ஏன் பெண்ணென்று பிறந்தேன் 25(final-2)

IMG-20211007-WA0009 (1)-38b23140

ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 25(Final 2)

 

‘சரித்திரன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழா பெருவிழாவாக ஏற்பாடாகி இருந்தது. அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகையர், இயக்குநர், ஒளிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர்கள், இசையமைப்பாளர், பாடகர்கள், படப்பிடிப்பில் பங்கேற்ற தொழிலாளிகள் அனைவருக்கும் பொதுவான வகையில் விருந்து ஏற்பாடாகி இருந்தது.

 

வெற்றி என்ற மூன்றெழுத்து யாருக்கும் வீணே கிடைத்து விடுவதில்லை. முயற்சியின் படிகளில் ஏறி, தடைகளின் சுவற்றில் முட்டி மோதி, தோல்வியின் சரிவில் விழுந்து எழுந்த பின்னரும், மீண்டும் தன் குறிக்கோளை நோக்கி தளராமல் அடியெடுத்து வைக்கும்போதுதான், அந்த வெற்றியும் உன்னை நெருங்க அனுமதிக்கிறது. உன்னை வெற்றிவாகை சூட வைக்கிறது.

 

கௌதம் கைலாஷ் தன் துறையில் பெற்ற வெற்றியும் அத்தகையதே. தளராமல் துவளாமல் போராடினான். அந்த போராட்டத்தின் வெற்றி இப்போது அவனது கைகளில்.

 

பெருவகையான திரை பிரபலங்களும் விழாவில் பங்கேற்று இருந்தனர். அங்கே சுற்றிலும் செய்தி, தொலைக்காட்சி நிரூபர்கள் படையெடுத்து, காட்சிகளையும் சுவாரஸ்ய தகவல்களையும் சேகரித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் தேடலுக்குப் பரிசாக, கௌதம் கைலாஷ், தன் மனைவி கங்காவோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்தான்.

 

அவர்கள் இருவரும் உள்ளே வரவுமே, கேமரா பிளாஷ்கள் அவர்களைச் சுற்றி நாலாபுறமும் ஒளிர்ந்தது.

 

கௌதமுக்கு இதெல்லாம் புதிதல்ல. ஆனால் கங்காவிற்கு இவையெல்லாமே புதிதாக இருந்தது. ஒவ்வொன்றையும் கௌதம் அவளுக்கு பொறுமையாக விளக்கி அழைத்து வந்திருந்தாலும், அவளுக்குள் ஒளிந்திருந்த சிறு பதற்றத்தை மறைத்துக்கொண்டு, இயல்பான புன்னகையைத் தேக்கி, கௌதமுடன் நடந்தாள்.

 

“புரோடியூசர் சார், நேத்து வரைக்கும் மொரட்டு சிங்களா ஸ்டேட்ஸ் போட்டுட்டு, இப்ப என்ன சார் மிங்கிள் ஆகி வரீங்க?” நிரூபர் ஒருவர் விளையாட்டு பேச்சினூடே விசயத்தைக் கறக்க முயன்றார்.

 

அவர் கேள்விக்கு அழகாய் சிரித்தவன், “இதுல இருந்தே நீங்க என்னை சரியா ஃபாலோ பண்ணலன்னு தெரியுது. என் சிங்கிள் ஸ்டேட்டஸ் மாத்தி ரொம்ப நாளாச்சு சார்.” என்றான்.

 

“மேடமை எங்களுக்கு இன்டிடியூஸ் பண்ண மாட்டிங்களா புரோடியூசர் சார்?” ஒரு பெண் நிரூபரின் குரல் கேட்டது.

 

“ஷுவர், ஷி ஈஸ் மை பெஸ்ட் ஹாஃப், மிஸஸ் கங்கா கௌதம்கைலாஷ்.” அவன் சொன்னதுமே ஆரவாரமான பெருங்கூச்சல் எழுந்து அடங்கியது.

 

“கல்யாணமே முடிஞ்சிட்டா சார்? எங்களை கூப்பிடவே இல்ல.” குறைப்பட்ட குரல்கள் ஆங்காங்கே ஒலித்தன.

 

“அரேஜ்டா லவ் மேரஜா சார்? அதையாவது சொல்லுங்க?” 

 

கௌதம் கங்காவின் முகத்தைக் காதலோடு பார்த்து, “லவ் மேரேஜ்!” என்றதும்,

 

“அப்ப தீப்தி சார்?” ஒரு துடுக்குத்தனமான கேள்வி அங்கே விழுந்தது.

 

அந்த கேள்வியின் வேகத்திற்கு ஈடாக அவன் பதிலும் வேகம் பிடிக்காமல் சற்று நிதானிக்கவும், அவன் வாய்மொழிக்காக அங்கே அனைவரும் மௌனிக்கவும், அங்கே சட்டென அமைதி சூழ்ந்த உணர்வு.

 

அப்போது கௌதமின் பார்வை வட்டத்தில் தீப்தியும் விழுந்தாள். அவளை நேராகப் பார்த்தவன், “தீப்திக்கு என்ன? ஷீ ஈஸ் மை கசின். மை வெல்விஷர். என்னோட சுட்டியான மாமா பொண்ணு அவ.” என்றவன், தீப்தியையும் வருமாறு கையசைத்தான்.

 

கங்கா அங்கே அனைத்தையும் பார்வையாளராக மட்டும் கவனித்துக் கொண்டிருந்தாள். தீப்தியைப் பார்த்தும் கங்காவின் முகத்தில் எந்த மாற்றமும் தோன்றாததில், அவளையே உற்று நோக்கி இருந்த கேமரா கண்கள் ஏமாற்றத்தைக் கக்கின.

 

கௌதம் நேரடியாக அழைத்தப் பிறகு, தீப்தியால் மறுக்க முடியவில்லை. தனது சஞ்சலத்தை முகத்தில் காட்டாதவாறு, போலி புன்னகையைப் பூட்டிக்கொண்டு அவனை நோக்கி வந்தாள்.

 

கௌதம் அவளிடம் எல்லா உண்மையும் சொன்னதும், சுக்குநூறாக அவள் இதயம் சிதறிய நொடி அவள் நினைவை அழுத்தியது.

 

“ஏன் இப்படி பண்ண கௌதம்? நான் உன்ன எவ்வளோ நம்பினே? எவ்வளோ லவ் பண்ணே? நீ என்னை ஏமாத்திட்ட… நீதான் என்னை ஏமாத்திட்ட…” கத்தி கதறியழுது, இருகைகளாலும் அவனை சரமாரியாக அடித்து இருந்தாள் தீப்தி.

 

அவள் கரங்களைப் பிடித்துத் தடுத்தவன், “நிஜமா தப்பு என்மேல தான் தீபு, உன்கிட்ட நிறைய முறை உண்மைய சொல்லணும்னு நினச்சு நினச்சு தள்ளிப் போட்டுட்டே இருந்துட்டேன். பட் நம்ம கல்யாணத்துக்கு முன்னயே உன்கிட்ட சொல்லிடணும்னு உறுதியா இருந்தேன்.” அவன் தன் நிலையை விளக்கியும் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

 

“நீ என்னை சீட் பண்ணிட்ட… உன்ன சும்மா விடமாட்டேன்.” என்று கத்தியவளை எப்படி சமாதானம் செய்வது என்றும் அவனுக்குப் புரியவில்லை. 

 

“ஐ அம் ரியலி சாரி தீப்தி.” ஒரு மன்னிப்போடு அங்கிருந்து அவன் செல்ல, தீப்தியால் அவன் பிரிவையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாய்ந்தோடி வந்து அவனைக் கட்டிக்கொண்டாள்.

 

“நோ கௌதம், என்னைவிட்டு போகாத… நீயும் நானும் லவ்வர்ஸ்னு நான் எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கேன். இப்ப அப்படி இல்லனு தெரிஞ்சா ஃப்ரண்ட்ஸ் முன்னாடி எனக்கு ரொம்ப ஷை ஃபீல் ஆகும். பிளீஸ் நீ என்னைவிட்டு போகாத…” என்று தன் மார்பில் அழுது புலம்புபவளைத் தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தி இருந்தான் கௌதம்.

 

“உன் ஃப்ரண்ஸ்கிட்ட நீ சொன்னதை உண்மையாக்க நான் உன்ன விட்டு போகக் கூடாதுன்னு சொல்றீயா தீப்தி? நீ என் அம்மாவோட வளர்ப்புன்னு நிரூபிக்கிற பார்த்தியா? உன் வீண் கௌரவத்துக்காக எவ்வளவு முட்டாள்தனமான விசயத்தை கேக்கற பாரு.” 

 

கௌதம் கடிந்து பேசவும், “நோ நோ, ஐ ட்ரூலி லவ் வித் யூ!” தீப்தி அவசரமாக கூறினாள்.

 

அவள் பேச்சு அவனுக்கு கடுப்பானது. “லவ்ல என்ன ட்ரூ ஆர் ஃபால்ஸ்?” கௌதம் கேள்வியில் தீப்தி தான் திருதிருவென விழித்தாள்.

 

“ஹே தீபு, சும்மா கண்டபடி உன்ன குழப்பிக்காத. உனக்கு என்மேல தானா எல்லாம் லவ் வரல, மாம், டேட் என்னையும் உன்னையும் இணைச்சு வச்சு பேசி பேசி உன் மனசுல வாண்டட்டா இந்த எண்ணத்தை உருவாக்கி இருக்காங்க அவ்வளோ தான். 

 

மத்தவங்க பாராட்டணும், மத்தவங்க புகழணும், மத்தவங்க ஆச்சரியப்படணும், மத்தவங்க பொறாமைப்படணும் இப்படி எல்லாத்தையும் மத்தவங்களுக்காவே நீ செஞ்சுட்டு இருந்தீனா, உனக்குன்னு ஒன்னுமே இருக்காது தீப்தி.” அவளுக்கு பொறுமையாக விளக்கினான்.

 

“உன்னோட பேஷன் வேணா ஆக்டிங்கா இருக்கலாம், பட் உன் லைஃப்லயும் நீ நடிச்சிட்டு இருக்கணும்னு நினைக்காத. உனக்கு மட்டும் சொந்தமான வாழ்க்கையை உன்னோட ஒர்ஜினாலட்டியோட வாழப் பாரு. யாருக்காகவும் எதுக்காவும் நீ உன்ன விட்டுக் கொடுக்காத. இந்த உலகத்துல ரொம்ப ரொம்ப முக்கியமான ஒன்னு என்னன்னா… உனக்கு நீ மட்டும் தான். எங்கேயும் எப்பவும் உன்னோட சுயத்தை தொலைச்சிடாத.” 

 

கௌதம் அவள் தலையைத் தட்டிச் சொல்ல, புரிந்தும் புரியாத நிலையில் நின்றிருந்தாள் தீப்தி. 

 

“நீ என்ன சொன்னாலும் கேக்குறேன் கௌதம்… நீ என்னைவிட்டு போயிடாத, எனக்கு நீ வேணும்…” தீப்தி மறுபடி முதல் பல்லவியைத் திரும்பப் பாட ஆரம்பித்தாள்.

 

அவனுக்கு எங்காவது சுவற்றில் போய் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.

 

“ஏய் பைத்தியம் மாதிரி உளறாதடீ… லூசு, மெண்டல்… நீ ஒன்னும் இப்ப சின்ன குழந்தை இல்ல இருபத்தியொரு வயசாச்சு உனக்கு. கொஞ்சமாவது ஸ்டெடியா யோசிக்க பாரு.

 

எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, எனக்கு வொய்ப் இருக்கா, நான் பண்ண பெரிய தப்பு, இதை உன்கிட்ட மறைச்சது மட்டும் தான். புரியுதா?” அவன் கத்திவிட்டான். 

 

தீப்தியும் சற்று பொறுத்து இப்படியும் அப்படியும் நடந்தபடி யோசித்து ஒரு நல்ல முடிக்கு வந்து அவனிடம் அதை சொன்னாள்.

 

“இட்ஸ் ஓகே கௌதம், நீங்க என்னை செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டா கூட எனக்கு நோ பிராப்ளம்.” தீப்தி சொல்லி முடிக்கவும் கௌதம் விட்ட அறையில் அவள் கன்னம் பழுத்திருந்தது. 

 

இதுவரை அடிவாங்கி பழக்கமற்ற குழந்தை குமரிக்கு வலி தாங்காமல் அழுகை பீரிட்டு வந்தது.

 

“ஹே சுப்!” அவளை கோபமாக அதட்டி அடக்கியவன், “உனக்கென்னடி தலையெழுத்து என்னமாதிரி ஒருத்தனுக்கு ரெண்டாம் தாரமா வந்து வாழ? உன்னோட கெம்பாசிட்டி என்னன்னு தெரியுமா முதல்ல உனக்கு? உன் அழகை பத்தி தெரியுமா? நடிப்புல உன் டேலண்ட் எந்த லெவல்னு தெரியுமா? இந்த நிமிஷம் நீ நிக்கிற இடம் என்னனாவது உனக்கு தெரியுமா? 

 

இந்த ஃபீல்ட்க்கு வந்த ரெண்டு வருசத்துல, உன் போட்டோ, நீ நடிச்ச ஆட், எல்லாம் இங்க பட்டிதொட்டி எல்லாம் பரவி இருக்கு, அதை கவனிச்சு இருக்கியா நீ? நீ மட்டும் கொஞ்சம் ஹார்ட் ஒர்க் பண்ணன்னா இந்த ஃபீல்ட்ல நீதான் நம்பர் ஒன்னா இருப்ப. உனக்காக உன்ன மட்டுமே நேசிக்கிறவன் பியூச்சர்ல உனக்கு கிடைப்பான். சும்மா என்னை பிளேம் பண்ணி உன் லைஃப்ப நீயே ஒன்னுமில்லாம ஆக்க நினச்சன்னா… ஆஸ் யுவர் விஷ்!” அதற்குமேல் அங்கே நிற்காமல் சென்று விட்டிருந்தான்.

 

தீப்தியும் அவன் சொன்னவற்றை யோசித்து, தன் முன்னேற்றத்தில் மனதை செலுத்த முயன்றாள். முதல் காதலின் இழப்பின் பாதிப்பு அவளை உள்ளுக்குள் பக்குவப்படுத்தி இருந்தது.

 

அதையெல்லாம் நினைத்தபடியே அவன் அருகில் வந்து, எதையும் முகத்தில் காட்டாமல் சினேக புன்னகை சிந்தினாள் தீப்தி.

 

அவளது கைபிடித்து, தன் மறுபுறம் நிற்க வைத்துக் கொண்ட கௌதம், “தீப்தி வெரி டேலண்டட் கேர்ள். அவ இந்த ஃபீல்ட்ல தொட போற உயரம் ரொம்ப பெருசு… தீப்திகாக எப்பவும் நான் இருப்பேன் ஒரு வெல்விஷரா.” கௌதம் இயல்பான குரலில் சொல்லவும்,

 

தீப்தி அவனுக்காக இனிமையாக புன்னகைத்து, “தேங்க் யூ சோ மச் கௌதம்!” என்று தேன் குரலில் மிளற்றினாள். கங்காவையும் பேருக்கு அணைத்து விடுவித்து தன் வாழ்த்தை தெரிவித்துக் கொண்டாள்.

 

கௌதம் அவளுக்கான பதில் புன்னகையைச் சிந்திவிட்டு, கங்காவுடன் முன்னேறினான்.

 

மறுநாள் அனைத்து செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளிலும், சரித்திரன் வெற்றிவிழா கொண்டாட்டத்தோடு, கௌதம், கங்காவின் ஜோடியான படம் வெளியாகி இருந்தது. கூடவே கௌதமின் பதில்களோடு. 

 

அங்கங்கே தீப்தி, கௌதம் பற்றிய கிசுகிசுக்களும் தெரியத்தான் செய்தன, அவை வெறும் கிசுகிசுக்களாக மட்டும்.

 

***

 

பெண் வருவாள்…