை கருத்தில் கொள்ளாதவன், “என் பொண்டாட்டிய அவமானப்படுத்துற மாதிரி மறுபடி ஒரு வார்த்தை வந்தது… உங்களுக்கான மரியாதை என்கிட்டயும் குறைஞ்சு போயிடும்.” என்று கௌதம் கங்காவை தோளோடு அணைத்தபடி தீர்க்கமாகச் சொன்னான்.

 

“உன்ன பெத்து வளர்த்து ஆளாக்கிவிட்ட எங்களைவிட, இவ… உனக்கு பெருசா போயிட்டாளா?” ஆத்திரத்தில் முகம் சிவக்க கேட்ட மாமியாரை, கங்கா விழி விரிய பார்த்தாள்.

 

“அப்பாவுக்கு நீங்க எவ்வளோ முக்கியமோ, அதேபோல தான் மாம் எனக்கு என் கங்காவும் முக்கியம்.” கௌதம் சட்டென பதில் பேச,

 

“நீ நல்லா தான் பேசறடா, புத்தி தான் மழுங்கி போயிருக்கு உனக்கு. நாலு வருசத்துக்கு முன்னாடி பண்ண அதே தப்ப இப்பயும் பண்ணிட்டு வந்து நிக்கிற. இவகிட்ட அப்படி என்ன கண்டுட்டன்னு இவமேல இப்படி பைத்தியமா அலையற நீ?” 

 

“மாம்…” அவரின் பேச்சு தரம்தாழ்ந்து போக, கௌதம் கத்தி விட்டான். கங்கா அவரது பேச்சு பொறுக்காமல் தலை தாழ்த்திக் கொண்டாள்.

 

“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் மாம்” கௌதம் பற்களை நறநறத்தபடி சொல்லியும்,

 

“நான் இப்படித்தான் டா பேசுவேன். என்ன பண்ண முடியும் உன்னால?” என்று கொதித்தெழுந்தவர், 

 

“ஏய், உன்ன அன்னிக்கே என் வீட்டு வாசப்படி கூட மிதிக்க விடாம ஓட ஓட விரட்டி விட்டேன்ல. இப்ப மறுபடி எந்த தைரியத்திலடீ திரும்பி வந்த? இத்தனை வருசத்துல எங்கையாவது போய் செத்து தொலைய வேண்டியது தானே. ஏன்டி மோகினி பிசாசாட்டம் என் புள்ளய பிடிச்சு தொங்கிட்டு இருக்க?” என்ற திலோத்தமா கங்காவைப் பிடித்து ஆவேசமாக உலுக்கவும், கங்கா அவரது பிடியிலிருந்து விலக முடியாமல் தடுமாற, கௌதம் ஒரு கையால் அவளைப் பிடித்துக்கொண்டு, மறு கையால் அம்மாவைத் தள்ளி விட்டிருந்தான்.

 

நல்லவேளையாக மனோகர் தன் மனைவியைக் கீழே விழாமல் தாங்கிக் கொண்டார்.

 

அடுத்த நொடி, “டேய் ஈடியட், என் கண்ணு முன்னாடியே உன் அம்மாவ அடிச்சு தள்ற அளவுக்கு வந்துட்டியா?” மனோகர் கோபத்தில் மகனை அறைந்து இருந்தார்.

 

நிலைமை இத்தனை மோசமாகும் என்று அங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை. கௌதம் தன்னால் அடிவாங்கி நிற்பது கங்காவை கலங்க வைத்திருந்தது. 

 

“கௌதம்” கலங்கி நின்றவளைப் பார்த்தவன்,

 

“ஏய், என் அப்பா தான என்னை அடிச்சாரு விடு, நீ வா வந்து உக்காரு.” என்றவன் பெரியவர்களைக் கண்டுகொள்ளாமல் கங்காவை சோஃபாவில் அமர வைத்தான்.

 

“எனக்கு ஒன்னுமில்ல.” என மறுத்து எழுந்தவளை அழுத்தி அமர வைத்தவன், “நீ இப்படி அழுது உன் பலவீனத்தை  காட்டிக் கொடுக்காத, இப்ப மாம், டேட் கோபத்துல இருக்காங்க. பட் சீக்கிரமே அவங்களும் சமாதானமாகிடுவாங்க. நம்பு.” என்றவனை அவளும் அரை மனதாக ஆமோதித்தாள்.

 

அங்கே அவர்களிடம் தான் என்ன பேச வேண்டும் என்று அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை. முன்பு போல அவர்களைப் பார்த்து இவளுக்கு அத்தனை‌ பயமெல்லாம் இல்லை தான் ஆனாலும், ஏதோ ஒருவித பதற்றம் இருக்கத்தான் செய்தது.

 

கௌதம் அவளை அத்தனை‌ தாங்குவதைப் பார்த்து சகிக்கவில்லை பெற்றவர்களுக்கு. 

 

திலோத்தமா, “என்னை அடிச்சிட்ட இல்ல நீ… உன் அம்மாவ அடிச்சிட்ட இல்ல டா… நான் உனக்கு தேவையில்லயா? அவ… போயும் போயும் அவளுக்காக என்னை நீ…” கண்கள் கலங்க அவன் சட்டையைப் பற்றி உலுக்கியவரை, கௌதம் அப்படியே தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

 

“சாரி மாம்… நான் வேணும்னு செய்யல… வேற வழி இல்லாம தான் உங்களை தள்ளி விட்டேன். உங்களுக்கு என்னை அடிக்கவோ திட்டவோ எல்லா உரிமையும் இருக்கு மாம். அவமேல உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல.” என்று சொல்ல, திலோத்தமா அவன் மார்போடு நெற்றி முட்டி கதறினார்.

 

“உனக்காக நாங்க எல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்சோம். எப்படிடா உன் கல்யாண விசயத்தில மட்டும் நீ எங்கள‌ ஏமாத்தலாம்?” என்று அவனை கோபமாக விலக்கிவிட்டு நிமிர்ந்தார்.

 

கௌதம் அமைதியாக நின்றிருக்க, கங்கா கலவரமாக அவர்களைப் பார்த்திருந்தாள்.

 

“இனி அவன்கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்ல திலோ, இங்கிருந்து இன்னும் நாம அவமானப்பட வேணா, வா நாம போகலாம்.” மனைவியை இழுத்துக்கொண்டார் மனோகர்.

 

மகனை கோபமாக பார்த்தவர், “எங்க பேச்சை மீறினது மட்டுமில்லாம எங்களையே அவமானப் படுத்திட்ட இல்ல. இனி உனக்கு அப்பா, அம்மான்னு யாரும் இல்ல. அதோ அவளையே கட்டிக்கிட்டு அழு. என் சொத்துல இருந்து உனக்கு சல்லி பைசா கூட கிடைக்காது. நீ நாதியத்து போனா தான்டா உனக்கு எங்க அருமை தெரியும்.” ஆவேசமாக பேசிவிட்டு அங்கிருந்து சென்றவரை, கௌதம் ஆயாச பெருமூச்சோடு பார்த்து நின்றான்.

 

“கொஞ்சம் நில்லுங்க…” அதுவரை அமைதியாக வேடிக்கை பார்த்திருந்த கங்காவின் குரல், அனைவரையும் அவள் பக்கம் திரும்ப வைத்திருந்தது.

 

கங்கா மெல்ல எழுந்து நின்று அவர்களைப் பார்த்தாள். கௌதம், அவள் என்ன பேசி வைக்கப் போகிறாளோ என்று சற்று கலவரமானான்.

 

கங்கா பேசினாள்.

 

“உங்கள போல ஸ்டேட்டஸ் பார்த்து பழகற‌ பழக்கம் கௌதம் கிட்ட கிடையாது. அவர் மனுசங்களை மனுசங்களா மட்டும் தான் பார்க்கறாரு. அதனால தான் அவரால முழுமனசோட என்னை அவரோட‌ மனைவியா ஏத்துக்க முடிஞ்சது. என்னோட குறை கூட அவருக்கு பெருசா தெரியாம போச்சு. 

 

நீங்க அந்தஸ்துன்ற கண்ணாடியை மாட்டிட்டு என்னை பார்க்கறீங்க, உங்க பார்வைக்கு நான் தகுதியில்லாதவளா தெரியிறேன். என்னோட குறை உங்களுக்கு பெரிய பூதாகரமா தெரியுது. 

 

உங்க விருப்பம் இல்லாம எங்க கல்யாணம் நடந்தது தப்பு தான்,‌ அதுக்கான தண்டனைய எனக்கும் அவருக்கும் சேர்த்தே நீங்க கொடுத்துட்டீங்க. இத்தனை வருசம் கழிச்சும் நாங்க ஒண்ணு சேர்ந்து இருக்கோம்னா, அதுக்கு முதல் காரணம்… உங்க மகன் என்மேல வச்சிருக்க நேசம் தான்!

 

நீங்க கேக்கலாம், போயும் போயும் என்மேல அவருக்கு எப்படி நேசம் வந்திருக்கும்னு. அன்புக்கும் நேசத்துக்கும் எப்பவுமே வரைமுறைகள் இருந்ததில்ல. 

 

அவருக்கு என்மேல இருந்த குற்றவுணர்வுல, அனுதாபத்துல தான் எனக்கு தாலிக்கட்டினாருன்னு நீங்க அன்னைக்கு சொன்னீங்க… அது உண்மையா இருந்தா, இந்த நாலு வருசத்துல அவர் என்னை மறந்தே போயிருப்பாரு, அவருக்குன்னு வேறொருத்திய தேடிட்டு இருந்திருப்பாரு, இப்படி எனக்காக… அதுவும் நான் பணத்தை வாங்கிட்டு அவரை விட்டு போயிட்டேன்னு நீங்க நம்ப வச்ச பிறகும் கூட என்னை நினச்சிட்டு இருந்திருக்க மாட்டாரு! என்மேல தப்பில்லன்னு தெரிஞ்சவுடனே என்னை தேடி ஓடி வந்திருக்க மாட்டாரு! 

 

நான் அவரோட வர மாட்டேன்னு மறுத்தும், எனக்காக காத்திருந்து, என் மனசை மாத்தி, இப்ப என்னை உங்க முன்னாடி அவர் பொண்டாட்டியா பேச வச்சிருக்கார்னா… நீங்களே யோசிச்சு பாருங்க, கௌதம் என்மேல வச்சிருக்க நேசத்தோட ஆழம் உங்களுக்கே புரியும்.

 

நீங்க என்னை ஏத்துக்கணும்னு நான் கேக்கல, உங்க மகனோட விருப்பத்துக்காக கொஞ்சம் மனசு இறங்கி வாங்க. நேசிச்சவங்க கூட வாழ்ந்தா வாழ்க்கை எவ்வளோ அழகா இருக்கும்னு உங்களுக்கு என்னைவிட நல்லா தெரியும். 

 

உங்க வாழ்க்கை பூரா அழகான காதலோட வாழ்ந்திட்டு இருக்கற நீங்களே, உங்க மகனோட நேசத்தை மறுக்குறது எந்தவிதத்துல நியாயம் நீங்களே யோசிச்சு பாருங்க.” 

 

கங்கா இத்தனை நீளமாக பேசுவாள் என்று அங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை போலும். அவள் பேச்சில் குறுக்கிடக் கூட தோன்றாமல், மனோகர், திலோத்தமா கூட வாயடைத்து நின்றுவிட்டிருந்தனர். 

 

அந்தஸ்து, கௌரவம், கௌதமிற்கு மிகச்சிறந்த வாழ்வை அமைத்துத் தரவேண்டும் என்று தான் அவர்கள் எண்ணவோட்டம் இருந்தது. இதில் கௌதமின் விருப்பம், அவனது நேசம், அவனது மனம் பற்றி அவர்கள் யோசித்திருக்கவில்லையே. எல்லாவற்றிலும் சிறந்த ஒன்றை தந்தால் அவனுக்குப் பிடிக்காமலா போய்விடும் என்று எண்ணிவிட்டனர். சிறந்தது வேறு, பிடித்தம் வேறு என்பதை உணர்ந்து கொள்ளத்தான் முடியவில்லை அவர்களால். 

 

இப்போதும் கூட அதை உணர்ந்துகொள்ள மறுப்பவர்கள் போல, கங்காவிற்கு காரமான முறைப்பை பதிலாகத் தந்துவிட்டு, அங்கிருந்து வெளியேறி விட்டனர்.

 

அவர்கள் ஏதும் பேசாமல் சென்று விடவும், கங்கா கவலையாக கணவனைப் பார்த்தாள்.

 

அவள் தன்னை இத்தனை ஆழமாய் படித்திருப்பாள் என்று கௌதம் கூட நினைத்திருக்கவில்லை. அவன் பார்வை தன்னவளை வாஞ்சையாகத் தழுவிக் கொண்டது. 

 

“நான் ஏதாவது தப்பா, அவங்கள கோபப்படுத்துற மாதிரி பேசிட்டேனா?” சிறுத்த குரலில் கேட்டவளுக்குப் பதிலாக, இல்லையென்று தலையசைத்தவன், அவள் அருகில் வந்து தோளணைத்துக் கொண்டான்.

 

“என் பொண்டாட்டி இவ்வளோ விவரமா பேசுவான்னு நான் கூட எதிர்பார்க்கலடி.” அவள் கன்னத்தைக் கிள்ளி மெச்சியவன், 

 

“நீ ஃபீல் பண்ணாதடி, சும்மா வீம்புக்கு கோவத்துல பேசிட்டு போறாங்க, முதல்லயே என்னை பார்க்காம என்கிட்ட போசாம, ஒரு மாசம் கூட அம்மா, அப்பாவால தாக்குப்பிடிக்க முடியாது. இதுல நீ வேற பெரிய பெரிய பிட்டெல்லாம் போட்டிருக்க வேற, கூடிய சீக்கிரமே நம்மள ஏத்துக்குவாங்க பாரேன்.” என்று அத்தனை உறுதியாக அவன் சொல்ல, அவளுக்கும் நம்பிக்கை வந்தது.

 

“நீங்க சொல்ற மாதிரி சீக்கிரமே அத்தையும் மாமாவும் மனசு மாறி வரணும்.” கங்கா மனதார வேண்டிக் கொண்டாள். தன்னால் அவன் குடும்பம் பிரிவதை அவளால் கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கௌதம் தன் அம்மா, அப்பாவின் மீது கொண்டுள்ள பாசம் அவளுக்குத் தான் தெரியுமே. தங்கள் திருமண நாளில் அவன் அதிகம் பேசியதே அவனுடைய அம்மா, அப்பா பற்றி மட்டும் தானே. அதெல்லாம் அவளுக்கு இன்னும் மறக்காமல் நினைவில் நிற்கிறதே.

 

“கண்டிப்பா வருவாங்க.” என்றவன், “ம்ம்… அவங்களுக்கு இன்னும் யங் கப்பிள்ஸ்னு நினப்பு, அதை மாத்தி அவங்களை தாத்தா, பாட்டி ஆக்கிட்டோம்னா… அவங்க வறட்டு வீம்பை உதறிவிட்டு ஓடி வந்துடுவாங்க.” என்று யோசனை வேறு கூறினான்.

 

கங்காவிற்கு சட்டென புரியவில்லை. “அதெப்படி அவங்கள நாம தாத்தா, பாட்டி ஆக்குறது?” என்று அவனிடம் திருப்பி கேட்கும்போதே அவளுக்கு பொறித்தட்டி விட்டது.

 

“அதை நான் உனக்கு சொல்லி தரேன்டி.” குறும்போடு சொன்னவன் அப்படியே அவளை கைகளில் அள்ளிக் கொள்ள,

 

“நடு ஹால்ல என்ன இது கௌதம்? மொதல்ல விடுங்க என்னை.” கங்கா சமரசமின்றி அவனை முறைத்தாள்.

 

“அதெல்லாம் விட முடியாதுடி. என் மனசு அக்குவேறா ஆணிவேறா உனக்கு புரிஞ்சிருந்தும்… என்னை இத்தனை நாள் சுத்தல்ல விட்டல்ல, அதைக்கூட போனா போகுதுன்னு விட்டுறுவேன்டீ. ஆனா, நேத்து நைட் என்னை எவ்வளோ டென்ஷன் பண்ணிட்டு, கெஞ்ச விட்டல்ல, அதுக்கு இருக்குடி இப்ப உனக்கு.” சூளுரைத்தபடி தன்னை மாடிக்கு தூக்கிச் செல்பவனைப் பார்த்து அவள் நெஞ்சாங்கூடு சில்லிட்டது.

 

“கௌதம் விளையாடாதீங்க, பொழுது விடிஞ்சி ரொம்ப நேரம் ஆச்சு. இப்ப போய்… முதல்ல விடுங்க என்…” அதற்குமேல் அவள் மறுக்க வாய்ப்பளிக்கவில்லை அவன்.

 

***

 

பெண் வருவாள்…