ஏன் பெண்ணென்று பிறந்தேன் 4

IMG-20211007-WA0009-0b779845

ஏன் பெண்ணென்று பிறந்தேன்? 4

 

அந்த பங்களாவில் காலைப்பொழுதில் தன்னை நேர்த்தியாக தயார்படுத்தி கொண்டார் மனோகர்.

 

அவரின் கோட் ஷூட்க்கு இணையான டையை எடுத்து வந்து தானே அவர் கழுத்தில் சுற்றி முடிச்சு இட்டு அழகாய் போட்டு விட்டு ஒரு புன்னகையையும் பரிசாய் தந்தார் திலோத்தமா. 

 

மனோவின் கண்கள் தன்னவள் முகத்தில் காதலாய் படர்ந்தது. கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள் இவள் நாற்பது வயதை கடந்தவள் என்று. அப்படி ஒரு கச்சிதமான உடல் வாகு திலோத்தமாவிற்கு.

 

தங்கள் திருமண வாழ்க்கையில் முப்பது வருடங்கள் கடந்தும் தன் காதல் மனைவியின் அருகாமையில் மனோகரின் காதல் தீராமல் பெருகி கொண்டு தான் இருக்கிறது.

 

தனக்கு கவனமாக டை அணிவித்தவரை இடையோடு கை சேர்த்து அணைத்து கொண்டார். அவரும் தன்னவன் பிடியில் பொருந்திப் போனார்.

 

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் திலோ” மனோகர் மென்மையாய் வாழ்த்து கூற, “உங்களுக்கும் தான், பிறந்தநாள் வாழ்த்துக்கள் மனோ” என்றார் திலோத்தமா பூரிப்பாய்.

 

தங்களின் நாற்பத்து எட்டாவது வருட பிறந்த நாளில் இருவரும் உள்ளம் நிறைந்து நின்றிருந்தனர். மனோகர் தன் மனையாளின் உச்சியில் இதழ் பதிக்க, ‘கிளிக்’ என்று ஒரு சத்தம்.

 

இருவரும் திரும்ப, அறை வாசலில் அவர்களின் காதல் தருணங்களை தன் கைபேசியில் சிறை பிடித்து கொண்டிருந்தாள் தீப்தி.

 

“என்ன தீபூ இது, கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாம” திலோத்தமாவின் கேள்வியில் கண்டிப்பும் சற்று கூச்சமும் கலந்திருந்தது.

 

“ம்ம் இங்கிதம் எல்லாம் பார்த்தா இவ்ளோ அழகான லைவ் ரொமான்ஸ நான் மிஸ் பண்ணி இருப்பேனே, திலோ ஆன்ட்டி” என்று தன் கைபேசி திரையில் சற்றுமுன் எடுத்த அவர்கள் நிழற்படத்தை காட்ட, அந்த மூத்த காதல் ஜோடி இருவரின் கண்களும் வெட்கத்தில் தாழ்ந்தன.

 

“ஓ சோ ஸ்வீட். ரெண்டு பேரும் எவ்வளோ அழகா வெட்கப்படுறீங்க. அப்படியே இருங்க, இதையும் என் மொபைல்ல கேப்சர் பண்ணிக்கிறேன்” என்று படம் எடுக்க முயன்ற தீப்தியை தடுத்த திலோத்தமா, “சும்மா இரு தீபு” என்று சிணுங்கலாய் கண்டித்தார்.

 

தீப்தியும் அதற்கு மேல் பேசாமல் திலோவை ஆரத்தழுவி கொண்டாள். “மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் திலோ ஆன்ட்டி, மனோ அங்கிள்” என்று இருவருக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாள்.

 

அவர்கள் இருவரும் சந்தோச புன்னகை தர, “நீங்க உண்மையிலேயே செம அமேசிங் கப்பிள் தெரியுமா? ரெண்டு பேரும் ஒரே நாள்ல பிறந்து இருக்கீங்க” என்று சொல்லி துள்ளி குதித்தாள் தீப்தி.

 

“அதை கேக்குறியா தீபு குட்டி, எங்க காலேஜ் பர்ஸ்ட் இயர்ல என்னோட பர்த்டேக்கு நானும் அவகிட்ட சாக்லெட் நீட்டுறேன், அட் த சேம் டைம் அவளும் எனக்கு சாக்லேட் தரா, கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் ஒன்னும் புரியாம திருதிருன்னு பார்த்துட்டு அப்புறம் தான் புரிஞ்சது, நாங்க ரெண்டு பேரும் ஒரே தேதியில் பிறந்து இருக்கோம்னு. அதுக்கப்புறம் எங்களுக்குள்ள ஆல்மோஸ்ட் எல்லா விஷயங்களுமே ஒத்து போச்சு. அப்ப காதலிக்க ஆரம்பிச்சோம்… இப்ப வரைக்கும் காதலிச்சுட்டே இருக்கோம்” என்று சொல்லி தன் மனைவியின் தோளில் உரிமையாய் கை போட்டு கொண்டார் மனோகர்.

 

அவர்கள் இருவரின் கண்களில் தேங்கியிருந்த காதலை கவனித்த தீப்தியின் முகம் பிரகாசித்தது. “எனக்கும் உங்களை போலவே என்னை எப்பவும் கை சேர்த்துக்கிற காதல் வேணும்” என்று ஆசையாக கேட்டாள் அவள்.

 

“அது கூடிய சீக்கிரமே நடக்கும்” இருவருமே ஒரே குரலாய் சொல்ல, தீப்தி குளிர்ந்து போனாள்.

 

மாடியிலிருந்து ஜோடியாக இறங்கி வந்த தன் அப்பா, அம்மாவை பார்த்த கௌதமின் முகம் தன்னால் மலர்ந்தது. அவர்கள் அருகில் வந்ததும், “ஹாப்பி பர்த்டே மாம்… ஹாப்பி பர்த்டே டேட்” என்று இருவரையும் அணைத்து வாழ்த்து கூறியவன், தன் அம்மாவிற்கு தங்க வளையல்களையும், தன் அப்பாவிற்கு அதற்கு இணையான பிரேஸ்லெட்டையும் பரிசாக வழங்கினான்.

 

“ரொம்ப நல்லா இருக்கு கௌதமா” திலோத்தமா வாஞ்சையோடு சொல்ல, 

 

“மாம், டேட் இன்னிக்கி ஃபுல்லா நல்லா என்ஜாய் பண்ணுங்க, நான் ஈவினிங் பார்ட்டில உங்கள மீட் பண்றேன் பை” என்று விடை பெற்றவன் தீப்திக்கும் கையசைத்து விட்டு தன் காரில் விரைந்தான். 

 

அவர்கள் மூவரின் பார்வையும் அவனையே பின்தொடர்ந்தது.

 

“எல்லாம் உங்களை சொல்லணும், அவனுக்கு பேர் வச்சிருக்கீங்க பாரு, போயும் போயும் கௌதம புத்தர்னு, அதான் இவனும் சரியான மாக்கானா இருக்கான்” தீப்தி ஆற்றாமையாய் பேசிக் கொண்டு போக, பெற்றவர்கள் இருவரும் வாய்விட்டு சிரித்து விட்டனர்.

 

தீப்தி அவர்கள் இருவரையும் ஏகத்துக்கும் முறைத்து பார்க்க, “பிஸினஸ்னா அப்படித்தான் தீபு குட்டி, இதுல கௌதம குறை சொல்ல முடியாது. அவனோட பிசினஸ் ரொம்ப ரிஸ்க் ஆனதும் கூட, சோ, நீ கொஞ்சம் பொறுத்து போகத்தான் வேணும். வேற வழியில்லை” என்று கை விரித்தார் மனோகர்.

 

“புரியுது, பட் கொஞ்சமே கொஞ்சம் என்னை லவ் பண்ணலாம் இல்ல. என்னை சுத்தமா கண்டுக்கவே மாட்டேன்கிறான்… ஒருவேளை, கௌதமுக்கு என்ன பிடிக்கலையானு தோனுது” என்றாள் ஏக்கமாய்.

 

“சும்மா உளறாத தீபு, நீ எப்ப இருந்தாலும் அவனுக்கு தானன்ற நினைப்புல அவன் கேர்லஸா இருக்கான். அதுக்கு நீ தப்பா அர்த்தம் செஞ்சுக்காத” என்று திலோத்தமா அழுத்தமாய் சொல்ல, தீப்தி தோளைக் குலுக்கி கொண்டு உணவு மேசையை நோக்கி நகர்ந்தாள்.

 

அவள் நகர்ந்ததும், “நம்ம கௌதம் செய்யறதும் நல்லா இல்ல திலோ” மனோகர் ஆதங்கமாக சொல்ல, 

 

“என்னாலயும் அவனை புரிஞ்சுக்க முடியல, முன்ன எல்லாம் நம்ப பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ், கிப்ட், பார்ட்டினு எவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணுவான். ஆனா இப்பெல்லாம்…” என்று பெருமூச்செறிந்தார். 

 

சில ஆண்டுகளாக மகனிடம் ஏற்பட்ட மாற்றம் மனோகருக்கும் புரியும், ஆதலால் அவராலும் ஏதும் உறுதியாய் சொல்ல முடியவில்லை. மனைவியின் தோளைத் தட்டி காலை உணவுக்கு அழைத்துச் சென்றார்.

 

***

 

திலோத்தமா, மனோகர் பிறந்தநாள் கொண்டாட்டம் அன்று இரவு கோலாகலமாய் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அளவில் பெரிய கேக்கை கணவன், மனைவி இருவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு இடையே வெட்டி முதலில் கௌதமுக்கும் தீப்திக்கும் ஊட்டினர்.

 

எப்போதுமே அவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டம் தனிதான். கணவன், மனைவி இருவரின் பிறந்த நாளும் ஒரே தேதியில் வருவது கோடியில் ஒரு ஜோடிக்கு அமையும் பொருத்தம். அந்த பெருமையிலும் சந்தோஷத்திலும் அவர்களின் முகமும் அகமும் பூரித்து இருந்தது.

 

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான பலவகையான விருந்துகள் பஃபே முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வாழ்த்துக்களுக்கும் பரிசுகளுக்கும் நன்றி கூறியே மனோகர், திலோத்தமா கைகளும் வாயும் ஓய்ந்து போயின.

 

கௌதம், மனோகர், திலோத்தமா, தீப்தி நால்வரும் ஒட்டி நின்று இந்த சந்தோஷ தருணத்தை நிழற்படங்களாக எடுத்துக் கொண்டனர்.

 

அப்போதுதான் தாமதமாக வந்து சேர்ந்தார் வெங்கட்ராமன். நேராய் தங்கைக்கும் தங்கை கணவருக்கும் பரிசு தந்து பிறந்த நாள் வாழ்த்து கூற, தீப்தி ஓடி வந்து தன் தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டாள்.

 

“ஐ மிஸ் யூ டாடி” என்று.

 

“நானும் தான் பேபி, உன்னோட ஓயாத பேச்சு கேட்க முடியாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்” என்று செல்லம் கொஞ்சினார் அவர்.

 

“கிண்டல் செய்யாதீங்க டாடி, மம்மி வரலையா?”

 

“முக்கியமா உன்ன பார்க்கத்தான் வரேன்னு அடம் புடிச்சா, நான் தான் இப்ப ரொம்ப தூரம் டிராவல் செய்யறது ரிஸ்க்னு அவளை ஏமாத்திட்டு ஓடி வந்துட்டேன்” என்று சொல்லிவிட்டு வெங்கட் பெரிதாக சிரித்தார்.

 

“ஹலோ மாமா, எப்படி இருக்கீங்க, மயூரி ஆன்ட்டிக்கு ஹெல்த் இப்ப பரவாயில்லையா” கௌதம் நலம் விசாரிக்க,

 

“நானும் நல்லா இருக்கேன், உன் ஆன்ட்டியும் இப்ப நல்லா தான் இருக்கா. என்ன கிட்னி ஆபரேஷன் இப்பதான் முடிஞ்சது. அதான் ரெஸ்ட் அவசியம் அவளுக்கு” என்றவர், “அப்புறம் உன் பிஸ்னஸ் எப்படி போகுது கௌதம்? பட்ஜட் பெரிசா போட்டு இருக்க போல சமாளிக்க முடியுதா?” அவர் ஆர்வமாக விசாரிக்க,

 

“நோ அப்பா… இந்த பார்ட்டி முடியறவரை பிசினஸ் என்ற வார்த்தையே என் காதில் விழக்கூடாது. இது இந்த தீப்தியோட ஆர்டர் ஓகே?” என்று குறுக்கே புகுந்தாள்.

 

கௌதமோடு சேர்ந்து நால்வரும் ஒரே குரலாய், “ஓகே…” என்று சிரிப்புடன் தோள் குலுக்கி ஆமோதித்தனர்.

 

தீப்தி அப்பா வெங்கட், ஆஸ்திரேலியா வாழ் இந்திய வடநாட்டு பெண்ணான மையூரியை மணந்து அங்கேயே அடைக்கலமானவர். மயூரி சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, போன மாதம் தான் அவரின் ஒரு சிறுநீரகம் மாற்றப்பட்டது எனவே இப்போது ஓய்வில் இருக்கிறார்.

 

“ஹேய் யங் மேன், சீக்கிரம் இவளை கட்டிக்கிட்டு இவளோட வாயை அடைக்க வழியை பார்க்கலாம் இல்ல, இங்க வந்து தமிழ் வேற சரளமாக பேசி தொலையறா” என்று வெங்கட் பொய்யாய் அலுத்து கொண்டார்.

 

“நாங்களும் அதைத்தான் சொல்றோம். ஆனா, இவன் தான் காதுல போட்டுக்கவே மாட்டேங்குறான். புரோடக்ஷன் அது இதுன்னு உருப்படாத காரணத்தை சொல்லி தட்டிக் கழிக்கிறான்” திலோத்தமா மகனை குறை கூறினார்.

 

வெங்கியின் பார்வை கௌதமிடம் திரும்ப, “சரி சரி நான் இப்பவே தீப்திய கல்யாணம் பண்ணிக்க தயார். மேரேஜ்க்கு அப்புறம் மாடலிங் ஃபீல்ட்ல டாப்கு போறது ரொம்பவே கஷ்டம். நான் சொல்லிட்டேன்” என்றான் கௌதம் ஓர பார்வையில் தீப்தியை கவனித்தபடி.

 

“அச்சோ என்னால முடியாது. இப்ப தான் மாடலிங்கில பிள்ளையார் சுழி போட்டு இருக்கேன். ப்ளீஸ் இன்னும் டூ இயர்ஸ் மேரேஜ் பத்தி பேசாதீங்க” என்று தீப்தி தடாலடியாக மாற்றி பேச, திலோத்தமாவின் முகம் சுருங்கிப் போனது. 

 

“என்னவோ போங்க, அவளுக்கு மாடலிங். உனக்கு புரோடக்ஷன். எங்க ஆசை பத்தி யாருக்கும் கவலை இல்லை” என்று நொடிந்துகொள்ள கௌதம் பதில் பேசாமல், தன் அம்மாவை ஆழமாய் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

 

“இவன் என்ன எதுவும் பேசாம போறான்” திலோத்தமா வருத்தமாக மனோகரிடம் கேட்க, “அவன் பார்வைக்கான அர்த்தம் இன்னுமா உனக்கு புரியலை. என் கல்யாணத்துக்கு ஏன் இவ்வளவு அவசரப்படுறீங்கன்னு  கேட்காம கேட்டுட்டு போறான்” என்று விளக்கம் தந்தார் தன் மகனின் மனதை படித்தவராக.

 

“எல்லா பெத்தவங்களுக்கும் தன் பிள்ளையோட கல்யாணத்தை பார்க்கணும்ற ஆசை இருக்கத்தானே செய்யும்” அவர் அங்கலாய்க்க,

 

“இன்னும் ரெண்டு வருஷம் பொறுத்துக்க திலோம்மா, நாம நினைச்ச மாதிரியே எல்லாம் நடக்கும்” என்று வெங்கட் தன் தங்கையை சமாதானப்படுத்தினார்.

 

விழாவின் முடிவாக திலோத்தமா, மனோகர், கௌதம், தீப்தி ஜோடிகள் இசைக்கு ஏற்ப நடனம் ஆட, அவர்களோடு மற்றும் சில ஜோடிகள் சேர்ந்து ஆடினர்.

 

“நீ ரொம்ப மோசம்டா மாமா” தீப்தி ஆடியபடியே அவனிடம் அலுத்துக் கொண்டாள்.

 

“அப்படியென்ன நான் மோசம் பண்ணேன் தீப்தி” கௌதம் அவளின் நூலிடையில் கை சேர்த்து ஆடியபடி கேட்டான்.

 

“என் கூட டான்ஸ் ஆடுறதுக்கு கூட நான் தான் உன்னை கூப்பிடணுமா? நீ தான என்னை ரொமான்டிக்கா கேட்கணும்” அவள் ஏமாற்றத்தில் இதழ் பிதுக்கினாள்.

 

“உனக்கு தான் தெரியும் இல்ல, எனக்கு இதெல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல” கௌதம் ஆர்வமின்றி பதில் தந்தான்.

 

“உனக்கு என்னை மேரேஜ் பண்ணிக்கிறதுல இன்ட்ரஸ்டே இல்ல போ”

 

“அது அப்படி இல்ல தீப்தி, பேபியை கல்யாணம் பண்ணிக்கிறது சட்டப்படி குற்றம். அதான் யோசிக்கிறேன்” என்று வேண்டும் என்றே இழுத்தான்.

 

“நான் ஒன்னும் பேபி இல்லை. எனக்கு இருபத்தோரு வயசு ஆச்சு” என்று சிணுங்கினாள் அவள்.

 

அவளை தன் கைகளில் ஒரு முறை சுழற்றி நிறுத்தியவன், “நீ பிறந்து இருபத்தொரு வருஷம் முடிஞ்சு இருக்கலாம். ஆனா உன் மனசு இன்னும் பதினஞ்சு வயசு தான் பேபி” என்றான் கௌதம் சீண்டலாக.

 

“என்னை பேபி சொல்லாதே கௌதம்”

 

“நீ மனசளவுலயும் மெச்சூர் ஆனதுக்கு அப்புறம் நம்ம கல்யாணத்துக்கு நான் எந்த தடையும் சொல்ல மாட்டேன்”

 

“நான் இப்பவும் மெச்சூர்டா தான் இருக்கேன்”

 

கௌதம் மெலிதாய் புன்னகைத்தான். “ரெண்டு வருஷம் மேரேஜ் பத்தி பேசக்கூடாதுன்னு நீயே சொல்லிட்டு, இப்ப என்கிட்ட ஏன் உனக்கு மேரேஜ்ல இன்ட்ரஸ்ட் இல்லன்னு கேட்கிற, இப்படி முன்னுக்கு பின் முரணா யோசிக்கிறது தான் உன் மெச்சூரிட்டியா பேபி?”

 

அவன் அழுத்தமாக கேட்க, தீப்தி வேறு எதுவும் சொல்ல தோன்றாமல் அவன் சொன்னதை எண்ணி குழம்பி போனாள். 

 

அவர்களின் இன்றைய விழாவும் சிறப்பாக முடிவு பெற்றது.

 

***

 

பெண் வருவாள்…