ஏன் பெண்ணென்று பிறந்தேன் 25(final-1)

IMG-20211007-WA0009 (1)-a21d7ad6

ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 25 (final-1)

 

மறுநாள் மாலை, கங்கா, தன் கணவனுடன் தன் வீட்டு வாசலில் இறங்கவுமே, அவர்கள் சற்றும் எதிர்பாராத வரவேற்பு அவர்களுக்கு காத்திருந்தது.

 

காரில் இருந்து அவர்கள் இறங்கிய உடன், அங்கிருந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாம் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். 

 

‘இவர் தான் கங்காவோட புருஷனா?!’ என்னும் விதமான குறுகுறு பார்வைகளும், கிசுகிசு பேச்சுக்களும் கௌதமுக்கு ஒருமாதிரியான சங்கடத்தை தந்தது.

 

“தள்ளுங்க தள்ளுங்க… எதுக்கு இப்படி என் மாமாவையும் அக்காவையும் மறிச்சி நிக்கிறீங்க. நகர்ந்து போங்க…” மகாலட்சுமி சத்தமிட்டு கொண்டே கையில் ஆரத்தி தட்டோடு வர, அவளின் அலப்பறையில் தம்பதியர் முகத்தில் புன்னகை தேங்கி நின்றது.

 

இணையாய் நின்ற தன் அக்காவையும் மாமனையும் கண்கள் நிறைய பார்த்து, முகம் ஒளிர ஆரத்தி சுற்றி எடுத்தாள் மகா. அவளுக்குள் அப்படியொரு நிம்மதி. அந்த நிம்மதியையும் தாண்டிய குத்தாட்டம் மனதிற்குள்.

 

“வாங்க… வாங்க மாப்பிள…” மல்லிகா திகைப்பினூடே, தன் மூத்த மகளின் வாழ்க்கை சீரான நிம்மதியிலும் மகழ்ச்சியிலும் அவர்களை உளமார வரவேற்றார்.

 

கௌதம் பார்வை கங்காவின் முகத்தில் நிலைக்க, அவள் உரிமையாக கணவனின் கரம் பற்றி வீட்டினுள்ளே நுழைந்தாள். 

 

பாக்கியம்மா உட்பட, சாயா, ரேவதி, செல்வி மூவரும் அவர்களுக்காக ஆர்வத்துடன் காத்திருக்க, அங்கே தான் கதிரவனும் கௌரியும் எதையோ விழுங்கி விட்ட முகத்தோற்றத்துடன் நின்றிருந்தனர். கௌதம் அவனை புருவம் நெறித்து பார்க்க, கங்கா அவர்களைக் கண்டுகொள்ளாமல், கௌதம் கரத்தை பற்றியபடி கூடத்திற்கு நடந்தாள். அவள் நடையிலும் இன்று வேகம் கூடியது போலான தோற்றம்!

 

பாக்கியம்மா, இருவரையும் நீள் சாய்வு பிரம்பு நாற்காலியில் ஜோடியாக அமர வைத்து, அவர்கள் இருவரின் முகத்தைச் சுற்றி கைகளால் திருஷ்டி கழித்தார். 

 

“உன் மனசுக்கு நீ ரொம்ப நல்லா இருப்ப கங்கா புள்ள… உன் வாழ்க்கைய எஞ்சாமி விடிய வச்சுடுச்சு… இனியெல்லாம் சுகபோகந்தான் தாயி உனக்கு.” அவர் மனமார ஆசி வழங்கியதும், கங்கா நெகிழ்ந்து அமர்ந்த வாக்கிலிருந்து மெதுவாக எழுந்து, அவரை அணைத்துக் கொண்டாள்.

 

அவளைச் சுற்றி எல்லாம் மாயம் போல மாறும் உணர்வு. அந்த மாயத்தை நிகழ்த்திக் கொண்டிருப்பவன், வெகு அமைதியாக அந்த வீட்டைப் பார்வையால் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“கங்காக்கா… சோ ஹாப்பி ஃபார் யூ!” சாயா, ரேவதி, செல்வி மூவரும் சந்தோசமிகுதியில் ஒன்றே போல அவளை அணைத்துக்கொள்ள, கங்கா தடுமாறி சமாளித்து அவர்களை அணைத்து விடுவித்தாள். இதையெல்லாம் கவனித்திருந்த கௌரிக்கு என்னவோ போலானது. மனது ஒரு முலையில் கசங்கிப் போனது.

 

மல்லிகாவும் மகாலட்சுமியும் வீட்டு பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும், தேநீர், பலகாரம் என்று எடுத்து வந்து பரிமாறினர். 

 

இந்த வரவேற்பு, உபசரிப்பு எல்லாம் கௌதமின் புருவங்களை உயர்ந்து தாழ வைத்தது. கங்காவின் வீட்டில் இத்தனை இணக்கத்தை அவன் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனிடம் ஏதேனும் கேள்வி கேட்பார்கள், சண்டை பிடிப்பார்கள், சமாளிக்க வேண்டும் என்றுதான் எண்ணி வந்திருந்தான். ஆனால், இங்கோ எல்லாமே தலைகீழ். தாமதமானாலும் பெண் வீட்டுக்கு வந்த புது மாப்பிள்ளைக்கு விழுந்து விழுந்து உபசரிப்பு நடந்தது.

 

“உங்க வீட்ல யாரும் என்னை கேள்வி கேட்டு சண்டை போட மாட்டாங்களா?” கங்காவின் காதருகே சற்று குனிந்து, கௌதம் சந்தேகமாக வினவினான்.

 

அவனை நெற்றி சுருங்க ஏறிட்டவள், “ஏன்? அப்படி சண்டை போடணுமா உங்களுக்கு?” பதில்‌ கேள்வி கேட்டாள் அவள் செப்பிதழ்கள் அழகாய் சிரிப்பில் நெளிய.

 

அவள் பேச்சில் அவன் கவனம் சிதறிட, அவன் பார்வை அவள் இதழ்களில் நிலைத்தது. சட்டென உள்ளுக்குள் ஒரு மாற்றம், அவ்விதழ்கள் தனக்கே தனக்கானது என்பது போல் ஒரு தோற்றம்.

 

அவனுக்கு இந்த உணர்வு முற்றிலும் புதிது. தானா இப்படி யோசிக்கிறோம்? என்று கூட அவனுக்கு வியப்பாக இருந்தது. இந்த இரண்டு நாட்களில் நான் என்ன இத்தனை காமுகன் ஆகிவிட்டேன் என்றெண்ணி சிரித்துக் கொண்டான்.

 

இப்போது அவள் காதருகில் இன்னும் நெருங்கியவன், “உன்னோட ரூம் எங்க இருக்கு? போலாமா?” சின்ன கேலியும் சின்ன கிறக்கமுமாக அவன் வினவிய பாங்கில், அவள் கண்கள் அகல விரிந்து தடுமாறின.

 

அவர்களின் அந்த அன்னியோன்யம் அங்கே யார் கண்களுக்கும் தப்பவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் அவர்களைத் தான் கவனித்து இருந்தனர். ஆனால் அவர்கள் மட்டும்தான் மற்றவர்களை மறந்து, தங்களுக்கான தனி உலகை நியமித்துக் கொண்டிருந்தனர்.

 

சரியாக அந்த நேரம் அடித்துப் பிடித்து அங்கே ஓடிவந்து நின்றார் மாடசாமி. அவரது குடிமகன் கடமையை ஆற்ற வேண்டிய நேரமது. ஆனால், விசயத்தை காற்றுவாக்கில் கேள்விப்பட்டவர், தன் அதிமுக்கிய கடமையைப் பாதியிலேயே விட்டுவிட்டு பறந்தோடி வந்திருந்தார்.

 

அங்கே அமர்ந்திருந்த மகளையும், அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த மருமகனையும் கண்கள் விரித்து பார்த்தவரின் முகத்தில் பதற்றத்தின் சாயல் நன்றாகவே தெரிந்தது. அதனைக் கூடுமானவரை மறைத்துக் கொண்டவர், “வாங்க… வாங்க மா… மாப்… மாப்பிள!” 

 

திக்கலும் திணறலுமாக தன்னை வரவேற்றவரை, ஏளன தோரணையில் பார்த்து வைத்தான் கௌதம்.

 

“பெரிய வூட்டு பையன் திடுதிப்புனு எங்க வூட்டுக்கு வந்துகீறிங்க, என்ன விஷயம்னு தெரிஞ்சா…” மாடசாமி தன் வழுக்கை தலையைச் சொரிந்தபடி இழுக்க, கௌதமின் பதில் அழுத்தமாக வந்தது.

 

“என் பொண்டாட்டி கங்காவ என்னோட அழைச்சிட்டு போக வந்திருக்கேன். உங்களுக்கு அதுல ஏதாவது பிராப்ளம் இருக்கா?” 

 

“அய்யோ! எங்களுக்கு என்னா பிராப்ளம் இருக்கப்போவுது? உங்க பொண்டாட்டிய நீங்க தாராளமா கூட்டிக்கினு போங்க.” பெற்றவர் பெரிய மனதாக சொல்லிவிட்டு, “நீ கவலைப்படாத கங்கா, உன்னோட பார்லரை நான் பார்த்துக்கறேன். நீ சந்தோஷமா மாப்புள கூட கிளம்பு.” பொறுப்பாகச் சொன்னார்.

 

தந்தையின் திடீர் பொறுப்பைக் ஊகித்த கங்கா, “உங்களுக்கு எதுக்குப்பா வீண் சிரமம்? ரேவதி பார்லரை பொறுப்பா நடத்துவா, வரவு, செலவு கணக்கு எல்லாம் மகாவுக்கு நல்லா தெரியும் அவ கவனிச்சுக்குவா, நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்க.” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

 

இதுவே வேறு நேரமாக இருந்திருந்தால், கங்காவின் இந்த பேச்சுக்கு பெரிய சண்டையை இழுத்துவிட்டு இருப்பார் மாடசாமி. இப்போதோ, கௌதம் முன்னால், கங்காவை முறைக்கத் கூட முடியாமல் பெரிதாக இளித்து வைத்தார்.

 

இதற்கு மேலும் எதையும் பொறுத்துக்கொள்ள முடியாமல் கதிரவன் தான் கொதித்தெழுந்து விட்டான். 

 

“பெருசா இத்தனை வருசம் கழிச்சு பொண்டாட்டின்னு வந்து நிக்கிறான், நீங்களும் எல்லாத்துக்கும் தலையாட்டி வைக்கிறீங்க. சட்டப்படி அவங்க கல்யாணம் எப்பவோ ரத்தாகிடுச்சு. இப்ப எந்த உரிமையில பொண்டாட்டினு வந்திருக்கான்? இதையெல்லாம் நீங்க கேக்க மாட்டீங்களா?” 

 

கதிரவன் கத்த ஆரம்பிக்கவும் கோபமாக எழ முயன்ற கௌதமின் கையைப் பிடித்து நிறுத்தினாள் கங்கா.

 

அவள் முகம் பார்த்து சற்று நிதானித்தவன், நேராக நிமிர்ந்து கால் மேல் கால் போட்டு திமிராக அமர்ந்து, உதட்டோரம் ஏளன வளைப்போடு கதிரவனைப் பார்த்தான்.

 

கதிரவனுக்கு அவன் தோரணையைப் பார்த்து பற்றிக்கொண்டு வந்தது. அவன் ஏதோ பேச வாயெடுக்கும் முன்னே, மல்லிகா பதறியவராக குறுக்கே தடுத்தார்.

 

“சின்ன மாப்பிள… எதையும் அழிச்சாட்டியமா பேசிடாதீங்க. இருந்திருந்து இப்ப தான் கங்காவுக்கு நல்ல காலம் பொறந்து இருக்கு. அவ அவளோட புருசனோட சந்தோசமாக வாழணும், நீங்க முடிஞ்சதெல்லாம் இப்ப இழுத்து வழக்கு வக்காதீங்க.” எங்கே மறுபடி மகளின் வாழ்க்கை பிரச்சனையில் சிக்கிக்கொள்ளுமோ என்ற பயத்தில், அவரின் குரல் முதல் முதலாக மருமகனின் முன் உயர்ந்து ஒலித்தது. 

 

அது பெருத்த அவமானமாகத் தோன்றி விட்டது கதிரவனுக்கு. முன்பே, தான் வேண்டாம் என்று மறுத்த பெண்ணை பெரிய ஹீரோ போல வந்து திருமணம் செய்து, அவனது கல்யாண நாளிலேயே அவனை ஜீரோவாக்கி விட்டிருந்தான் கௌதம். அப்போதே கதிரவனுக்கு அவன்மேல் ஆத்திரம் கிளம்பி இருந்தது.

 

அந்த நாளே கங்காவை விட்டு அவன் ஓடிப்போனதில் கதிரவனுக்கு அத்தனை உல்லாசம். கங்கா வாழ்வைப் பற்றி எல்லாம் அவனுக்கு எவ்வித கவலையும் இருந்ததில்லை. அவன் இடத்தில் அவன் தான் எப்போதுமே ராஜாவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவனுக்கு. நேற்றுவரை தன் மாமியார் வீட்டில் அவன்தான் ராஜாவாக இருந்து வருகிறான். ஆனால் இன்று?

 

“அத்த, நல்லதை எடுத்து சொன்னா புரிஞ்சிக்க முடியல இல்ல உங்களால. மாமா… என்ன நீங்களும் பார்த்துட்டு அமைதியா இருக்கீங்க?” என்று கத்தினான்.

 

மாடசாமிக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. எங்கே அவன் அப்பன் எண்ணாமல் அள்ளிக் கொடுத்த பணத்தை, இப்போது மகன் எண்ணி எண்ணி கேட்டு விடுவானோ? என்ற பயம், அவர் கழுத்து வரையிலும் இருந்தது. அதனால் திருதிருவென்று விழிபிதுங்க நின்றிருந்தார் மாடசாமி. அவருக்கு அவர் கவலை.

 

கதிரவனுடன் சேர்ந்து ஒத்துப்பாட அங்கே யாரும் முன்வருவதாக இல்லை. சற்றுமுன் இயல்பாக இருந்த இடத்தில் இப்போது இறுக்கம் சூழ்ந்துகொள்ள, ஒருவித அமைதி நிலவியது.

 

அந்த அமைதியை கௌதம் விரல்களின் சொடுக்கு சத்தம் கலைத்தது.

 

கௌதம் அமர்ந்த தோரணையிலேயே சொடக்கிட்டு கதிரவனை அழைக்க, அவனும் திரும்பினான்.

 

“ஹே மிஸ்டர், உன் பேர் கூட எனக்கு தெரியாது. இப்ப என்ன தெரியணும் உனக்கு? எங்க ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் ஆச்சுன்னு உனக்கு யாரு சொன்னது? வெத்து பேப்பர்ஸ்ல கையெழுத்து போட்டா மட்டும் டைவர்ஸ் ஆகாது. அதுக்கு இன்னும் நிறைய புரோஸிஜர் இருக்கு மேன்.” என்றதும் கதிரவனின் கருத்த முகம் மேலும் கறுத்துப் போனது.

 

அவன் இதையெல்லாம் பற்றி யோசித்திருக்கவில்லை. அங்கே அவனது கெத்தை அவன் இழுத்துப் பிடிக்க வேண்டும் அவ்வளவே தேவை அவனுக்கு. அதனால் மேலும் விடாமல் பேசினான்.

 

“நீதானே கங்காவோட வாழ முடியாதுன்னு எழுதி வாங்கிட்டு போன? இத்தனை வருசத்துல உனக்கு கல்யாணம் ஆகி இருக்கலாம். ஏன் புள்ள 

குட்டி கூட இருக்கலாம். கங்கா இப்ப ஓரளவு வசதியாவும் அழகாவும் இருக்கறதைப் பார்த்து நீ ஏமாத்த வந்…” 

 

கதிரவன் இழுத்துக்கட்டி பேசி முடிக்கும் முன்னே, கௌதம் விருட்டென எழுந்து அவன் முகத்தில் ஒரு குத்து விட்டிருந்தான்.

 

இதை அங்கு யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. 

 

முகத்திற்கு நேராக விழுந்த குத்தில், கதிரவனின் மூக்கு உடைந்து இரத்தம் கொட்டியது. வலியைத் தாண்டிய அவமானத்தில் அவனுக்குள் அங்கேயே புதைந்து போகும் உணர்வு. கௌதமை திருப்பி அடிக்கும் எண்ணம் கூட அவனுக்குத் தோன்றவில்லை.

 

அதுவரை அமைதியாக நின்றிருந்த கௌரி, கணவன் அடிவாங்கியது தாங்காமல் கத்தி விட்டாள். 

 

“அய்யோ… எவ்வளோ ஏத்தம் இருந்தா என் புருஷனை…” என்று சத்தமிட்டவள், “ஏய்…” கௌதம் ஒற்றை விரல் நீட்டி விட்ட அதட்டலில் வாய்பொத்தி கொண்டாள்.

 

“என் பொண்டாட்டி பத்தி என் முன்னாடி பேசனா எனக்கு கோபம் வரும். அதுவும் இவன், கங்காவோட அழகை பத்தி பேசினது இதுவே கடைசியா இருக்கணும். இல்ல… மூக்கோட சேர்த்து மூஞ்சையும் பேத்துடுவேன்!” 

 

கௌதம் விட்ட மிரட்டலில் கௌரியின் முகம் வெந்து போனது. கங்காவைப் பற்றிய கதிரவனின் இந்த அதிகப்பிரசங்கித்தனம் எப்போதுமே கௌரிக்குப் பிடிக்காது. அதனால் இப்போது கணவனை எரித்து விடுபவள் போல பார்த்தாள்.

 

கதிரவனுக்கு, கௌரியின் பார்வையில் சாம்பலாகும் எண்ணமில்லை. அடிப்பட்ட தன் மூக்கின் வலியைப் தாங்கிக்கொள்ள முடியாமல் முனகிக் கொண்டிருந்தான்.

 

“கௌரி… மாப்பிளய கூட்டிட்டு ரூமுக்கு போ. காயத்தை தொடச்சி மருந்து போடு.” என்று மாமியார் சொன்னது வேறு, அவனுக்கு எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போலிருந்தது.

 

“வீட்டு மாப்ளய, அடிச்சிட்டான்… யாராவது கேக்கியாங்களா பாரு.” மூக்கில் வலியெடுக்க வார்த்தைகளை குழறியபடி குமுறிய கதிரவனை, தாங்கள் தங்கும் அறைக்கு இழுத்துச் சென்றாள் கௌரி.

 

“நீங்களே உங்க மரியாதைய கெடுத்துக்காதீங்க வாங்க…” என்று.

 

கங்கா விழிகள் விரிய கணவனைப் பார்த்தபடி எழுந்து நின்றிருந்தாள். கௌதம் அடிக்கும் அளவு போவான் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.

 

கௌதம் அவளிடம் திரும்ப, “என்னங்க… அடிச்சிட்டீங்க?” அவள் இன்னும் நம்பமுடியாமல் கேட்டாள்.

 

“ஆமா அடிச்சிட்டேன்… வேற யாரெல்லாம் உன்ன தப்பா பேசினாங்க சொல்லு, அவங்க மூக்கையும் உடச்சிறேன். அதிகமா பேசி இருந்தா வாயையும் சேர்த்து உடைச்சிறேன்.” 

 

தன் வலது கை சட்டையை இடது கையால் மடித்துவிட்டபடி அவன் சொன்ன தோரணையில், மாடசாமி பயந்துபோய், தன் மூக்கோடு வாயையும் சேர்த்து இருகைகளாலும் மூடிக்கொண்டு பின்னால் நகர்ந்தார்.

 

அதைப்பார்த்த கங்காவிற்கும், மாகாவிற்கும் சிரிப்பு வந்துவிட்டது. “மாம்ஸ்… உங்க அந்நியன் கெட்அப் பார்த்தே இங்க எல்லாரும் ஆஃப் ஆகிட்டாங்க. ஆக்ஷன் எல்லாம் இப்போதைக்கு தேவைப்படாது போல. சோ, நீங்க ரெண்டு பேரும் போய் பிரஷ் ஆகிட்டு வாங்க சாப்பிடலாம்.” மகாலட்சுமி சொல்லவும்,

 

“அப்படியா சொல்ற மச்சினி?” கௌதம் இலகுவாக கேட்கவும்,

 

“அட அப்படித்தான் மாம்ஸு.” மகா வாயடிக்க ஆரம்பித்திருந்தாள்.

 

அன்றைய இரவு மாப்பிள்ளை விருந்து அமர்க்களப்பட்டது. கௌதம் எதையும் மறுக்காமல் எடுத்து உண்டான். கங்காவிற்கு அவனருகில் அத்தனை நிறைவாக இருக்க, பசியும் ருசியும் கூட அவள் உணர‌ முற்படவில்லை.

 

கதிரவனும் கௌரியும் அறைக்குள்ளேயே இரவு உணவு எடுத்துக்கொள்ள, மகாலட்சுமி குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டியபடி உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள், இடையிடையே கௌதமிடம் வாயடித்தபடியே.

 

மல்லிகா அனைவருக்கும் பார்த்து பார்த்து உணவு பரிமாற, மாடசாமி, வாயில்லா பூச்சி போல, மூச்சு விடும் சத்தம் கூட வெளியே கேட்காமல் உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்.

 

இன்று கங்காவிற்கு அவள் வீடே புதிதாகத் தெரிந்தது. கனவும் அல்லாத நிஜமும் அல்லாத இடைப்பட்ட உலகத்திற்குள் நுழைந்த உணர்வு.

 

எப்போதும் எந்தவொரு சின்ன விசயத்தையும் ஆழ ஆழ யோசித்து அலசி முடிவெடுக்க வேண்டி இருக்கும் அவளுக்கு. அதிலும் கௌரி குடும்பம் வீட்டுக்கு வந்தால், அவள் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டும் என்ற நிலைமைதான். அவள் தனித்து நின்றதால் இத்தகைய பல கட்டுப்பாடுகளை அவளுக்கு அவளே மாட்டிக்கொண்டு தான் நடமாடிக் கொண்டிருந்தாள் இதுநாள்வரை.

 

இன்று, கௌதம் தன்னுடன் இருக்கிறான் என்ற உணர்வே, அவளுக்கு பெருத்த நிம்மதியைத் தந்திருந்தது. இனிவரும் காலங்கள் அனைத்திற்கும் கௌதம் தன்னுடன் இருப்பான் என்ற நம்பிக்கையே, இதுவரை அவளை இறுக பிணைத்திருந்த கட்டுக்களைத் தளரச் செய்திருந்தது.

 

நாளை காலையில் இருவரும் சென்னைக்கு கிளம்பலாம் என்று முடிவெடுத்திருந்தனர். கங்கா தன் அறையில், தன்னுடைய ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அவளைப் பார்த்திருந்தவனால்,

பத்து நிமிடத்திற்கு மேல் அவள்மேல் பார்வையை மட்டும் பதித்திருக்க முடியவில்லை.

 

திறந்திருந்த அறைக்கதவை அடைத்துவிட்டு அவளருகே வந்த கௌதம், அவளது பின் முதுகில் அழுத்தமாக தன் இதழ் ரேகையைப் பதிக்க, துள்ளி திரும்பியவள் சாத்தியிருந்த கதவைப் பார்த்து தான் சற்று ஆசுவாசமானாள்.

 

அவனது முரட்டு இதழ்கள் இப்போது அவளின் முன் கழுத்தடியில் புதைந்து போக, “என்ன பண்றீங்க நீங்க?” அவள் நெஞ்சம் பதறியும், அவள் தேகம் இளகியும் கிளர்ந்தது.

 

“வேற என்னடி பண்ண சொல்ற என்னை…” காற்றாக அவன் குரல் பேச, புயலாக அவன் கைகள் அவளை ஆட்கொள்வதாய்.

 

இரவு அதிக நேரம் கடந்திருக்கவில்லை. கௌரியின் குழந்தைகளுடன் மகாலட்சுமி, வெளிக்கூடத்தில் ஓடிப்பிடித்து விளையாடும் சத்தம் நன்றாகவே அவர்களுக்குக் கேட்டது. அத்தோடு மல்லிகாவும் கௌரியும் பார்த்துக்கொண்டிருந்த மெகா சீரியல் சத்தமும் கூட கேட்டது. வெளியே அவள் குடும்பமே விழித்திருக்கும்போது, அவர்கள் இருவர் மட்டும் பூட்டிய அறைக்குள் இருந்தால், நன்றாகயிராது என கங்கா சங்கடப்பட்டாள்.

 

“கௌதம்… வெளிய எல்லாரும் இருக்காங்க…” 

 

“இருக்கட்டுமே…” தயங்கிய பெண்மையைத் தாபத்திற்குள் இழுத்தது அவன் ஆண்மை. 

 

தன்னிலிருந்து அவன் முகத்தைப் பிரித்து நிமிர்த்தியவள், “இப்ப போதுமே… வெளியே போலாமே… நீங்க இன்னும் பின் பக்கம் தோட்டமெல்லாம் பார்க்கல இல்ல.” பேச்சை மாற்றி அவனை விலக்க முயன்றாள்.

 

“ப்ச்… பேசாதடி!” அவள் முயற்சியை விலக்கி, அவளின் வாயடைத்து கொண்டவன், அவளோடு படுக்கையில் சரிந்தான்.

 

எச்சில் முத்தங்களில் இன்பங்களை விதைத்து… இதமாய் பதமாய் அவளை கையேந்தி… அவளைத் துடிக்கச் செய்கிறான். சிலநேரம் ராட்சசனாக மாறி அவளை வெடிக்கச் செய்கிறான். 

 

நீளாது நீண்ட நான்கு வருட பிரிவாற்றாமையை, மீளாத இரவுகளில் மீட்டுவிட துடிக்கிறான் அவன். அவளையும் துடிக்க வைக்கிறான். முன்பு பேசச் சொல்லி அவளிடம் மன்றாடியவன், இப்போதெல்லாம் அவளைப் பேச விடாது வாயடைத்துக் கொள்கிறான்.

 

எல்லை தாண்டிய காதல் வீரனாக, அவனது அடங்காத தாபத்தை மறுக்கவோ தடுக்கவோ மறந்து அவனுள் கரைந்து கலந்துபோகிறாள். அவளது வெட்கங்களும் கூச்சங்களும் போன இடம் தெரிந்திருக்கவில்லை. அவளது தயக்கங்களையும் சங்கடங்களையும் தொலைத்த இடத்தைத் தேடச் செய்திருந்தான் அவன். 

 

இத்தனை வருட அவளின் பாலைவன வாழ்தடத்தை, வெறும் இரு நாட்களில் சோலைவன வசந்தத்தின் சுகந்தம் பரவிடச்செய்ய முடியுமா என்ன? அந்த மாயத்தைச் செய்து காட்டிக் கொண்டிருக்கிறான் அவள் மன்னவன்.

 

ஏன் பெண்ணென பிறந்தேன் நான்?

உன்னில் கலந்தாடவே!

ஏன் ஆணென பிறந்தாய் நீ?

என்னில் நீயாகவே!

காத்திருந்த காலமெல்லாம் 

பாலைவனமாய்!

உன்னோடு கரங்கோர்த்த நொடிகளில் மட்டும் சோலைவனமாய்!

 

***