ஏன் பெண்ணென்று பிறந்தேன் 5

images (24)-d9458a7e

பெண் 5

 

சாலையில் மிதமான வேகத்தில் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. வெகுநேரம் இருக்கையில் அமர்ந்து வந்ததால் உடல்வலி எடுக்க, கைகளை தூக்கி சோம்பல் முறித்தபடி, “இன்னும் எவ்வளவு தூரம் போகணும் விஜய்?” என்று வினவினான் கௌதம் கைலாஷ்.

 

“இன்னும் டிவன்டி மினிட்ஸ் ஆகும் சார்” என்று மரியாதையாக சொன்ன விஜயன், “ஸ்பீட் எடுத்தா பிஃப்டீன் மினிட்ஸ்ல போயிடலாம் சார்” என்று தகவல் தர,

 

“நோ விஜய், வெறும் ஃபைவ் மினிட்ஸ் சீக்கிரம் போய் ஒன்னும் ஆக போறதில்ல. மீடியமா போ” என்றவன் இருக்கையில் தலைசாய்த்தபடி நெற்றியை தேய்த்து கொண்டான்.

 

அவனின் சோர்வை கவனித்த விஜய், “சார் நீங்க கொஞ்ச நாளா ரொம்ப டல்லா இருக்கீங்க” என்று மனது கேளாமல் விசாரித்தான்.

 

“ம்ம் பெருசா எதுவுமில்ல, இந்த சரித்திரன் படம் பினிஷிங் வொர்க் போயிட்டு இருக்கில்ல அந்த டென்ஷன் தான்” கௌதம் சொல்ல, அந்த வேலைபளுவின் அழுத்தம் விஜயனுக்குமே இருந்தது.

 

“நம்ம படத்தோட டீசர் ரெடி சார், நெக்ஸ்ட் வீக் ரீலிஸ் ஆனதும், சும்மா மிரள போறாங்க எல்லாரும்” என்றான் விஜய் உற்சாகமாக.

 

ஆனால் அத்தனை உற்சாகம், கௌதமிடம் இருக்கவில்லை. “நம்ம பட ரிலீஸ் அறிவிச்சிருக்க சேம் வீக்ல, அர்ஜூனோட மாஸ் பட ரீலீஸையும் அறிவிச்சு இருக்காங்க, அதான் யோசனையா இருக்கு” என்றவன் குரலே இறங்கி வந்தது.

 

நேற்று தான் அந்த படத்திற்கான வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. நட்சத்திர பிரபலமான அர்ஜுனின் படமென்றால் நிச்சயம் அது வெற்றிபடமாக தான் அமையும். வழக்கமான மசாலா கலவை படமென்றாலும்‌ கூட, முன்னணி கதாநாயகன், முன்னணி கதாநாயகி, பிரபல இயக்குநர், இசையமைப்பாளர் என எல்லாருமே நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர்கள் இணைந்த திரைப்படம் என்பதால் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவன் திரைப்படம் அத்தனை எதிர்பார்ப்பை வளர்க்கவில்லை என்பது பெரும் சறுக்கல்.

 

“சார் அந்த திலீபன் வேணும்னே தான் இப்படி பண்றாரு. அவருக்கு படம் ரிலீஸ் பண்ண வேற தேதியா கிடைக்கல, நம்ம படத்தை முடக்கணும்னே எல்லாத்தையும் செஞ்சிட்டு இருக்காரு. அவரோட வயசுக்கும் செயலுக்கும் சம்மந்தமே இல்ல” விஜய் கொதித்து பேச, கௌதம் அமைதியாக இருந்தான்.

 

திலீபன் சண்முகம்,‌ தயாரிப்பு துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர். தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக அவரது நிறுவனம் தான் கோலொச்சி நிற்கிறது. ஏதோவொரு போதாத சமயத்தில், அவர்களின் தயாரிப்பு படங்களை ஒன்றுக்கு இரண்டு முறை முந்திக்கொண்டு ஃபிலிம் பேக்டரி தயாரிப்பு படங்கள் வெற்றி பெற்றன. அப்போதிலிருந்து இரு நிறுவனங்களுக்கு இடையே மறைமுகமான பனிப்போர் மூள ஆரம்பித்திருந்தது.

 

இந்த துறையில் நேரடி தாக்குதல் என்ற‌ பேச்சுக்கே இடமில்லை. எல்லாமே மறைமுக தாக்குதல்கள் தான். நேரில் சந்தித்து கொள்ளும்போது கைகுலுக்கி, கட்டியணைத்து, ஆசி கூறும் அதே திலீபன் சண்முகம் தான், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கத்தில் இருந்து இப்போதுவரை பல தடைக்கற்களை போட்டுக்கொண்டு இருக்கிறார். இப்போதும் திரைப்படம் பற்றிய வேண்டாத வதந்திகளை பரப்பி திரைப்பட விநியோகஸ்தர்களைத் தயங்க செய்ததும் அவரின் வேலைதான் என்று அறிந்ததும் அவனுக்கு கோபம் ஏற தான் செய்தது. ஆனால், இப்போது கோபம் கொண்டு ஆவது ஒன்றும் இல்லையே.

 

ஒரு திரைப்படத்தின் கருவை உருவாக்கி, முழுமைப்படுத்தி வெளியிடுவது என்பது கருவில் உயிராகி வளர்த்து, குழந்தையை பிரசவிப்பது போல என்பார்கள். எந்த தயாரிப்பாளர் ஆனாலும் அந்த சவாலான ஒன்றை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அந்த நிலையில் தான் இருந்தான் இப்போது கௌதம் கைலாஷ்.

 

அவர்கள் சேர வேண்டிய இடம் வந்ததும் காரை நிறுத்திவிட்டு இறங்கியதும், அந்த இடம் அமைந்திருக்கும் சூழலில் அவர்கள் பார்வை பதிந்தது.

 

“டைரக்டருக்கு வேற ஸ்பாட்டே கிடைக்கலயா சார், போயும் போயும் இந்த இடத்தை செலக்ட் பண்ணி வச்சிருக்காரு” விஜயன் அலுத்துக் கொள்ள,

 

“ஏன், இந்த இடத்துக்கு என்ன குறை, அவர் சொன்ன ஸ்க்ரீன் ப்ளேக்கு இந்த இடம் பர்ஃபெக்டா இருக்கும்” என்றபடி உள்ளே நடந்தான் கைலாஷ்.

 

“அட போங்க சார், ஆர்பனேஜ் வேற எந்த ஊர்லயும் இல்லயா என்ன, ஊட்டி, குன்னூர் இடத்தில இருந்தா கண்ணுக்கும் குளிர்ச்சியா இருக்கும்.‌ நீங்க என்னனா மன்னார்குடில பார்த்து வச்சிருக்கீங்க”

 

அவன் அலுத்து சொன்னதில் சிரித்துவிட்ட கைலாஷ், “ஏய், ஷூட்டிங் பேரை சொல்லி என் காசுல ஊர்சுத்த பிளான் பண்ற போல, பிச்சுடுவேன், முதல்ல உள்ள போய் பார்க்கலாம் வா” என்று வாயில் காவலாளியிடம் விவரம் சொல்லிவிட்டு உள்ளே நடந்தனர்.

 

“வெறும் பத்து நாள் ஷூட்டிங்ல நான் என்னத்த ஊர் சுத்தி பார்த்துட போறேன். டைரக்டரையும் உங்களையும் சுத்தவே எனக்கு சரியா போயிடும்” என்றவன், “இருந்தாலும் உங்க மன தைரியத்தை பாராட்டணும் சார், சரித்திரன் ரிலீஸ்க்கு ஒரு பக்கம் நொந்து நூடூல்ஸ் ஆகிட்டு இருந்தாலும், சத்தமில்லாம நெக்ஸ்ட் மூவி ஷூட்டிங் ஸ்டார்ட் பண்றீங்க பாருங்க அங்க நிக்கிறீங்க” என்றான்.

 

“தொழில்னு இறங்கின அப்புறம் வெற்றியோ தோல்வியோ நாம சமாளிச்சு தான் ஆகணும், தேங்கிட மட்டும் கூடாது, அது நம்மள மொத்தமா முடக்கி போட்டுடும்” கைலாஷ் சொல்ல, விஜயனும் அவன் சொன்னதை ஆமோதித்து தலையசைத்துக் கொண்டான்.

 

அந்த ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றோர் இல்லத்தின் நிர்வாக இயக்குநரான பெரியவர், அவர்கள் இருவரையும் இன்முகத்துடன் வரவேற்று பேசினார்.

 

“உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம் பா, எங்க இல்லத்துல ஷூட்டிங் அது இதுனு வைக்கிறதை பத்திதான் யோசனையா இருக்கு. எங்க பசங்க உடலாலும் மனசாலும் ஏதோவொரு குறைப்பாட்டோட இருக்கறவங்க, புது ஆளுங்க நிறைய பேர் இங்க வந்து போக இருந்தா அது அவங்கள பாதிக்கும்” என்று தன் மறுப்பை மறைமுகமாக தெரிவித்தார்.

 

“நீங்க சொல்றதும் சரிதான் சார், பட் இந்த ஷூட்டிங்க நாங்க செட் வச்சு கூட நடத்தலாம், ஆனா இந்த மாதிரி ஆர்பனேஜ்ல எடுத்தா அந்த ரியாலிட்டி எங்களுக்கு கிடைக்கும். அதோட உங்க இல்லம் பெரிய திரையில் காட்சியாகும், வெறும் பத்து நாள் தான் ஷூட்டிங், உங்க பசங்களுக்கு எந்த தொந்தரவும் தராம எங்க டீம் ஷூட் எடுத்து முடிச்சிடுவோம். இதனால உங்களுக்கு லாபமும் கூட. யோசிச்சு சொல்லுங்க” என்ற கௌதம் கைலாஷின் பேச்சு லாவகத்தில் பெரியவரின் யோசனையும் மாற்றத்திற்கு உள்ளானது.

 

“சரிங்க தம்பி, நான் எங்க சக நிர்வாகிகள் கிட்ட பேசிட்டு சொல்றேன்” என்றார்.

 

“ரொம்ப நல்லது சார், நீங்க சம்மதம் சொன்னா நல்லாயிருக்கும்” என்று எழுந்து கொண்டவன், “நாங்க இங்க சுத்தி பார்க்கலாமா?” என்று அனுமதி கேட்டான்.

 

“தாராளமா தம்பி” என்று அனுமதி தந்தவர், பணியாளர் ஒருவரை அவர்களுடன் துணைக்கு அனுப்பி வைத்தார்.

 

அந்த இல்லம், பள்ளிக்கூடம் போன்ற அமைப்பில் இருந்தது. முதலில் நிர்வாக அறையை தொடர்ந்து, அங்கே பணிபுரிபவர்களுக்கான இரண்டு அறைகள், அடுத்து பாடம் பயிற்றுவிக்கும் அறைகள் இரண்டு வரிசைகளில் அமைந்து இருந்தது. பின்பக்கம் இருந்த கட்டிடத்தில் பிள்ளைகள் தங்கவும் சாப்பிடவும் அறைகள், குளியலறை, கழிவறைகள் போன்றவை அமைக்கப்பட்டிருந்தது. 

 

கைலாஷ், விஜயன் ஒவ்வொரு அறையாக பார்வையிட்டபடி, உடன் வந்தவரிடம் அந்த இல்லத்தின் அமைப்பு பற்றிய விவரங்களை கேட்டபடி நடந்தனர்.

 

பிள்ளைகள் பயிலும் அறைகள், விசாலமாகவும், காற்றோட்டமான ஜன்னல் அமைப்புகளுடன், மின்விசிறி, மின்விளக்கு போன்ற அத்தியாவசிய தேவைகளுடன் அமைந்திருந்ததில் அவனுக்கு ஒருவித நிறைவு. ஆனால் பெயிண்ட் அடித்து பல வருடங்கள் கழிந்து இருக்கும் போல, சுவர்களெல்லாம் அழுக்கு படிந்து மங்கலாக, பழமை தன்மையாக காட்சியளிப்பது சற்று சுணக்கத்தை தந்தது.

 

ஒவ்வொரு அறையாக சாதாரணமாக பார்த்து வந்தவனின் பார்வை, ஓர் அறையில் அப்படியே தேங்கி நின்றது.

 

அங்கே வெவ்வேறு வகையில் உடல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் அமர்ந்திருக்க, அவர்களுக்கு புரியும்படி தன் வாய் மொழியுடன் சைகை மொழியிலும் கைகளை அசைத்து பேசிக் கொண்டிருந்தாள் அவள்.

 

“உடல் ஊனமாகறதால யாரோட வாழ்க்கையும் அதோட முடிஞ்சு போறதில்ல. நம்ம வாழ்க்கை நமக்கானது அதை நாம தன்னம்பிக்கையோட வாழ்ந்து காட்டணும்.”

 

அவன் கண்கள் மிரட்சியில் விரிந்து, சந்தேகத்துடன் சுருங்கி அவளிடமிருந்து விலக முடியாமல் நிலைக்குத்தி நின்றது.

 

அவளது கவனம் பிள்ளைகளை தாண்டி வேறெங்கும் நகருவதாக இல்லை. தலையை அசைத்து அசைத்து, கைவிரல்களை லாவகமாக மடக்கி நீட்டி, பரிவான புன்னகையுடன் அவர்களிடம் பேசி கொண்டிருந்தாள். 

 

“அச்சோ அவங்க கால் நல்லா இருக்கே, அவங்களால நல்லா நடக்க முடியுதே, நம்மால நடக்க முடியலயே! அச்சோ அவங்க கை நல்லா இருக்கே, அவங்களால நல்லா சாப்பிட முடியுதே, நம்மால சாப்பிட முடியலையே! இப்படிப்பட்ட தோய்வான எண்ணங்களை நம்ம மனசுல வளர விடவே கூடாது. இதுபோன்ற எண்ணங்கள்‌ நம்மள முழுசா முடங்க வச்சிரும்…” அறை வாயிலில் நிழலாட, திரும்பி‌ பார்த்தவளின் பேச்சு பாதியிலேயே நின்று போனது. 

 

அங்கே அவனை பார்த்ததும், அவள் உடலில் மெல்ல நடுக்கம் பரவ தொடங்கியது.

 

கௌதம் கைலாஷ், தாடை இறுக, பற்களை அழுத்திக் கடித்தபடி தன் ஆத்திரத்தை வெகுவாக அடக்கிக்கொண்டு‌, அவளை அழுத்தமாக பார்த்து நின்றிருந்தான். 

 

“என்ன சார் இங்கயே நின்னுட்டீங்க, பிளே கிரௌண்ட் அந்த பக்கம் இருக்கு சார், வாங்க பார்க்கலாம்” வேலையாள் அவனிடம் சொல்லிவிட்டு, “கங்கா மா, நீங்க பாடம் எடுங்க, பெரியவர் தான் இவங்களை இங்க சுத்தி காட்ட சொன்னாங்க” என்று அவளிடம் தகவலும் சொன்னான்.

 

கங்கா தலை தாழ்த்தி கொண்டாள். எதிர்பாரா அதிர்ச்சியில், தன் விழியோடு தேங்கிய நீரை, இமையோடு சேர்த்து அடைத்துக் கொண்டாள். சில நொடிகளில் தன்னை மீட்டுக் கொண்டாள். 

 

இதுபோன்ற எத்தனை எத்தனை அதிர்ச்சிகளையும் அவமானங்களையும் புறக்கணிப்புகளையும் வலிகளையும் தாங்கி வந்திருப்பாள்‌. இப்போது இதையும் தாங்கிக் கொண்டாள்.

 

ஆழ மூச்செடுத்துவிட்டு, பிள்ளைகளிடம் திரும்பி தான் விட்ட இடத்திலிருந்து பேச்சை தொடர்ந்தாள்.

 

“நம்மோட கைகால்ல குறை இருந்தாலும், நம்ம வாழ்க்கை முழுமையா நம்மகிட்ட தான் இருக்கு. இது நமக்கான வாழ்க்கை, நாம முழுசா வாழ்ந்து காட்டணும். எதுக்காகவும் யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும் நம்மால முடியும் என்ற தன்னம்பிக்கையை மட்டும் இழந்துடவே கூடாது” அவள் நின்றிருந்த தோரணையில் ஒரு நிமிர்வும், அவள் பேச்சில் அழுத்தமும் இப்போது கூடியிருந்தது.

 

கௌதம் இப்போதுதான் சட்டென நினைவு வந்தவனாய் அவள் கால்களைப் பார்த்தான். சேலை அவள் கால்களை மறைத்து இருந்தது. அவளின் வெற்று கைகளை கவனித்தவனின் நெற்றி தசைகள் சுருங்கின. எந்த பிடிப்பும் இல்லாமல் அவள் நேராக, நிமிர்வாக நின்று பேசுவதை ஏதோ அதிசயம் போல பார்த்துக்கொண்டே, அங்கிருந்து நடந்தான்.

 

அவன் யோசனை பின்னோக்கி சென்றது.

 

‘சாரி, முன்ன மாதிரி இப்ப அவங்களால நார்மலா நடக்க முடியாது. அவங்க கால்பகுதி அதிகமா டேமேஜ் ஆயிருக்கு. இனிமே சப்போர்ட் இல்லாமல் இந்த பேஷன்ட் நடக்கிறது ரொம்ப கஷ்டம்” என்று முடிவாய் சொன்ன அந்த மருத்துவரின் சொற்கள் பொய்த்துப்போனதை அவன் கண்முன்னால் பார்த்து வியந்துதான் போனான்.

 

அந்த இல்லத்தின் மற்ற இடங்களை பார்த்தபோதும், அவன் மனதில் எதுவும் பதியவில்லை. அவன் மனம் ஒரு நிலையில் இல்லாமல் நான்கு பக்கமும் நினைவுகள் சிதறுவது போன்ற பிரமையை தோற்றுவித்தது.

 

மேலும் அங்கே இருக்க முடியாமல், “விஜய் கிளம்பலாம்” என்று திரும்பி வெளியே நடக்க, அப்போது அந்த இல்லத்தை நிர்வகிக்கும் பெரியவர் அவன் முன்பு வந்து நின்றார்.

 

“தம்பி, நீங்க இங்க படம் எடுக்கறதுல எங்களுக்கு சம்மதம், பேமண்ட், மத்த விசயம் பேசிக்கலாமா?” என்று சற்று ஆர்வமாக கேட்டார் அவர்.

 

‘இந்த இடம் எங்களுக்கு வேணாம்’ என்று மறுக்க துடித்த வார்த்தைகளை வாய்க்குள்ளேயே நிறுத்திக் கொண்டான் கௌதம். 

 

இயக்குநர் தன் கதைக்களத்திற்கு‌ இந்த இல்லம் நூறு சதவீதம் பொருந்தும் என்று திரும்ப திரும்ப கேட்டிருந்ததால் தான் இங்கு வந்திருந்தான். அவரின் திரைக்கதைக்கு எல்லா வகையிலும் ஏற்ற இடம் தான் என்பது இவனுக்குமே புரிந்தது. 

 

ஆனால், அவளிருக்கும் இடத்திலா நம் வேலையை தொடங்குவது? இன்னும் ஒருமுறை அவளை பார்க்க வேண்டுமா என்ன? மனதிற்குள் வெறுப்பாக எண்ணிக் கொண்டான்.

 

அவன் எண்ணத்திற்கு மாறாக, அவன் கண்ணெதிரே நடந்து வந்து கொண்டிருந்தாள் கங்கா.

 

அந்த வராண்டாவில் சற்று நிதானமான நடையோடு வருபவளை பார்த்தவன், அவள் கால்களையே பார்த்து நின்றான்.

 

ஊன்றுகோலின்றி சுயமாக நடந்து வரும் கங்காவை இதோ இப்போது தான் முதல் முதலாக பார்க்கிறான். ஏதோ கனவு காட்சி போல அவனை சற்று அசைத்து தான் பார்த்தது.

 

அவன் பார்வை சென்ற திக்கை பெரியவரும் கவனித்து, “அவங்க பேரு கங்கா தம்பி, ரொம்ப நல்ல பொண்ணு, அமைதியான குணம், அதோட தன்னம்பிக்கை உரம் அதிகம் அவங்களுக்கு… ஒரு ஆக்ஸிடென்ட்ல அவங்க வலது கால் அடிப்பட்டு, மொத்தமா அவங்களால நடக்கவே முடியாதுன்னு டாக்டர்ஸ் எல்லாம் கைவிரிச்சுட்டாங்க, ஆனாலும் வைராக்கியத்தோட தொடர்ந்து பயிற்சி எடுத்து இப்ப சுயமா நடக்கிறாங்க.

 

அவங்களோட விடாமுயற்சி, தன்னம்பிக்கை இங்க வளர்ற ஒவ்வொரு பசங்களுக்கும் அவசியம் பா, அதான் வாரம் ஒருமுறை, இங்க வந்து பிள்ளைகளுக்கு நேர்மறையான உத்வேகத்தை கொடுக்கும்படி, பேச சொன்னேன். அவங்களும் மறுக்காம வந்துபேசுறாங்க, அவங்களால முடிஞ்சதை இல்லத்துக்கு செய்றாங்க” என்று அவன் கேட்காமலேயே பெரிதாக கங்காவை பற்றி விளக்கம் சொன்னார்.

 

அவர் பேச்சை கவனிக்காதது போல கங்கா கடந்து செல்ல முயல, “கொஞ்சம் நில்லுமா கங்கா, உன்ன பத்தி தான் பேசிட்டு இருக்கேன். இவரு பெரிய சினிமா புரோடியூசர் மா, நம்ம இல்லத்துல ஷூட்டிங் எடுக்க பர்மிஷன் கேட்டு வந்திருக்காங்க” என்று பெரியவர் அவளிடம் அறிமுகம் வேறு செய்து வைத்தார்.

 

கங்கா முகம் மாறாமல் அவனுக்கு கைகள் கூப்பி வணக்கம் வைத்தாள்.

 

கௌதமின் இடுங்கிய கண்கள் கங்காவை ஆழமாய் பார்த்தன.

 

முன்னைக்கு இப்போது அவள் முகத்தின் மெருகு கூடி இருந்தது. அவள் கழுத்தில் மின்னிய தாலி சங்கிலியில் அவன் பார்வை பதிய, கூடவே அவன் கை முஷ்டிகள் இறுகி தளர்ந்தன. 

 

அவன் முக மாற்றத்தை கங்காவினால் நன்றாகவே உணர முடிந்தது. ஒரு வெற்றுப் புன்னகையை உதிர்த்துவிட்டு, “நான் கிளம்பறேன் ஐயா, நேரமாச்சு” என்று விடைபெற்று நகர்ந்தாள் கங்கா.

 

அவள் தாங்கி தாங்கி நடந்து செல்வதை கௌதம் விழி விலகாமல் பார்த்து நின்றான். எவ்வளவு தான் அவன் மனதில் ஆத்திரமும் வெறுப்பும் மண்டிக்கிடந்தாலும் அவனுள் எழுந்த குற்ற உணர்ச்சி, அவன் மனதில் சுருக்கென தைக்க தான் செய்தது.

 

“ச்சே அந்த கொடுமையான நாள் என் வாழ்வில் வராமலேயே இருந்திருக்கலாம்’ என்று லட்சம் முறைக்கு மேல் இப்போதும் ஒரு முறை எண்ணி நொந்து கொண்டான் மனதிற்குள்.

 

விலகி நடந்த கங்காவின் கண்கள் கலங்கி கண்ணீர் தடாகமானது. கடந்து போன அந்தக் கொடூரமான நாளின் வலியும் இழப்பும் அவளை இப்போதும் நடுங்கச் செய்வதாய்.

 

இனி தன் வாழ்நாளில் யார் ஒருவனை சந்திக்கவே கூடாது என்று வேண்டி இருந்தாளோ! அவனை இப்போது சந்திக்க நேர்ந்ததை எண்ணி நொந்து போனாள்.

 

அவன் முன்னால் எந்த சூழலிலும் தன் பலவீனத்தை காட்டவே கூடாது என்ற உறுதியின் பேரில் அவள் கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் இப்போது தனிமையில் கட்டுப்படாமல் வழிந்து கொண்டிருந்தது.

 

***

பெண் வருவாள்…