பெண் 3
“அப்படியென்ன வாய் கொழுப்பு ஏறிபோய் கிடக்கு? வீட்டுக்கு வந்த மாப்பிளய கண்டபடி பேசற அளவுக்கு… கொஞ்சமும் மட்டு மரியாதை வேணாம்” காலையிலேயே மல்லிகா புலம்பலை தொடங்கி இருந்தார்.
குளித்து முடித்து வந்த கங்கா அம்மாவின் புலம்பலை கேட்டும் அமைதியாக முகத்தை துண்டால் ஒற்றியபடி அறைக்குள் நுழைந்து கொள்ள, மகளின் இந்த அலட்சியம் மேலும் மல்லிகாவின் உள்ள கொதிப்பை அதிகரிக்கச் செய்தது.
கைபேசியில் எத்தனை முறை அழைப்பு விடுத்தும், கௌரியும் கதிரும் அதை ஏற்காமல் துண்டித்துக் கொண்டிருப்பது வேறு அவரின் கவலையை, ஆற்றாமையை அதிகமாக்கி இருந்தது.
கங்கா எப்போதும் போல அவருக்கு எந்தவித எதிர்வினையும் காட்டாது தயாராகி வெளியே வரவும், சமையலறையில் பாத்திரங்கள் உருண்டன.
கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்த மஹா, தன் அம்மாவை கடுப்பாக முறைத்துவிட்டு அக்காவிடம் திரும்ப, ஏனோ கங்காவை பார்த்ததும் அவள் முகபாவம் தன்னால் மென்மையானது.
அடர் செஞ்சாந்து நிற காட்டன் சேலையில் அவள் அத்தனை அழகாய் தெரிந்தாள் தங்கைக்கு. அக்காவின் சேலைக்கட்டு மீது எப்போதுமே மஹாவிற்கு ஒரு கண் இருக்கும். அத்தனை லாவகமாக கங்காவின் சேலைக்கட்டு இருக்கும், அவளின் உடலோடு ஒட்டி தைத்ததை போல.
அதுவும் அவள் நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு வந்தாலும் கூட அந்த சேலைக்கட்டு நெகிழாமல் கசங்காமல் அத்தனை நேர்த்தியாக இருப்பது அதிசயம் தான்.
ஏதேனும் விசேஷத்திற்கு மஹா தப்பித்தவறி சேலை கட்டினால் கூட குறைந்தது பத்து ஊக்குகளாவது குத்த வேண்டி இருக்கும். அதுவும் கங்கா தான் கட்டி விடுவாள். ஆனாலும் ஒரு மணி நேரத்தில், இடை பகுதியில் சேலை நெகிழ தொடங்கும், மடிப்புகள் கலைய தொடங்கும், எப்போதடா இந்த சேலையை மாற்றலாம் என்ற நிலைக்கு வந்து விடுவாள். ஆனால் கங்கா அப்படி அதிக ஊக்குகள் குத்தி கொள்வதுமில்லை. ஆனாலும் அவள் சேலைக்கட்டு நெகிழாமல் இருக்கும் மாயம் மட்டும் இவளுக்கு தெரியவில்லை. அதில் அக்காவிடம் செல்ல பொறாமை கூட சின்னவளுக்கு.
அதற்காகவே, கங்காவை சுடிதார் அணிந்து கொள்ளும்படி சொல்லி வைப்பாள். ஆனால் கங்கா திருமணத்திற்கு பிறகு சுடிதார் அணிவதை முழுவதுமாக தவிர்த்து விட்டிருந்தாள்.
“கங்கா… நான் இங்க காட்டு கத்தலா கத்திட்டு கிடக்கேன். காதுல வாங்கியும் வாங்காமையும் நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்…? இவ்வளோ திமிர் ஆகாதுடி உனக்கு” அம்மாவின் அதட்டலில் இரு பெண்களும் அவரிடம் திரும்பினர்.
கொண்டையிட்ட முடியும் வியர்த்து சிவந்த முகமுமாக மல்லிகா தன் பெண்ணை முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்.
“இப்ப என்னை என்னம்மா செய்ய சொல்ற?” கங்காவின் கேள்வி நிதானமாகவே வந்தது.
“உன்ன யாருடி மாப்பிளய எடுத்தெறிஞ்சு பேச சொன்னது? உன்னால தான் அவங்க கோபிச்சிகிட்டு போயிட்டாங்க. பையன் இல்லாத வீட்டுல மருமகன் தான் மகன் ஸ்தானத்துல இருக்கணும், அவரை பத்தி பேச உனக்கென்ன இருக்கு? தங்கச்சி புருசனாச்சேனு கொஞ்சமாவது மரியாதை இருக்கா உன்மனசுல…” அவர் ஆதங்கமான வார்த்தைகளை மகள் மேல் வீசினார்.
“ம்மா, என்னை பத்தி பேச… அவங்களுக்கும் எதுவும் இல்லல்ல ம்மா. அப்புறம் ஏன் என் வாழ்க்கையில மூக்கை நுழைக்கிறாங்க?” இப்போதும் கங்காவின் கேள்வி அதிராத வார்த்தைகளாக தான் வந்தது.
“என்னவோ உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு சொன்னாங்க, அதுக்குனு மாப்பிளய நீ என்ன வார்த்தை சொல்லிட்ட?” மல்லிகா விடாமல் கேட்க, கங்கா பதிலுக்கு பதில் பேச விருப்பமின்றி அமைதியாக நின்றாள்.
“நாம வாழாத வாழ்க்கைய கௌரி வாழறாளேன்னு சின்னவள பார்த்து பொறாம இவளுக்கு… அதான் அடங்காம பேசி வச்சிருக்கா” மாடசாமியின் பேச்சில் மூன்று பெண்களின் பார்வையும் அவரிடம் திரும்பியது.
பான்பராக்கை உள்ளங்கையில் அரக்கி, கடவாய்க்குள் அதக்கிக் கொண்டபடி நின்றிருந்தார் மாடசாமி.
அவரின் பேச்சிலும் செயலிலும் மூன்று பெண்களின் முகங்களும் சுருங்கி வெறுப்பை காட்டின.
“கூட பொறந்த தங்கை மேல பொறாமை படுற சின்ன புத்தி எல்லாம் எனக்கு இல்லப்பா…” கங்காவின் பதில் அழுத்தமாக வர,
“உன் புத்தி பத்தி தான் எனக்கு தெரியுமே, ஒன்னுமே தெரியாதவ மாறி நாசுக்கா இருந்துகிட்டு அந்த கிழவன்கிட்ட மொத்த சொத்தும் எழுதி வாங்கிட்டல்ல” என்று மாடசாமி ஆத்திரமாக பேசினார்.
அவர் சொத்தை பற்றிய பேச்சை எடுக்கவும் கங்கா முகம் நிர்மலமாகிப் போனது. இனி தான் என்ன பேசினாலும் பயனில்லை என்று உணர்ந்தவள், திரும்பி அறைக்குள் சென்று விட்டாள்.
“ஏன் ப்பா, எப்பவும் சொத்தை கட்டிட்டு தான் அழுவீங்களா? தாத்தா கங்கா பேர்ல சொத்து எழுதி வச்சதால உங்களுக்கு என்ன குறைஞ்சு போச்சு?” மஹா பொறுமை இழந்து, அக்காவிற்காக தந்தையிடம் துள்ளிக்கொண்டு கேள்வி கேட்க,
“ஏய் சின்ன கழுத, பெத்த அப்பன் முன்னாலயே துள்ளுறியா நீ” என்று அதட்டினார்.
“நீங்க பொறுப்பான அப்பாவா நடந்துக்கிட்டா நான் ஏன் கேள்வி கேட்க போறேன்?” மனதில் பட்டதை கேட்க மஹா என்றுமே தயங்கியதில்லை. இப்போதும் தயங்கவில்லை நேராகவே கேட்டு விட்டாள்.
“திமிரெடுத்த கழுத, என்னையவே எதிர்த்து பேசுறியா? பன்னெண்டாவது படிச்சு முடிச்சதும் உன்னையும் உன் அக்காளுங்க மாறி எவனுக்காவது கட்டி வச்சு தலை முழுகி இருக்கணும். எவனையும் கட்டிக்கிட மாட்டேன் மேல படிச்சு தான் தீருவேன்னு அடம்புடிச்சு இப்ப காலேஜூ போற இல்ல, அந்த கொழுப்பு பேச வைக்குது உன்ன” என மாடசாமி கத்தவும்,
“இப்பவும் நீ ஒன்னும் என்னை படிக்க வைக்கல ப்பா, கங்கா தான் என்னை படிக்க வைக்கிறா. நான் இப்ப எந்த காலேஜ்ல, என்ன சப்ஜெக்ட் படிக்கிறேன்னு கூட உங்களுக்கு தெரியாது, நீங்கெல்லாம்…” மஹாவும் கோபமாக பேச,
“மகா, அப்பாகிட்ட இப்படி எகிறாத, வாயை அடக்கி பேசு” என்ன இருந்தாலும் தன் கணவனை விட்டு தர மனம் இல்லாமல் மல்லிகா மகளை அடக்க முயன்றார்.
“ம்மா, நீ சும்மா…” என்று மஹா மேலும் பேச வர,
“மஹா, உனக்கு காலேஜுக்கு டைம் ஆகல? கிளம்பி வா, நான் உன்ன ட்ராப் பண்ணிட்டு பார்லர் போறேன்” என்றபடி கை பையோடு வந்த கங்கா, தங்கையை அங்கிருந்து இழுத்துக் கொண்டு நடந்தாள். வீட்டில் பிரச்சனை பெரிதாவதில் அவளுக்கு உடன்பாடில்லை.
மஹா, “கங்கா நீ இன்னும் டிஃபன் சாப்பிடல”
கங்கா, “பரவாயில்ல வா”
“நானும் இன்னும் லன்ச் எடுத்துக்கலையே” அவள் பாவமாகச் சொல்ல, சற்று நின்ற கங்கா, “இன்னிக்கு ஒரு நாள் காலேஜ் கேன்டீன்ல வாங்கி சாப்பிடு, சரியா கிளம்பு” என்று ஸ்கூட்டியை உயிர்ப்பித்து கிளப்பினாள்.
“நீ ஏன் க்கா இப்படி இருக்க, அவங்க என்னல்லாம் உன்ன வாயிக்கு வந்தபடி பேசுறாங்க, நீ பதில் தராம அமைதியா வந்துட்ட…” மஹா ஆதங்கமாக கேட்டாள்.
மாஹாவால் தன் அம்மா, அப்பா பேச்சை சுத்தமாக பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்பா என்று பெயருக்கு இருப்பவர் இதுவரை குடும்பத்திற்காக என்று ஒத்த ரூபா செலவு செய்து பார்த்ததில்லை.
சென்னையில் இருந்தபோது கிடைத்த வேலையை செய்து அதையும் குடிப்பழக்கத்திற்கு இரையாக்கிக் கொண்டிருந்தவர், தாத்தா வீடே தஞ்சம் என்று இங்கு வந்ததும் சுத்தமாக வேலைக்கு போவதையும் விட்டுவிட்டார்.
சென்னையில் இருந்த வீடுகளை விற்றதால் கணிசமான தொகை கிடைக்க, அதை வட்டிக்கு விட்டு காசு பார்க்கிறார் தான். ஆனால் வீட்டு செலவை அவர் ஏற்று மஹா பார்த்ததில்லை. சதாசிவம் தாத்தா இருந்தவரை அவர்தான் குடும்ப செலவை பார்த்து கொண்டார். அதன்பிறகு இப்போது மொத்த செலவும் கங்காவின் தலை மீது.
இதெல்லாம் தெரிந்தும் கணவனை எப்போதும் விட்டு கொடுக்காமல் பேசும் அம்மாவின் மேலும் சின்னவளுக்கு கோபம் கோபமாக வந்தது.
“அவங்க சின்ன பொண்ணும், சின்ன மாப்பிள்ளயும் கோபிச்சிட்டு போனா, இவங்க போய் சமாதானப்படுத்த வேண்டியது தான, அதைவிட்டு உன்ன ஏன் காய்ச்சி எடுக்குறாங்க? இதெல்லாம் நீ கொடுக்குற இடம் தான் க்கா, உனக்கு வாயில்ல, நீயும் அவங்களை எதிர்த்து பேசு க்கா” என்று பெரியவளுக்கு புத்திமதி சொன்னாள்.
வழி முழுவதும் தங்கையின் படபட பேச்சை கேட்டு வந்த கங்காவின் முகத்தில் இளநகையின் சாயல். தனக்காக இத்தனை யோசிக்கும் தங்கைமேல் வாஞ்சை கூடியது அவளுக்கு. அம்மா, அப்பா, ஏன் கட்டிய கணவன் கூட அவளுக்காக யோசித்தது இல்லையே! அவளுக்காக என்று சிறிது யோசித்து இருந்தாலும், இப்போது இப்படி அவள் தனித்திருக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காதே…
முடிந்ததை எண்ணி தளரும் தன் மனதை தலையை ஒருமுறை குலுக்கி தெளிய வைத்து கொண்டவள், கல்லூரி வாயிலில் வண்டியை நிறுத்தினாள்.
முதுகில் புத்தகப்பையை மாட்டிக்கொண்டு இறங்கி நின்ற மஹாலட்சுமிக்கு இன்னும் ஆதங்கம் குறையவில்லை. எனவே, “இப்படி ஊமை மாதிரி இருக்காத க்கா, இனியும் அவங்கள பேசவிட்டு நீ வேடிக்கை பார்க்காத சொல்லிட்டேன். பை” என்று முறுக்கிக்கொண்டு செல்பவளை பார்க்க கங்காவிற்கு சிரிப்பு தான் வந்தது.
தங்கையின் குழந்தைத்தனம் அத்தனை ரசிக்க வைத்தது. இவளுக்குள்ளும் அத்தனை குழந்தைத்தனங்கள் ஒளிந்து கிடக்கிறது தான், ஆனால் அதை வெளிப்படுத்த அவளுக்கு என்று யார் இருக்கிறார்கள் என்று தோன்ற, அவளின் பாசமிகு தாத்தாவின் முகம் மனதில் தோன்றி மறைந்தது.
சதாசிவம் தாத்தா… பிறந்த ஊரை விட்டு, கொண்ட வாழ்க்கையை விட்டு, தனக்கென்று இருந்த அனைத்தையும் மொத்தமாக தொலைத்துவிட்டு, துவண்டு வந்தவளை இரு கைகளால் தாங்கி கொண்ட தாத்தா.
வாழ்வின் பிடிப்பை இழந்திருந்தவளுக்கு தன்னம்பிக்கை கதைகள் சொல்லி தேற்றிய தாத்தா.
ஊனப்பட்டு கிடந்தவளை ஊன்றுகோலாக தாங்கி நின்று எழுப்பி நிற்க வைத்த தாத்தா.
அவரால் மட்டுமே இன்று இந்த கங்கா சாத்தியம். இல்லையேல் அப்போதே தனக்குள்ளேயே புழுங்கி புழுங்கி மறைந்து போயிருப்பாளோ என்னவோ!
சதாசிவம் தாத்தா இறந்த பிறகுதான், வீட்டையும் நில புலன்களையும் கங்காவின் பெயரில் மாற்றி எழுதி இருக்கிறார் என்ற விவரம் தெரிய வந்தது. கங்காவுக்குமே அந்த தகவல் புதிது தான்.
தன் தாத்தாவின் இத்தனை பாசத்தில் அப்போது நெகிழ்ந்து போய் நின்றிருந்தாள் அவள். ஆனால், மாமனாரின் இந்த முடிவை மாடசாமியால் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்போதே முடிந்தமட்டும் கத்தி தீர்த்துவிட்டார்.
தன் அப்பா ஒற்றை மகளான தனக்கு சொத்தின் உரிமையை தராமல் தன் மூத்த மகளுக்கு மட்டும் அனைத்தையும் தூக்கி கொடுத்ததில் மல்லிகாவிற்கும் வருத்தம் தான். அது அவ்வப்போது அவரின் பேச்சில் வெளிப்பட்டுவிடும்.
சொத்தைப் பற்றி அவள் தந்தையின் குற்றச்சாட்டு நினைவுக்கு வந்து அவள் மனதில் பாரம் ஏற்றியது. மாடசாமி அதற்கு முன்பெல்லாம், வாழ்க்கை இழந்த பெண்ணென்று பாவப்பட்டு கங்காவிடம் அதிர்ந்து பேசாதவர் தான், இந்த சொத்து பிரச்சனைக்கு பிறகு கங்காவை ஏதோ எதிரியைப் போல பார்க்க ஆரம்பித்து விட்டார்.
தன் நினைவுகளை ஒதுக்கி, வேதா நிலையத்திற்குள் நுழைந்த கங்காவின் குடும்ப கவலைகள் எல்லாம் தூரமாய் விலகி போயின. அங்கு வரும் சாதாரண பெண்களை அழகு தேவதைகளாக மாற்றும் மாயங்களைச் செய்ய தயாரானாள் கங்கா.
***
பெண் வருவாள்…
Leave a Reply