ஏன் பெண்ணென்று பிறந்தேன் 2

images (18)-8aba4426

ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 2

 

மாடசாமி, மல்லிகா தம்பதியினருக்கு மொத்தம் மூன்று பெண் குழந்தைகள், கங்கா, கௌரி, மஹாலட்சுமி என்று. 

 

முன்பு சென்னை வாசம் தான் இவர்களுடையது. மாடசாமி பொறுப்பான குடும்ப தலைவராக தன் கடமையைச் செய்யாமல், சோம்பேறி தனத்திலும் ஊதாரி தனத்திலும் சுற்றி வந்து கொண்டிருந்தார். நிலையான வேலையென்று எந்த வேலைக்கும் போனதில்லை. ஒருநாள் உணவு உண்ண மறந்தாலும் பாழாய் போன மதுவை குடிக்க மறவாத தேசத்து குடிமகன்.

 

கணவனின் இத்தகைய ஊதாரி போக்கு மல்லிகாவை அதிகம் கவலைக்கொள்ளச் செய்திருந்தது. மாமனார் வழி சொத்தாக சிறிய அளவிலான வாடகை வீடுகள் அவர்களுக்கு இருந்தன. அந்த வாடகை வருமானத்தில் தான் இவர்கள் குடும்பமும் ஓரளவு தடுமாறாமல் ஓடிக் கொண்டிருந்தது. 

 

சிறு வயதிலிருந்தே கங்கா அமைதியான குணம் கொண்டவள். எப்போதும் ஆர்ப்பாட்டம் அற்ற நிதானமான பேச்சு, செயல் அவளுடையது. குடும்பத்திலும் பள்ளியிலும் நல்ல பெண்ணென்று பெயர் எடுத்தவள். படிப்பில் முதல் மாணவியாக இல்லாமல் போனாலும் முதல் பத்து படிப்பாளிகளில் ஒருவளாய் நிச்சயம் வந்து விடுவாள். 

 

கௌரி சற்று துடுக்குத்தனமும் படபட பேச்சும் கொண்டவள். எப்போதும் எதிலும் தன்னை முன்னிருத்திக் கொள்ள விழைபவள். படிப்பிலும் அத்தனை ஈடுபாடின்றி படிக்க வேண்டுமே என்று, தேர்ச்சி பெற்றால் போதுமென்று பள்ளி நாட்களை நெட்டி தள்ளிக் கொண்டிருந்தவள்.

 

மஹாலட்சுமி துறுதுறு பேச்சும் புத்திசாலிதனமும் கொண்டவள். படிப்பில் படு கெட்டி. தப்பி தவறி ஒருமுறை முதல் ரேங்க் தவறி போனாலும், முழுவேகம் கூட்டி படித்து அடுத்த முறை முதலிடம் பிடித்த பிறகே ஓய்வாள். படிப்பின் மீது அத்தனை ஈடுபாடு. தைரியமான நடவடிக்கையும் தன்னம்பிக்கையும் கொண்டவள். அம்மா, அப்பா சொல்வதற்கெல்லாம் தட்டாமல் தலையாட்டும் அக்காக்கள் இருவருக்கும் இடையில், பெற்றோரின் தவறுகளை மிடுக்கோடு சுட்டி சொல்லும் வாய்மை பெற்றவள். கடைக்குட்டி என்பதால் விளையாட்டு தனமும் அதிகமிருக்கும்.

 

கங்கா பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும், குடும்பத்தின் மூத்த மகள் என்று அவளுக்கு உடனே திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. கங்காவும் அப்போது பெரிதாக மறுக்கவில்லை. தங்கள் குடும்ப சூழல் அவளுக்கும் புரிந்திருந்ததால் பெற்றவர்கள் முடிவுக்குத் தலையாட்டி இருந்தாள்.

 

கங்காவின் அமைதியான அழகே மாப்பிள்ளையை ஈர்க்க, வரதட்சணை கூட மறுத்து திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருந்தான் அவன். அப்பா, அம்மாவின் விருப்பம் என கங்காவும் தலையாட்டி இருந்தாள். 

 

கங்காவிற்கு மாப்பிள்ளையை பிடித்ததோ என்னவோ, கௌரி, மஹாவிற்கு மாப்பிள்ளையைப் பார்த்தவுடன் அத்தனை பிடித்து போனது. அவனின் நேர்த்தியான தோற்றம், மாநிறம் என்றாலும் முகத்தில் எப்போதும் மலர்ந்திருக்கும் புன்னகை, நிதானமான பேச்சு என்று தன் வருங்கால மாமனை இருவருக்குமே பிடித்திருந்தது. அவனும் அனைவரிடமும் இதமாகவே பேசினான் பழகினான்.

 

இரு வீட்டார் சம்மதத்துடன் கங்காவின் நிச்சயம் நல்லபடியாகவே முடிந்திருந்தது. ஒரு பெண்ணின் வாழ்வில் ஒருமுறையே வரும் திருமண வைபவத்தை கங்காவும் எதிர்பார்ப்போடும் கனவுகளோடும் பார்த்து இருந்தாள் தான். 

 

ஆனால், அந்த ஒரே நாளில் அவளின் வாழ்க்கை தடம் மாறும் என்று அறிந்திருக்கவில்லை! அந்த கொடுநாளின் கோர விபத்து அவளை ஊனமாக்கி முடக்கி போட்டிருந்தது!

 

அந்த நாளின் வலியும் வேதனையும் இழப்பும், அதன் காரணமாக தொடர்ந்த நிகழ்வுகளும், அவமானங்களும் அவளை முற்றும் முதலாக புரட்டிப்போட்டு சென்றன.

 

இவளின் கலங்கிய கண்களை ஆதுரமாக பார்த்து இவளின் கழுத்தில் பொன்தாலி இட்டவன்… இனி உனக்காக நான் இருக்கிறேன் என்று கரம் பற்றி நம்பிக்கை சொன்னவன்… எச்சில் இலையை விட கேவலமாக தன்னை தெருவில் வீசி போவானென்று அவள் அறிந்திருக்கவில்லை!

 

தன்னை வீதியில் தள்ளிவிட்ட அவமானம், என்றும் அவளுக்குள் மறையாது. அவள் இருபுறமும் தாங்கி வந்திருந்த ஊன்றுகோல்களும் பக்கத்திற்கு ஒன்றாய் அவளோடு விழுந்து கிடந்தன. 

 

அந்த நிலையில் அவளால் சுயமாக எழுந்து நிற்கவும் முடியவில்லை. எட்டி தன் ஊன்றுகோலை பற்றி எழவும் முடியவில்லை. மனம் நொந்து, உணர்வுகள் வெந்து வெடித்தழ மட்டுமே முடிந்தது. அத்தோடு எல்லாமே முடிந்தது. திருமணம் என்ற பந்தமும் பொய்த்து போனது.

 

அந்த அவமானத்திற்குப் பிறகு, ஊன்றுகோலை ஊன்றி நடக்கும் ஒவ்வொரு கணமும் அவளை வலிக்க வைப்பதாய் இருக்க, முழு வீம்புடன் ஊன்றுகோல் தவிர்த்தே சுவரை பிடித்தபடி நடை பழகியவள், வருட கணக்கான பயிற்சியின் விளைவாக இப்போது சுயமாக நடக்கிறாள். 

 

இப்போதெல்லாம் ஓரளவு நேராகவே நடக்கிறாள் தான் என்றாலும் சற்று உற்று பார்த்தால் அவள் ஒருபுறம் சாய்ந்து நடப்பது நன்றாகவே தெரியும். 

 

உடலும் உள்ளமும் ஊனப்பட்டும் தன்னம்பிக்கை தந்த உரத்தில் நிமிர்ந்து நடை பயில்கிறாள் அவள். 

 

இதோ இப்போதைய புதிய குடும்பச் சூழ்நிலை சிக்கல்களையும் தளராத உறுதியோடு எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறாள் தான்.

 

ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் இன்னொருமுறை தன் வாழ்க்கையை வேறொரு ஆணிடம் ஒப்படைக்க அவள் தயாரில்லை. நிச்சயம் அதற்கு மட்டும் அவள் தயாரில்லை.

 

‘இது அவளுக்கான வாழ்க்கை, அவளால் தனித்தே வாழ்ந்து முடித்துவிட முடியும்’ என்று மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லிக் கொண்டே, தளரும் தன் மனநிலையை நேராக நிமிர்த்திக் கொள்ள‌ முயன்றாள்.

 

***

 

அங்கே, சில நிமிடங்கள் அமைதிக்குப் பின்னர்,

இருள் சூழ்ந்த அந்த பிரமாண்ட மேடையில் சிறு வண்ண விளக்கொளி கசிய, அந்த ஒளியில் ஒய்யார நடமிட்டு வரும் அழகு பாவையைக் கண்டதும், அரங்கத்தில் கூடி இருந்தவர்கள் இட்ட கூச்சலில் அந்த இடமே கலகலத்தது.

வடநாட்டு மேனி பளபளப்பும், தமிழ்நாட்டின் களை பொருந்திய முக அழகும், துறுதுறுக்கும் பட்டாம்பூச்சி விழிகளும் அவளின் நளின நடை அழகும் அங்கிருந்த ஒவ்வொருவரின் மனதையும் வசீகரிப்பதாய்.

தீப்தி… தீப்தி… தீப்தி… 

இளவட்டங்கள் அவள் பெயரை ஒரே குரலாய் உச்சரித்து கையுயர்த்தி ஆர்பரித்தனர்.

அவளின் செவ்விதழ்களில் உற்சாக புன்னகை விரிய, எதிரே திரண்டு இருந்த கூட்டத்தில் அலைப்பாய்ந்த அவள் கருமணிகள் ஒரு தாடிகாரனிடம் நிலைத்தது. அவனை கண்டு கொள்வதில் அளவுக்குச் சிரமம் ஏதும் தோன்றவில்லை. ஆரவாரமாய் இருந்த கூட்டத்தில் அமைதியாய் நேர் பார்வையாய் அமர்ந்திருந்தான் அவன்.

பிரபல விளம்பர கம்பனியின் புதிய மாடல்களுக்கான அணிவகுப்பு ஆங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

 

ஒய்யார நடையிட்டு அந்த மேடையை வலம் வந்த தீப்தி, தன் நாகரீக உடை அழகை மற்றவர் பார்வைக்கும் ரசனைக்குமாய் காட்சியாக்கிவிட்டு திரும்பி நடந்தாள்.

தொடர்ந்து வந்த மாடல் அழகிகள் அந்த மேடையின் அழகை மேலும் கூட்ட, தீப்தி சென்றதுமே அந்த தாடிக்காரனும் அரங்கை விட்டு வெளியேறி விட்டான்.

இது போன்ற பொழுதுபோக்கு விசயங்களில் எல்லாம் இப்போது அவனுக்கு ஆர்வம் ஏற்படுவதில்லை. அதுவும் இப்பொது அவன் இருக்கும் மனநிலையில், எதையும் ரசிக்கவும் முடியாது. எனினும் அவன் இப்போது இங்கு வந்தது தீப்திகாக மட்டும் தான். ஆம், அவன் மாமன் மகளுக்காக.

தன் காரை உயிர்பித்தவனின் அலைபேசி சிணுங்க, சின்ன சிரிப்புடன் புளூடூத் வழி பேசலானான்.

“செமடா செல்லம். மாடலிங்ல உனக்கு பிரைட் ஃப்யூச்சர் இருக்கு தீப்தி” என்றான் இயல்பான குரலில்.

“நிஜமா தான் சொல்றியா மாமா?” அவள் கொஞ்சும் குரலில் ஆர்வமாய் வினவினாள்.

“நிஜம்மா… நெக்ஸ்ட் இயர் உன்ன பார்க்க கூட நான் அப்பாய்ன்மென்ட் வாங்கணும் போல, மேடம் அவ்வளோ பிஸி ஆகிடுவீங்க” அவன் காரை மிதமான வேகத்தில் செலுத்தியபடியே, அவளிடம் பேசினான்.

“வாவ், லவ்யூ லவ்யூ லவ்யூ சோ மச் மாமா” அவள் அங்கே எகிறி குதிப்பதை இவனால் இங்கு நன்றாகவே உணர முடிந்தது. இன்னமும் மாறாத தீப்தியின் குழந்தைத்தனம் அவளுக்கு சாதகமா? பாதகமா? என்பது புரியாமல் இவன் தோளைக் குலுக்கி கொண்டான்.

“ஓகே டா லவ்யூ டூ” என்று அலட்டல் இன்றி சொன்னவன், “எனக்கு நேரமாச்சு நான் கிளம்பிட்டேன். நீ பத்திரமா வீடு வந்து சேரு” என்றான்.

“ஓ மை காட். என் ஃபிரண்ட்ஸ் உன்ன பார்க்கணும்னு சொன்னாங்க. இன்னும் கொஞ்ச நேரம் இருந்து இருக்கலாம் இல்ல” மறுமுனையில் அவள் சிணுங்கினாள்.

“உன்னோட ஃபிரண்ட்ஸ் என்னை எதுக்காக பார்க்கணும்?”

“நீ தான் என் ஆளுன்னு சொல்லி உன்ன கெத்தா இன்டிடுயூஸ் செய்வேன் இல்ல”

“அதுக்கென்ன இப்ப அவசரம்?”

“சரியான மாக்கான் நீ. பொண்ணுங்கன்னா ஏன் இப்படி பிச்சுகிட்டு ஓடுறியோ தெரியல”

“உன்ன பார்த்து ஓடல இல்ல. சந்தோசபடு தீப்தி. பை டேக் கேர்” என்று அழைப்பை துண்டித்தான்.

 

இப்போது அவன் வேறு சிக்கலில்  சிக்கிக் கொண்டிருந்தான். தீப்தியிடம் தன் கவலை பற்றி பகிர்ந்து கொண்டாலும், அவள் அதை புரிந்து கொள்வாளா என்பது சந்தேகமே… என்ற‌ யோசனையில் தலையசைத்து கொண்டவன், அந்த இரவு சாலையில் தன் காரை செலுத்தினான், மிதமான வேகத்தில் தான்.

 

தனக்கு தானே எத்தனை சமாதானங்களை நினைத்து கொண்டாலும், எது வந்தாலும் பார்த்துவிடலாம் என்ற இத்தனை வருட அனுபவம் தந்த தைரியம் இருந்தாலும் கூட, ஏனோ அவன் இதயத்தின் அழுத்தம் மட்டும் குறைவதாக இல்லை.

 

‘அட ச்சே ஏன் இவ்வளவு டென்ஷன் எனக்கு, மிஞ்சி மிஞ்சி போனா என்ன உயிரா போயிடும்?’ இந்த பதைபதைப்பு உணர்வு ஒருபுறம் அவனுக்குச் சலிப்பை ஏற்படுத்தியது.

 

‘ம்ம் போட்ட பணம் நட்டமாகும், அவ்வளவுதானே! விட்ட பணத்தை எடுக்க தெரியாத அடிமுட்டாளா நான்?’ சற்று கர்வமாக இரு விரல்களால் தன் மீசையை நீவி விட்டு கொண்டான்.

 

ஆனாலும் இந்தமுறை அவன் போட்டிருக்கும் முதலீடு கிட்டத்தட்ட அவனது பணம் மொத்தமும் என்று நினைக்கும்போது அவனுக்குள் சற்று துணுக்காகத்தான் இருந்தது.

 

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ குருட்டுத்தனமான தைரியத்தில், ஒருவித பிடிவாதத்துடன், ‘ஃபிலிம் ஃபேக்டரி புரொடக்சன்ஸ்’ என்னும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இருந்தான். 

 

அதுவரை கவனித்து வந்த தன் தந்தையின் தொழிலிலிருந்து கொஞ்ச கொஞ்சமாக விலகி, பெற்றவர்களிடம் பெரும் போராட்டம் நடத்திய பிறகே, அதிகம் பணம் புழங்கும் இந்த தயாரிப்பு துறைக்குள் நுழைந்து கொண்டான். அதில் அவனது பெற்றோருக்கு இப்போதும் மனவருத்தம் தான்.

 

அப்போது திரைப்படத்துறை பற்றியோ, சினிமா தயாரிப்பு பற்றியோ எந்த முழுமையான விவரங்களும் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும், தனக்கு நம்பிக்கையான சில நெருங்கிய திரைத்துறை நண்பர்களை மட்டும் துணையாகக்கொண்டு பிடிவாதத்துடன் இறங்கி இருந்தான்.

 

அதுவரை பணம் ஒன்றும் அவனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்ததில்லை. ஆனால் முதல் படம் தயாரித்து முடியும் தருவாயில், அவன் பணப்பற்றாக்குறையில் ஓய்ந்து போனான் தான். இவர்கள் நிறுவனத்தின் முதல் படம், மாபெரும் வெற்றி பெற்று அவனுக்கு கைமேல் பலனை தந்திருந்தது. அத்தோடு தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் தயாரித்து வெளியிடும் வேகத்தையும் தந்திருந்தது.

 

அவன் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு வெற்றி தான் என்றாலும் அடுத்தடுத்த தயாரிப்புகளில் அத்தகைய கொள்ளை லாபம் கொட்டவில்லை. சில தயாரிப்புகள் நட்டத்தில் வீழ்ந்து, மீண்டெழுந்த தருணங்களும் அதிகம். 

 

அதையெல்லாம் நினைத்துப் பார்த்தவன் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு கொண்டான். 

 

இத்தனை ஆண்டுகளில் ஃபிலிம் ஃபேக்டரி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படங்கள் ஏராளம். அதில் வெற்றிக்கொடி நாட்டி கொள்ளை லாபம் ஈட்டியவை பல. தவிர, தோல்வியுற்று நட்டத்தில் முடிந்தவையும் உண்டு.

 

ஆனால் இப்போது அவன் கையில் எடுத்திருப்பது இதுவரை தமிழ் சினிமா தொடாத பட்ஜெட்டில் ஆன திரைப்படத்தின் தயாரிப்பு. அதுவும் சரித்திர கால ராஜவம்சத்து கதைக்களம் கொண்டது. அவன் துணிந்தே இந்த படத்தின் தயாரிப்பை கையில் எடுத்திருந்தான்.

 

திரைப்படத்தின் இயக்குநர், முன்னனி நடிகர் நடிகைகள் உட்பட அனைவருமே ஓரளவு பரிட்சியமானவர்களே தவிர, திரைத்துறையில் அழுந்த காலூன்றி மக்கள் மனதை கொள்ளை கொண்டவர்களெல்லாம் இல்லை. 

 

இந்த காரணங்களுக்காகவே இந்த படம் பெரும் நட்டத்தை சந்திக்கும் என்று வெளிப்படையாக இவனிடம் இரங்கல் தெரிவித்தவர்கள் அதிகம். இந்தப்படத்தின் தயாரிப்பை பாதியில் நிறுத்திவிடும்படி இவனிடம் கோரிக்கை வைத்த திரைத்துறை நண்பர்களும் அதிகம்.

 

அவர்கள் அனைவரையும் மீறி இந்தப் படத்தை முழுமூச்சாக அவன் முடித்ததற்கு முக்கிய காரணம், அந்த படத்தின் கதையம்சம். அதன் திரைக்கதை அவனை அத்தனை ஈர்த்து இருந்தது. நிச்சயம் மாபெரும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையைத் தந்திருந்தது. இயக்குநரின் முழு ஈடுபாட்டையும் திறமையையும் அவன் கண்கூடாக பார்த்த பின்னரே, இத்தகைய பெரிய தயாரிப்பை கையிலெடுத்திருந்தான்.

 

முழுதாக ஒரு வருடம் ஓயாத முயற்சிக்கு பிறகு, இப்போது திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. கடைசிக்கட்ட பணிகள் மட்டுமே மீதமிருக்கின்றன. 

 

இந்த சமயத்தில், பெரிய பட்ஜெட் படம், ராஜா காலத்து படம், இன்றைய தலைமுறை ரசிக்க கூடியதாக இருக்காது என பல வதந்திகளால் விநியோகஸ்தர்கள் (distributors) திரைப்படத்தை வாங்க தயக்கம் காட்டியது வேறு அவனுக்கு பெரும் பின்னடைவாகிப் போனது. 

 

இப்போதும் அவனுக்கு படத்தின் வெற்றியின் மீது அதீத நம்பிக்கை தான் என்றாலும், தனது மொத்த பணத்தையும் அதில் கொட்டி இருப்பதால் ஒருவித படபடப்பும் அவனை சூழ்ந்துக்கொண்டது.

 

காரை சட்டென நிறுத்தியவன், காரின் கதவை திறந்து வெளி வர, கடற்கரையின் வேக காற்று அவனை மோதி, உடலை சிலிர்க்க வைக்க, தன் கண்களை அழுத்த மூடி திறந்தான்.

 

அவன் கௌதம் கைலாஷ்… 

 

சராசரியான உயரமும் வெண்பனி போன்ற மிருதுவான சருமும் அவனை மென்மையானவனாய் காட்டியது. அவனது பளிங்கு போன்ற தோற்றமே சொன்னது, வெயில் படாமல் வளர்ந்து சுகபோகமாக வாழ்பவன் என்று.

 

ஆனால் அவன் முகத்தில் அத்தனை குழப்ப ரேகைகள். கடலை நோக்கி நடந்தவனின் உடல்மொழியில் அத்தனை தளர்வு தெரிந்தது.

 

கடலை நெருங்கி மணலில் சோர்ந்து அமர்ந்து கொண்டான். கடலலை அவன் காலைத் தொட்டு வருடி திரும்பியது. அடுத்த அலை அவன் உடல் முழுவதையும் நனைத்துவிட்டு திரும்பியது.

 

ஓயாமல் வந்து அவனை இம்சித்து திரும்பும் அலைகள் மேல் சற்றே கோபம் கூட வந்தது அவனுக்கு. கூடவே என்னவோ அந்த அலைகள் அவனுக்கு ஆறுதல் சொல்வது போல தோன்றவும் அவன் இதழ்க்கடையில் மெல்லிய இதழ் விரிப்பு.

 

வாழ்க்கை தான் எத்தனை விசித்திரமானது. எத்தனை மேடுகளில் ஏற வைக்கிறது, எத்தனை பள்ளங்களில் விழ வைக்கிறது. நம்ப முடியாத மாற்றங்களைக் கணப்பொழுதில் நிகழ்த்திவிட்டு ஒருவனின் சுயத்தையே புரட்டி போட்டு விடுகிறது!

 

அவனது இருபத்து நான்கு வயது வரை அவன் வாழ்க்கை அத்தனை இலகுவாக சென்றது. எதற்கும் குறைவில்லை. எதற்கும் தடையில்லை. மனம் போன போக்கில் இவனும் போய் கொண்டு இருந்த காலகட்டம் அது.

 

அப்போதெல்லாம் எதைப்பற்றியும் அவன் ஆழ சிந்தித்தது கூட கிடையாது. எதைப்பற்றியும் கவலைப்பட்டதும் கிடையாது. அவனுக்கு எல்லாமுமாக அவன் தாய், தந்தை அவனை அப்படி தாங்கிக் கொண்டு இருந்தனர். பெற்றவர்கள் மீது அவனுக்கு அத்தனை ஈடுபாடு, அன்பு. அவர்களை மீற வேண்டும் என்று அவன் அப்போதெல்லாம் கனவிலும் எண்ணியதில்லை.

 

ஆனால், அவன் எதிர்பாராத ஒரேயொரு கவனக்குறைவு… அசம்பாவிதம்… அவனை மொத்தமாய் மாற்றிவிட்டு போய்விடும் என்று அவனும் நினைத்ததில்லை. 

 

ஆம். நிச்சயம் அது பெரும் அசம்பாவிதம் தான். அப்படியொன்று நடக்காமலேயே போயிருக்கலாம். அவளும் இவன் வாழ்வில் நுழையாமலேயே போயிருப்பாள்!

 

அவளால் தானே… அவள் ஒருத்தியால் தானே அவன் மொத்தமாய் மாறிப்போனது. அவனுக்காக எல்லாமே இருந்தும் எதிலும் ஒட்டாமல் அவன் தனித்து போனதும் அவளால் தானே…  அவளை மட்டும் அவன் அன்று சந்திக்காமல் போயிருந்தால், நிச்சயம் அவன் வாழ்வில் எந்தவித மாற்றங்களும் நிகழாமலேயே போயிருக்கும்! அவனும் அவனாகவே இருந்திருப்பான்.

 

பெரிய கடலலை வந்து அவனை மோதி, அவளின் கொடிய நினைவுகளைக் கலைக்க முயன்றது. 

 

***

 

பெண் வருவாள்…