ஏன் பெண்ணென்று பிறந்தேன் 26 epilogue

IMG-20211007-WA0009 (1)-216cd1a1

ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 26 எபிலாக்

 

இருபது வருடங்களுக்கு பிறகு,

 

“இப்ப எதுக்கு மாம் உங்க ஃபிளாஷ்பேக் எல்லாம் சொல்லி என் டென்ஷன ஏத்துறீங்க? என்னை தனியா விடுங்க… போங்க ரெண்டு பேரும்…” ஆரவமுதன் அவர்களிடம் எரிந்து விழுந்தான்.

 

கங்காவிற்கு தன் மகனை எப்படி சமாதானம் செய்வது என்று மேலும் கவலையானது. 

 

இதுவரை தன் அம்மா, அப்பாவின் கதையைக் கேட்டு இளகி இருந்த சின்னவள் ஆராதனாவுக்கு, அவள் அண்ணனின் இந்த பேச்சு எரிச்சல் மூட்டியது.

 

“இப்ப என்ன தான்டா உன் பிராப்ளம்? அம்மாவும் அப்பாவும் உனக்காக தான சொல்றாங்க. அதைக்கூட உன்னால புரிஞ்சிக்க முடியலையா?” அண்ணனிடம் பதிலுக்கு எரிந்து விழுந்தாள்.

 

ஆரவமுதன், பதினெட்டு வயதில், பென்சில் தேகம், அரும்பு மீசை, பெற்றவர் சொல்லைக் கேட்கக் கூடாது என்ற பிடிவாதத்துடன், பள்ளிப்படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்தான்.

 

ஆராதனா, பதினைந்து வயதில், படிப்பில் சுட்டியாய், வீட்டின் இளவரசியாய், அப்பாவின் செல்லமாய், அம்மாவின் தொல்லையாய், அண்ணனிடம் சண்டைக்காரியாய் இருந்தாள்.

 

தன் தங்கையும் தனக்கு புத்தி சொல்ல ஆரம்பித்ததில் ஆரவமுதனின் கோபம் இன்னும் அதிகமானது. 

 

“ஏய் போடி, எனக்கு பிடிச்சதை தான் நான் செய்வேன். என்ன பண்ண முடியும் அப்பாவால? என்னை கட்டிப்போட்டு வைக்க முடியுமா?” காலையில் அவன் அப்பாவின் கையால் வாங்கிய அறை அவனை அத்தனை பேச வைத்தது.

 

பிள்ளையின் சிவந்திருந்த கன்னத்தை கங்கா பரிவாக வருடித் தர, மகன் அவள் கையைத் தட்டிவிட்டு முகம் திருப்பி கொண்டான்.

 

“புரிஞ்சிக்கோ ஆரவ், இதுக்கு முன்ன அப்பா உன்ன அடிச்சிருக்காரா? இன்னிக்கு உன்ன அடிச்சிருக்காருன்னா அது உன்மேல இருக்க கோபத்துனால மட்டும் இல்ல… உனக்கு ஏதாவது ஆகிடுமோன்ற பயத்துனாலயும் தான்.” கங்கா பிள்ளைக்குப் புரிய வைக்க முயன்றாள். 

 

இந்த பிரச்சனை ஏற்பட்டதில் இருந்து அவனுக்குப் புரிய வைக்கத்தான் முயன்று கொண்டே இருக்கிறாள். உதாரணமாக தங்கள் வாழ்க்கையில் நடந்ததை எடுத்துச் சொல்லியும், தான் பட்ட வலி, வேதனையைப் பற்றி சொல்லியும் கூட புரிந்து கொள்ளாமல் அடம்பிடிப்பவனை என்ன செய்வது என்றுதான், தாயான அவளுக்கும் தெரியவில்லை.

 

“எனக்கு என்னை பார்த்துக்க தெரியும், நான் ஒன்னும் சின்ன பிள்ள இல்ல.” இளங்கன்று பயமறியாது என்பதற்கு ஏற்ப துடுக்காக பதில் பேசினான் ஆரவ். 

 

“நீ இன்னும் சின்ன புள்ள தான்டா எங்களுக்கு. ரோட்ல பைக் ரேஸ் பண்றதை என்னவோ அவ்வளோ பெரிய விசயம்னு பிடிவாதம் பிடிக்கிறியே, இதுலயே தெரியலையா நீ இன்னும் குழந்தை மாதிரி தான் யோசிக்கிறன்னு.” கங்கா வாஞ்சையாக சொல்ல, ஆரவ் அம்மாவை முறைத்து வைத்தான். 

 

கங்கா அவன் தலையைக்கோதி மென்னையாக புன்னகைத்து சொன்னாள்.

 

“அதிவேகம் எப்பவுமே ஆபத்து ஆரவ். அன்னிக்கு உன் அப்பாவோட அந்த கண்மூடித்தனமான வேகம் தான் என்னை ஊனமாக்குச்சு… நல்லா இருந்து சுயமா ஓடி ஆடிட்டு இருக்கும் போது, ஊனப்பட்டு போறது… அந்த வலி, அந்த இழப்பு சாதரணம் இல்லமா!” அந்த நிகழ்வின் நினைவில் கங்காவின் மனதும் முகமும் இப்போதும் கசங்கிப்போனது.

 

ஆராதனா அம்மாவுக்கு ஆதரவாக தோள் சாய்ந்து கட்டிக்கொண்டாள். ஆரவ் அமைதியாகத் தான் இருந்தான்.

 

“உங்க அப்பாவோட வேகம் என் காலோட போச்சு… ஆனா, இப்ப உன்னோட வேகத்துக்கு ஏதாவது உயிர் பலியாகி இருந்தா? புரிஞ்சிக்க ஆரவ், இனி இப்படி பைக் ரேஸ் எல்லாம் போகாத சரியா?” 

 

அம்மாவின் கெஞ்சலான வேண்டுதல் மகனையும் சற்று இளக்கத்தான் செய்தது. ஆனாலும், அவனால் எப்படி தன் திறனை முடக்கி போட முடியும்? என்று அவன் மனம் முரண்டியது.

 

“மாம்… எனக்கு ரேஸ் போக ரொம்ப பிடிக்குதே… என்னால பைக்ல எப்படியெல்லாம் சாகசம் பண்ண முடியும்னு உங்களுக்கு இப்ப காட்டவா? எனக்கு புடிச்சதை, எனக்கு நல்லா வரதை, என்னோட டேலன்ட்ட முடக்கி வைக்கிறதும் தப்பு தான மாம்? 

 

நீயும் டேட்டும் எனக்கு அதைத்தான் பண்றீங்க. டேட் அடிச்சு, கத்தி, போகாதன்னு சொல்றாரு, நீங்க அன்பா பேசி, கெஞ்சி, என்னை போகாதன்னு சொல்றீங்க.” தன் தரப்பு நிலையை ஆரவ் அம்மாவிடம் படபடவென வாதாடினான்.

 

ஆராதனாவிற்கு அண்ணனின் மனநிலையும் சரிதான் என்றே தோன்றியது. அதனால் இப்போது அவனைப் பாவமாக பார்த்து வைத்தாள்.

 

“உனக்கு பைக் ரேஸ் அவ்வளோ பிடிக்குமா ஆரவ்?” ஆராதனா கண்கள் விரித்து கேட்ட விதத்தில், அவன் இதழ்கள் மெலிதாக விரிந்தன. 

 

கை உயர்த்தி தங்கையின் தலையைக் கலைத்து விட்டவன், “ரொம்ப ரொம்ப ரொம்ப… பிடிக்கும் ஆரா. அந்த ஃபீல் எப்படி இருக்கும் தெரியுமா? உனக்கு ஒரு தடவை காட்டறேன் பாரேன், நீ வாய பிளப்ப.” ஆரவ் இயல்புக்கு திரும்பி, ரசித்துப் பேச, கங்காவின் முகம் மேலும் வாடிப்போனது.

 

“உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கறதை விட, உயிர் ரொம்ப முக்கியம் இல்லையா ஆரவ்?” கங்கா தாயின் பரிதவிப்போடு கேட்க, மகன் மறுபடி முறுக்கிக் கொண்டான்.

 

“சும்மா உயிர் பயம் காட்டாதீங்க மாம்… எனக்கும் என் உயிர் வெல்லம் தான். எவ்வளோ ஜாக்கிரதையா இருக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்.” என்றான் தெனாவெட்டாய்.

 

சரியாக அப்போது அவர்களிடம் வந்து நின்ற கௌதம், “நீங்க ஜாக்கிரதையா இருக்க லட்சணத்தைத் தான் பாக்கறோமே! உங்கள மாதிரி பசங்களோட இந்த சாகசம் மண்ணாங்கட்டி தான் நிறைய ஆக்ஸிடென்ட்க்கு காரணம்னு தெரியுமா உனக்கு? கொஞ்சம் மிஸ் ஆனாலும் உனக்கும் ஆபத்து, உன் முன்னாடி வரவனுக்கும் ஆபத்து.” 

 

கௌதம் கோபத்தில் படபடவென பொரிய, ஆரவ் முகத்தைத் திருப்பிக் கொண்டு உர்ரென்று அமர்ந்திருந்தான்.

 

“நீங்களும் இப்படி கோபப்பட்டா எப்படி கௌதம்? அவனுக்கு பொறுமையா எடுத்துச்சொல்லி புரிய வைக்க பாருங்க. அடிச்சு, அதட்டி திருத்த அவன் இப்ப சின்ன குழந்தை இல்ல வளர்ந்துட்டான்.” கங்கா கணவனின் கோபத்தை மட்டுப்படுத்த முயன்றாள்.

 

“காலையிலிருந்து நீங்க ரெண்டு பேரும் சொல்லி கேக்காதவனா, நான் சொன்னதும் கேட்டுட போறான்? இனி அவனுக்கு பைக் கிடைக்காது. ஒழுங்கா படிக்கிற வேலைய மட்டும் பார்க்க சொல்லு.” என்றான் கௌதம் திட்டவட்டமாக.

 

அப்பாவின் பேச்சில் ஆரவமுதன் முகத்தில் இன்னும் இறுக்கம் அதிகமானது. 

 

“அப்பா…” ஆராதனா மெதுவாக அழைக்க, கௌதம் பார்வை மகளிடம் திரும்பியது.

 

“ஆரவ்க்கு பைக் ரேஸ் ரொம்ப பிடிச்சிருக்காம்‌ ப்பா. பிடிச்சதை விட மனசில்லன்னு சொல்றான். அவன் கேக்கறதும் கரேட் தான ப்பா…” முகத்தை கெஞ்சுவது போல வைத்துக்கொண்டு அவள் கேட்கவும், கௌதமால் மகளிடம் கோபத்தை இழுத்துப்பிடிக்க முடியவில்லை.

 

சற்று நிதானித்தவனுக்கு வேறொரு யோசனையும் தோன்றியது. “ஆரா குட்டி, உன் அண்ணனுக்கு பைக் ரேஸ் அவ்வளோ பிடிக்கும்னா, டிரைனிங் அகாடமில சேர்த்து விடறேன், அங்க பிராப்பரா பிராக்டிஸ் பண்ணி ரேஸ்ல கலந்துக்க சொல்லு. அதைவிட்டு‌ இப்படி ரோட்ல தான் ரேஸ் போவேன்னு சொன்னா… அவனுக்கு பைக் இல்லன்னு சொல்லு.” 

 

கௌதம் சொல்லி முடிக்கவுமே, ஒரு நொடி அதிர்ச்சி காட்டிய ஆரவ், அடுத்தநொடி பாய்ந்து வந்து தந்தையை அணைத்துக் கொண்டான். 

 

“டேய்…” மகன் அணைத்த வேகத்தில் கௌதம் தடுமாறி சமாளித்து நிற்க வேண்டியதாக இருந்தது.

 

“ரியலி டேட்? நான் கண்டிப்பா டிரைனிங் போறேன். லவ் யூ சோம் மச் டேட்.” ஆரவ் துள்ளிக் குதிக்க, பெற்றவர்களுக்கும் நிம்மதியானது.

 

“ஒழுங்கா முதல்லயே உனக்கு பைக் ரேஸிங்க்ல இன்ட்ரஸ்ட் இருக்குன்னு என்கிட்ட சொல்லி இருந்தா, இந்த அறை வாங்காம தப்பிச்சு இருக்கலாம் இல்ல.” மகனின் கன்னத்தை தட்டிக்கொடுத்து கௌதம் கேலி போல சொல்லி காட்டவும், 

 

“இட்ஸ் ஓகே டேட் நீங்க தான அடிச்சீங்க.” ஒற்றை கண்சிமிட்டி அழகாய் சிரித்தான் ஆரவமுதன்.

 

“அடாபாவி… இவ்வளோ நேரமா என்னையும் அம்மாவையும் கெஞ்ச விட்டுட்டு, இப்ப உன் வேலை ஆனதும், ரொம்ப நல்லவன் மாதிரி டையலாக்காடா விட்ற?” என்று ஆராதனா சோஃபா குஷனை எடுத்து அவன்மீது வீசினாள்.

 

அதை லாவகமாக கேட்ச் பிடித்தவன், “அப்ப கோவத்துல இருந்தேன் இப்ப கோபம் போயே போச்சுடீ வாலு.” என்றபடி ஆரவ் அவள் மீது குஷனைப் போட, அது சரியாக ஆராவின் முகத்தில் பட்டது. 

 

அதில் கோபமானவள், “டேய் உன்ன…” அவனை அடிக்கப் பாய, ஆரவ் நழுவி ஓடினான். ஆராதனாவும் அவனை விரட்டி ஓடினாள்.

 

“ஏய் பார்த்து பசங்களா, எங்கையாவது அடிப்பட போகுது.” கங்காவின் எச்சரிக்கை குரல் பிள்ளைகள் காதில் விழவே இல்லை.

 

அவர்களைச் சிரிப்புடன் பார்த்திருந்த கௌதம், “அவங்க அடிச்சு ஓஞ்சி வரட்டும் நீ வா கங்கா.” என்று தன் அறைக்கு நடந்தான்.

 

பிள்ளைகளின் பக்கம் ஒருமுறை பார்த்துவிட்டு கங்காவும் அவன் பின்னோடு சென்றாள்.

 

கௌதம் அறையின் சோஃபாவில் சாய்ந்து அமர்ந்தவுடன், தன் திறன்பேசியைக் கையில் எடுத்துக்கொண்டான்.

 

அதைப்பார்த்த கங்காவின் முகம் சலிப்பைக் காட்டியது. “குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரவா கௌதம்?” அவள் கேள்விக்குத் தலைநிமிராமல் வேண்டாம் என்பது போல தலையசைத்தான்.

 

கங்கா ஒரு பெருமூச்சோடு ஜன்னல் பக்கம் சென்று பின்பக்க தோட்டத்தைப் பார்த்து நின்றாள். அங்க இன்னும் ஆரவும், ஆராவும் செடிகளுக்கு நடுவே ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். ஆரா சிறு குச்சியை வைத்துக்கொண்டு அண்ணனை அடிக்க விரட்ட, ஆரவ் தங்கையை வம்பிழுத்தபடி தப்பித்து ஓடி நழுவி ஆட்டங்காட்டிக் கொண்டிருந்தான். காலையில் இருந்து உர்ரென்று முகத்தை வைத்திருந்தவன், இப்போது அதற்கெல்லாம் சேர்த்து பெரிதாய சிரித்து சிரித்து, தங்கையை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தான்.

 

சற்று நேரம் கழிந்த பின்னரே தலைநிமிர்த்தி கங்காவைக் கவனித்த கௌதம், எழுந்து அவளிருகில் வந்து, அவளது தோளில் கையைப்போட்டபடி, ஜன்னல் வழியே பிள்ளைகளைப் பார்த்தான்.

 

இப்போது அண்ணனும் தங்கையும் புல் தரையில் அப்படியே சரிந்தமர்ந்து மூச்சு வாங்கிக் கொண்டிருந்தனர்.

 

“ரெண்டு பேரும் சமாதானம் ஆகிட்டாங்க போல?” கௌதம் இளநகையுடன் வினவ, கங்கா ஆமென்று தலையாட்டினாள்.

 

அவளைத் தன்புறம் திருப்பியன், “அந்த ஆக்ஸிடென்ட்ட இன்னும் உன்னால மறக்க முடியல இல்ல கங்கா?” கௌதம் தவிப்பாகக் கேட்க, அவள் கேள்வியாய் புருவம் சுருக்கினாள்.

 

“நீ கொஞ்சநேரம் முன்ன பசங்க கிட்ட பேசிட்டு இருந்ததை நானும் கேட்டேன்.” என்றவன்‍, “சில இழப்புகளை என்ன செஞ்சாலும் ஈடுகட்ட முடியறதே இல்ல.” 

 

கௌதம் கவலையாகச் சொல்ல, கங்காவிற்கு பதிலுக்கு என்ன சொல்லதென்று தெரியவில்லை. அமைதியாகவே நின்றிருந்தாள்.

 

அவளின் இந்த அமைதி அவனை என்னவோ செய்தது. “நான் உன்ன சந்தோஷமா தான பார்த்துட்டு இருக்கேன்?” அவன் மேலும் சந்தேகமாக வினவ, 

 

அவள் இதமாய் புன்னகைத்து, “ஆரவ்க்கு புரிய வைக்கத்தான் அப்படிச் சொன்னேன். நீங்க அதை அரைகுறையா கேட்டுட்டு இப்படி புலம்புறீங்க.” என்று விலகி வந்து சோஃபாவில் உட்கார்ந்தாள்.

 

கங்காவின் பதில் அவனை முழுதாக சமாதானப்படுத்தவில்லை. அவளையே அசையாமல் பார்த்து நின்றான்.

 

அவளின் மெல்லிய கொடி போன்றிருந்த தேகம், இரு பிள்ளைகளுக்கு உயிர் கொடுத்த தாய்மை பேற்றில், இப்போது சற்றே பூசினாற்போல் மாறியிருந்தது. கள்ளத்தனமாய் எட்டிப்பார்க்கும் முன் நெற்றி நரைகள், அவளது வயதின் முதிர்ச்சியைக் காட்டிக் கொடுத்தன. 

 

மற்றபடி, அவனுக்கு கங்காவிடம் பெரிதாக மாற்றமேதும் தெரியவில்லை. விளக்கி வைத்திருக்கும் வெள்ளி விளக்காய் எப்போதும் மின்னிடும் அவள் முகமும், சாந்தமான அவள் பார்வையும், நேர்த்தியான சேலைக்கட்டும், நிமிர்ந்த நேரான தோரணையும் அவளிடம் சிறிதும் மாறியதுபோல தெரியவில்லை. 

 

அவள் அவளாகவே இருந்தாள். அவனுக்கு காதல் மனைவியாக, பிள்ளைகளுக்கு அன்பு தாயாக, தொழிற்முறையில் சிறந்த அழகு கலை நிபுணியாக, அவளை மேலும் மேம்படுத்திக் கொண்டிருந்தாள் என்று எண்ணமிட்டவனுக்கு தன் மனைவியை நினைக்க, பெருமை பெருகியது.

 

அந்த பெருமையோடு அவளருகில் வந்து அமர்ந்தவன், கங்காவின் கரம் பற்றி தன்னிடம் வைத்துக் கொண்டான். கணவனின் செயலில் கங்கா அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“என்ன கௌதம்?”

 

“ப்ச் ஒன்னுமில்லடீ, நீ என் லைஃப்ல வந்ததை நினச்சு பார்த்தேன். இப்ப என் லைஃப் மொத்தமா நீயாவே மாறி போய் இருக்க.” 

 

அவனது நெகிழ்வான புகழ்ச்சியில் கங்காவின் முகத்தில் ஒரு வெற்று புன்னகை மட்டுமே வந்து போனது. அதில் அவன் மனம் ஏனோ உதைப்பட்டு போனது.

 

“என்னாச்சு கங்கா? நான் சொன்னதை நீ நம்பலையா?”

 

“இதுல நம்பறத்துக்கு என்ன‌ இருக்குங்க? உங்களுக்கு நிறைய கமிட்மெண்ட்ஸ் இருக்கு, உங்க பிஸ்னஸ், உங்க அப்பாவோட பிஸ்னஸ், அப்புறம் ஃபிலிம் புரோடக்ஷன்ஸ் வொர்க். இப்படி ஒரு நாள் கூட முழுசா பத்தாம ஓடிட்டே இருக்கீங்க. அப்பப்ப உங்களுக்கே மனசு வந்து குடும்பத்துக்காக நீங்க ஒதுக்குற கொஞ்சம் நேரம் தான் எங்களுக்காக. அதிலையும் குழந்தைங்களுக்காக போக எனக்கு மிச்ச சொச்சம்.” என்றாள் கங்கா ஒரே மூச்சாக.

 

கௌதம் கைலாஷ் வாயடைத்துப் போனான். அவள் சொல்லவதை அவனால் மறுக்கவும் முடியவில்லை. தொழில்முறை வளர்ச்சி அவனை மொத்தமாக வளைத்து இழுத்துக் கொண்டது. மனோகர், திலோத்தமா முதுமையினால் ஓய்வெடுத்துக்கொள்ள, தந்தையின் தொழிலையும் இவனே பார்க்க வேண்டிய நிலை. எல்லாமே அவனுக்கு வளர்ச்சி தான். இதையெல்லாம் ஒரே மூச்சாய் எடுத்து நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் இல்லையென்றாலும், தன்னால் செய்ய முடியும் என்று நிரூபிப்பதற்காகவே அனைத்தையும் ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கிறான். 

 

அதில் மனைவிக்கான நேரமும் நேசமும் மட்டுப்பட்டு போய்விட்டதோ? இப்போது தான் யோசிக்கத் தொன்றியது.

 

“பிஸ்னஸ்னா அப்படித்தானே கங்கா. நீ கூட தான் வேதா பார்லர் எல்லாத்தையும் ஒரே ஆளா மேனேஜ் பண்ணிட்டு வர. அங்கெல்லாம் எவ்வளோ வொர்க் பிரஷர் இருக்கும்னு நான் சொல்லித்தான் உனக்கு தெரியணுமா?” காரணம் சொல்லி தவறிலிருந்து தான் தப்பித்துக்கொள்ளப் பார்த்தான் கௌதம்.

 

கங்காவிற்காக அவள் தாத்தா அமைத்துக்கொடுத்த அழகு நிலையம், இன்னும் பெரிதாக்கப்பட்டு இன்னும் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. அதன் மேற்பார்வையும் இவள்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். தவிர, கணவனுடன் வந்த பிறகு சென்னையிலும் நவீன அழகுக்கலை தொழில்நுட்ப வசதிகளுடன் வேதா அழகு நிலையத்தை அமைத்துக் கொண்டாள். அதில் அழகுக்கலை பயிற்சி பற்றி இன்னும் அதிகமாக கற்று, இப்போது பலருக்கும் அவளே பயிற்சியாளராகவும் இருக்கிறாள். அவள் வகையில் அவளின் தொழில் வளர்ச்சியும் அபரிமிதம்தான். அதனை மறுப்பதற்கில்லை. ஆனாலும், அவள் கணவன் சொன்ன கருத்தை வேறுவகையில் மறுத்தாள்.

 

“எனக்கான வேலைங்களுக்கு நடுவுலயும், குடும்பத்துக்கான என்னோட கடமைகள் எதையும் நான் ஒதுக்கலையே. உங்களை பார்த்துக்கிறேன், பசங்களை பார்த்துக்கிறேன், உங்களுக்கு பிடிச்சதை சமைச்சு தரேன், பசங்க கேக்கறதையும் செஞ்சு தரேன்… எனக்கு நீங்கெல்லாம் தான் முதல்ல, தொழில் அடுத்தது தான்.” 

 

அதிராத வார்த்தைகளில் தான் கங்கா தன் கருத்தைச் சொன்னாள். ஆனாலும் கௌதமுக்கு மனைவி தன்னை குறை சொல்வது போல் தோன்ற, சுர்ரென்று கோபம் வந்தது.

 

“இப்ப என்ன சொல்ல வர கங்கா?” சற்று குரலை உயர்த்திக் கேட்டான்.

 

அவள் மறுப்பாக தலையசைத்து, “உங்களை கோபப்படுத்த சொல்லல கௌதம்… ஏதாவது ஒரு சூழ்நிலையில என்னை மிஸ் பண்ற மாதிரி உங்களை ஃபீல் பண்ண வச்சிருக்கேனா?” என்று கேட்டவள், அவன் யோசிக்கவும், அவளே தொடர்ந்து பேசினாள்.

 

“நிஜமா நிறைய முறை உங்களை நான் மிஸ் பண்றேன் கௌதம். இப்பவும் நீங்க வேணுன்னு எனக்கு தோனும்போது நீங்க எட்ட நின்னு என்னை உங்களை தேட வைக்கிறீங்க.” கங்கா தயங்கிச் சொல்லவும், அவனுக்கு என்னவோ போலானது. அவளது தலை பற்றி தன்மேல் சாய்த்துக் கொண்டான்.

 

முழுதாக இருபத்து நான்கு வருட திருமண வாழ்க்கையில் பாலைவனமாகவே நான்கு வருடங்கள் கடந்தபிறகே, அவர்களுக்களுக்கான இன்ப வாழ்க்கை தொடங்கி இருந்தது. அன்றிலிருந்து இப்போது வரை அவன் தன் மனைவியை தன் நெஞ்சில் தாங்கி வருகிறான். அப்படியிருக்க, இந்த வயதில் அவள் தன்னை தேடுவதாக சொல்வது எவ்வளவு பெரிய வார்த்தை. அந்த வார்த்தையின் ஆழம் அவனை சாட்டை கொண்டு அடித்ததைப் போல் வலித்தது.

 

“ஹேய்… என்னடி சொல்ற? நான் உன்ன தேட வச்சிட்டேனா?” என்றவன் அவள் உச்சியில் அழுத்த முத்தமிட்டான். அவள் இமைகள் மூடி, அவன் முத்தத்தத்தின் அழுத்தத்தை ஆழ்ந்து சுகித்துக் கொண்டாள்.

 

“நாம சேர்ந்தப்போ உன்மேல எவ்வளோ ஆசையும் காதலும் வச்சிருந்தேனோ, அதே ஆசையும் காதலோட தான் இப்பவரை இருக்கேன் கங்கா… ஒருவேளை அதையெல்லாம் உன்கிட்ட நான் வெளிக்காட்ட தவறி இருக்கலாம்.” என்று தன்னைத்தானே சுயபரிசோதனை செய்தவனுக்கு மனது ஆறவே இல்லை. 

 

அவளை இன்னும் சேர்த்து இறுக்கிக் கட்டிக் கொண்டான். கங்கா கணவன் அணைப்பில் பாந்தமாக பொருந்திக் கொண்டாள்.

 

“இந்த உலகத்துல எல்லாமே அப்படித்தான் கௌதம். புதுசுல இருக்க ஆசையும் நெருக்கமும் போக போக இருக்கறது இல்ல. அது தன்னால எப்படியோ இல்லாம போயிடுது. அது பொருளா இருந்தாலும் சரி, பொண்டாட்டியா இருந்தாலும் சரி.” கங்கா வெறுமையாக சொல்ல, அவன் குனிந்து அவள் முகம் பார்த்தான்.

 

“ஆசை தீரும் வரைக்கும் கொண்டாடி தீர்க்கறது ஆண்களோட யுக்தி. மூச்சு நிக்கிற வரைக்கும் நீங்க எங்களை கொண்டாடிட்டே இருக்கணும்னு ஆசைப்படறது பெண்களோட பேராசை…” தான் அதிகம் பேசி விட்டதாகத் தொன்ற கங்கா பேசுவதை நிறுத்திவிட்டாள்.

 

அவளைப் பார்த்திருந்தவன் முகம் இளகியது. அவள் முகத்தை நெருங்கி தாழ்ந்தவன், “நான் உன்ன அவ்வளோ ஏங்க வச்சிட்டேனா கங்கா?” கேள்வியினூடே அவளிதழணைக்க முயல, அவளின் மென்கரம் அவன் வாயைப் பொத்தி தடுத்து நின்றது.

 

“ப்ச் என்னடி?” அவன் சற்றே ஏமாற்றத்துடன் அலுத்துக் கொண்டான்.

 

“நான் உங்களை கேக்கறது இது இல்ல கௌதம்… இதுக்காக மட்டும் இல்ல. எனக்கு என் புருசன் முழுசா வேணும்… நீங்க உள்ளன்போட உணர்வுபூர்வமா என்னை நேசிச்சீங்களே அந்த நேசம் வேணும்… கங்காவுக்காகன்னு பார்த்து பார்த்து யோசிச்சு யோசிச்சு செய்வீங்க இல்ல அந்த அக்கறை வேணும் எனக்கு… நான் சாய வேண்டும்போது தள்ளிப்போகாம உங்க தோள் தரணும்…” தன் ஏக்கங்கள் ஒவ்வொன்றாகச் சொன்னவள்,

 

“இந்த வயசுல இப்படியெல்லாம் கேக்குறேன்னு நீங்க தப்பா நினக்கலாம். ஆனா, என் மனசு உங்களை தேடுது நான் என்ன செய்யட்டும்? உங்க மனசு என்னை அப்படி தேடலன்னு நினைக்கும்போது கஷ்டமா இருக்கு எனக்கு… நான் வளர்ந்துட்டேன், வயசாகிட்டேன்… ஆனாலும் எனக்குள்ள முதிராத குழந்தை ஒன்னு உங்க மடி தேடிட்டு தான் இருக்கு. அது கிடைக்கலனா அழத்தான் செய்யுது…” என்று நிறுத்தியவள் சற்று நிதானித்தாள். 

 

“ரொம்ப நாளா இதெல்லாம் உங்ககிட்ட சொல்லணும்னு தோனிகிட்டே இருந்தது கௌதம், இப்ப சொல்லிட்டேன். சரியா சொன்னேன்னா, தப்பா சொன்னேன்னா கூட எனக்குத் தெரியல… ஆனா சொல்லிட்டேன். என்னோட தனிப்பட்ட ஃபீலிங்க்ஸ உங்ககிட்ட தவிர வேற யார்கிட்டயும் என்னால சொல்ல முடியாது அதனால சொல்லிட்டேன்.” 

 

தன் மனசஞ்சலத்தை அவனிடம் கொட்டி விட்டு அவள் எழ முயல, அவளைத் தடுத்தவன், அவளிதழ்களில் மென்மையாய் இதழ் ஒற்றி எடுத்தான்.

 

கங்காவின் வேல்விழிகள் பதறி விரிந்தன. கௌதம் தான் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்டானோ என்று அவள் மனது தவித்துப் போனது. ஆனால் அவன் வேறு சொன்னான்.

 

“நானும் மனுசன் தான்டீ. எனக்கும் நீ சொன்ன எல்லா ஃபீலிங்க்ஸும் இருக்கு. தனிமையில எனக்குள்ளயும் ஒரு சின்ன பையன் அரவணைப்பு தேடி சிணுங்கிக்கிட்டே தான் இருக்கான்! அவனை மண்டையில ஒரு போடு போட்டு அடக்கி வச்சிட்டு நான் வேற வேலைல கவனத்தை திருப்பிடுவேன். 

 

பசங்க வளர்ந்த அப்புறம் இந்த ஒட்டல் உரசல் எல்லாம் தேவையா நமக்குன்னு ஓர் எண்ணம். ஒருவேளை நானே உன்ன நெருங்கினா நீ அடிச்சி விரட்டிடுவியோன்ற பயம்!” என்றவன் சிரித்துவிட, கங்கா முறுக்கிக்கொண்டு முகம் திருப்பி கொண்டாள்.

 

அவள் கன்னம் பிடித்து தனக்காக திருப்பியவன், “ஆனா நீயும் எனக்காக ஃபீல் பண்ணுவன்னு யோசிக்காம விட்டுட்டேன். ப்ச் முட்டாள்டீ நானு.” அவள் நெற்றியோடு நெற்றி முட்டிக் கொண்டான். சிறிது நேரம் இருவரும் விலகாமல் அப்படியே இருந்தனர், தங்களின் பட்டுப்போன நேசத்தை மீண்டும் துளிர்விக்க முயன்றபடி.

 

ஆரவ், ஆராதனா அவர்கள் அறைக்குள் ஓடி வர, இருவரும் தன்னால் விலகிக் கொண்டனர்.

 

அன்று இரவின் தனிமையில், எப்போதும் கணினி திரையோடு போராடிக் கொண்டிருக்கும் கௌதம், இன்று அந்த போராட்டத்தை நிறுத்திவிட்டு, கங்காவை தன் நெஞ்சோடு சாய்த்தபடி சாய்ந்தவாக்கில் கட்டிலில் அமர்ந்திருந்தான்.

 

இத்தனை நாள் எத்தகைய சொர்க்கத்தை இழந்திருக்கிறான் என்பதை இப்போதுதான் அவனால் உணர முடிந்தது. உடலின் தேவைக்காக, காமத்தின் கூடலில் இணைந்து விலகுவது வேறு. ஆனால் இதுபோல, உனக்காக நான் இருக்கிறேன் என்று ஒருவரையொருவர் அரவணைத்து இருக்கும் இந்த நொடியின் இதத்தை விளக்கிச் சொல்ல அவனிடம் வார்த்தைகள் இருக்கவில்லை.

 

கங்கா எதுவுமே பேசவில்லை, தன்னவன் அருகே அழைத்ததும் அவன் நெஞ்சில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள் அவ்வளவுதான். அவளது கவலை, சோகம், தவிப்பு, தகிப்பு எல்லாமே கரைந்து போவதாய் உணர்ந்தாள். அவள் விழியோரம் சின்னதாய் நீர் கசிவு.

 

கௌதம் அவள் முகம் நிமிர்த்தி விழியோர ஈரத்தில் இதழ் ஒற்றி எடுத்தான். 

 

“தொழில்ல ஜெயிக்கணும்னு ஓடி, தோத்துட்டா அந்த நஷ்டத்தை சரிக்கட்டன்னு ஓடி, ஜெயிச்சதுக்கு அப்புறம் இன்னும் அதிகமா லாபம் பார்க்கணும்னு ஓடி ஓடி… வாழ்க்கை வாழறதுக்காக தான், ஓடறதுக்காக இல்லன்றதையே மறந்து போயிட்டேன் கங்கா. என் ஓட்டத்தை நிறுத்தி என்னை வாழ சொல்லி கத்துக்கொடுத்திருக்க நீ.” 

 

“யாரு நானா?”

 

“ஆமா நீயே தான்.”

 

“என்னை நீங்க கிண்டல் தான பண்றீங்க?” அவள் கேட்ட விதத்தில், கௌதம் சிரித்து விட்டான்.

 

“ம்ம் நமக்கு மட்டும் ஹனிமூன் டிரிப் ஏற்பாடு பண்ணவா?” கௌதம் விடாமல் கேட்க,

 

“என்னை விளையாடுறீங்களா கௌதம்?” கங்காவிற்கு கோபம் எட்டிப்பார்த்தது.

 

“ஹேய்… சும்மா எல்லாம் சொல்லலடீ, நிஜமா தான் கேக்கிறேன்.” கௌதம் விடுவதாக இல்லை.

 

“என் மானத்தை வாங்காதீங்க. உங்ககிட்ட போய் சொன்னேன் பாருங்க, என் புத்திய சொல்லணும்.” கங்கா நெற்றியில் அடித்துக்கொண்டாள்.

 

“அதான், உன் சீக்ரெட் எல்லாம் சொல்லிட்ட இல்ல. இனி ஐயாவோட பர்ஃபாமன்ஸ மட்டும் பாரு.” அவன் தன் பெப்பர் சால்ட் மீசையை நீவி விட,

 

“நான் உங்க விளையாட்டுக்கு வரல சாமி, ஆள விடுங்க.” நழுவ முயன்றவளை அசைய விடாமல் பிடித்துக் கொண்டவன்,

 

“இப்ப சொல்லு ஹனிமூனுக்கு உனக்கு எங்க போகணும்னு ஆசை?” கிடுக்குப்பிடியாக கேள்வியை வைத்தான்.

 

“ச்சீ ச்சீ ஹனிமூன் எல்லாம் வேண்டாங்க…” என்று இழுத்தவள், 

 

“ஒருவாரம் லீவ் போட்டு… நாம ரெண்டு பேரு மட்டும்… ஆறுபடை வீட்டுக்கெல்லாம் போய்ட்டு வரலாமா?” கங்கா ஆசை ஆசையாக கேட்ட விதத்தில், இப்போது கௌதம் நெற்றியில் அடித்துக்கொண்டான்.

 

“உன்னல்லாம்… இவ்வளோ நேரம் பேச விட்டதே என் தப்புடி…” கௌதம் காதல் மன்னனாக களத்தில் இறங்கி இருந்தான்.

 

மையல் தீர்ந்த பின்னே,

பெண்மையை விலக்கிப் போகாதே!

வெறும் மையலோடு மட்டும்

தீர்ந்து விடுபவளல்ல பெண்!

உனக்கென பெண்ணாய் பிறந்தவளுக்கென 

காலம் சென்றும் காதல் கொடு!

 

***பெண் வாழ்வாள்***

 

***முற்றும்***

 

🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏